Friday, 26 May 2023

வர்ணம் கருப்பு.

 

-“வர்ணம் – கருப்பு”-

(ஜெயரமணி)

மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்த சாந்தா, தன் வீட்டில் இருள் சூழ்ந்திருந்ததைப் பார்த்து, உள்ளே வந்து விளக்குச்  சுவிட்சைப் போட்டாள்.. அங்கே அவளுடைய அப்பா ராஜாராமன்,  தலையை மேஜையின் மீது கவிழ்த்துக் கொண்டு, துக்கத்தால் விம்மிக் கொண்டிருந்தார்.  அவரின் கையில் இருந்த உரையைப் பார்த்தவளுக்கு தந்தையின் துக்கத்திற்குக் காரணம் புரிந்து விட்டது.  அதனால் மெதுவாக அப்பாவின் அருகில் போய் அவருடைய கையில் இருந்த உரையை எடுத்துக் கீழே போட்டாள்.  தன்னைத் தொட்ட பெண்ணைப் பார்த்தவரை “எதற்கு அப்பா இப்படி வருத்தப்படுகிறீர்கள்?  நமக்குத் தெரிந்தவைதானே.  ஒவ்வொரு முறையும் என்னை ஒருவர் பார்க்க வருவதும், பிறகு என்னுடைய குறையைச் சொல்லி, தங்களுக்கு பிடித்தமில்லை என்று தெரிவிப்பதும், நமக்குப் புதியதா? நானும் எத்தனை தடவைகள் உங்களிடம் வேண்டாம் இந்த பரீட்சை எனச் சொல்லியும், நீங்கள் கேட்காமல் என்னையும் கஷ்டப்படுத்துகிறீர்கள். உங்களுக்கேத் தெரியும் நான் என்னுடைய விருப்பம் இல்லாமல்தான், உங்களின் மனம் கஷ்டப்படக்கூடாதென்று இந்த நாடகத்தில் மேடை ஏறி நிற்கிறேன்.  நாடகம் முடிந்தவுடன் நான் அதை மறந்து விடுகிறேன்.  ஆனால், நீங்கள்தான் ஏதோ ஒரு மாயம் நடக்குமென கேளுங்கள். போதும் எனக்கும் மனம் மரத்து விட்டது.  ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்க ஒருவரை தரகர் கூட்டி வருவதும், நானும் புடவைகளை நிறம் மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்டு, அவர்களை நமஸ்கரிப்பதும் எத்தனை வேதனையாக இருக்கு தெரியுமா?  எனக்கும் கன்னிப் பருவம் போய் விட்டது.  நானும் முதிர்கன்னியாகி விட்டேன்.  கிட்டத்தட்ட பத்து வருட காலத்தில், எத்தனை பேர்கள் வந்தார்கள்.  ஒருவருக்கும் கூட என்னுடைய நிறம் பிடிக்கவில்லையே அப்பா.  நான் என்ன செய்வது?  என்னுடைய புடவைகளின் நிறத்தைத்தான் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது. ஆனால், என்னுடைய தோலின் நிறத்தை மாற்ற முடியவில்லையே”.  எனச் சொல்லி, வருத்தப்பட்டாள்.       

   மகளின் துன்பத்தைப் பார்த்தவரும் “என்ன செய்வதம்மா, நான் உன்னைப் பார்க்க வருபவர்களிடம் உன்னுடைய மற்ற எல்லாத் திறமைகளையும் சொல்லுகிறேன்.  அவர்களுக்கு உன்னுடைய படிப்பு, பட்டம், நீ பார்க்கும் வேலை, நமக்கு இருக்கும் சொத்து விபரம், நீ என்னுடைய ஒரே பெண் என்கிற எல்லாம் பிடித்திருந்தாலும், உன்னுடைய மேல் தோலின் நிறத்தைக் கண்டு, பின்வாங்கி விடுகிறார்கள்.  வருபவர்களில் ஒருவருக்காவது, நிறம் என்பது ஆண்டவனாக அளிப்பது, நாம் கேட்டு வாங்குவது இல்லை என புரியவில்லையே” எனப் புலம்பினார்.                         “அப்பா, நீங்கள் பேசுவது நமக்குச் சரியாக இருக்கும்.  ஆனால், அவர்களின் கண்களுக்கு?  ஏனப்பா, கடையில் போய் வாங்கும் பொருளையே எத்தனை வகையாகத் தரம் பார்த்து வாங்குவோம்.  அந்தப் பொருட்களையெல்லாம், நாம் ஆயுளுக்கும் வைத்துக் கொள்ளுவதில்லை.  அப்படி இருக்கும்போதே, நாம் தேர்ந்தெடுக்கும் பொருள் நமக்குப்பிடித்து இருக்கா எனத்தானே பார்க்கிறோம்.  அதிக விலை கொடுத்தாவது, பளிச்சென்று, வசீகரமாக இருப்பதைத்தானே வாங்குவோம்.  அப்படியிருக்க, வாழ் நாள் பூராவும் இணைந்து வாழ ஒரு பெண்ணைத் தேரந்தெடுக்கும்போது, கண்ணுக்கு நிறைவான வெளித் தோற்றத்தைத்தானே பார்ப்பார்கள்.  மாறாக, படிப்பு, வசதி, சொத்து எனப் பார்த்து வரனும்னு நாம் ஆசைப் படலாம். ஆனால் அது நடக்குமா?  நம் வீட்டில் ஒரு பையனுக்குப் பெண் பார்த்தால், நாமும் அதைத்தானே முதலில் பார்ப்போம். குறை நம்மிடம்தான் இருக்கு.  நான் சிலரைப் போல் சிகப்பாக, கண்ணுக்குப் பளீரென இல்லாதது என்னுடையதோ, உங்களுடையதோ குற்றம் இல்லை.  ஆண்டவனின் செயல்.  அதனைக் குறை சொல்ல நமக்கு என்ன தகுதி?

                நீங்களே நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொருவரையும் ஆண்டவன் படைக்கும் போது அதற்கு ஒரு காரணம், பொருள் இருக்கும் என.  என்னையும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் பகவான் மற்றவர்கள் காணக் கூசும் நிறத்தில் படைத்து விட்டான்.  ஆனால், என்னுடைய நிறம்தான் குறையானதே தவிர, மற்றபடி என்னுடைய வாழ்க்கையில் எனக்கு என்ன குறை? நல்ல கல்வி கொடுத்திருக்கிறீர்கள், நல்ல பண்புகளைச் சொல்லி, என்னை பக்குவமாகத்தான் வளர்த்திருக்கிறீர்கள்.

 என்னைக் கேட்டால் என்னுடைய மனதில் திருமணம் என்கிற ஆசையே இல்லை. என்னுடைய பணியில் நான் மிகவும் சந்தோஷமும் திருப்தியும் அடைகிறேன்.  திருமணமானால், ஒரிரு குழந்தைகள் பிறக்கும். இப்போ, ஒவ்வொரு வருஷமும் என்னைச் சுற்றி நாற்பதுக்கும்மேல் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் என்னை அன்புடனும் பாசத்துடனும் “டீச்சர், டீச்சர்” எனக் கூப்பிடும்போது, எனக்கு ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது.  என்னால், நிறைய பச்சிளம் பிராயக் குழந்தைகளுக்கு எழுதவும், படிக்கவும் சொல்லிக்கொடுத்து, நாளை அவர்கள் இந்த பாரதத்தை தாங்கும் தூண்களாகச் செய்ய முடியும்.  இனிமேலும், நமக்குக் கிடைக்காத ஒரு சின்ன ஆசைக்காக் ஏங்காதீர்கள்.  நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? நினைத்துப் பாருங்கள்.  என் மனதில் நன்றாக பதிந்து விட்டதப்பா.  ஆண்டவன் என்னை மற்றவர்களைப் போல், சின்னக் குடும்பம், திருமணம் என்கிற சிறைக்குள் வைத்து வாழப்படைக்கவில்லை.  மாறாக, இந்த சமூகத்திற்கு, என் நாட்டுக்கு என்னால் ஆன நல்ல செயல்களைச் செய்து பரந்த உலகில் நிறைந்த மனதோடு வாழும் ஒரு வாழ்க்கையை அளித்திருக்கிறார்.  மனம் தேறுங்கள். எழுந்து சாப்பிட வாருங்கள்” எனச் சொல்லிக் கொண்டு, உள்ளே சென்றாள்.

அப்போது அவர்கள் வீட்டுத் தொலைபேசி அடித்தது. எடுத்தவர் “சாந்தா” உனக்குத்தான் எனக் கொடுக்க, சாந்தாவும் வாங்கிப் பேசினாள்.  அவள் பதிலாக “எந்த ஆஸ்பத்திரி.” எனக் கேட்க, பதிலும்  கிடைத்தது, அவளும் தொடர்ந்து, “கவலை வேண்டாம்.  நான் இப்பவே கிளம்பி வருகிறேன்.  உங்களுக்கு எத்தனை பாட்டில்கள் இரத்தம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்.  நான் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்” எனச் சொல்லி விட்டு, அப்பாவைப் பார்த்து “அப்பா, என்னுடைய மேல் தோலைத்தான் ஆண்டவன் கருப்பாக வைத்து விட்டார்.  ஆனால், அதனுள் ஓடும் இரத்தமோ சிவப்பு நிறம்தான். இப்பவும், ஒரு சிறு பெண் விபத்தில் அடிபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.  அவளுக்கு உடனடியாக நிறைய இரத்தம் தேவைபடுகிறதாம்.  அதனால், ஆஸ்பத்திரியிலிருந்து என்னைக் கூப்பிட்டார்கள்.  இப்போ பாருங்கள், என்னுடைய இரத்தத்தின் நிறம் சிவப்பாக இருப்பதுடன், அதன் பிரிவும் எல்லார் உடம்புக்கும் ஒத்துப் போவதால், என்னால் எத்தனை பேருக்கு உயிர் காக்க உதவியாக இருக்க முடிகிறது. என்னுடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்குப்பா. நம்மால், இந்தச் சமுகத்திற்கு பாரமாக இல்லாமல், உபகாரமாக இருக்க முடிகிறதே, அதுவே சுகமானது.  நீங்கள் சாப்பிட்டு விட்டு, தூங்குங்கள், நான் பத்திரமாக வருவேன்” எனச் சொல்லிவிட்டு, தன்னுடைய ஸ்கூட்டரின் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

           அன்று ஒரு கல்லூரி பெண் கல்லூரிக்குப் போகும் வழியில், எதிரில் வந்த ஒரு இரு சக்கர வண்டியில் மோதி, பக்கத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் தூக்கி எறியப்பட்டாள்.  அங்கிருந்தவர்கள், உடனடியாக ஆசுபத்திரிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு செய்தியும் சென்றது.  விஷயத்தைக் கேட்டு பதறிக் கொண்டு வந்த, உறவினர்கள் ஆசுபத்திரியில் அங்கிருந்தவர்களிடம், “என் மகள் எங்கே இருக்கிறாள்.  நாங்கள் அவளை உடனே பார்க்க வேண்டும்.: எனப் பரபர்ப்புடன் விசாரிக்க, அங்கிருந்த ஒரு நர்ஸ் “அம்மா, உங்களின் மகளுக்கு தலையில் அடி பட்டதால், இரத்தம் நிறைய வீணாகி விட்டது. அவருக்குத் தக்க சிகிச்சை அளிப்பதற்கு முன், இரத்தம் ஏற்ற வேண்டும். அதற்காகத்தான், நாங்கள் உடனே இந்த ஊரில் இருக்கும் இரத்த வங்கி மூலம் ஏற்பாடு செய்து, ஒரு பெண்ணும், இரத்தம் கொடுக்க வந்திருக்கிறாள்.  நீங்கள் கொஞ்சம் அமைதியாக இங்கேயே இருங்கள்” எனச் சொல்லி விட்டு, உள்ளேச் சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.  அவள் அங்கிருந்தவர்களிடம் “அம்மா, உங்கள் பெண்ணிற்குத் தேவையான இரத்தம் கிடைத்து விட்டது. உடனடியாக உங்களுடைய பெண்ணிற்கு சிகிச்சையும் தொடங்கி விட்டது.” எனச் சொல்லி, மற்ற வேலைகளைச் கவனிக்கச் சென்று விட்டார்.

