(ஜெயரமணி)
அம்மு ஒரு அசடா?
(ஜெயரமணி)
அன்று அந்த அரசு மாநகர பள்ளியில் காலை இடை நேரம். ஆசிரியர்களின் ஓய்வு நேரத்தில் அங்கு இரு ஆசிரியைகள் இருந்தார்கள். ஒருவர் அம்மு என்பவர். அவர் மிகவும் சாதுவானவர். யார் அவரிடம் எதைக் கேட்டாலும், மறுக்காது உடனடியாக ஒத்துக் கொண்டு அவர்களின் இஷ்டப்படியே செய்து கொடுப்பவர். அதனால் அந்தப் பள்ளியின் மற்ற ஆசிரியைகள் எல்லாரும் தங்களுக்குத் தே யானவற்றை அம்முவின் உதவியுடன் நிறைவேற்றிக் கொள்வார்கள். எல்லா ஆசிரியைகளும் அம்முவிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அவர்களுக்கு ஓய்வு தேவையென்றால், உடனடியாக அம்முவிடம் சென்று தங்களுக்கு வேறு ஏதும் அவசர வேலையிருப்பதாகவோ, அல்லது உடல் நலக்குறைவோ சொல்லி, தங்களுடைய வகுப்பையும் அவளையே பார்த்துக் கொள்ளச் சொல்லி கேட்டுவிட்டு, அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். அம்முவும் தனக்கு முறையாகக் கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் மற்றவர்களுக்காக செலவழித்து விடுவாள். சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல், நாள் பூராவும் வகுப்பு எடுக்கச்சொன்னாலும், மறுப்பு எதுவும் சொல்லாமல், சந்தோஷமாகவே ஒத்துக் கொள்வாள். அது விஷயமாகத் தலைமை ஆசிரியை அவளிடம் “நீ ஒரு சாது என்பதால்தான் எல்லாருமே உன்னிடம் தங்களுடைய வகுப்பை எடுக்கச் சொல்லிவிட்டு, அவர்கள் அதிக நேரம் ஓய்வு எடுப்பது உனக்குத் தெரியாதா? நீ யார் கேட்டாலும், உடனே மறுக்காது ஒத்துக் கொண்டு, அவர்களின் பணியைச் செய்வதால், நீ தினமும் எட்டு வகுப்புக்கும் பாடம் நடத்தச் செல்கிறாய். உனக்கு கொஞ்ச நேரமாவது ஓய்வு வேண்டாமா: எனக் கேட்டால், அதற்கும் அம்மு மெதுவாகவே பதிலும் சொல்லிவிடுவாள். “அம்மா, என்னுடைய குணம் உங்களுக்குத் தெரியாதா? நான் என் வாழ்நாளில் எனக்கென்று ஒரு குழந்தை செல்வம் கிடைக்காது இருப்பதும். அதனால், நான் இப்போ யாருமின்றி தனிமையாக வாழ்வதும். இது என் விதி. என் மன திருப்திக்காக என்னால் எத்தனை நேரங்கள் அந்த கள்ளமில்லா பிஞ்சு குழந்தைகளுடன் செலவிடமுடியுமோ, அத்தனை நேரம் செலவிட விரும்புகிறேன். அதனால், எனக்கு எப்பப்பச் சந்தர்ப்பங்கள் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்தக் கள்ளமில்லா குழந்தைகளின் முகத்தைப் பார்த்து மனம் சந்தோஷமடைகிறேன்” எனவும் தன்னுடைய மன வருத்தம் வெளியில் தெரியாமல் சிரித்துக் கொண்டே சென்று விடுவாள். அவளைக் குழந்தை முதலே தெரிந்திருந்த தலைமை ஆசிரியையும், அவளுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களையும், அதனால் ஏற்பட்ட திருப்பங்களையும் தெரிந்த அந்த ஆசிரியை, அம்முவின் குழந்தை மனதிற்கு பகவான் எத்தனை சோதனைகளை கொடுத்து அவளைச் சோதித்திருக்கிறார் எனவும் தன் மனதிற்குள் சொல்லி வருத்தமடைவார்.
அம்மு அந்தப் பள்ளீயிலேயே படித்துப், பின் ஆசிரியைப் பயிற்சியும் எடுத்துத் தேறியபின், அந்தப் பள்ளியிலேயே பணியாற்றவும் சேர்ந்து விட்டாள். அவளுக்குச் சிறு வயதிலேயே தகப்பனார் காலமாகிவிட்டதால், அவளின் தாயாரே அவளுக்கு எல்லாமாக இருந்து அம்முவை ஒரு அமைதியான நல்ல பெண்ணாக வளர்த்து விட்டார். தாயாரின் விருப்பப்படியே, அவள் வழியைச் சேர்ந்த ஒருவரையே மணந்து கொண்டாள். வந்தவனும் நல்லவனே. அவனும் அம்முவுடனும், அவளுடைய தாயாருடனும் பிரியமாக இருந்து, குடும்பம் நடத்தி வந்தான். அம்முவே ஒரு குழந்தையாக இருப்பதாலோ என்னவோ, அம்முவிற்குத் திருமணம் முடிந்தும் குழந்தை உண்டாகவில்லை. அதனால் அம்முவும் அதிகமாக கவலைப் படவில்லை. அவளுடைய தாயாரும், தன்னுடைய காலத்திலேயே, தன்னுடைய சொத்துக்கள் அத்தனைக்கும் தன்னுடைய மாப்பிள்ளை இரவியின் பெயருக்கே பத்திரம் பதுவு செய்ய முடிவு செய்தபோது, அந்த ஊர்க்காரர்களும், அவர்களின் நீண்டகால நண்பர்களும் சொன்னார்கள். “பாரு, உன்னுடைய சொத்துக்களுக்கு உன் பெண்ணும், மாப்பிள்ளையும்தான் உரிமையுள்ளவர்கள். நீ எதற்காக இப்பவே உன் சொத்துக்களை உன் மாப்பிள்ளை பெயருக்கு மாற்றுகிறாய்? உனக்கு அப்படி உன்னுடைய சொத்துக்களை உன் காலத்திலேயே பாதுகாப்புப் பண்ண வேண்டுமென்றால், எல்லாவற்றையும் உன் பெண் அம்முவின் பெயருக்கு மாற்றி, ஆனால், அந்தச் சொத்துக்களை விற்கவோ, வேறு எதுவும் பண்ணுவதற்கோ, உன் மாப்பிள்ளையின் சம்மதம் அவசியம் எனவும் ஒரு கட்டுப்பாடு போடு. எங்களுக்கும் தெரியும் உன் பெண் உலகம் தெரியாதவள், வெகுளி, யார் எதைக் கேட்டாலும், மறுக்காது உடனே கொடுத்து விடும் குணமுள்ளவள் என” எனச் சொல்லியபோதும், அம்மு அவர்களிடம் “என் அம்மாவும், என் கணவரும் சேர்ந்து எது செய்தாலும், அது என்னுடைய நன்மைக்கே. என் அம்மா என்னையே அவருடைய பாதுகாப்பில்தான் வைத்திருக்கிறார். அ;ப்படியிருக்க இந்தச் சொத்துக்களையும் அவர் பெயருக்கே எழுதுவதுதான் சரி. நானே அவருக்குச் சொந்தம். அப்படியிருக்க, என் தாயாரின் சொத்துக்களும் அவர் பெயரிலேயே இருப்பதுதான் முறை” எனச் சிரித்துக் கொண்டே, மற்றவர்களின் விருப்பத்தை மறுத்து விட்டாள். அதன்படியே அத்தனை சொத்துக்களும் மாப்பிள்ளை இரவியின் பெயரிலேலே பதிவும் செய்தாகிவிட்டது. காலக்கிரமத்தில் அம்முவின் தாயும் காலமாகிவிட்டாள். தன்னுடைய பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து, அவர்களுக்கு ஒரு குழந்தை இல்லாத குறையையும் அதிகமாக உணராது, அவளும் மறைந்து விட்டாள்.
