Thursday, 12 January 2017

உதவிக்கு ஆள்வேண்டாம்.

உதவிக்கு ஆள் வேண்டாம்.
 (ஜெயரமணி)
                தன் புது மனைவியுடன், வீட்டில் டி..வி. பார்த்துக் கொண்டிருந்த  பிரபாகரன், அழைப்பு  மணியில் சப்தம் கேட்டு கதவைத் திறந்தான்.  வாசலில், அவனுடைய மாமியார், இரு பெண்களுடன் நின்று கொண்டிருந்தார்.  வாசலில் அம்மாவைப் பார்த்த பிரியாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.  முழுசாக ஒரு நாள் கூட ஆகவில்லை.  அதற்குள் அவளுக்கு அம்மாவைப் பிரிந்து நீண்ட நாட்கள் ஆனமாதிரி, ஒரு துள்ளலுடன் ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, “ஏன்னம்மா, இத்தனை நேரம் பண்ணி விட்டீர்கள்?  உங்களை நான் காலையிலுருந்தே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்: என மிகவும் ஏக்கத்துடன் சொல்லிக் கொண்டே, அம்மாவுடன் உள்ளே வந்தாள். தன் புது மனைவியின் தாய்ப் பாசத்தைக் கண்டவன், மனதிற்குள் சிரித்துக் கொண்டே,  “என்ன பிரியா, நேற்றுத்தானே நாம் அந்த வீட்டிலிருந்து, இங்கு வந்தோம்.  அதற்குள் உனக்கு அம்மாவின் ஏக்கம் வந்து விட்டதா?” எனவும் கேலியாக் கேட்டான்.
                அதற்கு அவனுடைய மாமியார் “தம்பி, என் பெண்ணால் ஒரு நாள்கூட என்னை விட்டு இருக்க முடியாது..  எங்களுக்கும் அவளைவிட்டு ஒரு பொழுது கூட இருக்க முடியாது.  நான் என் ஆசையை அடக்க முடியாமல் வந்து விட்டேன்.  ஆனால், அவளுடைய அப்பாவோ, பெண்ணைப் பிரிந்த ஏக்கத்தில், சாப்பிடக் கூடப் பிடிக்காமல், இருக்கிறார்.” என்றாள்.   , தன்னுடன் வந்திருந்த இரு பெண்களையும் பார்த்து, “ஏண்டி, இங்கு வேடிக்கைப் பார்க்கவா உங்களை அழைத்து வந்திருக்கிறேன்.  போய் உள்ளே எல்லா வேலைகளையும் பார்த்துச் செய்யுங்கள்.  இனிமேல், நீங்கள் இருவரும் இங்குதான் வேலை செய்ய வேண்டும். பாத்துச் செய்யுங்கள்” எனவும் உத்திரவு போட்டு, அவர்களை உள்ளே செல்லவும் பணித்தாள்.
                முதலில் தன் மாமியார் ஏதோ பெண்ணைப் பார்க்க வந்திருப்பார் என நினைத்த, பிரபாகரன், முழித்துக் கொண்டான்.  மாமியாரின் வருகைக்கு காரணம் என்ன என்பதையும் புரிந்து கொண்டான்.  தன்னுடைய தனிச் சுதந்திரத்தில், மாமியாரின் தலையீடு அதிகம் இருக்கும் என்பதையும், தன் மனைவி, ஒரு பெரிய பணக்காரரின் ஒரே வாரிசு என்பதாலும், தனக்கென யாரும் உறவு இல்லைஎன்பதாலும், தன்னுடைய வீட்டில் அவர்களுடைய ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டான்.    என்னதான், செல்லமாக வளர்ந்தவள் என்றாலும், இனிமேல் அவள் தன் மனைவி. இந்த வீடு அவர்கள்  இருவருக்கும்தான் உரிமையானது.  மாமியார், மாமனார், வந்து போகலாம், ஆனால், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் தலையீடு இருக்கக் கூடாது.  முதலியேயே தடுத்து விட வேண்டும்.  புது மனைவி என கொஞ்சம் அசந்து விட்டால், பிறகு, தனக்கு தன்னுடைய வீட்டிலேயே சுதந்திரம் இருக்காது.” எனவும் தீர்மானித்து,  தன் மாமனார் வீட்டார் தலையீட்டுக்கு இப்பவே ஒரு முற்றுப் புள்ளியும் வைத்து விடவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தான்.
                அதனால், மெதுவாக, தன் வீட்டிற்குள் செல்லும் இரு பெண்களையும் பார்த்து “அம்மா, கொஞ்சம் நில்லுங்கள்.  நீங்கள் எல்லாம் யார்? நீங்கள் பாட்டுக்கு, வந்தவுடன், வீட்டிற்குள் செல்லுகிறீர்களே?  இங்கு உங்களை யார் கூப்பிட்டது?”  எனவும் கேட்டான்.  அவனுடைய கேள்விக்கு, பிரியா “என்னயிது, எங்கள் அம்மாதானே கூட்டிக் கொண்டு வந்தார்கள். தெரியாதது போல் கேட்கிறீர்களே” எனவும் தன் கோபத்தையும் சிறிது காட்டினாள்.  அப்போதும் மாமியார் அவனிடம் “என்ன தம்பி, உங்களுக்குத் தெரியாதா?  நாங்கள் எங்கள் பிரியாவை மிகவும் செல்லமாக வளர்த்து இருக்கிறோம்.  அவளுக்கு வீட்டு வேலைகளைச் செய்து பழக்கமும் இல்லை, தெரியவும் தெரியாது.  இங்கும் எங்களுடைய பெண் சிரமப்படக்கூடாதென்பதற்காகத்தான், இவர்களை கூட்டிக் கொண்டு வந்தேன். இனிமேல், இவர்கள் இருவரும் உங்களின் வீட்டில் பிரியாவுக்கு உதவியாக எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள்.  இனிமேல், வீட்டில் சமைக்க, மேல் வேலை செய்ய என பிரியா கஷ்டப்படவேண்டாம்.  இதனால், உங்களுக்கு ஒரு சிரமும் இல்லை. இவர்களின் சம்பளத்தை நாங்களே கொடுத்து விடுவோம்.” எனவும் கர்வமாகச் சொன்னாள்.
                அதைக் கேட்ட பிரபாகரன் சிரித்துக் கொண்டே, “என்ன அத்தை, பிரியா நேற்று வரைதான் உங்களின் செல்லப் பெண். இன்று அவள் என் மனைவி, எங்களின் குடும்பத் தலைவி என அழுத்தமாகச்  சொன்னான்.  தன் கணவனின் கருத்து என்ன என்பதைக் கூட தெரிந்து கொள்ள  பிரியா விரும்பவில்லை. மாறாக அவனிடம் “உங்களுக்கு ஏன் இந்தக் கவலை.  வீட்டில் வேலைக்கு எனக்கு உதவிக்கு ஆட்கள் வேண்டுமென்றுதானே, அம்மா இத்தனைச் சிரமப்பட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். அம்மாவின் மனதை வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்” எனவும் சொல்லி விட்டு, அவர்களை வீட்டிற்குள் செல்லவும் சொன்னாள்.