           ஓரு மணி நேரத்தில், உள்ளேயிருந்த வந்த சாந்தாவைப் பார்த்த நர்ஸ் “வாங்கம்மா,  உங்களைப் போல இரத்த தானம் செய்பவர்களின் உதவியால்தான், எங்களால் நிறையபேர்களின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது.  உங்களின் பணிக்கு ஈடு இனை கிடையாது” எனச் சொல்லிக் கொண்டே, “சாந்தா, இவர்கள்தான், நீ இரத்தம் கொடுத்த பெண்ணின் தாயார், சகோதரர், தகப்பனார்” எனச் சொல்லிக் கொண்டே, அங்கு கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த மூன்று பேர்களைச்சுட்டிக் காட்டி, அவர்களிடம் “அம்மா, இன்று உங்களின் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தவர் இந்தப் பெண்மனிதான்.  இவர் பெயர் சாந்தா. இங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.  இவர் தன் 18ஆம் வயதிலிருந்து, இன்று வரை, தேவைப் படுபவர்களுக்கு, தன்னுடைய இரத்தத்தை, எந்த பிரதி பலன் கருதாமல், தானம் செய்து வருகிறார்.  இப்படிப்பட்டவர்களால் இந்த உலகத்தில் தர்மம் நிலைத்து நிற்கிறது” எனவும் பெருமையுடன் சொன்னார்.

         ஆனால், சாந்தாவைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியுடன்,தங்களின் ந்நாகரீகமற்ற முடிவினால் நல்லதோரு பெண்ணின் மனதை வேதனைப் படுத்தி விட்ட்தையும் நினைத்து வெட்கமும் அடைந்தார்கள். நேற்றுத்தான் இந்தப் பெண்ணுடைய அப்பாவிற்கு, “உங்களின் பெண்ணை எங்களின் பையனுக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.  காரணம் உங்களுக்கே புரியும்” என  தெரிவித்ததையும் நினைத்து மிகவும் வெட்கினார்கள்.  சாந்தாவைப் பார்ப்பதற்குக் கூட அவர்களுக்கு முகம் இல்லை.  தயக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்த சாந்தா “அம்மா, நான் எப்பவும் செய்வதைத்தான் இன்றும் செய்தேன்.  கூடிய சீக்கிரம் உங்களுடைய பெண் குணமாக, நானும் வேண்டிக் கொள்கிறேன்.  கவலை வேண்டாம்” எனச் சொல்லி விட்டு, வீட்டிற்குத் திரும்பினாள்.

         மறு நாள் காலையில், தன்னை வேண்டாமென மறுத்தவர்கள், சாந்தாவின் அப்பாவைத் தேடி வந்து, “எங்களை மன்னித்து விடுங்கள்.  மேல் தோலின் நிறத்தை வைத்து, உங்களின் பெண்ணை நாங்கள் நிராகரித்து விட்டோம்,  ஆனால், நேற்றுத்தான் உங்களின் பெண்ணுடைய அருமைகளைப் புரிந்து கொண்டோம்.  இன்று எங்களுடைய பெண் எங்களுக்குக், உங்களுடைய பெண் கொடுத்த இரத்த தானத்தால்தான் எனத் தெரிந்து, எப்படிபட்ட ஒரு நல்ல பெண்ணை நிராகரித்து விட்டோம் என நினைத்து, வெட்கப் படுகிறோம்.  தயவு செய்து, நாங்கள் எழுதியதை மனதில் வைத்துக் கொள்ளாமல், உங்களுடைய பெண்ணை எங்களுடைய மகனுக்குத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக, முழு மனதுடன் சம்மதித்து வந்திருக்கிறோம். எங்களூடைய கோரிக்கை நிராகரித்து விடாதீர்கள்” எனச் சொல்லி, அவருடைய சம்மதத்தைக் கேட்டு காத்திருந்தார்கள்.   மகளுடைய சம்மதத்தை கேட்க உள்ளே போனவர், சிறிது நேரம் கழித்து மௌனமாக வந்தார்.  “அம்மா, என்னை மன்னித்து விடுங்கள்.  நான் இந்தக் கலியாண ஏற்பாடுகளை என் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகத்தான் செய்தேன்.  அவளுக்கு இஷ்டம் இல்லாமலேயே, எனக்காக அவள் ஒவ்வோரு முறையும், பெண் பார்க்க வருபவர்களுக்கு முன் வந்து நின்றாள்.  பத்து வருஷங்களாக என் வற்புறுத்தலுக்காக மௌனமாக இந்த பெண் பார்க்கும் நாடகத்தில் பங்கேற்றாள்.  ஆனால், நேற்று இரவே அவள் முடிவு செய்து விட்டாளாம். தன் வாழ் நாள் பூராவும், பொது மக்களின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவும், என்றும் என் மகளாகவே இருக்க.வும் தீர்மானமாக முடிவு செய்து விட்டாள்.  நானும் அவளின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இனிமேல் அவளைத் திருமணம் என்னும் கூட்டில்னடைத்து வைக்க வேண்டாம் எனவும் முடிவுக்கு வந்து விட்டேன்.   உங்களை நான் அவமானப்படுத்த வில்லை.  ஆனால், இனிமேல் என் பெண்ணை தனியாக ஒரு குடும்பம் என்னும் கூட்டில் சிறை வைக்க நான் விரும்பவில்லை.  அவளுடைய விருப்பப்படியே, அவளின் வாழ்க்கை இனிமேல் மக்கள் சேவைக்காத்தான்   இருக்கும்.” எனச் சொல்லி, வந்தவர்களை அமைதியாகப் போகச் சொல்லி விட்டார்.

            அவர் சொல்லியதைக் கேட்டபின்னரும், வந்திருந்தவர்கள் சாந்தாவிடம் நேரடியாகவே “அம்மா, நாங்கள் நேற்று செய்தது பெரும் பாவமம்மா.  வெளி வேஷத்திற்கு அடிமையாகி, நல்ல ஒரு பெண்ணின் மனம் நோக அப்படி ஒரு பதிலை போட்டிருக்கவும் கூடாது. ஏன், அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கவும் கூடாது.  இப்போதுதான் உன்னுடைய பொது நோக்கம் தர்ம சிந்தனையும் எங்களுக்குப் புரிந்த்து.  கையில் கிடைத்த வைரத்தின் மதிப்பறியாது நடந்து கொண்டு விட்டோம்.  மன்னித்து விடம்மா.  தயவு செய்து எங்களின் மனதின் மாற்றத்தைப் புரிந்து கொண்டு, உன் மனதை மாற்றிக் கொள்ளம்மா: என மிகமிக உருக்கமாக கண்களில் நீர் வழிய வேண்டிக் கொண்டார்கள்.  கூடவே வந்திருந்த மாப்பிள்ளைப் பையனும் அவளிடம் “சாந்தா, உன் வெளித்தோலின் நிறம்தான் குறையே தவிர, உன் மனம் பொன் போன்றது என்பதை நேற்றே நான் புரிந்து கொண்டேன். மறுக்காமல் திருமணத்திற்கு சம்மதம் சொல். இனி உன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க நான் என்றும் துணை இருப்பேன்” எனவும் பணிவுடனும் தன்னுடைய முந்திய செயலை நினைத்து மனவருத்தமும் தெரியச் சொன்னான்.

      அவர்களிடம் சாந்தா “தயவு செய்து மன அமைதி கொள்ளுங்கள்.  எனக்கு உங்கள் யார்மீதும் எந்த வருத்தமும் இல்லை.  என் மனதளவில் சராசரி பெண்களைப் போல இல்லற வாழ்விற்காக நான் என்றுமே ஏங்க வில்லை. சொல்லப்போனால் தனி ஒரு குடும்பத்திற்காக வாழாமல், உலகில் துன்ப்ப்படும் அத்தனை உள்ளங்களுக்கும் உதவியாக வாழத்தான் ஆசைப்படுகிறேன். என்வழியின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.  மேலும் இன்று நீங்கள் உங்களீன் பெண்ணின் சிகிச்சைக்காக நான் செய்த ஒரு சிறு உதவியை பெரியதாக எண்ணி, மனதை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.  நாளாக நாளாக என்னுடைய நிறமும் உங்களின் கண்களையும் மனதையும் உருத்த்த்தான் செய்யும். வேண்டாம் விஷப்பரீட்சை.  என் வழியில் என்னை வாழ விடுங்கள். உங்களின் மகளின் உடல் சீக்கிரம் குணமாக பகவானை வேண்டிக் கொள்வேன். தயவு செய்து அமைதியாக போய் வாருங்கள்: எனச் சொல்லி விட்டாள். அவர்களும் வேறு எதுவும் சொல்ல வழியின்றி மௌனமாகப் போய் விட்டார்கள்.   

தன்னுடைய மகளின் வாழ்க்கைக்கும் ஒரு காரணம் இருக்கு என்பதை உணர்ந்தவர், தான் இந்த சமூகத்திற்காக வாழும் ஒரு தியாகத்தீபத்தின் தகப்பன் என்கிற பெருமையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.  பெற்றதிலும், பெரிது உவக்கும் தந்தையாக, தன்னுடைய பெண் ஒரு தேவதை என நினைத்து, மகிழ்ச்சி அடைந்தார். அவரின் மனதில் பரந்தாமன் கண்ணனும் கருப்புத்தான்.  அதற்காக கண்ணனை வேண்டாமென யாராவது ஒதுக்குவார்களா?  இல்லையே.  இந்த உலகம் உள்ளவரையில் அவனின் புகழ் பாடாமல் யாரால் இருக்க முடியும்?.  என் மகளும் எனக்கு அந்தக் கண்ணனின் கருனைதானே? எனவும் மிகவும் மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டு ஆன்ந்தமடைந்தார்.  அவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்த்து.  

                  தனி ஒருவருக்காக வாழாமல் சமூகத்திற்காக வாழ்வதே பிறந்த்தின் நோக்கமாக இருக்க வெண்டும்.

