Wednesday, 29 May 2013

குருத்தின் கேள்விகள்

(ஜெயரமணி)

குருத்தின் கேள்விகள்

(ஜயரமணி)

கௌதமன் ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வரும்போதே தன்னுடைய நண்பனும் தற்போது ஒரு பெரிய பள்ளியின் நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுகுமாரனைப் பார்த்துவிட்டுத்தான் வந்தான். அவனின் முகத்தில் ஒரு இனம் புரியாத கலக்கம் இருந்தது. அவன் எதிர்பார்த்தபடி அவனுடைய நண்பன் இல்லை. அவன் தன் நட்புக்குமேல் பணத்தில்தான் குறியாக இருந்தான். தன்னுடைய பையன் அரவிந்தனுக்கு அந்த ஊரில் இருக்கும் ஒரு பெரிய பள்ளியில் பதினோராம் (பிள்ஸ்—1)வகுப்பில் சேர்க்கத்தான் அவன் தன் நண்பனின் உதவியை நாடிச் சென்றான். சுகுமாரன் அந்தப் பள்ளியில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில்தான் இருந்தான். அதனால் அவன்மூலம் தன் மகனுக்கு அந்தப் பள்ளியில் இடம் வாங்க முடியுமென்றுதான் நம்பிக்கையோடு இருந்தான். ஆனால் அவனின் நண்பனோ அவனின் மகனுக்குத் தன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்க குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சமாவது நன்கொடையாகத் தருவதாயிருந்தால்தான் அரவிந்தனுக்கு அந்தப் பள்ளியில் இடம் கிடைக்குமென்று உறுதியாகச் சொல்லிவிட்டான். அதுவும் கௌதமன் தன்னுடைய நண்பனாக இருப்பதால், நன்கொடையை குறைத்துக் கொண்டதாகச் சொல்லிவிட்டான்.

இரவில் கௌதமன் உறங்குமுன் தன்னுடைய மனைவி சுதாவிடம் தான் தன் நண்பனைப் பார்த்ததையும், அவன் அரவிந்தனை தன்னுடைய பள்ளியில் சேர்த்துக்கொள்ள குறைந்தது ரூபாய் ஒரு லட்சமாவது நன்கொடையாக கொடுத்தால்தான் அரவிந்தனுக்கு பள்ளியில் இடம் கொடுக்கமுடியுமென்றும் உறுதியாகச் சொன்னதையும் சொல்லி தன்னுடைய மனக்கவலையை அவளுடன் பகிர்ந்து கொண்டான். சுதாவும் தன் கணவருடைய வெகுநாள் ஆசையையும் தெரிந்தவள்தான். அதனால் எப்பாடுபட்டாலும் கௌதமனின் ஆசையை நிறைவற்ற வேண்டுமென்றும் தீர்மானித்தாள். அதனால் அவனிடம் மெதுவாக கேட்கலானாள். “நாமிருவரும்தான் கை நிறைய சம்பாதிக்கிறோமே, நம்மால்நம் குழைந்தையின் படிப்பிற்காக செலவிட முடியாதா? நம்முடைய மற்ற தேவைகளையெல்லாம் குறைத்துக் கொண்டாவது அவனின் படிப்பிற்காக வேண்டியதைச் செய்யவேண்டியதுதான். அரவிந்தனும் இதுவரை மிகவும் நன்றாகப் படித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவனின் புத்திசாலித்தனத்துக்கும், படிப்பில் அவனுக்கு இருக்கும் எல்லையில்லாத ஆசைகளுக்கும் இந்தமாதிரி ஒரு உயர்ந்த வசதிகள் கொண்ட தனியார் பள்ளியில்தான் சேர்க்கவேண்டும். நமக்கும் அவன் இப்படிபட்ட ஒரு வசதியான, தனியார் பள்ளியில் படிக்கிறானெறால் ஒரு பெருமைதான. அதுமட்டுமல்ல, அவனின் பிற்காலத்திற்கும் அவன் மேல் படிப்பிற்கும் நாம் இப்போழுதே தேவையான ” முன்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனால் நாமிருவரும் எப்பாடுபட்டாவது அரவிந்தனை இந்தப் பள்ளீயில் ஆறாவது வகுப்பில் சேர்த்துவிட்டால், அவனின் 12வது வரை நிம்மதியாக இருக்கலாமே. நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், அரவிந்தனின் நண்பர்களும் நம்மைப் பெருமையாகத்தான் பார்ப்பார்கள். நாளைமுதல் நம்முடைய முதல் வேலையாக அவனுக்கு இந்தப் பள்ளியில் இடம் வாங்க என்ன செய்யவேண்டுமென்றுதான் யோசிக்க வேண்டும். மனதை தளர விடாதீர்கள். முயற்சி செய்யலாம்” என நம்பிக்கையாகச் சொல்லி அவனையும் உறங்கச் சொன்னாள். அவளும் உறங்க முற்பட்டாள். ஆனால் இருவரின் மனதிலும் பெரிய பாரம் ஏறியதால் தூங்கமுடியவில்லை.

மறுநாள் இருவருமே தங்களின் அலுவலத்திற்குப் போனவுடனே தங்களால் எந்தவகையிலும் அரவிந்தனை புதிய பள்ளியில் சேர்க்க தங்களுக்கு ஏதும் கடன் வாங்க வழி இருக்கிறதா எனப் பார்த்தனர்கள். ஆனால், அவர்களுக்கே நன்றாகத் தெரிந்ததுதான் தாங்களால் பணியின் மூலம் எத்தனை வகைகளில் அவசரத் தேவைக்காக முன்பணம் வாங்கமுடியுமோ அத்தனை வகைகளிலும் வாங்கியிருப்பது. இருந்தாலும் ஒரு நப்பாசைதான். தாங்கள் இதுவரை வாங்கிய கடனுக்காக கட்டிய தவணைத் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்கொண்டு ஒரு அளவுக்காவது அலுவலத்தின் மூலம் பணம் கிடைக்க வழியிருக்கிறதா எனப் பார்த்தார்கள். குழந்தைகளில் படிப்பிற்காக தனிச் சலுகையின் மூலம் கடன் கிடைக்குமா என்றும் பார்த்தார்கள். ஆனால் விதிகளின்படி கல்லூரி படிப்பிற்காகத்தான் தனி கல்வி உதவிச் சலுகைகள் கிடைக்கும். அரவிந்தனின் ஆறாம் வகுப்பிற்காக அந்தப் பிரிவில் கடன் வழங்கமுடியாது எனவும் தெரிந்துகொண்டார்கள். இருவரும் தங்களின் உணவு நேரத்தில் தங்களால் அலுவலகம் மூலம் எந்தவிதமான உதவியும் எதிர்பார்க்கமுடியாது எனத் தெரிந்து கொண்டதால், தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் மூலம் தங்களுக்கு ஏதும் உதவி கிடைக்குமா எனவும் யோசித்துப் பார்த்தார்கள். அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ இவர்களுக்கு உதவும் வகையில் பொருளாதாரவசதி படைத்தவர்களில்லை. ஒரே ஒரு உறவுதான் இருக்கிறது. அது கௌதமனின் சகோதரிதான். ஆனால் கௌதமன் தன் விருப்பப்படி சுதாவை காதலித்து கலியாணம் செய்து கொண்டதால், கௌதமன் சிறு வயதாக இருக்கும்போதே தன்னுடைய பெண்ணை அவனுக்குத்தான் திருமணம் செய்துவைக்கவேண்டுமென்று தீராத ஆசையோடு இருந்தவளுக்கு, தன் தம்பி தன் பெண்ணைவிட்டு வேறு பெண்ணைக் காதலித்து, தன் பேச்சைக் கேட்காமல் திருமணமும் செய்து கொண்டுவிட்டதால், அவர்கள் இருவரின் பேரிலும் தீராத பகைதான் கொண்டிருக்கிறாள். அதனால் அவளிடம் தாராளமாகப் பணம் இருந்தாலும், தங்களுக்குக் கொடுக்கமாட்டாள் என்பது நன்றாகத் தெரிந்த விஷயம்தான்.

அன்று மாலையில் அவர்களின் அலுவலக நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தங்களுடைய பிரச்சினையைச் சொன்னார்கள். அவர் அதற்கு தன்னுடைய உறவினர் ஒருவர் இந்த மாதிரி அவசரத் தேவைகளுக்கு பணம் கொடுத்து உதவுவதாகவும், ஆனாலப்படி செய்யும் உதவிக்கு வட்டியும் வாங்குவார் என்றும் சொல்லி, அவர்களுக்குச் சம்மதமென்றால் தான் அவரிடம் பேசிவிட்டு சொல்வதாகச் சொன்னார். கௌதமனுக்கும் சுதாவுக்கும் அவர் தானாகவே முன் வந்து தங்களுக்கு உதவி செய்ய வந்ததுபற்றியும், தங்களுடைய தேவைகளுக்கு ஒரு தீர்வும் கிடைக்குமென்பதாலும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நண்பரின் மூலம் வட்டிக்குப்பணம் கொடுக்கும் அந்த நிறுவனத்திற்கும் சென்று விபரங்களை தெரிந்து வந்தார்கள். தீவீரமாக யோசித்துப் பார்த்தபின், அப்படி பணம் வாங்கினால், தங்களுடைய மாதாந்திர செலவினங்கள் என்னவெல்லாம் இருக்கும் என்றும் யோசித்துப்பார்த்தார்கள். ஒரு லட்சரூபாய்க்கு இருபது மாதத்தவணையில் அசலும், அதற்கு கட்டவேண்டிய வட்டியும் சேர்த்து, மாதம் தவறாமல் குறைந்தது ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் தங்களுடைய மாத செலவினங்கள் கூடும் என்றும் கணக்குப் போட்டுப் பார்த்தார்கள்.

அன்று சனிக்கிழமை. கௌதமன், சுதா இருவருக்கும் அலுவலக விடுமுறைநாள். அதனால் இருவரும் காலையில் எழுந்தவுடனே தாங்கள் மேற்கொண்டு எடுக்கவேண்டிய முன் ஏற்பாடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். தங்களுடைய மாதாந்திர செலவினங்களை பட்டியல் போட்டார்கள். அதில் எந்தேந்த வகையில் தங்களுடைய மாத செலவினங்களை குறைத்துக்கொள்ளலாம் எனக் கணக்குப் போட்டார்கள். முதலில் தன்வீட்டில்மேல் வேலைசெய்யும் சரசுவை வீட்டு வேலைக்கு வரவேண்டாமென்று சொல்லவும், அவளுக்கு உடனடித்தேவைக்காக கொஞ்சம் பணம் கொடுத்துவிடவும் முடிவு செய்தார்கள். அதனால் அவர்களின் மாதச் செலவினத்தில் ரூபாய் ஆயிரத்து ஐந்தூறு மிஞ்சும். அடுத்ததாக தங்களுடைய அன்றாட செலவினங்களில் எதையெல்லாம் குறைக்க முடியுமென்று பட்டியல் போட்டார்கள். முதலில் அவர்கள் குறைக்க தீர்மானித்தது வீட்டிற்கு வாங்கும் பால்தான். தினமும் இரண்டிரை லிட்டர் வாங்கும் இடத்தில் ஒரு லிட்டர் குறைத்தால் தங்களுடைய உணவுச்செலவில் ஆயிரம் ரூபாய் குறைக்கமுடியுமென்றும் கணக்குப் போட்டார்கள். அப்போதுதான் கௌதமன் சுதாவிடம் கேட்டான் :”உன் உடல் இருக்கும் நிலையில் நாம் சரசாவை நிறுத்திவிட்டால், வீட்டு வேலைகளையெல்லாம் தனியாக செய்துகொண்டு, ஆபீஸுக்கும் போய் வர முடியுமா? சரசாவும் பாவம் மிகவும் ஏழைதான். திடீரேன்று அவளின் மாத வருமானம் குறைந்தால், அவளுக்கும் அது கஷ்டமாகத்தானே இருக்கும்என்றான்.

அதற்கு சுதா சொன்னாள் “நம்முடைய ஒரேலட்சியம் அரவிந்தனின் எதிர்காலம்தான். அதை சீராக அவனுக்குக் கிடைக்க வேண்டுமானால், நாம் எல்லாவிதத்திலும் துணிந்து முடிவு எடுக்க வேண்டும். அதில் சரசா மட்டுமல்ல, நாமும் நம்முடைய வசதிகளையும் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும்” என தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். மேலும் சொன்னாள் “இனிமேல் நம்முடைய துணிகளையெல்லாம் நாமே இஸ்திரி போட்டுக்கொண்டால், வாராவாரம் அயர்னுக்குக் கொடுக்கும் ரூபாய் நூறும் மிச்சமாகும். உடனே கௌதமனும் சொன்னான் “நானும் இனிமேல் தினமும் என்னுடையதும், அரவிந்தனுடைய உடைகளை துவைத்துக் கொண்டுவிடுகிறேன். உனக்கும் கொஞ்சம் சிரமம் குறையும்” என்று. அன்று சனிக்கிழமையென்பதால், அரவிந்தனுக்கும் பள்ளியில்லை. அவனும் அப்போதுதான் எழுந்து வந்தான். வரும்போது சுதா “நமக்கு அரவிந்தனின் எதிர்காலம்தான் முக்கியம். அதை அடைவதற்காக நாம் நம்முடைய சில சௌகரியங்களை குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும்” எனத் தீர்மானமாகச் சொன்னதையும் கேட்டான்.

அதனால் அவன் தன்னுடைய பெற்றோர்களைப் பார்த்து, “இப்போது எனக்கு என்ன அசௌகரியம் இருக்கிறது. எதற்காக நீங்கள் எல்லாம் உங்களுடைய சௌகரியங்களைக் குறைத்துக் கொள்ளத் தீர்மானித்து இருக்கிறீர்கள்” என்றும் கேட்டான். கௌதமன் அவனைப்பார்த்து “அரவிந்த், நீ இந்த வருஷமுதல் பிளஸ்—1 வகுப்பிற்குப் போவதால், உன்னை நாங்கள் இந்த ஊரில் உள்ள ஒரு பெரிய பள்ளியில் சேர்க்கத்தீர்மானித்து இருக்கிறோம். அந்தப் பள்ளியில் பள்ளிக் கட்டணம், டொனேஷன், மற்ற இதர சிலவினங்கள் அதிகம். அதற்காகத்தான் நானும் உன் அம்மாவும் பத்து நாட்களாக அந்தப் பள்ளி நிர்வாகத்தினரைப் போய் பார்த்து, உனக்கு அந்தப் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்துவந்தோம். இனிமேல் நம்முடைய சில வீட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால், உன் படிப்பிற்காக நன்றாகவே செய்ய முடியும். உன்னுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும்.” என்றான்.

அரவிந்தனும் தன்னுடைய அப்பாவைக் கேட்டான் “ஏனப்பா நான் இப்போழுது படிக்கும் பள்ளியிலேயே பள்ளியிறுதியாண்டு வரை வகுப்புகள் இருக்கிறதே. நான் கல்லூரி படிப்பிற்காகத்தானே வேறு கல்லூரிக்குப் போக வேண்டும். அப்படியிருக்க, எதற்காக என்னை இப்பவே, வேறு பள்ளிக்கு மாற்றுகிறீர்கள்” எனவும் கேட்டான்..

“அரவிந்தா, இந்தப் பள்ளியில் நீ தொடர்ந்து படிக்கலாம். ஆனால், இது அரசு உதவிபெறும் ஒரு சாதாரண பள்ளிதான். நீ இப்போதுமுதலே ஒரு பெரிய தனியார் நிறுவனம் நடத்தும் பள்ளியில் படித்தால், உன்னுடைய எதிர்காலம் நன்றாக இருக்க எல்லா வசதி வாய்ப்புகளும் உனக்குக் கிடைக்கும். நாங்கள் கொஞ்சகாலம் சிரமப்பட்டாலும், உன்னுடைய வருங்காலம் நன்றாக இருக்குமல்லவா. அதுதான் எங்களின் விருப்பமும். மேலும் உனக்கு அந்தப் பள்ளியில் படிப்பதால், வசதி பெற்றவர்களின் குழந்தைகளின் நட்பும் கிடைக்கும். நீயும் அவர்களைப் போல பொது விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பும் உண்டு” என்றும் கூறினான்.

சுதாவும் கௌதமனைத் தொடர்ந்து “ஆமாம் அரவிந்த், உன்னுடைய பழக்க வழக்கங்களும் மேலும் சீராகும். நீயும் மேல்தட்டுக் குழந்தைகளைப்போல் திடமாக இருக்கலாம்” என்றும் கூறினாள்.

“அம்மா, அப்பா நான் ஆரம்பமுதல் இந்தப் பள்ளியில்தானே படித்து வருகிறேன். என்றாவது என்னுடைய பழக்க வழக்கங்கள் உங்களுக்குத் திருப்தியாக இல்லாமல் இருந்ததா? என்னுடைய பள்ளியில் எந்த ஆசிரியராவது நான் பள்ளியிலோ, வெளியிடங்களிலோ முறை தவறி தப்பாக நடந்ததாக உங்களிடம் முறையிட்டார்களா? இந்தப் பள்ளி ஆசிரியர்கள் தக்க தகுதியற்றவர்களா, அவர்கள் எங்களுக்குச் சரியாக பாடங்களை போதிக்கவில்லையா, அல்லது எங்கள் பள்ளி மாணவர்கள் ஒழுக்கக்கேடாக எந்த இடத்திலாவது நடந்து கொண்டதாக உங்களுக்குத் தெரிய வந்ததா? இந்த ஊரில் உள்ள எல்லா சிறுவர்களுமே நீங்கள் சொல்லும் அந்த பெரிய தனியார் நிறுவனப் பள்ளியில்தான் படிக்கிறார்களா? இல்லையே. அவர்களும் நல்ல மாணவர்களாகத்தானே இருக்கிறார்கள். இன்றுவரையில் நீங்கள் இருவரும் என்னுடைய பள்ளிச் செலவுக்காக கஷ்டப்பட்டீர்களா. இல்லையே. இந்தப் பள்ளியிலேயே நான் தொடர்ந்து படிக்க வசதியிருக்கும்போது, எதற்காக என்னை வேறு பள்ளிக்கு மாற்ற விரும்புகிறீர்கள்.” என்றும் கேட்டான்.

அரவிந்தனின் கேள்விகளுக்கு கௌதமன் பதிலாகச் சொன்னான். “அரவிந்தா நீ எங்களின் ஒரே பையன். உன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். இப்போழுது நீ படிக்கும் பள்ளியின் மீது எங்களுக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. நீ இந்த வருடம் முதல் இந்த ஊரிலுள்ள அந்தத் தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டால், உனக்கு பள்ளியிருதிவரையில் எந்த விதமான தடங்களுமில்லாது படிக்க முடியும். உன் கல்வி திறனும் மிக நன்றாக வளர அந்தப் பள்ளியில் எல்லா விதமான வசதிகளும் உண்டு. மேலும் அங்கு படிக்கும் மாணவர்கலெல்லாம் ஓரளவு வசதியானகுடும்பத்திலிருந்துதான் வருவதால், உனக்கும் மேல் தட்டு மாணவர்களுடன் பழகவும், அவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வசதி வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். அந்தப் பெரிய பள்ளியில் உன் விருப்படியே தனியாக எந்த வகை படிப்பில் தேர்ச்சிபெறவிரும்புகிறாயோ அந்தப் பாடத்திலேயே தனிக் கவனம் செலுத்தி படிக்கவும் வாய்ப்புகள் உண்டு. கொஞ்சகாலம் நாங்கள் கஷ்டப்பட்டாலும், உனக்கு உன்னுடைய எதிர்காலம் நன்றாக உருவாக முடியும். அந்தப் பள்ளியிலிருந்து நீயும் மேற்படிப்பிற்காக, கல்லூரிக்குச் செல்லவும் முடியும். அதனால் தான் நாங்கள் உன் பள்ளியை மாற்ற விரும்புகிறோம்.” என அன்பாகச் சொன்னான்.

“அப்பா. எனக்கு உங்களிருவரின் ஆசைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. நான் இப்போது படிக்கும் பள்ளியில் படித்த மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லவில்லையா? எல்லா மாணவர்களுமே கல்லூரிக்குச் செல்ல தனித் தேர்வு எழுதத்தானே வேண்டும். எங்கள் பள்ளி மாணவர்களும்தான் அந்தத் தேர்வு எழுதி, தங்களுடைய மேற் படிப்பைத் தொடரத்தானே செய்கிறார்கள். அப்பா இன்னுமோரு சந்தேஹம். என்னை நீங்கள் விரும்பும் பள்ளியில் சேர்க்க நீங்கள் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டுமல்லவா? அதெல்லாம் நீங்கள் யோசித்துப்பார்த்தீர்களா?”எனவும் கேட்டான்.

அதற்கு பதிலாக, சுதாச் சொன்னான் “அரவிந்தா, அதெல்லாம் நாங்கள் யோசித்து விட்டோம். முதலில் அந்தப் பள்ளியில் புதியதாகச் சேர ரூபாய் ஒரு இலட்சம் டொனேஷனாக செலுத்த வேண்டுமாம். பிறகு பள்ளியில் வகுப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தனிப் பிரிவிற்கான சிறப்பு வகுப்பிற்கான கட்டணங்கள், யூனிபார்ம், விளயாட்டுக் கருவிகள், நூலகக் கட்டணம், பள்ளிக்குச் சென்றுவர பஸ் கட்டணம் என வருட்ததிற்கு குறைந்தது ரூபாய் இரு இலட்சங்களாகும். முதல் வருடம் மட்டும் மூன்று இலட்சங்கள் செலவு செய்து விட்டால், அடுத்தவருடத்திலிருந்து இரு இலட்சம் மட்டும் செலவு செய்தால் போதும். என்ன உன்னுடைய பள்ளியிருதி வகுப்புவரைக்கும் எங்களுக்குச் கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கும். பிறகு நீ கல்லூரிக்குச் சென்றுவிட்டால், நாங்கள் உன் மேற்படிபிற்காக வங்கியின் மூலம் கடன் பெறலாம். அதற்கு வட்டியும் கொஞ்சமாகத்தானிருக்கும். மேலும் அந்தக் கடன் தொகையை நீயே உன் வருங்காலத்தில் சம்பாதித்துக் கட்டி விடலாம். அதெல்லாம் யோசித்துத்தான் நாங்கள் இப்போழுது முதல் வருடத்திற்கு மட்டும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பிறகு மாதத்தவணையில் திருப்பிக் கொடுத்துவிடுவோம். அதெல்லாம் எங்களின் பொறுப்பு. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல், எங்களின் விருப்பத்தை நிறைவேற்றப் பார்” எனத் தீர்மானமாகச் சொல்லிமுடித்தாள்.

