Sunday, 25 December 2016

பாசத்தின் விலை




பாசத்தின் விலை
(ஜெயரமணி)
       காலையில் கண் முழிக்கும்போதே, சுந்திரமூர்த்தியின் மனதில் இன்றாவது எப்படியாவது பணம் புரட்டிக் கொண்டு வந்து, செந்திலிடம் கொடுத்து விட வேண்டும். பாவம் குழந்தை, பத்து நாட்களாகத் தன்னிடம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.  நேற்று கூடச் சொன்னான், இன்றுதான் கடைசி வாய்ப்பு எனவும்.  இன்றுக்குள் அவனுடைய நண்பர்களிடம் பணம் கொடுக்காவிட்டால், அவர்கள் இவனைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சென்னையில் நடக்கப் போகும் அகில இந்திய கிரிக்கேட் பந்தயங்களை சென்னையில் நடக்கும் தினத்தன்று நேரில் பார்க்க வழியில்லை என.  எல்லாரும் பணம் கொடுத்து விட்டார்களாம்.  இவன் மட்டும்தான் பாக்கியாம்.  இனியும் நம் பையனிடம் பணம் கிடைக்கவில்லை எனக் காரணம் சொல்லக்கூடாது. எப்படியாவது, தலையை அடகு வைத்தாவது பணம் கொண்டு வந்து தீர வேண்டும் எங்கிற முடிவுடன் அன்றையப் பொழுதை தொடங்கினான்.
              அவனுடைய மனைவி செந்தில் இரு வயதாகும்போதே மரணம் அடைந்து விட்டாள். அவள் போகும்போது மூத்தவள் பானுவுக்கு ஐந்து வயது.  சின்னவன் இருவயதுதான்.  போகும்போது மனைவி அவனிடம் தன்னுடைய மகனை எப்பவும் கண் கலங்காது காத்துக் கொள்ளவேண்டுமென சத்தியமும் பெற்றுக் கொண்டாள்.  அதனால், அவன் ஊரார் வற்புறுத்தியும்கூட மறுமணம் செய்து கொள்ளவில்லை.  எங்கே, தனக்கு வாய்க்கும் இரண்டாம் மனைவி, தன் குழந்தைகளை மாற்றாந்தாய் என பாசமில்லாமல், கொடுமைப்படுத்தி விடுவாளோ எனப் பயந்தான்.  அன்று முதல் செந்தில் எது கேட்டாலும், தன் சக்தி என்ன எனக் கூட யோசிக்காமல், எப்படியாவது அதைக் கொண்டு வந்து மகனிடம் கொடுத்து, அவன் சந்தோஷப்படுவதைப் பார்த்து மகிழ்வான்.  செந்திலின் குணமோ மாறியது.  அவனுக்குத் தான் எதைக் கேட்டாலும், தகப்பனார் எப்படியாவது வாங்கித் தந்து விடுவாரென நிச்சயம் செய்து விட்டான்.  ஆனால், அதற்காக அவர் எத்தனைக் கஷ்டம் படுகிறார் என்பதைப் பற்றி கவலையோ, வருத்தமோ அடைவதில்லை.
