(ஜெயரமணி)
அம்மை அப்பனாவர்கள்
(ஜெயரமணி)
வழக்கம் போல் சந்திரசூடன் தன்னுடைய ஆபீஸிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். அப்போழுது நேரம் இரவு எட்டு மணிக்குமேல் ஆகிவிட்டது. அவன் வரும் போது அவனின் வண்டியின் ஓசை கேட்டவுடனே வாசலில் வந்து நின்று அவனை வரவேற்கும் மனைவி தாரா அன்று வெளியில் வரவில்லை. வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு, அங்கிருந்த அசாதாரணமான அமைதியின் காரணம் புரிந்து விட்டது. அவனின் முகத்தில் ஒரு சின்ன வருத்த ரேகை ஓடியது. உள்ளே வந்த மகனின் முகத்தைப் பார்த்த அவனின் தாயார் எதுவும் பேசாது, தன்னுடைய கண்களைத் துடைத்துக் கொண்டே, உள் பக்கம் போனாள். அவளின் போக்கினால், அவன் தாராவைத் தேடி மாடியில் இருக்கும் அவர்களுடைய அறைக்குள் சென்றான். அங்கு அறையில் இல்லை தாரா. பால்கனியில் இருக்கும் ஒரு சின்னத் தின்னையில் அமர்ந்து இருந்தவள், அவனின் வருகையை உணர்ந்தும் எழுந்து வராமல், தன்னுடைய கண்களைத் துடைத்துக் கொண்டாள்
தாராவைப் பார்த்தவனுக்கும் மனதில் ஒரு வேதனை வந்தது. அவன் மெதுவாக தாராவை நெருங்கி, அவளின் முகத்தை தன் கைகளால் தூக்கி, கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே “எப்பவாச்சு” எனக் கேட்க, அவளும் மெதுவாக :நான் ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனே” எனச் சொன்னான். அத்துடன் “ஒவ்வோரு முறையும் அம்மாவின் ஆசைகள் நிராசையாகும்போது அவர்களின் வேதனையும், கோபத்தையும் என்னால் தாங்க முடியவில்லை. நான் மௌனமாக வெளியில் வந்த வுடனேயே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். நான் என்ன செய்யட்டும். பகவான் ஏன் என்னைச் சோதிக்கிறாரோ?” என ஏக்கத்துடன் சொல்ல, சந்திரன் “தாரா, நீ படித்தவள். உனக்குத் தெரியாதா? நம் இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை. நாம் சந்தோஷமாகத்தானே இருக்கிறோம். அப்படியிருக்கும் போதும், நமக்கு குழந்தை பிறக்கும் காலம் தள்ளிப் போவது நம் கையில் இல்லை. எல்லாம் எப்ப நடக்க வேண்டுமோ, அப்போ கட்டாயம் கிடைக்கும். மனம் தளர விடாதே. உனக்கும் உன் உடல் நிலை தெரியும். அப்படி யிருக்க அம்மாவைப் போல் நீயும் ஒவ்வோரு முறையும் மனம் வேதனைப் பட்டுக் கொண்டு, உன் மனதையும், உடம்பையும் கெடுத்துக் கொண்டால் அது சரியா. அம்மாதான் அந்தக் கால மனுஷி. அவளுக்குத் தன் காலம் முடிவதற்குள் நம்முடைய குழந்தையை பார்க்க துடிக்கிறாள். அவளின் மீதும் குற்ற மில்லை. நம்மால் செய்யக் கூடியது ஒன்றுதான். பொறுமையாக இருக்கவேண்டும். நான் இதைப் பற்றி அம்மாவிடம் தெளிவாகப் பலமுறை பேசியும் அவளால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல், ஒவ்வோரு முறையும் உன்னிடம் கோபப்படுவது சரியல்ல. நான் அவளுக்குப் பதமாகச் சொல்லுகிறேன். நீ வருத்தப் படாதே. வா கீழே போவோம். நான் இன்று மதிய உணவு கூட சாப்பிடவில்லை. வேலை அதிகம் இருந்தது” எனச் சொல்லிக் கொண்டே, தாராவின் கைகளைப் பிடித்து அவளையும் எழுப்பி, தன்னுடன் அழைத்துச் சென்றான்.
தாராவுடன் கீழே வந்த சந்திரன் அம்மாவை நோக்கி, “அம்மா, எனக்குப் பசிக்கிறது சாப்பாடு எடுத்து வை.” எனச் சொல்லிக் கொண்டே, தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டு, முகம் கை கால் அலம்பச் சென்றான். மகன் பசியோடு இருப்பதைக் கேட்ட தாய், எதுவும் பேசாது சந்திரன் சாப்பிட உணவுத் தட்டை எடுத்து வைத்து, மேசையின் மீது அவனுக்குப் பரிமார காத்திருந்தாள். வந்தவனும், “நேரம் ஆகிவிட்டது. எல்லாரும் சேர்ந்தே சாப்பிடுவோம் எனச் சொல்ல, சிவகாமி தாராவுக்கும் ஒரு தட்டில் தோசையும், சாம்பாரும் போட்டு தனியாக வைத்தாள். தனக்கும் எடுத்துக் கொண்டு, சந்திரனுடன் மேசையில் அமர்ந்து சாப்பிட்டாள். எல்லாரும் மௌனமாகவே ஆகாரத்தை முடித்துக் கொண்டு, எழுந்தார்கள். சந்திரன் தன்னுடைய அம்மாவுடன் அவளூடைய அறைக்குள் சென்றான்.
