தாயின் வழக்கு
இடம்:-- சேரமன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட முசிறியில்
உள்ள பாவேந்தர் பாணரின் குடியிருப்பு.
************
தன்னால் தானமாக வழங்கப்பட்டு,
பாணரால் வளர்க்கப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஒரே மகனும் சேர இளவரசனுமான
குட்டுவன்சேரன் மீது நாட்டுக்குச் சொந்தமான
பொக்கிஷங்களைக் கொள்ளையடித்தது பற்றிய விசாரணையின் முடிவாகத் தன் தீர்ப்பாகச் அவனை
‘நாடு எல்லைக்குள் இருக்கக்கூடாது என உத்திரவுடன் தன் ஆசனத்தைவிட்டு எழுந்தான்
சேரன் செங்குட்டுவன்.
அப்பொழுது பாணரின் குடிசை
வாசலில் ஒரு சலசலப்பும் அவையில் கூடியிருந்தோரின் வியப்புடங்கூடிய பேச்சரவமும்
ஏற்பட்டது.
அங்கே நான்கு புறமும்
தூணித்திரையின் நடுவே மெதுவாக நடந்து வந்தாள் குட்டுவன்சேரனின் அன்ணையும் சேரன்
செங்குட்டுவனின் பட்டமகிஷியான சேரமாதேவி.
முன்னறிப்பின்றி தீடீரேன்று சபைக்குள் வந்த மகாராணியாரைப் பார்த்து தங்களின்
தலைவணங்கினார்கள் சபையில் கூடியிருந்தோர்.
தமிழ்ப் புலவர் பாணரின்
தமிழ்ப் பாட்டுக்கு அடிமைபட்டுத் தன்னால் தன்னுடைய ஐந்துவயது பாலகனாகிய
குட்டுவன்சேரலை, பாணருக்குத் தானமாக வழங்கப்பட்டச் செய்தியைக் கேட்டவுடன் தன்
அந்தரங்கபுரத்தின் வாயிற்கதவைத் தாளிட்டபின் தன்னைப் பார்க்கவும் மறுத்துவிட்டு
தன் அந்தப்புரத்திலேயே அரண்மணை சுகபோகங்கள் எல்லாவற்றையும் உதறிவிட்டு, தனிமைச்
சிறையில் வாழ்ந்துவந்தத் தன் மனையாளைப் பார்க்காமலேயே இருபது ஆண்டுகள் கடந்த
நிலையில் தீடீரேன்று தன் விசாரணை மண்டபத்திற்குள் நுழைந்த சேரமகாதேவியைப்
பார்த்துத் திகைத்து சில நொடிகள் அசைவற்று நின்றான் சேரன் செங்குட்டுவன். தன்னுடைய பாட்டினால் பிரிந்து வாழும் அரச
தம்பதிகளின் துயருக்குத் தானும் தன் தமிழ்ப் பாட்டும் காரணமாகியதை உணர்ந்த புலவர்
பாணரும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றுவிட்டார்.
சபையின் சலசலப்பு
அடங்கியபின் மெதுவாகத் தன் விஜயத்தின் காரணத்தை மகாராணியார் சொல்லத் தொடங்கினார்.
“”இருவது வருடங்களுக்குமுன் எனக்குத் தெரிவிக்காமலும், என் சம்மதமின்றியும்
எனக்கும் உரிமையுள்ள என் ஒரே மகணை தமிழ் பற்று என ஒரு இலக்கில், துராக்கிரதமாக
என்னிடமிருந்து இருவர் பிரித்துவிட்டார்கள்.
அவர்களின் அநியாயத்தால் மகணைப் பிரிந்து வாழும் ஒரு தாயின் வழக்கை இன்று
இந்த நியாய சபையில் வைத்து விசாரிக்க வேண்டி பிராது கொடுத்து நியாயம் கேட்கும்
துரதிர்ஷ்டமான நிலையில் இந்த சபைக்கு வந்துள்ளேன்””..
மகாராணியாரின் வழக்கைக்
கேட்ட, சபையினர் சிறிதுநேரம் ஸ்தம்பித்து இமையைக் கூட இமைக்காமல் நின்றுவிட்டனர். பிறகு மெதுவாக மன்னர் கேட்டார்.
“இருவது ஆண்டுகள் கழிந்த
பின், இன்று இந்த வழக்கை விவாத்திற்கு உட்படுத்தவேண்டிய அவசியம் என்ன?”.
என் மகணை என் சம்மதமின்றி
தானம் கொடுத்தபின்பும் அவன் சேரநாட்டில் இருந்துவந்ததாலும், இந்த வினாடிவரையில் அவனுடைய
அரசு உரிமையைப் பரிக்காததாலும் நான் பொறுமையைக் காத்தேன். ஆனால் இன்று “நீதி” என்ற பெயரில் அவணை நாடு
கடத்தவும், அவனின் பிறப்ப்புரிமையைப் பரிக்கவும் ஆணையிட்டபின், என்னுடைய
“தாய்மையின் தவத்தையும், என் மகனின் அரசு உரிமையையும் பாதுகாக்க வேண்டியும்,
எனக்கும், அறிவு தெரியாத வயதிலேயே தாயைவிட்டுச் சேயை பிரித்து, இருவரின்
பிறப்புரிமையை பரித்த கொடுமைக்குப் பரிகாரம் வேண்டியும், இன்று இந்த வழக்கு
சபையின் வாதத்துக்கு கொண்டுவரப்பட்டது.