                தன் பெண் புதிதாக வந்த வேலைக்காரர்களுடன் உள்ளே சென்றவுடன், மாமியார் அவனிடம் “தம்பி, எங்களின் பெண்ணை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுத்ததிற்கு முக்கிய காரணமே, நீங்கள் தனி ஆள்.  உங்களின் சொந்த மூயற்சியால், நன்றாகப் படித்து, இன்று ஒரு பெரிய மில்டி நேஷனல் கம்பெனியில் நிர்வாகியாக இருக்கிறீர்கள் என்பதுதான்.  என்னதான் எங்கள் பிரியா உங்களை விரும்பினாலும், நீங்கள் தனியாளாக இருப்பதாலும்  தான், அவளுடைய அப்பா இந்தக் கலியாணத்திற்கு சம்மதம் தந்தார்.  எங்களின் ஒரே கொள்கை உங்களையும் எங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.  ஆனால், அதற்கு நீங்கள்தான் சம்மக்திக்க வில்லை.  சரி, முதலில், புதிதாக திருமணம் ஆனவர்கள், கொஞ்ச நாள், தனியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றுதான், நாங்கள் உங்களின் விருப்பபடியே உங்களைத் தனியாக  இருக்கவும் அனுமதித்தோம்.  எங்களுடைய எல்லா சொத்துக்களுக்கும் பிரியாதான் உரிமையானவள்.  அதனால், நீங்களும் அவளிஷ்டப்படியே இருங்கள். இதுதான், உங்களூக்கும் நல்லது,  உங்களூக்கு என்ன வேண்டும்.  வீட்டுக் கவலை இல்லாமல், நிம்மதியாக இருங்களேன்” எனவும் சொன்னாள்.  அவளின் பேச்சிலிருந்து, இந்த வீட்டிலும், அவர்களுடைய ஆட்சிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதையும், ஜாடையாகச் சொல்லியதை புரிந்து கொண்டான்.  முதல் முதலாக  வீட்டிற்கு வந்திருக்கும் மாமியாரிடம் அதிகம் பேச வேண்டாமென மௌனமாக இருந்து விட்டான்.
                பிற்பகல் உணவு முடிந்த பின்,  சிறிது நேரம் பிரியாவுடன், அம்மாத் தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள்.  அவர்களின் பேச்சில் தலையிடாவிட்டாலும், பிரபாகரனால் ஊகிக்க முடிந்தது.  தாயார் பெண்ணுக்கு இப்பவே, புருஷனை எப்படித் தன் கைக்குள் வைத்துக் கொள்வது என்பதுதான் முக்கிய புத்திமதியாக இருக்கும் என.
                பிரபாகரன் கூடத்தில் ஃபொனில் பேசிக் கொண்டிருந்தான்.  அவன் பெரியதாகவே பேசியதால், அவன் பேசியது நன்றாகவே பிரியாவுக்கும், அவளுடைய அம்மா தர்மாம்பாளுக்கும் கேட்டது.  “மேடம், நான் சொன்னதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.  எனக்கு இரவுஎட்டு மணியிலிருந்து, காலை ஆறு மணி வரை வேலைக்குத்தான் ஒரு பெண் வேண்டும்.  பெண் பார்க்க நன்றாகவும், நல்ல வயதுடனும் இருக்க வேண்டும். திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டும்.  சம்பளம் பற்றி கவலை வேண்டாம்.  அந்த பெண்ணை எனக்குப் பிடித்து இருந்தால் போதும்.  நீங்கள் கூடிய சீக்கிரம் ஒரு பெண்ணை பார்த்து, எனக்குத் தெரியப்படுத்துங்கள்.  நானே அவளை நேரில் பார்த்து முடிவு செய்கிறேன்.  என் ஃபொனெ நம்பரைக் குறித்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் என்னிடம் மட்டும் தான் பேச வேண்டும். மறந்து விடாதீர்கள் எனச் சொல்லிவிட்டு, மாமியாரையும், பிரியாவையும் பார்த்து சிரித்தபடியே தன்னுடைய அறைக்குள் சென்றான்.
                பிரபாகரனின் பேச்சைக் கேட்டவர்களுக்கு, தலை சுற்றியது.வீட்டு வேலைக்குத்தான் இருவர் ஏற்பாடாகிவிட்டதே.  பிரபாகனுக்கு எனத் தனியாக, அதுவும் இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரைக்கும் எதற்காக ஒரு பெண் என்பதும் அவர்களுக்கு சிறிது கவலை அளித்தது.  தர்மாம்பாள்  பிரியாவிடம் “என்னடீயிது புதுக் கதையாக இருக்கே.  உன் புருஷனைப் பற்றி நன்றாகத் தெரிந்துதானே, அவனைக் கலியாணம் செய்து கொண்டாய்? புது பெண்டாட்டி நீ இருக்கும்போது, எதற்கடி இராத்திரி வேலைக்காக தனியாக, அதுவும் ஒர் அழகான, திருமணம் ஆகாத  வயதுப் பெண்.  நீ இப்பவே உன் புருஷனைக் கண்டித்து வை.  உள்ளேப் போய், அவனுக்குத் தனியாக ஒரு வேலைக்காரி தேவை யில்லை. வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொல்” எனவும் பெண்ணைத் தூண்டி விட்டாள்.
                கணவனின் அறைக்குள் சென்றவளைப் பார்த்தவன், “என்ன பிரியா, அதிர்ச்சியாக இருக்கிறதா?  நமக்குத் திருமணம் ஆகி, நாமிருவரும் தனியாகச் சுதந்திரமாக வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறோம்.  இந்த விட்டில் எதிலும் மற்றவர்களின் தலையீடு இருக்கக்கூடாது.  நம் வீட்டிற்கு வேலைக்கு உதவி ஆள் வேண்டுமானால், நாமே பார்த்துக் கொள்ளனும். எனக்குத் தனியாக ஒருவள் வேண்டுமா என, நீதான் முடிவு செய்ய வேண்டும். நீ படித்தவள். யோசித்து, நீயாகவே முடிவு செய். நான் திரும்பி வருவதற்குள்.” எனச் சொல்லி விட்டு சென்றான்.
                யோசித்தவளுக்கு, புரிந்தது, இனிமேல் இது எங்களுடைய வாழ்க்கை, எங்களுடைய வீடு.  அம்மாவானாலும், இனிமேல் அவள் வேற்று மனுஷிதான். என் வீட்டு வேலையை நான் பார்த்துக் கொள்ளுவேன். பழக்கம் இல்லையென்றால் பழக்கப் படுத்திக் கொள்ளுவேன். படித்த என்னால் இந்த புது வாழ்க்கைக்கு எற்ப என்னை மாற்றிக் கொள்ள முடியாதா?   தன்னுடைய அம்மாவைப் பார்த்து “அம்மா, நீ உன்னுடன் அந்தப் பெண்களை அழைத்துக் கொண்டு போ. என் வீட்டு வேலைகளை நானே கவனித்துக் கொள்வேன்..  இந்த புதுச் சூழ்நிலைக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.” எனச் சொல்லிக் கொண்டே, அம்மாவிற்குக் குங்குமம் கொடுத்து அனுப்பிவிட்டு கணவனுக்காகக் காத்திருந்தாள்.