“அம்மா, எனக்கு உன் வருத்தம் புரிகிறது. அதற்காக, ஒவ்வோரு முறையும் நீயும், தாராவும் இப்படி மனச் சோர்வு கொண்டு வருந்துவது சரியல்ல. என்ன எங்களுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள்தானே ஆகிறது. எங்களுக்கும் வயசு இருக்கு. குழந்தை மெதுவாகத்தான் பிறக்கட்டுமே. அதற்காக நீயும், தாராவும் வருத்தப்படுவதும். நீ உன் துக்கம் தாளாமல் புலம்ப, அதனால் தாராவும் தனக்குக் கரு உருவாகாதது தன்னுடைய தப்போ என எண்ணிக் கொண்டு, மனம் வருந்துவது சரியா? எல்லாம் தெரிந்த உனக்கு நான் தனியாக இனிமே என்ன சொல்ல முடியும். குழந்தை என்பது ஆண்டவனின் அருள். அது ஒன்றும் மரத்தில் காய்க்கும் காயல்ல. கடைத் தெருவில் காசு கொடுத்து எடுத்துக் கொண்டு வர. அதற்கு ஆண்டவனின் கருணை வேண்டும். நமக்கு எப்போ குழந்தை சுகம் உண்டோ, அப்ப கட்டாயம் கிடைக்கும். அதுவரை மனம் தளராமல் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். கிடைக்காத ஒன்றுக்குத் தாராவை காரணம் காட்டக் கூடாது. அவளும் உன்னைப் போல ஒரு பெண்தான். உனக்கு இருக்கும் ஏக்கம் அவளுக்கும் இருக்கு. எனக்கு மட்டும்மில்லையா? அதற்காக, நானும் உங்களைப் போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு புலம்பினால் சரியாகுமா? அது எனக்கு அழகா?” என வருத்தத்துடன் சொல்ல, சிவகாமியும் “எனக்கும் தெரிகிறது சந்திரா. ஆனாலும், உங்களுடன் திருமணமானவர்கள் எல்லாம் கையில் குழந்தையுடன் வரும்போது, நீங்களிருவர் மட்டும் தனியாக இருப்பது எனக்கு எத்தனை வேதனையாக இருக்கு தெரியுமா? தாராவும் நல்ல பெண் தான். நானும் தான் உங்களின் இருவரின் ஜாதகத்தைப் பார்த்து, பத்து பொறுத்தம் இருக்குன்னு ஜோசியர் சொன்னதால்தான், இந்தக் கலியாணத்தை முடித்தேன். இப்போ பாரு, விளையாட்டாக வருடம் ஐந்து ஓடிவிட்டது. இன்னும் இந்த வீட்டில் ஒரு தூளி கட்ட வேளை வரவில்லை. எல்லாம் என் விதி. என் காலத்திற்குள் ஒரு வாரிசை பார்த்து சீராட்ட நான் கொடுத்து வைக்கவில்லை” எனச் சொல்லிக் கொண்டே திரும்பவும் கண்களில் நீர் வடிய சந்திரனின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா, நீயும் என்னுடைய வாழ்வு நன்றாக இருக்க வேண்டுமென்றுதான் இத்தனை நாளும் வேண்டிக் கொண்டுதான் இருக்கிறாய். நீயாக பார்த்து தீர்மானம் செய்த தாராவைத்தான் நாளும் மணந்து கொண்டேன். திருமணமான நாள் முதல் இந்த நிமிஷம் வரை, இல்லை இல்லை, என் வாழ்நாள் பூராவும் தாரா என் மனதிற்கு இதமாக, ஆதரவாகத்தான் இருக்கிறாள். எங்கள் வாழ்வில் எந்த ஒரு குறையுமில்லை. எங்களுக்கு குழந்தை பிறக்காததிற்குக் காரணம் என்ன என்றும் தெரியவில்லை. நீங்களும் உங்கள் மனத் திருப்திக்காக ஜாதகம் பார்த்தீர்கள். ஒன்று மட்டும் சொல்கிறேன் கேட்டுக் கொள். திருமண வாழ்வு நிம்மதியாக இருக்க, கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு புரிதலும், அன்னோன்யமும் இருந்தால் போதும். குழந்தை என்பது கூடுதல் இன்பந்தான். எங்களின் ஜாதகம் மட்டும் பொறுந்தியிருந்தால் போராது, எங்களின் இரத்தப் பிரிவும் எங்களுக்குக் வம்சம் வளர பொறுந்தியிருக்க வேண்டும். அதில் எங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால் என்ன. அதற்காக நாங்கள் தேவையான மருந்துகள் சாப்பிடுகிறோம். எல்லாவற்றுக்கும் பகவான் அருள் தேவை. உனக்குத் தெரியாதது இல்லை. இனிமேல் குழந்தை பிறப்பது தாமதப்படுவதற்காக நீயும் வருத்தப் பட்டு, தாராவையும் மனங்கலங்கவிடாதே. நான் நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பது உன்னுடைய கையில்தான். ;புரிந்து கொள்” என திடமாகவும், அதே சமயம் அம்மாவின் மனம் புன்படாத வகையில் மெதுவாகவே சொன்னான்.
சந்திரனின் பேச்சைக் கேட்ட, சிவகாமியும் “சந்திரா, எனக்கும் தெரிகிறது. ஆனாலும், வயதாக வயதாக என்னுடைய ஏக்கம் அதிக மாகிறதே தவிர, நீ சொல்லுவது போல் விஷயங்களை புரிந்து கொண்டாலும், மனதில் ஏக்கம் தாங்காமல் எதைஎதையோ பேசி, நானும் வருந்துகிறேன். பாவம் அந்தப் பெண்ணையும் துன்பப்பட வைத்து விடுகிறேன். எனக்காக, நீ இன்னும் ஒரு முறை இருவரும் டாக்டரிடம் சென்று நன்றாக பரிசோதித்துக் கொண்டு வாருங்களேன்: எனவும் சொன்னான். அவளின் விருப்பத்தை மறுக்க வழியில்லாமல், “சரியம்மா அப்படியே அடுத்த வாரத்தில் ஒரு நாள் டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு போய் வருகிறோம்:, எனச் சொல்லி விட்டு, தங்களுடைய அறைக்குப் படுக்கச் சென்றான்.
தன்னுடைய அறைக்குள் சென்றவன், அங்கு தாரா இல்லாத்தைப் பார்த்து, பால்கனிக்குச் சென்றான். அங்கு தாரா பனியில் உட்கார்ந்து கொண்டு, வெளியில் வீசிய குளிர்காற்றால், உடம்பு நடுங்க, அமர்ந்திருந்தாள். அவளின் அருகில் சென்றவன் “தாரா, இதென்ன, இப்படிக் குளிரில் இருக்கிறாய். உன் உடம்புக்கு ஆகுமா? உள்ளே வா”எனச் சொல்லிக் கொண்டே, அவளையும் அழைத்துக் கொண்டு, உள்ளே வந்தான். அங்கிருந்த படுக்கையில் அவளையும் அனைத்துக் கொண்டே உட்கார்ந்தான். பிறகு மெதுவாக அவளிடம் சொன்னான் :தாரா, நாம் இப்போ அம்மாவிடம் தீர்மானமாகச் சொல்லி விட்டேன். குழந்தை என்பது ஆண்டவனின் அருள். அது கிடைக்கும் வரை, நாம் பிராத்தனை பண்ணுவோம், அது கிடைக்கத் தாமதானால், அதற்காக வீட்டில் நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கோருவர் மனச் சங்கடப்பட்டுக் கொண்டு, வருத்தத்தைக் காட்டுவது சரியல்ல. எனக்கு நம்பிக்கை இருக்கு. நமக்கென்று கட்டாயம் ஒரு நாள் பகவான் குழந்தைச் செல்வத்தைக் கொடுப்பான். எப்போ, எப்படி என்று எனக்குத் தெரியாது. அது வரை நான் நம்பிக்கை இழக்க மாட்டேன். நீயும் நம்பிக்கையுடன் இரு. அம்மாவின் திருப்திக்காக, நாம் இருவரும் அடுத்த வாரத்தில் ஒரு முறை டாக்டரிடம் சென்று வருவோம். கவலைப் படுவதால், ஆகப் போவது ஒன்றுமில்லை. நீங்கள் இருவரும் இப்படி துக்கப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த வீட்டில் நான் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். என்னுடைய சந்தோஷம் உனக்கு முக்கியமில்லையா. அதனால், இனிமேல் இந்த விஷயதிற்காக நீ கவலைப் படக்கூடாது.: எனக் கண்டிப்பாகவும், அதே சமயம் இதமாகவும் சொல்லி விட்டு, அவளையும் அனைத்துக் கொண்டு படுத்தான்