தாயின் கருத்துக்களைக் கேட்ட அரவிந்தன் , “அம்மா நீங்கள் என்னுடைய எதிர்கால நலனுக்குத்தான் இத்தனை பாடுபடுகிறீர்கள் என்பதை நானும் உணர்ந்து கொண்டேன். ஆனால் என்னுடைய அனுபவமற்ற மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் சில சந்தேஹங்களுக்கு நீங்கள் தீர்வு சொல்லுங்கள். என்னால் இப்போது படிக்கும் பள்ளியிலேயே தொடர்ந்து பள்ளியிருதி வகுப்புவரை நன்றாகவே படிக்க முடியும். என்னுடைய தற்போது படிக்கும் பள்ளியிலேயே எனக்காக நீங்கள் செய்ய வேண்டிய சிலவுகள் உங்களுடைய வருமானதிற்குள் தானே இருக்கிறது. அப்படியிருக்கையில், நீங்கள் எதற்காக உங்களின் அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக்கொண்டு, பணம் சேர்த்து, எனக்காக செலவிடவேண்டும். என்னுடைய கல்லூரிப் படிப்பிற்காக வேண்டுமானால் நீங்கள் அதிகமாக செலவு செய்யப் போவது அவசியமே. ஆனால் இப்போதே அத்தகைய முயற்சிகளை எதற்காக எடுக்கவேண்டும். நான் இப்போது படிக்கும் பள்ளியில் நீங்கள் எனக்காக புதியதாக எந்த விதமான பள்ளிக் கட்டணமும் செலுத்தத்தேவையில்லை. புதிய பள்ளிக்கு டோனேஷன் எனவும் தனியாகப் பணம் செலுத்த வேண்டுமெனச் சொல்கிறீர்கள். அப்பா, டொனேஷன் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன “தருமம்” என்பதுதானே? இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அவர்களாகவே முன் வந்து விருப்பப்பட்டுக் கொடுக்கும் பண உதவிதானே. ஆனால் நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் புதிய பள்ளியில் எல்லா வசதிகளும் இருப்பதாகவும், மிகவும் வசதியானவர்கள் சேர்ந்து படிக்கப் போகும் பள்ளியென்றும் சொல்கிறீர்கள்.அப்படி யிருக்கும்போது எதற்காக நம்மைப் போன்ற நடுத்தர மக்களிடம் பள்ளியில் சேரும்போது தனியாக டொனேஷன் என்ற பெயரில் பணம் வாங்குகிறார்கள். இது சட்டப்படி முறையற்றச் செயல்தானே? அதற்கு நீங்களும் உடந்தையாக இருக்க வேண்டுமா?உங்களுக்கு என் படிப்பிற்காக தனியாக தரும நிதி தரவேண்டுமென்று ஆசையிருந்தால், ஒன்று செய்யுங்கள். என்னை தயவுசெய்து நான் இப்போது படிக்கும் பள்ளியிலேயே, என் இளமைக்கால முதல் சேர்ந்து படிக்கும் பழைய நண்பர்களுடனேயே படிக்க அனுமதியுங்கள். என்னுடைய பள்ளி நடுத்தர மாணவர்கள் சேர்ந்து படிக்கும் ஒரு அரசு உதவி பெரும் பள்ளிதான். எனக்கு மட்டும் மேற்படிப்பிற்காக நீங்கள் செலவு செய்ய முன் வருவதை, என்னுடைய பழைய பள்ளிக்கே உங்களின் தரும நிதியாகச் கொஞ்சம் கொடுத்தாலும், அது எங்கள் பள்ளிக்கு பெரிய உதவியாகவே இருக்கும். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும், எங்கள் பள்ளியின் அத்தியாவசியமான ஒரு துறைக்குச் சேரும். உண்மையாகவே அந்த நிதி வருங்கால மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நீங்கள் புதிய பள்ளிக்கு கொடுக்க இருக்கும் கட்டாய டொனேஷன் ரூபாய் ஒரு இலட்சம், அந்தப் பள்ளியைப் பொறுத்த வரையில் ஏற்கேனவே உப்பாகக் கரிக்கும் கடல்த் தண்ணீரில் உங்களால் கரைக்கும் ஒரு பிடி உப்பாகத்தான் வெளியில் தெரியாமல் கறைந்து போகும். அதே பணத்தை, என்னுடைய பள்ளிக்கு முழுவதுமாக இல்லாவிட்டாலும், ஒரு சிறு அளவிளாவது நீங்கள் பள்ளியில் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்தால், அதுவே பள்ளிக்கு வளர்ச்சிக்கு உதவும் ஒரு பெரிய பங்காக இருக்கும். உங்களால் முடிந்தால், என் பள்ளிக்கு ஒரு நல்ல வாசக சாலை அமைத்துக் கொடுக்கலாம். பள்ளி மாணவர்களால் தனிப்பட்ட முறையில் வாங்க இயலாத சில உயர்ந்த நூல்களைவாங்கிக் கொடுக்க முடியும். மேற்படிப்பு மாணவர்களுக்காக, ஒரு சிறிய அளவிலாவது அறிவியல் கூடம் அமைத்துக் கொடுத்தால், நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல நடுத்தர மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும். உங்களின் உதவியால், எனக்கு மட்டுமல்ல, இனி வருங்காலத்தில் இந்தப் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் நீண்டகால உதவியாக இருக்கும்.

நான் உங்களைப் போல அறிவில் பெரியவனில்லை. எனக்கு நான் படிக்கும் பள்ளி நல்ல வசதிகளுடன் கூடிய ஒரு பள்ளியாக வ:ளரவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. உண்மையாகவே தேவையிருக்கும் இடத்தின் வளர்ச்சிக்காக முயற்சிகள் செய்யாமல், தேவையில்லாமல், பகட்டிற்காகவும், விளம்பரத்திற்காகவும் ஒரு பொருளாதாரத்தில் வசதி அடைந்த தனியார் கல்விநிறுவனத்திற்கு, நம்முடைய உழைப்பால் தேடிய பொருளை அவசியமின்றி நீங்கள் செலவிடவேண்டுமா என யோசியுங்கள். உங்களின் உழைப்பும், விருப்பமும் காலங்காலமாக நிலை நிற்கவேண்டுமா அல்லது சமுத்திரத்தில் கரைத்த ஒரு பிடிஉப்பாக வேண்டுமா என நீங்களே தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள். நான் உங்களின் அன்புக்குக் கட்டுப் பட்டவன் தான். நீங்கள் என் விருப்பத்திற்குமாறாக, உங்களின் ஆசைக்காக, என்னை அந்தத் தனியார் பள்ளியில் அதிக பணம் செலவழித்து சேர்க்கத்தான் முடிவு செய்தீர்களென்றால். நான் அதற்குக் கட்டுப் பட்டுத்தான் ஆகவேண்டும். மாதா பிதா தான் முன் நிற்கும் தெய்வங்கள் என்பது தான் எனக்குப் பள்ளியில் சொல்லிக்கொடுத்த முதல் பாடம். அதை நான் மீற மாட்டேன். உங்களிடம் என் கருத்தையும், ஆசையையும் சொல்லி விட்டேன். முடிவு உங்கள் கைகளில்தான். நீங்கள் என்ன சொன்னாலும், அதுவே என் தாரக மந்திரம். உங்களை எதிர்த்துப் பேசியதாக தயவுசெய்து எண்ணாதீர்கள். என்னுடைய கருத்தை உங்களிடம் சொன்னேன்.” எனப் பனிவாகப் பேசிவிட்டு, அரவிந்தன் விளையாட தன் பள்ளி மைதானத்திற்குச் சென்றான்.

மறுநாள் காலையில் கௌதமன் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டான். அவன் மனம் நேற்றையதினம் அரவிந்தனின் கருத்துக்களைக் திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்தன. அவனின் மனதிலும் தன் பையன் அரவிந்தன் சொன்னதின் உட்கருத்தின்பால் ஒரு ஈடுபாடு தோன்றின.மகனின் வாதத்தில் இருந்த ஒரு சமூக நோக்கம் அவனுள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னைச் சுற்றியுள்ள ஒரு அரசு உதவியுடன் இயங்கும் ஒர் சாதாரண கல்வியகத்திற்கு, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தாலே, அந்தப் பள்ளியும் வருங்காலத்தில் ஒரு பெரிய பள்ளியாக வளருவதற்கு வாய்ப்பு கிடைக்குமென்றும் அவன் மனதில் தோன்றியது. மகனுடைய விருப்பத்தைப் புரிந்து கொள்ளாமல், தன்னிச்சையாகவே அவனை வேறு பள்ளிக்கு மாற்றவேண்டுமென்ற தன்னுடைய ஆசை எத்தனை தப்பானதுஎனவும் அவனுக்குப் புரிந்தது. படிக்கும் மாணவனின் விருப்பத்தை தான் கருத்தில் கொள்ளாதது சரியல்ல எனவும் புரிந்து கொண்டான். தற்போது அரவிந்தன் படிக்கும் பள்ளியிலேயே அவனை தொடர்ந்து படிக்க வைக்கவும், அவனின் விருப்பப்படியே தன்னாலும், தன் நண்பர்களாலும் அந்தப் பள்ளிக்கு செய்யக்கூடிய வசதிகளை செய்து கொடுத்து, தங்களுடைய இடத்தைச் சேர்ந்த அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்குச் தன்னால் எத்தனை உதவிகளைச் செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்து, தன் ஒருமகன் மட்டுமல்லாது, மற்ற வசதியற்ற, நடுத்தர மாணவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்று, அவர்களின் எதிர்காலமும் பிரகாசமாகத் திகழச்செய்வதுதான் இன்றுமுதல் தன்னுடைய தலையாய சமூகப்பணியாக இருக்க வேண்டுமென்று ஒரு முடிவுக்கும் வந்தான். அவன் மனமும் குழப்பங்களிலிருந்து விடுபட்டுத் தெளிவு கண்டது. கௌதமனும் அன்று அரவிந்தனுடன் அவனுடைய பள்ளிக்குச் சென்றான். அரவிந்தனுக்குத் தன் அப்பா தன்னுடன் வருவதின் காரணம் தெரியவில்லை. அவன் மனதிற்குள் தன்னுடைய அப்பா அவர் விருப்பப்படியே தன்னை வேறு தனியார் பள்ளியில் சேர்க்க முடிவு செய்து, அது விஷயமாகத்தான் தன்னுடைய பள்ளிக்கு வுருகிறார் என முடிவும் செய்து கொண்டான்.

பள்ளிக்குச் சென்றவுடன், பள்ளியில் தலைமையாசிரியரின் அறைக்குச் சென்றார்கள். கௌதமன், தலைமையாசிரியரிடம் தான் தன் மகன் அரவிந்தனை அந்த ஊரிலிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க முடிவு செய்ததாகவும், ஆனால், நேற்று மாலையில் தன்மகன் அரவிந்தனின் கருத்தைக் கேட்டபின், தன்னுடைய முடிவு சரியானதல்லவென புரிந்து கொண்டதும், தன்னுடைய மகனின் விருப்பப்படியே அவனை பள்ளியிருதியாண்டுவரையில் இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டான். அவன் கடைசியாக தன்னுடைய ஒரு வேண்டுகோள் எனச்சொல்லி தன் மகனுடைய விருப்பப்படியே அந்தப் பள்ளிக்கு ஒரு நல்ல வசதியான வாசக சாலையும், பள்ளியிருதி வகுப்பு மாணவர்களுக்காக ஒரு அறிவியல் கூடமும் அமைக்கத் தேவையான பொருள் உதவியும் செய்ய முன்வருவதாகவும் சொல்லிவிட்டுத், தன் மகன் அரவிந்தனைப் பார்த்து, :அரவிந்தா இப்போது உனக்கு முழு மனத் திருப்திதானே” எனவும் பிரியமாகக் கேட்டான். தன் அப்பாவின் முடிவைக் கேட்டவுடன், அரவிந்தனுக்கு அளவிட முடியாத சந்தோஷம் ஏற்பட்டது. தன்னுடைய நன்றியை எப்படி அப்பாவிடம் சொல்லுவது எனத் தெரியாமல், கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, அந்த இடத்திலேயே, தன்னுடைய அப்பாவின் பாதங்களைப் பற்றிக் கொண்டு தாள் பணிந்தான். மகனின் சந்தோஷத்தைப் பார்த்த கௌதமனுக்கும் கண்களில் நீர் பெருக, மகனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, :அரவிந்தா நான் தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். நீ நேற்று மாலையில் சொன்னவைகள் எல்லாம், என்னுடைய தன்னலத்தைத் தொடைத்துவிட்டு, உன் ஒருவனின் எதிர்காலத்திற்காக மட்டும், வாழாமல், உன் போன்ற பல மாணவர்களின் எதிர்காலத்திற்கும் சேர்த்து வாழ வேண்டுமென்றும், நான் பிறந்த இந்த நாட்டுக்கு என்னால் ஆன சேவைகளைச் செய்ய வேண்டுமென்ற ஒரு புதிய எண்ணமும் எனக்குள் தோன்ற காரணமானவே நீதான். உன்னால் நான் இன்றுமுதல் இனி என்றென்றும் நல்லதொரு சமூக நோக்கமுள்ளவனாக வாழுவேன். இது உன் பள்ளி தலையாசிரியர் முன் நான் செய்யும் சபதமாகும்.” எனச் சொன்னான்.

கௌதமன் வீட்டிற்கு வந்தவுடன், சுதா அவனிடம் “உங்கள் நண்பர் சுகுமாரன் ப்போன் பண்ணினார். உங்களை வந்தவுடன் பேசச் சொன்னார்”என்றாள். கௌதமனும் உடனடியாகப் ப்போனை எடுத்து சுகுமாரனுடன் தொடர்பு கொண்டான். “சுகுமாரா, நான் என்னுடைய முடிவை மாற்றிக் கொண்டேன். என் மகன் அரவிந்தனை தொடர்ந்து அவன் தற்போது படிக்கும் பள்ளியிலேயே படிக்க வைக்க முடிவு செய்து விட்டேன்” என்றான். அதற்கு சுகுமாரன் கேட்டான் “என்ன காரணம். உன்னால் உடனடியாக முழுத் தொகையும் கட்ட முடியவில்லையென்றால், நான் உனக்கு இரு முறையாகக் கட்டுவதற்கு வசதி செய்து தருகிறேன்” எனவும் சொல்ல, கௌதமன் “சுகுமாரா என்னுடைய முடிவில் மாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம் பொருளாதார வசதி இல்லை. என்னுடைய கண்களைச் என் மகன் திறந்து விட்டான். நான் இந்த சமூகம் முன்னேற என்னால் முடிந்த உதவிகளை, வசதிகள் குறைந்த அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கே செய்து, நம்முடைய கடமைகளைச் செய்ய முடிவு செய்து விட்டேன். தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கும் டொனேஷன் சமுத்திரத்தில் ஒரு கைப்பிடியளவே கரைக்கும் உப்பாகத்தானிருக்கும். ஆனால், அதில் பாதி பங்கு பொருளாதார உதவியும், முழு மனசுடனும் முடிந்த உதவிகளைச் செய்வது, இருட்டில் இருக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு தீப ஒளி கொடுப்பதற்குச் சமமாகுமென்றும் புரிந்து கொண்டேன். இதற்கெல்லாம். என் மனதை திறந்த, என் மகன் அரவிந்தன் தான் காரணம். எனக்கு அவனைப் பொறுத்தவரையில் அந்தச் சுவாமிதானேயாகும்” என மனத்திருப்தியாகச் சொல்லி தன்னுடைய சந்தோஷத்தை வெளிக்காட்டினான். அவனுடன் சுதாவும், தன் மகனைப் பெறுமையாகப் பார்த்து, பூரித்தாள்.

இன்றைய இந்தியாவிற்கு வேண்டியது அரவிந்தன் போன்ற இளம் குறுத்துக்கள்தான்.

Wednesday, 15 May 2013

தொலைவில் ஒரு காசு மரம்

 

(ஜெயரமணி)

தொலைவில் ஒரு காசு மரம்

(ஜெயரமணி)

தன்னுடைய ஆபீஸ் வேலையை முடித்துக் கொண்டு, குருபரன், சிகாகோவில் உள்ள தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பிற்கு திரும்பினான். அவனுடைய வருகைக்காக காத்திருக்க யாரும் அவனுடன் இல்லை. ஏறக்குறைய பனிரெண்டாண்டு காலமாக அவன் தனியாகத்தான் இருக்கிறான். தன் வீட்டிற்கு வந்தவுடன், வாசற் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன், அங்கிருந்த இருளும், தனிமையும் பழகிப் போனவைதான். ஆனாலும் தினமும் தன் பணி முடிந்து வரும்போதெல்லாம், அவனுள் ஒரு சொல்லத் தெரியாத ஏக்கம் இருக்கும். மௌனமாகவே தன்னுடைய தினப்படி வேலைகளை முடித்தான். வந்தவுடன் தானே காப்பி போட்டு குடித்து விட்டு, அலமாரியிலிருந்து கொஞ்சம் பிஸ்கட் எடுத்துக் கொண்டு, ஒரு புஸ்தகத்தை எடுத்து படிக்கலானான். தினப்படி செய்யும் வழக்கம்தான் என்றாலும், அன்று அவனுக்கு தன்னுடைய தனிமையான வாழ்க்கை அலுத்து விட்டது போல் இருந்தது. அவனின் மனதில் தன்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் படமாடியது.

இந்தியாவிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் சிகாகோவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. அதில் வசிப்பவன் இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காகவும், பின்னர் அங்கேயே ஒரு வேலையையும் தேடிக் கொண்டு, அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிக்கும் பல இந்திய மக்களில் ஒருவந்தான் தென் தமிழ்நாட்டிலிருந்து சென்ற குருபரன். அவனின் பூர்வீகம் திருச்சிதான். அவனின் தகப்பனார் அங்கேயே உள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் ஆசிரியர்.குருபரன் வீட்டிற்கு மூத்த மகனாகப் பிறந்ததால் தன் தகப்பனாரின் குடும்பச் சுமையை சுமக்கவேண்டியவனான். அவன் சிறு வயதிலிருந்தே தன்னுடைய குடும்பச் சூழ்நிலையைப்புரிந்து, தகப்பனாருக்கு மிகவும் உதவியாகவே இருந்து வந்தான். தன்னுடைய படிப்பில் மிகவும் நன்றாகப் படித்து, அரசு உதவியுடனே மேற்படிப்பும் முடித்து, தன்னுடைய கல்லூரி ஆசிரியர்களின் யோசனைகளைக் கேட்டு, அவன் தன்னுடைய மேற்படிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள பல கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் செய்தான். அவனுடைய படிப்பின் தகுதியாலும், கல்லூரி ஆசிரியர்களின் முயற்சியாலும், அவனுக்கு அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் உதவித் தொகையுடனே படிப்பதற்கு வசதியும் வந்தது. அவனும் மிகவும் கவனமாக இருந்து, எந்தவிதமான பிரச்சினையுமின்றி தன்னுடைய மேற் படிப்பை முடித்து, அந்தக் கல்லூரியின் ஆசிரியர்களின் உதவியுடன், அவனுக்கு ஒரு நல்ல இடத்தில் வேலையும் கிடைத்து விட்டது. குருபரனுக்கு நல்ல உஊதியமும் கிடைக்கவும் செய்தது.