                                                வெளியே சென்ற பிரபாகரன் வீடு திரும்பும்போது, வீட்டில் பிரியாவைத் தவிர வேறு யாரும் இல்லாததைக் கண்டவன், மனதிற்குள் திருப்தி அடைந்தான்.  நல்ல வேளை. பிரியாவுக்கும் சுயமாகச் சிந்திக்கத் தெரிகிறது.  வந்தவன் தன் கையில் கொண்டு வந்திருந்த மல்லிகைச் சரத்தை ஆசையுடன் மனைவியின் தலையில் வைத்தான்.  பிறகு அவளிடம் மெதுவாக “பிரியா, நான் அம்மாவிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தது உனக்குப் பிடிக்கவில்லையா?  என்ன செய்வது,  எனக்கு, என் புது மனைவியுடன் நாள் பூராவும் உல்லாசமாக, உற்சாகமாக இருக்க வேண்டும். ஆனால், வீட்டில் சதா, இரண்டு  பெண்கள் இருந்தால், நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்,  எனக்கு என் தேவைகளை என் மனைவி செய்து கொடுத்தால்தான், திருப்தி.  அதை விட்டு விட்டு, யாரோ ஒரு பெண், நாம் கொடுக்கும் காசுக்கா, எனக்குச் சமைத்துப் போடுவது, உணவு கொடுப்பது என இருந்தால், அது சரியாக இருக்குமா?  என்ன, உனக்குப் பழக்கமில்லை. ஆனால், எனக்குத் தெரியுமே எல்லா வேலைகளையும் சுயமாகச் செய்து கொள்ள,  நான் உனக்குச் சொல்லித் தருகிறேன்.  ஒருவாரம் பார். பிறகு நீயே சொல்லுவால், நமக்கு தனியாக உதவிக்கு இப்ப ஆட்கள் வேண்டாம் என” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

        பிரியாவும் அவனிடம் “மேல் வேலைக்குத்தான் என் அம்மா இருவரை அழைத்து வந்தார்கள். ஆனால், நீங்கள் உங்களுக்கென தனியாக, இரவு முழுவதற்கும் ஒரு ஆள் வேணுமெனக் கேட்பது எப்படி நியாயம?  அப்படி ஒருவள் வருவதற்கு நான்  இடம் கொடுப்பேனா? எனவும் சிறிது கோபத்துடனும், வருத்த்துடனும் கேட்டாள்.  அதற்கு பதிலாக, பிரபாகரன் உள்ளே இருந்து, தன்னுடைய செல் ஃபோனை எடுத்து வந்து, “பிரியா, நான் ஃபொனெ செய்தவருக்கு, நீயே பண்ணி, எங்கள் வீட்டிற்கு எந்த விதமான வேலைக்கும் உதவிக்கு யாரும் வரத் தேவை இல்லை எனச் சொல்லி விடு” எனச் சொல்லி, செல் ஃபொனை அவளிடம் கொடுத்தான்.  அவளும், அவனுடைய ஃபொனில் கடைசியாகச் செய்த தொடர்பு எண்ணைப் பார்த்தாள் திகைத்துப் போனாள்.  அது அவளுடைய செல் ஃபொனெ. அதைப் பார்த்தவன் “அட அசட்டுப் பெண்ணே, உன்னுடைய செல் ஃபொனெ அடிப்பதைக் கூட கவனிக்காமல் உன் அம்மாவிடம் அப்படி என்ன இரகசியம். உன்னுடைய நம்பருக்குத்தான் ஃபொனெ செய்து, இரவு எனக்குத் துனையாக, கவனித்துக் கொள்ள ஒருவள் வேண்டும் எனச் சொன்னேன்.” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.  கணவனின் குறும்புத்தனைத்தை தெரிந்து கொண்டவள், “இப்படியெல்லாம் கூட என்னை ஏமாற்றுய்வீர்களா. இருக்கட்டும்?” எனச் சொன்னவளிடம், “பிரியா என்னை மன்னித்துக் கொள்.  நீ கொடுக்கும் எந்த தணடனையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்: என மிகவும் பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டே, “உங்களுக்குத் தக்க தண்டனை கிடைக்காமல் போகாது இரவு வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள்” எனவும் சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டு, கணவனுக்கு இரவு உணவு தயாரிக்க உள்ளே சென்றாள். சிரித்துக் கொண்டே, அவளுக்கு உதவியாக அவனும் சென்றான். 

                புது வாழ்க்கை அவர்களின்  தனிமை, இதில் இடையில் வர, யாருக்கும் பெற்றவர்களாகவே இருந்தாலும்  உரிமை இல்லை.
                 

  

Monday, 9 January 2017

ஒரு நாள் வேஷமென்றாலும்.....



ஒரு நாள் வேஷமென்றாலும்
(ஜெயரமணி)
                திருச்சி மலைக் கோட்டைக் கோவிலில், மௌனமாக அமர்ந்திருந்தாள் சத்தியப்பிரபா. அவளுடைய கையில் இரு வயதாகிய ஒரு ஆண் குழந்தை.  குழந்தைக்கு வயது இரண்டாயிருந்தாலும், மிகவும் நோஞ்சலாகவே இருந்தது.  அவளின் கண்களில் நீரும் வழிந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த அவளுடைய சினேகிதி கனகா, அவளைப் பார்த்தவுடன், அவளின் அருகில் சென்று அமர்ந்தாள் தான் அருகில் வந்ததைக்கூட அறியாமல், கண்களில் நீர் வழிய, எதோ சூன்யத்தை நோக்கியபடியே இருப்பவளின் தோளைப் பிடித்து அசைத்து, “என்ன பிரபா, எந்தக் கோட்டையைப் பிடிக்க, இந்தக் கோட்டைக் கோவிலில் இருக்கிறாய்.  நான் வந்ததைக் கூடக் கவனிக்காமல், அப்படி என்ன யோசனை?” எனவும் கேட்டாள்.   தன்னை அசைத்த சினேகிதியின் கைகளைத் தள்ளி விட்டு, மெதுவாக தன் கண்களில் வழிந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டே “நான் எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறேன்.  நான் இருக்கின்ற கோட்டையையே பத்திரமாகப் பார்த்துக் கொண்டால் போறாதா?” என விரக்தியோடு சொல்லிக் கொண்டாள்.
              “என்ன விஷயம் நீ இத்தனை  தூரம் கலங்குவதற்கு?” எனக் கேட்டவளிடம் “எல்லாம் உன்னுடைய ஸ்டூடண்ட்தான் காரணம்” எனவும் பதிலாகச் சொன்னாள். “என்னுடைய ஸ்டூடண்ட் ஸ்ரீராமா உன்னுடைய வேதனைக்குக் காரணம்.  ஆமாம், இன்று என்ன புதியதாக விஷமம் செய்தான்?”எனவும் கேட்டாள் கனகா.