அடுத்த வாரத்தில் ஒரு நாள் இருவரும் தங்களுடைய டாக்டரைச் சந்தித்தார்கள். அவர் சந்திரனிடம் “சந்திரா, உங்களின் இரத்தப் பிரிவினால், உங்களுக்குள் வம்சம் வளருவது நிச்சயமில்லை. நானும் உங்களுக்கு பலப் பரிட்சைகள் செய்து பார்த்து விட்டேன். இனிமேல், நீங்கள் இருவரும் சேர்ந்து யோசித்து, தற்காலத்தில் இருக்கும் மருத்துவ வசதிகளைக் கொண்டு, வேறு ஏதாவது ஒரு வழியில், உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க முயற்சி செய்யுங்கள். நீ சொல்லியதிலிருந்து, உன் தாயார் தன்னுடைய பேரக்குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைபடுகிறார். அது நியாயமானதுதான். நீங்கள் சம்மதப்பட்டால், சந்திரனின் உயிரணுவை எடுத்து, வேற்று ஒரு பெண்ணின் கருவிலோ, அல்லது வேற்று ஆணின் உயிரணுவிவை எடுத்து, உங்களின் மனைவியின் கருவிலோ செலுத்தி, உங்களுக்கு செயற்கை முறையில் ஒரு வாரிசு உருவாக்க விஞ்ஞான வசதிகள் நிறைய இருக்கிறது. இந்த வழியில் செயற்கை முறையில் உங்களில் ஒருவருடைய குழந்தையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இது விஷயமாக நீங்களே விவரமாக இன்டெர்னெட்டில் பார்த்து யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். உங்களின் முடிவு தெரிந்தபின், அதற்குத் தகுந்தவாறு நான் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். இந்த விஷயம் நம் மூவருக்குள்ளேயே இருக்கட்டும்:. எனச் சொல்லி, அவர்களைச் தேற்றி அனுப்பி விட்டார். வீட்டிற்கு வரும் வரையில் இருவருமே பேசவில்லை. மனம் நிறைய வேதனையும், நிராசையுமாக வந்தார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன், முகத்தில் மிகவும் ஏக்கத்தையும், வேதனையையும் வைத்துக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தவன், அவளிடம் மிகவும் சாதாரணமாகவேச் சொன்னான் “அம்மா, இந்த முறையும் டாக்டர் எங்களுடைய இரத்தத்தை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார். அவர் இந்த முறை எங்களுக்கு நல்ல விதமாக சோதனை பலன் வருமெனவும் நம்புவதாகச் சொன்னார். எங்களை இன்னும் சில காலம் பொறுமையாக இருக்கவும் சொன்னார். நாமும் காலம் வரும்வரை காத்திருப்போம்”எனச் சொல்லிவிட்டு, இருவரும் சாப்பிட்டுவிட்டு தங்களுடைய அறைக்குள் சென்று விட்டார்கள். அம்மாவும் ஒன்றும் சொல்லாது, சுவாமியை வேண்டிக் கொண்டே படுக்கச் சென்றாள்.
தங்களின் அறைக்குள் வந்தவுடன், தாரா, “எதற்காக ஒவ்வோரு முறையும் நீங்கள் அம்மாவிடம் ஏதாவது சமாதானம் சொல்லுகிறீர்கள். அவர்களின் ஆசையை நம்மால் நிறைவேற்றமுடியாத போது, வீணாக அவரின் உள்ளத்தில் ஆசைகளை ஏன் வளர்க்கிறீர்கள்” என வேதனையுடன் கேட்டாள்.. சந்திரன் அவளுக்குச் சொல்லுவது போல் தனக்குள் சொல்லிக் கொண்டான் “என்ன செய்வது தாரா. என்னால் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும், ஏதோ, ஒரு பொய் நம்பிக்கையால் அவள் மனம் கொஞ்சமாவது நிம்மதி அடைந்தால் அதுவே எனக்கு இப்பப்போறும். நாமும் டாக்டர் சொன்னதைப் பற்றி நன்றாக யோசித்து முடிவெடுப்போம். அது வரை, இப்படியே நிலைமையைத் தொடர்ந்துகொண்டிருக்கலாம்.” எனவும் சொல்லிவிட்டு, படுக்கலானான்.
இரு வாரங்கள் சென்றவுடன், ஒரு இரவில் சந்திரன் தாராவிடம் “தாரா, டாக்டர் சொன்னதைப் பற்றி யோசித்தாயா என்ன முடிவுக்கு வந்திருக்கிறாய்?” எனக் கேட்டான். தாராவும் அவனிடம் “நான் யோசித்து இருப்பதை பிறகு சொல்கிறேன். முதலில் உங்களின் முடிவு என்ன எனச் சொல்லுங்கள்”எனவும் கேட்டாள். சந்திரன் மெதுவாகவேச் சொன்னான், “தாரா, நம்முடைய இருவரின் இரத்தப் பிரிவும் ஒன்று சேராததினால்தான், நமக்குள் ஒரு உயிர் வளர வழியில்லை. அதனால், நம்மில் ஒருவர் வேறு ஒருவருடைய உயிரணுவை தன்னுடைய உயிரணுவுடன் இனைய சம்மதிக்க வேண்டும். என்னுடைய உயிரணுவை வேறு ஒரு பெண்ணில் கருவில் வைத்து, வளர்த்தால், அப்போ ஊராரின் கண்களுக்கு உன்னிடம்தான் குறை இருப்பது போல் தெரியும், அதனால், உன்னைப் பற்றி மற்றவர்கள் ஒரு குறைவாக நினைத்தால், அதை என்னால் தாங்க முடியாது. அதனால்தான், நான் மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். அதற்கு நீயும் சம்மதிக்க வேண்டும்” என மிகவும் சங்கடத்துடன் சொன்னான். அவனின் குரலில் இருந்த கலக்கத்தையும், முகத்தில் தெரிந்த வேதனையையும் கண்ட தாரா அவனருகில் சென்று அவனுடன் இனைந்து அமர்ந்தாள். சந்திரனின் கைகளை எடுத்து தன்னுடைய கைக்குள் வைத்துக் கொண்டு “எதுவானாலும் சொல்லுங்கள். நாமிருவரும் இப்போ ஒருவரையோருவர் புரிந்து கொண்டு முடிவு எடுக்கவேண்டிய நேரம் இது. உங்களின் யோசனையைச் சொல்லுங்கள். எனக்கு அது சம்மதமா எனவும் சொல்லுகிறேன்: என மிகவும் இதமாகச் சொன்னாள். ஒன்றும் பேசாது, தாராவைத் தன்னுடன் அனைத்துக் கொண்டே, தங்களுடைய கட்டிலுக்குச் சென்று அதில் படுத்துக் கொண்டு, தாராவையும் தன்னுடன் அனைத்துக் கொண்டே படுத்தான். தன்னுடைய கைகளைச் சுற்றி, தாராவை தன்னுடன் இறுக்கிக் கொண்டான். அவனின் அனைப்பின் மூலம், சந்திரனுடைய மனதில் ஏதோ ஒரு வேதனை ஓடுவதைப் புரிந்து