                                காலையில் அப்பா ஆபிசுக்குக் கிளம்பும்போதே, படுக்கையிலிருந்தே செந்தில் சொன்னான் “அப்பா,மறந்து விடாதே.  இன்றுதான் கடைசி நாள்.  இன்று பணம் கொடுக்கத் தவறினால், மற்றவர்கள் எல்லாரும் என்னை விட்டு விட்டுப் போய்விடுவார்கள்.  அதற்குப் பிறகு நான் இந்த வீட்டிற்கே வரமாட்டேன்.  இது நிச்சயம்.  எப்படியாவது கட்டாயம் பணத்துடன் வா.நானும் மூன்று மணிக்குள் வந்து உனக்காக காத்திருப்பேன்” எனவும் தீர்மானமாகச் சொல்லி விட்டு பின்பக்கம் சென்றான்.  செந்திலில் வார்த்தைகளைக் கேட்டவரின் மனமும் வருந்தியது. அப்போது சமையல் அறையில் இருந்த பெரிய பெண் பானு வெளியே வந்து :அப்பா, நீங்கள் திரும்பத் திரும்ப தவறு செய்கிறீர்கள்.  செந்திலுக்கு இப்ப கிரிக்கெட்டா முக்கியம்.  பனிரெண்டாவது வந்து விட்டான்.  இன்னும் மூன்று மாதங்கள் தான் இருக்கு  கடைசிப் பரிட்சைக்கு.  அவனிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டிய நேரம் இது.  நீங்கள் அவன் ஆசைப்பட்டதெல்லாம் எப்படியாவது நிறைவேற்றி விடனும்னு எத்தனைக் கஷ்டப்படுகிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.  ஆனால் அவனுக்குப் புரியவில்லையே? இன்று பணம் கொடுக்காவிட்டால், என்ன ஒரு நான்கு நாட்களுக்கு கோபமாக இருப்பான்.  பிறகு சரியாகிவிடும். அவன் இன்னும் அறியாத பையன் இல்லை.  பதினேழு வயதாகிவிட்டது. நான் அவனைக் கண்டித்தாலும், நீங்கள் என்னைத்தான் தடுத்து விடுகிறீர்கள். அதனால், அவனுக்கு என்னிடம் கொஞ்சமும் மரியாதை இல்லை.  நீங்கள் பொறுப்பான தகப்பனார்தானே.  புரிந்து கொள்ளுங்கள்” எனக் கொஞ்சம் கடுமையாகவே அவரிடம் எடுத்துச் சொன்னாள். பதிலுக்கு அவரும் “பானு, நீ சொன்னது எல்லாம் சரிதான்.  என்ன செய்வது, சின்னக் குழந்தையை என்னிடம் விட்டு விட்டு அம்மா போய்விட்டாள்.  தாயில்லாத குறை தெரியக்கூடாதென, அப்போதிலிருந்தே அவனுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டேன். இந்த ஒரு முறை விட்டுக் கொடு.  இனிமேல், அவன் படிப்புத்தான் முக்கியம் எனக் கட்டாயம் நான் சொல்லி விடுவேன். அவனும் புரிந்து கொள்வான்” என பானுவுக்குச் சொன்னாரோ, அல்லது தனக்குத்தான் சொல்லிக் கொண்டாரோ தெரியவில்லை.  மௌனமாக ஒரு பெரிய மூச்சு விட்டுக் கொண்டு, தன்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து சென்று விட்டார்.
              அன்று அவருக்கு பிற்பகல் டூட்டிதான்.  ஆனால், காலையிலேயே சீக்கிரம் வந்து, எப்படியாவது முதலாளியைப் பார்த்து கெஞ்சி கேட்டு, முன்னூறு ரூபாய் வாங்கிப் போக வேண்டும் எங்கிற எண்ணத்தில்தான், ஆபிசுக்கு வந்தார்.  வந்தவரைப் பார்த்த முதலாளியும், “என்னப்பா சுந்திரமூர்த்தி, உனக்கு இந்த வாரம் மாலை ஷிப்ட்த்தானே? இப்பவே வந்திருக்கிறாய்?” எனவும் கேட்டார். அவரிடம் “ஐயா, எனக்கு பிற்பகல் டூட்டிதான்.  இப்ப வந்தது, எனக்கு கொஞ்சம் முன்பணம் வேண்டும், அதற்காகத்தான் ஐய்யாவிடம் வந்தேன்” எனப் பணிவாகச் சொன்னான்.  “முன் பணமா?  என்னப்பா, மறந்து விட்டாயா? இந்த மாதம் நீ ஏற்கெனவே அதிகமாகவே வாங்கி யிருக்கிறாயே?  என்னிடம் உன்னைப் போல் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்.  நான் அதனால், எல்லாருக்குமே ஒரு திட்டம் செய்துதான் முன்பணம் தருவேன். உனக்குத்தான் தெரியுமே” எனவும் சொன்னார்,