மகாராணியரின் வழக்கைக் கேட்ட
புலவர் பாணர் மெதுவாக மகராணியைப் பார்த்து “மன்னரின் குலக்கொழுந்தை நான் தானமாகப்
பெற்றாலும், குட்டுவன் சேரல் தன் பிறப்பிற்குரிய எல்லா வித்தைகளையும் குறைவர
கற்றுத் தேர்ச்சிபெற்றுள்ளான். .சேரஇளவலுக்குத்
தேவையான போர்ப் பயிற்சிகனைத்திலும் வல்லவனாகவே வளர்ந்துள்ளான். அரண்மணைப் பஞ்சணையில் துயிலவும், அருசுவையுடன்
உணவு அருந்தவும் இல்லையே தவிர, மற்றபடி ஒரு இளவரசனாகவே என்னிடம் வளர்ந்து
வந்திருக்கிறான். மேலும் தமிழ் மொழியிலும்
பாண்டியத்துவம் பெற்றுள்ளான் “ எனச் சொன்னார்.
அதற்கு மகாராணியார் தன் திரை மறைவிலிருந்தே கேட்டார் “பாணரே, இன்று
வாலிபனாக வளர்ந்திருக்கும் என் மகன் தன் மழலைப் பருவத்தில் இழந்த தாயின்
அரவணைப்பும், பரிவும், பாசமும் உங்களால் அவனுக்கு இன்றுவரை கொடுக்க முடிந்ததா?
அவன் அந்தப் பருவத்தில் என்னைத் தேடி என் அந்தப்புர மதில் சுவற்றின் கீழ் கண்களில்
கண்ணிர் ததும்ப நின்ற நாட்கள் உங்களின் நினைவுகளில் இல்லையா? அந்தப்புர சாளரத்தின் வழியே மகனையும் அவன்
பால் வடியும் முகத்தில், வழிந்தக் கண்ணிரையும் துடைக்கச் சக்தியின்றி, துடித்துக்
கதறிய தாயின் உள்ளக் குமுரல்கள்தான் உங்களுக்குப் புரியாததா? அதனைத் தவிர்க்க தங்கள் உண்மையான தமிழ்
காக்கும் காவனாக என்ன செய்தீர்கள். இன்றும் அவனின் குழந்தைப் பருவத்து ஏக்கத்தைத்
தீர்க்காத்தான் என்ன செய்தீர்கள்? அவன் இழந்ததை உங்களாளொ அல்லது அவனைத் தானமாக
உங்களிடம் கொடுத்த சேர மன்னராலொ ஈடு செய்ய முடியுமா? மேலும், பாலூட்டும் பாலகனைப் பிரிந்து இருவது
வருடமாக தவித்துக்கொண்டிருக்கும் தாய்மையின் அக்கினியைத்தான் தங்களால் அணைக்க
முடியுமா? தமிழ் என்ற பேரில் தாயையும்
சேயையும் பிரித்த உங்களுக்கும், உங்களின் மன்னருக்கும் எந்த உலகில் பரிகாரம்
தேடுவீர்கள்?” என் ஆவேசப்பட்டு துன்பம் தாளாமல் வினவினாள்.
மன்னரொ மகாராணியாரைப் பார்த்து “மகராணியாரே நான்
என் ஆட்சியில் எனக்குள்ள உரிமையில் என் வம்ச வாரிசை, நான் வணங்குக் தமிழை பார்
உள்ளளவும் புகழ் பரப்பும் புலவருக்குப் பரிசாகவே தந்தேன்.
என் மனதில் தமிழும், தமிழ்ப் பற்றும் தவிர வேரொரு சிந்தனையும், யாரையும்
துன்புறுத்தும் எண்ணமும் இல்லை. கணவரின்
செயல்கள் யாவிலும் முழு மனதுடன் ஈடு பட வேண்டியது ஒரு நல்ல மணையாளின் குணமல்லவா?
எனக் கேட்டாள்.
சபையைப் பார்த்த மகாராணியார், “என்னுடைய வழக்கே மன்னரும், பாணரும் சேர்ந்து
“தமிழ்” என்ற பெயரால் எனக்கும், அறியாத வயதில் என் மகன் குட்டுவன்சேரலுக்கு இழத்த
அநீதிக்கு நியாயம் கேட்டுத்தான். அதனால்,
இன்று பிரதிவாதிகளாக இருக்கும் இந்த இருவருமே நியாயாதிபதியாக இந்தச் சபையில்
அங்கம் வகிக்கமுடியாது. அதனால், புதிதாக ஒருவர் இன்று இங்கு தீர்ப்பளிக்க வேண்டியதுதான்
முறை” என உரைத்தார்.
மகாராணியாரின் உரையைக்
கேட்டபின், சேர மன்னன் தன் ஆசனத்தைவிட்டு கீழே இறங்கினான். பிறகு ராணியைப்
பார்த்து “பிரதிவாதிக்கு இச்சபையில் யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்களையே
நியாயாதிபதியாகத் தீர்மானிக்கலாம்” என்றும் கூறினான்.
ஆனால், சபையில் உள்ள எவருமே
மன்னருக்குக், மகாராணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள வாதத்திற்கு நியாயம் வழங்கமுன் வரத் தயங்கினார்கள். சபையைச் சுற்றி ஒரு முறைத் தன் கண்களை ஓட
விட்ட மகாராணியார் மெதுவாக நகைத்தாள்.
“தர்மம் சேர மண்டலத்தைவிட்டுப் போய் இருவது ஆண்டுகள் கழிந்த பின், இச்சபையில்
நியாயத்தை துணிவாக எடுத்து உரைக்க ஒருவர் வருவாரென்று மன்னர் எதிர் பார்த்தது,
குருடன் இருட்டில் ஓவியத்தைப் பார்க்கத் துணிந்ததுபோல்தான் இருக்கிறது” மகாராணியாரின் ஏளனத்திற்கும் யாரிடமிருந்து
எந்த மறுப்போ, பதிலோ இல்லை. பிறகு
மகாராணியாரே உறுதியாகக் கூறினாள். “இப்போழுது, இந்தச் சபையில் மன்னருக்கு
ஆதரவாகவோ, எதிராகவோ வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்க யாரும் முன் வராததால்,
நானே என் வழக்குத் தீர்ப்பளிக்கப் போகிறேன். இதில் யாருக்கும் ஏதும்
ஆட்சேபணையிருந்தால், அவர்கள் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்கலாம்.” என்றாள்.