Friday, 8 September 2017

இந்த வேலை வேண்டாம்

இந்த வேலை வேண்டாம்.
(ஜெயரமணி)
              காலையில் தன் ஆபிஸுக்குள் நுழைந்தவுடனேயே, சுதர்சன், தன்னுடைய தனி கேபினில் மிகவும் முக்கியமான ஒரு கடிதத்தை கம்பூட்டரில் டைப் செய்து முடித்தான்,அதை ஒரு முறை நிதானமாகப் படித்து விட்டு, உடனடியாக அதை தன்னுடைய மேலதிகாரிக்கு அனுப்பினான்.  கடிதத்தை அனுப்பிய பின்தான், அவனுடைய முகத்தில் ஒரு நிம்மதியும், சாந்தமும் வந்தது.  வழக்கம்போல் தன்னுடைய வேலையில் மூழ்கி விட்டான்.
              அந்த அலுவலகத்தின் பிரதம அதிகாரி, வந்தவுடனேயே, மெயிலில் வந்திருக்கும் செய்தியைப் படித்தவர், சில வினாடிகள் அதிர்ச்சியுடன் இருந்தார்..  தன் கண்களால் படித்த கடிதம், உண்மையானதுதானா எனவும் சில வினாடிகள் யோசித்துப் பார்த்தார்.  நிச்சயமாக, அது சுதர்சனின் தனி இ.மெயிலிலிருந்துதான் வந்திருந்தது.  உடனேயே, அவனைத் தன் அறைக்கு அழைக்கக்கூட தாமதிக்காமல், அவனுடைய கேபினுக்கே சென்றார்.  அவர், சென்றவுடன், அங்கிருந்து அவருக்கும், சுதர்சனத்திற்கும் நடந்த வாக்குவாதம். வெளியில் இருக்கும் மற்ற பணியாட்களில் காதுகளில் விழாவிட்டாலும், அவர்களுக்கிடையே காரசாரமாக வாக்குவாதம் நடப்பது நன்றாகத் தெரிந்தது.
அதிகாரி: சுதர்சன், உனக்கு எதுவும் பைத்தியம் பிடிக்கவில்லையே?
சுதர்சன்: அப்படி, ஒரு நிலை எனக்கு வருமுன் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
உனக்கு என்ன பிர்ச்சினை? நன்றாகத்தானே எல்லா வேலைகளையும் செய்கிறாய்.  உன்னுடைய படிப்பும், அனுபவமும் கொஞ்சம் நஞ்சமா? உனக்கு கிடைக்கும் வசதிகள் குறைவு என நினைக்கிறாயா? அல்லது வேறு எதாவது கம்பெனியிலிருந்து உனக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறதா?
அப்படியெல்லாம் இல்லை சார்.  எனக்குக் கொஞ்ச நாட்களாகவே, இப்படி நேரம், காலம், நாட்கள் என இல்லாமல், காலையிலிருந்து, நடு இரவு வரையில் ,  வேலையிலேயே மூழ்கி இருக்க முடியவில்லை.  என் மனதில் ஒரு பயமும் வந்து விட்டது. பணத்தை ஒன்றையே பிரதானமாக நினைத்துக் கொண்டிருந்தால், நான் இழக்கப்போவது மிகவும் அதிகமாகும்.  இழந்த என்னுடைய வாழ்க்கையை, என்னால், எத்தனை பணத்தைக் கொடுத்தும் வாங்க முடியாது.  அதனால்தான், சுய நினைவுடந்தான், இந்தக் கடிதத்தை இன்று உங்களுக்கு அனுப்பி வைத்தேன்.  கொஞ்ச நாட்களாகவே, உங்களிடம் நேரிலேயே சொல்லிவிடவும் இருந்தேன்.  ஆனால், ஒவ்வோரு நாளும், நீங்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும், உங்களுக்கு அடுத்தபடியாக, என்னை நீங்கள் சமமாக அதிகாரம் கொடுத்து