              “தெரியும் ஐய்யா.  என் மகன் செந்திலுக்கு, அவசரமாக பணம் தேவைப் படுகிறது. ஒரு முன்னூறு ரூபாய் கொடுத்து உதவுங்கள்.  இந்த மாதத்திலே பிடித்துக் கொள்ளுங்கள். மிகவும் அவசரமாம்.  இன்றுக்குள் கொடுக்காவிட்டால், அவன் மனம் உடைந்து போய் விடுவான். என்னால் என் பிள்ளையின் மனம் வருந்துவதைத் தாங்க முடியுமா? உங்களுக்குத்தான் தெரியுமே என் வீட்டு விஷயங்கள் எல்லாம்” என மிகவும் பணிவோடும், வெட்கத்தோடும் சொன்னான்.  :இப்ப என்னப்பா அத்தனை முக்கியமான செலவு உன் பையனுக்கு?” எனவும் கேட்டவரிடம், அங்கிருந்த ஆபிஸ் குமாஸ்தா “சுந்திரமூர்த்திக்குச் சொன்னால் புரியாது சார். அவனுடைய பிள்ளைக்கு, வரும் வாரத்தில் நடக்கயிருக்கும் கிரிக்கெட் மாட்ச்சுக்குப் போக வேண்டுமாம்.  அவனுடைய நண்பர்கள் எல்லாரும் டிக்கெட் வாங்கப் போகிறார்களாம்.  அவர்களுடன் இவனும் சேர்ந்து கிரிக்கெட் மாட்ச் பார்க்கத்தான், இப்ப அப்பாவிடம் பணம் கேட்டுபத்து நாட்களாகத் தொந்திரவு செய்கிறான்.  இந்த மனுஷன் பிள்ளையைக் கண்டிக்கத் தெரியாமல், அவன் கேட்குக்போதெல்லாம் எப்படியாவது கடன் உடன் வாங்கித் தந்து விடுகிறார்.  இப்பவும் இதற்குத்தான் உங்களிடம் வந்திருக்கிறார்”எனச் சொல்லிச் சிரித்தார்.
              அதைக் கேட்ட முதலாளிக்கும் கோபம் வந்தது.  “என்னப்பா, இது, இத்தனை நாட்களும் நாங்கள் எத்தனை வகையில் உனக்குச் சொல்லி இருக்கிறோம்.  போன முறை என்னிடம் பணம் வாங்கும்போது, என்ன சொன்னாய் இனிமேல் நான் என் பையனைக் கண்டித்து வைக்கிறேன்.  அவனுக்காக இப்படி பணம் கேட்க மாட்டேன்: எனறு தானே.  இப்போ, திரும்பவும் பழையபடியே உன் பிள்ளையின் அடாவடித் தனத்திற்காக, பணம் கேட்டு வந்திருக்கிறாயே  உனக்கு ஒரு பெண்ணும் இருக்கு மறந்து விட்டாயா.  அதுக்கு ஒரு கலியாணம் காட்சி செய்ய வேண்டாமா? உன் வருமானத்தை எல்லாம் பையனுக்கே கொடுத்து விடுகிறாய்.  பெண் பாவம் சாது.  நல்ல பெண் அப்பாவின் நிலைமையை புரிந்து கொண்டு,நல்ல மார்க் எடுத்த பின்னும், காலேஜ் போகாமல், டீச்சர்ஸ் டிரையின்ங்க் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறாள்.  இந்த வருஷம் அவள் படிப்பும் முடிந்து விடுமல்லவா?” எனவும் கேட்டார். அவர் சொன்னதுக்கெல்லாம் மௌனமாகவே தலையை ஆட்டிக் கொண்டிருந்தவன், திரும்பவும் அவரிடம் “ஐய்யா, இந்த முறைதான் நான் கடைசியாக உங்களிடம் பணம் கேட்டு வருவது .என் பையன் மிகவும் ஆசைப்படுகிறான்.  எப்படியாவது, நம்மூரில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச்சுக்கு தன் நண்பர்களுடன் சென்று பார்க்க வேண்டுமென.  என்னிடம் சொல்லி இருக்கிறான்.  இந்த ஒரு முறை மட்டும் அவனுக்குப் பணம் கொடுத்து விட்டால் போறுமாம். இனிமேல் பள்ளிப் பரிட்சை முடியுமட்டும், படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டேன் என , என்னிடம் சத்தியமும் செய்து இருக்கிறான்.  தயவு செய்யுங்கள்” என கண்களில் நீர் தளும்ப கெஞ்சினார். 