              “இன்று மட்டுமல்ல, தினமும்தான் அவனால் நான் வேதனைப் படுகிறேன்.  உன்னிடம் சொல்லுவதற்கு என்ன இருக்கு.  உனக்குத் தெரியும், அவன் பிறந்தபின், பத்து வருடங்களுக்குப் பின் எங்களுக்கு இந்தக் குழந்தை பிறந்திருக்கு.  பத்து வருடங்கள் ஒருவனாக ஆட்சி செய்து கொண்டிருந்தவனுக்கு, இந்தக் குழந்தை பிறந்ததிலிருந்தே பிடிக்கவில்லை.  ஏதோ, அவனுடைய சந்தோஷத்திற்கு இடைஞ்சலாக வந்திருக்கிறான் என்றே நினைத்துக் கொண்டு, இந்தக் குழந்தையைக் கண்டாலே அப்படி ஒரு வெறுப்பைக் காட்டுகிறான். நாங்களும் அவனிடம் எத்தனையோ விதமாக அவனுக்குப் புரியும்படி இந்தக் குழந்தை அவனுடைய சகோதரன். இதனிடம் அவன் அன்பாக, பாசமாக இருக்க வேண்டுமெனவும் சொன்னாலும், அவனுடைய மனதில் மாற்றமில்லை.  உனக்குத்தான் தெரியுமே, இந்தக் குழந்தை கருவில் வளரும்போதே, எனக்கு மஞ்சள்காமாலை கண்டதால், வயிற்றிலேயே குழந்தையின் வளர்ச்சி பாதித்துதான் இருந்தது.  குழந்தையும், முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே பிறந்து விட்டதால், அவனுடைய வளர்ச்சியும் குறையாகத்தான் இருக்கு.  குழந்தைக்குத் தேவையான பலமும் இல்லாததால், அடிக்கடி நோயால் பாதிக்கிறது.  ஸ்ரீராமுக்கு, நானும் என் கணவரும், நாள் முழுவதும் அவனை மட்டுமே கவனிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான்.  இத்தனை காலமும் அவன் ஒருவனாக இருந்ததால் நாங்களும் அவனையேக் கவனித்துக் கொண்டிருந்தோம்.  எங்களின் கவனமும் அவன்பாலே இருந்தது. ஆனால், இப்போ இந்தக் குழந்தையையும் நாங்கள் கவனிக்க வேண்டாமா? எத்தனை வகைகளில் அவனுக்கு எடுத்துச் சொன்னாலும், அவன் மாறவில்லை.  இன்று அவனுடைய நடவடிக்கை எங்களை மிகவும் பாதித்து விட்டது.  இன்று அவன் செய்ததை நான் உன்னிடம் சொல்லுகிறேன்.  நீ என்னுடைய உயிர்த்தோழி மட்டுமல்ல, அவனுடைய வகுப்பு ஆசிரியையும் ஆனாதால், உன்னிடம் சொல்லி, எப்படியாவது அவனுடைய மனதில் இருக்கும் கோபத்தை, வெறுப்பை மாற்றும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.” எனச் சொல்லிவிட்டு, அன்று காலையில் தங்கள் வீட்டில் நடந்ததைச் சொல்லுகிறாள்.
              நேற்று இரவிலிருந்தே, சின்னவனுக்கு சலி ஜுரம் அதிகமாகி, குழந்தை மூச்சு விடக்கூட சிரமப்பட்டான்.  இரவு முழுவதும் குழந்தையுடன்  ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டோம்.  பெரியவனுக்குத் துனையாக, எங்களுடைய வீட்டுச் சொந்தக்காரம்மாவை வைத்து விட்டுச் சென்று விட்டோம்.  காலையில்தான் குழந்தை கொஞ்சம் குணமானதும், வீட்டிற்கு வந்தோம்.  வந்தவுடனே, முழித்துக் கொண்டிருந்தவனிடம் சென்று “ராமா, ராத்திரி முழுக்க குழந்தை கண்ணனுக்கு மூச்சு திணறல் வந்து மிகவும் சிரமப்பட்டான்.  இப்பத்தான் கொஞ்சம் சரியாகி, வீட்டிற்கு எடுத்து வந்தோம்.  இன்று நீயே உனக்குத் தேவையானவற்றையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, சீக்கிரம் ஸ்கூலுக்குக் கிளம்பு. நானும் உனக்கு உடனடியாக கொஞ்சம் உப்புமா பண்ணித்தருகிறேன்” எனச் சொல்லிக் கொண்டே, உள்ளேச் சென்றேன். கூட வந்த என் கணவரும், ஆபிசுக்குப் போக அவசர அவசரமாக குளிக்கச் சென்று விட்டார்.  வந்தவுடன் அவனைக் கவனிக்காமல் இருந்ததாலும், அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காத  உப்புமாதான் டிபன் எனச் சொன்னதும் அவனுடைய கோபம் அதிகமாகியது.  அவனுடைய ஆத்திரம் எல்லாம் சின்னவன் மேல் திரும்பியது.  நாங்கள் இருவரும் அங்கிருந்து அகன்றவுடனேயே,   தன் கையில் இருந்த காம்பெஸால் குழந்தையில் கையில் குத்தி விட்டான்.  குழந்தை திடீரென வீலென அழுத்தைக் கேட்ட நாங்கள் இருவரும் அங்கு ஓடி வந்து பார்த்த போது, ஸ்ரீராமனின் முகத்தில் அப்படி ஒரு ஆக்ரோஷமும், குழந்தை வேதனையால் துடிப்பதைப் பார்த்து சந்தோஷமும் தாண்டமாடியது.  முரட்டுத் தனத்தைக் கண்ட என் கணவரின்  கோபம் அதிகமாகியது.  அதனால், ஸ்ரீராமை இன்று கண் மண் தெரியாமல் அடித்து விட்டார்.  கடைசியில்  இனிமேல், சின்னவன் ஒருவந்தான் எங்களுடைய மகன் என்றும், நாளையிலிருந்து பெரியவனை ஹாஸ்டலில் சேர்த்து விடுவதாகவும் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.  என்னுடைய கோபமும் துக்கமும் தாள முடியவில்லை.  பெரியவனிடம்”நீ எல்லாம் ஒரு பிள்ளையா. உன்னுடைய தம்பிதானே அவன். அந்தக் குழந்தையிடம் கொஞ்சமும் பாசமோ, பரிவோ இன்றி இப்படி ஒரு கொடுமையான காரியம் செய்ய எப்படியடா உனக்கு மனம் வந்திருக்கு.  இப்படிப்பட்ட ஒரு முரட்டு அண்ணனை அடைய இந்தக் குழந்தை என்ன பாவம் செய்ததோ தெரியாது.  தயவு செய்து, நீஎங்காவது கண் காணாமல் தொலைந்து போயிடடா” எனக் கோபமாகச் சொல்லி, அவனை விட்டை விட்டு வெளியே தள்ளி விட்டு உள்ளே சென்று விட்டேன்.  சின்னக் குழந்தையின் கைகளில் தேங்காய் எண்ணை தடவி, அதனை சமாதானப் படுத்தி விட்டு, மனதில் உள்ள வேதனையைச் சொல்லி அழத்தான் இங்கு வந்தேன்  குழந்தையை திரும்பவும் தனியாக விட்டு வரமனமின்றி அதையும் எடுத்து வந்து விட்டேன்: எனச் சொல்லி விட்டு, துக்கம் தாளாமல் அழவும் செய்தாள்.
 சினேகிதியின் சொற்களைக் கேட்டவளுக்கு, தன் மாணவனின் மீது கோபம்தான் வந்தது.  இத்தனைச் சின்ன வயதில் அப்படி என்ன ஒரு ஆத்திரமும் ,கோபமும் வரும்.  பொதுவாகவே குழந்தைகளுக்கு தங்களுடைய இளைய சகோதர, சகோதரிகளிடம் அதிகமாக பாசம்தானே இருக்கும். இது என்ன ஒரு வித்தியாசமாக இருக்கு.  எப்படியாவது, ஸ்ரீராமனின் மனதில் இருக்கும் கோபத்தையும்,  விரோதத்தையும்மாற்றி, அவன் மனதில் தன் சின்னத் தம்பியிடம் பாசமாகவும், அன்பாகவும் இருக்கச் செய்ய வேண்டும். தான் அவனுடைய ஆசிரியை.  கட்டாயம்,அவனைத் திருத்துவது தன்னுடைய கடமை எனவும் எடுத்துக் கொண்டாள்.  அதனால், “பிரபா, இனி  நான் ஸ்ரீராமிடம் பேசி, அவனுடைய கோபத்தையும், தம்பியின் மீது இருக்கும் வெறுப்பையும் மாற்றி, அவனால் தம்பியிடம் பாசமாகவும், ஆசையாகவும் இருக்கும்படி நான் மாற்றுகிறேன்.  நீ கவலைப்படாமல் போ.  போய், ஸ்ரீராமையும் சமாதானப்படுத்து.  வா, உன்  வீட்டிற்கே போகலாம்”எனச் சொல்லி, இருவரும் சத்தியபிரபாவின் வீட்டிற்கு வந்தார்கள்.