சில நொடிகள் கழிந்தன. கடைசியாக, மகாராணியார் “நான் இனியும் சபையின்
நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால்,
நானே இங்கு என் வாதத்தையும் சொல்லி, அதற்கு என் தரப்பு நியாயத்தையும் கூறுகிறேன்”
எனச் சொன்னாள்.
மகாராணியார், மன்னரைப்
பார்த்துக் கேட்டாள் “இந்த சேர அரசுக்கும் எனக்கும் என்ன உறவு? சேர இளவரசனுக்கும்
எனக்கும் என்ன உறவு?”
அதற்கு மன்னர் சிறிது
நகைத்தபடியேச் சொன்னார், “மகாராணியார் என் மணைவி.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்னுடன் அவருக்கு நடந்த திருமணத்தை
மகாராணியார் மறந்து விட்டாரா?.
ஆனால், நான் அதனை இன்றுவரை
மறக்கவில்லை.” சேர இளவரசன் நம்மிருவரின் கருத்தொருமித்து வாழ்ந்த வாழ்வில் உதித்த
குலக்கொழுந்து. உன்னால் என் வம்சம்
விளங்க வந்த விலையில்லா மாணிக்கம் நம் செல்வ மகன்.”
மகாராணியார் மன்னரைப்
பார்க்காமல், தலையைக் குனிந்தபடியே சபையைக்குச் சொன்னாள். “மன்னருடன் நடந்த
திருமணத்தையும், அன்று அக்னிதேவனை ஏழு முறை என் கையைப் பிடித்துக் கொண்டு வலம்
வந்த போது அக்னிதேவனிடம் செய்துகொடுத்தச் சத்தியத்தையும் நான் மறக்கவுமில்லை,
இன்றுவரை அதனை மீறியும் நடக்கவில்லை. அன்று மன்னர் செய்த சத்தியத்தை மன்னருக்கு
நிணைவு படுத்த வேண்டுமா?.
“நம்முடைய திருமணத்தையும்
நான் மறக்கவில்லை அன்று அக்னிதேவனிடம் உன்னுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு ஏழு
முறை வலம் வந்த சமயம் செய்த சத்தியத்தையும் மறக்கவில்லை. உனக்கு அன்று நான் செய்த சத்தியத்தை இன்றுகூட
என்னால் சொல்லமுடியும்.
ஒவ்வோரு நாளும் இவ்வுலகைச் சுற்றிவந்துகொண்டு இவ்வுலகில் நடக்கும் சகல
காரியங்களுக்குக் சாட்சியாக இருக்கும் அக்னிதேவனே, இன்று முதல் என் வாழ்நாள் வரை,
இன்று என் கரம் பற்றி, என்னுடன் உன்னைஏழு முறை வலம் வரும், இந்தப் பெண்ணின் சகல
சுக, துக்கங்களையும் என்னுடைய சுக, துக்கங்களாக ஏற்று, இந்தப் பெண்ணிற்குக்
என்னால் மட்டுமின்று, வேறு எந்த வகையிலும், யாராலும் எந்தக் கஷ்டமும் ஏற்படாமல்,
என் வாழ் நாள் உள்ளவரைக் காப்பாற்றுவேன்.
இந்தப் பணியில் எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் நான் முழு மனத்துடன்
அவைகளயெல்லாம் எதிர்த்துப் போராடுவேன்”
என்று நான் சத்தியம் செய்துள்ளேன்.
இது உன்
நினைவிலும் இருக்கும் என்பது நிச்சயம்” என மன்னர் உறுதியாகக் கூறினார்.
மன்னரின் வாதத்தைக் கேட்ட
மகராணியார், குனிந்த தன் தலையை நிமிர்த்தாமலேயே சபைக்கு உரைப்பதுபோல்,
மன்னருக்கும் பதில் சொன்னாள். “நானும்
எனக்கு நடந்த திருமணத்தையும், மன்னருடன் கரம் பிடித்து அக்னிதேவனை வலம் வந்து
அக்னிதேவன் சாட்சியாக கணவரின் சகல தர்மங்களையும் அனுசரித்து, என் பெண்
தர்மத்தையும் மீறாது, என்னாலோ, என் செயல்களாலோ, சேர மன்னருக்கோ, அவர் பரம்பரைக்கோ
சேர நாட்டிற்கோ எந்தவித அவப்பேரும் இல்லாது, என் தனி இச்சைகளுக்கோ,
ஆசாபாசங்களுக்கோ இடம் கொடாது இருப்பேன் எனச் செய்த சத்தியத்தையும் மறக்காமல்
இன்றுவரை கடைபிடித்துத்தான் வருகிறேன். எனக்கும் நம் செல்வம் என் ஊணிலும்
உயிரிலும் உதித்தவன். என் கருவிலேயே அவன் வளரும்போதே சீரோடும் சிறப்போடும் இந்த
பூவுலகில் உதிக்க நான் செய்த விரதங்களும்,
பூஜைகளும் மன்னரும் அறிந்ததுதானே
ஆனால், விதி செய்த சதியோ, மன்னரின் தமிழ்ப் பற்று விளவித்த செயலோ, என் மகனுக்குத்
தாய் செய்யவேண்டிய கடமைகளையும் தடுக்கப்பட்டுவிட்டது. என்னிடமிருந்து என் மகனைப் பிரித்தது
யார்? மன்னர் சொன்னார் “தனக்கு உரிமையான
வாரிசானத் தன் ஓரே மகனை தான் வணங்கும் குருவான பாணருக்கு, அவர் இயற்றிய தமிழ்ப்
பாடலுக்குப் பரிசாக முழு மனதுடன் தானமாகக் கொடுத்ததாகவும், அதற்கு தனக்கு முழு
உரிமை உள்ளது என்றும் கூறினார். மன்னர்
சொல்லியபடி அவருக்குமட்டும் தான் சேர இளவல் குட்டுவன்சேரல் மகனா? எல்லா மறைநெறி நூல்களிலும் சொல்லப்பட்ட உண்மையை
மன்னர் மறந்து விட்டாரா? :மாதா, பிதா,
குரு, தெய்வம் “ என்ற தெய்வவாக்கு அழிந்துவிட்டதா? மன்னரும் பாணரும்
மறந்துவிட்டார்களா?