              சுபாவமாகவே முதலாளி, தன்  ஊழியர்களிடம் மிகவும்  பரிவாக இருப்பவர்தான்.  ஆனால், சுந்திரமூர்த்தியிடம், எத்தனையோ வருடங்களாகப் பழகியவருக்கு, அவனுக்குப் பிள்ளையிடம் இருக்கும் பாசத்தையும், அதற்காக அவர் எத்தனைக் கஷ்டப்பட்டாலும், எப்படியாவது பிள்ளையின் ஆசையை நிறைவெற்றுவதில்தான் குறியாக இருப்பார்.  மற்றவர்கள் சொல்லும் எந்த அறிவுரைகளும் அவரின் காதில் படாது.  பிள்ளைப் பாசத்தால், அவர் செய்யும் செயலில் இருக்கும் தீமைகளை அவர் உணர மறுக்கிறார்.  அதனால், முதலாளிக்கும் கோபம் அதிகமாகியது.  கடைசியாக “இந்தப்பா, சுந்திரமூர்த்தி, நீ என்னிடம் எத்தனைக் கெஞ்சினாலும், நான் இந்த முறை உனக்குப் பணம் எதுவும் கொடுக்க மாட்டேன்.  பிள்ளைச் செல்லம் இருக்க வேண்டியதுதான்.  அதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா?  இந்த வருஷம் 12ஆவது.  அந்தப் பரிட்சை எவ்வளவு முக்கியமானது?  அதில் கவனமாக இருக்க வேண்டுமென உன் பிள்ளைக்குப் புரியவில்லையா? என்ன, இந்த வருஷம் இல்லாவிட்டால், வருஷாவருஷம்தான் இந்தக் கிரிக்கெட் மாட்ச் வந்து கொண்டே இருக்கு.  அடுத்த வருஷம் அவன் போகட்டும், நீ இந்த வருஷம் கட்டாயம் பணம் கொடுக்க முடியாது எனச் சொல்லி, அவனைப் படிப்பில் கவனமாக இருக்கச் சொல்” எனச் சொல்லி விட்டு, உள்ளே போய் விட்டார்
       முதலாளியின் முடிவில் இருக்கும் உண்மையை புரிந்து கொண்டாலும், அவரின் கண் முன் காலையில் தான் வரும்போது பிள்ளை சொன்னது காதில் ஒலித்தது.  . இன்று மட்டும் தான் மூன்று மணிக்குள் எப்படியாவது பணத்துடன் செல்லாவிட்டால், நாளையிலிருந்து இந்த விட்டிலேயே இருக்க மாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்லி இருக்கிறானே.  அவன் பிடிவாதக்காரன்.  விரும்பியது கிடைக்காவிட்டால், அவன் தன்னை எப்படியெல்லாம் வருத்திக் கொள்வான் என்பதும் அவனுக்குத் தெரிந்த்தே.  பிள்ளைக்கு எதாவது ஆகிவிட்டால், தான் தன் மனைவிக்குச் செய்த சத்தியம் என்னவாகும்.  வேண்டாம். யார் என்ன சொன்னாலும் சரி, எப்படியாவது இன்று கடைசியாக, தான் பிள்ளைக்கு வேண்டிய பணத்திற்கு ஏற்பாடு செய்து, பணத்துடந்தான் போக வேண்டும் எனவும் முடிவும் செய்தான்.