 அங்கு, ஸ்ரீராம், தலையைக் குனிந்து கொண்டே, கண்களில் நீர் வழிய,வீட்டின் வாசற்படியிலேயே காத்துக் கொண்டிருந்தான்.  அவனையுமறியாமல், தன்னுடைய முரட்டுத் தனத்தால், சின்னக் குழந்தையின் கையில் இரத்தம் கசிந்த அடையாளம்  இருப்பதைப் பார்த்து கண்களில் வேதனையுடனும், பயத்துடனும் தாயையும், தாயுடன் வந்திருக்கும் தன்னுடைய பள்ளி ஆசிரியையும் பார்த்தான்.
தன்னிலை மறந்து, கோபத்தால் தான் செய்த துஷ்ட்தனத்தை எண்ணி எண்ணி, அவனின் மனம் வேதனைப்பட்டது.  தாயுடன், பள்ளியின் வகுப்பாசிரியையும் வந்திருப்பதைப் பார்த்தவனுக்கு, மிகவும் பயமும் வந்து விட்டது.   “என்னப்பா ஸ்ரீராம், இன்று பள்ளிக்குப் போகவில்லையா?  சீக்கிரம் கிளம்பு”எனச்சொல்லிக் கொண்டே, “பிரபா,இன்று அவன் என்னுடன் இருக்கட்டும்.நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” எனவும் சொல்லிவிட்டு, அவனுடன் பள்ளிக்குப் போனாள்.  வழியிலேயே, இருவரும் அங்கிருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டார்கள்.
பள்ளிக்குச் சென்றவுடனேயே, தலைமை ஆசிரியை, கனகாவைத் தேடியதாகச் செய்தி வந்தவுடனே, கனகா உடனடியாக தலைமை ஆசிரியைச் சந்திக்கச் சென்றாள்.  . அவளிடம், வரும் பள்ளியின் ஆண்டு விழாவுக்காக ஒரு நாடகம் போட வேண்டும் என்பதையும், அதற்கான முழு பொறுப்பும் அவளுடையது எனவும் சொல்லி விட்டார்.  கனகாவும் சந்தோஷத்துடன் சம்மதித்து அது சம்பந்தமான  யோசனையுடனே வந்தாள்.  வகுப்பில் தன்னுடைய மாணவர்களைப் பார்த்தும், தங்களின் பள்ளி ஆண்டு விழாவுக்கு நாடகம் ஒன்று போட வேண்டும் எனச் சொல்லி, எதைப் பற்றி நாடகம் போடலாம் எனவும் மாணவர்களிடம் யோசனையும் கேட்டாள்.  ஒவ்வொருவரும் விதவிதமாகச் சொல்லி, கடைசியில், கனகா அவர்களிடம் “நாம் இந்த ஆண்டு, புராண இதிகாசமான இராமாயணத்திலிருந்து சில காட்சிகளை நாடகமாகப் போட்டால் எப்படி இருக்கும் எனவும் கேட்டாள்.  உடனடியாக மாணவர்கள் எல்லாருமே சந்தோஷத்துடன் “டீச்சர், நீங்கள் சொன்னதுதான் சரி. இராமாயணத்திலிருந்தே போடலாம் எனவும் சொல்லி, எந்தக் காட்சியைப் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும் விவாதித்தார்கள்.  அந்த வகுப்பில் ஸ்ரீராம்தான் மிகவும் புத்திசாலியான மாணவன் எனவும் பெயர் எடுத்தவன்.  அதனால், கனகா அவனிடமே “உனக்கு எந்தக் காட்சியைப் போட்டால் நம்முடைய நாடகம் நன்றாக இருக்கும் என யோசித்தாயா?”எனவும் கேட்டாள்.  சிறிது நேரம் மௌனமாக இருந்தவனைப் பார்த்த கனகா மற்றவர்களிடமும் “நீங்களும் சொல்லலாம்” எனவும் சொன்னாள்.  சிறிது நேரம் சென்றவுடனே மாணவர்களிடைய ஸ்ரீராமனின் பொறுமையும், பெரியவர்களிடம் காட்டும் அன்பும், மரியாதையும், எந்தக் காலத்திலும் பொய் பேசாமல் இருந்ததையும், தனிமனித ஒழுக்கங்களையும், சகோதரர்களிடம் காட்டிய பரிவும், பாசமும் என பல வகையில் ஸ்ரீராமனின் குணாதிசயங்களை எடுத்துப் பேசினார்கள்.  அவர்களின் எண்ணத்தைத் தெரிந்து கொண்ட, கனகாவும், “என்னருமை மாணவர்களே உங்களின் கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது.  நமக்கு நாடகம் போட முப்பது வினாடிகள்தான் கிடைக்கும், அதனால், அதற்குள், ஸ்ரீராமனுடைய சகோதர பாசத்தையும், பெற்றவர்களிடம்  அவர் காட்டிய மரியாதை, பணிவும், அவர்களின் சொற்களையே தனக்கு தாரகமந்திரமாக எடுத்து வாழ்ந்து காட்டியதையும் எடுத்துச் சொல்லும் வகையில், நாம் நாடகம் போடலாம்.  இனிமேல், நான்  யார் யாருக்கு நாடகத்தில் என்ன பாத்திரங்கள் என நாளைக்கு யோசித்துச் சொல்லுகிறேன்.  இன்று இனிமேல் நம்முடைய வகுப்புப் பாடங்களைப் படிக்கலாம் எனச் சொல்லி, அன்றாட பாடங்களில் கவனம் செலுத்தினார்கள்.
அன்று இரவே கனகா பள்ளியில் போட வேண்டிய நாடகத்தை ஓரளவுக்குத் தயார் செய்து விட்டாள்.  இனி தகுந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுக்க வேண்டியதுதான்.  ஸ்ரீராமனின் சகோதர பாசம், தன்னைப் பெற்றவர்களின் வார்த்தையை மீறாமல் இருப்பது, தன் உடன் பிறந்த மூன்று சகோதரர்கள் மட்டுமின்றி, தன்னுடைய வனவாசத்தில் தான் சந்தித்த குகன், ஜடாயூ, சுக்கிரீவன், அனுமான், விபீஷணன் ஆகியோரையும் தன்னுடன் பிறந்த சகோதரர்களாகவே நினைத்து பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டது, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசப் பதவியைப் பறித்த தன் சிறிய தாயாரிடமும் மாறாத அன்பும், பாசமும், மரியாதையுடன் நடந்து கொண்டது எனப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து நாடகத்தை தயாரித்தாள் கனகா.  தன் மாணாக்கர்களில் யார், யாருக்கு எந்த வேஷம் பொருத்தமாயிருக்கும் எனவும் மனதில் யோசித்து வைத்திருந்தாள். 