உலக வாழ்வைத் துறந்து துறவறம் பூண்டு, காவி உடையணிந்து, பகவான் திருவடியன்றி
வேறு எந்த சிந்தனையும் இல்லாது, மக்களிடையே நல்ல ஒழுக்கங்களையும், வாழ்வின்
நெறிமுறைகளையும் பரப்பும் சன்யாசிகளுக்கும் தாயின் உறவோ, தாய்க்குச் செய்யவேண்டிய
கர்மாக் கடமைகளோ மறுக்கப்படவில்லை.
இதிலிருந்தே பூமியில் பிறக்கும் ஒவ்வோரு ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவுகளில்
“தாய்மைக்குத்தான்” முதல் இடம் என்றும், என்றும் எந்தச் சூழ்நிலையிலும் தாயையும்
சேயையும் பிரிப்பது பஞ்சமா பாதகம் என்பதும் தெளிவாக வில்லையா? மன்னர் தன் கூற்றில் தான் செய்த தானத்திற்கு
தன் மனைவியும் கட்டுப்படவேண்டும் என்று கூறினார்.
எந்த தானமோ, தர்மமோ இல்லற தர்மம் காப்பவர், தன் மனையாளின்
கரம்பிடித்துத்தான் செய்யவேண்டும். ஆனால்
மன்னர் செய்த தானமோ தன்னிச்சையாக, எனக்குத் தெரியாமல் என் சம்மதமின்றி
செய்யப்பட்டதொன்றாகும். என் சம்மதம்
கேட்காமலும், எனக்குத் தெரிவிக்காமலும் செய்த ஒரு தானத்திற்கு நான் எப்படி
கட்டுப்படமுடியும். தானம் வாங்கியவராவது,
இது ஒரு தாய்க்குத் தெரியாமல் செய்யும் தானம் முறையற்றது என மன்னரிடம் உரைத்து,
தர்மப்படி நடந்தாரா?
தமிழ் மக்கள் மிக மிக நன்றாக
அறிந்த ஒரு மகா மன்னரின் சரித்திரத்தை நான் இப்பொழுது இந்தச் சபைக்குச்
சொல்லவிரும்புகிறேன்.
ஆண்டுகள் பல கடந்தாலும், மக்களின் நினைவைவிட்டு அகலாத ஒரு சரித்திர
சம்பவம். அரச தர்மத்திற்கும், நெறிதவறாத
ஆட்சிக்கும், தன்
நியாயச் சபைக்கு யார் வந்தும் தன் குறையைச் சொல்லி பரிகாரம் கேட்க வசதியாக தன்
அரண்மணை வாசலில் பெரிய ஆராய்ச்சி மணியைக் கட்டி வைத்து, தன் செங்கோல் மயிரிழையும்
சாயாது நீதி வழங்கிய மன்னருக்கில்லாம் மன்னரான சோழன் மனுநீதிச் சோழனின் கதைதான்.
ஒரு நாள் சோழனின் ஒரே மகன் சோழ இளவரசன் தன்னுடைய தேரில் ஏறி வேகமாக தன் தேரை
ஓட்டிக் கொண்டு வந்தபோது, அந்தத் தேரின் பின் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த்து
ஒரு சிறு பசுங்கன்று. அப்போதுதான் தாயின்
கருவிலிருந்து வெளி வந்து சரியாக நிற்கக்கூட இயலாத ஒரு கன்று. தன் வயிற்றிலிருந்து வந்த சில வினாடிகளிலேயே
தேர் சக்கரத்தில் சிக்குண்டு மாண்ட அந்தக் கன்றினைப் பார்த்து தாய் பசுப்
பரிதவித்து துன்பமிகுதியால்துடித்து, தன் கன்றின் மரணத்திற்குக் பரிகாரம் தேடி
அரண்மணை வாயிலில் கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மணியின் கயிற்றைத் தன் வாயால் கௌவி,
ஆட்டி ஓசை எழுப்பியது. ஓசையைக் கேட்ட
மன்னரும் மற்றவர்களும் அரண்மனையின் வாயிலுக்கு வந்து பார்த்தபோது, ஒரு பசு மாடு
கண்களில் கண்ணீர் தளும்ப, தன் ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டு இருந்ததைப்
பார்த்து திகைத்தான். அத்துடன் கோபமும்
அடைந்தான். என் ஆட்சியில் வாயற்ற இந்தப்
பசுவிற்கு என்ன தீங்கு ஏற்பட்டது, யாரால் என கூடியிருக்கும் மக்களைப் பார்த்துக்
கேட்டான். மக்களோ பசுவிற்குத் தீங்கு
இழைத்தவன் சோழ இளவரசன் என்று எப்படி மன்னரிடம் சொல்லுவதென்று பயந்து
நின்றனர். ஆனால் அங்கு இருந்த ஒரு அறியாப்
பாலகன் மன்னரின் முன் சென்று நடந்த சம்பவத்தைச் சொன்னான். விஷயம் அறிந்த மன்னனோ, தன் மகனைப் பார்த்து
“சிறுவன் சொன்னதெல்லாம் உண்மையா? என வினவ, நீதிமானுக்குப் பிறந்த மகனும் தான்
வேகமாகத் தன் தேரினை ஓட்டி வந்தபோது, தானும் அறியாமல் பின் சக்கரத்தில் ஒரு சிறு கன்றுகுட்டி
சிக்கி மரணமடைந்தது. எனினும் தாய்ப்
பசுவின் துன்பத்திற்குத் தானே காரணம் என்றும் ஒப்புக்கொண்டு, மன்னரின்
தண்டணைக்குக் கட்டுப்படுவதாகச்
சொன்னான். உடனே மன்னர் மகனுடைய
தேரிலேயே ஏறி, தன் மகனை சக்கரத்தின் கீழ் தலையைக் கொடுக்கச் செய்தான். அந்த மாதிரி
நீதி பரிபாலனம் செய்த தமிழ் மன்னர்களின் காலத்திலும் தன் மணைவிக்கும்,
புத்திரனுக்கும் அநீதி செய்த மன்னர்களும் இருக்கிறார்கள்.