அம்முவிற்கு குழந்தை இல்லாமல் இருப்பது இரவியைத்தவிர, அவனுடைய சகோதரிகளுக்கும் கஷ்டமாகியது. அம்முவின் தாய் வீட்டுச் சீதனமாகவும் சொத்துக்கள் இரவியின் பெயரில் மாற்றியிருப்பதால், அத்தனைச் சொத்துக்க்கும் வாரிசு இல்லாமல் இருப்பது அவர்களுக்கும் உறுத்தியது. அவர்கள் வரும்போதெல்லாம், வீட்டில் ஒரு குழந்தைச் சத்தம் இல்லாததைக் குறையாகச் சொல்லி, அம்முவிடம் குறைவாகப் பேசும்போதும், அம்மு அவர்களிடம் “என்னக்கா, குழந்தை வரம் என்பது பகவானாகக் கொடுக்க வேண்டியது. அது என்ன கடையிலோ, மற்றவர்களிடமோ வாங்கக்கூடியதா? எங்களுக்கு என்ன கிடைக்கும்னு இருக்கோ அதுதான் கிடைக்கும். எங்களுக்கென்று ஒரு குழந்தைக்கு அதிகாரம் இருந்தால், அது கட்டாயம் எங்களுக்குக் கிடைக்கும். அதற்காக ஏன் கவலைப் பட்டு வாழ்க்கையை துன்பமாக்கிக் கொள்ளவேண்டும்” எனவும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லி விடுவாள். அதற்காக, மற்றவர்கள் சொல்லும் விரதம், பூஜை எல்லாமும் செய்வாள். பகவானுக்குச் செய்ய வேண்டியதுதான், பலன் கிடைப்பது அவரின் அருள் என்பது அவளுடைய தீர்மானம். சின்ன வயதிலிருந்தே அம்முவிற்கு அதிக ஆசைகள் இல்லாததால், அவளுக்கு எந்த ஒரு விஷயத்திலும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கமோ, ஏமாற்றமோ இல்லை. அதனால், அவளைப் பொறுத்தவரை, எதிர்பார்ப்பும் இல்லை, ஏமாற்றமும் இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக, இரவிக்கும் தங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லை எனற ஏக்கம் அதிகாகியது. அம்முவையும் எத்தனையோ லேடி டாக்டர்களிடம் அழைத்துச் சென்று பரிசோத்தும், அவளின் உடலளவில் எந்த ஒரு குறையும் இல்லையென்பதும், குழந்தை உருவாகாததிற்கு காரணம் தங்களால் சொல்லமுடியவில்லை என்றும் சொல்லி விட்டார்கள். அம்முவே, குழந்தையாக இருப்பதால், பகவான் அவளுக்கென்று ஒரு குழந்தை வேண்டாமென்று விதித்து விட்டார்போலும். இரவிக்கும் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அதிகமானதாலும், அம்முவின் மூலம் தனக்கு ஒரு வாரிசு உருவாகும் என்றநம்பிக்கையும் அவன் இழந்து விட்டதால், கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சகோதரிகள் சொல்வது போல், வேறு ஒரு திருமண பந்தத்தின் மூலம் தனக்கென்று ஒரு வாரிசு உருவாகாதா எனவும் யோசிக்கலானான். அதனால், அவனும் அவனுடைய சகோதரிகளும், அம்மு இருக்கும்போதே, இரவிக்கு வேறு ஒரு பெண்ணையும் பார்க்க ஆரம்பித்தார்கள். பாவம் அம்முவிற்காக பரிந்து பேசக்கூட யாருமில்லை. அம்முவுக்கும் சுயமாகச் சிந்திக்கவும் தெரியாது. இரவியும், அவளிடம் தான் தனக்குனொரு வாரிசு வேண்டுமென்றுதான், வேறு ஒரு பெண்ணை மணக்க முடிவு செய்திருப்பதாகவும், இரண்டாவது மணைவி வந்தாலும், அவளுடன் அந்த விட்டிலேயே இருக்கப்போவதாகச் சொல்லி, இரண்டாவது திருமணத்திற்கு அம்முவின் சம்மதத்தை எழுத்துப் பூர்வமாகவும் வாங்கிக் கொண்டான். அம்முவும் அவனுடைய சொற்படியே, “தன்னால், இரவிக்கு ஒரு வாரிசு பெற்றுக் கொடுக்க முடியாததால், இரவி இன்னோரு திருமணம் செய்து கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென்றும், அவனுடைய இரண்டாவது திருமணத்திற்கு தனக்கு முழுச் சம்மதம் எனவும் சொல்லி, அவளே அவனுக்கு வேறு பெண்ணையும் பார்க்கக் கூடவும் சென்றாள். இரவிக்கு வசந்தா என்னும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவளையும் நிச்சயம் செய்து திருமணத்தையும் முடித்து விட்டாள். வசந்தாவுக்கும் பெற்றோர்கள் இல்லை. சகோதரனின் ஆதரவில் இருந்தவள்தான். அதனால், அதிக ஆடம்பரமின்றி, சிக்கனமாக அந்த ஊர்க் கோவிலிலேயே கலியாணத்தையும் முடித்துக் கொண்டார்கள்.