கொண்ட தாராவும், அவனைத் தன் கைகளால் அனைத்துக் கொண்டே சந்திரனின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். தாராவின் முகத்தைப் பார்க்கத் துனிவில்லாமல், சந்திரன் தன்னுடைய பார்வையை அறைக்குள் செலுத்திக் கொண்டே “தாரா, நான் சொல்லும் வழியினால், நமக்குக் குழந்தை உருவாகும் முறை நம்மக்குள்ளேயே இருக்க வேண்டும். நம் இருவரைத் தவிர இது சம்மதமாக எந்த ஒரு சின்ன விபரமும் வெளியேக் கசிந்தால், அதை நம்மால் தாங்க முடியாது. அதனால் நான் மிகவும் தீவிரமாக யோசித்து, பலதும் யோசித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். அது முதலில் உனக்கு சம்மதம் தராது. இருந்தாலும் நீயும் என்னுடைய முடிவில் இருக்கும் சாதகமான விஷயங்களை தெரிந்து கொண்டால், நீயும் என்னுடைய முடிவுக்குச் சம்ம்மதிப்பாய்.” என மிகவும் பூர்வ பீடிகையுடன் சந்திரன் சொல்லத் தொடங்கும் முன்பே தாராவின் உள்ளத்தில் ஒரு கலக்கம் வந்தது. அவன் ஏதோ தனக்குப் பிடிக்காத முறையைச் சொல்லப் போகிறான் எனவும் ஊகித்தவள் அது எதாக இருக்குமெனவும் புரியாது தவித்தாள். ஆனால், தன்னுடைய கலக்கத்தை வெளியில் சொல்லாது அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே “அதிகமாக பீடிகை போடாமல், விஷயத்தைச் சொல்லுங்கள். எப்படியும் அதை சொல்லித்தானே தீர வேண்டும்” எனவும் கேட்க, சந்திரனுக்கு தன்னுடைய முடிவை தாரா எப்படி ஏற்பாள், அது தெரிந்த வுடன் அவளின் வெறுப்பும் வேதனையும் எப்படி வெடிக்கும் எனவும் தெரியாது தயக்கத்துடனே சொல்லச் தொடங்கினான்.
“தாரா, எனக்கு நம்முடைய குழந்தை உன் கருவில் தான் வளரவேண்டும். என்னுடைய குழந்தையென உன்னுடைய கருவில் வளரும் உயிரை நான் மனதார என்னுடையதாக ஏற்றுக் கொள்வேன். அந்தக் கரு வளரும் இரகசியம் உனக்கும், எனக்கும் நம்முடைய டாக்டருக்கு மட்டுமே தெரியும். உன்னுடைய கருவுக்குள் வளர வரும் உயிரணு எங்கிருந்து வருகிறது, அதன் மூலம் என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம். விஞ்ஞான முறையில் நடக்கும் இரகசியங்கள். உன்னுடைய கர்ப்பப்பையில் ஒரு உயிர் வளரும். அது நம்முடையதாகவே நாமும் ஏற்றுக் கொள்வோம். நம்முடைய குடும்பத்தாருக்கும், நீண்ட காலங்கடந்து நமக்குள் ஒரு குழந்தை வளருகிறது எனபது மட்டும் தெரிந்தால் போதும். என்னுடைய அம்மாவின் ஆசையும் நிறைவேறும். ஊராரின் கண்களின் முன் நாமிருவருமே வளரும் குழந்தையின் தாய் தந்தையாவோம். உன் மனதிற்குள், அது வேறு ஒருவரின் உயிரனு என்னும் எண்ணம் வரக்கூடாது. அது என்னுடையதாகவே நீ நினைத்துக் கொண்டு, அந்தக் கருவை உன் கர்ப்பப்பையில் வைத்து வளர்க்க நீயும் துனையாக இருக்க வேண்டும். உன் மனதில் எந்த விதமான கலக்கமோ, உறுத்தலோ இன்றி, நீ சாதாரணமாகவே அதை வரவேற்க வேண்டும்” எனச் சொல்லும் போதே, தாராவின் உடலில் ஒரு நெருப்பு பற்றி எறிந்தது. அவளையுமறியாமல், தன்னுடைய கோபத்தையும், வருத்தத்தையும் காட்டினாள். அவளுடைய கைகள் மிகவும் வேகமாக சந்திரனின் மார்பில் குத்தாக விழுந்தது. தன்னுடைய மார்பில் விழுந்த குத்தில் வேகத்திலேயே தாராவின் கோபத்தையும், வருத்தத்தையும் புரிந்து கொண்ட சந்திரன், “தாரா நாந்தான் முதலிலேயே சொன்னேனே, நமக்குள் ஒரு குழந்தை உருவாகும் இரகசியம் நமக்குள் மட்டுமே இருக்க வேண்டும். நீ உணர்ச்சி வசப்படக்கூடாது எனவும் சொன்னேனே. என்னுடைய யோசனை ஒரு நாளில் ஒரு நிமிஷத்தில் எடுத்த முடிவல்ல. நீண்ட நாட்களாக, டாக்டரிடம் சென்று வந்த அந்த வினாடியிலேயிருந்து எனக்குள் பல முறை யோசித்து, எடுத்த முடிவு. உன்னுடைய ஒத்துழைப்பு இல்லாமல், நமக்குள் ஒரு குழந்தை உருவாக வேண்டுமென்றால், என்னுடைய உயிரணுவை நான் என் கண்ணால்கூட பார்க்காத, வேறு ஒரு பெண்ணில் கருவில் வளர வேண்டும். பிறகு அந்தக் குழந்தையை நம்முடையது என உலகில் காட்ட வேண்டுமென்றால், நமக்குள் ஒருவருக்கு குறை இருப்பதை நிச்சயப்படுத்தியும், அதுவும் குறை உன்னிடம் இருப்பது போல் காட்டினால்தான், வேறு ஒரு பெண்ணின் கருவில் வளரும் ஒரு குழந்தையை நம்முடைய குழந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போ நீ சொல்லலாம், என்னால் முடியாத நிலையில், நமக்கு வேறு ஒரு பெண்ணின் கருவில் வளரும் குழந்தையை நம்முடையதாக ஏற்றுக் கொள்ளலாம் என. அந்தக் கரு முழுவதுமாக உருவாகி, அது உலகில் பார்வைக்கு வரும் வரையும், நாம் ஒவ்வோரு முறையும், கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வளரும் நிலையில் நம்முடைய மனதிற்குள் எத்தனை வேதனைகள், எதிர்பார்ப்புக்கள் இருக்கும். மேலும், தன்னுடைய கருவில் வளர்த்து ஒரு குழந்தையை நமக்குக் கொடுக்க, இன்று ஏதோ ஒரு சூழ்நிலையினால் சம்மதித்த அந்தப் பெண், குழந்தையைப் பெற்றவுடனேயே, அதைப் பிரிந்து நம்மிடம் கொடுக்கும் போது அவளீன் மனது எத்தனைச் சங்கடப்படும், கஷ்டப்படும். வறுமை காரணமாகச் சம்மதித்தாலும் அந்தக் குழந்தையை முழுவதுமாக வளர்க்கும் வரை அந்தப் பெண்ணும் எத்தனை ஏச்சுப் பேச்சுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதெயெல்லாம் யோசித்துத்தான் நான் முடிவுக்கு வந்தேன். யாருடைய உயிரணு எனத் தெரியாமல், ஒரு நல்ல சக்தியுள்ள உயிரணு உன்னுடைய கருவில் வளர்ந்தால், அதன் வளர்ச்சியை நாம் அருகில் இருந்தே பார்க்கலாம், மேலும் அது உன்னுடலில் வளரும் போதே, உன்னையுமறியாமல், உன்னுடைய தாயுள்ளம் அதன் மீது பாசத்தையும் பரிவையும் காட்டுவாய். எனக்கும் என்னுடைய தாராவின் கருவில் வளருவது என்னுடைய குழந்தையே என மனதும் ஆனந்தமாக ஏற்றுக் கொள்ளும். அதனால்தான் நான் இந்த யோசனையை உன்னிடம் சொன்னேன்” எனவும் தாராவுக்குச் சமாதானமாகச் சொன்னான்.