                                முதலாளியே கொடுக்க மறுத்த பின், ஆபிசில் யாரிடமும் கேட்டாலும் கிடைக்காது.  ஏற்கெனவே, எல்லாரும் இவனிடம் பல  முறைகள் சொல்லி இருக்கிறார்கள்.  பிள்ளைப் பாசத்தால், அவனுக்கு வரையிலாமல் செல்லம் கொடுப்பது, அவன் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுப்பது மிகவும் தப்பான செயல் என.  அப்படி பணம் கொடுத்துக் கொடுத்துத்தான் அவனிடம் ஒரு ஒழுக்கம், பணிவு, தான் ஆசைப்படுவது  நியாயமா எனவெல்லாம் யோசிப்பதில்லை.  எப்படி, அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டாலும், தனக்குப் பணம் கொடுத்து விடுவது அவருடைய கடமை என எண்ணிக் கொண்டிருக்கிறான்.  பணம் கொடுப்பதில் தவறினால், கோபத்தால் அவன் செய்யும் செயல்கள் எல்லாம் அவனைத் திக்குமுக்காட வைத்து விடும்.  பல நாட்கள் வீட்டிற்கு வரமாட்டான்.  நண்பர்கள் வீட்டில் இருந்து விடுவான்.  தினமும் சுந்திரமூர்த்தி, அவனுடைய நண்பர்களின் வீட்டிற்குச் சென்று, பலவாறு கெஞ்சி, அவன் முடிவு மாறாமல் இருப்பதைப் பார்த்து, கடைசியில், தாந்தான் இறங்கி வந்து, அவனிடம், இனி அவன் கேட்பதெல்லாம் கட்டாயம் செய்து கொடுத்து விடுவதாகச் சத்தியமும் செய்து, அழைத்து வருவார். ஒவ்வொரு முறையும் அவர் அவனிடம் கெஞ்சுவதும், அதைக் காரணமாக வைத்துக் கொண்டு, செந்தில் அவரிடம் மிகவும் முரட்டுத்தனமாக, அதிகாரமாக நடந்து கொள்ளுவதும் எல்லாருக்குமே தெரியும்.  என்ன செய்வது, பிள்ளைப் பாசம் அவனுடைய கண்களைக் குருடாக்கி விட்டது எனதான் எல்லாரும் சொல்லுவார்கள். முடிவில் பிள்ளையே அவருக்குக் கொள்ளிக்கட்டைதான் எனவும் எல்லாரும் முடிவும் செய்தார்கள்.
              சுந்திரமூர்த்திக்கு இருப்பது ஒரே ஒரு வழிதான்.  அதிலும் சிக்கல் உண்டு. அவன் செல்லும் ஆசுபத்திரியின் தலைமை மருத்துவர், சென்ற முறையே அவனிடம் கட்டாயமாகச் சொல்லி இருந்தார்.  அவர் திரும்பத் திரும்ப பணம் தேவைப்படும்போதெல்லாம் அந்த மருத்துவமனையில் இருக்கும் இரத்த வங்கியில் இரத்தம் தானம் செய்து, அதற்குப் பணமும் வாங்கி வருவது.  மருத்துவ ரீதியாக தப்பானதாகும் என.  ஒவ்வொருமுறை இரத்த தானம் செய்வதற்கு, கட்டாயம் மூன்று மாத இடைவெளி இருக்க வேண்டுமெங்கிற, நியதியை மறந்து, அவனுக்குத் பணம் தேவைப்பட்டால், வேறு எந்த வழியிலும் கிடைக்கவில்லை என்றால், கடைசியாக தன்னுடைய இரத்தத்தையே விற்று, பிள்ளையின் ஆசையை நிறைவெற்றுவதையே தன் லட்சியமாக இருந்தார் சுந்திரமூர்த்தி.    அவனைப் பற்றி எல்லாம் தெரிந்த அந்த தலைமை மருத்துவர் கண்ணில் பட்டால், இன்றும் தன்னால் இரத்தம் தானம் செய்ய முடியாது எனவும் தெரியும்.  அதனால், மிகவும் ஜாக்கிரதையாக நேர்பாதையில் செல்லாமல், ஆசுபத்தியை ஒட்டிய தோட்ட வழியில் சென்றான் 