தன்னுடைய மேற் படிப்பிற்காக, குருபரன் சிகாகோவிற்குக் கிளம்பும்போது அவனுடைய தாயார் பார்வதிதான் மிகவும் கஷ்டப்பட்டாள். குரு அவளின் முதல் மகனாக மட்டுமில்லாமல், அவளின் மனம் குடும்ப பொருளாதார நிலையால் மிகவும் கஷ்டப்படும்போதெல்லாம், அவளுக்கு மிகவும் ஆறுதலைச் சொல்லுவான். தான் மிகவும் நன்றாகப் படித்து, பெரிய வேலைக்குப் போய் நிறைய பணம் சம்பாதித்து, அவளையும், தன்னுடைய மற்ற இரு தங்கைகள், ஒரு தம்பிகளின் படிப்பிற்கும், மற்றவைகளுக்கும் துனையாக இருப்பேன் என அடிக்கடிச் சொல்லி, அவளைத் தேற்றுவான். அவன் சொல்வதைக் கேட்கும் அவனின் தந்தையும் மிகவும் சந்தோஷப்படுவார். குருவும், தான் அமெரிக்காவில் ஒரு நல்ல வேலையைத் தேடி கொஞ்சம் பணம் சம்பாதிக்காமல் ஊருக்குத் திரும்புவதில்லை எனவும் மனதில் உறுதியாக இருந்தான். காலச் சக்கரம் உருண்டோடியது. குருவும் தன்னுடைய பெற்றோரைப் பிரிந்து வந்து, காலம் வருடங்களை முழுங்கியது. தான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடனே, முதலில் கொஞ்சம் பணம் சேர்க்கத் தொடங்கினான். கையில் கணிசமான இருப்பு சேர்ந்தவுடன், தன்னுடைய குடும்பத்தாரைப் பார்க்கத் துடித்தான். தான் கூடிய விரைவில் ஊருக்கு வருவதாகவும் தன்னுடைய அப்பாவிற்குக் கடிதமும் எழுதினான். ஆனால், அவன் ஆசைப்பட்டபடி, அவனுடைய வரவை யாரும் முக்கியமாக நினைக்கவில்லை. மாறாக, அவன் தகப்பனார் அவனிடம் தொலைபேசியில் சொன்னார் “குரு, நீ எங்களைப் பார்க்க வருவதாக எழுதியிருந்தாய். மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்த்து. ஆனால், இப்போது உன் பெரிய தங்கை மாலாவிற்கு ஒரு நல்ல இடத்தில் வரன் வந்து, ஜாதகம் மற்ற விஷயங்கள் எல்லாம் பொருந்தி வந்துள்ளது. அவர்கள் கூடிய விரைவில் திருமண நடத்தவேண்டுமென்றும் சொல்லிவிட்டார்கள். என்னுடைய வசதி உனக்குத் தெரியும். இப்போது, நீ இங்கு வந்தால், எனக்கும் திருப்தியாகத்தான் இருக்கும். ஆனால், திருமணத் திற்காக நாம் கொஞ்சம் அதிகப் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனால், என்னுடைய யோசனை நீ இப்போது வர வேண்டாம். நீ வருவதற்கு ஆகும் செலவையும் சேர்த்து, எனக்குக் கூடப் பணம் அனுப்பிவிடு. அதைக் கொண்டு, நான் கலியாணத்தை ஓரளவு நன்றாகவே செய்து முடித்து விடுவேன். உன் தங்கையின் திருமணத்திற்கு, நீ நேரில் வர மாட்டாயேத் தவிர, திருமணத்திற்கு மொத்த பொறுப்பும் உன்னுடையதாகத்தான் இருக்கும். எனக்குப் பின் இந்தக் குடும்பச்சுமையை நீதான் ஏற்க வேண்டும். நான் உன்னை வர வேண்டாமென்று சொன்னதாக நீ நினைத்து விடாதே. நம்முடைய வறுமைதான் என்னை அப்படிச் சொல்ல வைக்கிறது. இந்த ஒரு முறை நீ உன் பயணத்தை தள்ளிப் போடு. பின்னால் நீ வரும்போது, உன் தங்கை தன்னுடைய குழந்தையுடனே உன்னை வரவேற்பாள். உன்னுடைய ஏக்கம் எனக்குப் புரியும். ஆனால், நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் எல்லா ஆசைகளையும் தியாகம் செய்யத்தான் வேண்டும். என்னைத் தப்பாக எண்ணாதே. நீயே உன் அம்மாவிடம், உனக்கு தற்போது லீவு கிடைக்காதென்று சொல்லு, நீ வர வசதியில்லை எனப் பக்குவமாகச் சொல்லு. அவளும் தன் மனதை சமாதானப்படுத்திக் கொள்வாள். “ என மிகவும் திட்டமாகவும்,. அதே சமயம் தன்னுடைய மனம் புண் படாமலும் சொல்லி விட்டார். ஆக அவன் ஆசைப் பட்டபடியே, தன்னுடையமுதல் இந்தியா பயணம் நிறைவேறவில்லை. மாறாக, அவனின் தகப்பனாரின் விருப்பத்தின்படியே அவன் தான் ஊருக்குப் போகாமல், தான் போகும் வழிச்செலவையும் சேர்த்து, ஒரு கணிசமான பணத்தை தன் தங்கையின் திருமணத்திற்காக அனுப்பிவிட்டு, மனதிலேயே அவளின் திருமணத்தை நினைத்துக் கொண்டான். திருமணத்தைத் தொடர்ந்து, தலைதீபாவளி, தலைப் பொங்கல், வளைகாப்பு, சீமந்தம், தலைப் பிரவசம், குழந்தைக்கு மாமன் சீர், முதல் பிறந்தநாள் என அவனுடைய சேமிப்புகளை விழுங்கி விட்டது. மாறாக, ஊரில் அவனுடைய பொற்றோரின் மதிப்பும் உயர்ந்தது. இரு வருடங்கள் சென்ற பின், குருபரன் ஊருக்குப் போக திட்டம் செய்தான். அவனின் விருப்பத்தை தெரிந்தவுடன், அவனின் தகப்பனார் திரும்பவும் அவனிடம் பேசினார். அவருடைய பேச்சில் நிறையவே தேன் தடவியிருந்தது. இந்த முறை அவனின் இரண்டாவது தங்கை சுவாதியின் திருமணமும் கூடியது. மாலாவிற்குச் செய்த அதே அளவிற்குக் சீர் வரிசைகளைச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தவர், வழக்கம்போல் குருபரனிடமே தன்னுடைய பாரத்தினைச் சுமத்தினார். அதனால் இரண்டாம் முறையும் குருபரனின் தாயகம் செல்லும் நிகழ்ச்சி நின்று விட்டது. அவனின் மனம் தன் தாயாரைப் பார்க்க மிகவும் ஏங்கியது. ஆனால். சிறு வயதிலிருந்தே தன்னுடைய அப்பாவின் பேச்சுக்கு மாறாக எதுவும் சொல்லவோ, செய்யவோ சக்தியற்ற குருபரன், தன்னுடைய நியாயமான ஆசைகளை அடக்கிக் கொண்டான். ஒவ்வோரு முறை அவன் தன்னுடைய தாய்நாட்டுக்கு போக தீர்மானிக்கும்போது, அவனின் வருகயைத் தவிர்த்து, அவனுடைய பணம் மட்டுமே ஊருக்குப் போய்க்கொண்டிருந்தது. எத்தனை முறைகள் ஏமாற்றமடைந்தாலும். அவனின் மனதில் ஓரத்தில், ஒருசிறு நம்பிக்கை இருந்தது. தன்னுடைய தங்கைகளின் திருமணம் குடும்பத்தில் அவசியம் செய்யவேண்டிய ஒன்றுதான். அதை முடித்து விட்டேன். இனி, எனக்கு ஊருக்குப் போவதில் ஒரு தடையுமிருக்காது. அதனால், இந்த முறை கட்டாயம் ஊருக்குப் போய் தான் வளர்ந்த இடம், பழகிய நண்பர்கள், என கொஞ்ச காலம் உல்லாசமாக இருக்கலாம். தனக்கும் வாலிபம் முடியப் போகும் வயதாகி விட்டது. தான் ஊருக்குப் போனால், தன்னுடைய திருமணத்தையும் தன்னுடைய பெற்றோர் ஏற்பாடு செய்து, முடிப்பார்களென்ற அசைக்க முடியாத ஒரு ஆசையும் அவனுள் வளர்ந்து வந்தது. ஆனால், அவனின் சின்னச் சின்ன கனவுகள் கூட கூடவில்லை. தங்கைகளின் வாழ்வுவளம் பெற்றபின், அவருடைய தகப்பனாருக்குத் தான் இருக்கும் வீட்டை கொஞ்சம் பெரிதுபண்ணி, மாடியும், பின்புறம் ஒரு சின்ன குடியிருப்பும் கட்ட முடிவு செய்தார். காரணம், அவர் அந்த வருடம் ஓய்வு பெறுவார். பின்னர், வரும் ஓய்வு பணத்தில், தற்போது இருக்கும் வசதியான வாழ்வு வாழ முடியாது. அதற்கு வசதியாக, தன்னுடைய வீட்டிலேயே இரு குடும்பங்கள் இருக்கும்படி சிறிய மாற்றங்கள் செய்து, தன்னுடைய மாத வருமானத்தை வசதிபடுத்திக் கொள்ளத் தீர்மானித்தார். ஆகவே, இந்த முறையும் குருபரனின் இந்தியப் பயணம் குறை பிரசவமாகியது. அவனுடைய பணம்தான் சென்றது வழக்கம்போல். அத்துடன், வீடு கட்டுவதற்காக அவனின் அப்பா வங்கியில் வாங்கிய கடனுக்கு அவனும் இனைக் கையெழுத்தும் போட்டான். அவனுக்கு வீட்டுக் கடன் சுமையும் கூடியது. இதற்கிடையில் அவனின் கடைசி தம்பியின் கல்லூரிப் படிப்பும் அவனால்தான் முடிந்தது. இனையாக குருவின் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கும் அவனின் பணம்தான் போனது. தாயின் மருத்துவ சிகிச்சையின் போதாவது அவனுக்குத் தன் தாயாருடன் இருக்க வேண்டுமென்று மிகவும் துடித்தான். ஆனால், உடனடியாக தாயாரின் கர்ப்ப்பைநீக்கும் ஆப்பரேஷனுக்கு பணம் வேண்டியதால், வழக்கம்போல் அவனுடைய பயணத்தொகையும் அவனின்றி பயணம் செய்து, ஊருக்குப் போனது. அவன் போகவில்லை அவனின் மனம் போனது. தாயாரின் ஆபரேஷனன்று, அவன் தன்னுடைய போனின் மூலமே மருத்துவ மணையிலிருந்த தன்னுடைய தகப்பனாருடனும், சகோதரிகளுடனும் பேசிக்கொண்டு, ஒவ்வோரு மணிநேரத்திலும் தன் தாயாரின் உடல்னிலைப் பற்றி விசாரித்துக் கொண்டே யிருந்தான். அருகில் இருந்தவர்களின் துடிப்பைவிட தொலைவில் இருந்த குருவின் துடிப்பும், பிராத்தனையுமே அந்தத் தாயின் நோய்க்கு மருந்தானது.

குருவும் தன்னுடைய தாய்நாடு விட்டு வந்து, வருடங்கள்பத்திற்கு மேல் ஆகிவிட்டது. 24 வயதில் வந்தவனின் வயதோ 34த் தாண்டியது. ஆனால் அவனின் வாலிபம் துனையின்றியே துவண்டது. இராமர் 14ஆண்டுகள் வனவாசம் செய்தார். அவருடன் மனைவி சீதாதேவியும். இளையவர் இலட்சுமணரும் இருந்தார்கள். ஆனால் குருவின் அயல் நாட்டு வாசத்தில், அவனுடன் இருந்தது அவனின் தனிமையும் ஏக்கங்களுமேதான். அவன் இழந்தது தன்னுடைய உறவினர்களின் அருகாமை மட்டுமல்ல, அவனுடைய வாழ்வையும் தான். அன்னிய நாட்டில், தனிமையில் வாடினாலும், தன்னுடைய பிறந்த தேசத்தின் ஆதாரமான சுயவொழுக்கம் அவனை வழி தவறாமல் காத்து வந்தது., எந்த நிலையிலும் அவன் திடமாகவே இருந்தான். அவனுடன் இருப்பவர்களல்லாம் திருமணமாகி, குடும்பம் என இருந்தாலும். அவன் மட்டுமே தன் பிரம்மச்சாரிவிரதம் மாறாது இருந்தான். அவன் விருப்பப்பட்டு இல்லை. அவன் தன்னுடைய வாழ்வும் ஒருநாள் தன் பெற்றோரால் ஓளிபெறுமென்று திடமாக இருந்தான். காத்திருந்தான். ஆனால் அவனின் கடைசி தம்பியோ மிகவும் புத்திசாலி. தன்னுடைய படிப்பு முடிவதற்குள்ளேயே, தனக்கென்றுஒரு துனையைத் தேடிக் கொண்டு, அதனுடன் தன்னுடைய வாழ்வையும் இனைத்துக் கொண்டு விட்டான். அது விஷயம் அவனுடைய தாயார் அவனிடம் மிகவும் வருத்தமும், கோபமும் கொண்டு சொன்னபோது, அவனின் மனதில் ஒரு ஏக்கம் தோன்றியது. தம்பிக்கு இருந்த அந்த திடம் தனக்கு ஏன் இல்லாமல் போனது. அவனைப் பொறுத்தவரையில் தம்பி செய்தது தவறில்லை. அவனின் தேவைகளை அவன் பூர்த்தி செய்து கொண்டான். அவனால் தன்னுடைய எதிர்காலத்திற்கு என்ன வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்று ஒரு முடிவு செய்ய தைரியம் இருந்தது. தன்னுடைய வாழ்வை தீர்மானிக்கும் துனிவும் இருந்தது. தன்னிடம் அது இல்லை. தன் மனதில் தன்னுடைய குடும்பம் தான் இருந்தது. அதனால் அவனுக்கு தன் தாயாரின் புலம்பலில் எந்த நியாயமும் இருப்பதாகப் படவில்லை. அதனால் அவன் சொன்னான் :அம்மா, மாதவனைப் பற்றி தப்பாக சொல்லாதே. அவனின் முடிவு அவனுக்குநல்லது தான்” எனச் சொல்லி விட்டு, தொலைபேசியின் இனைப்பை முடித்துக் கொண்டான்.

அன்று இரவிலேயே அவனுடைய தம்பி மாதவன் போன் செய்தான். :அண்ணா, என்னுடைய முடிவுக்கு நீ துனையாகப் பேசியது எனக்கு மிகவும் தெம்பாக இருந்தது. நான் இந்த முடிவுக்கு வந்ததற்குக் காரணம் நம்முடைய பெற்றோர்கள்தான். அவர்கள் உன் விஷயத்தில் இருந்த சுயநலம் எனக்கு ஒரு பாடமாகியது. ஒவ்வோரு முறையும் நீ ஊருக்கு வர முடிவு செய்தபோதும், அவர்கள் தங்களுடைய தேவைகளுக்கு உன் பணம் ஒன்றைதானே குறியாக நினைத்தார்கள். ஒரு முறை கூட நீ வரவேண்டும், தங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என் நினைக்கவில்லையே. அவருடைய சுமைகளைச் சுமக்க ஒரு சுமைதாங்கியாகத்தான் உன்னை நினைத்தார்கள். உன் வயதில் உனக்கு நடக்க வேண்டியதை பற்றி கூட அவர்கள் நினைக்க வில்லை. மாறாக, உனக்குப் பெண் கொடுக்க விரும்பி, நிறையபேர்கள் அவரிடம் வந்தபோதெல்லாம், அவனால் இப்போது இந்தியாவர முடியாது, இன்னும் சில காலம் செல்லும். அவன் வரும் சமயத்தில் நான் சொல்லுவேனென்று சொல்லியே உனக்கு வந்த ஒவ்வோரு வாய்ப்பையும் உன்னைக் கேட்காமலே தவிர்த்து விட்டார். அம்மா அதற்குக் காரணம் கேட்டபோதெல்லாம். இப்போதுதான் அவனின் பணம் நமக்கு கிடைகிறது. இப்போதே அவனின் திருமணத்தை முடித்து விட்டால், அவனுக்கென்று ஒரு குடும்பம் பெருகிவிடும். ;பின்னால், நமக்குத் தேவேயென்றபோது அவனால் பணம் அனுப்ப முடியாது. வெளிநாட்டில் இருப்பவர்களெல்லாம். முப்பதுக்குமேல் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவனுக்கும் நாம் திருமணம் செய்யலாம், நம்முடைய வசதிகளை ஓரளவிற்கு நிறைவேற்றி கொண்டபின். அவன் நான் சொன்னால் கேட்டுக்கொள்வான். எனக்கு எல்லாம் தெரியும். அவன் அங்கு நிறையவே சம்பாதிப்பதால், அவனுக்கு பெரிய இடத்திலேயிருந்து வசதியான பெண்ணை நிறைய பணத்தோடும். சொத்தோடும் அமையும். பொறுமையாக இருப்போம்” எனச் சொல்லிவிடுவார். அதிலிருந்து என்னால் உணர முடிந்தது அவருக்கு உன் வளமான வாழ்வைவிட, தன்னுடைய பொருளாதாரம் வளர்வதுதான் முக்கியமானதென்று நீ வெகு தூரத்தில் இருந்தாய். அதனால் உனக்கு இவர்களின் சுயரூபம் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், நீ அவர்களுக்காக தொலை தூரத்தில் இருந்து காசு என்னும் கனியைக் கொடுக்கும் மரம்தான். அவர்களின் கண்களில் உன்னால் அவர்கள் அனுபவிக்கும் சுகங்கள்தான் முக்கியமானதாகத் தெரிந்ததே அன்றி, உனக்கும் ஒரு வாழ்வு வாழ வேண்டுமென்ற ஆசைகளெல்லாம் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் திடமாக இருந்தார்கள். அவர்களுக்கு நீ மூத்தவனாகப் பிறந்தாலும், அவர்களின் கண்களில், எண்ணத்தில் நீ ஒரு காசு காய்க்கும் மரம்தான். தன்னுடைய கனிகளை தாங்களே புசித்து ருசியை அனுபவிக்கும் மனிதன், என்றாவது ஒருநாள் அந்த மரத்திற்கும் ஒரு கனியை கொடுக்க முன் வந்தானா? இல்லையே அது போல்தான் இவர்களும். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் உன்னுடைய பணம் மட்டுமே. பணத்திற்கு முன் பாசம் பரிவு என்பதெல்லாம் செல்லாக்காசுதான் அண்ணா., அதனால் தான், அவர் உன்னை விட்டு, என்னை உரிக்க ஆரம்பிக்கும் முன்னேயே நான் என்னுடைய வாழ்வை முடிவு செய்து, எனக்கென ஒரு வழியில் பயணம் தொடங்கிவிட்டேன். என்னை சுயநலவாதி என்றாலும் சரிதான். உன்னைப் போலொரு தியாகவாழ்வு வாழ நான் விரும்பவில்லை. என் வாழ்வு என் முடிவு. அண்ணா, இனியாவது நீ உன்னைப் பற்றி நினைத்துப் பார்” என தெளிவாகச் சொல்லிவிட்டான்.

தம்பியின் வாதத்தில் இருந்த நிதரிசனம் புரிந்தது. தன்னுடைய தவறு என்னயென்று அவனுக்கும் புரிந்தது. தன்னுடைய எதிர்காலத்திற்கு என்ன வேண்டுமென திடமாக செயல் படாதது தன்னுடைய தப்பே. ஒரு முறைகூட தன்னுடைய திருமண விஷயமாக தான் தன் பெற்றோரிடம் பேசக் கூட இல்லையே. அவர்களாக தனக்குச் செய்வார்களென்று இருந்தது சரியல்லவே. தன்னுடைய தேவையை தான் சொல்லாமல் மற்றவர்களாகவே புரிந்துகொண்டு, முன் வருவார்களென்று தான் இருந்தது தன்னுடைய கையாலாதாத்தனந்தான். இத்தனை வருடம் அன்னிய நாட்டில் வந்து வாழ ஆரம்பித்ததின் பலன் தன்னுடைய ஊரில் தன்னுடைய தகப்பனாரின் மதிப்பும், வசதியும் கூடியது. அவர்கள் வாழ்வு செழிப்பாகியது. ஆனால் அவனின் வாழ்வு? தனிமைமட்டுமே. இல்லையில்லை, தொடர்ந்து தன்னைப் பற்றி கவலைபடாமல், விடுமுறையின்று உழைத்தது அவனின் உடல் நிலை சீர்கெட்டது. தீராத ஒரு வயிற்றுவலிதான் அவனுக்கு தன் உழைப்பால் கிடைத்த சுகம். என்ன மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அதற்குக் காரணம் தன்னுடைய மனச்சிதைவுதான். தன்னுடைய மனதில் ஆசைகளைப் பூட்டிவைத்துவிட்டு, மற்றவர்களின் வாழ்வு மலர தான் அசடாக இருந்ததுதான் என அவனுக்கும் புரிந்துவிட்டது.

தன்னைப் பற்றி நினைத்து, தன்னிரக்கம் கொண்டவனின், வயிற்று வலியும் தாந்தான் இனி உனக்குச் துனையெனச் சொல்லாமல் வந்து அவனைத் துன்புறுத்தியது. வலியின் வேதனை தாங்காமல், குரு எழுந்து சென்று, தன்னுடைய சுடுநீர்ப்பையை எடுத்துவந்து, தன்னுடைய வயிற்றின்மேல் வைத்துக் கொண்டான். அவனின் இதயத்திலிருந்த வழிந்த நீரின், சூடெல்லாம் அவனின் கண்களின் வழியாக வெளி வந்தது. அவனின் வெந்நீர்ப்பையேவிட கண்ணீரில் உஷ்ணம் அதிகமாகவே யிருந்தது

இந்தியாவில் ஒரு நடுத்தரகுடும்பம் வளம் பெற, அந்தக் குடும்பத்தில் ஒரு கிளையே மேல்நாட்டில், காசுகொழிக்கும் மரமாக மாறி, தன்னுடைய வளமான உழைப்பால் பணம் என்னும் பழத்தை அள்ளியள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்தக் காசு காய்க்கும் மரமோ, ஒரு அன்புக்கும், அரவணைப்பிற்கும் ஏங்கியது. அதனின் ஏக்கமே கண்ணீராக மாறி, அந்த மரத்திற்கே உரமாகிதோ எனத் தோன்றியது. ஒன்று செழிக்க ஒன்று அழியவேண்டுமென்ற இயற்கையின் தீர்ப்பைத்தான் யார் மாற்ற முடியும். குருவின் இயலாமையா அல்லது அவனின் தகப்பனாரின் சுயநலமா? யார் நியாயம் சொல்ல முடியும்?

.

Tuesday, 7 May 2013

வீரபாண்டியனின் காதலி

(ஜெயரமணி)

அறிமுகம்

எனக்கு சாண்டில்யனின் நாவல்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவருடைய கதைகளுக்குள் என்னுடைய கற்பனைகளைச் சேர்த்து இதனைப் படைக்கிறேன். படித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். இந்த என் முதல் முயற்சி. சரித்திரக் காவியம் படைப்பதில் ஈடு இணையில்லாத மாமேதையின் நூற்றாண்டில் அந்த அறிஞருக்கும், அவர் படைப்புக்களுக்கும் நான் சமர்ப்பிக்கும் என் இதயங்கலந்த அஞ்சலியாகும். இந்த என் கன்னிமுயற்சியில் எந்த விதத்திலும் அவரின் நினைவுகளுக்கோ, சரித்திரப் புகழுக்கோ அவமதிப்புச் செய்யும் என்ணம் கடுகளவும் இல்லை. மூலக் கதையின் கருத்துக்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

******** ******** ******

மூலக் கதை—ராஜ முத்திரை

(படைத்தவர் – திருவாளர் சாண்டில்யன்)

இச்சிறுகதையின் முன்னடக்கம்).

*******

நூற்றாண்டு காணூம் சரித்திர மாமேதை திருவாளர் சாண்டில்யன் அவர்களின் பெருங்காவியமான ‘இராஜமுத்திரை” எனும் நவீனத்தில் பல சரித்திர படைப்புக் கதாபாத்திரங்கள் உலவி வருகிறார்கள். பல சம்பவங்கள் எல்லாம் அக்காலத் தமிழ் மன்னர்களான பாண்டிய, சேர வம்சத்தினர்களைப் பற்றியும் அவர்களின் வீர, தீர செயல்கள், போர்முறைகள், நாகரீகம், வாழ்ந்த முறைகள் பற்றியும் சுவைபட சொல்லப்பட்டிருக்கின்றன. நான் என் சிறு வட்டத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களான பாண்டிய இளவரசன் வீரபாண்டியன், அவன் அன்புக்குரியவளான கொற்கைகோட்டைக் காவலன் மகள் இளநங்கை இருவரின் காதலின் தாக்கத்தைப் பற்றியும் அதனைத் தொடர்ந்து அவர்களிடையே உருவாகும் ஊடல்—கூடல் உறவு பற்றி மட்டும்தான் என் கற்பனைச் சிறகுகளை விரித்துள்ளேன். இந்த என் சிந்தனைகள்தான் இச்சிறுகதையின் இழைகள்.

. ******************

வீரபாண்டியனின் காதலி

(ஜெயரமணி)

--------

இலாபமும் நஷ்டமும்

கொற்கை கோட்டையின் எல்லை காட்டு விளிம்பில் இருந்த பெரிய மாளிகைக்கு பாண்டிய இளவலும், கொற்கையின் அதிபதியுமாகிய வீரபாண்டியனால் அனுப்பப்பட்ட கோட்டைக் காவலரின் மகளான இளநங்கை அங்கு தன்னை வரவேற்ற சேரமன்னன் வீரரவி உதய மார்த்தாண்டவர்மனைப் பார்த்து எந்த விதமான வியப்பையும் காட்டவில்லை. மாறாக சிரிய புன்சிரிப்பு மட்டுமே அவளின் வதனத்தில் தெரிந்தது. ஆனால் இளநங்கையின் முகத்தில் புன்சிரிப்பைக் கண்ட சேரமன்னன், தான் நினைத்தபடி அவள் தன்னைக் கண்டு சிரிதும் பயம் காட்டாது நின்றதைக் கண்டு ஏமாற்றமே அடைந்தான்.

​அவன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைக் கண்ட இளநங்கையோ தைரியமாக அவனை நோக்கியபடியே “அவர் உங்களைத்தான் இங்கு எதிர்பார்த்தார்.” என்றாள்.

“யார் அந்த அவர்” எனக் கேட்ட மன்னனை நோக்கிய இளநங்கை கொஞ்சமும் தயங்காது “நீங்கள் யாரை எதிர்பார்த்து இங்கு காத்துக் கொண்டு இருக்கிறீர்களோ அவர்தான்” எனப் பதில் உரைத்தாள். இப்படியே இருவருக்குமிடையில் வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியில் சேரமன்னன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“இளநங்கை என் குறி எப்பவும் தப்பாது. வீரபாண்டியனைப் பிடிக்கத்தான் நான் திட்டமிட்டேன். அதனால்தான் நான் உன்னை என் வீரர்களைவிட்டு தோப்பில் மடக்கச் சொன்னேன். என் திட்டம் சரியாக நிறைவேறியது.”

எப்படி உங்கள் திட்டம் நிறைவேறியது? எனக் கேட்டவளிடம் விஷமமாகச் சிரித்துக் கொண்டே. “பசுவைத் தேடி காளை வந்துதான் தீரும்” என்றான். மன்னனின் பேச்சிலிருந்த விஷமத்தைப் புரியாது அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் இளநங்கை.