என் மகனைத் தானமாகக் கொடுத்த நாள் முதல் இன்றுவரை மன்னரின் முகத்தைப்
பார்க்காமலும், எனக்கு நானே தண்டனைக் கொடுத்துக் கொண்டு, அரன்மணையின்
அந்தப்புரத்திலேயே வாசம் செய்து வருகிறேன். என் மகனுக்கு கிடைக்காத எல்லாச் சுகங்களையும் துறந்து, கணவர் உயிருடன்
இருக்கும்போதே கைம்மைக்கோலம் போட்டுக் கொண்டு, தனிமையாகவே வாழுகிறேன்.
காலக்கிரமத்தில் என் மகனுக்கு
அவன் பிறப்புரிமைகள் கிடைக்குமென்று பொறுமையாகத்தான் இருந்தேன். ஆனால், என் மகனுடைய அரசு உரிமையைப் பரிக்கும்
வகையில் அவனை நாடு கடத்தும் உத்திரவு மன்னரின் வாயால் வந்தபின்பும். என்
தாய்மையின் உரிமையும், என் மகனின் அரசு உரிமையும் நிலைநிறுத்த வேண்டிய
நிலையில்தான் இங்கு இந்த வழக்கை முன் வைத்தேன்.” என மகாராணியார் சொல்லி
முடித்தார்.
மன்னரோ சபையை நோக்கி, “நான்
தகுந்த காரணமின்றி, ஆராயாமல் தண்டனை வழங்கவில்லை.
அவன் என் மீது காரணமின்றி தாபம் கொண்டு, சேர நாட்டு பொக்கிஷங்களை கொள்ளையடித்தான். நாட்டில் சட்ட ஒழுங்கு முறையைக் கடை பிடிக்கத்
தவறி விட்டான். அவனுக்கு மட்டுமல்ல,
அவனுடன் சேர்ந்து சதியில் ஈடு பட்ட மற்றோருவனான யவன்நாட்டு வீர்ன் கிலேசியஸுக்கும்
நாடு கடத்தும் உத்திரவும், அவனை இனி சேர எல்லையில் கண்டால் சேர வீர்ர்களால் தலைசீவப்
படுவான் என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளேன்.
என் தீர்ப்பில் பாராபட்சம் கிடையாது.
என் மகனாலும், வெளி நாட்டவனானாலும் ஒன்றுதான். இதில் மாற்றம் இல்லை” என்றான். மேலும், மகாராணியார் உதாரணமாகக் கூறிய சோழ
மன்னரின் நீதிக்கு என் நீதியும் சரிசமானதுதான்.
இது மகாராணியாரின் தாய் மனதிற்குப் புரியவில்லை.” என்றார்.
மன்னரின் கூற்றை மறுத்த,
மகாராணியார் “மன்னர்பிரான், நான் சொன்ன வரலாற்றில் தனக்குச் சாதகமான ஒரு
விஷயத்தைமட்டும் புரிந்து கொண்டார்.
என்னுடைய வாதமே, வாய் பேச முடியாத ஒரு தாய்ப் பசுவின் தாய்மை ஏக்கத்தைப்
புரிந்துகொண்டு, அறிந்தோ, தன் கண் பார்வையில் படாது, தீடீரேன்று துள்ளி வந்த ஒரு
கன்றின் மரணத்திற்குக் காரணமாகிய அந்தச் சோழ இளவலுக்கு தானே மரண தண்டணை
அளித்தான். அதில் அவன் நீதி மட்டுமல்ல,
அவனால் மதிக்கப்பட்ட்த் தாய்மையும் இருந்தது.
வாய்பேச முடியாத ஒரு தாய்ப்பசுவின் மனதை சோழ மன்னரால் உணர முடிந்தால்,
உயிரோடும், உணர்வோடும், உடலாலும் ஒன்றுபட்டு தன்னோடு வாழும் தன் மனைவியின் தாய்மைத்
துடிப்பை மன்னர் உணர வில்லையே?. தனக்கும்,
தன் மனைவிக்கும் பிறந்த அரசின் உரிமையான வாரிசைக் காக்காத மன்னர், தன் மக்களுக்கு
என்ன பாதுகாப்பான வாழ்வுக்கு உறுதி கூறமுடியும்.” தன்னுடைய வாதத்தைத் தொடர்ந்தாள்
மகாராணியார். .
மகாராணியார், சபையைப்
பார்த்துக் கேட்டாள். “யவன நாட்டு வீரனை
இத்தணை நாட்கள் சேர எல்லைக்குள் இருக்க அனுமதித்த்தின் காரணம் என்ன? அவன் ஒரு முறை பாலகனாக இருந்த போது, மன்னருக்கு
குறி வைத்த குறுவாளைத் தன் முதுகில் தாங்கி, மன்னரைக் காப்பாற்றினான். அதன் காரணமாகத்தான், அவனை உயிருடன்
விடுகிறீர்களா?”
மன்னரோ “அவன் தாய்க்கு நான்
வாக்குக் கொடுத்திருக்கிறேன் அவன் உயிருக்கு நான் பாதுகாப்பாக இருப்பேன்
என்று. அதனால்தான் என்னால் அவனுக்கு மரண
தண்டனை அளிக்கமுடியவில்லை.”