திருமணமும் முடிந்தது. இரவி தன்னுடைய இரண்டாவது வாழ்க்கையை அம்முவின் வீட்டிலேயே ஆரம்பித்தான். அப்போது அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர்களும் அம்முவுடன் குழந்தைமுதல் பழகியவர்களுமான சிலர் வந்து இரவியிடம் “எப்ப நீ உனக்கு ஒரு வாரிசு வேண்டுமென இரண்டாவது திருமணம் செய்து கொண்டாயோ, அப்பவே நீயும் அம்முவும் கணவர் மனைவி என்ற உறவு முறிந்து விட்டது. அப்படியிருக்க, அவளுடைய தாய் விட்டுச் சீதனமாகக் கிடைத்த சொத்துக்களை நீ திரும்பவும் அம்முவின் பெயருக்கே மாற்றி விடுவதுதான் முறை”எனச் சொன்னதால், இரவியும் அம்முவின் தாயாரிடமிருந்து பெற்ற அத்தனைச் சொத்துக்களையும் அம்முவின் பெயருக்கே மாற்றி கொடுத்து விட்டான். அவனும் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன், அதே ஊரில் வேறு ஒரு விட்டிற்குக் குடிமாறினான். காலச் சுழலில் இரண்டாவதாக வந்த வசந்திக்கு அடுத்தடுத்து இரு பெண்களும் பிறந்தார்கள். அம்மு தன்னுடைய தாயின் வீட்டிலேலே தனியாக வாழத் தொடங்கினாள். அவ்வப்போது இரவியின் வீட்டிற்கும் சென்று அவனுக்குப் பிறந்த குழந்தைகள் இருவரையும் ஆசைதீரக் கொஞ்சுவாள். முதலில் அம்மு வருவதையும், தன்னுடைய குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவதையும் தவறாக நினைக்காத, வசந்தா நாளடைவில் எங்கே தன்னுடைய குழந்தைகள் தன்னை விட்டு அம்முவின் மீது அதிகம் பாசம் வைத்து விடுவார்களோ எனப் பயந்தாள். அதனால், ஒருநாள் அவள் அம்முவிடமே “அக்கா நீங்கள் இங்கே அடிக்கடி வருவது எனக்குப் பிடிக்கவில்லை. உங்களுக்குக் குழந்தை பிறக்காததால்தான், நான் இங்கு இளையவளாக வாழ வந்தேன். எங்களின் திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே, நானும் அவரும் தனியாக வந்து விட்டோம். இனிமேல் இது எங்களின் குடும்பமாகும். நீங்கள் அடிக்கடி வந்து, என்னுடைய குழந்தைகளைக் கொஞ்சுவதால், எங்கே அவர்கள் என்னிடம் ஆசையாகப் பாசமாக இருக்கமாட்டார்களோ என எனக்குள் ஒரு பயமும் உண்டாகிறது. நீங்கள் சம்மதப்பட்டுத்தான் நான் இங்கே வாழ வந்தேன். நீங்கள் கொடுத்த வாழ்வை நான் நிம்மதியாக அனுபவிக்க வேண்டும். அதற்கு நீங்கள் இங்கே அடிக்கடி வருவது எனக்குச் சரியாகப்படவில்லை. தயவுசெய்து நீங்கள் இங்கே வருவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” எனப் பணிவாக, அதே சமயம் தீர்மானமாகவும் சொல்லி விட்டாள். அதைக் கேட்ட அம்முவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதேசமயம் யார் எதைச் சொன்னாலும், எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல், மௌனமாக இருக்கும், அம்முவும் அன்று முதல் தன்னுடைய மனவருத்தத்தைக் காட்டாது, அமைதியாக இருந்தாள். அதே சமயம், வசந்தா தான் அவள் குழந்தைகளுடன் ஆசையாக இருப்பதை விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டதால், அங்கு போவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டாள். தனனுடைய மாலை நேரத்தையும் வீணாக்காது, அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதிலும், சில பெண்குழந்தைகளுக்குப் பாட்டுக் சொல்லிக்கொடுத்து, தன் மன வேதனையை மற்றவர்கள் அறியாது நடந்து கொண்டாள். இரவியும் அம்மு தங்கள் வீட்டில் முன்போல் வருவதில்லை என்பதைத் தெரிந்தும், அதிகம் பாராட்டாமல் இருந்து விட்டாள். சில நாட்களில் இரவியும் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு, வேறு ஒரு ஊருக்கும் வேலை தேடிக்கொண்டு போய்விட்டான். அதற்குப் பிறகு அம்முவுக்கு அவர்கள் யாரிடமும் தொடர்பில்லை.
அன்று பள்ளியில் அம்முவைக் கேட்டு ஒரு தொலேபேசியில் ஒருவர் ஃபோன் செய்தார். அப்போது அம்மு வகுப்பில் இருந்ததால், தலைமை ஆசிரியையே அந்தப் ஃபோனுக்கு பதில் அளித்தார். அப்போ மறு முணையில் இருந்தவர், தான் ஒரு ஆஸ்பத்திரிலிருந்து பேசுவதாகவும், அந்த ஆஸ்பத்திரிலில் இருக்கும் ஒரு நோயாளி தன்னுடைய அந்திம காலகட்டத்தில் இருப்பதாகவும், அவர் தன்னுடைய காலம் முடிவதற்குள் ஆசிரியை அம்முவைப் பார்க்கவேண்டுமென விருப்பப்படுவதாகவும், அவர் கொடுத்த தகவலின் படியே, தான் அந்தப் பள்ளிக்குத தொடர்பு கொண்டதாகச் சொன்னவுடன், தலைமை ஆசிரியைக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பேசியவர் அதே ஊரில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எனவும் தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டு, எவ்வளவு சீக்கிரம் அம்மு டீச்சர் வந்து அந்த நோயாளியைப் பார்ப்பது அவசியம் எனவும் தெரிவித்து, உடனேயே அம்மு அந்த மருத்துவமனைக்கு வரவேண்டியது அவசியம் எனவும் கட்டாயமாகச் சொல்லி விட்டார்.
தலைமை ஆசிரியையும், உடனேயே அம்முவைக் கூப்பிட்டு அனுப்பி, அவளை உடனடியாக மதிய உணவு எடுத்துக் கொள்ளச் சொன்னார். காரணம் கேட்டதற்கு, அவளிடம் “நாமிருவரும் இப்போ உடனடியாக ஓரிடத்திற்குப் போக வேண்டும். நமக்கு அதிக நேரம் இல்லை. நீ உடனே சாப்பிட்டு விட்டு, என்னுடன் கிளம்பு” எனச் சொல்லி, அவளுடன் துரிதமாக கிளம்பினார். பள்ளிக்கு[ப் பக்கத்திலேயே ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு, மருத்துவமணையில் பெயரைச் சொல்லி, போனார்கள். மருத்துவமனையில் வரவேற்ப்பில் தலைமை மருத்துவரின் இருப்பிடத்தைக் கேட்கும்போதே, அங்கு வந்த ஒரு டாக்டர் அவர்களிடம் :நீங்கள் தானே அம்மு டீச்சர்” எனவும் கேட்டு விட்டு, அவர்களைச் தன்னைத் தோடரும்படிச் சொல்லி உள்ளேச் சென்றார். அவர் நேராக, தனி வார்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்றார். அங்கு சென்றவுடந்தான், அம்முவுக்குப் புரிந்தது தன்னைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உடல் நல மில்லை என். கலவரத்துடன் அங்கிருந்த நோயாளியைப் பார்த்தவள் தன்னையும் அறியாமல் “வசந்தா, உனக்கு என்னாச்சு. ஏன் இப்படின் இருக்கிறாய்” எனக் கேட்டுக் கொண்டே, வசந்தாவின் படுக்கையின் அருகில் சென்றாள். அம்முவையும், வசந்தாவையும் தனியாக விட்டு விட்டு, தலைமை ஆசிரியையைக் கூட்டிக்கொண்டு தலைமை மருத்துவர் தன்னுடைய அறைக்குச் சென்றார்.