                                  ==2==
வந்ததையும் பார்த்து, மிகவும் தயங்கினேன்.  கடந்த இரு மாதங்களாகவே, என் மனதளவில் நான் இந்த வேலைபோறும். விட்டுவிடலாம் எங்கிற எண்ணத்தில்தான் இருந்தேன்.
அப்படி என்னதான் உன் பிரச்சினை.  என்னிடம் சொல்வதற்கு உனக்கு விருப்பமிருந்தால், வந்து சொல்  எப்படி இருந்தாலும், நான் ;உன்னுடைய கடிதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன். மாறாக, உனக்கு வேறு என்னமாதிரி வசதிகள் வேண்டுமோ, அதெல்லாம் உனக்கு உடனேயே அனுமதிக்கிறேன்.  நான் ;உன்னை, என் பிள்ளை மாதிரிதான் வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்ப நீ குழப்பத்தில் இருக்கிறாய்.  ஒரு வாரம்  வேண்டுமானால், லீவு எடுத்துக் கொள். நிதானமாக, யோசித்து, பிறகு நியே என்னிடம் வந்து, இந்தக் கடிதத்தை கிழித்து விடுங்களெனச் சொல்லுவாய். நானும் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்”எனச் சொல்லிவிட்டு, தன்னுடைய கேபினுக்குள் சென்று விட்டார்.
       வெளியில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  சுதர்சனுக்கும், அதிகாரிக்கும் இடையில் அப்படி என்ன ஒரு பிர்ச்சினை வந்திருக்கும் என யாராலும் ஊகிக்கவும் முடியவில்லை. ஒவ்வோருக்கோருவர் குழப்பத்துடனும், தங்களூக்குள் தோன்றியவைகளைச் சொல்லி, காலத்தைக் கழித்தார்கள்.
       பிரதம அதிகாரியின் அந்தரங்கச் தனிச் செயளரான சுபாஷினி, மெதுவாக சுதர்சனுடைய கேபினுக்குள் சென்றாள்.  அவளும், சுதர்சனும் பேசியது மிகவும் மெல்லிய குரலில் இருந்ததால், வெளியில் இருப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  வெளியில் கண்ணாடி வழியாகப் பார்த்த போது, இருவருக்கும் வாக்குவாதம் நடப்பதும், சுபாஷினி, தன்னால் இயன்ற வரையில், சுதர்சனுடைய முடிவுக்கு காரணம் என்ன எனக் கண்டு பிடிக்க முடியாமல் தவித்தாள்.  கடைசியில், மிகவும் வருத்தத்துடன், வெளியில் வந்தாள். 
              அடுத்த நாளும் சுதர்சனம் வந்தான்.  ஆனால், அவன் எடுத்த முடிவில் உறுதியாகவே இருந்தான்.  கடைசியில், சீப் அவனைத் அழைத்து, மிகவும் அந்தரங்கமாக தனி அறையில் வைத்துக் கொண்டு, அவன் ஏன் திடீரென இந்த வேலை விடும் முடிவில் இருக்கிறான் எனத் தெரிந்து கொள்ள விரும்பினார். தனி அறையில் அவனிடம்,
சுதர்சன், நீ சின்னக் குழந்தை இல்லை.  நீ இந்த நிலைக்கு வருவதற்கு, எத்தனை நாட்கள், எத்தனைக் கஷ்டங்கள் பட்டிருப்பாய் என எனக்கு நன்றாகத் தெரியும்.  காலேஜ் முடிந்தவுடனேயே, மிகவும் கஷ்டமான பொருளாதார நிலையில் இருந்த போதே, மிகவும் கவனத்துடனும், படித்து, மேல் நாட்டில் மேல் படிப்பும் முடித்து, அங்கேயே சில வருஷங்கள் வேலை செய்து, அனுபவத்துடந்தான், இங்கு வந்தாய்.  நீ, வந்தபோது, இந்தக் கம்பெனியும் மிகவும் சின்னதாகத்தான் இருந்த்து.  உன்னுடைய உறுதியான முயற்சியால்தான், இந்தக் கம்பெனி இன்று, உலகில் பேர் சொல்லும்படிக்கு வளர்ந்திருக்கிறது.  அப்படி, நீ ஒவ்வோரு நாளும் பார்த்துப் பார்த்து வளர்த்த இதை விட்டு, திடீரென எனக்கு இந்த வேலை வேண்டாம்,. நான் விலகிக் கொள்கிறேன் எனச்சொல்லுகிறாய்.  நீ வேறு எங்கும் வேலைக்கு போகப் போவதும் இல்லை என்றும் சொல்கிறாய்.  இந்த முடிவுக்கு காரணம் என்ன.
குடும்ப்ப் பிரச்சினை ஏதும் உண்டா? என்னை அதிகாரியாகப் பார்க்காமல், உன் தகப்பனாராக நினைத்து, மனம் விட்டுச் சொல், உன் பிரச்சினை எதுவாக இருந்தாலும், நான் பரிகாரம் சொல்லுகிறேன்” என மிகவும் பரிவோடும், அன்போடும் கேட்டார்.
       “எனக்கும் என்னுடைய கடந்த காலம் நினைவில் இருக்கிறது.  அப்பவெல்லாம், நன்றாகப் படித்து, ஒரு பெரிய நிலைக்கு வரவேண்டும்.  கை நிறையச் சம்பளம் வாங்க வேண்டும் எங்கிற ஆசையில்தான், இத்தனைக் கஷ்டங்களுக்கிடையிலும் படித்து வந்தேன்.  வெளி நாட்டில் படித்து முடித்து விட்டு, அங்கேயேகூட வேலை செய்து அனுபவம் பெற்றேன். இங்கு நீங்கள்தானென்னை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்து, இந்த ஆபிசில் சேர்த்துக் கொண்டீர்கள்.  எனக்கும் எத்தனையே வேலைகளைச் சொல்லியும் கொடுத்தீர்கள். உங்களுக்கேத் தெரியும், என்னுடைய திருமணம் முடிந்த, இரு வாரங்களுக்குள்ளேயே, நீங்கள் என்னை உங்களின் கம்பெனியின் மூலம், ஜெர்மனிக்கு இரு வருடங்கள் அனுப்பி வைத்தீர்கள். அப்பக் கூட, நான் என் இளம் மனைவியை விட்டுப் பிரிய மனம் வருந்தவில்லை.  என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல், நானும் இரு ஆண்டுகள் ஜெர்மனியில் பயிற்சி முடித்தேன்.  நாந்தான் என் எதிர்காலத்திற்காக, என்னுடைய இளமையின் இரு ஆண்டுகளைத் தனியாக இருந்தேன்.  ஆனால், என் மனைவி என்னுடைய ஆசையைப் ;புரிந்து கொண்டு, அவளுடைய வேதனையை, வருத்தத்தை வெளியில் காட்டாமல், என்னுடைய அம்மாவுடனும், சகோதரியுடனும் இரு ஆண்டுகள் இருந்தாள்.  இரு வருஷத்திலும், நாங்கள் போனில், கடிதத்தில்தான் வாழ்ந்தோம்.  அப்பக்கூட, எனக்கு இந்த வேலையில் விருப்பமோ வேகமோ குறையவில்லை.  இரண்டு வருஷங்கள் சென்றபின், நானும் திரும்பி வந்து,  இங்கேயே வேலையில் தொடர்ந்தேன்.  ஆரம்பத்தில் எனக்கு என்னுடைய வீடு, மனைவி, அம்மா என எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல், இந்த பணி என்னுடையது, என்னால் இதனை எத்தனைச் சிறப்பாக செய்ய முடியுமோ அப்படியே செய்ய வேண்டும் எங்கிற ஒரே எண்ணத்தில்தான் இருந்தேன்.  என்னுடைய பொருளாதார வசதியும் கூடியது.  உங்களுடைய முயற்சியால் எனக்கென ஒரு வீடும் கிடைததது.   என்னுடைய குடும்பமும் வளர்ந்தது.
              திருமணம் முடிந்து இரு வாரங்களுக்குள் நான் என் மனைவியைப் பிரிந்து இரு வருட காலங்களுக்கு ஜெர்மனி சென்ற போது, என்னுடைய எதிர்கால வளர்ச்சியில் என் மனைவிக்கும் கருத்தும் அக்கறையும் இருந்தது. அதனால், அவளும் என்னுடைய வளர்ச்சியில் தடையாக நிற்கவில்லை.  மாறாக, அந்த இரு வருடங்களுக்குள் அவளும் தன்னுடைய மேற்படிப்பை முடித்து,  இப்போது அவளும் ஒரு கல்லூரியில் வேலையில் இருக்கிறாள்.  அவளுடைய வேலை ஒரு குறிப்பிட்ட நேரத்துடன் முடிந்து விடுகிறது.  அதனால், அவளால் வீட்டையும், எங்களுடைய குழந்தையையும் நன்றாக கவனிக்க முடிகிறது.  ஆனால், என் நிலைமையோ? 
காலையில் எழுந்திருக்கும்போதே, கம்பெனி விஷயமாக வெளி நாட்டிலிருந்து மெயில், ஃபொன் என என்னுடைய நேரத்தைச் சாப்பிடுகின்றன.  வீட்டில் எந்த ஒரு சின்ன விஷயத்திலும் என்னுடைய கவனம் இல்லை.  என் மனைவி, மிகவும் நல்லவள். புரிந்து கொண்டு அனுசரித்துப் போகிறாள்.  எனக்கும் குழந்தை பிறந்தவுடன், குழந்தையுடன் விளையாடக்கூட நேரம் கிடைப்பதில்லை.  நான் வீட்டை விட்டுக் கிளம்பிம்போது, குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறான்.  இரவோ, நான் திரும்புவதற்கு நடு ராத்திரியாகி விடுகிறது. 
       அவனுடைய வாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி, இடைமறித்தார். அவரும் சொன்னார்  “சுதர்சன், நம்ம மாதிரி வெளி நாட்டுக் கம்பெனிகளுடன் தொடர்பு கொண்டு வியாபாரம் செய்பவர்கள் எல்லாருக்கும்தான் இந்த மாதிரி சங்கடங்கள் இருக்கின்றன.  இது உனக்கு மட்டும் தானா?  இந்த நாளில், இங்கு இருக்கும் எல்லா மல்டி நேஷல்னல் கப்பெனிகளிலும் இந்த நிலைமைதானே. இந்த ஒரு காரணத்திற்காகவா, நீ இந்த வேலை வேண்டாம் என முடிவு செய்தாய்?  என்னால் ஒத்துக் கொள்ள முடியலையேப்பா?
       சார், நான் இந்த முடிவுக்கு வந்ததற்குக் காரணமே என் குழந்தைதான்.  ஒரு நாள் என் மகன் தன் மழலைக் குரலில் ஒரு பேச்சு பேசினான், அந்த ஒரு சொல்லே என்னை உருக்குலைத்து விட்டது.
       என்னப்பா, வேடிக்கையா இருக்கே.  உன் மகனுக்கு என்ன இரண்டு வயதுதானே ஆகிறது.  அதற்குள் அந்தக் குழந்தை அப்படி என்னப்பா ஒரு சொல்லைச் சொல்லி, உன்னை உருக்குலைய வைத்துவிட்டது? என ஆச்சர்யமாகவே கேட்டார்.
       சொல்கிறேன் கேளுங்கள்.  நான், இரு மாதங்களுக்கு முன் ஒரு நாள், கொஞ்சம் சீக்கிரமாகவே என் வீட்டிற்கு சென்றேன்.  அப்போது மணி இரவு எட்டுமணி இருக்கும்.  வாசலில் இருக்கும் காலிங்க்பெல்லை அடித்தபோது, என் மகன் ஓடி வந்து கதவின் பக்கத்தில் இருந்த ஜன்னலின் மீது ஏறி நின்றான்..  என் மனைவி, உள்ளே இருந்தாள்.  அவள் உள்ளேயிருந்து “சந்தோஷ், யார் காலிங்க் பெல் அடிக்கிறது.  யார் வந்திருக்கா”? எனக் கேட்டாள்.
       என் மகன் சொன்ன பதில் என்ன தெரியுமா? எனக் அவரைக் கேட்டுவிட்டு, துக்கம் தாங்காமல், கண்களில் வழிந்த நீரையும், துடைத்துக் கொண்டு, துக்கத்துடன் சொன்னான் அம்மா, தினமும் ராத்திரி படுத்துக்க வரும் மாமாதான்  வந்திருக்கிறார்:” என்றான் தன் மழலைக் குரலில்.  போறாதா சார் அந்த ஒரு வார்த்தையின் கூர்மையான அம்புகள்.  என் மகனுக்கே, நான் அவன் அப்பா எனப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அது யாருடைய தப்பு.  என்னுடையது தானே.  நான் ஒரு நிமிஷம் ஆடிப்போய் விட்டேன். என்னுடைய மகனிடம், நாந்தான்  உன்னுடைய அப்பா எனச் சொல்ல முடியாமல் தவித்துப் போய் விட்டேன்.  அப்போது வெளீயே வந்த சாந்தி, “என்ன அதிசயம். இன்று சீக்கிரம் வந்து விட்டீர்களே?உடம்புக்கு எதும் சரியில்லையா? எனக் கேட்டுக் கொண்டே. கதவைத் திறந்தாள். . 
              என் முகத்தில் படர்ந்த வேதனையைப் பார்த்து ஒரு நிமிஷம் திகைத்தாள். பிறகு சந்தோஷிடம் “சந்தோஷ், இன்று அப்பா உன்னுடன் விளையாட சீக்கிரம் வந்து விட்டாரடா? வா நாமிருவரும் அவருடன் விளையாடலாம்” எனச்சொல்லிக் கொண்டே, குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டு, அவள் வாசற் கதவை மூடி விட்டு, உள்ளே வந்தாள். என்னிடம் பரிவாக “என்னயிது, குழந்தை எதோ புரியாமல் சொல்லி இருக்கிறான்.  அதைக் கேட்டு, நீங்கள் ஏன் இப்படிக் கலங்குகிறீர்கள்.  சின்னக் குழந்தைதானே.  கவலைப் படாதீர்கள். நான் அவனிடம் பக்குவமாகச் சொல்கிறேன்.” என என் வேதனையைக் குறைக்க முயற்சித்தாள்.    என்னால், என் குழந்தை மீதோ, என் மனைவியிடமோ கோபம் கொள்ள முடியவில்லை.  நான் ஒரு நாளில் முக்கால் பங்கு வேலை என தனியாக என்னுலகத்திலேயே மூழ்கி இருந்தால், என் குழந்தைக்கு என் முகம் எப்படி பரிச்சயமாக இருக்கும்.  அவன் நாள் பூராவும் பார்த்து, பார்த்து வளருவது என் மனைவி, என் தாய் தானே.  நானோ, காலையில் அவன் எழுந்திருக்கும் முன்பே ஆபிசுக்கு கிளம்பி விடுகிறேன்.  வரும்போது, தூங்கும் அவன் முகத்தில் ஒரு சின்ன முத்தம் கொடுத்து விட்டு, திரும்ப இரவு பாதிராத்திரிக்கு திரும்பினால், அப்பவும் குழந்தை உறக்கத்தில்தானே இருக்கிறான்.  மனைவியிடம், “என்ன குழந்தை சாப்பிட்டானா, விளையாடினானா என கேட்டு விட்டு, என்னைத் திருப்தி படுத்திக் கொண்டு விடுகிறேன். 