“ஒரு தாய்க்குக் கொடுத்த
வாக்கைக் காப்பாற்றி விட்டீர்கள். அதேபோல்
என் மகன் பிறந்த அன்றும் அவனைத் தூக்கிக் கொண்டு, என்னிடம் நம் மகனை எல்லாக்
கலைகளிலும் வல்லவனாக்கி, எனக்குப் பின் சேர வம்சத்திற்கு நல்ல வாரிசாகவும், சேரன்
புகழ் தமிழ் நாடு மட்டுமின்றி, அக்கம் பக்கத்து நாடெல்லாம் பரவ புகழும் வீரமும்
மிக்க அரசனாகத் திகழச் செய்வேன்” என்று என் தலை மீது கைவைத்துத்தான் சத்தியமும்
செய்தீர்கள். ஆனால் இன்று உங்கள் சத்தியம்
என்னவாயிற்று? ஒருவன் தவறு செய்யத் தூண்டுபவர்களும்
குற்றவாளிகள்தான். என் மகன் அரசுக்கு
எதிராக செயல்படத் தூண்டியது மன்னரும், பாணரும்தான். அவன் ஜீவாதார உரிமைகளை பரிக்க
உங்களிருவருக்கும் என்ன உரிமை உள்ளது.
உரிமையை இழந்த சிறு வயது பாலகனின் கோபம் பெரியத் தீயாக அவன் உள்ளத்தில்
கொழுந்துவிட்டு வளர காரணம் என்ன. தன்னை
வளர்த்து, தன் பிறப்பின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டிய தந்தையே தன்னை
தானமாகக் கொடுத்த துன்பம் சொல்லுக்கு
அடங்குமா? அவனுக்கு உங்கள்மீதும், தன்
வளர்ப்புத் தந்தையான குருவின்மீதும் உள்ள கோபமே அரசின் சொத்தைக் கொள்ளையடிக்கத்
தூண்டியது. அதே சமயம், கிலேஸியசால் தன்
நாட்டின் கீர்த்தியும், சுதந்திரமும் பாதிக்கப்படும் என்று உணர்ந்தவுடன், மன்னரைச்
சந்தித்து, தன்னால் கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களையெல்லாம் மன்னரிடம் ஒப்படைத்து
விட்டான். மன்னரிடம் மன்னிப்பும்
கேட்டுவிட்டான். இன்று நாட்டை பிற நாட்டுச் சதியிலிருந்தும் காப்பாற்றி
விட்டான். நாட்டைக் காப்பது அவனின்
பிறப்புரிமை. அதை அவன் நிராகரிக்கவுமில்லை, தவறவிடவுமில்லை. அப்போதாவது மன்னர் தன்
தானத்தால் தன் மகனின் மனம் என்ன துன்பப்பட்டிருக்கும் என்று உணர்ந்தாரா?
இல்லையே. உணர்ந்திருந்தால், அவனைத் தன்
மகனாக திரும்ப ஏற்றுக் கொண்டிருப்பாரே?
அவர் எங்களுக்குமட்டும் துரோகம் செய்யவில்லை, இந்நாட்டுக்கும்,
மக்களுக்கும் உரிய அரச வாரிசை அவர்களுக்கு அளிக்கத் தவறிவிட்டார். தன் ஆட்சியில் குற்றம் செய்பவர்கள்
யாராயிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பது மன்னரின் வாக்கு. அப்படிப் பார்த்தால், இருவது ஆண்டுகளாக அவர்
செய்து வந்த தவறிற்கு என்ன தண்டனை? யார்
வழங்குவது?என ஆவேசமாகக் கேட்டாள்.
சபையோர் மட்டுமின்றி, குற்றம்
சாட்டப்பட்டுள்ள மன்னரும், பாணரும் பதில் சொல்ல வகையின்றித் தங்கள் தலையைக்
குனிந்துப் கொண்டார்கள்.
கடைசியாக, மகாராணியார், தன்
மகன் குட்டுவேல்சேரனைப் பார்த்து “மகனே, நீ குனிந்து என் திரைக்குள் வா”
என்றார். அறியாத வயதில் தாயைப் பிரிந்த
குட்டுவன்சேரல், தாயின் குரல் கேட்டு, தாய்ப் பசுவைத் தேடி ஓடும் கன்றுபோல் துள்ளி
ஓடினான். திரைக்குள் தன் தலையை விட்டு,
உள்ளேச் சென்று, தன் தாயைக் இரு கரங்களாலும் கட்டிக்கொண்டு, தன் இருவது வருட பிரிவையும்,
ஏக்கத்தையும் ஒரே அனைப்பில் தீர்த்துக்கொள்ளத் தீர்மானித்தவன்போல் “அம்மா..அம்மா”
வென்று குரலெல்லாம் பிளிர, வார்த்தையறியாத பாலகன் போல் ததும்பினான்.தாயோ மகனைக்
கட்டிக்கொண்டு, தன் உணர்ச்சிகளை அடக்க முடியாது தவித்து, அவளும்
“மகனே..குட்டுவா என் செல்வமே, என் கண்ணே,
உயிரே எங்கே உன்னைப் பார்க்காது அந்தப்புரத்திலேயே மரணமடைந்துவிடுவேனோ என்று
துடித்துக் கொண்டிருந்தேனடா. இன்று
உன்னைப் பார்த்துவிட்டேனடா. உன் மடியிலேயே
என் உயிர் பிரியவேண்டுமடா. என் ஜன்மம்
போதுமடா. இனியும் உன்னைப் பிரிந்து இருக்க
என் உயிர் தாங்காதுடா” எனப் பலவாறு துக்கத்தினால் வாய்விட்டுக் கதறினாள். இருவரின்
கலக்கமும், கண்ணீரும் மக்களையும் தொட்டுக்கொண்டுவிட்டது. மக்களும் தங்களின் வேதனையை வார்த்தைகளால்
சொல்லமுடியாது, துன்பப்பட்டு பெரிய குரலில் கதறினார்கள். பாணரின் குடிலே ஒரு வரையருக்கமுடியாத
துன்பக்காற்றால் சூழப்பட்டிருந்தது. சபையே
ஒரு மயான மாளிகையாகியது.