தலைமை மருத்துவர் தலைமை ஆசிரியையிடம் அம்முவைப் பற்றி தெரிந்து கொண்டு, மெதுவாகச் சொன்னார். “எனக்கே இப்பத்தான் தெரிகிறது வசந்தா ஏன் அம்முவைத் தன் கடைசி காலத்தில் பார்க்க வேண்டுமென விரும்பினாள் என்று. வசந்தா கர்ப்பப்பை புற்று நோயால் அவஸ்தைப் படுகிறாள். அவளுக்கு இரண்டாவது பிரசவத்திலேயே அவளுடைய கர்ப்பப்பை புற்று நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும். அப்போ சரியாக கவனிக்காமல் இருந்திருப்பார்கள். அவளும் தன் உடல் நிலையைப் பற்றி அதிகமாக கவலைப்படவில்லை. குறைந்த வருமானம், இரு குழந்தைகளுடன், அதிக ஊட்டசத்தின்றியும் அவளின் உடம்பு பாதித்திருக்கிறது. எனக்கு அவளுடைய கணவர் யார், என்பதெல்லாம் தெரியாது. ஒரு நாள் அவளை இங்கிருக்கும் ஒரு அனாதை விடுதியினர் இங்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டுப் போய்விட்டார்கள். அனாதை ஆசிரிமத்தைச் சேர்ந்த யாருக்கும் உடல் நலம் குறைந்தால், இங்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். நானும் அவர்களின் நிலையை உணர்ந்து, அதிகமாக நோயாளியைப் பற்றி எதுவும் விசாரிக்காது, அவர்களின் உடல் நலனையே கருதி கவனித்துக் கொள்வேன். சிலர் குணமாகி, திரும்பவும் அதே ஆனாதை ஆஸ்ரமத்திற்குப் போய்விடுவார்கள். ஆனால், வசந்தாவின் நிலை அப்படியில்லை. அவள் இங்கு வரும்போதே, நோய் முற்றிய நிலைதான். ஒருநாள் அவளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டபடியால், நான் அவரிடம் அவருடைய குடும்பத்தார் யாரும் இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டபோது, அவள் மிகவும் கதறி அழுதாள். அப்போதுதான் தெரிந்தது அவளுடைய கணவர் ஒரு கம்பெனியில் வேலையில் இருந்தபோது, அவருடைய பொறுப்பில் இருந்த பணம் திருட்டுப்போனதால், அதை அவரால் கட்டமுடியாததால், அவர் தற்போது “பணத்தை திருடியதாகச் சொல்லி” சிறையில் இருப்பதாகவும், அவளுக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களையும் அந்த ஆனாதை ஆஸ்ரமத்திலேயே விட்டு வைத்திருப்பதாகவும், தன்னுடைய காலம் முடிந்தால், குழந்தைகள் இருவரும் யாருமற்றவர்களாகி விடுவார்கள் என் நினைத்து, மிகவும் துடித்தாள். அவளின் துடிப்பையும், வேதனையையும் எங்களால் பார்க்கவே முடியவில்லை. அவளை மெதுவாக சமாதானப் படுத்தி, குழந்தைகளை பாதுகாப்பாக்காக வேறு யாருடைய பாதுகாப்பில் வைக்க முடியுமா எனவும் கேட்டோம். அப்போது தான், உங்கள் பள்ளி டீச்சர் அம்முவைப் பற்றிச் சொல்லி, அவர் குழந்தைகளின் பெரிய தாயார் எனவும். தனக்கு ஏதும் நேர்ந்து விட்டால், குழந்தைகளை அவருடைய பொறுப்பில் இருப்பதையே அவளின் கடைசி விருப்பமாகவும் சொன்னார். அதனால் தான், நான் உடனே உங்களுக்குத் தெரியப்படுத்தி, அம்மு டீச்சரை இங்கே வரவழைத்தேன். இப்போ அம்முதான் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நல்லதோரு முடிவு எடுக்கவேண்டும். வாருங்கள் நாமும் அங்கே போவோம்” எனச் சொல்லி, இருவரும் வசந்தா இருந்த அறைக்குள் சென்றார்கள்.
வசந்தா அம்முவைப் பார்த்ததும், “அக்கா, என்னை மன்னித்து என்னைப் பார்க்க வந்தீர்களா? நான் உங்களுக்குச் செய்த துரோகத்திற்குத் தான் இந்த தண்டணை. அக்கா, எந்தக் குழந்தைகளை நீங்கள் வந்து கொஞ்சினால், அவர்களை என்னை விட்டு உங்களிடம் எடுத்துக் கொண்டு விடுவீர்ளோ என்ற தப்பான நினைப்பால்தான், நீங்கள் குழந்தைகளைப் பார்க்கவும் தடை செய்தேன். அவரையும் உங்களை விட்டுப் பிரிந்து, வேறு ஊருக்கே கூட்டிச் சென்றேன். உங்களை விட்டு பிரிந்தபிந்தான் அக்கா என்னுடைய கெட்ட காலம் ஆரம்பித்தது. அவர் வேலை செய்த இடத்தில், அவருடைய பொறுப்பில் இருந்த பணத்தை தொலைத்ததால், அதற்கு அவர்தான் பொறு[ப்பு என்றும், அதை அவரே எடுத்து இருப்பார் என்றும் அவ் அவருடைய முதலாளி நினைத்து, அவர் மீது போலீஸ் புகார் கொடுத்து, அதன் மீது அவரை பணத்தை திருடியதாகச் சொல்லி, அவரை சிறையிலும் வைத்து விட்டார். நானும் அவர் சிறைக்குப் போனபின், குழந்தைகளுடன் உங்களைச் தேடி வராமல், யார் கண்ணிலும் படாமல், எங்கெங்கோ அலைந்து, கடைசியில் ஒரு ஆனாதை இல்லத்தில் அடைக்கலம் புகுந்தேன். அங்கு எதோ ஒரு வேலை செய்து, நானும் குழந்தைகளும் காலம் தள்ளினோம. அததனைக் கஷ்டத்திலும், அவருக்கு உங்களிடம் வந்து உதவி கேட்க மனமில்லை. அவர் ஒரு குழந்தைக்காக, உங்களை தள்ளி வைத்து விட்டு, என்னைத் திருமணம் செய்து கொண்டது மிகவும் தப்பென்று உணர்ந்து, அதனால் மிகவும் மனத்துன்பம் கொண்டார். உங்களுக்குச் செய்த துரோகத்திற்குத் தான் ஆண்டவனாக பார்த்து கொடுத்த தண்டனை என சிறை வாசத்தை ஏற்றுக் கொண்டார். நானும், ஒரு வகையில் உங்களின் வாழ்க்கையில் நிம்மதியைக் கெடுத்தததால், திரும்பவும் உங்களைப் பார்க்கவோ, உங்களிடம் அடைக்கலம் .