பள்ளிக்கு வந்தவுடனேயே, தன்னுடைய நாடகத்தின் பிரதியை அவர்களிடம் எடுத்துக் காட்டி, அதில் ஸ்ரீராமரின் குணாதிசயங்களையும், அவருடன் வாழ்ந்தவர்களைப் பற்றியும், சிறிய குறிப்புகளைச் சொல்லி, தன்னுடைய நாடகத்தில் யார் யார் எந்த பாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பதையும் சொன்னாள். கதையில் வரும் எல்லா பாத்திரங்களுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்த கனகா, “முக்கிய பாத்திரமான ஸ்ரீராமரின் வேஷத்தை மட்டும் யார் போடுவது என  நான் முடிவு செய்யவில்லை,  நீங்களே உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள் எனச் சொல்லி, மாணவர்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்தாள்.  அந்த வகுப்பில் ஸ்ரீராமர் வேஷத்திற்குப் பொறுத்தமாக ஸ்ரீராம் மட்டுமே மற்ற மாணவர்களின் கணிப்பில் தகுத்தவனாக தேர்ந்தெடுத்தார்கள்.  காரணம், அவன் நல்ல உயரம், சிவந்த நிறம்,அவனுடைய கைகள் நீண்டு உறுதியாகவும் இருந்தன.  அவனுடைய கண்களில் சதா ஒரு வீரமும், துடிப்பும் இருக்கும். அவனுடைய உருவம் மட்டும்தான் ஸ்ரீராமரின் தோற்றத்திற்கு ஒத்து இருந்ததே தவிர, அவனுடைய குணமோ நேர் எதிராகத்தான் இருந்தது.  கனகாவின் திட்டமே, இந்த நாடகத்தில் ஸ்ரீராமையே தலைமைப் பாத்திரத்தில் நடிக்க வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மனதில் இருக்கும் ஆத்திரம், துவேஷம், காரணமில்லாத கோபமும், அசூயையை மாற்றுவதுதான்.  அதனால், அவளும், தன் மாணவர்களின் விருப்பப்படியே அவனையே ஸ்ரீராமராக நடிக்கவும் வைத்தாள். 
தினமும் பள்ளியின் வகுப்பு நேரம் முடிந்த பின், ஒரு மணி நேரம் நாடகம் ஒத்திகையை வைத்துக் கொண்டாள்.  நாடகத்தின் நடுவிலேயே, தன் மாணவர்களுக்கும் இராமயணக் கதையையும், அதில் உள்ள நல்ல கருத்துக்களையுமெடுத்துச் சொல்லி, அவர்களின் மனதிலும், இராமாயணக் கதையை பதித்தாள். அவள் தினமும் தன் மாணவர்களை விட்டிற்கு அனுப்பும்போது “என் அன்பு மாணவர்களே, நீங்கள் இங்கு இருக்கும் ஒரு மணி நேரம் மட்டும் இந்த நாடகத்தை நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது, உங்களின் வாழ் நாள் பூராவும் அந்தஇதிகாசத்தில் வரும் அத்தனை பேர்களையும், அவர்களின் நற்குணங்களையும் மறக்காமல் நினைத்து, நீங்களும் அது மாதிரியே நடந்து கொள்ள வேண்டும்.  அப்போதுதான், நீங்கள் எல்லாருமே ஒழுக்கமும், அன்பும், பரிவும், பாசமும் கொண்டவர்களாக  இருக்க முடியும்,  முக்கியமாக, முதலில் உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் அன்பாகவும், மரியாதையாகவும் பழக வேண்டும்.  என் மாணவர்களில் சிலர், தன் வீட்டில் அப்பா, அம்மா, தம்பி, தங்கைகள் என இருப்பவர்களிடம் தேவையில்லாத கோபத்தையும், ஆத்திரத்தையும், விரோதத்தையும் வளர்த்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தெரியும்.  அவர்கள் யாரென நான் சொல்ல விரும்பவில்லை.  எனக்கு என் மாணவர்கள் எல்லாருமே என் குழந்தைகள்தான். அவர்கள் சிறந்தவர்களாகவே இருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. இன்று நாடகம் ஒத்திகை முடிந்து விட்டது. நாம் மீண்டும் நாளை சந்திக்கலாம்” எனச் சொல்லி எல்லாரையும் அனுப்பி வைத்தாள்.  ஒவ்வொருவரிடம், அவர்களுக்கான நாடக வசனங்களையும் கொடுத்து நன்றாக மனப்பாடம் செய்தும் வரச் சொல்லி அனுப்பினாள்.
வீட்டிற்கு வந்த ஸ்ரீராமும் தனக்கு கொடுத்த பகுதிகளை மிகவும் உணர்ந்து படித்துக் கொண்டான்.  கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதாலும் தன்னை  ஸ்ரீராமனாகவே உருவாக்கிக் கொண்டான்.  அதனால், அவனுடைய சுபாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறவும் செய்தன.  வீட்டில் அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்த அவனுடைய அப்பாவும், அம்மாவும் காரணம் புரியாமல் மனதிற்குள் தவித்தார்கள்.  அவர்களுக்குள், தாங்கள் கடைசியாக அவன் சின்னக் குழந்தையின் கையைக் காயப்படுத்தியதை  மிகவும் கடுமையாக கண்டித்ததால், சிறிது பயந்து இருப்பானோ எனவும் நினைத்துக் கொண்டார்கள்.  எது எப்படியிருந்தாலும், அவனுடைய கோபமும், ஆத்திரமும் மறைந்து, சாத்வீகமானவனாக மாறினால் போதும் எனவும் நினைத்துக் கொண்டார்கள். 
தன்னுடைய உடன் பிறந்த தம்பியைப் பார்த்து தனக்குப் போட்டியாக வந்தவன் என நினைத்து, அந்தச் சின்னக்  குழந்தையிடம் காரணமில்லாத கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக் கொண்ட தன்னைப் பற்றியும் மனதிற்குள் நினைத்து  வருந்தினான்.  கடைசியாக, அந்தச் சின்னக் கைகளைத் தான் காயப்படுத்தியதையும், அதனால் அவனுடைய கைகள் சிவந்து புண்ணாகி துன்பப்பட்டதும் அவனுடைய மனதில் வேதனையை உண்டாக்கியது.  கொஞ்சமும் தம்பி எங்கிற பாசமில்லாமல் தான் நடந்து கொண்டது எத்தனைத் தப்பானது என்பதையும் உணர்ந்தான். 
இரவு முழுவதும் தன் மனதிற்குள்ளேயே தன்னிரக்கம் கொண்டு வருந்திய ஸ்ரீராம், காலையில் சீக்கிரமே எழுந்து விட்டான்.  எழுந்தவன் உடனடியாக குளித்து விட்டு, ஸ்வாமி அறைக்குள் சென்றான்.  போகும்போது அவன் கைகளில் சின்னவன் கண்ணன் இருந்தான்.  காலை நேரத்தில் கனகாவும், அப்பாவும் தங்களின் பணிகளில் மூழ்கியிருந்தார்கள்.  கண்ணனுக்கு பாலை எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தவள் திகைத்தாள்.  எப்பவும் தான் உட்கார்த்தி வைத்திருக்கும் இடத்தில் குழந்தை இல்லை. திகைப்புடனும், கவலையுடனும் திரும்பவும் ஸ்ரீராம்தான் குழந்தையை எங்கோ எடுத்துச் சென்று விட்டானோ எனவும் சந்தேகித்தாள்.  கணவனிடம் “குழந்தையை ஸ்ரீராம் எங்காவது எடுத்துக் கொண்டு போனானா?  நீங்கள் பார்த்தீர்களா?” எனவும் கேட்டவளைத் திரும்பிப் பார்த்தவன் “குழந்தை சற்றுமுன் இங்குதானே இருந்தான்” எனச் சொல்லிக் கொண்டே, தானும் குழந்தையை தேடலானான்.  அப்போது ஸ்வாமி அறையிலிருந்து குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்டது.