திகைப்புடன் தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த இளநங்கையை நோக்கிய வீரரவி “உனக்குப் புரியும்படியே சொல்கிறேன். வீரபாண்டியன் பத்து நாட்களாக கொற்கையில் தங்கி இருப்பதும், அவன் தினமும் உன்னைப் பார்த்துக் கொண்டு பொருனை நதிக் கரையில் உட்கார்ந்து இருப்பதையும் நானும் அறிவேன். அவன் என்றாவது ஒரு நாள் உன்னைத் தொடர்ந்து வருவான், அப்போது அவனைப் பிடிக்கலாமென்றுதான் நானும் பொருமையாகக் காத்திருந்தேன். ஆனால் அவன் ஏனோ நேற்றுவரையில் உன்னைத் தொடரவில்லை. நேற்று உன்னைத் தொடர்ந்தவனைக் கொல்ல என் வீரர்கள் தோப்பில் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நேற்று அவனுக்கு அதிர்ஷ்டமான நாள். அவனைக் கொல்ல நான் அனுப்பிய வீரர்கள் ஐவர் மரணமடைந்தார்கள். அவன் தப்பித்து விட்டான். இனி அவனைத் தேடுவதைவிட்டு அவன் என்னைத் தேடி வரவேண்டுமென்றுதான் நான் என்னுடைய பதக்கத்தைப் போட்டுவிட்டு வந்தேன். எப்படியும் அவனை இன்று சந்தித்து விடுவேன் என்றும் தெரியும். ஆனால் நான் எதிர்பார்க்காதது உன் வரவை. என் அதிர்ஷ்டம் இப்படி ஒரு எழிலரசி என்னைத் தேடி வந்திருப்பது.

“இதில் மன்னரின் அதிர்ஷ்டம் என்ன?’ என வினவிய இளநங்கைக்கு பதிலாகச் சொன்னான் மன்னன்.

“எப்படியும் உன்னைக் காக்க உன் காதலன் வீரபாண்டியன் இங்கு வருவான். இன்று இரவுக்குள் அவனும், அவனுடைய இந்தக் கோட்டையும் என் வசமாகிவிடும்.”

சேரனின் திட்டத்தைக் கேட்ட இளநங்கை ‘மன்னரின் எண்ணங்கள் கூடி வருமா?’ என் சந்தேகத்துடன் கேட்டாள்.

அதற்கு ஆணவமாகக் கூறினான் மன்னன். “இந்த மாளிகையில் என்னுடைய அதிகாரத்தைத் தடுக்க யாருமில்லை. ஏன்?. உன்னைப் படைத்த அந்த ஆண்டவனே வந்தால்கூட என்னுடைய திட்டம் நிறைவேறும்” என்று.

அவனின் ஆணாவமானப் பேச்சைத் தொடர்ந்து வந்தது அசரீரிபோல் வீரபாண்டியனின் குரல். “மகேசனின் முடிவுக்கு முன் எந்த மன்னனின் ஆணையும் நிற்காது. அவன் தீர்மானப்படித் தான் எல்லா விஷயங்களும் நடக்கும்’. குரலைத் தொடர்ந்து தான் இத்தனை நேரம் மறைந்திருந்த தூனைவிட்டு வெளியே வந்தான்.

திடீரென்று வீரபாண்டியன் வந்ததால் அங்கிருந்த இருவருமே அதிர்ச்சியடைந்தனர். முதலில் தனது அச்சத்தை சிறிது மறைத்துக்கொண்ட வீரரவி “உண்மைதான். எனது திட்டப்படித்தான் எதுவும் நடக்கும். இப்பொழுது நீயே வந்து விட்டாய். இனி உன்னைக் கைது செய்வதை யாரும் தடுக்க முடியாது. உன்னைக் கைது செய்தபின் இந்த கொற்கையும் என் வசமாகும். பின் இந்த பேரழகியும் என் வசமாவாள்” எனக் கூறியவனைத் தடுத்து வீர்பாண்டியன் நகைத்தான்.

பிறகு வீரரவியின் முகத்தைப் பார்த்து “”எல்லாம் உன் எண்ணப்படி நடந்தால் வீரபாண்டியனின் திட்டம் என்னவாகும்? உன் திட்டத்தை முறியடிக்கத்தான் நான் வந்திருக்கிறேன்” எனக் கூறியபடியே தூணில் நன்றாகச் சாய்ந்து நின்றான்.

“அப்படியா? உன்னுடன் எத்தனை வீரர்கள் வந்துள்ளார்கள்”? என்றவனுக்கு “நான் தனியாகத்தான் வந்துள்ளேன். என் பலம் என் புத்தியும், வாளும்தான்’ எனச் சுட்டிக்காட்டினான்

அவனின் துணிச்சலைப் பார்த்து சிறிது அச்சப்பட்டவன், தன் அச்சத்தை வெளிக்காட்டாது, தன் வீரர்களைச் சுற்றிப் பார்த்து வீரரவி கோபமாகக் கேட்டான் “ஏன் அவனை நோக்கி வேலை வீச உங்களுக்குச் சொல்லவேண்டுமா?”

உடனே வீரர்கள் வீரபாண்டியனை நோக்கி வரத்தொடங்கவும் இளநங்கை பயந்தாள். அதைப் பார்த்த சேரமன்னன் “உன் காதலனுக்குச் சொல். என்னிடம் வீணாக வார்த்தையாடி உயிரைவிட வேண்டாம் என்று.. மன்னிப்புக்கேட்டு உன்னையும் கூட்டிக்கொண்டு போகச்சொல்” என பரிகாசத்துடன் சொன்னான்.

அவனின் பரிகாசத்தினால் சினத்தின்வசப் பட்ட வீர்பாண்டியன் அவனைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் “யார் யாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?” பாண்டிய நாட்டுக்குச் சொந்தமான முத்துக்களைக் களவாடிய சேர மன்னரும் அவருடன் களவில் கூட்டுச் சேர்ந்த சிங்களனும், போசளனும் தான் பாண்டிய மன்னர் சுந்தரதேவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” அந்த குற்றச் சாட்டுக்கள் பேரிடியாக வீரரவியின் சித்தத்தைக் கலக்கியது. சிறிது தடுமாரியவன் தன்னை சமாளித்துக் கொண்டு, அவனை நோக்கிய வீரரவி “ஏன் சந்தேகம். இப்போது யார் பிடியில் யார் இருப்பது?” எனக்கேட்டான்.

. ஆனால் அவனை நோக்கி விரபாண்டியனின் வாளும் நீண்டது. அதைக்கண்ட வீரர்கள் தங்களின் வாட்களைவீச முற்பட்டவுடன் “என் மீது வாளை வீசும் முன் உங்கள் மன்னனின் உயிர் பறந்துவிடும்” என வேகமாகச் சொன்னதுமல்லாது, தன் வாளால் தன்னை நோக்கி வந்த வாட்களையும் தடுத்தான், தன் வீரர்கள் தயங்குவதைக் கண்ட வீரரவி “ஒருவனைப் பிடிக்க உங்களுக்குப் பயமா? வேலைவீசுங்கள்” எனக் கூவினான். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் வீரபாண்டியன் தூணைச்சுற்றிக்கொண்டு வருவதைக் கண்ட வீரர்கள் மீண்டும் அவனைச் சுற்ற முற்பட்டனர். அதே சமயம் தன் இடுப்பிலிருந்த குறுவாளையும் இடது கையால் எடுத்து வீரரவிக்கு குறி வைத்தான். ”யாரும் என்னையோ, இளநங்கையையோ சூழ வேண்டாம்” என கூவினான். அப்போது இளநங்கையும் தன் இடுப்பிலிருந்த குறுவாளையும் வீரரவியை நோக்கி வீசமுற்பட்டாள். ஆனால் அதைப் பார்த்த வீரர்கள் அவளையும் நோக்கி தங்களின் வாட்களை குறி வைத்தார்கள்.

அதைப் பார்த்த வீரபாண்டியன் “இளநங்கை, நீ ஒதுங்கி விடு. இது எனக்கும் மன்னருக்கும் தனிப் போராட்டம்” என்றான். அதே சமயம் வீரர்கள் நெருங்குவதைக் கண்டவன் மன்னனையும் நோக்க அவனோ எதுவும் சொல்லாது சிரித்தான்.

இதனால் கோபம் அதிகமாக வீரபாண்டியன் “ஒரு பெண்ணைச் சுற்றி இத்தனை வீரர்களை நிறுத்திய நீயும் வீரனா?” எனக் கேட்டான்.

“ஏன் ஒருவனின் உயிரைப்போக்க இருவர் குறுவாளை வீச முற்பட்டால், என் வீரர்கள் என்னைக்காக்க வருவது தப்பா?” எனக் கேட்டபடியே “நீங்கள் இருவரும் உங்கள் வாட்களைக் கீழே போட்டுவிட்டு என்னிடம் சரனடையுங்கள். இல்லையேல் உன் காதலியின் உயிர் இருக்காது. அவளின் மார்புக்குக் குறிபார்த்து என்னுடைய குறுவாளும் உள்ளது பார்” எனக் கூறினான்.

அதைப் பார்த்த வீரபாண்டியன் “இளநங்கை நீயும் வாளைப் போட்டுவிடு” எனக் கூறி தன்னுடைய வாளையும் கீழே போட்டான். இளநங்கையும் அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தன் வாளையும் கீழேப் போட்டாள்.

உடனடியாக தன் பின்னால் நின்ற விரனைப் பார்த்து ‘இப்போது உன் வேலால் அவனைக் கொன்றுவிடு” எனக் கூறியதும் அதிர்ச்சியடைந்த இளநங்கை “இது மிக அநியாயம். மன்னனுக்கு அழகல்ல” எனக் கூறிக் கொண்டே வீரபாண்டியனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்யச் சொன்னீர்கள்? உங்களின் உயிருக்கு நீங்களே ஆபத்தைக் கொண்டு வந்து வீட்டீர்களே’ எனத்துடித்தாள். அதே சமயம் அவள் மயக்கம் அடைந்தும் சாய்ந்தாள். மயக்கம் அடையுமுன் தன் கையில் எடுத்த குறுவாளை வீரபாண்டியனை நோக்கி வேலைவீச முற்பட்டவனை நோக்கி வீசிவிட்டாள். அதனால் அந்த வீரனும் சாய்ந்தான்.

ஒரு வினாடியில் நிலை மாறிப்போனதை அவள் மட்டுமல்ல சேரனும் உணரவில்லை. வீரபாண்டியனின் இடுப்பிலிருந்த இராஜமுத்திரை சேர மன்னனின் தோளை முத்தமிட்டுக் கொண்டிருக்க அவன் தோளிருந்து குறுதி பெருக பெரியதாக அலறிக்கொண்டே கீழே விழுந்தான். மன்னனைப் பிடிக்க வீரர்கள் ஓடியதைக் கண்ட வீரபாண்டியன் அங்கிருந்த இரு விளக்குகளை அனைத்து விட்டு, திடீரேன்று பரவிய இருளில் வீரர்களின் கூச்சலைத் தொடர்ந்த்து தன் வாளைக் கொண்டு இருட்டில் கைபட்ட திசையில் ஒரு குறியின்றி வீசிக்கொண்டே இளநங்கையைத் தூக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு வேகமாக ஓடினான்.

பின்னால் வீரர்கள் துரத்தும் பரபரப்பும், காலடி ஓசைகளும் குறைந்தபின், சிறிது நிதானப்பட்ட வீரபாண்டியன் தான் பொருனையாற்றின் கரையை நெருங்கிவிட்டதை உணர்ந்து இனி இளநங்கைக்கு மூர்ச்சை தெளிவிக்க, அவளைத் தன் மடிமீது அமர்த்திக்கொண்டு, அவளின் முகத்தைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு, தன் கைகளினால் பொருனையாற்றின் நீரை எடுத்து அவளின் முகத்தில் தெளித்தான். கலைந்த கூந்தலை கோதிவிட்டான். அவளின் சுந்தர முகத்தை நிலவொளியில் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் மலரத்தொடங்கின். அத்தகைய அழகிய முகம் சோர்வடைந்து, அதிர்ச்சியால் தளர்ந்து கண்கள் மூடிக்கிடந்தைக் கண்டு அவளின் இந்த நிலைக்குத் தானே காரணம் என்று உணர்ந்தவனின் மனமும் கலங்கியது. தான் அவளின் தகப்பனார் தடுத்தும் பிடிவாதமாக காமுகனென்று சேரநாட்டு மக்களாலேயே தூற்றப்பட்டவனான சேரமன்னன் வீரரவியிடம் இளநங்கையை அனுப்பியதும் அதனால் அந்த காமுகனின் காமக் கண்களுக்கு வெறியைத் தூண்டிவிட்டதையும் உணர்ந்தான். இனி அவளை சேரனின் கண்களில் படாமல் காப்பதும் தன் கடமையாகியதையும் உணர்ந்தான். அவனின் கைகள் அவளின் முகத்தையும் மெதுவாகத் தடவிக் கொடுத்தன. வீரபாண்டியனின் சிகிச்சைகளால் சிறிது தெளிவடைந்தவள் தானிருப்பது வீரபாண்டியனின் மடியே என உணர்ந்ததால் நாணப்பட்டு எழமுயற்சி செய்தாள். ஆனால் வீரபாண்டியனோ அந்தப்பூங்கொடித் தன்னை விட்டு விலகுவதை விரும்பாது தன் இரு கைகளால் அவளைச் சுற்றிக் கொண்டான். பிறகு மெதுவாக “நீ மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாய். அதனால் இன்னும் சிறிது நேரம் அப்படியே என் மடியில் இரு” என்றான். அவனின் இரு கைகளில் சிறைபட்டத் தன்னை விட அவனுக்கு மன மில்லை என்பதை உணர்ந்தவள் சிறிது கூச்சப்பட்டாலும், அவனின் ஆசையை மீற முடியாது நாணத்துடன் அசைந்தாள். பிறகு மெதுவாகத் தன் கண்களை அவனின் தோளிலும், மார்பிலும் செலுத்தினாள். அவளின் பார்வையைத் தொடர்ந்தவன் அவளின் மனத்தை புரிந்துகொண்டு, “என்ன பார்க்கிறாய்” என மெதுவாகக் கேட்டான்.

“உங்கள் மீது ஒரு வீரன் வேலைக் குறிவைத்தானே’ என அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படயிருந்ததைப் பற்றி கவலையுடன் வினவ, அவன் சிரித்துக்கொண்டே “நீ தான் உன் குறுவாளால் அவனைக்கொன்று என்னைக் காப்பாற்றிவிட்டாயே. எனக்கு ஏதும் ஆகவில்லை” எனக்கூறினான்.

‘எப்படி நீங்கள் தப்பமுடிந்தது. ஏதும் உதவி வெளியிலிருந்து வந்ததா?’ எனக் கேட்டவளுக்கு, “உன் உதவியைத் தவிர எனக்கு எதுவும் வரவில்லை. என்றான். அப்படியானால் நீங்கள் எப்படி அங்கிருந்து வரமுடிந்தது’ எனக் கேட்டுக்கொண்டே அவனின் மடியிலிருந்து எழுந்தாள்.

பண்பாடு காரணமாக அவளைத் தன் பிடியிலிருந்து மெதுவாக விடுவித்தான். தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தவனின் கைகளைத் தன் கைகளினால் பற்றிக்கொண்டு ஆவலோடு “என்ன நடந்தது என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்று கெஞ்சலொடு கேட்டாள்.

தாந்தான் அந்த அழகுச்சிலையை இருமுறை தொட்டோமே தவிர, முதன் முதலாக தானே முன்வந்து தன்னைத் தீண்டியதும், ஒரு பரவசம் தன் உடலில் பாய்ந்ததை உணர்ந்தான் யுவனான கொற்கைத் தலைவன் வீரபாண்டியன். அவனுக்கும் இதுவே முதல்பருவப் பெண்ணின் ஸ்பரிசம் என்றதால், சொல்லவொண்னா புதுவெள்ளம் அவன் உடலில் பரவியது. அவளைக் காதலொடு பார்த்துக்கொண்டே மெதுவாக “எனக்கு இம்முறை ஒருவகைத் தோல்விதான். என் மீது வாளை வீசியவனைவிட்டு, உன்னைத் தூக்கிக்கொண்டு எதிரிகளிடமிருந்து ஓடி வந்தது ஒரு வீரனுக்கு அழகல்ல. ஆனால் அந்த சமயம் உன் உயிரைக் கப்பாற்றுவதுதான் என் முதல் நோக்கமாயிருந்தது. அதனால் நான் வீரரவியின் தோளில் என் இராஜமுத்திரை பதித்த கோடரியை வீசி, அவன் கீழே வீழ்ந்ததைப் பார்த்தவுடன், அவன் வீரர்கள் அவனைப் பிடிக்கச் சென்றவுடன், பக்கத்தில் இருந்த இருவிளக்குகளைச் சாய்த்து அணைத்துவிட்டு, இருட்டில் கைபோனபடி என் வாளைவீசிக்கொண்டு, உன்னைத் தூக்கி என் தோளில் போட்டுக்கொண்டு ஓடி வந்துவிட்டேன். இது என் வீரத்துக்கு அழகல்ல. இந்த போரில் எனக்கு ஒரு பெரிய லாபமும். ஒரு நஷ்டமும் ஏற்பட்டது” என்றான்.

நடந்ததைப்பற்றி யோசித்துப் பார்த்தவளுக்கு, அவன் வீரத்திற்கு ஏற்பட்ட சோதனையும், அவனின் இராஜமுத்திரை அவன்வசம் விட்டு எதிரியின் வசம் சென்றது பெரிய நஷ்டம்தான் என்றும் உணர்ந்தாள். அதற்கு காரணம் தாந்தான் என்று தெரிந்ததும் அவள் மனமும் முகமும் மிகவும் வாடியது. மெதுவாக “உங்களின் நஷ்டம் பெரியதுதான். .முத்தைப் பற்றி ஏதும்தெரிந்தததா? எனக் கேட்டவளுக்கு “முத்துக் களவைப்பற்றி ஏதும் இந்தமுறை கண்டுபிடிக்க முடியவில்லை”. இது நம் பாண்டியநாட்டுக்கும், எங்களுக்கும் பெரிய பாதிப்புத்தான்.” என்றான் பாண்டிய இளவல்.

சிறிது நேரம் அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு கேட்டாள் ”நமக்கு ஏற்பட்ட இழப்பைச் சொன்னீர்கள். லாபத்தைப் பற்றி சொல்லாவில்லையே” என்று. கேட்டவளுக்குப் பதில் சொல்லாது அவள் முகத்தையே குறுகுறுவென்று பார்த்தான் சிறிது நேரம் முகத்தில் குறும்பு படர.

பிறகு அவளைப் பார்த்தபடியே “நம்முடைய இழப்பைப்ப்ற்றிச் சொன்னேன். அது எங்கள் தனிப்பட்டது. துன்பத்தைத் தனியாகத்தான் அனுபவிக்கனும். ஆனால் லாபம் என்பது என் ஒருவனுடையது அல்ல. அதை என்னுடன் பங்குகொள்ள ஒருவர் வேண்டும். அவரின் மனம் தெரியாது எப்படிச் சொல்லமுடியும்? அதனால்தான் சொல்ல யோசிக்கின்றேன்” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

‘ஆனந்த்ததில் பங்கு கொள்ள யார்தான் யோசிப்பார்கள்” எனக் கேட்டாள். அவளின் பதிலைக் கேட்டவுடன் இளநங்கையைத் தன்னைனோக்கித் திருப்பினான் .ஆவலுடன். “அப்படியானால் என் லாபத்திலும் நீ பங்கு கொள்வாயா? என்று கேட்டவனைப் பார்த்து “ இந்த நிமிடம் வரை உங்களுடன் என்னைக் கூட்டிக் கொண்டு தானே வந்திருக்கிறீர்கள். இப்போதுமட்டும் ஏன் கேட்கீறீர்கள்” என மெதுவாகக் கேட்டாள்

அதற்கு அவன் “பாண்டிய நாட்டுப் பணிக்கு என் நாட்டு மக்கள் யாரையும் கூப்பிட இராஜகுடும்பத்தைச் சார்ந்த எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் இது என் தனிப்பட்ட வாழ்க்கை. இதில் உன் சம்மதம் முக்கியம்” என்றான். அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்த கோட்டைக் காவலன் மகளின் முகமும் மனமும் சந்தோஷத்தால் பரவசம் அடைந்தது. அதைப் பார்த்த வீரபாண்டியன் மனமும் முகமும் கண்களும் காதலால் மின்ன, மெதுவாகக் குனிந்து ரகசியமாக “லாபத்தைச் சொல்லவா?. என்றான். உம் என்ற ஒரு வார்த்தை மட்டும் அவளிடமிருந்து வந்தது. அவனின் கைகளோ புஷ்ட்டியாகவும், செம்மையாகவும், அந்திசூரியனின் ஓளியால் சிறிது மஞ்சள் நிறமும் கூடி மின்னிய இளநங்கையின் கன்னங்கள் இரண்டையும் பற்றிக்கொண்டன..

அப்போதும் ஒன்றும் சொல்லாமல் தன் கன்னங்களை கைகளால் பற்றிக் கொண்டு தயங்கியவனைப் பார்த்தவளின் கண்களும் “சொல்லுங்களேன்” எனக் கெஞ்சின. “எப்படி” என்றவனுக்கு .சிரித்துக்கொண்டே “எல்லாரும் எப்படிச் சொல்வார்களோ அப்படித்தானே சொல்ல முடியும். எல்லாரும் வாயால்தானே சொல்வார்கள்” எனப் பதிலும் சொன்னாள். ‘அப்படியானால் நான் என் வாயால் எப்படிச் சொன்னாலும் உனக்குச் சம்மதமா? எனக் கேட்டு சிரித்தான். அவளும் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே “சம்மதம்”. எனறாள். உடனேயே அவன் “சத்தியமாக” எனக் கேட்க அவளும் சிரித்துக்கொண்டே அவன் கையில் செல்லமாகத் தட்டினாள். தன் கையைத்தட்டிச் சத்தியம் செய்தவளை காதலுடன் பார்த்துக்கொண்டே மெதுவாக தன் உறுதியான உதடுகளால் அவளின் பவழத்தைப் போன்ற உதடுகளை மெதுவாகப் பற்றினான்.

பருவமடைந்தபின் முதன்முதலாக ஒரு யுவனின் ஸ்பரிசம் அவளை உணர்ச்சிவசப்படச் செய்தன. அளவிடமுடியாத நாணமும், இன்பமும் அவளை பரவசப்படச்செய்தன. சில நொடிகளுக்கு இருவரின் உதடுகளூம் இனைந்தேயிருந்தன. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றுகூட அறியசக்தியற்று இருவரும் தங்களுக்குள் ஒரு உலகில் உறவாடினர். இருவரில் முதலில் தன்நிலை அடைந்த வீரபாண்டியன் தன்னுடைய குறும்பால் முகம் முழுவதும் குங்கும நிறத்தில் பளபளவென மின்னிய வண்னமிருந்த இளநங்கையிடம் “என் லாபம் இந்தத் தங்கச்சிலைதான். உனக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா? என்னுடன் வாழ்நாள் பூராவும் நிழலாகத் தொடர்ந்துவருவாயா” எனக் கனிவோடு கேட்டான். அவனின் அன்பின் வேகமும், கண்களில் தெரிந்த காதலும் அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு பதில் சொல்ல நாணப்பட்டு தன் தலையைச் சாய்த்து அவனை ஓரக் கண்ணால் பார்த்துச் சிரித்தாள். அவள் தன் வாயால் சொல்லாமல் சிரிப்பாலே தன் சம்மதத்தைச் சொன்னதைக் கண்டு உல்லாசமாக சிரித்துக் கொண்டே அவளை தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டவனின் அனைப்பும் அவளுக்குத் தேவையாகத்தான் இருந்தது.