குட்டுவன்சேரல் இறுதியாகத் தன்
தாயாரைப் பார்த்து, “அம்மா, என்
தகப்பனார்தான் என்னைத் தானம் செய்தார்.
ஆனால் நான் என்றும் என் பெற்றோரைத் தானம் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் இந்த சேர
மன்னின்மைந்தன். இந்த பிறப்புரிமையை நான்
யாருக்காகவும், என்றும், எப்போதும் இழக்க விரும்பவில்லை. ஆனால், நான் முதலில் ஒரு சேர நாட்டுக்
குடிமகன். மன்னரின் சொல்லுக்கும்,
நீதிக்கும் கட்டுப்பட்டவன். மேலும் எனக்கு
அரசனாகவேண்டும் என்ற ஆசையுமில்லை. உலகில்
எந்த மூலையில் வாழ்ந்தாலும், என் எண்ணமெல்லாம் சேர நாட்டு நலனில்தான் இருக்கும். நான் இந்த நாட்டு எல்லைக்கப்பால்தான்
இருப்பேன். யாருடைய ஆதிக்கத்துக்கும் ஆட்படாத
அலைகடல்தான் என் வாசம். கடலிலிருந்தே சேர நாட்டின் பாதுகாப்பிற்கு வேண்டிய அத்தனை
ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன் இனியும்
நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து இருக்க வேண்டாம். என்னுடன் வந்து விடுங்கள். நான்
உங்களை ஒரு கடல் மகாராணியாக வைத்துக்
கொள்வேன். தயவு செய்து, அரண்மனை வாசத்தை விட்டு, கடலில் வாழ வாருங்கள். அங்கு உங்களையும், என்னையும் பிரிக்க யாரும் வர
மாட்டார்கள், நானும் யாரையும் அனுமதிக்க மாட்டேன். இனியும் உங்கள் மகனைக் கலங்க விடாதீர்களம்மா.”
எனக் கூறிய படியேத் தன் தாயாரின் கரங்களைப் பற்றிக் கொண்டான்.
மகாராணியார், சபையைப் பார்த்து “எனக்கு
வேண்டிய நியாயத்தை என் மகன் இன்று இங்கு வழங்கிவிட்டான். சேர மக்களே, இன்று முதல் நானும் என் மகனுடன்
இந்நாட்டு எல்லையை விட்டு, என் மகனுடன் போகிறேன்.
என் முடிவுக்கு யாரும் காரணமில்லை.
யாரும் துன்பப்படவேண்டாம். வாழ்க
சேர நாடு, சேர மன்னர், சேர மக்கள்” என்று கூறி விட்டுத் தன் மகன் கையைப்
பிடித்துக் கொண்டு, சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டுப் புறப்பட்டாள் ஒரு உத்தமத்
தாய்.
தங்களை விட்டுப் போகும்
மகாராணியாரையும், இளவரசனையும் பார்த்து மக்கள் துன்பமிகுதியால் கண்ணீர் ஆறாகப்
பெருக்க, சிலையாக நின்றார்கள். பிறகு மக்களெல்லாம் ஒரே குரலில் “மன்னர் நீதி தவறி
விட்டார். சேர நாட்டு இளவரசையும்,
மகாராணியாரையும் சேர நாட்டைவிட்டுப் போவதைத் தடுக்க வேண்டும். மன்னரின் தீர்ப்பை மாற்ற வேண்டும். மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று பாணரின் குடிசையே அதிர
பெருங்குரலோடு கூச்சலிட்டார்கள். மக்களின் எதிர்ப்பைக் கண்ட மன்னரோ செய்வதறியாது
திகைத்து நின்றார். மக்களின் எழுச்சியைக் கேட்ட, சேர இளவல் மக்களை நோக்கி, “என்னருமைத்
தாய் நாட்டு சேர மக்களே, உங்கள் வேதனையும், துடிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால், மன்னரோ, அவர் கூறும் தீர்ப்ப்புக்களோ
உறுதியானது. ஒருமுறை மன்னரின் வாயிலிருந்து வந்த ஆணைகள் திரும்பவும் மாற்றுவது
மரபல்ல. மேலும் நான் தீர்மானமாகவே
சொல்லியிருக்கிறேன் எனக்கு ஆட்சிபீடமோ, அரசு சுக போகங்களோ தேவையில்லை. நானும், இரகு குலதிலகமாகத் திகழும் தசரத
புத்திரனான ஸ்ரீராமனைப் போல் தந்தை சொல் மாறாதவன். அதனால்தான், மன்னரை சந்தித்து நான்
கொள்ளையடித்தப் பொக்கிழங்களை எல்லாம் அரசரிடம் திருப்பிக் கொடுத்தபோது, எனக்கு
அரசு உரிமை வேண்டுமென்றோ, திரும்பவும் என்னை தன் மகனாக ஏற்க வேண்டுமென்றோ கேட்கவில்லை. அதனால், நீங்கள் உங்களின் அரச விஸ்வாசத்தைக்
காட்ட, மன்னரின் தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று கூச்சலிடக்கூடாது. மாறாக, என் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பது
உண்மை என்றால், என்னையும் என் தாயாரையும் செல்லுவதற்கு வழி விட வேண்டும். இன்று போல் என்றும் மன்னருக்கும், சேர
ஆட்சிக்கும் மக்களின் முழு ஆதரவு இருக்க வேண்டும். என் கண்கள் எப்போழுதும் சேர நாட்டின் மீதுதான்
இருக்கும். அதனால், மக்கள் என்றும்
துன்பப்பட்த் தேவையில்லை. எங்களுக்கு
தயங்காது அனுமதி கொடுங்கள்” என்று பரிவாகக் கேட்டான். பிறகு தன் தாயுடன் குடிலின் வாயிலை நோக்கிச்
சென்றான்.