இருவரும் ஸ்வாமி அறையின் வாயிலை நெருங்கும்போது கண்ட காட்சி அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது.  ஸ்ரீராம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, “ஸ்ரீராமா, நான் சகோதர பாசமில்லாமல், இந்தச் சின்னக் குழந்தையை வெறுத்தவன்.  கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, மிகவும் சோனியாக இருக்கும் அவனிடம் முரட்டுத்தனமாக அன்று இந்தக் கையைக் காயப்படுத்தி விட்டேன்..  அதற்காக நான் இன்று இப்ப மிகவும் மனம் வருந்துகிறேன்.  கனகா டீச்சர் சொன்ன இராமாயணக் கதையைக் கேட்டபிந்தான், நான் உன்னைப் போல் ஒரு அண்ணனாகப் பிறந்தும், இந்தச் சின்னத் தம்பியை வெறுத்தது தவறே.  பாவம் என்னுடைய முரட்டுத் தனத்தால், ஒரு குற்றமும் செய்யாத இந்தக் கண்ணனின் கைகள் புண்ணாகிவிட்டதே.  அப்பவும்கூட வலியால் துடித்து அழுதவனைப் பார்த்து மனதிற்குள் சந்தோஷப்பட்டேனே? அது எப்படிப்பட்ட பாவமான காரியம்.  பகவானே, என்னுடைய மனதில் இருக்கும் கோபம், ஆத்திரம், வர்மம், எல்லாவற்றையும் போக்கி விடு.  நானும், உங்களைப் போலவே எல்லாரிடமும் பாசத்துடனும், பரிவுடனும், முக்கியமாக இந்தச் சின்னக் கண்ணனுடன் மிகவும் பாசமுள்ள அண்ணனாக இருக்கத் துணை புரியுங்கள்.  நான் உங்களின் முன் சத்தியம் செய்து சொல்லுகிறேன்.  என் அம்மா, அப்பா மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.  நான் இனி யாருடனும், எந்தக் காரணத்திற்காகவும் கோபப்படமாட்டேன். எல்லாருடனும் அன்பாக, பரிவாக, சினேகமாக, பாசத்துடன் இருப்பேன்,  எனக்குக் கிடைக்கும் எல்லா சுகங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவேன்.  எனக்கு உங்களால் கொடுக்கப்பட்ட இந்தச் சின்ன சகோதரனை, என் உயிர்போல் பாதுகாப்பேன்” எனக் கண்களில் நீர் வழிய சொல்லிவிட்டு, தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனைத் தூக்கிக் கொண்டு “சின்னக்கண்ணா, என்னை அடித்து விடடா. பாவம், அன்று நான் செய்த துர்ச்செயலால், நீ எத்துனைக் கஷ்டப் பட்டிருப்பாய்.  உன்னுடைய சின்னக் கைகள் எப்படிச் சிவந்து போயிருந்தது.   இன்று உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்  உன்னுடைய இந்தக் கைகளால் என்னை நன்றாக அடித்து விடு.  அப்பத்தான், நான் செய்த தப்புக்கு எனக்கு மன்னிப்புக் கிடைக்கும்  நன்றாக அடித்து விடுடா” எனச் சொல்லிக் கொண்டே, கண்ணனின் கைகளால் தன்னுடைய இரு கன்னங்களிலும் தன்னைத்தானே அடித்துக் கொண்டான்.  முதலில் குழந்தை அவன்  தன்னுடன் விளையாடுவதாக நினைத்துக் கொண்டு, தானும் அவனுடைய கன்னங்களில் அடித்து விளையாடியது.  ஆனால், அண்ணனின் கண்களில் நீர் வழிவதைப் பார்த்து, தன் கைகளால் அடிப்பதை நிறுத்தி விட்டு, அந்த்க் கன்னங்களைத் துடைத்து விட்டுக் கொண்டே “அண்ணா, அண்ணா எனவும் கூப்பிட்டது.
பூஜை அறையின் வாசலில் இருந்த இருவருடைய மனமுமே சிலிர்த்து விட்டது.  தாங்கள் ஒரு நாள் தான் அவனிடம் கடுமையாக இருந்தோம்.  பிறகு அவனிடம் அதைப் பற்றிக் கூட பேசவில்லை.  அப்படியிருக்க, திடீரென ஸ்ரீராமின் மனதில் இத்தகைய மாற்றம் வரக் காரணம் யாது எனவும் தெரியாமல் நின்றார்கள்.  மெதுவாக அவனிடம் சென்று அவனையும், சின்னவனையும் தங்களின் கைகளால் அணைத்துக் கொண்டு,
ஸ்ரீராமா, வருந்தாதே.  உன்னுடைய குற்றத்தை நீயே உணர்ந்து விட்டாய். நியும் சின்னவந்தானெ.  நீ ஒருவனாக இருந்துவிட்டு, திடீரென இன்னோருவன் நம்மிடைய வந்ததால், நாங்கள் உன் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும் குறைந்து விடுமோ எங்கிற பயத்தில்தான் நீ அவனிடம் அத்தனைக் கோபமாக நடந்து கொண்டாய்.  இப்போது உனக்கும் உன் தம்பியிடம் பாசம் வந்து விட்டது. அதனால், இனியும் நீ தப்பு செய்து விட்டோமோ என வருந்த வேண்டாம்.  எங்களுக்கும் நிம்மதியாகி விட்டது. இனிமேல், சின்னவனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உன்னுடையது.  நாமெல்லாம் சந்தோஷமாக இருக்கலாம்.  உன்னுடன் சேர்ந்து நாங்களும் இன்று நம்முடைய சந்தோஷத்தை பகவானிடம் பணிவுடன் சொல்லி, அவனுக்கு நம்முடைய நமஸ்காரத்தைச் செய்வோம்.  நீ எப்பவுமே எங்களுடைய மூத்த குழந்தைதான்.  உனக்கு ஒரு தம்பி வந்திருக்கிறான்.  சந்தோஷமாக வா.  நாமெல்லாம் இன்று முதல் சந்தோஷமாக இருக்கலாம்.  எனக்கும் இன்று விடுமுறைதான். “ எனச் சொல்லிக் கொண்டே இரு பிள்ளைகளுடன் ஸ்வாமி நமஸ்காரம் செய்து விட்டு வெளியே கிளம்பினார்கள்.