தேடி வரவோ தைரியமில்லாது, இப்படி யாருமில்லை எனச் சொல்லி, அனாதையாக வாழத் தொடங்கினேன். ஆனால், எப்போ என் உடல் நிலை சீர்கெட்டு, இனி என் வாழ்நாள் எண்ணிக்கையில்தான் என இந்த ஆஸ்பத்திரியில் உள்ள தலைமை மருத்துவர் என்னிடம் சொன்னாரோ, அன்றிலிருந்து என் குழந்தைகளை யாருமற்ற அனாதைகளாக இவ்வுலகில் விட்டு விட்டுப் போயிடுவேனோ என்றபயம் என்னை வாட்டியது. கடைசியில், உங்களைத் தேடி எப்படியும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டு, உங்களின் பாதுகாப்பில் என்னுடைய குழந்தைகளை ஒப்படைக்கவேண்டுமென நினைத்துத்தான், உங்களின் ஃபொன் நம்பரையும், நீங்கள் வேலை செய்யும் பள்ளியைப் பற்றியும் தலைமை மருத்துவரிடம் சொல்லி, உங்களை இங்கே வரவழைக்கச் சொன்னேன். நீங்களும், வந்து விட்டிர்கள். இனிமேல் எனக்கு என்ன நடந்தாலும், கவலை இல்லை. என்னுடைய தப்புத்தப்பு, உங்களுடைய குழந்தைகளையும், உங்களின் கணவரையும் உங்களிடம் சேர்த்துவிட்டு, மன நிம்மதியுடன் நான் போவேன்” எனச் சொல்லிக் கொண்டே, அம்முவின் மடியில் முகத்தை வைத்து அழுதாள். அழும் வசந்தாவை அம்மு தேற்றினாள். “வசந்தா, நீ தேவை யில்லாது மனம் நோகிறாய். எனக்கு எப்பவுமே, உன்னிடமோ அல்லது இரவியிடமோ எந்தக் கோபமும் இல்லை. நான் சம்மதப்பட்டுத்தான் நீ அவரை இரண்டாவதாக மணந்து கொண்டார். இப்போ நான் செய்ய வேண்டியது, ஒன்றே ஒன்றுதான். உன் சந்தோஷம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நான் போய் உன் குழந்தைகளை இங்கே அழைத்து வருகிறேன். நீ கொஞ்ச நேரம் குழந்தைகளுடன் இரு. பிறகு மற்றதைப்பார்க்கலாம்” எனச் சொல்லி விட்டு, தலைமை மருத்துவர் வந்தவுடன், அவரிடம் “அய்யா, உங்களின் உதவிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கு, அந்த அனாதை இல்லத்திற்கு வந்து, வசந்தாவின் குழந்தைகளை என்னுடைய கூட்டிக் கொண்டு செல்ல அனுமதியும், இனிமேல் அந்தக் குழந்தைகளுக்கு நாந்தான் பெரியம்மா என்றும் நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டும். பிறகு, எங்களுடைய கணவர் இரவியையும், போலீஸ் சிறையிலிருந்து வெளியே கூட்டிக் கொண்டு வரவேண்டும். இந்த இரண்டு வேலைகளுக்கும் உங்களுடைய உதவியும், ஆதரவும் வேண்டும்.” எனாவரிடம் பணிவாக வேண்டிக் கொண்டு, அதே சமயம் தலைமை ஆசிரியையிடமும் “அம்மா, நீங்களும் எனக்குத் துனையாக வரவேண்டும்” என்றும் கேட்டாள். அதன்படியே இருவரும் அவளுக்கு உதவியாகப் போனார்கள். முதலில் ஆஸ்ரமத்திலிருந்த குழந்தைகள் இருவரையும் அழைத்து வந்து, வசந்தாவிடம் விட்டார்கள். உடனே, இரவி இருக்கும் சிறைக்குச்சென்று, அவனுடைய விடுதலைக்கு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு, அந்த கம்பெனி முதலாளியை நேரில் பார்த்து, அவருக்கு ஏற்பட்ட பண நஷ்டத்தை ஈடு செய்து விட்டு, அவரையும் கூட்டிக் கொண்டு வந்து, சிறையில் இருந்த இரவியையும் விடுதலை செய்து, கூட்டிக் கொண்டு வந்தாள்.
தன்னை, விடுதலை செய்த காரணத்தை அறியாது, சிறை அதிகாரியை பார்த்தபோது, அவர் சொன்னார் :இரவி, உங்களுடைய மனைவி வந்து உங்களால் காணாமல் போன பணத்தை, உங்களின் முதலாளியிடம் கட்டி, உங்களின் மீது அவர் கொடுத்த புகாரை விலக்கிக் கொண்டார். அதனால், இனிமேல் உங்களின் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என, உங்களை விடுதலை செய்து விடும்படி அவரும்வேண்டிக் கொண்டார் அதன்படியே, நீங்கள் இனிமேல் சுதந்திரமாக உங்களின் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்லி, உங்களின் மனைவி வெளியே காத்திருக்கிரார். நீங்கள் போகலாம் என உத்திரவும் கொடுத்தான். வெளியே வந்தபிந்தான் இரவிக்குத் தெரிந்தது தன்னைக் காப்பாற்ற வந்தது அம்முஎன. அம்முவிடம் இரவி மிகவும் தாபத்தோடு கேட்டான் அம்மு நீயா இங்கு வந்தாய். நான் உனக்குச் செய்த துரோகத்திற்குதான் இந்த சிறை தண்டனையை அனுபவித்து வருகிறேன். நீ ஏன் என்னைக் காப்பாற்றினாய் எனக் கண்களில் நீர் வழிய கேட்டான். இரவியின் தோற்றத்தைப் பார்த்த அம்முவுக்கும் மனதில் வேதனை வந்தது. அம்மு அவனிடம் இப்போ உங்களுக்கு முக்கியமான வேலைகள் இருக்கு. என்னிடம் நீங்கள் எந்த விதமான வருத்தத்தையும் காட்ட நேரம் இல்லை. வாருங்கள் போவோம் எனச் சொல்லி, அவனையும் அழைத்துக் கொண்டு, ஆஸ்பத்திரிக்கு வந்து, வசந்தாவின் அறைக்குள் சென்றாள். வசந்தாவுடன், குழந்தைகள் இருவரையும் பார்த்த இரவிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவனைப் பார்த்த தலைமை மருத்துவரும், தலைமை ஆசிரியையும் விபரங்களைச் சொல்லி, அவனை வசந்தாவுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். இரவிக்கும் வசந்தா தன்னுடைய கடைசி காலத்தில் இருப்பதை உணர்ந்து, தன்னை திருமணம் செய்து கொண்டு, அவளும் எத்தனை துன்பத்தை அனுபவித்து விட்டாள் எனவும் தனக்குள் கழிவிரக்கம் அடைந்தான். மெதுவாக, வசந்தாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டான். அம்மு, வசந்தாவிடம் சொல்லிக் கொண்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு போனாள்.