              செந்தில் பள்ளியில் நிலை கொள்ளாமல் தவித்தான்.  மணியோ ஆகிக் கொண்டிருந்தது.  பொறுமை இல்லாமல், தன்னுடைய வகுப்பைத் தவிர்த்து விட்டு, சீக்கிரமாகவே வீட்டிற்கு கிளம்பினான்.  வழியில், சுந்திரமூர்த்தியின் அத்தையைப் பார்த்து விட்டான்.  அவளோ “என்ன செந்தில், பள்ளியிலிருந்து சீக்கிரம் திரும்பி விட்டாய்?  உன் அப்பாவிற்கு இப்போ உடம்பு எப்படியிருக்கு.  இன்றும் அவர் ஆசுபத்திரிக்கு சென்றதை தான் பார்த்தேன்.  அவன் உடம்பு மிகவும் தளர்ந்து சோர்வாக இருக்கான்.  நீங்கள் யாரும் அவனைக் கவனிப்பதில்லையா?  இன்றுகூட  நான் பார்த்தவுடன், என்னிடம் வந்து “அத்தை,தயவு செய்து,என்னை இங்கு பார்த்ததாக என் குழந்தைகளிடம் சொல்லி விடாதீர்கள்.  அவர்களுக்குத் தெரியாது நான் அடிக்கடி இங்கு வருவது.  தெரிந்தால் மனம் வேதனைப் படுவார்கள்.: எனக் கெஞ்சிக் கொண்டு, போய் விட்டான்.  இப்ப உன்னைப் பார்த்தவுடன் என் மனம் தாங்கவில்லை.  என்றைக்கிருந்தாலும், உங்களுக்குத் தெரிய வேண்டியதுதானே.  அதனால்தான், உன்னிடம் சொல்லி விட்டேன்.  நீயும் வளர்ந்து விட்டாய்.  இனிமேல் உன் அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொள்வது உன்னுடைய கடமை.  நீ போய் அவனுடைய உடம்புக்கு என்ன? ஏன் அடிக்கடி, ஆசுபத்திரிக்குப் போய் வருகிறான் எனக் கேளுங்கள்.” எனச் சொல்லி விட்டு சென்று விட்டாள்.
              ஒரு நிமிஷம் செந்திலுக்கு தான் கேட்டது உண்மைதானா?  தன் தகப்பனாருக்கு என்ன நோய்?  அவர் எதற்காக அடிக்கடி ஆசுபத்திரிக்குப் போய் வருகிறார்?  பெற்ற குழந்தைகள் எங்களிடம் கூட அவர் தன் உடல் நிலையைப் பற்றிச் சொல்லவில்லையே.  நமக்குத் தெரிந்து, அவர் விடுமுறைகூட எடுப்பதில்லையே? தனக்கும், பானுவுக்கும் அவரைவிட்டால் இந்த உலகில் யார் இருக்கிறார்கள்.  அப்பா, இரகசியமாக ஆசுபத்திரிக்குப் போவதும், அதைப் பற்றித் தங்களிடம் சொல்லாமல் மறைத்து இருப்பதையும் நினைத்து மனதிற்குள் காரணம் புரியாமல் வேதனைப் பட்டான்.  தன் உயிருக்கு உயிரான அப்பாவின் உடல்நிலை சரியில்லை எனத் தெரிந்தவுடன், அவனுக்குத் தன்னுடைய ஆசை, தான் பணம் கேட்டு அப்பாவிடம் கட்டாயமாகப் பேசியது எல்லாமே மறந்து விட்டது.  உடனடியாக, அத்தைபாட்டி சொன்னது போல், அந்த ஆசுபத்திரிக்குச் சென்று, அப்பாவுக்கு என்ன நோய் அவர் எதற்காக அடிக்கடி அங்கு போகிறார் எனத் தெரிந்து கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தான். அவனுக்குள் இது நாள் வரை இருந்த குழந்தைத்தனம் மறைந்தது.  விரைவாக அப்பா சென்றிருக்கும் ஆசுபத்திரிக்குச் சென்றான்.
              எத்தனைதூரம் சாமர்த்தியமாகத் தலைமை மருத்துவர் கண்களில் படாமல் போக வேண்டுமென நினைத்த சுந்திரமூர்த்தியின் திட்டம் சரிந்து விட்டது. சுந்திரமூர்த்தியைப் பார்த்தவரின் கண்களில் கோபம் துளிர்த்தது. தன்னைப் பார்க்காமல் விரைவாகப் போனவரைத், தன் அறைக்குள் அழைத்து வர, இங்கிருந்த ஒரு நர்ஸிடம் சொல்லிவிட்டு, தன்னறைக்கு திரும்பினார்.  அப்போது வழியில் செத்தில் அவரைப் பார்த்து, அவர் யார் எனத் தெரியாமல் அவரிடமே “டாக்டர் சார், நீங்கள்தான் இங்கு தலைமை மருத்துவரா?” எனவும் கேட்டான்,  அதற்கு “ஆமாம், ஏன் கேட்கிறாய்.  உனக்கு என்ன பிரச்சினை என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? எனவும் பதிலுக்குக் கேட்டார்.