சந்திரன் எத்தனை விதமான சமாதானங்களைச் சொன்னாலும், தாராவின் மனதில் அதை ஏற்றுக் கொள்ளத் துணிவில்லை. சந்திரனைத் தவிர, வேறு ஒரு ஆனின் உயிரணுவை தன்னுடைய கருவில் வாங்கக் கூட அவளுக்குக் கூசியது. உடலில் ஆயிரம் தேள்கள் கொட்டுவது போல் வலியும் வேதனையும் ஏற்பட்டது. உறவில்லாத ஒரு பெண்ணின் கருவில் சந்திரனுடைய உயிரணு வளர்வதையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சந்திரனுக்கு உரிமையான உறவில்தான் வம்சம் வளர வேண்டும் என்பதில் அவள் தீவிரமாக இருந்தாள். அதனால், அவள் மெதுவாக சந்திரனைப் பார்த்து “உங்களின் யோசனையைச் சொல்லி விட்டிர்கள். அதில் எனக்கு எத்தனை அருவறுப்பு இருக்கும் என்பதை நீங்கள் யோசிக்க வில்லையே. நான் பஸ்ஸில் போகும்போதுகூட, கூட்டத்தில் மற்ற ஆண்களின் பார்வையையே என்னால் சகிக்க முடியலையே. அப்படியிருக்க, என் கண்ணால் பார்க்காவிட்டாலும், எனக்கு எந்த விதமான உறவில்லாத ஒருவனின் உயிரணுவை என்னுடைய கருவில் வளர்க்க நான் எப்படி சம்மதிப்பேன் என நீங்கள் எதிர்பார்த்தீர்கள். அது வேண்டாம். நமக்கு உரிமையான உறவின் மூலம்தான் நம்முடைய வம்சம் வளர வேண்டும். மேலும் உங்களின் அம்மாவைப் பற்றி நினைத்துப் பார்த்த்தீர்களா? அந்தக் கால மனுஷி. வேறு ஒரு பெண்ணின் கருவில் வளருவது, உங்களுடைய குழந்தை என உங்களால் உங்களின் அம்மாவிடம் சொல்ல முடியுமா? அதைக் கேட்டால், அவர்கள் என்ன வேதனைப் படுவார்கள். என் மீதுதான் கோபம் கொள்வார். ஏற்கெனவே அவருக்கு என்னிடம்தான் குறை இருக்குமோ எனச் சந்தேகம் இருக்கு. இப்போ அது நிச்சயமாகிவிடும். அப்படியானால், அவர் ஏன் உங்களுக்கு இன்னோரு திருமணம் செய்ய முடிவுக்கு வரக்கூடாது. அவர் வருவதென்ன. நானே அந்த முடிவுக்கு வருகிறேன். நானே உங்களுக்காக, ஒரு நல்ல பெண்ணை, என்னுடைய சக்களத்தியாக ஏற்றுக் கொள்ளூகிறேன். அதற்கு சட்டரீதியாக எந்த ஒரு பிரச்சினையும் வராமல், நானே என்னுடைய உடலின் குறையால், உங்களுடம் தாம்பத்திய வாழ்வு வாழ வழியில்லையெனச் சொல்லி, உங்களிடமிருந்து விலகி விடுகிறேன். பிறகு நீங்கள் வேறு ஒரு நல்ல பெண்ணை மணந்து கொண்டு, உங்களின் அம்மாவின் ஆசையைநிறைவேற்றுங்கள்” எனச் சொல்லிக் கொண்டே, தன்னுடைய துக்கம்தாங்காது அழத்தொடங்கினாள். தனக்கு வேறு ஒரு திருமணம் செய்ய யோசனை சொன்னவுடனேயே, சந்திரனின் கோபம் எல்லை மீறியது. என்ன செய்கிறோம் எனவும் யோசிக்காது, தன் மார்பில் அனைத்திருந்த தாராவின் கன்னத்தில் பளியென அடித்து விட்டான். அடித்து விட்டவுடன் தான் தான் என்ன செய்தோம் எனவும் உணர்ந்தான். திருமண நாளிலிருந்தே, ஒரு சின்ன விஷயத்திற்கும் கோபத்தைக் காட்டாத தான், அன்று ஏன் அப்படி ஒரு முரட்டுத்தனமாக தாராவை அறைந்து விட்டோம் எனவும் துடித்தான். அவனின் கண்களிலும் கண்ணீர் பெருகியது. தன்னுடைய முரட்டுத்தனத்தால் சிவப்பான தாராவின் கன்னங்களைக் கண்டவன் தனக்குள்ளேயே கழிவிரக்கம் அடைந்தான். தன்னுடைய இதழ்களால் சிவந்த கன்னங்களைத் தடவினான். “என்னை மன்னித்து விடு தாரா. என்னால் வேறு ஒரு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்படியிருக்க, உன்னுடைய இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் நான் குடும்பம் நடத்துவேன் என எப்படி நீ நினைக்கலாம்” எனவும் கோபம் தாங்காது கேட்டவனைப் பார்த்த தாராவும், “நான் உங்களை உரிமையுடன் வேறு ஒரு பெண்ணை மணந்து, தகப்பனாகுங்கள் எனச் சொன்னதற்கே இத்தனை வேதனையும், கோபமும் பட்டீர்கள் என்றால், என் மனதைப் பற்றி யோசித்துப் பார்த்த்தீர்களா? கண்ணுக்குச் தெரியாவிட்டாலும், வேறு ஒருவருடைய பார்வையையே சகிக்க முடியாத என்னால், மற்றவனின் உயிரணுவை என்னுடைய கருவில் ஏற்று எப்படி வளர்க்க முன் வருவேன் என நீ எதிர்பார்த்தீர்கள். அது மட்டும் சரியா. வேண்டாமப்பா இந்தப் பேச்சு. கேட்கவே நாராசமாக அருவருப்பாக இருக்குப்பா. நாம் இப்படியே இருப்போம். நீங்கள் சொல்வது போல் கடவுளின் கருனை இருந்தால், நமக்கென்று எதாவது ஒரு வகையில் ஒரு குழந்தை கிடைக்கும். அந்த நாள் வரை நாம் ஒருவருக்கொருவர் குழந்தையாக இருப்போம். அம்மாதான் மிகவும் ஏக்கமடைந்து போவார். நாளடைவில், நமக்கு வயதாகி விட்டால், அவரும் சமாதானமாகி விடுவார். இனிமேல் இந்த ஒரு விஷயத்திற்காக, நாமிருவரும் எந்த விதத்திலும் வருத்தமோ, ஏமாற்றமோ அடைய வேண்டாம். உங்களின் மடியில் நான் ஒரு நாள் குழந்தையாக இருக்கிறேன். நீங்கள் ஒரு நாள் என் மடியில் குழந்தையாக இருங்கள். ஆண்டவன் எனக்கு வரமாக கொடுத்த நீங்கள் இருக்கும்போது, இல்லாத ஒரு குழந்தைக்காக நான் ஏன் வருத்தம் அடைய வேண்டும். எனக்கு இந்த வாழ்வே போறும்” எனச் சொல்லிக் கொண்டே, சந்திரனின் முகத்தை தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டு, அவன் கண்களில் வழிந்தநீரைத் துடைத்து விட்டாள். தாராவின் முடிவைக் கேட்ட சந்திரனின் மனதிம் சமாதானகியது. இருவரும் வேறு எதைப் பற்றியும் பேசாது, ஒருவரை ஒருவர் அனைத்திக் கொண்டே, தூங்கலானார்கள்.
காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது. சந்திரனின் பள்ளிக் கால நண்பன் முரளி, தன்னுடைய புதிய மனைவியுடன் அவர்கள் இருந்த பிளாட்டுக்கேக் குடி வந்தார்கள். முரளி தன்னுடைய சுய விருப்பப்படியே தான் காதலித்த பெண்ணையே பெற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக மணம் செய்து கொண்டான். முரளியின் மனைவி ராதிகாவும், தாய் தந்தை இல்லையென்றாலும், மூத்த சகோதரனுடைய ஆதரவில்தான் இருந்து வந்தாள். ராதிகாவின் அண்ணி, தன்னுடைய சகோதரனுக்கு ராதிகாவை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாள். அவளின் ஆசைக்கு காரணம் இருந்தது. அவளின் சகோதரன் ஒரு பொறுப்பற்றவன். நிலையான வேலையில் தங்கமாட்டான். அடிக்கடி எதாவது ஒரு காரணம் சொல்லி வேலையை விட்டுவிடுவான். மிகவும் ஜாலியான சொகுசு பேர்வழி. அப்படிப்பட்ட ஒரு பையனைப் பெற்றவர்களுடைய வாழ்க்கை மிகவும் சோதனையாகவே இருந்தது. அதனால், பெறுப்பில்லாத தன்னுடைய தம்பிக்கு, பொறுப்பும், கணிசமான ஊதியம் கிடைக்கும் ஒரு எம்.என்.சி. கப்பெனியில் வேலைபார்க்கும் ராதிகாவை திருமணம் செய்து வைத்து விட்டால், அவளால் தன்னுடைய பெற்றோர்களின் வாழ்வு சீராகும். தம்பியும், சரியான வருமானமில்லாவிட்டாலும், மணைவியின் வருவாயில் சௌகரியமாகவே வாழ முடியும் என ஒரு சுயநலத்தினால்தான், தாய் தந்தையற்ற ராதிகாவை தன்னுடைய தம்பிக்கு மணம் முடிப்பதில் தீவிரமாயிருந்தாள். மனைவியின் சொல்லுக்கு அடங்கிய புருஷன், தங்கையின் விருப்பத்தை முக்கியமாக நினைக்கவில்லை. அதனால், ராதிகா தான் தன்னுடன் பணியாற்றும் முரளியை விரும்புவதையும், அவனையே கணவனாக அடைய விரும்புவதாகவும் சொன்னபோது, அவளுடைய விருப்பத்தை முழுவதுமாக நிராகரித்து விட்டார்கள். தங்களுடைய பேச்சுப்படி இருந்தால், தானும் சகோதரன் என்ற உரிமையுடன், அவளுடைய வாழ்விற்கு வசதியாக திருமண ஏற்பாடு செய்வோமென்றும் சொல்லி, அவர்களுடைய விருப்பத்தை மீறினால், ராதிகாவிற்கு விட்டிலேயே இடமில்லையெனவும் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள். தாய், தந்தை இல்லாதவளுக்கு சகோதரனும் விரோதியாகி விட்டதால், ராதிகா தனியாளாள். முரளி வருத்தப்பட வில்லை. ஏனெனில், முரளியின் பெற்றோர் முதலிலேயே அவனுடைய காதலுக்கு ஒப்ப வில்லை. தங்களுடைய விருப்பத்தை மீறி, அவனாகவே தன்னுடைய வாழ்க்கையை முடிவு செய்வதாயிருந்தால், அவனை தங்களுடைய பிள்ளையில்லையென நினைத்துக் கொள்ளுவதாகவும், இனிமேல் அவனுடைய வாழு, தாழ்வுகள் தங்களைப் பாதிக்காதென்றும், அதில் தங்களுக்கு எந்த விதமான சொந்த, பந்தங்கள் இல்லையெனவும் தீர்மானமாகச் சொல்லி, அவனையும் தங்களுடைய வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விட்டார்கள். இருவருடைய வீட்டில்தான் அவர்களுக்கு எதிர்ப்பு. ஆனால், அலுவலகத்தில், நண்பர்களிடம் அவர்களுக்கு ஏராளமான ஊக்கம், ஆதரவு எல்லாம் கிடைத்தது. அதனால், நண்பர்களின் முயற்சியாலும், அலுவலக நண்பர்களின் ஆதரவாலும், இருவரும் ஊரிலிருந்த ஒரு பெருமாள் கோவிலில் தங்களூடைய திருமணத்தை முடித்துக் கொண்டு, உடனடியாக சந்திரனின் பிளாட்டுக்கேகுடியும் வந்து விட்டார்கள். ஏற்கெனவே முரளியும், சந்திரனும் பாலிய நண்பர்களானதால், சந்திரனின் தாயாருக்கும் முரளியை நன்றாகச் தெரியும். அதனால், முரளிக்கும், ராதிகாவுக்கும், சந்திரனின் தாயாரே தாயாக இருந்து, எல்லா உதவிகளையும் செய்து வந்தாள். அவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம், அவளுடைய அறிவுரைகளும் கிடைத்தன. அவர்களின் இன்ப வாழ்க்கைக்கு, அடையாளமாக, ராதிகா கருவுற்றாள். கருவுற்ற பெண்ணுக்குத் தாயைக் காட்டிலும், மேலாக பரிவுடனும், பாசத்துடனும் சந்திரனின் தாயார் இருந்ததால், அவர்கள் இருவருக்கும் எந்த விதமான துக்கமோ, ஏக்கமோ இல்லாமல், நன்றாகவே இருந்தார்கள். அவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட, சந்திரனின் தாயார், தன்னுடைய வீட்டிலேயே, ராதிகாவுக்கு வளைகாப்ப்பும், சீமந்தமும் நடத்தினாள். ராதிகாவின் பிரசவத்திற்கும் அவர்களே உதவியாக இருந்தார்கள். முரளி, ராதிகா தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களின் பெயர் சூட்டு விழாவும் சந்திரனின் தாயாரின் மேற்பார்வையிலேயே நடந்தேறியது. பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு சாரங்கன் எனவும், பெண் குழந்தைக்கு சஹானா எனவும் பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அந்த இரு குழந்தைகளும், சந்திரனின் வீட்டிலும், முரளியின் வீட்டிலுமாக நாள் ஒரு பொழுது, தினமோரு விளையாட்டுமாக வளர்ந்தார்கள். அவர்கள் இருவர் வீட்டிலும், மழலைச் சத்தங்கள் மணியாக ஓலித்தன.