தன்னுடன் கூட்டிக் கொண்டு சென்ற குழந்தைகள் இருவரையும் அம்மு பாசமாகவும் பிரியமாகவும் கவனித்துக் கொண்டான். உடனடியாக அவர்கள் இருவருக்கும் நல்ல உடைகள், காலுக்குச் செருப்பு எனவும் வாங்கிக் கொண்டாள். மறுநாள் காலையில் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, வசந்தாவைப் பார்க்கச் சென்றாள். அம்முவுடன் குழந்தைகள் வருவதையும், அவர்களிருவரும் புதிய உடைகள் அணிந்திருந்த்தையும் பார்த்த வசந்தாவும், இரவியும் குழந்தைகள் இருவரையும் பாசத்துடன் அனைத்துக் கொண்டு, நீங்கள் பெரியம்மாவிடம் படுத்தாமல் சமத்தாக இருப்பீர்களா. இனிமேல் நீங்கள் இருவரும் உங்கள் பெரியம்மாவிடம்தான் இருக்க வேண்டும் எனவும் சொல்ல, குழந்தைகள் இருவரும் சிரித்துக் கொண்டே சரிம்மா, நாங்கள் இனிமேல் பெரியம்மாவிடமே இருக்கிறோம். இனிமேல் எங்களை அந்த ஆனாதை இல்லத்தில் அனுப்ப வேண்டாம்ம்மா. எனவும் சொல்ல, வசந்தா துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டாள். இரவியும் கண்களில் நீர் தளும்ப அம்முவைப் பார்த்து அம்மு, உன் மனது பெரியதும்மா. எங்களையெல்லாம் மன்னித்து விட்டாயா? எனக் கேட்டான். அதற்கு அம்மு இப்போ தேவையில்லாமல் எதுவும் பேச வேண்டாம். எனக்கு யாரிடமும் எந்தக் கோபமும் இல்லை. எது நடக்கனும்னு விதி இருக்கோ அதுதான் நடக்கும். நமக்கும் மேலே ஒருவர் இருக்கார். அவர் ஆட்டுவிட்டபடிதான் எல்லாம் நடக்கும். வீணாக கவலைப் பாடவேண்டாம் எனச் சொல்லிவிட்டு, வசந்தாவிற்கு ஆகாரம் கொடுத்தாள். அவளுக்கு உடையெல்லாம் மாற்ற இரவியை வெளியே போகச் சொன்னாள் அன்று முழுவதும் அம்மு வசந்தாவுடனே இருந்தாள். மாலை நேரம் நெருங்கியதும், குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போனாள். இரவி மட்டும் வசந்தாவுடன் தங்கினான்.
இரவில் திடீரென்று வசந்தாவின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்ட்து. டாக்டர்கள் வந்தபோது, வசந்தாவின் மூச்சு விடுவதில் மிகவும் சிரமப்பட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக வசந்தாவின் மூச்சும் அடங்கலாயிற்று. அவளின் முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகையும் இருந்தது. தன்னுடைய குழந்தைகளையும், கணவர் இரவியையும் திரும்பவும் அம்முவிடம் சேர்த்து விட்டபின் அவளுக்குள் ஏற்பட்ட சந்தோஷமே அந்தப் புன்னகையாக அவளின் முகத்தில் மிளிர்ந்தது. அவள் வந்த கடமை முடிந்த திருப்தியில் அவளும் அமைதியடைந்தாள். வசந்தாவின் முடிவைப் பார்த்த இரவியின் துக்கம் கரைகடந்தது. விஷயம் தெரிந்தவுடன் அம்முவும் குழந்தைகளுடன் வந்தாள். இரவியையும் சமாதானப் படுத்திவிட்டு, வசந்தாவை தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்று, அவளுடைய இறுதிகாரியங்களை நல்லபடியாக நடத்தினாள்.
திரும்பவும் இரவியும், குழந்தைகளும் அம்முவுடனே அவளின் அம்மாவின் விட்டிலேயே தங்கினார்கள். அம்மு தன்னுடைய பள்ளியிலேயே குழந்தைகள் இருவரையும் சேர்த்து, அவர்களின் எதிர்காலத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்தாள். காலப்போக்கில், இரவியும் பழையபடியே, அம்முவின் கணவனாகவே வாழத்துடித்தான். ஆனால் அதற்கு அம்மு இடம் கொடுக்கவில்லை. இரவியின் தேவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், அவள் குழந்தைகளுடனே தனியாக தன்னுடைய அறையில் படுத்தாள். இரவியிடம் ஒரு எல்லையை வைத்துக் கொண்டே இருந்தாள். அதனால் இரவியும் மனதில் மிகவும் சங்கடப்பட்டான். ஒருநாள் இரவில், சாப்பாடு முடிந்தபின், தன்னுடைய அறைக்குள் செல்ல இருந்த அம்முவை இரவி கூப்பிட்டான். வந்து என்னவென கேட்டவளிடம் அம்மு, உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும். இப்படி உட்கார். எனச் சொன்னான். அம்முவும் அவனுக்கு எதிரில் இருந்த ஒரு சேரில் அமர்ந்தாள்.
இரவி மெதுவாக சொன்னான அம்மு, நான் செய்த தப்புகளையெல்லாம் மன்னித்து நீ வசந்தாவின் விருப்பப்படியே குழந்தைகளை உன் பாதுகாப்பில் ஏற்றுக் கொண்டது, திரும்பவும் நாமிருவரும் இந்த வீட்டில் வசிப்பதும் எனக்குத் திருப்தியாக இருக்கிறது. நடுவில் நான் சலனப்பட்டது உண்மையே. அப்பவும் நான் உன்னை மறக்கவில்லை. நடுவில் நாம் பிரிந்திருந்தாலும், நாமிருவரும் கணவன் மனைவி என்பது மாற்ற முடியாத ஒன்றுதானே. அப்படியிருக்க, நீ ஏன் இப்ப என்னை விலக்கியே வைத்திருக்கிறாய். எனக்கு இந்த வீட்டில் உன்னுடன் வாழ உரிமையில்லையா. நான்தான் குழந்தை வேண்டுமென வசந்தாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டேன். விதி வசத்தால், அவளும் நமக்கு இரு குழந்தைகளைபெற்றுக் கொடுத்துவிட்டு போய்விட்டாள். இனிமேல் நான் எந்தக் காரணத்திற்காகவும் உன்னை விட்டு விலக மாட்டேன். என்னைத் திரும்பவும் உன் கணவனாக ஏற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறாய். என்னையும் உன்னுடன் பழையபடியே இருக்கவும், ஒரே அறையில் படுக்கவும் நீ ஏன் அனுமதிக்க மறுக்கிறாய். நாமிருவரும் இனிமேல் ஒன்றாக பழயபடியே மனமோத்து சேர்ந்து வாழ்வதற்கு என்ன தடை. என்னை நீ மறுபடியும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள். உனக்குமின்னும் வாழ்க்கை இருக்கு. அதை நன்றாக சந்தோஷத்துடன் அனுபவி. நாமிருவரும் இன்று முதலே மனமோத்த தம்பதியாக இருப்போம், நான் இன்றுமுதல் உன்னுடன் அந்த அறையிலேயே படுக்கப்போகிறேன்: எனச் சொல்லிவிட்டு, அம்முவின் கைகளைப் பிடிக்க முன் வந்தான்.