              “எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால், என் தகப்பனார் இங்கு அடிக்கடி வந்து வைத்தியம் பார்த்துக் கொள்ளுவதாக எனக்குத் தெரிந்தது.  அவர் இன்று வரை என்னிடமோ, என் சகோதரியிடமோ அதைப் பற்றி எதுவும் சொல்லவிலை.  எங்களுக்கு அம்மா சின்ன வயதிலேயே இறந்து விட்டார்.  அன்றிலிருந்து இன்று வரை எங்களின் அப்பாதான் எங்களுக்கு அம்மாவாகவும் இருக்கிறார்.  அதனால்தான், எனக்கு அப்பா அடிக்கடி இங்கு வருகிறார் எங்கிற விஷயம் தெரிந்தவுடன், அதுபற்றி இங்கேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்.  தயவு செய்து சொல்லுங்கள்” எனக் கண்களில் கண்ணீர் வழியக் கேட்டான்.  அவனுடைய முகத்தைப் பார்த்தே, அவன் மிகவும் பயந்து இருக்கிறான் எனத் தெரிந்து கொண்டவர், “சொல்லுப்பா, யார் உன்னுடைய அப்பா?அவரின் பெயர் என்ன? அவர் எங்கு வேலை செய்கிறார்?” எனவும் பரிவாகக் கேட்டுக் கொண்டே, அவனையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். போகும் போதே அவனுடைய அப்பாதான் சுந்திரமூர்த்தி எனவும் தெரிந்து கொண்டார்  அதனால், அவர் அவனிடம் “உன் அப்பாவின் வியாதிக்கு மூலக் காரணம் என்ன என உனக்குத் தெரியுமா? அதைப் பற்றி நீ தெரிந்து கொண்டால் போறும், உன் அப்பாவின் உடல் நிலை உடனடியாகச் சீராகி விடும், அவரும் இனிமேல் இங்கு அடிக்கடி ஏன், இனிமேல் ஒரு முறைகூட இங்கு வரவேண்டியதிருக்காது. அதனால், நீ நான் சொல்வது போல் செய்.  என்னுடைய அறைக்குள் இருக்கும் ஒரு மறைவில் இரு.  இப்ப, உன் அப்பாவை நான் என்னுடைய அறையில் சோதிக்கப் போகிறேன்.  நானும் அவரும் பேசுவதை,நீ மறைவில் இருந்தே பார்த்து, கேட்டுக் கொள். பிறகு, அவருடைய நோய் தீர என்ன செய்யலாமென நாம் யோசிக்கலாம்” எனச் சொல்லி, அவனைத் தன்னுடைய அறையில் இருக்கும்  தனிப்பகுதிக்குள் இருக்கச் செய்தார்.
              குற்றம் செய்த மாணவன், தலைமை ஆசிரியரிடம் சிக்கிக் கொண்டால், எப்படித் தடுமாறுவானோ, அதைவிட நூறு பங்கு அதிகமாகத் தடுமாறினார் சுந்திரமூர்த்தி.  அவரால், அங்கிருக்கும் தலைமை மருத்துவரை நிமிர்ந்து பார்க்கவும் முடியவில்லை.  தலையைக் குனிந்து கொண்டு மௌனமாக இருந்தார்.  “என்னப்பா, சுந்திரமூர்த்தி, இன்றும் நீ அதற்காகத்தான் வந்திருக்கிறாயா?” எனவும் கேலியாகவும், வேதனையுடனும் கேட்டார் மருத்துவர்.