              பணம் வேண்டியதுதான்.  யாருக்காக நான் சம்பாதிக்கிறேன்.  என்னுடைய குழந்தை, குடும்பத்தில் எதிர்காலம் நன்றாக இருக்கத்தான்.  ஆனால், என்னுடைய குழந்தையில் எதிர்காலத்தைப் பார்த்த நான், இன்று அந்தக் குழந்தைக்கு தகப்பனாரின் அருகாமையும், பரிவும் வேண்டும் என்பதை மறந்து விட்டேனே.  அவன் வளர்ந்தாலும்,ஒவ்வோரு நாளும், ஒவ்வோரு விஷயத்திலும், அவன் என்னை விட, அம்மாவிடம்தானே ஒட்டி இருப்பான்,  அது அவனுடைய தப்பல்லவே.  அன்றுமுழுவதும் யோசித்தேன் சார்.  இப்ப உங்களுடைய உதவியால், என்னுடைய வசதி நன்றாகவே இருக்கு. போறும்,  இனியும், எந்திரம் மாதிரி பணம் ஒன்றையேக் குறியாகக் கொண்டு, என்னால் வாழ்நாளில் ஓடிக் கொண்டிருக்க முடியாது.  என்னுடைய குடும்பத்திற்காகவும் குடும்பத்தாருடனும் நான் வாழ வேண்டும்.  அதற்கு, நானும் கூடிய வரையில், என் குடும்பத்துடன் இருக்க வேண்டும் அப்படி இருக்க என்ன செய்யனும்னு யோசித்தேன்.  இந்த மாதிரி, ஒரு நாளுக்கு பதினெட்டு மணி நேரம் உழைக்கும் வேலை வேண்டாம். நான் இத்தனைகாலமும் ஒரு பணம் சம்பாதிக்கும் எந்திரமாகத்தான் இருந்திருக்கிறேன். ஒரு நாள் கூட, என் வீடு, மனைவி, தாயார், என் குழந்தை என நாளில் ஒரு சிலமணி நேரம் கூட அவர்களுக்காக வாழ்வில்லை. போறும் இந்த எந்திரத்தனமான வாழ்க்கை.  தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே, கைப்பேசியில் என்ன என்னென்ன மெஜேஜ்ஸ் வந்திருக்கு எனவும், தினமும் எழுந்தவுடன், குளித்து, உடை உடுத்தி, என்ன இருக்கும் என்பதையும் கவனிக்காமல், தட்டில் இருப்பதைக் கூட பார்த்து ருசித்துச் சாப்பிடாமல், கையில் இருக்கும் கைப்பேசியுடனேயே தொடங்குகிறேன். ஒரு நாள் கூட, என் மனைவியிடம் தாயாரிடம் அவர்களுடைய தேவை என்ன என்பதைப் பற்றி கூட விசாரிப்பதில்லை. பல நாட்களில் என் பணிகளின் அழுத்தத்தால், எனக்கு ஒரு சின்னக் குழந்தை இருப்பதைக்கூட மறந்து விடுகிறேன்.  நீங்கள் கேட்கலாம் “நீ இத்தனையும் உன் குடும்பத்திற்காகத்தானே செய்கிறாய்? உன் கையில் நிறைய வசதிகள் இருந்தால், உன் குடும்பம், குழந்தைகளின் எல்லாத் தேவைகளையும் நல்ல படியாக செய்ய முடியுமே?” என, அது ஒரு யதார்த்தமான வாதம்தான்.   ஆனால், இன்று என் குழந்தைக்குத் தேவை என்ன? அவனுடன் ஒரு தந்தை எங்கிற பாசத்துடன் விளையாடவும், அவனைச் சீராட்டவும், அவனுடன் என் நாட்களில் சில நேரங்களாவது செலவிட்டு, எனக்கும் அவனுக்கும் இடையே ஒரு பாலமாக பாசப்பிடிப்பு வேண்டாமா? அவன் பெரியவனாகி, பள்ளிக்குச் செல்லும்போது, நான் இப்படி அதிக நேரம் வேலைக் காரணமாக வெளியில் இருந்தால், புரிந்து கொள்ள முடியும். முதலில், என் குழந்தைக்கு தக்க பருவம் வரும்வரை, நான் அவனுக்கு ஒரு விளையாட்டுத் தோழனாகத்தான் இருக்க வேண்டும்,   காலையில் ஒரு மணி நேரமாவது என் குடும்பத்துடன் இருக்க வேண்டும்.  மாலையிலும் இரவிலும் பெரும்பாலும் அவர்களுடன் இருக்க வேண்டும்.  அதற்குத் தக்க மாதிரி, என்னுடைய வேலை நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.   எல்லாவற்றையும் யோசித்துத்தான், இன்று இந்த முடிவுக்கு வந்தேன்.  எனக்கு நம்பிக்கை இருக்கு.  என்னுடைய படிப்பால், என்னால் நல்ல  படியாக, நிதானமாகச் சம்பாதித்தாலும், என் குடும்பம், குழந்தை என சந்தோஷமா இருக்க முடியும்,  நானும், குறைந்தது, பத்து ஆண்டு காலம், எந்திரமாக இருந்து விட்டேன்.  இனி அப்படி இருக்கக் கூடாது.  நான் உழைப்பதற்கு அஞ்சவில்லை.  ஆனால், அதற்கும் ஒரு எல்லை வைத்துக் கொள்ள வேண்டுமென்றுதான் முடிவு செய்தேன்.  முதலில் இந்த எந்திர வாழ்க்கையிலிருந்து வெளியேற வேண்டும்.  சில காலம், என் குடும்பத்துடன், குழந்தையுடன் இருந்து கொண்டே, இனி என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடுவேன்.   ஒரு நாளில் பகல் இரவு என மாறி வருவது போல், எனக்கும் ஆபிஸ், குடும்பம் என அதற்குத் தக்கவாறு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு, திட்டமிட்டு எனக்காக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவேன். தயவு செய்து, என்னைப் புரிந்து கொள்ளுங்கள்.  என்னுடைய குழந்தை என்னை தன்னுடைய அப்பா எனப் ;புரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியம். இன்று முதல், நான் அதிக நேரம் அவனுடன் இருந்து, என்னுடைய பாசத்தையும், பரிவையும் அவனுக்குக் கொடுப்பேன்.” எனச் சொல்லிவிட்டு, கண்களில் வழிந்த நீரையும் கைகளால் துடைத்துக் கொண்டான்.                                  
              ஒரு இளம் தகப்பனின் ஏக்கத்தையும், ;புரிந்து கொண்டார் அவனுடைய முதலாளி.  அதனால், அவனிடன், நீ சொன்னதும் நியாயம் தான்.  முதலில், நீ ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள்  லீவு எடுத்துக் கொண்டு, குடும்பத்துடன் எதாவது வெளியூருக்குப் போய் வா. இப்போ, உன் மனைவிக்கும் லீவுதானே.  அதற்குள், நான் உனக்கு உன் விருப்பப்படியே, வேறு ஏதாவது மாற்றுப் பணி, சொந்த நிறுவனம் மாதிரி எதாவது ஒன்றைப் பற்றி யோசித்து வைக்கிறேன். நீயும், உன் மனைவியுடன் நிதானமாகப் பேசி, ஒரு தீர்மானத்துக்கு வா.   நீ எது செய்வதாயிருந்தாலும், அதில் உன் மனைவியின் சம்மதமும் இருக்க வேண்டும்.” எனச் சொல்லிவிட்டு, அவனுடன் வெளியே வந்தார். 
              அதிகாரியுடன் பேசிய பின், சிறிது மனத் தெளிவு பெற்ற சுதர்சன், தன்னுடைய அன்றைய பணிகளைச் செய்து முடித்து விட்டு, சீக்கிரமாகவே வீட்டிற்கு கிளம்பினான்.  வீட்டிற்குப் போகுமுன், வழியில் குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகள் விற்கும் கடைக்குள் சென்று, தன் மகனுக்கு விளையாட சில பொம்மைகளை வாங்கிக் கொண்டான்.  அதில் ஒரு சின்ன கார் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஓடச் செய்வது.  இன்னோன்று ஹேலிகாப்டர், ஒரு சின்ன சத்தத்துடன் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிள், குதித்து குதித்து ஓடும் குரங்கு பொம்மை, சாவி கொடுத்த வுடன், கண்ணைக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு, பாட்டுப் பாடி ஆடும் ஒரு அழகிய பெண் பொம்மை என விதவிதமாக வாங்கிக் கொண்டான். குழந்தைக்கு ட்ரஸ் வாங்கப் பார்த்தான்.  சிறிது நேரம் யோசித்து விட்டு, பிறகு நாளைக்கு மனைவி, குழந்தையுடனே வந்து வாங்கிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். வரும் வழியில் வீட்டிற்கு அருகில் இருந்த ஒருகோவிலின் வாசலில் பூக்கள் விற்கும் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன், அவனுக்குள் ஒரு வெட்கமும் வந்தது.  தன்னுடைய குழந்தைக்கு என எத்தனை விதமான பொம்மைகள் வாங்கினவனுக்கு, அந்தக் குழந்தைச் சுகத்தைக் கொடுத்தவளுக்கு ஒன்று கூட வாங்கி வரவில்லையே எனவும் ஒரு ஏக்கமும் தோன்றியது.  வழியில் இருந்த கடைகளை எல்லாம் தாண்டி வந்தாகி விட்டது. இனி என்ன செய்வது எனவும் யோசித்தான்.  பிறகு, தான் திருமணமான புதிதில் சாந்தியுடன் வெளியில் எங்கு சென்றாலும், அவள் தன்னிடம் விரும்பிக் கேட்பது மல்லிகைப் பூச்சரம்தான். இப்போது அது அவன் நினைவுக்கு வந்தவுடன், காரை நிறுத்தி, கோவில் வாசலில் இருந்த ஒரு பெண்ணிடம் ஒரு பந்து மாதிரி இருந்த மல்லிகைச் சரத்தை அப்படியே வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்தான்.
       வீட்டிற்குள் நுழைந்தவுடனே, சாந்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ், சுதர்சனைப் பார்த்தவுடன்,
“அம்மா, அப்பா வந்தாச்சு” எனக் குதுகலத்துடன் தன்னுடைய மழலை மொழியில் சொல்லிக் கொண்டே, சுதர்சனிடம் தாவி வந்தான்.  தன்னை நோக்கி வந்த குழந்தையை ஆசையுடன் தூக்கிக் கொண்டவன் சாந்தியிடம் “நீதான் குழந்தைக்கு நான் அவனுடைய அப்பா எனச் சொல்லிக் கொடுத்தியா?” எனவும் கேட்க, அவளும் “சமத்துதான்.  என்னுடைய குழந்தைக்கு அவனுடைய அப்பாவை நான் காண்பிக்காமல் வேறு யாருக்கு காண்பிக்க  உரிமையிருக்கு” எனச் சிரித்துக் கொண்டே, அவன் கையில் இருந்த பைகளை வாங்கிக் கொண்டு, அவனுடன் சேர்ந்து உள்ளே வந்தாள்.                 
              சுதர்சன் சந்தோஷுடன் விளையாட ஆரம்பித்தான்.   சந்தோஷுக்கு சாதம் எடுத்துக் கொண்டு வந்து, அப்பாவுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை “சந்தோஷ், கொஞ்சம் வந்து சாப்பிடு” எனக் கூப்பிட, அவனோ “அப்பாவுடந்தான் விளையாடுவேன்.  எனக்கு மம்மம் வேண்டாம்” எனச் சொல்லிக் கொண்டே, அப்பாவுடன் ஓடினான்.  சாந்தியும் அவனையும் சுதர்சனையும் துரத்திக் கொண்டே  குழந்தைக்குச் சாதம் ஊட்டினாள்.  சுதர்சனும்,சாந்தியை ஓட விட வேண்டி, சந்தோஷைத் தூக்கிக் கொண்டு, வேகமாக ஓடிக் கொண்டே, அவளைப் பார்த்து “எங்கே இப்ப எங்களைப் பிடிக்க முடியுமா?” எனவும் கேலி செய்து, சிரித்தான்.  அவனைப் பார்த்து சந்தோஷும், அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அம்மா, இப்ப என்னைப் பிதிக்க  முதியாதே” எனவும் தன் மழலைக் குரலில் சொல்ல, அதைக் கேட்ட பெற்றவர்களுக்கும் சந்தோஷம் எல்லை கடந்தது.  வெகு நாட்களுக்குப் பின், தானும், தன் குடும்பத்துடன் குதூகலமாக விளையாடியது சுதர்சனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. அன்று முழுவதும் தூக்கம் வரும் வரை சந்தோஷும் அவனை விட வில்லை,
              தூங்கும் மகனைத் தங்களின் கட்டிலின் ஓரத்தில் விட்டு விட்டு, சாந்தி, இருவருக்கும் இரவு உணவை எடுத்து வந்தாள்.  வந்தவளிடம்,