அவனின் வார்த்தைகளைக் கேட்ட அம்மு, அவனிடம் மெதுவாக “நீங்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் என்னால் உங்களின் மனதை திருப்தி படுத்தமுடியாத காரணத்தால், நீங்கள் இன்னோரு பெண்ணை மணம் செய்து கொள்ள மனப்பூர்வமாக சம்மதித்தேன். என்று உங்களை இன்னோரு பெண்ணை மணந்து கொள்ள சம்மதித்தேனோ, அந்த வினாடியே, நான் உங்களுடன் எனக்கிருந்த எல்லா பந்தங்களையும், உறவுகளையும் முடித்துக் கொண்டேன். உங்களைப்போலவே எனக்கும் நமக்கென்று ஒரு குழந்தை இல்லையென்ற ஏக்கம் இருந்தது. அதற்காக நான் என்ன செய்ய முடியும். மருத்துவர்கள் என்னிடம் எந்த விதமான குறையும் இல்லையென சொன்னபின்பும், நமக்கென்று ஒரு வாரிசு இந்த ஜென்மத்தில் இல்லையென என் மனதை தேற்றிக் கொண்டு விட்டேன். ஆனால், உங்களால் அப்படி மனதை தேற்றிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் நீங்கள் என்னிடம் வேறு ஒரு திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னவுடன், நான் எந்த மறுப்பும் சொல்லவில்லை. என்று நீங்கள் நமக்கென்று என்ற உறவை விட்டு, உங்களுக்கென்று என ஆசைப்பட்டிர்களோ, அப்பவே நான் உங்களை விட்டுப் பிரிந்து தனியாக ஆகிவிட்டேன். உங்களின் விருப்பப்படியே வசந்தாவின் மூலம் உங்களுக்கென இரு வாரிசுகள் வந்து விட்டன. இனிமேல் உங்களின் கடமை அவர்களை நல்லபடியாக வளர்த்து வாழ வைக்க வேண்டியதுதான். இப்போது நீங்கள் என்னைத் தேடி வருகிறீர்கள். இதுவே, இன்று வசந்தா உயிருடன் இருந்தால், என் நினைப்பாவது உங்களுக்கு வந்திருக்குமா. இருக்காது. என்னை பொறுத்தவரை, நான் வசந்தாவிடம் அவள் இறுதி காலத்தில், அவளுடைய குழந்தைகளுக்கு ஒரு பெரியம்மாவாக இருப்பதாகவும், அவளுடைய குழந்தைகள் நல்லபடியாக வளர்த்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவதாகவும்தான் உறுதி கொடுத்தேன். நீங்கள் கேட்கலாம் அப்படி ஒரு எண்ணம் எனக்கிருக்கும்போது, எதற்காக உங்களை சிறையிலிருந்து விடுதலை பெறவும், வசந்தாவின் காலத்திற்குப் பின்னும் நாமெல்லாம் ஒரே வீட்டில் இருப்பதும் எதற்காக என்றும் நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரியும் ஒரு பெண்ணிற்கு தாய் மட்டும் அல்ல, தகப்பனாரும் எவ்வளவு முக்கியம் என். என் சிறு வயதில் என்னுடைய அப்பாவை இழந்து, நானும் என் தாயாரும் எத்தனை கஷ்டப்பட்டோம் என. அப்படி ஒரு துன்பம் வசந்தாவின் குழந்தைகளுக்கு வரக்கூடாதென்றும், இரு கண்களில் ஒரு கண்ணான தாயைத்தான் அந்தக் குழந்தைகள் இழந்து விட்டார்கள். மற்றோரு கண்ணாகநீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். அதற்காகத்தான், நீங்களும் எங்களுடனே இந்த வீட்டில் உங்கள் குழந்தைகளுடன் இருக்க நான் சம்மதித்தேன். இப்பவும் நான் சொல்கிறேன், என்னை பொறுத்த வரை, நான் வசந்தாவின் குழந்தைகளுக்கு ஒரு பெரியம்மாவாகத்தான் இருக்க விரும்புகிறேன். ஒரு நாளும் அவர்களுக்கு இன்னோரு அம்மாவாக, மீண்டும் உங்களின் மனைவியாக வாழச் சம்மதிக்க மாட்டேன். என்னுடைய காலம் இனிமேல் இப்படித்தான் இருக்கும். நாமிருவரும் ஒரே வீட்டில், நல்ல நண்பர்களாக, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இருவரும் அந்தக் தாயற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு வாழலாம். தயவு செய்து நீங்கள் இனி எந்தக் காலத்திலும், என்னை உங்களின் முன்னாள் மனைவி என்கிற உறவையோ, அல்லது இப்போதும் என்னை சமாதானப்படுத்தி, மீண்டும் ஒரு புதிய வாழ்க்கை தொடங்களாம் எனநினைக்காதீர்கள். நம்முடைய உறவு இந்த வீட்டில் இந்தக் கூடத்தில் மட்டும்தான். என்னுடைய அறைக்குள்ளோ, அல்லது என் மனதிற்குள்ளோ நீங்கள் மீண்டும் நுழையலாம் என கனவிலும் நினைக்காதீர்கள்: எனச் சொல்லி விட்டு, மௌனமாக தன்னுடைய அறைக்குள் சென்று கதவை முடிக்கொண்டாள்.
மறுநாள் அம்மு தன்னுடைய பள்ளியை விட்டுக் கிளம்பும்போது தலைமை ஆசிரியை அவளிடம் வந்து “அம்மு, இன்று மாலை நானும் என் கணவரும் உங்களின் விட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு வரப்போகிறோம். அப்படியே நாங்கள் உன் வீட்டிற்கு வந்து உன்னுடைய பெண்கள் இருவரையும் பார்த்து விட்டு, கொஞ்ச நேரம் உன்னுடன் இருந்து விட்டு திரும்புவோம்”எனச் சொல்ல, அம்முவும் சிரித்துக் கொண்டே ரொம்ப சந்தோஷம் அம்மா. நீங்களும் அப்பாவும் இன்று இரவு உணவு எங்களுடன் சேர்ந்து சாப்பிடுங்கள்”எனவும் சொல்லி விட்டுச் சென்றாள். மாலையில் தலைமை ஆசிரியையும் அவருடைய கணவரும், கோவிலுக்குப் போய்விட்டு, அம்முவுன் வீட்டிற்குச்சென்றார்கள். முதலில் சிறிது நேரம் எல்லாரும் கூடத்தில் அமர்ந்து குழந்தைகளுடனும், இரவியுடனும் பேசிக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு ஆன பின், தலைமை ஆசிரியை அம்முவைக் கூப்பிட்டுக் கொண்டு, தனியாகப் பேசப்போனார்.