2. வழக்கும் தீர்ப்பும்

தன்னை மறந்து, சுற்றுப்புறத்தையும் கவனிக்காமல் தன் அனைப்பில் கண்மூடி அமைதியாக இருந்த இளநங்கையைக் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை தோப்பின் எல்லையில் எழுந்த வீரர்களின் கூச்சலும் அவர்கள் ஓடிவரும் காலடியோசைகளும் சுற்றுப்புரத்தை பார்க்கச் செய்தது. ஆபத்து தொடர்வதை உணர்ந்து இளநங்கையை கைகளாலெழுப்பி உடனடியாக அந்த இடத்தைவிட்டு ஓடத் தொடங்கினான் வீரபாண்டியன்.. இருவரும் மிக வேகமாகவே பொருனையாற்றின் குறுக்கே ஓடினார்கள். அக்கரையை அடைந்து முத்தங்காடிக்குள் மறைந்தார்கள். அங்கிருந்த ஒரு கடைக்குள் சென்ற இளநங்கை அங்கிருந்த வாணிபப்பெண்ணைப் பார்த்து திகைத்தாள். முதல் நாள் முத்துக்கடையில் பெரிய முத்துமாலையைக் காட்டி “இதனைப் பார்த்துவிட்டுப் போ, இந்த மாலைகளெல்லாம் அரச மகளிர்தான் வாங்கமுடியும். உன்னால் முடியாது” எனத் தன்னிடம் திமிறாகப் பேசியவள் தான் அந்தப்பெண். அவள் நின்ற கம்பீரத்தையும், கொற்கைத் தலைவனைக் கண்டும் தலைகுனிந்து வணங்காதது மட்டுமல்லாது, தன்னையும் வீரபாண்டியனையும் பார்த்துச் சிரித்ததும் இளநங்கைக்கு அவள் யார். இங்கு என்னசெய்கிறாள் .அவள் இங்கிருக்கும் காரணம் என்னவாக இருக்கும் ”என்று பலவிதமான எண்ணங்கள் அவள் மனதில் ஓடத்தொடங்கியது. சிறிது நேரம் இளநங்கையைப் பார்த்துவிட்டு மெதுவாக அந்தப் பெண் இளநங்கையைப் சிறிது சிரிப்புடன் கேட்டாள், “இந்த ஆண்களுக்கு எப்போதும் எதிலும் நிதானமில்லையல்லவா இளநங்கை’ என்று. பிறகு வீரபாண்டியனைப் பார்த்து “இப்படியா இளநங்கையை பொருனையாற்றின் நீரில் இழுத்துக்கொண்டு வருவது. சுற்றிலும் சேரவீரர்கள் இருப்பதையும் மறந்து இத்தனைநேரம் தோப்பிலுட்கார்ந்திருந்தீர்களா? எனக்கேட்டுச் சிரித்தாள். அவளைத் தொடர்ந்தவனும் “ஆமாம். சிறிது நேரம் எங்களை மறந்துதான் இருந்துவிட்டோம்” என சமாதானம் சொல்லிக்கொண்டே வாணிபப்பெண்னணின் தோளில் தொங்கியப் புடவைத் தலைப்பைக் கொண்டு தன் தலையைதுவட்ட, அந்தப் பெண்ணும் தடையேதும் சொல்லாது தன்புடவையாலேயே அவன் தலையைத் துவட்டளானாள். அவன் அந்தப் பெண்ணிடம் மிகவும் உரிமைகொண்டடுவதும் அவளும் எந்த தடையும் சொல்லாது அவனுக்கு அனுசரனையாக இருப்பதைக் கண்டு அவர்களிருவரும் நன்கு பரிச்சயமானவர்கள் என்று புரிந்துகொண்டாள். தன்னைவிட அந்த வாணிபப்பெண்ணுக்கு இளவரசனிடம் உரிமை அதிகமோ என்ற அச்சமும் அதனால் கோபமும் ஏற்பட்டது. தானிருப்பதையும் லட்சியம் செய்யாது அவர்கள் சகஜமாகப் பழகுவது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் அங்கிருப்பது தனக்குச் சங்கடமாகும் என்றுணர்ந்தவள் தலையைக் குனிந்து கொண்டே, மெதுவாக இளவரசரிடம் “எனக்கு உத்திரவு கொடுத்தால் நான் என் வீட்டிற்குப் போகிறேன்:. எனக் கூறினாள்.. அதற்கு அந்தப் பெண் அவளை நோக்கி “நீ எப்படிப் போகமுடியும். உன் வீட்டில் உன்னைக் கட்டாயம் சேரவீரர்கள் தேடுவார்களே. இனி உன் வீடும் உனக்குப் பாதுகாப்பு இல்லையே இளநங்கை’ எனக்கூறி, வீரபாண்டியனைப் பார்த்து ‘இதுவரையில் அவளிடம் நீங்கள் நம் திட்டத்தைச் சொல்லவில்லையா? தோப்பில் பின் இத்தனைநேரம் என்னதான் பேசிக்கொண்டிருந்தீர்கள்” எனக் கேட்டுச் சிரித்தாள். ஆனால் வீரபாண்டியனோ அந்தப்பெண்ணைப் பார்த்து “நான் என்ன பேசியிருப்பேன் என்று உனக்குத் தெரியாதா? என்றுகூற இருவரும் சிரிக்கத்தொடங்கினார்கள். அந்த இருவரின் நெருக்கத்தால் அச்சமும் கோபமும் கொண்ட, இளநங்கையோ அந்தப் பெண்ணைப்பார்த்து ‘அவர் தோப்பில் என்னுடன் என்னபேசினார் என்பதெல்லாம் உனக்குத் தெரியவேண்டிய அவசியம் என்ன? நீ யார் என்னைப்பற்றிக் கேட்க” எனக் கோபமாகவே கேட்க அந்தப் பெண்ணோ சிறிதும் கலங்காது :நான் யார் என்று இன்றுவரையில் உன்னிடம் அவர் சொல்லவில்லையா?’ என்று கேட்டுச் சிரிக்கத் தொடங்கியவளை தடுத்த இளநங்கை வீரபாண்டியனைப் பார்த்து “இந்த வாணிபப்பெண்ணுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? என்னைப்பற்றி மரியாதைக் குறைவாக பேசவோ, சிரிக்கவோ அவளுக்கு யார் உரிமை கொடுத்தது. நீங்களா? என்று கோபமாகவே கேட்டாள். அதைப் பார்த்த வீரபாண்டியன் “முத்துக்குமரி இனியும் விளயாடினால் இளநங்கையால் தாள முடியாது. போறும். நீயேசொல் நம் இருவருக்கும் என்ன உறவென்று’. என்றான். அதற்கு அந்தப்பெண்ணோ “நான் ஏன் சொல்லவேண்டும். உங்களிடம்தானேக் கேட்டாள். நீங்களே சொல்லிவிடுங்கள்” என்ற் பதிலுக்குச் சாட, பொறுமையிழந்த இளநங்கையோ :உங்கள் விளையாட்டுக்கு நான் என்ன பகடைக் காயா?. நீங்களாகச் சொல்லாவிட்டாலும், உங்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்காது என்பது எனக்குப் புரிகிறது’ எனக் கூறிவிட்டு வாசற் கதவை நோக்கிப் போனாள். தங்களின் விளையாட்டு எல்லை மீறிப் போய் இளநங்கையின் மனத்தை மிகவும் வதைத்ததை இருவரும் புரிந்து கொண்டதால், முத்துக்குமரி “இளநங்கை தயவு செய்து நான் சொல்வதை கேள். நானே எங்களின் உறவைச் சொல்லிவிடுகிறேன். நீ நினைப்பதுபோல் எங்கள் உறவு தப்பானதல்ல. நான் ஒரு வகையில் அவரின் மகளாவேன். எனக்கும் அவருக்கும் உள்ளது தூய்மையான “தகப்பனார்—மகள்” உறவுதான். இது நம் பாண்டியநாட்டு மக்களுக்கும் தெரியும்’ என்றாள். அப்போதும் நம்பாத இளநங்கை இருவரையும் பார்த்து “உங்கள் உறவு எதுவானாலும், எப்படியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு இனி இங்கு எந்தபணியும் இல்லை. நான் போகிறேன்’ எனச் சொல்லிவிட்டுத் திரும்பினாள். ஆனால் அவளைத் தடுத்த வீரபாண்டியன் கோபமாக “இளநங்கை, நீ என்னிடம் தோப்பில் செய்த சத்தியம் அவ்வளவுதான? இப்படி நீ புரிந்து கொள்ளாமல் போக நான் விடமாட்டேன். நான் சொல்கிறேன் அவள் என் மகள்தான். இது புனிதமான உறவுதான் இது உன் தகப்பனாருக்கும் நன்றாகத் தெரியும். நாங்கள் உன்னிடம் சிறிது விளையாடினோம். என்னை நம்பு’ என்றவனையும் இலட்சியம் செய்யாது போகத் துடித்தவளை முரட்டுத்தனமாகப் பிடித்து நிறுத்தினான். அப்போதும் கோபம் குறையாதவள் “போதும் போதும் நீங்கள் இதுவரை என்னிடம் நடித்தது. இனியும் உங்கள் பொய்யை நான் நம்பத் தயாரில்லை. நீங்களும் பொய்யர். அவள் உங்கள் மகள் என்பதும் பொய்யே’. என்றும் உறுதியாகச் சொன்னாள். வீரபாண்டியனோ முத்துக்குமரியைப் பார்த்து இவளுக்கு எப்படிப் புரியவைப்பது?’ எனக் கேட்க அவளோ இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே “இது உங்களிருவர் பிரச்சினை. நான் கடைக்குப் போகிறேன். நீங்கள் இளநங்கைக்குச் சமாதானம் செய்து புரிய வையுங்கள்’ எனக்கூறி வெளியேப் போய்விட்டாள்.

தனியே விடப்பட்டதும் அவளைநெருங்கி தன் கைகளால் அவளைச் சுற்றி அணைத்துக் கொண்டு ‘இளநங்கை. புரியாமல் கோபம் கொண்டு என்னைத் துடிக்க வைக்கிறாயே. இந்த நிமிடம் வரை வீரபாண்டியனை நோக்கித் தலையை நிமிர்த்து “பொய்யன்” என்று மரியாதைக் குறைவாக யாரும் சொன்னதுமில்லை. சொல்லிவிட்டு உயிருடன் இருந்ததும் இல்லை. நான் உன்மீது கொண்டக் காதலே நீ என்னைப் பார்த்துக் கையைநீட்டி பொய்யன் எனச் சொல்லி எதிரில் தலைநிமிர்த்தி நிற்பதையும் பார்த்து. என்னைப் பொறுமையாக இருக்கச் செய்கிறது. எனக்கு யாரிடமும் நடிக்கவோ, பொய் பேசவோ அவசியமில்லை. முத்துக்குமரி என் மகள் தான் என்பதில் எந்தவிதமான பொய்யோ ஏமாற்றமோ இல்லை. இது எங்கள் தாயான தேவி மீனாட்சி மீது ஆனை” என உறுதியான குரலில் சொன்னான்.

அப்படிச் சொல்லியும் அவள் மனம் சமாதானமடையாது இருப்பதைப் பார்த்து மனம் கலங்கியவன் ‘இனியும் நீ என்னை நம்பவில்லையென்றால் நீ என்மீது கொண்டது தூய்மையான காதலில்லை” என்றான். அவனைப் பார்த்து “அப்படிச் சொல்லி என்னைக் கொல்லாதீர்கள். என் புனிதமானக் காதலை கடுகளவும் சந்தேகப்படுவது உங்களுக்கு அழகல்ல. அதற்குப்பதில் உங்கள் கைகளினால் என் மூச்சை நிறுத்திவிடுங்கள்” என்று கதறித் துடித்தவளை, ‘அப்போது நீ மட்டும் என்னைச் சோதிக்கலாமா” எனக் கேட்டான்.

“நீங்கள் முத்துக்குமரியை உங்கள் மகள் எனச் சொல்வதை எப்படி ஏற்பது. அவள் வயதும் உங்கள் வயதுமே சொல்லுமே நீங்கள் சொல்லுவது நம்பத் தக்கதல்லவென்று’ என்றாள்.

அவளைப் பார்த்து ‘ஏன் அவள் வயதில் எனக்கு மகள் இருக்கக்கூடாதா. மேலும் அவள் எனக்குப் பிறந்தால்தான் என் மகளாவாளா? மூத்தவருக்குப் பிறந்தால் எனக்கும் மகள்தானே” என்று நிதானமாகச் சொன்னவனைப் பார்த்து திகைத்துப் போய்விட்டாள் இளநங்கை. பிறகு மெதுவாக “அப்படியானால் பாண்டியமன்னரின் மகள் ஒரு சாதாரண வாணிபப் பெண்போல் முத்தங்காடியில் வாணிபம் செய்வதா. அதுவும் இப்போழுது நம் நாட்டைச் சுற்றி சேரனின் வீரர்கள் இருக்கும் இந்த நேரத்தில். இது முறையா?’எனக் கேட்க “ஏன் பாண்டிய இளவரசன் முத்துக்களவைக் கண்டுபிடிக்க ஒரு ஒற்றனாக வரும்போது இளவரசி மட்டும் வரக்கூடாதா. என்பது என் அண்னனின் எண்ணம். இதற்கு யாரும் தடைச் சொல்லக்கூடாது. இது பாண்டிய மன்னரின் ஆணை. மீறக்கூடாது” என்றான்.

அப்போதுதான் தான் முன் யோசனையின்றி அவர்கள் சொன்னதைப்பற்றி அவர்களிடமே விளக்கம் கேட்டு தெளிவுபடுத்திக்காமல் அவசரப்பட்டு இருவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உணராமல் கோபப்பட்டதையும் வாதாடினதையும் நினைந்து வெட்கப்பட்டு வீரபாண்டியனின் முகத்தைப் பார்க்கவும் தனக்கு அருகதையில்லை எனத் தன் தலையைக் குனிந்து கொண்டாள் இளநங்கை. வெடிவாணம்போல் படபடாவென்று வார்த்தைகளைக் கொட்டியவள் பேசவும் ஏன் தன்னைப் பார்க்கவும் அஞ்சி தலைகுனிந்து நிற்பதைப் பார்த்து தன் மனம் கலங்கினாலும். மேலுக்குக் கோபம் தீராவதன்போல் அவளிடம் கோபமாகக் கேட்கத்தொடங்கினான். கொற்கைத் தலைவன் வீரபாண்டியன். “உனக்கு ஏன் இத்தனைக் கோபம்? இந்த குணம் பெண்ணுக்கு அழகா? இப்போது நீ பேசினதை என் அண்ணன் கேட்க நேர்ந்தால், உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? நீ கோட்டைக்காவலன் மகள் என்றோ என் அன்பிற்கு உரியவள் என்றோ நான் என் கடமையை புறக்கனிக்க முடியாது. அதனால் உனக்கு என்ன தண்டனை தகும் என நீயே சொல்” எனச் சொன்னான்.

அவன் முகத்தைப் பார்த்தவள் அதில் காணப்பட்ட கோபத்தைப் பார்த்ததும் பயத்தால் உடல் நடுங்கினாள். பின் மெதுவாகக் குனிந்து அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் அவன் பாதங்களில் விழுந்ததை உணர்ந்தவனின் மனமும் கலங்கியது. அவளைப்பரிவுடன் தன் கைகளினால் தூக்கினான். “தவறு உன் மீது மட்டுமல்ல. உன் தகப்பனாரின் மீதும் உண்டு. அவர் உனக்கு பெரியவர்களிடமும் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் எப்படிப் பழகுவது என்று சொல்லிக்கொடுக்கவில்லை.” எனக் கூறினான். அதைக் கேட்டவள் உடனடியாக “நான் தான் தவறு செய்தவள். என் அப்பா பலமுறைகள் சொல்லியிருந்தும் நாந்தான் அதைபற்றி கருத்தில் கொள்ளாது என் பிரியப்படி நடந்துகொண்டேன். அவர் சொல்லைக் கேட்காதது என் குற்றமே. எப்போதும் சொல்வார் என்னிடம். எனக்குப் மரியாதையுடன் பேசவொ, நிதானமாக யோசித்துப் பேசவொத் தெரியாமல் எப்பவும் எல்லாரிடமும். வாயாடுவதுத் தவறேன்று. அதன் பலனை இன்று புரிந்து கொண்டேன். என்னை தயவுகொண்டு மன்னித்து விடுங்கள். இனி ஒருமுறை இப்படி நடந்து கொள்ளமாட்டேன்.” எனப் பணிவோடு கூறினாள்.

‘உன் தவறை நீ உணர்ந்து கொண்டது நல்லதே. ஆனால் வீரபாண்டியனின் ஆட்சியில் தவறு செய்தவர் யாராயிருந்தாலும் தண்டனை உண்டு. உனக்கு என்ன தண்டனை தகும் என நீயேசொல்.என்று தீவிரமாகக் கூறினான்.

“குற்றம் புரிந்தவள் நான். நீங்கள் என்ன தண்டனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதுதான் முறை. உங்கள் தண்டனைக்குக் கட்டுப்படுகிறேன்” எனக் குனிந்துகொண்டே சொன்னாள்.

“அதுதான் சரி. நீ இரு தவறுகளைச் செய்திருக்கிறாய். இரண்டுக்கும் தனித்தனியாகத் தண்டனை உண்டு. முதலில் உன் அப்பா சொன்னதைக் கேட்காததும் உன் இஷ்டப்படி வார்த்தைகளைக் கொட்டியதும். அதற்கு முதல் தண்டனை துடித்த உன் வாய்க்குத்தான். அடுத்ததாக அரசமகளைப் பற்றி முறையின்றி பேசியதற்கு. முதல் தண்டனை இப்போழுதே நிறைவேற்றப்படும். இரண்டாவது தண்டனையில் ஒரு நிபந்தனை உண்டு. அதை பிறகு சொல்கிறேன். தண்டனையை ஏற்றுக்கொள்ள சம்மதமா” என்று சொல்லிக்கொண்டே தன் இரு கைகளினால் அவளின் பூ போன்ற முகத்தைத் தூக்கிக்கொண்டான். தன்னுடைய முகத்தை அவளின் முகத்துக்கு நெருக்கமாகக் கொண்டு சென்று தன் உதடுகளால் அவளின் இதழ்களின் மீது மெதுவாகத் தன் அன்பு முத்தங்களைப் பதித்தான். இதுதான் என்னுடைய வாழ்னாள் பூராவும் இனைபிரியாது என்னுடன் இருப்பவளுக்கு நான் அளிக்கும் முதல் அன்புத் தண்டனை”எனச் சொல்லிச் சிரித்தான். அவனின் அன்பினால் சிறிது மனம் தெளிவுபெற்றவள் அவனைப் பார்க்க வெட்கப்பட்டாள்.

மெதுவாக இரண்டாவது தண்டனை என்னவென்று புரியாது காத்திருந்தாள். அவனும் கனிவுடன் அவளைப் பார்த்து “இரண்டாவது தண்டனையில் உள்ள நிபந்தனை அதை ஏற்றுக் கொள்ள நீ முழு மனதுடன் தயாராக வரவேண்டும். நீ சம்மதப்படவில்லை எனில் அந்தத் தண்டனையை உனக்கு அளிக்க என்னால் முடியாது”. என்றான். அப்படி என்னவாக இருக்கும் என அவளால் ஊகிக்கமுடியவில்லை. குழப்பத்துடன் அவனையேப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

வீரபாண்டியனும், தான் இத்தனை நேரம் பொய்யாகக் காட்டிக் கொண்டிருந்த கோபத்தை விட்டுவிட்டு “என் மகளை நீயும் உன் மகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவள் என் குழந்தையாக இருக்க முடியாது என்பதற்கு வயதைக் காரணம் சொன்னாய். அதனால் எனக்கு நீ என் வாரிசை உன் இந்த மணி வயிற்றில் தாங்கி, பெற்று, உன் மார்பமுதம் தந்து தாயாக வேண்டும். இது நீ முழு மனதுடன் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.” இது என் இரண்டாவது தண்டணை. இது தக்கக் காலம் வரும்போது நிறைவேற்றப்படும்”. உனக்கு இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மனமுண்டா” எனக் காதலோடு அவளின் காதில் கேட்டான். அவளும் மிக்க பரவசத்துடனும், தாளமுடியாத நாணத்துடனும் அவனைத் தன் ஓரக் கண்களால் பார்த்து தன் தலையை அவன் உறுதியான மார்பில் சாய்த்துக் கொண்டாள். அவனும் அவளை ஆனந்தத்துடன் அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் தன்னை மறந்திருந்தவள் மெதுவாகத் தன் தலையைத் தூக்கி “உங்கள் ஆட்சியில் இப்படித்தான் தண்டனை வழங்குவீர்களா? என சிரித்துக்கொண்டே கேட்டவளைப் பார்த்து “என் ஆட்சியில் இராஜியச் சபையில் வழங்கும் தீர்ப்பு வேறுமாதிரிதான். ஆனால் இது என் அந்தப்புரவழக்கு. இதில் தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் எனக்கு மட்டும்தான் உண்டு. இங்கு என் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்” என்று உல்லாசமாகச் சிரித்தான்.

சிரிப்பைத் தொடர்ந்து வந்தது முத்துக்குமரியின் குரலும் அவள் உருவமும். “என்ன சிறியதந்தையே, சந்தேகம் போய் சல்லாபம் ஆரம்பித்துவிட்டதா?. இனி எங்கள் பணி என்னவென்று சொல்வீர்களா? எனக் கேட்டாள். அவளைக் கண்டதும் இளநங்கை அவளின்முன் தலை குனிந்து வணங்கி “இளவரசியார் என்னை மன்னிக்கவேண்டும்.” என்றாள். அவளைத் தடுத்த முத்துகுமரி “நம் இருவருக்குமிடையில் எந்த வித்தியாசமும் வேண்டாம். நாம் நல்ல தோழிகளாகவே இருப்போம். அதைத்தான் என் சிறியதந்தை விரும்புவார்.” எனக் கூறி அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு வீரபாண்டியனைப் பார்த்து “பொறாமையாக இருக்கிறதா” எனக் கேட்டுச் சிரித்தாள். அவளின் சிரிப்புடன் சேர்ந்து இருவரும் நகைத்தனர்.