சாந்தி,, எத்தனை நாட்களுக்குப் பின் நாமிருவரும் சேர்ந்து சாப்பிடுகிறோம்” எனச் சொல்லிக் கொண்டே, சாப்பிடலானான்.  சாப்பிட்ட பின் சிறிது நேரம் இருவரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, டி.வி. ஆன் செய்து, அதில் வரும் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தார்கள்.  பிறகு, சந்தோஷுக்குப் பாலை எடுத்துக் கொண்டு வந்து, தூங்கிக் கொண்டிருந்தவனைத் தூக்கலானாள்.  அப்போ, சுதர்ஸன்,  என்னிடம் கொடு நான் இன்று கொடுக்கிறேன்” எனச் சொல்லிக் கொண்டே, தூங்கும் குழந்தையை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு, பால் பாட்டிலை அவன் வாயில் வைக்க, பாலைக் குடித்துக் கொண்டே, தன் சிட்டு விழிகளால் அப்பாவைப் பார்த்தான்  ஒன்றும் பேசாமல், தன் கைகளைக் கொண்டு அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, மீதம் இருந்த பாலையும் குடித்து முடித்தான்.  திரும்பவும் சந்தோஷை படுக்கையில், சரியாக படுக்க வைத்தவன், “சாந்தி, நான் உன்னிடம் சில விஷயங்களைப் பேச வேண்டும்.  இங்கு வா” எனவும் கூப்பிட்டான்.
          தன்னருகில் வந்தவளிடம்,, “சில நாட்களாகவே என் மனதை ஒரு வேதனை . உருத்திக் கொண்டிருந்தது.. அதற்கு இன்றுதான் ஒரு முடிவு கண்டேன்” எனச் சொன்னவனின் முகத்தைப் புரியாது பார்த்தாள்.  அவளின் கண்களில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்தவனும் மெதுவாக “சாந்தி, , நான் இரு மாதங்களுக்கு  முன் ஒரு நாள் சீக்கிரம் ஆபிசிலிருந்து வந்தது உனக்கு ஞாபகம் இருக்கா?  அன்று தான் சந்தோஷ் கதவைத் திறந்து என்னைப் பார்த்தவுடன், உன்னிடம் என்ன சொன்னான் என்பதும் உனக்கு ஞாபகம் வந்திருக்குமே? . என்னுடைய குழந்தைக்கே என்னைத் தன் அப்பா என உணர முடியாமல் போனது யாரால்? என்னால்தானே.  நான் நாள் பூராவும், வேலைப் பளுவின் காரணமாக, வீட்டை விட்டு வெளியிலேயே நாளில் முக்கால் பங்கு செலவழித்தால், என்னுடைய முகம் எப்படி குழந்தையின் மனதில் நிற்கும்.  அதனால்தான், அவன் அன்று உன்னிடம் “அம்மா, தினமும் இராத்திரி படுக்க வரும் மாமாதான் வந்திருக்கிறார்”  எனச் சொன்னதே.  அந்த ஒரு வார்த்தைதான் என்னையும் சிந்திக்க வைத்தது.
       என்னதான் நமக்கு வாழக்கை நடத்த  “பணம்” என்னும் ஒரு ஆயுதம் தேவை என்றாலும், நம் வாழ்க்கை முழுமை அடைவதற்கு அது ஒன்று மட்டும் போதுமா?  யாருக்காக இத்தனை உழைப்பு, முயற்சி, தேடுதல் என நினைத்துப் பார்த்தேன்.  என்னுடைய உயிரின் ஓர் துடிப்பு, அந்தக் குழந்தைக்கு நான் அப்பா என்றாலும், உன்னைப் போல், அந்த பிஞ்சுக் குழந்தையிடம் ஒரு பாசத்தையும், பரிவையும் நான் காட்டவில்லையே.  நாள் முழுவதும் என் பணி, என் ஆபிஸ், என் நிர்வாகம் என அவனை விட்டு வெளியிலேயேதானே இருந்தேன். அவன் பிறந்த நாளிலிருந்து, ஒரு நாளாவது, அவனிடம் உன்னைப்போலவோ, அல்லது என் அம்மாவைப் போலவோ, சில நிமிஷங்களாவது இருந்தேனா?  இல்லையே, அவனுடைய உலகத்தில் அவனுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நீங்களிருவர் மட்டும்தானே?அவனுக்கு இன்றைய தேவை என்ன? என் அன்பும், அருகாமையும், பரிவும், பாசமும்தானே.  இன்று அந்தக் குழந்தையுடன், ஒரு மணி நேரம் விளையாடியது எனக்கு எத்தனை சந்தோஷத்தைக் கொடுத்தது தெரியுமா?  என்னுடைய முயற்சியால், எத்தனை எத்தனையோ ப்ராஜெட்டுக்களை நான் முடித்து, அது என்னுடைய மேலதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதனால் எங்களின் கம்ப்பெனிக்கு அதிக லாபம் கிடைக்கும்போது, எனக்குள் ஏற்படும் அந்த நேர சந்தோஷம், பெருமை எல்லாம், நான் இன்று அவனுடன் விளையாடி அனுபவித்த சந்தோஷத்தின் முன் நிற்கவில்லை.  இது போல் எத்தனை சந்தோஷங்களை நான் இத்தனை நாட்கள் வரை இழந்து இருக்கிறேன்.சொல்லும்போதே அவனுடைய கண்களில் நீர் ஹிறைந்து வழிந்தனஅதைக் கண்ட சாந்தி, பரிவுடன் அவனுடைய கண்களைத் துடைத்து விட்டாள்.  
       அதனால்தான், நான், சென்ற இருமாதங்களாக , தீவிரமாக யோசித்து, கடைசியில் என்னுடைய மகனுக்காகத்தான் அவனுடைய பிரகாசமான ஏதிர்காலத்திற்காகத்தான் வேலையில் இருந்து, நிறைய சம்பாதிக்கிறேன் என்றாலும், அவனுடைய இன்றைய தேவை என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டேன்.  உன்னிடம் கூட கலந்து பேசாமல், நான் இரண்டு நாட்களுக்கு முன் ஆபிசுக்குப் போனவுடன், என் வேலையை விட்டுவிட முடிவு செய்திருப்பதாக, என்னுடைய அதிகாரிகளுக்கு மெயில் அனுப்பினேன்.  அதைப் பார்த்த என்னுடைய சீனியர் ஆபிசர், சாரங்கன் கூட, என்னிடம் எத்தனையோ வாதாடினார் நான் அந்த மெயிலைத் திரும்ப்ப் பெற்றுக் கொள்ள வேண்டுமென.  ஆனால், நான் அவரிடம் என்னுடைய முடிவில் மாற்றமில்லை.  நான், என் குடும்பத்துடன்    என் நாளில் கொஞ்ச நேரமாவது செலவிட வேண்டும், நாள் முழுவதும் அவர்களை வெகு தொலைவில் வைத்துக் கொண்டு, அவர்களுக்காகத் தான் நான் இத்தனை நேரங்கள்  உழைக்கிறேன் என ஒரு பொய்யான சமாதானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.  அதனால்தான், நான் பத்து வருஷங்களுக்கு மேல், ஒரு எந்திரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் எங்கிற ஒரே நோக்கத்துடன் வாழ்ந்தது போறும்.  இனிமேல், என்னுடைய குடும்பத்தாருடன் நாளில் ஒரு சில மணி நேரங்களாவது இருக்கும்படியான, ஒரு வழியை யோசித்து, அதன்படி, என் திறமைக்கு ஏற்ப தனியாக சொந்தமாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும், அதற்கு வசதியாக என்னுடைய தற்போதைய வேலையை விட்டு விடுவதாகவும் முடிவு செய்துதான், இந்த மெயிலை அனுப்பினேன் எனத் தீர்மானமாகச் சொல்லி விட்டேன்.
அவரும், என்னுடைய மனதில் இருந்த ஏக்கத்தையும் புரிந்து கொண்டார்.  அதனால் அவர் என்னிடம் இன்று என்ன சொன்னார் தெரியுமா? உன்னுடைய முடிவு சரிதான். முதலில் உன்னுடைய குடும்பம், பின்புதான் உன் சம்பாத்தியம்.  உன்னுடைய திறமைக்கு, எந்த்த் துறையிலும் உன்னால் பிரகாசிக்க முடியும்.  முதலில், நீ இரு வாரங்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, உன் மனைவி, குழந்தை என கொஞ்ச நாட்கள் ஏதாவது ஒரு ஊருக்குப் போய் சந்தோஷமாக இரு. நீ திரும்பி வருவதற்குள், உன் மனதிற்கு ஏற்றமாதிரி உனக்கு என்னுடைய கம்ப்பெனிக்கே, தனி நபராக என்ன செய்ய முடியும்னு யோசித்து ஒரு வழியைக் கண்டு பிடிக்கிறேன். நீ வரும்போது, நான் செய்து இருக்கும் ஏற்பாடு உனக்கு திருப்தியாக இருந்தால், அதைச் செய்.  அல்லது, உன் மனதில் வேறு எதாவது தீர்மானம் இருந்தாலும், அதைப் பற்றி முதலில் உன் மனைவியுடன் கலந்து பேசி, பிறகு நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வா.  முதலில் உனக்குத் தேவை கொஞ்ச நாட்கள் எந்த விதமான கவலையும், சிந்தனையும் இல்லாமல், உன் மனைவி, குழந்தை, தாயார் என சந்தோஷமாக இரு. உன் மனதில் இருக்கும் ஏக்கம், கவலை தீரும்.  தெளிவான மன நிலையில், உன்னாலும் நல்ல முடிவு எடுக்க முடியும்: எனச் சொல்லி, நாளையிலிருந்து எனக்கு இரு வாரங்களுக்கு லீவும் கொடுத்து விட்டார்.
இப்பச் சொல், நான் எடுத்த முடிவு சரிதானே.  உனக்கு மனதில் என்னதோன்றுகிறதோ அதைச் சொல்.: எனச் சொல்லிக் கொண்டே,  சோபாவில் தன்னருகில் அமர்ந்திருந்தவளின் மடியில் தன் தலையை வைத்துக் கொண்டான்.
தன் மடியில் படுத்துக் கொண்டிருந்தவனின், தலையைக் கலைத்துக் கொண்டே, “உங்களின் ஏக்கம் சரிதான்.  முதலில், நம்முடைய குழந்தையுடன், அதன் மழலைப் பருவத்தின் விளையாட்டுக்களை நாம் அனுபவிக்க வேண்டும்.  இப்போ அவனுக்குத் தேவை நம்மிருவருடன் நாள் பூராவும் விளையாடுவதும், கொஞ்சுவதும்தான்.  நமக்கு இப்ப வரும் பணம் நமக்குப் போறும்.  உங்களின் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கு.  உங்களுக்கு சுதந்திரமாக சொந்த நிறுவனம் வைத்து அதன் மூலம் உங்களின் திறமையை வெளிக் கொள்ள வேண்டும் என எண்ணமிருந்தால் அதுவும் சரிதான்.  நீங்கள் எந்த முடிவுக்கு வந்தாலும், நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுவேன்.  சொந்தமாக ஒரு தொழில் செய்வதென்றால், முதல் இரண்டு மூன்று வருடங்களுக்கு அது நன்றாக வளர வேண்டும்.  அதற்குள் நாம் அதில் இருந்து எந்த ஒரு வருமானத்தையும் எதிர்பார்க்கக் கூடாது.  அதன் செலவினங்களை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொண்டு, அதை நன்றாக வளர்த்தால், நம்மைப் பற்றி, நம்முடைய நிர்வாகத்திறமை பற்றி, முதலில் மற்றவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கை வளரனும், அப்படி வந்தால், பிறகு அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். உங்களூக்குத் தெரியாதது ஒன்று மில்லை. நிதானமாக யோசித்து, பொறுமையாக முடிவு செய்யலாம்.  முதலில் உங்களின் ஆபிசர் சொன்னபடி, இரு வாரங்களுக்கு நம்மைப்பற்றி மட்டுமே சிந்தித்து, நமக்காக இரு வாரங்கள் சந்தோஷமாக இருப்போம்.  நமக்கும் திருமண மானதிலிருந்தே, இத்தனை நாட்கள் வரையிலும்,       இப்படி, உல்லாசமாக எங்குமே போகவில்லை.  முதலில் நாமிருவரும் இத்தனை நாட்களாக அனுபவிக்காமல் இருந்த அந்த சந்தோஷத்தை குழந்தையுடன் அனுபவிக்கலாம். மற்றதைப் பற்றி, பதினைந்து நாட்களுக்குப் பின் யோசித்து முடிவு எடுக்கலாம். 
முதல் வேலையாக, காலையில் எழுந்தவுடன், நாம் இரு வாரங்களுக்கு எந்த ஊருக்குப் போகலாம், அங்கு என்னென்ன பார்க்கலாம், அங்கு குழந்தைக்கு ஏற்றமாதிரி எத்தனை விளையாட்டுக்கள் இருக்கு என பார்க்க வேண்டும். எழுந்திருங்கள் இப்போ, நாமிருவரும் படுக்கலாம் எனவும் சொல்லிக் கொண்டே, அவனின் தலையைத் தன் மடியிலிருந்து எடுக்க முயற்சித்தாள். ஆனால், அந்த தலை மிகவும் அழுத்தமாக அவளின் மடிமீது இருந்த படியே, “உன் வாதம் சரிதான்.  நாளைக்கு காலையில் நீ சொன்ன அந்த வேலையை பார்க்கலாம் அதற்கு முன் எனக்குஒரு முக்கியமான வேலை இப்ப இருக்கே” எனச் சொன்னவனைப் பார்த்து மெதுவாக “அதென்ன இப்ப ஒரு முக்கியமான வேலை உங்களுக்கு? எனவும் கேட்டுச் சிரித்தாள்.  சிரித்தவளின் மடியிலிருந்த எழுந்தவன், தன் மனைவியை அப்படியே ஒரு குழந்தை போலத் தூக்கிக் கொண்டு, அவளின் காதில் இரகசியமாக தன்னுடைய முக்கியமான வேலையைச் சொல்ல, அவளும் வெட்கம் தாளாமல் சிரித்துக் கொண்டே, “உங்களுடைய வேலை இன்று ஒரு நாளுடன் முடிந்து விடுமா?” எனவும் கேட்டாள்.  அதற்கும் அந்த துஷ்டன் “இந்தமாதிரி வேலைக்கெல்லாம் காலக்கணக்கு கிடையாது. என்னுடைய திருப்திதான் அளவு” எனச் சொல்லிக் கொண்டே, இருவரும் மகிழ்ச்சியுடன் தங்களின் கட்டிலை நோக்கிப் போனார்கள். இத்தனை நாட்களும், அலுவல் பணிகளைப் பற்றியே நினைவுகளைச் சுமந்து கொண்டு, உறங்கப் போகுபவன், இன்று அந்தச் சுமைகளை மறந்து விட்டு, தங்களுடைய வாலிபத்திற்குத் தீனி கண்டு இன்பம் அடைந்தான்.