தன்னுடைய தனிமையில் பேச வந்தவரைப் பார்த்து அம்முவும் சிரித்துக் கொண்டே “அம்மா, நீங்கள் என்னிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நேற்று இரவு இரவி என்னிடம் பேசியது பற்றித்தான் இன்று நீங்கள் அவருக்குப் பரிந்து கொண்டு என்னிடம் பேச வந்திருக்கிறீர்கள். தயவு செய்து உங்களின் யோசனைக்கு நான் மறுப்புத் தெரிவித்தால் மன்னித்து விடுங்கள். நான் ஒன்றும் அவசரப்பட்டு அவரிடம் நேற்று பேசவில்லை. என்று அவர் என்னை விட்டு குழந்தை வேணும்னு வேறு ஒரு திருமணம் செய்ய ஆசைப்பட்டு, அவர் முடிவு செய்த போதும், நான் மறுப்பு ஏதும் சொல்லாது அவருடைய விருப்பப்படியே எல்லா விஷயத்திலும் ஒத்துழைத்தேன். பகவான் அருளால் அவர்களுக்கு இரு பெண்கள் பிறந்தவுடன், நானும் சந்தோஷப்பட்டேன். பிறகு நடந்தது உங்களுக்கும் தெரியும். எனக்கு குழந்தை பிறக்க வழியில்லாமல் இருந்தது என்னுடைய தப்பா. என் விதி அப்படி. அதற்காகநான் யார் மீதும் வருத்தப்பட வில்லை. இப்போ வசந்தாவின் காலம் முடிந்து விட்டது. நீங்களும் கேட்கலாம், நான் எதற்காக இரவியை சிறையிலிருந்து மீட்டு வந்தேன் என. அதற்குக் காரணம் வசந்தாவும், அந்த இரு பெண்குழந்தைகளும்தான். தன்னுடைய கடைசி காலத்தில் வசந்தாவின் மனதில் எந்த விதமான ஏக்கமும் இருக்கக்கூடாதென்றுதான், இரவியையும் சிறையிலிருந்து பணம் கட்டி, மீட்டேன். வசந்தா என்னிடம் தன்னுடைய குழந்தைகளுக்கு நான் நல்ல பாதுகாப்பான பெரியம்மாவாக இருக்க வேண்டுமென்றுதான் விரும்பினாள். நானும் அவளிடம் “நான் உன் காலத்திற்குப் பிறகும், உன் குழந்தைகளுக்கு ஒரு பெரியம்மா ஸ்தானத்தில் இருந்து அவர்களை நல்ல படியாக வளர்த்து ஆளாக்குவேன். அவர்களுடன் அவர்களுடைய அப்பாவும் சேர்ந்து இருக்க நான் உதவியாக இருப்பேன்” என்றுதான் வாக்குக் கொடுத்தேன். இப்பவும் அப்படித்தான் நடந்து கொள்கிறேன். உங்கள் எல்லாருக்கும் நானும் இரவியும் கணவன் மனைவி என்பது நன்றாகத் தெரியும். ஆனால், என் உள்ளத்தில் அவருக்கு இடமில்லையே. எங்கள் இருவருக்குமே குழந்தை இல்லாதாபோது, அவருக்குத் தன்னுடைய வாழ்விற்கு ஒரு வாரிசு வேண்டுமென்றுதான் விரும்பினார். அதனால்தான், கொஞ்சமும் மன உறுத்தலின்றி என்னிடமே தான் வேறு ஒர் பெண்ணை மணந்து, தனக்கென ஒரு வாரிசு அடையவேண்டுமென விரும்பினார். அவருக்கு ஏற்பட்ட அதே ஆசை எனக்கு ஏற்படவில்லை. என்னைப் பொறுத்தவரை “ஒருவருக்கு ஒருத்தர்
என்ற கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். அதனால்தான், அவர் என்னிடம் கேட்டபோதே நான் எழுத்துப் பூர்வமாக மட்டும் அவரிடமிருந்து விவாக பந்தத்திலிருந்து விலகுவதாக சொல்லவில்லை, அன்றே என் மனதிலிருந்தும் அவரை நான் விலக்கி விட்டேன். அன்றிலிருந்து என்னைப் பொறுத்தவரையில் அவர் வசந்தாவின் கணவர்தான். இப்பவும் அப்படித்தான். இன்று அவருக்கு என் தேவையிருக்கு, வரச் சம்மதிக்கிறார். ஒரு வேளை இப்போ வசந்தா உயிருடன் இருந்திருந்தால், அவருக்கு என் நினைப்பாவது வந்திருக்குமா இருக்காது.
நீங்கள் எல்லாரும் நினைக்கலாம், இந்த அம்மு ஏன் இப்படி ஒரு அசடாக இருக்கிறாள். வசதி வந்தபோது, வாழ வேண்டாமா என. அப்படி ஒரு சந்தர்ப்பமான வசதி வாழ்க்கைக்கு நான் ஆசைப்படவில்லை. நம்முடைய தலையிலிருந்து வாரும் போது உதிறும் முடியை, நம்முடையதாகவே இருந்தாலும், அதை நம்மால் மீண்டும் நம்முடைய தலையில் ஒட்ட வைக்க முடியுமா. அப்படித்தான் ஒருமுறை மனதிலிருந்து விலக்கப்பட்ட உறவும் மீண்டும் ஒட்டாது. என்னைப் பொறுத்தவரை நானும் அவரும் ஒரு நல்ல நண்பர்களாகத்தான் இந்த வீட்டில் இருப்போம். எங்களுக்குள் ஏற்பட்ட விரிசல் இனிமேல் ஒட்டாது. எங்கள் வாழ்க்கை இனிமேல் ஒரே படகில் பயணிக்கும் இரு பிரயாணிகள் போல்தான் இருக்கும். எனக்கு எதிலும் அதிக ஆசையும் இல்லை, அதே சமயம் கை விட்டுப் போனதை நினைத்து, மன வருத்தப்படுவதும் தெரியாது. எனக்கு என்ன கிடைக்கனும்னு இருக்கோ அது கட்டாயம் கிடைக்கும். நான் இரவியுடன் இந்த வீட்டில் ஒன்றாக வாழ சம்மதித்ததே, வசந்தாவின் குழந்தைகளுக்கு தகப்பனார் என்ற உறவு வேண்டும். எனக்கு ஒரு கணவர் என்ற உறவு இனிமேல் தேவை இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் திடமானமுடிவில்தான் இருக்கிறேன். பார்க்கிறவர்களுக்கு நான் அசடாகத் தெரிந்தாலும் அது என்னை பாதிக்காது. நான் பிறந்ததிலிருந்தே எனக்கு அசடு என்ற ஒரு பட்டப் பெயர் இருக்கு. இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குத் தெரியும் இப்ப நீங்கள் என்னை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் வாருங்கள் போகலாம்” எனச் சொல்லி வெளியே வந்து, அவர்களை வழி அனுப்பினாள்.
போகும்போது தலைமை ஆசிரியை இரவியிடம் “அம்மு என்னிடம் பேசினாள். அவளின் தீர்மானம் முடிவானது. தயவு செய்து, இனிமேலாவது அவளின் விருப்பப்படியே அவள் வாழட்டும். அவள் தெளிவாகவே இருக்கிறாள். அவளை அசடென்று நினைத்த நாம்தான் அசடு.. அவளுடைய வாழ்வு அவளின் உரிமை: எனச் சொல்லி விட்டு, விடை பெற்றாள்.