3. ஊடலும் கூடலும்

தான் சிங்கனனின் ஒற்றர்படையால் தலையில் காயமடைந்து நேரடியாகப் போரில் ஈடுபடாவிட்டாலும், தன் உப தலைவியான இளநங்கையை முன்னிருத்தி, சிங்கனனின் குள்ளநரித்தனமானதும், முறையற்றதுமான போர்த் திட்டங்களை தன் புத்தியாலும், தன் ஆசானும் மூத்த சகோதரருமான பாண்டிய மன்னர் சுந்தரராஜ பெருமானாரினிடம் கற்ற போர்முறைகளாலும் முறியடித்துவிட்டு, தன்னுடைய அடுத்தப் போர் பாண்டிய சாம்ராஜியத்தின் அஸ்திவாரமாக சேரநாட்டின் தலைநகரில் நடத்தப்படும் என்றும் உறுதியாகச் சொல்லி தன் அரச தர்பாரை விட்டுத் தன் அந்தப்புர மாளிகைக்கு கிளம்பினான் வீரபாண்டியன்.

தன் இராஜ மண்டபத்தை விட்டு எழுந்தவன் மனதில் தன் மனைவியும் தன் வாழ்வில் சகல விஷயங்களில் சமபங்கு கொண்டு, தான் கூப்பிட்ட உடனேயே தன்னைத் தொடர்ந்த இளநங்கையின் எழில் வதனம் சிரித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இளநங்கையைத் தனிமையில் சந்திக்கவும், அவளுடன் மனம்விட்டு உல்லாசமாக இருக்கவும் வேகமாகத் தன் பள்ளியறைக்கு வந்தான் வீர பாண்டியன். அங்கும் அவன் ஆசைப்படியே இளநங்கை பள்ளியறையின் சாரளத்தின் வழியாக வெளியே பார்த்தபடி நின்றிருந்தாள். கதவை மூடும் சப்தத்தையோ, வீரபாண்டியன் உள்ளே வந்ததையோ அவள் உணரவில்லை. அவள் முகத்தில் ஒரு கலக்கமும் இருந்தது. உள்ளே வந்தவன் ஓசைப்படாமல் அவளின் பின்புறம் நெருங்கினான். அவன் கைகள் அவளின் வழவழத்தத் தோள்களைப் பற்றியது. ஆனால் இளநங்கையோ எந்த உணர்ச்சியும் காட்டாது சிலைபோலவே நின்றிருந்தாள்.. இந்த நிலை அவன் எதிர்பார்க்காதது. ஒரு வினாடி காரணம் புரியாது நின்றான். பிறகு மெதுவாக “இளநங்கை” எனக் கூப்பிட்டான். அவனின் அழைப்பும் அவள் நிலையை மாற்றவில்லை. இந்த நிலைக்குக் காரணமும் அவனுக்குத் தெரியவில்லை.

சிறிது வினாடிகள் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு அவளின் கவனத்தைத் திருப்ப தங்களிருவருக்கும் இடையில் நடை பெரும் சல்லாபமான விளையாட்டைத் துவக்கினான். வழக்கம்போல் தன்னுடன் தனித்து சரசமாடுபவளின் கன்னத்துடன் தன் கன்னத்தைச் சேர்த்து வைத்து, தன் உதடுகளினால் அவளின் மென்மையான காதின் மடல்களைத் தன் பற்களினால் பற்றிக் கொண்டு, தன் உஷ்ணமான மூச்சுக்காற்றை அவளின் காதுக்குள் செலுத்தினான். அப்படிச் செய்யும்போதெல்லாம் அவளின் உடம்பில் ஒரு கூச்சம் ஏற்பட அந்த கூச்சத்தினால் அவள் செல்லமாகச் சிணுங்குவாள். அவளின் அந்தச் செல்லச் சிணுங்கல் அவனுக்கு அதிக இன்பத்தைக் கொடுக்கும். அவனின் விளயாட்டும் எல்லைமீற, அவளும் காதலோடு இரசிப்பாள். ஆனால் அப்படி எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிபடுத்தாமல், நிலைமாறாது கல்போல் நின்றாள் இளநங்கை.

குழப்பத்துடன் அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டு “ஏன் இப்படியிருக்கிறாய். உன் உடல்நிலை சரியில்லையா? உன் மனதில் என்ன கலக்கம், என்னிடம் சொல்லம்மா” என இதமாகக் கேட்டான் வீரபாண்டியன்.. அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாது தன் தலையைக் குனிந்து கொண்டாள் இளநங்கை. .குழப்பம் தீராதவன் அவளைத் தன் மார்புடன் அணைத்துக்கொன்டு மெதுவாக அவளின் கன்னங்களையும், பவழ உதடுகளையும் தன் கைகளினால் தடவியபடியே “உன் மௌனம் என்னை மிகவும் பாதிக்கிறது. உன் இந்த நிலைக்குக் காரணம் என்ன?. இங்கு யாராவது உன்னிடம் மரியாதையின்றி நடந்துகொண்டார்களா? நம் வீரர்கள் உன்னிடம் மிக்க பரிவும் அன்பும் கொண்டவர்கள்தானே. நீ என் மனைவி என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே. அதனால் அவர்கள் யாரும் உன் மனம் நோக நடக்கமாட்டார்களே. வேறு என்னவாக இருந்தாலும் என்னிடம் மனம்விட்டுச் சொல்” எனப் பரிவுடன் இதமாகவே கேட்டான். தன் கண்களைத் தூக்கி அவனைப் பார்த்தவள் மெதுவாக “என்னை கொற்கைக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்” என மட்டும் சொன்னாள்.

இதைக் கேட்டவன், “தீடீரேன்று இப்போது கொற்கையின் நினைவு ஏன் வந்தது. உன் பெற்ரோரைப் பார்க்க வேண்டுமா?” . இப்போதுதான் நாம் முதல் வெற்றியை அடைந்துள்ளோம். இன்னும் இங்கு செய்ய வேண்டியவைகள் நிறைய இருக்கிறதே. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள். மன்னரிடமிருந்து அடுத்தப் போர் எந்த இடத்தில், எப்படி என்ற திட்டம் வரும். அப்படிப் போருக்குப் போகுமுன் நாமிருவரும் சேர்ந்தே கொற்கைக்குப் போய் உன் தந்தையைப் பார்க்கலாம் என குழந்தைக்குச் சொல்வதுபோல் சொன்னான். ஆனால் அவனின் எந்த சமாதானமும் அவள் மனதை தொடவில்லை. அவனுக்குப் பதிலாகச் சொன்னாள் வீரபாண்டியனின் மனைவி. “பிரபு, நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

நான்மட்டும் தான் கொற்கைக்குப் போக உங்களிடம் உத்திரவு கேட்டேன்’.

.. இதைக்கேட்டவனோ திடுக்குற்று அவளைப் பார்த்தான். பார்த்தவன் பார்வையில் கோபமும், குழப்பமும் தெரிந்தது. குரலும் கடுமையாகியது. “நீ. உன் திட நினைவுகளுடன்தான் பேசுகிறாயா? யாரிடம் பேசுகிறாய், என்ன பேசுகிறாய் என்று யோசித்தாயா?’ எனக் கேட்டான். கணவனின் கோபத்தை உணர்ந்தவள், குனிந்த தன் தலையை உயர்த்தாது மெதுவாக “உங்களிடம் தான் பேசுகிறேன். என் சுய நினைவுகளுடந்தான் பேசுகிறேன். நான் வந்தபணி முடிந்து விட்டது. இனி உங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம். இனி பகலிலும், இரவிலும் என் தொந்திரவு இருக்காது. நீங்கள் உங்கள் விருப்பப்படியே எப்போதும் யாரிடமும், எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். என்னால் எந்த தலையீடும் இருக்காது” என்று குரல் மங்க உள்ளத்தின் வேதனை பெரும் விம்மலாக வெடிக்கச் சொன்னாள்.

அவள் இத்தனை நேரமும் தன் முகத்தைப் பார்க்காது தலையைக் குனிந்து கொண்டே பேசியதை அப்போதுதான் கவனித்தான். சட்டென்று அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. தான், போரின் தீவிரத்தால் அடுத்தடுத்து பல உத்திரவுகள் போட்டு அவளுக்குச் சிறிதும் ஓய்வு கொடுக்காமலிருந்ததையும் அதே சமயம் அவளிடம் அதிக விஷயங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவாதிக்காமல் இருந்ததையும் யோசித்துப் பார்த்தான். அதனால் அவளின் மனம் கலங்கி மிக்க வேதனையுடன் இருப்பதையும் உணர்ந்தான். அவளின் கோபம் நியாயமானதுதான் என்றும் புரிந்துகொண்டான். இப்போது அவளைச் சமாதானப்படுத்துவதுதான் தன் முதல் பணியென்றும் தீர்மானம் கொண்டான். இந்த எண்ணங்களால் தெளிந்தவன், தன்னருகிலிருந்தவளை இன்னும் கைகளால் இருக்க அனைத்துக் கொண்டான். மெதுவாக, ‘இளநங்கை, உன் வருத்தம் நியாயம்தான். சிறு வயதிலிருந்தே போர் என்று வந்துவிட்டால் நான் என் தீர்மானங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டேன். நான் ஒருவருக்குச் சொல்லும் உத்திரவுகளை அடுத்தவர் அறிந்து கொள்ளவும் அனுமதிக்க மாட்டேன். நான் யாரிடம் பேசவேண்டுமென்று முடிவு செய்வது, எப்போது, எப்படிப் பேசவேண்டும் என்பதும் என் முடிவுதான். இதில் என் மன்னர்கூட தலையிடமாட்டார். இதனால் நான் சில சமயங்களில் என் பணியாட்களிடம் தனிமையில் பேசியிருக்கிறேன். எந்த விஷயங்கள் உனக்குத் தெரியவேண்டுமோ அவைகளை மட்டும்தான் நான் உன்னிடம் சொல்லியிருப்பேன். இதனால்தான் நீ என் மீது வருத்தப்பட்டாயா?. என் குணம் அத்தன்மையானது. என்னுடன் வாழவந்திருக்கும் நீ என் குணத்தையும் புரிந்துகொள்வது அவசியம்” எனப் பரிவாகச் சொன்னான். அவனின் சொற்களைக் கேட்டவள் அப்போதும் தன் தலையைத் தூக்கவில்லை. ஆனால் மெதுவாக “நானும் என் தகப்பனாரின் பணிமூலம் போரின் முக்கியத்தையும் அவற்றை செயல்படுத்தும்போது அதனை நடத்துபவர்களின் பொறுப்புக்களையும் அதன் இரகசியங்களைக் காக்கும் தன்மைகளையும் அறிந்தவள்தான். போர்பற்றி நடக்கும் விவாதங்களையும் அதை இரசியமாகக் காக்கவேண்டிய வழிகளையும் அறிந்தவள்தான். நீங்கள் அதுபற்றி செய்தவைகளை நான் எப்போதும் தவறாக நினைத்தவள் அல்ல.அதனால் என் மனம் கலங்கவில்லை. எனக்கு இனி இங்கு பணி எதுவுமில்லை. எனக்கு உங்கள் சந்தோஷத்தைத் தவிர எதுவும் முக்கியமல்ல. இங்கேயேயிருந்து உங்கள் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கெடுக்காமல் நான் என் தந்தை வீட்டில் உங்களின் நினைவுகளுடனே இருந்து விடுவேன். அதனால்தான் என்னை அனுப்பிவிடுங்கள் என உங்களைக் கெஞ்சுகிறேன்” என்றாள். அப்போதுதான் தன் மனைவியின் மனத்தில் தான் அறியாத ஒரு கலக்கம் இருப்பதையும், அதைபற்றி தன்னிடம் எதுவும் சொல்லாமல், தான் மட்டும் விலக முடிவு செய்துவிட்டாள் என்றும் புரிந்து கொண்டான். அவளின் துன்பத்திற்கு காரணம் என்னவாயிருக்கும் என்பதை மட்டும் அவனால் ஊகிக்க முடியவில்லை

பஞ்சனையைவிட்டு எழுந்த வீரபாண்டியன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு “இளநங்கை இப்படி வா” எனக் கூப்பிட்டான். முதலில் வரத் தயங்கியவள் மெதுவாக வந்தாள். தன் எதிரில் நின்றவளைப் பார்த்து பரிவாகக் கேட்டான். “உன்னால் என்னை பிரிந்து கொற்கையில், என் நினைவு இல்லாமல் தனிமையில் சந்தோஷமாக நிம்மதியாக வாழமுடியுமா? என்று. அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றவளின் முகத்தை தன் கைகளினால் தூக்கி அவளின் கண்களைத் தன் கண்களினால் உற்றுப் பார்த்தபடியேச் சொன்னான் “உன்னால் பதில் சொல்ல முடியாது. எனக்குத்தெரியும் உன் மனசு. உன்னால் என் நினைவின்றி இருக்கமுடியாது. என்னால் மட்டும் நீ இல்லாத இந்த மாளிகையில் ஆனந்தமாக இருக்கமுடியுமா? தீடீரென்று இந்தமாதிரி ஒரு எண்ணம் உனக்கு ஏன் வந்தது? என் அன்பில் என்ன சந்தேகம், எப்படி வந்தது? சொல்.” எனக் கேட்டான்.

ஆனால் அவனின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது அவள் தவித்துத் தன் கண்களை அவனின் கூரிய பார்வையிலிருந்து திருப்பமுயன்றாள். அவளின் கண்களின் தயக்கத்தைப் பார்த்தவன், “நீ எது சொல்ல விருப்பப்படடாலும் என் கண்களைப் பார்த்தேச் சொல்.” என்றான்.

அப்போதும் அவள் ஏதும் சொல்லாமல் தவிப்பதைப் பார்த்தவன் “எனக்குப் புரிகிறது. என் கண்களைப் பார்த்தபின் உன்னால் என்னிடம் எதையும் மறைக்கமுடியாது. உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் யோசிக்காமல் சொல். நான் தீர்த்து வைக்கிறேன்”.

அதற்குமேல் தான் ஏதும் பேசாதிருந்தால் அவனின் கோபம் அதிகமாகும் எனப் பயந்தவள் “நானும் நீங்கள் சொன்னபடியே என்னைப்பிரிந்து உங்களால் நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கமுடியாது என்ற நினைப்பில் இறுமாப்புடன்தான் இருந்தேன். ஆனால் போருக்கு சில நாட்களுக்குமுன் ஒருநாள் என்னை “வேல்விழி” என அழைத்து இந்தக் கோட்டையைப் பெண்ணாக நினைத்துக் கொள்ளச் சொல்லியும் எதிரி முறை தவறி நடந்தால், கோட்டைப் பெண் எதிரியைத் தன் வலது கையால் ஓங்கி அறையட்டும் எனச் சொல்லி, என்னைக் குழப்பத்துடன் வெளியே அனுப்பினீர்கள். அன்று இரவு நான் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு உங்களிடம் சில விபரங்களைச் சொல்ல வந்தேன். ஆனால் அப்போது தான் கேட்டச் சொற்கள் என்னையும் என் வாழ்வையும் அப்படியே சிதைத்துவிட்டது பிரபு. உங்கள் இதய சாம்ராஜியம் எனது தனிக் கோட்டையென்று மாளாத பெருமையுடன் இருந்தேனோ அப்படிப்பட்ட தாங்கள் அந்த இரவில் வேறு ஒரு பெண்ணிடம் உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் சம்பாஷனையிலிருந்து அந்தப் பெண்ணும் உங்களின் அன்புக்குப் பார்த்திரமானவள் என்று உணர்ந்தவுடன் நான் அந்த வினாடியே செத்துவிட்டேன். அதற்குப் பிறகு உயிரிருந்தும் உணர்வற்ற நடைபிணமாகத்தான் இருந்து வருகிறேன்... இப்போதுதான் போர் முடிந்து, பாண்டியப் பேரரசு வெற்றிப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டதே. இனி எனக்கு இங்கு எந்தப் பணியும் இல்லை. உங்களுக்கும் நான் தேவையில்லை. அதனால்தான் நான் வந்த வழியேச் செல்ல முடிவு செய்தேன்” எனத் துக்கம் தாளாது கண்ணீர் பொருனையாற்று நீரெனப் பெருக இதயமே உடைந்துவிட்டவள்போல் விம்மினாள். துக்கம் தாளாது கண்களில் நீர் பெருக விம்மியவளைத் தன் மார்ப்புடன் சேர்த்தனைத்துக் கொண்டவனின் உதடுகள் அவளின் கதுப்புக் கன்னங்களில் வழிந்த நீரை ஒத்தியெடுத்தன.. சில வினாடிகள் இருவரும் ஏதும் பேசவில்லை. பெண்ணின் இதயமோ தன் அன்பனின்மேல் கொண்ட சந்தேகம் எனும் வியாதியால் தாக்கப்பட்டிருக்க, ஆணின் இதயமோ தன்னை முதல் முதலில் ஆட்கொண்ட ஏந்திழையாள் தன்மீது காரணமின்றி சந்தேகப்படுவதைத் தாங்கமுடியாத நிலையில், கோபமும், மன வருத்தமும் கொண்டு துக்கப்பட்டது. தன்மீது தக்க காரணமின்றி சந்தேகப்பட்டு தன்னையும், தன் அன்பனையும் வருத்திக் கொண்டிருக்கும் இளநங்கையின் மனதைத் தெளிய வைப்பதுதான் தன் முதல் கடமை என உணர்ந்தான், அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவிக்காமல் இன்னும் இருகப்பினைத்துக்கொண்டு “இளநங்கை, நீ அன்றிரவு நானும் ஒரு பெண்ணூம் பேசியதைக் கேட்டுத்தான் என்னைப் பற்றி சந்தேகப்பட்டாயா? இத்தனை நாளாக என்னுடன் மனம் விட்டுப் பழகியிருந்தும் என்னை முழுவதுமாக உன்னால் புரிந்து கொள்ள முடியவிலையா? அதனால்தான் என்னைவிட்டுப் பிரியவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாயா? எனக் கேட்டான்.

அவளும் தயங்காது, “நீங்கள் குறிஞ்சியிடம் பேசியதை என் இரு காதாலும் கேட்டேன் பிரபு. அவளிடம் நீங்கள் “நீ என்னை வந்து சந்திக்க இத்தனை நாட்களா எனக் கேட்க அவளும் “என்ன செய்வது பிரபு. நீங்கள்தான் என்னை யாருமில்லாத நேரத்தில் வந்து பார்க்கச் சொன்னீர்கள். ஆனால் எய்போதும் உங்கள் மனைவியும் உபதலைவியுமான இளநங்கை உங்களுடனேயே இருக்கிறார்கள். உங்களைப் பார்த்துப் பேச என்னால் இப்போதுதான் முடிந்தது, எனக் கூற நீங்களும் ஆமாம். அவள் எப்போதும் என்னுடனேயே இருக்கிறாள். என்ன செய்வது” என்றீர்கள்.’ இதைகேட்டவுடன் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று உங்களுக்குப் புரியாதா? நான் அன்று கோட்டைநிலவரத்தைப் பற்றி சொல்ல வந்ததையும் மறந்து துடிதுடித்துப் போய்விட்டேன். அப்போதுதான் புரிந்தது நான் உங்களுடன் இருந்த நேரமேல்லாம் நீங்கள் உங்கள் விருப்பப்படி இருக்கமுடியாது சங்கடப்பட்டீர்கள் என்பதையும்.. அதனால்தான் நான் அன்றே முடிவு செய்துவிட்டேன், என்னை நீங்கள் கூட்டிக் கொண்டு வந்தப் பணி முடிந்தவுடன், உங்களைவிட்டு விலகிவிடுவதென்று. அதனால்தான் நான் இன்று என் மனதைத் திறந்து சொல்லிவிட்டேன். எனக்கு உங்களின் விருப்பமும் சந்தோஷமும்தான் முக்கியமானது. உங்கள் மனம் ஆனந்தமாக இருக்க நான் எந்தத் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். எனக்கும் உங்களைப் பிரிந்து இருப்பது எத்தனைக் கொடுமையானது என் உயிரையே நான் இழந்து நடைபிணமாகத்தான் இனிவரும் சொற்ப காலமிருக்கும். என் பிரிவுக்குக் காரணம் தெரியாது நீங்கள் எந்த மன உளச்சலும், வேதனையும் அடையக்கூடாது என்றுதான் நானே உங்களிடம் சொல்லிவிட்டு, உங்கள் சம்மதத்துடன், உங்களைவிட்டுப் பிரிந்துபோக நினைத்தேன்.” எனகண்களில் நீர் வழியக் கூறினாள்

மனைவியின் அர்ததமற்றப் பேச்சினால் கோபம் அதிகமான வீரபாண்டியன் இளநங்கையின் தோள்களை முரட்டுத்தனமாகப் பற்றினான். பிறகு அவளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாகச் சொன்னான். போதும் “நிறுத்து உன் விவேகமற்றப் பேச்சை. நீ என்னைவிட்டுப் பிரிய நினைத்தாலும் என்னால் உன்னைப்பிரிந்து ஒரு வினாடியும் வாழமுடியாது. உனக்காக நான் என் உயிரைக்கூட விடுவேன், ஆனால் உன்னைமட்டும் நான் என்றும், எந்தக் காரணத்துக்காகவும் இழக்கச் சம்மதிக்க மாட்டேன்.

போர் காலத்தில் நான் பலரை என் ஒற்றர்களாகவும், எனக்குத் தேவையான விபரங்களைச் சேகரிக்கவும் அவ்வப்போது உபயோகித்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. அப்படித்தான் நான் பணிப்பெண்னாக வேலைக்கு வந்த குறிஞ்சியையும் உபயோகப்படுத்திக் கொண்டேன். நீ நினைப்பதுபோல் அவள் ஒரு சாதாரண பணிப்பெண் அல்ல. அவள் இந்தக் கோட்டைக் காவலன் விஜயவர்மனின் மகள். அவளும் நம்மிடையே வேவு பார்க்கத்தான் விஜயவர்மனால் இங்கு பணிப்பெண் என்ற வகையில் அமர்த்தப்பட்டிருக்கிறாள். இது எனக்கு முதல் நாளிலேயேத் தெரியும். அவள் அடிக்கடி நம் கோட்டையை விட்டு வெளியே சென்று வருவதும் எனக்குத் தெரியும். அவளைக் கண்காணிக்கத்தான் நான் அவளை என் அறைக்குத் தனிமையில் வரச் சொல்லியிருந்தேன். அன்றுதான் அவள் என்னை முதல் முறையாகத் தனியாகச் சந்தித்தாள்.