அடுத்த நாள் காலையிலேயே, சுதர்சன், தன் மனைவி, குழந்தையுடன் ஒரு வாரம் டூர் போக கிளம்பினான். வெகு நாட்களுக்குப் பின், தன் மகன் குழந்தை, மனைவி எனச் செல்வதைக் கண்டு, அந்த்த் தாயின் மனமும் களிப்படைந்தது. அவன் மனதில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருந்தது.   தன்னுடைய வாழ்க்கையிலும், ஒரு சின்ன மாற்றம் வேண்டுமென்பதையும் உணர்ந்தான். வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணம் சம்பாதிப்பதில் மட்டுமில்லை.  குடும்பத்தாருடன் உல்லாசமாக, மன நிறைவாக இருப்பதில்தான் கிடைக்கும் என்பதையும் அனுபவ பூர்வமாக உணர்ந்தான். அந்தச் சந்தோஷத்துடனும், தன்னுடைய சீனியர், கட்டாயம் தனக்காக ஏதாவது ஒரு ஏற்பாடும் செய்து தருவார் எங்கிற திடமான நம்பிக்கையும் இருந்தது.  அந்தக் குடும்ப பறவைகள், தங்களின் வானில் உல்லாசமாகப் பறக்கத் தொடங்கினர். 