ஒரு நாள் காலையிலேயே முரளிக்கு ஒரு ஃபொன் மூலம் செய்தி வந்தது. அதில் முரளியின் சகோதரியின் புருஷன் ஒரு விபத்தில் இறந்து விட்டான் என விபரம் வந்தது. என்னதால், விரோதம் இருந்தாலும்,முரளியால் தன்னுடைய ஒரே சகோதரியின் இழப்பைத் தாங்க முடியாமல் அழுதான். இந்தச் சமயத்தில் தன்னை மற்றவர்கள் எத்தனை வெறுத்தாலும், தான் கட்டாயம் அங்கே சென்று, சகோதரிக்கு ஆதரவாகவும், வயதான காலத்தில் திடீரென்று ஏற்பட்ட சோகத்தில் தவிக்கும் தன்னுடைய பெற்றோருக்கும் உதவியாக இருக்கவும், முரளி உடனே கிளம்பினான். அப்போதுதான் விஷயம் தெரிந்த சந்திரனின் தாயார், :முரளி, என்னதான் வேண்டாத மருமகளாக இருந்தாலும், இந்தச் சமயத்தில் உன்னுடன் ராதிகாவும் இருக்க வேண்டும். உறவினர்களுக்குள் பகையும் ஒரு நாள் முடியும். இந்தச் சமயத்தில் உன்னுடன் ராதிகாவும் வந்து, அவர்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். உடனே இருவரும் கிளம்புங்கள்” எனவும் சொல்ல, முதல் நாள்தான், குழந்தைகள் இருவருக்கும் தடுப்பு ஊசி போட்டிருப்பதால், சின்னக் குழந்தைகள் இரண்டையும் எப்படி எடுத்துப் போவது என தவிக்க, சந்திரனின் அம்மாவே அதற்கும் வழி சொன்னாள். “குழந்தை இரண்டும் ஐந்து மாதங்கள் கூட முடியாத பிஞ்சுகள். இந்த சமயத்தில் குழந்தைகளுடன் நீங்கள் அங்கே சென்றால், முதலில் உங்களால் இரு குழந்தைகளையும் கவனிக்க முடியாது. மேலும் நேற்றுதான் தடுப்பூ ஊசி போட்டிருப்பதால், அங்கே சென்று குழந்தைகளுக்கு ஏதும் இன்ஃபெக்ஷன் வந்தால் நமக்குத்தான் கஷ்டம். அதனால், நீங்கள் இருவர் மட்டுமே போய்விட்டு, இரவுக்குள் ராதிகா மட்டுமாவது திரும்பி வரட்டும். அதுவரை சின்னக் குழந்தைகளை நாங்கள் கவனித்துக் கொள்வோம். எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. தினமும் நீங்கள் இருவரும் ஆபீசுக்குப் போய் விட்டு வரும் வரை இங்கேதானே இருக்கிறார்கள். அப்படியே இன்றும் இருக்கட்டும். நீங்கள் குழந்தையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் போய் வாருங்கள்” எனவும் தைரியம் சொல்லி, அனுப்பி வைத்தாள். போகும்போது முரளிஉம், ராதிகாவும் “அம்மா, இவர்கள் உங்களின் பேரக்குழந்தைகள் தானம்மா. நீங்கள் இருக்கும்போது எங்களுக்கென்ன கவலை. நாங்கள் இல்லாவிட்டாலும், குழந்தைக்கு தாய்க்குத் தாயாக, தகபபனுக்குத் தகப்பனாக சந்திரனும், தாராவும் இருக்கிறார்கள். நாங்கள் வரும்வரை உங்களுடைய குழந்தையாகவே அவர்கள் இங்கேயே இருக்கட்டும்” எனவும் சொல்லி, முரளியும், ராதிகாவும் கிளம்பிச் சென்றார்கள்.
யாருடைய நாக்கில் சனிபகவான் வாசம் செய்தானோ தெரியாது. தன்னுடைய சகோதரிக்கு ஏற்பட்ட இழப்பில் ப்ங்கேற்கச் சென்றவர்களின் விதி பாதி வழியிலேயே விளையாடி விட்டது. முரளியும், ராதிகாவும் கிளம்பிச் சென்ற மோட்டார் சைக்கிள், முரளியின் தந்தை வீட்டிற்கு அருகில் செல்லும்போது, எதிரில் வந்த மணல் லாரி மோதி, அந்த இடத்திலேயே இருவரும் மரணமடைந்து விட்டார்கள். எந்தப் பிள்ளையையும், மருமகளையும் ஏற்றுக் கொள்ள மாட்டோமெனச் சொன்னவர்கள், விஷயம் தெரிந்து முதலில் வந்து பார்த்த போது, அவர்களாலேயே தாங்க முடியாமல் போய்விட்டது. ஒரு நிமிஷம் முரளியின் மீதும், ராதிகாவின் மீதிம் ஏற்பர்ர வெறுப்பு முடிந்தது. பாத்துப் பாத்து வளர்த்த பிள்ளை, தன் கண் முன்னாலேயே பிணமாகியதைக் கண்டவர் கண்களில் வெள்ளம் வடிந்தது. யார் அழுதாலும், வித் பகவான் தன்னுடைய விளையாட்டை நிறுத்துவதில்லை. தங்களூடைய பிள்ளைக்கு இரு குழந்தைகள் இருக்கும் விஷயம் கூட தெரியாமல், மாப்பிள்ளையின் பிணத்துடன், பிள்ளைக்கும் காரியம் செய்ய வேண்டிய துர்பாக்கியத்தால் அவர்கள் துவண்டுதான் போனார்கள்.