என் இதயத்தில் ஒருவருக்குத் தான் இடமுண்டு. அதில் என்னைக் கவர்ந்த இளநங்கையைத் தவிர வேறு யாருக்கும் நுழையத் தகுதியில்லை. என் வாழ்வு உன்னோடுதான். இப்படிபட்ட அறிவீனமான எண்ணங்கள் உன் மனதில் உதிக்கும் என நான் கனவில் கூட நினைத்தது இல்லை” என்றவன் மீண்டும் அவளைப் பரிவுடன் பார்த்துச் சொன்னான். “ இளநங்கை நாமிருவரும் மனமொத்துப் பலகாலம் வாழவேண்டும். நம்மைப் பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது. நம்மிருவர் மனதிலும் ஒருவருக்கொருவர் மீது திடமான அன்பும், மாறாதக் காதலுமிருந்தால் அதுவே நம் வாழ்வின் ஜீவாதாரம். ஒன்றைமட்டும் நீ நன்றாகப் புரிந்து கொள். உன்னைக்கண்ட என் கண்களும், மனமும், மெய்யும் இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி நான் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் வேறு யாரையும் நினைக்காது. இது என் தாய்தேவி மீனாட்சியின் மீது ஆணை.” இனி இந்த மாதிரி அறிவுகெட்ட எண்ணங்ககளுக்கு உன் மனதில் இடம் கொடுக்காதே. உன்னை யாரென்றறியாமலே பொருனையாற்றில் நீலவண்ண நீரில் கருமேகக் கூட்டத்திற்கிடையே மலர்ந்த செந்தாமரைப் போன்ற உன் முகமலரைப் பார்த்து உன்னிடம் மனதைப் பரிகொடுத்தவன் நான். நாந்தான் என் மனதை முதலில் உன்னிடம் திறந்து காட்டினேன். அதே வீரபாண்டியந்தான் இன்றும் உன் முன் நிற்பவன். மேலும் இன்று என் உடலில் ஓடுவது உன் அன்பாலும், காதலாலும், நான் மரண காயம் பட்டிருந்தபோது, நீ எனக்குக் கொடுத்த உயிர் தான். என் வாழ்வில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. உன் மனமும் உள்ளமும் தெளிந்த முழு நிலவைப்போல் இருக்கவேண்டும். இந்த வினாடி முதல் நம்மிடையே எந்தவிதமான முரண்பாடோ, சலனமோ இருக்கக்கூடாது. போய் நல்ல நீரில் முகத்தை துடைத்துக்கொண்டு வா. நான் இன்று எத்தனை ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேன் என நீ அறிந்து இருக்க மாட்டாய். இனி மீதி இருக்கும் இரவில் இருவரும் அமைதியாக இருப்போம்” என்றான்.

கணவனின் முகத்தைப் பார்த்தவளின் கண்களுக்கு அவனின் காதலும், தன்னை எத்தனை ஆசையுடன் தேடி வந்திருப்பான் எனப் புரிந்தது. தன்னால் அவன் மனம் எத்தனை துன்பப்பட்டதென்றும் புரிந்து கொணடன. மெதுவாக அவன் விருப்பப்படியே சென்று தன் முகத்தை சில்லென்ற நீரில் சுத்தம் செய்துகொண்டு அவனருகில் வந்து நாணத்துடன் நின்றாள். அவளைப் பார்ததவனும் மிகப் பரிவுடன் அந்தப் பூந்தளிரைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு, மந்தஹாசமாகச் சிரித்தான். பிறகு தன் விருப்பப்படி அவளின் காது மடல்களைத் தன் பற்களினால் மெதுவாகப் பற்றி தன் உஷ்ணமான மூச்சையவள் காதுக்குள் செலுத்தி அவளைக் கூச்சப்பட வைக்க, அவளும் வழக்கம்போல் கூச்சம் தங்காது உடல் சிலிர்த்துக் கொண்டு சினுங்கினாள். அந்தச் செல்லச் சினுக்கங்கள் அவனின் விஷமங்களை உச்சத்துக்குக் கொண்டு சென்றன. அந்த இன்பக் கூடலில் ஒரு புஷ்பமாக மலர்ந்தாள் அந்தப் பூங்கொடி இளநங்கை.

அர்த்தமற்ற ஊடல் முடிந்து கூடலில் ஈடுபட்ட அந்தக் காதற் பறவைகளின் அந்தரங்கத்தில் இனி யாருக்கும் இடமில்லை.

“சுபம்”

Sunday, 5 May 2013

உறவின் வேர்கள்

 

(ஜெயரமணி)

உறவின் வேர்கள்

(ஜெயரமணி)

சங்கரி பிற்பகலில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு, முன் ஹாலில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டாள். அப்போது, தபால்காரர் வந்து ஒரு தபாலைக் கொடுத்துவிட்டுப் போனார். கடிதத்தின் உரையிலிருந்த கையெழுத்தைப் பார்த்தவுடனேயே, அது தன்னுடைய மகளிடமிருந்து வந்ததென்று புரிந்து விட்டது.

மகளுக்கு மிகவும் பேராசைதான். தன்னுடைய பெற்றோர் மிகவும் சீர் வரிசைகள் செய்து, சிறப்பாகத் திருமணமும் செய்தபின்பும், வருடம் தவறாது பொங்கல், தீபாவளி, திருமண தினம், பிறந்தநாட்கள், பிள்ளைகளுக்காகவும் பல பரிசுகள் கொடுத்தபோதும், மேலும் மேலும் பிறந்த வீட்டிலிருந்து தனக்குச் செய்யவேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறாள். ஒரு போதும் பெற்றோருக்கும், தன் கூடப் பிறந்த ஒரே ஆண் வாரிசான அண்ணனுக்கோ, அவனுடைய மணைவி, குழந்தைகளுக்கோ சின்ன பரிசுகள் கூட கொடுக்க மனமில்லாது இருக்கிறாள். அவளுக்கும் வயதாகிவிட்டது. இனி அவளுக்கு புத்தி சொல்வது தனக்கு நாகரீகமில்லை என சங்கரிக்கும் தெரிந்துதான் இருந்தது. சின்னச்சின்னதாக பிறந்த வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டவளுக்கு, மொத்தமாகத் தன் தாயின் பிறந்த வீட்டுச் சீதனமாகக் கிடைத்த ஒரு வீட்டையும், கொஞ்சம் விவசாய நிலத்தையும், தனக்கு மட்டுமே உரியது என்றும், அதை உடனடியாகத் தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டுமென்று நச்சரிக்கலானாள். சங்கரியின் கணவர் இருந்தவரை கொஞ்சம் நிதானமாக இருந்தவள் அவரின் மரணத்திற்குப் பின் கண்டிப்பாக கேட்க ஆரம்பித்து விட்டாள். சங்கரியும் அவளிடம் அந்த சொத்தை அவளின் விருப்பப்படிதான் கொடுக்க முடியும் என தீர்மானமாகச் சொன்ன போதிலும், தன்னுடைய பிடிவாதத்தை விடவில்லை. வாராவாரம் ஒரு கடிதம் போட்டு விடுவாள்.

சங்கரியின் மகனான சிவராஜனும் அவன் மனைவி சுகுணாவும் மிகவும் சாதுவானவர்கள். அவர்களால் பத்மாவின் முன் தங்களுடைய ஆசைகளைச் சொல்லக்கூட சக்தியற்றவர்கள். மகனின் குணம் தெரிந்த சங்கரி, தன்னுடைய சொத்தை இருவருக்கும் சமமாகக் கொடுத்துவிடத்தான் விரும்பினாள். தாயின் குணம் தெரிந்த பத்மாவோ தன் தாயாரிடம், நீ இருக்கும்போதுதான் எனக்கு பிறந்த வீட்டுச் சுகமுண்டு. உனக்குப் பின் அவர்கள் எனக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவளுக்கு நான் எதாவது செய்ய வேண்டாமா? அதனால்தான் நான் உன்னுடைய தாய் வீட்டுச் சீதனத்தைக் கேட்கிறேன். அது தாய் வழிச் சொத்து, தாய்க்குப் பின் பெண்ணுக்குத்தான் சொந்தம், எனப் பலவும் பேசி தன்னுடைய ஆசைக்குப் பலம் சேர்த்துக் கொண்டிருந்தாள். மகனுக்கும் இரு குழந்தைகள். இருவரும் பெண் குழந்தைகள். சங்கரிக்கும் மகளும், மருமகளும் ஒன்றுதான். இருவரையுமே தன்னுடைய பெண்களாகத்தான் அன்புடன் பிரியமாக இருந்தாள். தன்னுடைய பெண்ணிற்கு எது வாங்கிக்கொடுத்தாலும், அதே போல் தன்னுடைய மருமகள் சுகுணாவுக்கும், பிள்ளையின் பெண்கள் சுதா, சுமாவிற்கும் செய்வாள். அதைப் போலவே, அவள் மனதில் தன்னுடைய மூன்று பெயர்த்திகளுக்கும், ஒரே பேரனான கண்ணனுக்கும் சமமாகத் தான் தன்னுடைய சொத்தைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தாள். அதை தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும்கூடச் சொல்லி விட்டாள். தாயின் முடிவு தெரிந்தவுடன், பத்மாவின் சுபாவம் வெளிப்படையாகவே எல்லாருக்கும் தெரிந்து விட்டது. தன்னுடைய நாத்தனாரின் குணம் தெரிந்த சுகுணாகூட சங்கரியிடம், “அம்மா, எங்களுக்கு உங்களின் அன்பும், ஆசிகள் மட்டுமே போறும். அக்கா விரும்பியபடியே, நீங்கள் அவருடைய பெயருக்கே உங்களின் சொத்தை மாற்றிக் கொடுத்து விடுங்கள். எங்களுக்கு அவரின் உறவுதான் வேண்டும். இந்தச் சொத்திற்காக, அவர் எங்களிடம் வருத்தப்பட்டுக்கொண்டு, எங்களுடன் உறவாக இல்லாது போனால் அது உங்கள் பிள்ளையால் தாங்க முடியாது. அவர் சொல்வது போல் எங்களாலும், நீங்கள் அக்காவிற்குச் செய்வது போல் வரிசைகள் செய்ய முடியாது. அவரின் விருப்பத்திற்கு நீங்கள் செய்து விடுங்கள்” எனவும் சொல்லி விட்டாள். சுகுணாவின் இதமான பேச்சைக் கேட்ட, சங்கரிக்குத் தன் மகள் எத்தணை சுயநலமாக இருக்கிறாள் என்பதும் தெரிந்தது. அவள் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய அவள் விரும்பவில்லை. தீர்மானமாகவே இருந்தாள்.

ஒவ்வோரு கடிதத்திலும், தனக்குத் தாய் செய்ய வேண்டியது என்ன என்பதைமட்டுமே சொன்னாளேதவிர, மறந்து கூட தன்னுடைய தாயைத் தன்னுடன் வந்து இருக்க மட்டும் சொல்லவில்லை. தாயின் கடமையை மட்டும்தான் நினைத்தாள். மகளின் கடமையை சுலபமாக மறந்து விட்டாள்.

சங்கரியின் மனதில் நிம்மதி போய்விட்டது. தன் பெண் தன்னை விட தன்னுடைய சொத்தைதான் பெரியதாக நினைத்தது அவளை மிகவும் பாதித்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவளின் உடல்நலம் கெட்டது. அவளும் தன் உடல் நலம் சீர் கெட்டதைப் பற்றி பெண்ணுக்கும் எழுதி விட்டாள். பத்மா வந்தாள். தாயைப் பார்க்க இல்லை. தாயிடமிருந்து தனக்குச் சேரவேண்டிய சீதனத்தை எழுதி வாங்கிக் கொண்டு போவதில்தான் குறியாக இருந்தாள். தங்கையின் பிடிவாதத்தைப் பார்த்த சாதுவான சிவராஜனுக்குக்கூட கோபம் வந்தது. “பத்மா நீ வந்தது அம்மாவின் உடல்நிலையைப் பார்த்து ஆறுதல் சொல்லவா அல்லது உன் ஆசையைச் தீர்த்துக் கொள்ளவா? நானும் அம்மாவிடம் சொல்லிவிட்டேன் “உன் சொத்தில் எனக்கு ஏதும் வேண்டாமென்று. எங்களுக்கு அம்மாதான் முக்கியம்” என்று. நீ இப்போது தயவுசெய்து அம்மாவின் மனதை நோக அடிக்காது, அம்மாவிடம் பிரியமாக நடந்து கொள்” எனவும் சொன்னான்.

உடம்பு மிகவும் தளர்ந்து போய், மிக்க பலவீனத்துடன் படுத்துக் கொண்டிருந்த சங்கரியின் கண்களில் அவளுடைய மூத்தவனும் ஒரே அண்ணனுமான ராஜன்னாதான் தெரிந்தார். கண் எதிரில் நிற்கும் மகன் சிவராஜன் தெரியவில்லை. தனக்குத் தன் சகோதரனிடம் இருந்த மாறாத பாசத்தின் விளைவாகத்தான், தன்னுடைய முதல் மகனுக்கு தன்னுடைய இஷ்ட தெய்வமான சிவன் பெயரையும் தன் அன்பு சகோதரன் பெயரையும் சேர்த்து “சிவராஜன்” எனப் பெயரிட்டு, செல்லமாக ராஜப்பா என்றுதான் வாய்நிறைய அழைப்பாள். தன்னுடைய பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டவளுக்கு தான் உடனடியாகத் தன் சகோதரனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் தோன்றியது. அவளும் மெதுவாகத் தன் மகனைப் பார்த்து “ராஜப்பா நீங்கள் இருவரும் என்னை இப்போதே உங்களுடைய தாய் மாமன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். எனக்கு என் அண்ணாவைப் பார்க்கனும் போல் இருக்கிறது. நானும் கொஞ்ச காலம் அவருடன் நிம்மதியாக இருக்க வேண்டும்: என்றாள். அம்மாவின் ஆசையைக் கேட்ட பத்மாவிற்குக் கோபம் தான் வந்தது. தன்னுடைய மாமன் வீட்டிற்குச் சென்றால் அம்மாவை தான் எந்த விதத்திலும் தன் வழிக்கு இழுக்க முடியாது என அவளுக்குப் புரிந்தது. அதனால் அம்மவைப் பார்த்த “இப்ப உன உடம்பு இருக்கும் நிலையில் உன்னால் உன் அண்ணா வீடு வரையிலும் நடக்கக்கூட முடியாதே? அப்பயிருக்கும்போது நீ எப்படி அங்கு போக முடியும். உன் அண்ணாவும்தான் படுத்த படிக்கையாக இருக்கிறாரே? நீ அங்கு போய் என்ன செய்வாய்?”எனக் கூறித் தாயை மாமன் வீட்டிற்குப் போகாமல் தடுக்க முயற்சித்தாள். ஆனால் தன் அம்மாவின் மனதை முற்றிலும் புரிந்து கொள்ளும் பிள்ளையான சிவராஜன் “அம்மா உன் விருப்பப்படியே நாம் இன்றே மாமாவின் வீட்டிற்குச் செல்ல நான் ஏற்பாடு செய்கிறேன். நீ நிம்மதியாக இரு” எனக் கூறிவிட்டு, தன்னுடைய மனைவி சுகுணாவைக் கூப்பிட்டு “அம்மா மாமா வீட்டிற்குப் போக ஆசைபடுகிறார். நீ அவருக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள். நாமும் அங்கு ஓரிரு நாட்கள் இருந்து விட்டு வரலாம்”என முடிவாகச் சொல்லி விட்டு, வெளியேச் சென்றான். வெளியேச் சென்ற சிவராஜன் தன்னுடை நண்பனின் காரையும் டிரைவரையும் தன்னுடைய தாயாரை மாமாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராகக் கொண்டு வந்தான். சில நிமிடங்களிலேயே சங்கரி தன் பிள்ளை, மருமகள், பெண் சகிதம் தன் தமையனைப் பார்க்க கிளம்பிவிட்டாள். சங்கரிக்கு காரில் வசதியாகச் செல்ல வேண்டியதெல்லாம் சிவராஜன் பார்த்துப் பார்த்துச் செய்தான். அன்றிரவே சங்கரி தன் பிள்ளை, பெண்ணுடன் தன் சகோதரன் ராஜன்னாவின் வீட்டிற்குச் சென்றாள்.

மறுநாள் காலையில் பத்மா தன்னுடைய விருப்பத்தை தன்னுடைய மாமனிடமே சொன்னாள். அப்போது சங்கரி அவளிடம் “பத்மா, நான் இங்கு வந்தது என்னுடைய தமையனிடம் சீராடத்தான். உன்னைப்போல் சொத்தாசை பிடித்தல்ல. நீ இப்போது உன் பிடிவாதத்தை விட்டு விட்டு, எங்களுடன் சகஜமாக இருக்க விருப்பமிருந்தால் இரு, இல்லையென்றால் நீ உன் வீட்டிற்குப் போ” என முடிவாகச் சொல்லிவிட்டாள். தாயின் சொல்லைக் கேட்ட பத்மாவிற்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் கலங்கி நின்றாள்.

மருமகளைப் பார்த்த மாமா ராஜன்னா “பத்மா, உனக்கு உண்டானது உனக்குக் கிடைத்தே தீரும். வீணாக வாதாடி, மற்றவர்களையெல்லாம் படுத்தாதே. எனக்கு சங்கரியின் மனம் தெரியும். நீ கொஞ்ச காலம் இந்தச் சொத்து பத்து என மனதை அலைய இடாமல், உறவான எல்லாருடனும் பிரியமாக இரு.” அப்போதுதான் உன் அம்மாவின் உடல் நலமாகும்.”எனப் பரிவுடன் சொல்லி பத்மாவைச் சமாதானப் படுத்தினார். அதற்குமேல் பத்மாவால் எதுவும் பேச முடியவில்லை. அதனால் மௌனமாகினாள்.

அன்று இரவு சங்கரியும், மாமா ராஜன்னாவும் தனியாகவே படுத்துக் கொண்டார்கள். சங்கரியின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, ராஜன்னா “சங்கரி, நான் இருக்கும்போது நீ ஏன் தேவையில்லாது, மனக் கவலைப் பட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்கிறாய்? நமக்குத்தான் பத்மாவைக் குழந்தையிலிருந்தே தெரியுமே?அவளூக்கு எல்லாமே தனக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம். அவளின் குணம் தெரிந்துதானே சிவராஜனும், சுகுணாவும் தங்களுக்கு உன்னுடைய தாய் வழிச் சீதனம் வேண்டாமென்று தீர்மானமாகவே சொல்லுகிறார்கள். அப்படி யிருக்கும்போது நீ ஏன் அவளுக்கு கொடுத்துவிட்டுப் நிம்மதியாக இருக்க மாட்டேனெங்கிறாய்?” என மிகவும் மென்மையான குரலில்கேட்டார். கூடத்தில் படுத்துக் கொண்டிருந்த பத்மாவிற்கும், சிவராஜன், சுகுணாவுக்கும்கூட அவர்களின் பேச்சு காதில் விழுந்தது. அதற்கு சங்கரி, “ராஜன்னா, நாமெல்லாரும் ஒரே மாதிரி இருக்கும்போது, பத்மா மட்டும் ஏன் அப்படி சுயநலவாதியாக இருக்கிறாள்.. நாம்தானே இரு குழந்தைகளையும் பிறந்ததிலேயிருந்து வளர்த்து வருகிறோம். அவள் அப்படியே அவளுடைய அப்பா அத்தைகளைப் போலவே இருக்கிறாள். இத்தனை நாட்களுக்குமேலா அவளுக்கு தன் அம்மா, சகோதரன் எனப் பாசம் வரப்போகிறது?” என வருத்தத்துடன் சொன்னாள். மேலும் “அண்ணா, சிவராஜன் அப்படியே உன்னைப் போலத்தான் இருக்கிறான். அவனும், தன் தங்கைக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராகத்தானிருக்கிறான். நான் தான் அவனுக்கும் இரு பெண்குழந்தைகள் இருக்கிறதே எனப் பார்க்கிறேன்.” எனவும் தன் மகனப் பற்றிப் பெருமையாகவேச் சொன்னாள். அதற்கு ராஜன்னாவும், “சங்கரி, நம் பிள்ளைகளைப் பற்றி நாமே தவறாகப் பேசக்கூடாது. ஒரு விதத்தில், நீ சந்தோஷப்படவேண்டும். சிவராஜனும் சரிக்குசரியாக பத்மாவுடன் சொத்தில் பங்கு கேட்டால் நீ என்ன செய்வாய்?” எனக் கேட்டவரைப் பார்த்து, “ராஜன்னா,அவன் அப்படி கேட்காமலிருப்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அப்பாவின் சொத்தில் பெண், பிள்ளைகளுக்கு சம பாகம் என இருப்பதுபோல் தாய் வழிச் சீதனத்திற்கு மட்டும் அப்படி ஒரு சட்டம் ஏனில்லை? அப்படியிருந்தால், நான் சட்டப்படியே செய்யவேன் இல்லையா? இல்லை இல்லை அது மட்டும் நான் செய்ய மாட்டேன்: என திடிரென்று படப்படப்பாகச் சொன்னாள். தங்கையின் குரலில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்தவர், “சங்கரி, நீ இன்னும் மாறவே யில்லையா? நான் எத்தனை முறைகள் உன்னிடம் சொல்லியிருப்பேன். எப்பவுமே நம் தாயின் சீதனம், உனக்குத்தானென்று.” திரும்பத்திரும்ப நீ பழசையெல்லாம் நினைத்துக் கொண்டு, வருத்தப் படக்கூடாது. நானென்ன, இப்போது கஷ்டப்படுகிறேனா? இல்லையே? அப்படி யிருக்கும் போது, நான் எப்பவோ உன் கணவருக்குச் செய்த உதவியே நீ இன்னும் நீயும், உன் குடும்பமும் என்னிடம் பட்டக் கடனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாயா? மேலும், உன் கணவரும் காலமாகி ஆண்டுகள் மேல் பல ஆகிவிட்டது. எனக்கும் அவருக்கும் நடந்த பண பரிவர்த்தணைகள் அத்தனையும், அவருடனே மறைந்து விட்டன. நீ இத்தனை காலத்திற்குப் பிறகும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டு, நம் அம்மாவின் சொத்து என்னைச் சேர்ந்தது என சொல்வதை நான் விரும்பவில்லை. நம்முடைய கடந்த காலத்தில் நடந்தவைகளையெல்லாம் நீ கட்டாயம் மறந்து விடத்தான்வேண்டும்” எனக் கட்டாயமாகச் சொன்னார்.