மறு நாள்  காலையிலேயே பிரபா, கனகாவைத் தேடி அவள் வீட்டிற்கு வந்தாள்.  வந்தவளைப் பார்த்து “என்ன பிரபா, இத்தனைச் சீக்கிரம் வந்திருக்கிறாய்.  இன்று என் மாணவன் என்ன செய்து உங்களைத் துன்பப்படுத்தினான்.  சின்னவனை எதும் அடித்து விட்டானா? என்ன செய்தான் சொல்
 எனக் கவலையுடன் கேட்டாள்.  பதிலாக் கனகா சிரித்துக் கொண்டே “இன்று நான் வந்தது உன்னிடம் என் மனக்கஷ்டத்தைச் சொல்ல இல்லை.  மாறாக உனக்கு என் நன்றியைச் சொல்லிவிட்டுப் போக வந்தேன். இன்றுதான் என் உண்மையான ஸ்ரீராமைக் கண்டு கொண்டேன்.  இன்று காலையில் அவன் சின்னவனைத் தூக்கிக் கொண்டு, ஸ்வாமி அறைக்குள் சென்று, பகவானிடம், தான் தன் தம்பியிடம் கோபமாக, வெறுப்பாக, அவனை விரோதியாக எண்ணீக் கொண்டு, அவனைத் துன்புறுத்தியதற்காக மனமார மன்னிப்புக் கேட்டுக் கண்ணீர் விட்டு அழுதான். அது மட்டுமல்லாது, பகவானிடமே இனிமேல் தன்னுடைய தம்பியின் பேரில் மிகவும் பாசத்துடனும், பரிவுடனுமிருப்பதாகவும், அவனுக்கு பாதுகாப்பாகவும் இருப்பதாகவும் சத்தியமும் செய்து விட்டான்.  எங்களுக்கெல்லாம் மிகவும் ஆச்சர்யமாக இருக்கு.  இத்தனை நாட்கள் நாங்கள் இருவரும் எத்தனை விதமாக, அன்பாக, பாசமாக, பக்குவமாக, சில சமயம் கோபத்துடனும் அவனுக்குச் சொல்லிய புத்திமதிகளை கொஞ்சம் மனதில் வாங்காதவன், இப்ப இப்படி மாறினான் என்றால் அதற்குக் காரணம் நீயாகத்தான் இருக்க வேண்டும்.  அதனால்தான், உன்னிடம் எங்களுடைய சந்தோஷத்தைச் சொல்லி, நன்றியையும் தெரிவித்துப் போக வந்தேன்.  ஆமாம், நீ என்ன சொல்லி, அவனுடைய மனதை இத்தனை சீக்கிரம் மாற்ரி விட்டாய்?” எனவும் கேட்டு, தன் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“பிரபா, நான் இது நாள் வரை, ஒரு தடவை கூட, ஸ்ரீராமிடம், அன்று அவன் ஏன் சின்னவனின் கையைக் காயப்படுத்தியது ஏன் எனக் கேட்கவே இல்லை.  நாங்கள் இப்போது எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவுக்காக  ஒரு நாடகம் போடுகிறோம்.  அது இராமாயணத்திலிருந்து சில காட்சிகளை போடுகிறோம் அதில் ஸ்ரீராம்தான் ஸ்ரீராமராக வேஷம் போடுகிறான்.  நாடகத்தில் நடிப்பவர்களுக்கு, அந்தக் கதா பாத்திரங்களின் எல்லா குணாதிசயங்களையும் புரியும்படிச் சொல்லித்தான், நாடகம் போடுகிறோம்.  ஏறக்குறைய நடிப்பவர்கள் எல்லாரையுமே கூடிய வரைஅந்த அந்தப் பாத்திரங்களாகவே மனதில் மாற்றிக் கொள்ளச் சொல்லி இருக்கிறேன்.  ஸ்ரீராமும், தான் நன்றாக நடிக்க, ஸ்ரீராமரின் குணங்களையே தன்னுள் உருவேற்றிக் கொண்டால்தான், நாடகம் நன்றாக இருக்கும் எனவும் புரிந்து கொண்டதால், அவன் மனதில் சதா அந்த பகவானுடைய குணங்களையே உருவாக்கிக் கொண்டு வருகிறான்.  சுபாவத்தில் மிகவும் நல்லவன், அன்பானவன்.  எதோ புரியாத ஒரு கோபமும், தம்பியை தனக்குப் போட்டியாக வந்திருக்கிறான் எங்கிற தப்பான எண்ணத்தால்தான், இத்தனை நாட்கள் அவனிடம் வெறுப்புக் கொண்டிருந்தான்.  இப்போ, நாடகத்தில் ராமராக வருவதால், அவனுக்குள்ளும் எதோ மனமாற்றம் வந்திருக்கும்.  எல்லாமே நல்லதுதான்.  இனிமேல், அவனும் தம்பியைப் புரிந்து கொண்டிருப்பான்,  பாசத்துடன் இருப்பான். உங்களுடைய துன்பமும் தீர்ந்து விடும்.  நிம்மதியாக, சந்தோஷமாக இரு” எனச் சொன்னாள் கனகா.
கனகா இத்தனை தூரம் விளக்கமாகச் சொல்லியும், முழுச் சமாதானமடையாத பிரபாவைப் பார்த்து “என்னயிது உனக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லையா?  நீ இராமாயணம் படித்தவள்தானே.  ஆனானப்பட்ட, அசுர ராஜன் இராவணனே, அசோக வனத்தில் இருக்கும் சீதாதேவியின் மனதில் இடம் பிடிக்க, அவளை அடைய, தான் ஒரு நாள் ஸ்ரீராமன் போல் வேஷமிட்டு, சிதாதேவியைப் பார்க்கப் போனான்.  ஸ்ரீராமரின் வேஷத்திலாவது, தான் சீதையைத் தீண்டவேண்டுமெனத் திட்டமிட்டு சென்றவன், அங்கு சென்றவுடன், சீதையைப் பார்த்து, அவளைத் தொடவும் தயங்கவில்லையா?  ஏன், அந்த முரட்டு அசுரனான இராவணாலேயே, ஸ்ரீராமாராக வேஷம் போட்டவுடன், அவனையுமறியாமல், ஸ்ரீராமரின் உன்னதமான குணமான பிறன் மனையாளை மனதாலும் தீண்டக்கூடாது எங்கிற பரிசுத்தமான எண்ணம் அவனையும் ஆட்கொள்ளவில்லையா?  சீதையை அடையனும்னு போட்ட வேஷந்தானென்றாலும், இராவணனின் மனமும் குணமும் அந்த நேரத்தில் மாறவில்லையா?  நம்முடைய ஸ்ரீராம், சுபாவத்திலும் ஸ்ரீராமந்தானே.  அவன், தன் மனதில் இருந்த துர் குணங்களை மாற்றிக் கொள்ளுவதில் என்ன ஆச்சர்யம்?   நாடகத்துக்காக போட்ட ஒரு வேஷமென்றாலும்கூட, போட்ட வேஷம் யாருடையது.  சாட்சாத் அந்த பரந்தாமன் ஸ்ரீராமரின் வேஷமல்லவா.  பகவான் என நினைத்து ஒரு கல்லைக் கொண்டாடினாலும், அந்தக் கல்லுக்குள் பகவானின் சக்தி இருக்கிறது அல்லவா? அப்படித்தான், நாடகத்திற்காக போட்ட வேஷமென்றாலும், குழந்தைகளின் மனதில் அந்தக் குணங்கள் கட்டாயம் பதிந்து விடாதா?  நம்முடைய குழந்தைகள் மிகவும் நல்லவர்கள்தான். அவர்களின் குணங்களை அறிந்து கொள்ள, நமக்கும் சில நேரங்கள் அமைந்து விடும்” எனச் சொல்லி விட்டு, தன்னுடைய சினேகிதியை சந்தோஷமாக அனுப்பி வைத்தாள்.

அவளின் மனதிலும், எப்படியோ, அந்த ஸ்ரீராமந்தான், இந்த ஸ்ரீராமனின் மனதிலும் மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறார் என மனதார நினைத்து கொண்டே, தன் விட்டில் இருக்கும் ஸ்ரீராமரின் படத்தின்கீழ் பணிவுடன் நமஸ்கரித்தாள்.