விஷயம் தெரிந்தவுடன், முதல் ஆளாகப் போன சந்திரனும், தாராவும், தங்களின் கைகளில் ஏந்திச் சென்ற இரு பிஞ்சுகளின் முகத்தைக் கூட பார்க்காவர்களுக்கு மனம் வரவில்லை. அவர்களின் துக்கம் எல்லைக் கடந்தது. பால் மணம் மாறாத இரு குழந்தைகளை யாரால் வளர்க்க முடியுமென தவித்தார்கள். சந்திரன் அவர்களிடம் “உங்களுடைய துக்கத்தில், இந்த விஷயத்திற்காக நீங்கள் சங்கடப்பட வேண்டாம். முதலில், என் நண்பனுக்கும், என்னுடைய சகோதரிக்கும் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்வோம். மற்ற விஷயங்களைப் பிற்பாடு கவனிக்கலாம்” எனச் சொல்லி, பிஞ்சுக் குழந்தை சாரங்கனின் முகத்தோடு தன் முகத்தை வைத்து வாய் விட்டு கதறினான். காரியங்கள் முடிந்தவுடனேயே சந்திரனும், தாராவும் குழந்தைகளுடன் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து விட்டார்கள். சந்திரனின் தாயாரின் துக்கமோ ஆறுதல் சொல்லக்கூட முடியாத ஒன்றாகியது. அத்தனை துக்கத்தையும் அவர்கள் எல்லாரும் இரு பிஞ்சுகளின் முகத்தைப் பார்த்து தேறினார்கள்.குழந்தைகள் சாரங்கனும், சஹானாவும் சந்திரன், தாராவிடமே வளர்ந்தார்கள்.
முரளியின் மறைவுக்குப் பின் செய்ய வேண்டிய அலுவலக, மற்ற விஷயங்களில் எல்லாம் சந்திரன் கூட இருந்து, முரளியின் தகப்பனாரின் பேயரிலேயே முரளிக்கும், ராதிகாவுக்கும் கிடைக்க இருந்த வரவினங்களையெல்லாம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தான். எல்லாம் முடிந்த பின், சந்திரன் முரளியின் தகப்பனாரிடம் “எனக்கு ஒரு வரம் வேண்டும்” எனக் கேட்க, அவர்கள் என்னவென புரியாமல் முழித்தார்கள். சந்திரன் அவர்களிடம் மெதுவாக தனக்கும், தாராவும் திருமணமாகி, எட்டு வருடங்களாகியும், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பாதால், அவர்கள் மனப்பூர்வமான சம்மதத்துடன், குழந்தை சாரங்கன், சஹ்கானாவை தங்களுடைய குழந்தைகளாக சுவீகரித்துக் கொண்டு, வளர்க்க விரும்புவதாகவும், அதற்காக அவர்கள் முரளிக்கும், ராதிகாவுக்கும் வந்த பணத்தில் ஒரு பைசாகூட கொடுக்க வேண்டாமெனவும், தனக்கும், தாராவுக்கும் வரும் வருமானத்திலும், தங்களுடைய பூர்வீக சொத்துக்கள் இருப்பதால், அத்தனையும் அந்த இரு குழந்தைகளுக்குத்தான் எனவும் தீர்மானமாகச் சொல்லி, அவர்களின் சம்மதம் மட்டும் போறும் என வேண்டினான்.
முரளியின் தாயார் அவனிடம் “சந்திரா, நாங்கள் எங்களின் முட்டாள் தனத்தாலும், பணத்தையே முக்கியமாகக் கருதி, எங்களின் ஒரே மகனின் ஆசையை நிறைவேற்றத் தயங்கி, அவனைவெறுத்து ஒதுக்கி விட்டோம். இன்று முழுசாக அவனையே இழந்து விட்டோம். அன்று முரளியை அப்படிவெறுக்காமல், அவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்திருந்தால், அவனும் இன்று எங்களுடன் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பான். கோபம் எங்களின் புத்தியை மழுங்கச் செய்து விட்டது. இன்று அவன் மூலம் கிடைக்கும் இந்தப்பணத்தையும் நாங்கள் ஏற்பது எங்களுக்கே சரியாகப் படவில்லை. ஆனால், எங்களூடைய வயதான காலத்தில், எங்களுக்குத் தேவையாக இருக்கிறது. மேலும், வயதான எங்களால் எங்களின் பேரக் குழந்தைகளை நன்றாக கவனிக்க முடியுமாவென சொல்ல முடியாது. சின்னவனே திடீரென்று போய்விட்டபின், வயதான நாங்கள்தான் என்ன நிச்சயம். அவர்களே இங்கே வரும்போதே குழந்தையை உங்களூடைன பொறுப்பில்தால் விட்டு வந்திருக்கிறான். அதனால், அவனின் விருப்பப்படியே குழந்தைகள் இருவரும் உங்களுடைய குழந்தையாகவே வளரட்டும். இத்தனை நாள் குழந்தைக்குப் பாட்டியாக இருந்த, உங்களின் தாயாரே இனியும் அவர்களுக்கு உரிமையான பாட்டியாகட்டும். உன் விருப்பப்படியே நீங்கள் இருவருமே சாரங்கன், சஹானாவுக்கு அம்மைஅப்பனாக இருங்கள். உங்கள் வயிற்றில் பிறக்காவிட்டாலும், அவர்கள் இருவரும் உங்களின் குழந்தைகள் தான். ஆண்டவனின் விருப்பம் அதுதான் போலும். அதனால்தான், இத்தனை காலம் உங்களுக்கென்று ஒரு வாரிசு வரவில்லை. முரளி வயிற்றில் பிறந்தாலும், உன்னுடைய குழந்தைதான் அவர்கள். என மனம் நிறைந்து சொல்கிறேனப்பா இனிமேல் நீயும், தாராவும்தான் சாரங்கன், சஹானாவைப் பெற்றவர்கள். என்னுடைய முரளியும், ராதிகாவும் இதற்கு முழுசாக சம்மதிப்பார்கள். அவர்கள் எங்கிருந்தாலும், உன்னுடன் குழந்தைகள் வளர்வதைப் பார்த்து சாந்தி அடைவார்கள். உங்களூக்கும் எங்களின் ஆசிகள் உண்டு. நாங்களும் இனிமேலாவது அடிக்கடி வந்து உங்களுடைய பிள்ளையையும், பெண்ணையும் பார்த்துப் போவோம்.: எனச் சொல்லி, குழந்தைகளின் கன்னங்களைத் தடவி, தன் அன்பை முத்தமாகப் பொழிந்தார்கள்.