“அதெப்படி ராஜன்னா முடியும். உன்னால், நான் உனக்குக் கம்பர்கட்டு மிட்டாய் கொடுக்க ஆசைபட்டு, நீ பள்ளி கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடும்போது வந்ததை மறந்து விட்டாயா? எனக் கேட்டு, வாய் விட்டுச் சிரித்தாள். அதைக் கேட்ட ராஜன்னாவும் மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டே, “சங்கும்மா அதை எப்படியடா நான் மறக்க முடியும். இப்போதுகூட என் கண் முன் அந்தக் காட்சி தெரியுமே. அன்று, எங்கள் பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டுக்குச் தேர்வு செய்தார்கள். அதில் தேர்வாகவேண்டுமென்று, நான் மிகவும் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது நீ உன் பாவாடை அவிழ்ந்து விழுவதுகூடத் தெரியாமல், உன் பிஞ்சு கைகளில் கம்பர்கட்டு மிட்டாடை வைத்துக் கொண்டு, “ராஜன்னா ராஜன்னா, இந்தா உனக்கு கம்பர்கட்டு மிட்டாய் பிடிக்குமேயென்று நான் வாங்கி வந்தேன். வாங்கிக்கோ எனக் கூறியபடியே, நடு ரோட்டில் ஓடி வந்து கொண்டிருந்தாய். தூரத்தில் நீ ஓடி வருவதைப் பார்த்த எனக்கு, எங்கே நீ ஓடி வரும்போது, உன் பாவாடை தடுக்கி, விழுந்து விடுவாயோ என ஒரு பயம் ஒரு பக்கம். நீ கூப்பிட்டதால், பவுண்டரிக்கு வந்தப் பந்தைப் பிடிக்காமல் விட்டுவிட, எங்களின் கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க நான் காரணமாகி விட்டேன். நாங்கள் தோற்றுப் போனதைப் பார்த்த எங்கள் கட்சியின் கேப்டன் “என்னிடம், என்னடா பெரிய தங்கை. அவள் வந்தால், நீ உடனே பந்தை காற்றில் பறக்க விட்டு விடனுமா? உன்னால், நாங்கள் எல்லாரும் தோற்ற கட்சிக்காராகி விட்டோமே? உன்னையெல்லாம், பெரிய ப்பிளேயரென நான் சேர்த்துக் கொண்டேனே? நீ என் முகத்தில் நன்றாகக் கரியைப் பூசி விட்டாய். இனிமே, நீ எங்களூடன் சேர்ந்து விளையாட வரவேண்டாம். வீட்டிலேயே இருந்து கொண்டு, உன் அருமைத் தங்கையுடன் பல்லாங்குழியே ஆடிக்கொண்டிரு” என மிகவும் கோபமாகவும், கேலியாகவும் சொல்லிச் சென்று விட்டான். அவனைச் தொடர்ந்த மற்றவர்களெல்லாம் என்னை மிகவும் கோபமாகவும், கேவலமாகவும் பார்த்துக் கொண்டே, தங்களுடைய தலைகளைச் தொங்கப் போட்டுக் கொண்டு சென்றார்கள். அப்போது எனக்கு மிகவும் அவமானமாகவும், என்னால் எங்களின் கட்சி தொடர்ந்து பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளானதையும், எல்லா நண்பர்களின் கோபத்திற்கும், கேலிக்கும் காரணமானதால், தாளமுடியாத கோபம் உன் மீதுதான் வந்தது. நீ ஓடி வரும்போது வழியில் தடுக்கி விழுந்தபோது கூட நான் ஓடி வந்து உன்னைத் தூக்க வில்லை. நீயே அழுதுகொண்ட என்னிடம் வந்து “ராஜன்னா நான் உன்னைக் கூப்பிட்டுக்கொண்டே வந்தேனே, நீ பார்க்க வில்லையா? நீ ஏன் வந்து என்னைத் தூக்கிக் கொள்ள வில்லை. பார் நான் கீழே விழுந்து காலில் சிராய்ப்பு இருக்கிறது. இரத்தம் கூட வருகிறதே. எனக்கு வலிக்கிறதன்னா” என அழுகையிடையே நீ சொன்னாய். என்னுடைய கோபம்தான் அதிகமாக இருந்ததால், நான் உன்னைத் தூக்காமல் “ஏண்டி சங்குச் சனியனே, உன்னிடம் நான் இப்போ கம்மர்கட்டுத் தான் கேட்டேனா. விட்டிலேயே இருந்து தொலைக்க வேண்டியதுதானே? ஏண்டி இப்படி வந்து என் மானத்தை வாங்கிவிட்டாய். பார். நீ வந்ததினால், நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்ததில், பந்தைப் பிடிக்காமல் விட்டுவிட்டேன். என்னால் என் கட்சி தோற்றுப் போய் விட்டது.என் கேப்டன் என்னைக் எப்படித் திட்டினான் தெரியுமா. கிளாசில் கடைசி பெஞ்சில் இருப்பவன், இன்று என்னை திட்டியது மன்றி, இனிமேல் நான் எப்படிக் கெஞ்சிக் கேட்டாலும், டீமில் சேர்த்துக் கொள்ள மாட்டேனென்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். எல்லாம் உன்னால் தான். போடிநீயும் உன் கம்பர்கட்டும்” எனச் சொல்லிவிட்டு உன் கையில் இருந்ததை பிடுங்கி மண்ணில் எரிந்துவிட்டு, நான் நீ என்னுடன் வருகிறாயா எனக் கூடப் பார்க்காமல் வீட்டிற்குப் போய் விட்டேன். நான் வீட்டிற்குப் போனபிந்தான் அம்மா என்னிடம் கேட்டாள் “எங்கேடா சங்குப்பொன்னு, உன்னைச் தேடித்தானே வந்தாள். நீ பர்ர்க்க வில்லையா? பாவம்டா சின்னப் பொன்னு, எங்கே தனியாக தவிக்கிறதோ? போய் பாரப்பா “ என என்னைத் துரத்தினாள். அப்போதுதான் நான் உன்னை பள்ளிக்கூட்த்திலேயே விட்டுவிட்டுச் சென்றது என் நினைவுக்கு வந்தது. என்னையு மறியாமல் எனக்கு என் மீதே கோபம் வந்த்து. பாவம் சின்னப் பொன்னு நீ, உன்னை அழும்போதுகூட்த் தூக்காமல், தனியாக விட்டுவிட்டு போனது மிகவும் தப்பென்று உணர்ந்தேன். அதனால், போன வேகத்திலேயே திரும்பவும் பள்ளிக்கூடத்திற்கு வந்தேன். அப்போதும் நீ அழுது கொண்டே இருந்தாய். உன்னைப் பார்த்த்தும்,என்னால் தாங்க முடியவில்லை. ஓடி வந்து எடுத்துக் கொண்டு, உன் கண்களில் வழிந்த நீரை என் கைகளால் தொடைத்துவிட்டு, உன் பாவாடையை சரியாகக் கட்டி, உன்னைs சமாதானப் படுத்தினேன். அப்போதும் நீ என்னைப் பார்த்து “ராஜன்னா பார் கம்பர்கட்டு அங்கேயே இருக்கு. எடுத்துக்கோ. உனக்காகத்தான் நான் கொண்டு வந்தேன்” எனச் சொன்னாள். அதைக் கேட்டவுடன் எனக்கும் மிகவும் அழுகையாகி விட்டது. ஓடிப்போய் மண்ணில் விழுந்த கம்பர்கட்டை எடுத்து, அங்கிருந்த குழாயில் அலம்பி, உன் பாவாடையிலேயே துடைத்து உன்னிடம் கொடுத்தேன். நீயோ, அதை உன் கையால் என் வாயில் போட்டாய். அப்போது நீ என்னிடம் சிரித்துக் கொண்டே “என்ன்ன்னா, நீயும் மண்ணில் விழுந்ததை எடுத்துச் சாப்பிடுகிறாய்? தப்பில்லையா? எனக் கேட்டாய். அதற்கு நான் “என் சங்கும்மா கொடுத்தது எதுவானாலும், எங்கிருந்தாலும் எனக்குப் பரவாயில்லை.”எனச் சொல்லிவிட்டு என் வாயில் இருந்த கம்பர்கட்டைப் பாதி கடித்து உன் வாயில் போட்டேன். நீயும் என்னைக் கட்டிக் கொண்டு, “வா ராஜன்னா வீட்டிற்குப் போகலாம். எனக்குப் பசிக்கிறது” என்றாய். நானும் உன்னைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

வீட்டில் அம்மா உன்னிடம் கேட்டாள் “ஏண்டி, எங்கேடி நீ தனியாகப் போனாய்.” என்று. அதற்கு நீ “ராஜான்னாவுக்காக கடையில் கம்பர்கட்டு வாங்கினேன். அதைக் கொடுக்கப் போனேன்” எனச் சொல்ல, அம்மாவும் உன்னைக் கேட்டாள், “அண்ணாதான் ஸ்கூல் கிரௌண்டில் விளையாடப் போனானே, அத்தனை தூரமா நீத் தனியாகப் போனாய். வா அப்பாவிடம் சொல்லி, உன்னை நாலுசாத்து சாத்தச் சொல்றேன்”. அதற்கும் நீ என்ன பதில் சொல்வாயோ என நான் பயந்து கொண்டிருந்தேன். எங்கே நீ என் ஸ்கூலுக்கு வந்தும், நான் உன்னைத் தனியாக அழ விட்டுவிட்டு வீட்டிற்குக் கோபமாக வந்து விட்டேன் என்பதை அம்மாவிடம் சொன்னால் அம்மா என் மீதும் கோபப் படுவாரே என நான் திண்டாடினேன். ஆனால் நீ மிகவும் சமத்தாக, “அம்மா எனக்குத் தான் அண்ணா ஸ்கூலுக்குப் போக வழி தெரியாதே? நான் நம்முடைய தெருக் கடைசியில் உள்ளக் கடையில்தானிருந்தேன். அண்ணா வந்து என்னைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டான்” எனச் சொல்லி என்னக் காப்பாற்றி விட்டாய்.

ஆமாம், நீ ஏன் அன்றே அப்படிச் சொல்லி என்னை அம்மா, அப்பாவின் கோபத்திலிருந்து காப்பாற்றினாய். நான் உன்னைத் தனியாக விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தது தப்புத்தானே. தப்புச் செய்தவன் தண்டனை அனுபவிக்கத்தானே வேண்டும்” எனவும் கேட்டார் ராஜன்னா. அன்று நடந்ததிற்கு இன்றுகூட சங்கரிச் சொன்னாள் “ராஜான்னா, அம்மாவோ, அப்பாவோ உன்னைத் திட்டினாலோ, அடித்தாலோ உனக்கு மட்டும் வலிக்காதே, எனக்கும்தானே வலிக்கும். ஏன்னா, நான் உன் தங்கையண்ணா. இப்பவும் நீ எதற்காக என் கணவர் பட்ட கடனையெல்லாம் உன் விளைநிலத்தை விற்று அடைத்து விட்டு, எனக்கு அம்மா கொடுத்தா தாய்வீட்டுச் சீதனமான நிலத்தையும், வீட்டையும் காப்பாற்றி எனக்கே கொடுத்தாய். நான் உன் தங்கை, நான் கஷ்டப்படக்கூடாது என்றுதானே? நீ அன்றே என் கணவர் சொன்னபடியே எனக்காக நீங்கள் கொடுத்த நிலத்தையும், வீட்டையும் விற்று எங்களின் கடனை அடைத்து இருந்தால், இன்று என் பெண் கொஞ்சமும் சகோதர பாச மில்லாமல், தனக்குத்தான் அத்தனையும் வேண்டுமென்று என்னைச் சதா நச்சரித்துக் கொண்டிருப்பாளா? உன் மருமகன் என்னவோ உன்னைப் போலத்தான். அவனுக்குத் தன் தங்கையின் உறவும், அன்பும்தான் முக்கியமாக இருக்கிறது. உன் பெண்ணும் அவனுக்குச் சரியாக என்னிடம் வந்து பத்மா கேட்பதும் நீயாயம் தானே, அவளின் விருப்பப்படியே உங்களின் வீட்டையும், நிலத்தையும் அவள் பெயருக்கே மாற்றி விடுங்களேன். உங்கள் சொத்தை யார் அனுபவிக்கப் போகிறார், நம்முடைய பத்மா தானே. உங்களின் பிள்ளைக்கு இந்தப் பிறவியில் கிடைத்த சகோதர உறவுதான் முக்கியமாக இருக்கிறது. இந்தச் சொத்திற்காக அவர்கள் எங்களுடன் உறவில்லாமல் பிரிந்து விட்டார் என்றால், எங்களால் மட்டும் நீங்கள் கொடுத்தச் சொத்தை நிம்மதியாக அனுபவிக்க முடியுமா? என என்னிடம் சொல்லிவிட்டாள். என்னுடைய விருப்பம் நம்முடைய தாய்வீட்டுச்சீதனம் இருவருக்கும் சமமானது. எனக்கு மருமகளானாளும், சுகுணா உன்னுடைய பெண்தானே. அதனால் அந்தச் சொத்தை சமமாக பத்மா, சுகுணா இருவர் பெயரிலும் எழுதி விடுகிறேன். கொஞ்ச காலம் பத்மா எங்கள் பேரில் கோபமாகத்தானிருப்பாள். ஆனால், நாளடைவில் அவளுக்கும் உறவின் சுகம் புரியும். அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். நீ நாளைக்கே இது விஷயமாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடு. என்மீது இருக்கும் சுமையை நான் இறக்கி விட்டு, உன்னுடன் மிச்ச காலத்தை, உன் அன்புத் தங்கையாக இருக்கிறேன். எனக்கு உன் மடியை விட சுகமானது ஒன்றுமில்லை” எனச் சொல்லிவிட்டு, மிகவும் ஆயாசமாக மூச்சுவிட்டு, ராஜன்னாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே, உறங்க முற்ட்பட்டாள். ராஜன்னாவும்,இரவு நெடு நேரம் ஆகிவிட்டதால், தங்கையின்அருகிலேயே படுத்துக் கொண்டான். அவன் மனமும் தங்களின் இளமைகாலத்தை நினைத்துப் பரவசம் அடைந்தது

தாயும், மாமனும் பேசியதை கூடத்திலிருந்தே கேட்ட பத்மாவின் மனதிலும் ஏதோ ஒரு இனம் தெரியாத குற்ற உணர்ச்சி தோன்றியது. தன்னுடைய சுயநலத்தால் தான் அடையப் போகும் சொத்தால், தான் இழக்கப்போகும் ஈடில்லாத உறவுகள் எந்தனை என எண்ணிப் பார்த்தாள். சொத்து இருக்கிறதோ, இல்லையே இன்றுகூட தன்னுடைய தாய், மாமா இருவருக்கும் இடையே நிலைத்து இருக்கும் அன்பும், பரிவும், ஒருவருக்கொருவர் எந்தக் காலத்திலும், இணைபிரியாது பாசமாக இருப்பதையும் நினைத்துப் பார்த்தாள். அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த நான் மட்டும் ஏன் இப்படி சுயநலமான சிந்தனையுடன் இருந்து வந்திருக்கிறோம். சிறு வயதிலிருந்தே தன்னுடய பிடிவாதம், காரணமற்ற முன் கோபம், மற்றவர்களை துன்புறுத்துவதில் அடைந்த ஆனந்தம் எல்லாம் அவளின் மனதில் ஓடியது. தன்னுடைய கெட்டச் சிந்தனையால் தன்னுடைய தாயும், மாமா, சகோதரன், மாமன் மகளானாலும், உடன் பிறந்த சகோதரியாக அன்பு காட்டும் சுகுணா, எல்லாரையும் எத்தணை நாட்கள் கஷ்டப்படித்தினாள் என்பதையும் உணர்ந்து கழிவிரக்கம் அடைந்தாள். அதே சமயம் அவளுடைய கணவர் ஸ்ரீதரன் கூறும் அறிவுரையும் அவள் மனதில் எழுந்த்து. “பத்மா, நமக்கு வேண்டுமென்றால், பணம், வீடு, நிலம், நகை என சொத்தெல்லாம் நம்மால் சம்பாதிக்க ,முடியும். ஆனால், ஆண்டவன் அருளால் பிறப்பால் ஏற்பட்ட உறவுகளை ஒன்றைக் கூட நாம் இழந்து விட்டால், பிறகு அதை நாம் எத்தணைப் பணம் கொடுத்தாலும் நம்மால் அடைய முடியாது. நாம் அனுபவிக்கும் பட்டம், பதவி, சொத்து, வசதியான வாழ்வு எல்லாவற்றையும் விட , பிறப்பால் ஏற்பட்ட உறவுதான் உயர்ந்தது. அதனால், எனக்கு நீ கேவலம் அழியக்கூடிய சொத்திற்காக, உன் பிறந்த வீட்டு மனிதர்களிடம் போராடுவது கொஞ்சமும் பிடிக்க வில்லை. வேண்டாம் உன் பிடிவாதம். நீ அவர்களுடன் நல்ல உறவை மட்டும் காப்பாற்றிக் கொள். அதுவே ஆயிரம் சொத்துக்குச் சமம்” என எத்தனையே முறைகள் இதமாகவும், கோபமாகவும் சொல்லி வந்தார். ஆனால், பேராசைக்கு அடிமையான மனதில், நல்ல விஷயங்கள் எல்லாம் ஏறவில்லை. எல்லாரையும் கஷ்டப்படுத்திக் கொண்டு, தானும் கஷ்டப்பட்டதுதான் நடந்தது.

மனதில் தெளிவு வந்தவுடன், காலையில் எழுந்தால், தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை நல்ல உறவுகளை எந்த முகம் கொண்டு பார்க்க முடியும்? என தன் மனதிற்குள்ளேயே அழுதாள். தான் மனம் திருந்தியதை காலையில் முதல் வேலையாகத் தன் தாயாரிடமும், மாமாவிடமும் சொல்லி, அவர்களை இத்தணை நாட்கள் துன்பப் படுத்தியதற்கு, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்கூட தன்னுடைய பாவம் தீராது என நினைத்துக் கொண்டே, பத்மாவும் தூங்கலானாள்.

காலையில் மாமா சங்கரியிடம் தான் சொல்லியபடியே, பத்மாவின் பெயருக்கே தாய் வீட்டுச் சீதனாக, வீட்டையும், நிலத்தையும் மாற்ற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வெளியேக் கிளம்பினார். அவருடன் சிவராஜனும் கிளம்பினான். அப்போ அங்கே வந்த பத்மா, மாமாவிடம் “எங்கே காலையிலேயே கிளம்பிவிட்டீர்கள்” எனக் கேட்டாள். அதற்கு சங்கரி “எல்லாம் உன் விஷயமாகத்தான். மாமாவும் உன் ஆசைப்படியே சொத்தை உன் பெயருக்கே எழுதி விடச் சொல்லி விட்டார். இப்போ உனக்குத் திருப்திதானே? அதற்குத்தான் பத்திரப் பதிவுஆபிஸுக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யப் போகிறார்கள்”எனச் பளிச்சென்று சொல்லிவிட்டு, அவள் முகத்தைக் கூட பார்க்கப் பிடிக்காமல் உள்ளேச் சென்றாள். அப்போதும் பத்மா ஒன்றும் சொல்ல வில்லை. மௌனமாகவே இருந்தாள். சங்கரிக்கோ அவளின் மீது சொல்லவொன்னாக் கோபம்தான் இருந்தது.

பத்திரப் பதிவு ஆபீஸில், பத்திரத்தை எப்படி பதிவு செய்ய வேண்டுமென்று அதிகாரி கேட்டபோது, முதலில் பத்மாதான் ஐயா, எங்களின் தாயார் பேரில் இருக்கும் வீட்டையும், நிலத்தையும் என்சகோதரன் சிவராஜன் பெண்கள் சுதா, சுமா இருவர் பெயரிலும் எழுதி வைத்து, அதற்குக் காப்பாளராக என் சகோதரன் சிவராஜனை நியமித்து பத்திரம் தயார் செய்து தாருங்கள்” எனச் சொன்னாள். அதிகாரியின் முன் கூடி இருந்த அத்தனை பேரும் திடுக்கிட்டார்கள். திடீரேன்று பத்மாவின் மனதில் இப்படிபட்டமாற்றம் ஏற்படக் காரணம் என்ன என ஒருவராலும் ஊகிக்க முடியவில்லை. தங்களின் காதில் விழுந்ததை நம்பக் கூட முடியாமல் நின்றார்கள். மாமாதான் மெதுவாக :என்ன பத்மா, நாங்கள் இங்கு வந்ததே நீ கேட்டபடியே இந்தச் சொத்தை உன் பேரில் மாற்றி எழுதத்தானே. திடீரென்று, நீ இப்படியோரு முடிவுக்கு வரக் காரணம் என்ன? என் பெண் சுகுணா உன்னிடம் இந்தச் சொத்து தன் பெண்களுக்கு வேண்டுமென்று கேட்டாளா? எனக் கோபமாகக் கேட்டார். அதற்கு பத்மா சாந்தமாகவேச் சொன்னாள் “மாமா நான் நேற்று இரவு வரையில் அம்மாவின் சொத்துக்கள் எல்லாம் எனக்குத்தான் வர வேண்டுமென்று உறுதியாகத்தானிருந்தேன். ஆனால், நேற்று இரவில் நீங்களும், அம்மாவும் உங்களின் சிறு வயது காலத்திலிருந்தே ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு பாசம், பரிவு வைத்திருக்கிறீர்கள் என்பதையும், அப்படி என் பிடிவாதத்தால் இந்தச் சொத்தை நான் அடைந்தாலும், இதனால் நான் இழக்க வேண்டி யிருக்கும் அன்பு உள்ளங்கள், பிரியமான உறவுகள் எத்தணை என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். அம்மா உங்களிடம் வைத்திருக்கும் பாசத்தில், ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நான் நேற்றுவரை என் சகோதரனிடம் காட்டவில்லை, ஏன் மனதால் கூட அவனுடன் பிரியமாக இருக்க ஆசைபட வில்லை. ஆனால், அவனோ என் உறவுதான் முக்கியம் என நினைத்து, அம்மாவிடமும், உங்களிடமும் தன் தாயின் சொத்தை எனக்கே கொடுக்க முடிவாகச் சொன்னதும், என்னால் என்னையே மன்னிக்க முடியவில்லை மாமா. இத்தனை அற்புதமான உறவுகளைவிட, காலத்தால் அழியக்கூடிய இந்த மண்ணிற்கா நான் அத்தனை கோபப் பட்டேன் என நினைத்து எனக்குள்ளேயே துன்ப ப்பட்டேன் அதனால் காலையில் தெளிவான முடியுடன் வந்தேன். எனக்கும் உறவின் வேர்கள் என்ன என்பதை உணர முடிந்தது. மனிதனால் சம்பாதிக்க கூடிய மண்ணிற்கும், பிற சொத்திற்காகவும், பிறப்பால் ஆண்டவனால் நமக்கு வரமாக அமைந்த உறவுகளை இழக்க நான் இனியும் சுயதலமாக இருக்க மாட்டேன். எனக்கும் உறவுகள் தான் வேண்டும். அதனால், இத்தணை நாட்கள் உங்களை யெல்லாம் துன்பப் படுத்தியதிற்காக, நீங்கள் எல்லாரும் என்னை மனசார மன்னித்து உங்களின் அன்பால் என்னை அரவனைக்க வேண்டுமென்பதுதான் என் வேண்டுகோள்” எனச் சொல்லி, தாளாமல் கண்ணீர் விட்டுக் கொண்டே, மாமானின் கைகளில் தன்னுடைய முகத்தைப் பதித்துக் கொண்டு விம்மினாள். பத்மாவின் கண்களிலிருந்த வழிந்த கண்ணீரை மாமா ராஜன்னா தன்னுடையே மேல் துண்டால் துடைத்து விட்டு, “அசடே இப்ப என்ன நடந்துவிட்டது என்று இத்தணை வருத்தப்படுகிறாய். உனக்கு உரிமையானதைதாயே நீ கேட்டாய். நாங்களும் உனக்குத் தர மனப்பூர்வமாகத்தானே வந்தோம். சொத்தை உனக்கு கொடுத்தபின், உன்னை எங்கள் பெண் இல்லை யென்றா சொல்லுவோம். என்ன நடந்தாலும், நீ எங்களின் அன்புச் செல்லம்தானம்மா. அழாதே” என பரிவுடன் சொல்லிவிட்டு, அவளின் விருப்பப்படியே பத்திரப்பதிவு செய்து விட்டு, எல்லாரும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

சொத்து பதிவு பண்ண வந்தவர்களின் பாசப் பிணைப்பைப் பார்த்த, பத்திரப்பதிவு அதிகாரியும், மற்றவர்களும், உறவின் வேர்கள் எங்கிருக்கிறது என் உணர்ந்து மனம் நெகிழ்ந்தார்கள்.வ்