Thursday, 12 January 2017

உதவிக்கு ஆள்வேண்டாம்.

உதவிக்கு ஆள் வேண்டாம்.
 (ஜெயரமணி)
                தன் புது மனைவியுடன், வீட்டில் டி..வி. பார்த்துக் கொண்டிருந்த  பிரபாகரன், அழைப்பு  மணியில் சப்தம் கேட்டு கதவைத் திறந்தான்.  வாசலில், அவனுடைய மாமியார், இரு பெண்களுடன் நின்று கொண்டிருந்தார்.  வாசலில் அம்மாவைப் பார்த்த பிரியாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.  முழுசாக ஒரு நாள் கூட ஆகவில்லை.  அதற்குள் அவளுக்கு அம்மாவைப் பிரிந்து நீண்ட நாட்கள் ஆனமாதிரி, ஒரு துள்ளலுடன் ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, “ஏன்னம்மா, இத்தனை நேரம் பண்ணி விட்டீர்கள்?  உங்களை நான் காலையிலுருந்தே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்: என மிகவும் ஏக்கத்துடன் சொல்லிக் கொண்டே, அம்மாவுடன் உள்ளே வந்தாள். தன் புது மனைவியின் தாய்ப் பாசத்தைக் கண்டவன், மனதிற்குள் சிரித்துக் கொண்டே,  “என்ன பிரியா, நேற்றுத்தானே நாம் அந்த வீட்டிலிருந்து, இங்கு வந்தோம்.  அதற்குள் உனக்கு அம்மாவின் ஏக்கம் வந்து விட்டதா?” எனவும் கேலியாக் கேட்டான்.
                அதற்கு அவனுடைய மாமியார் “தம்பி, என் பெண்ணால் ஒரு நாள்கூட என்னை விட்டு இருக்க முடியாது..  எங்களுக்கும் அவளைவிட்டு ஒரு பொழுது கூட இருக்க முடியாது.  நான் என் ஆசையை அடக்க முடியாமல் வந்து விட்டேன்.  ஆனால், அவளுடைய அப்பாவோ, பெண்ணைப் பிரிந்த ஏக்கத்தில், சாப்பிடக் கூடப் பிடிக்காமல், இருக்கிறார்.” என்றாள்.   , தன்னுடன் வந்திருந்த இரு பெண்களையும் பார்த்து, “ஏண்டி, இங்கு வேடிக்கைப் பார்க்கவா உங்களை அழைத்து வந்திருக்கிறேன்.  போய் உள்ளே எல்லா வேலைகளையும் பார்த்துச் செய்யுங்கள்.  இனிமேல், நீங்கள் இருவரும் இங்குதான் வேலை செய்ய வேண்டும். பாத்துச் செய்யுங்கள்” எனவும் உத்திரவு போட்டு, அவர்களை உள்ளே செல்லவும் பணித்தாள்.
                முதலில் தன் மாமியார் ஏதோ பெண்ணைப் பார்க்க வந்திருப்பார் என நினைத்த, பிரபாகரன், முழித்துக் கொண்டான்.  மாமியாரின் வருகைக்கு காரணம் என்ன என்பதையும் புரிந்து கொண்டான்.  தன்னுடைய தனிச் சுதந்திரத்தில், மாமியாரின் தலையீடு அதிகம் இருக்கும் என்பதையும், தன் மனைவி, ஒரு பெரிய பணக்காரரின் ஒரே வாரிசு என்பதாலும், தனக்கென யாரும் உறவு இல்லைஎன்பதாலும், தன்னுடைய வீட்டில் அவர்களுடைய ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டான்.    என்னதான், செல்லமாக வளர்ந்தவள் என்றாலும், இனிமேல் அவள் தன் மனைவி. இந்த வீடு அவர்கள்  இருவருக்கும்தான் உரிமையானது.  மாமியார், மாமனார், வந்து போகலாம், ஆனால், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் தலையீடு இருக்கக் கூடாது.  முதலியேயே தடுத்து விட வேண்டும்.  புது மனைவி என கொஞ்சம் அசந்து விட்டால், பிறகு, தனக்கு தன்னுடைய வீட்டிலேயே சுதந்திரம் இருக்காது.” எனவும் தீர்மானித்து,  தன் மாமனார் வீட்டார் தலையீட்டுக்கு இப்பவே ஒரு முற்றுப் புள்ளியும் வைத்து விடவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தான்.
                அதனால், மெதுவாக, தன் வீட்டிற்குள் செல்லும் இரு பெண்களையும் பார்த்து “அம்மா, கொஞ்சம் நில்லுங்கள்.  நீங்கள் எல்லாம் யார்? நீங்கள் பாட்டுக்கு, வந்தவுடன், வீட்டிற்குள் செல்லுகிறீர்களே?  இங்கு உங்களை யார் கூப்பிட்டது?”  எனவும் கேட்டான்.  அவனுடைய கேள்விக்கு, பிரியா “என்னயிது, எங்கள் அம்மாதானே கூட்டிக் கொண்டு வந்தார்கள். தெரியாதது போல் கேட்கிறீர்களே” எனவும் தன் கோபத்தையும் சிறிது காட்டினாள்.  அப்போதும் மாமியார் அவனிடம் “என்ன தம்பி, உங்களுக்குத் தெரியாதா?  நாங்கள் எங்கள் பிரியாவை மிகவும் செல்லமாக வளர்த்து இருக்கிறோம்.  அவளுக்கு வீட்டு வேலைகளைச் செய்து பழக்கமும் இல்லை, தெரியவும் தெரியாது.  இங்கும் எங்களுடைய பெண் சிரமப்படக்கூடாதென்பதற்காகத்தான், இவர்களை கூட்டிக் கொண்டு வந்தேன். இனிமேல், இவர்கள் இருவரும் உங்களின் வீட்டில் பிரியாவுக்கு உதவியாக எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள்.  இனிமேல், வீட்டில் சமைக்க, மேல் வேலை செய்ய என பிரியா கஷ்டப்படவேண்டாம்.  இதனால், உங்களுக்கு ஒரு சிரமும் இல்லை. இவர்களின் சம்பளத்தை நாங்களே கொடுத்து விடுவோம்.” எனவும் கர்வமாகச் சொன்னாள்.
                அதைக் கேட்ட பிரபாகரன் சிரித்துக் கொண்டே, “என்ன அத்தை, பிரியா நேற்று வரைதான் உங்களின் செல்லப் பெண். இன்று அவள் என் மனைவி, எங்களின் குடும்பத் தலைவி என அழுத்தமாகச்  சொன்னான்.  தன் கணவனின் கருத்து என்ன என்பதைக் கூட தெரிந்து கொள்ள  பிரியா விரும்பவில்லை. மாறாக அவனிடம் “உங்களுக்கு ஏன் இந்தக் கவலை.  வீட்டில் வேலைக்கு எனக்கு உதவிக்கு ஆட்கள் வேண்டுமென்றுதானே, அம்மா இத்தனைச் சிரமப்பட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். அம்மாவின் மனதை வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்” எனவும் சொல்லி விட்டு, அவர்களை வீட்டிற்குள் செல்லவும் சொன்னாள்.
                தன் பெண் புதிதாக வந்த வேலைக்காரர்களுடன் உள்ளே சென்றவுடன், மாமியார் அவனிடம் “தம்பி, எங்களின் பெண்ணை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுத்ததிற்கு முக்கிய காரணமே, நீங்கள் தனி ஆள்.  உங்களின் சொந்த மூயற்சியால், நன்றாகப் படித்து, இன்று ஒரு பெரிய மில்டி நேஷனல் கம்பெனியில் நிர்வாகியாக இருக்கிறீர்கள் என்பதுதான்.  என்னதான் எங்கள் பிரியா உங்களை விரும்பினாலும், நீங்கள் தனியாளாக இருப்பதாலும்  தான், அவளுடைய அப்பா இந்தக் கலியாணத்திற்கு சம்மதம் தந்தார்.  எங்களின் ஒரே கொள்கை உங்களையும் எங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.  ஆனால், அதற்கு நீங்கள்தான் சம்மக்திக்க வில்லை.  சரி, முதலில், புதிதாக திருமணம் ஆனவர்கள், கொஞ்ச நாள், தனியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றுதான், நாங்கள் உங்களின் விருப்பபடியே உங்களைத் தனியாக  இருக்கவும் அனுமதித்தோம்.  எங்களுடைய எல்லா சொத்துக்களுக்கும் பிரியாதான் உரிமையானவள்.  அதனால், நீங்களும் அவளிஷ்டப்படியே இருங்கள். இதுதான், உங்களூக்கும் நல்லது,  உங்களூக்கு என்ன வேண்டும்.  வீட்டுக் கவலை இல்லாமல், நிம்மதியாக இருங்களேன்” எனவும் சொன்னாள்.  அவளின் பேச்சிலிருந்து, இந்த வீட்டிலும், அவர்களுடைய ஆட்சிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதையும், ஜாடையாகச் சொல்லியதை புரிந்து கொண்டான்.  முதல் முதலாக  வீட்டிற்கு வந்திருக்கும் மாமியாரிடம் அதிகம் பேச வேண்டாமென மௌனமாக இருந்து விட்டான்.
                பிற்பகல் உணவு முடிந்த பின்,  சிறிது நேரம் பிரியாவுடன், அம்மாத் தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள்.  அவர்களின் பேச்சில் தலையிடாவிட்டாலும், பிரபாகரனால் ஊகிக்க முடிந்தது.  தாயார் பெண்ணுக்கு இப்பவே, புருஷனை எப்படித் தன் கைக்குள் வைத்துக் கொள்வது என்பதுதான் முக்கிய புத்திமதியாக இருக்கும் என.
                பிரபாகரன் கூடத்தில் ஃபொனில் பேசிக் கொண்டிருந்தான்.  அவன் பெரியதாகவே பேசியதால், அவன் பேசியது நன்றாகவே பிரியாவுக்கும், அவளுடைய அம்மா தர்மாம்பாளுக்கும் கேட்டது.  “மேடம், நான் சொன்னதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.  எனக்கு இரவுஎட்டு மணியிலிருந்து, காலை ஆறு மணி வரை வேலைக்குத்தான் ஒரு பெண் வேண்டும்.  பெண் பார்க்க நன்றாகவும், நல்ல வயதுடனும் இருக்க வேண்டும். திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டும்.  சம்பளம் பற்றி கவலை வேண்டாம்.  அந்த பெண்ணை எனக்குப் பிடித்து இருந்தால் போதும்.  நீங்கள் கூடிய சீக்கிரம் ஒரு பெண்ணை பார்த்து, எனக்குத் தெரியப்படுத்துங்கள்.  நானே அவளை நேரில் பார்த்து முடிவு செய்கிறேன்.  என் ஃபொனெ நம்பரைக் குறித்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் என்னிடம் மட்டும் தான் பேச வேண்டும். மறந்து விடாதீர்கள் எனச் சொல்லிவிட்டு, மாமியாரையும், பிரியாவையும் பார்த்து சிரித்தபடியே தன்னுடைய அறைக்குள் சென்றான்.
                பிரபாகரனின் பேச்சைக் கேட்டவர்களுக்கு, தலை சுற்றியது.வீட்டு வேலைக்குத்தான் இருவர் ஏற்பாடாகிவிட்டதே.  பிரபாகனுக்கு எனத் தனியாக, அதுவும் இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரைக்கும் எதற்காக ஒரு பெண் என்பதும் அவர்களுக்கு சிறிது கவலை அளித்தது.  தர்மாம்பாள்  பிரியாவிடம் “என்னடீயிது புதுக் கதையாக இருக்கே.  உன் புருஷனைப் பற்றி நன்றாகத் தெரிந்துதானே, அவனைக் கலியாணம் செய்து கொண்டாய்? புது பெண்டாட்டி நீ இருக்கும்போது, எதற்கடி இராத்திரி வேலைக்காக தனியாக, அதுவும் ஒர் அழகான, திருமணம் ஆகாத  வயதுப் பெண்.  நீ இப்பவே உன் புருஷனைக் கண்டித்து வை.  உள்ளேப் போய், அவனுக்குத் தனியாக ஒரு வேலைக்காரி தேவை யில்லை. வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொல்” எனவும் பெண்ணைத் தூண்டி விட்டாள்.
                கணவனின் அறைக்குள் சென்றவளைப் பார்த்தவன், “என்ன பிரியா, அதிர்ச்சியாக இருக்கிறதா?  நமக்குத் திருமணம் ஆகி, நாமிருவரும் தனியாகச் சுதந்திரமாக வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறோம்.  இந்த விட்டில் எதிலும் மற்றவர்களின் தலையீடு இருக்கக்கூடாது.  நம் வீட்டிற்கு வேலைக்கு உதவி ஆள் வேண்டுமானால், நாமே பார்த்துக் கொள்ளனும். எனக்குத் தனியாக ஒருவள் வேண்டுமா என, நீதான் முடிவு செய்ய வேண்டும். நீ படித்தவள். யோசித்து, நீயாகவே முடிவு செய். நான் திரும்பி வருவதற்குள்.” எனச் சொல்லி விட்டு சென்றான்.
                யோசித்தவளுக்கு, புரிந்தது, இனிமேல் இது எங்களுடைய வாழ்க்கை, எங்களுடைய வீடு.  அம்மாவானாலும், இனிமேல் அவள் வேற்று மனுஷிதான். என் வீட்டு வேலையை நான் பார்த்துக் கொள்ளுவேன். பழக்கம் இல்லையென்றால் பழக்கப் படுத்திக் கொள்ளுவேன். படித்த என்னால் இந்த புது வாழ்க்கைக்கு எற்ப என்னை மாற்றிக் கொள்ள முடியாதா?   தன்னுடைய அம்மாவைப் பார்த்து “அம்மா, நீ உன்னுடன் அந்தப் பெண்களை அழைத்துக் கொண்டு போ. என் வீட்டு வேலைகளை நானே கவனித்துக் கொள்வேன்..  இந்த புதுச் சூழ்நிலைக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.” எனச் சொல்லிக் கொண்டே, அம்மாவிற்குக் குங்குமம் கொடுத்து அனுப்பிவிட்டு கணவனுக்காகக் காத்திருந்தாள்.
                                                வெளியே சென்ற பிரபாகரன் வீடு திரும்பும்போது, வீட்டில் பிரியாவைத் தவிர வேறு யாரும் இல்லாததைக் கண்டவன், மனதிற்குள் திருப்தி அடைந்தான்.  நல்ல வேளை. பிரியாவுக்கும் சுயமாகச் சிந்திக்கத் தெரிகிறது.  வந்தவன் தன் கையில் கொண்டு வந்திருந்த மல்லிகைச் சரத்தை ஆசையுடன் மனைவியின் தலையில் வைத்தான்.  பிறகு அவளிடம் மெதுவாக “பிரியா, நான் அம்மாவிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தது உனக்குப் பிடிக்கவில்லையா?  என்ன செய்வது,  எனக்கு, என் புது மனைவியுடன் நாள் பூராவும் உல்லாசமாக, உற்சாகமாக இருக்க வேண்டும். ஆனால், வீட்டில் சதா, இரண்டு  பெண்கள் இருந்தால், நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்,  எனக்கு என் தேவைகளை என் மனைவி செய்து கொடுத்தால்தான், திருப்தி.  அதை விட்டு விட்டு, யாரோ ஒரு பெண், நாம் கொடுக்கும் காசுக்கா, எனக்குச் சமைத்துப் போடுவது, உணவு கொடுப்பது என இருந்தால், அது சரியாக இருக்குமா?  என்ன, உனக்குப் பழக்கமில்லை. ஆனால், எனக்குத் தெரியுமே எல்லா வேலைகளையும் சுயமாகச் செய்து கொள்ள,  நான் உனக்குச் சொல்லித் தருகிறேன்.  ஒருவாரம் பார். பிறகு நீயே சொல்லுவால், நமக்கு தனியாக உதவிக்கு இப்ப ஆட்கள் வேண்டாம் என” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

        பிரியாவும் அவனிடம் “மேல் வேலைக்குத்தான் என் அம்மா இருவரை அழைத்து வந்தார்கள். ஆனால், நீங்கள் உங்களுக்கென தனியாக, இரவு முழுவதற்கும் ஒரு ஆள் வேணுமெனக் கேட்பது எப்படி நியாயம?  அப்படி ஒருவள் வருவதற்கு நான்  இடம் கொடுப்பேனா? எனவும் சிறிது கோபத்துடனும், வருத்த்துடனும் கேட்டாள்.  அதற்கு பதிலாக, பிரபாகரன் உள்ளே இருந்து, தன்னுடைய செல் ஃபோனை எடுத்து வந்து, “பிரியா, நான் ஃபொனெ செய்தவருக்கு, நீயே பண்ணி, எங்கள் வீட்டிற்கு எந்த விதமான வேலைக்கும் உதவிக்கு யாரும் வரத் தேவை இல்லை எனச் சொல்லி விடு” எனச் சொல்லி, செல் ஃபொனை அவளிடம் கொடுத்தான்.  அவளும், அவனுடைய ஃபொனில் கடைசியாகச் செய்த தொடர்பு எண்ணைப் பார்த்தாள் திகைத்துப் போனாள்.  அது அவளுடைய செல் ஃபொனெ. அதைப் பார்த்தவன் “அட அசட்டுப் பெண்ணே, உன்னுடைய செல் ஃபொனெ அடிப்பதைக் கூட கவனிக்காமல் உன் அம்மாவிடம் அப்படி என்ன இரகசியம். உன்னுடைய நம்பருக்குத்தான் ஃபொனெ செய்து, இரவு எனக்குத் துனையாக, கவனித்துக் கொள்ள ஒருவள் வேண்டும் எனச் சொன்னேன்.” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.  கணவனின் குறும்புத்தனைத்தை தெரிந்து கொண்டவள், “இப்படியெல்லாம் கூட என்னை ஏமாற்றுய்வீர்களா. இருக்கட்டும்?” எனச் சொன்னவளிடம், “பிரியா என்னை மன்னித்துக் கொள்.  நீ கொடுக்கும் எந்த தணடனையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்: என மிகவும் பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டே, “உங்களுக்குத் தக்க தண்டனை கிடைக்காமல் போகாது இரவு வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள்” எனவும் சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டு, கணவனுக்கு இரவு உணவு தயாரிக்க உள்ளே சென்றாள். சிரித்துக் கொண்டே, அவளுக்கு உதவியாக அவனும் சென்றான். 

                புது வாழ்க்கை அவர்களின்  தனிமை, இதில் இடையில் வர, யாருக்கும் பெற்றவர்களாகவே இருந்தாலும்  உரிமை இல்லை.