தன்னுடைய தமிழால் ஒரு நாட்டு மகாராணியாரும், இளவரசனும் நாட்டைவிட்டுப்
போவதும், மக்கள் இத்தனைப் பாதகங்களுக்கும் “நீயும், உன் தமிழும்தானே காரணம்” என்று
வாயால் இடித்துரைக்காது, தங்களின்
கண்ணீரால் பாணருக்குச் சுட்டிக் காட்டுவதுபோல் பாணரும் உணர்ந்த்தால், தன் தலையைக் குனிந்துகொண்டு, தன் கண்ணீரை
துடைத்துக் கொண்டார்.
மன்னரோ, தனக்கு எதிராக திரண்டு
எழுந்த மக்களின் வெறுப்பையும், வேகத்தையும் தன் மகனின் திடமான பேச்சாலும், தான்
எடுத்த முடிவில் உறுதியாக நின்றதன்றி, தன்னுடைய தீர்ப்பும், முடிவும் மாற்றக்கூடாத
ஒன்று என உறுதியாக மக்களிடம் சொல்லி, தன்னையும் பழிச் சொல்லிலிருந்து காப்பாற்றிய
விவேகத்தையும் உணர்ந்த மன்னன், தன் மனைவிக்கும், தன் மகனுக்கும் மட்டுமல்ல, தன்
நாட்டு மக்களுக்கும் தன் தானமும், தீர்ப்பும் எத்துனை பாதக மானது என்று
உணர்ந்தாலும், மகனின் விருப்பத்திற்கு மீறி ஏதும் செய்ய வகையின்றி, பேசவும் வார்த்தையின்றி,
சிலையாகி நின்றுவிட்டார்.
*********** ********** ******
ஆசிரியரின் பின் குறிப்பு
பிரபலசரித்திர நவீனங்களின் நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்தின் நாகரீகம்,
ஆட்சிமுறை, மகாராஜாக்களின் சிறப்பு குணாதிசயங்கள், அன்றைய ஆட்சி முறையில் இருந்த
நீதி முறைகள், அன்றைய கட்டிடங்கள், நீர்நிலைகள், மலை, காடுகளின் அமைப்புக்கள்,
அக்கால கற்கோயில் சிற்பங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றிய அரிய பல விவரங்களை தன்
சரளமான தமிழால், பாமர மக்கள் முதல் சரித்திர ஆராய்ச்சி
மாணவர்கள் யாவருக்கும் மிகமிக எளிதாக புரிந்து அனுபவிக்கத் தக்கதாக
இருக்கும். அத்தகைய நவீனங்களைத் தேடித்
தேடி படித்து சொல்லால் சொல்ல முடியாத சுவைகளை அனுபவித்து வந்துள்ளேன். என் 15 வயதுமுதல், சரித்திர நவீனங்களின் பிதா
மகனராகிய பல எழுத்துப் பிரம்மாக்களில், மறைந்த மா மேதை திருவாளர் சாண்டில்யன்
அவர்கள் காலத்தால் மறக்க முடியாதவர்.
அவரின் அத்தனை சரித்திர நாவல்களையும், சென்ற சில ஆண்டுகளாக சேகரித்துப்
பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன். என்
முதுமைக் காலத்தில், அவரின் படைப்பபுக்கள்தான் என் நண்பர்கள். என் பேரன் பேத்திகள் என்னை :என்ன பாட்டி
எப்போழுதுமே சாண்டில்யன் கதைகளை மட்டுமே படித்துக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு
அலுக்க வில்லையா? எனக் கேட்கும்படித்தான் இருக்கிறேன். ஆனாலும் போதும் என்ற மனநிலை ஏற்படவில்லை.
சமீபத்தில், அவரின் படைப்புகளில்
ஒன்றான “கடல் வேந்தன்” என்ற சேரமன்னர் செங்குடிடுவனின் காலக் கட்டத்தில் நிகழ்ந்த
ஒரு வரலாறு கதையாகத் தீட்டிஉள்ளார். அதில்
தன் குருவான பாவலர் பாணரின் தமிழ்ப் புலமைக்குக் ஆட்பட்டுத் தன் ஒரே மகனும்,
தனக்குப் பின் சேர சிம்மாசனத்தில் அமர உரிமையுள்ளனுமான தன் ஐந்து வயது பாலகனைத்
தானமாகக் கொடுத்த சம்பவம் விவரிக்கப்படட்து. கதையில் ஓரிடத்தில்கூட சேர
மகாராணியாரைப் பற்றிச் சொல்லவில்லை.
இக் கதையைப் படித்தவுடன் என்
உள்ளத்தில் ஒரு பொறி ஏற்பட்டது. உலகில்
எங்கு பிறந்தாலும், எந்த தேசமானாலும், உயர் பிறப்பானாலும், கீழ்ப் பிறப்பானாலும்,
தாய் என்பவளின் உணர்வுகள் ஒன்றுதானே.
அறியாப் பருவத்தில், தன் சம்மதமின்றி, தன் கணவரால் தனக்குப் பிறந்த ஒரே
குழந்தையைத் தானமாக கொடுத்தது .அறிந்த்தும் அவளில் தாய்மைத் துடிப்பும்,
வேதனைகளும் என்னைச் சூழ்ந்து கொண்டன. என்
சிறு கற்பணையில் தாயின் துடிப்பை வெளிப் படுத்தும் வகையில் என் உணர்ச்சிகளின்
வடிவங்களே ஒரு சிறு கதையாக உருவாகியது.
இதை தமிழ் வாசகர்களின்
பார்வைக்கும், அமரர்திருவாளர் சாண்டில்யனின் நினைவுகளுக்கும் என் அஞ்சலியாக
சமர்ப்பிக்கிறேன்.