              “ஐய்யா, தயவு செய்து இந்த ஒரு முறை அதுவும் கடைசியாகத்தான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.  என்னைத் தடை செய்யாதீர்கள்.  இன்று எப்படியாகிலும் தான் பணம் கொண்டு செல்லாவிட்டால், வீட்டில் என் பிள்ளை மிகவும் ஏமாற்றம் அடைவான்.  அவன் துன்ப்ப்படுவது என்னால் தாங்க முடியாது.  இந்த ஒரு முறை மட்டும் என்னை அனுமதித்து விடுங்கள்” எனவும் கெஞ்சினார்.  உள்ளே இருந்த செந்திலுக்கு ஒன்றும் புரியவில்லை.  தான் பணம் கேட்டதற்கும், தந்தை ஆசுபத்திரியில் மருத்துவரிடம் கெஞ்சுவதற்கும் என்ன தொடர்பு எனவும் புரியவில்லை.  மௌனமாகவே மறைவில் இருந்து கொண்டே, இருவருக்கும் நடைபெறும் வாதத்தைக் கேட்டான்.   “சுந்திரமூர்த்தி, நீ உன் ஒரு குழந்தையை மட்டுமே பார்க்கிறாய்.  உனக்கு மற்றொரு பெண் இருப்பதை மறந்து விட்டாயா?  உன் பிள்ளையின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக, நீ செய்வது எத்தனை தப்பானது என உனக்குப் புரியவில்லை.  நீயே, அதிக பலமில்லாதவன்.  உன் வருமானத்தில், உன்னால் எந்த விதமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையோ, மருந்துகளையோ வாங்கிச் சாப்பிட முடியும்..  எல்லாருக்கும்தான் பிள்ளைகளின் மேல் பாசமும், பரிவும் இருக்கும்.  அதற்காக, யாரும் தன் உயிரை விட மாட்டார்கள். ஆனால், நியோ, ஒரே அசட்டுப் பிடிவாதத்தால்,  உன் உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல், அடிக்கடி இரத்த தானம் செய்கிறாய்.  மருத்துவ நியதிப்படி, இரத்த தானம் செய்ய, கட்டாயம் மூன்று மாதகாலம் இடைவெளி இருக்க வேண்டும், ஆனால், நீ என்ன செய்கிறாய்.  எனக்குத் நன்றாகத் தெரியும்.  சென்ற முறை நீ வந்தபோது நான் தடுத்தேன்.  ஆனால், நீ என்ன செய்தாய், உடனேயே தாம்பரத்தில் இருந்த ஆசுபத்திரிக்குச் சென்று, உன் இரத்தத்தை விற்று, பணம் வாங்கிக் கொண்டாய்.  இங்கு எப்பவும் இருக்கும் பெண் நர்ஸ் இப்ப இல்லையே? காரணம் என்ன என உனக்குத் தெரிய்மா?” எனவும் கேட்டார். 
              :இல்லை. எனக்குத் தெரியாது.  நான் இன்று அவர்களைப் பார்க்கவில்லை.  ஏன் அவருக்கு ஏதும் கஷ்டமா?”எனக் கேட்டவனிடம்,
நான் அவளை தற்காலிகமாக ஒரு மாதங்களுக்கு வேலையிலிருந்து நீக்கி இருக்கிறேன்.  இது அவர்களுக்கு ஒரு தண்டனை.  ஏன் தெரியுமா?  மருத்துவ சட்ட திட்டங்களுக்கு மாறாக, உன்னிடமிருந்து சென்ற மாதம் இரத்தம் எடுத்தற்காக, நான் கொடுத்த தண்டனை?  உன்னுடைய கெஞ்சல்களுக்கு இரங்கி, அவர்கள் தன் கடமையில் தவறியதால் கிடைத்த பலன்.  நான் எவ்வளவு தடவைகள் உனக்கு, நீ அடிக்கடி இரத்த தானம் செய்வதில் உள்ள கெடுதல்களைப் பற்றிச் சொல்லியும், நீ திருந்துவதாக இல்லை.  எனக்கு இனிமேல் ஒவே வழிதான் இருக்கு. அதைத்தான் நான் இப்பச் செய்யப் போகிறேன்.  உன் அதிகாரிகளுக்கு, நீ உடல் ரீதியாக, தொடர்ந்து பணியாற்றுவது சரியில்லை என ஒரு சர்ட்டிபிகேட் அனுப்பி விடுகிறேன்.  பிறகு உன் இஷடம்?” எனச் சொன்னவுடன், சுந்திரமூர்த்தி அவரின் கால்களைப் பற்றிக் கொண்டு, என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள். பொறுத்துக் கொள்கிறேன். ஆனால், என் வேலைக்கு மட்டும் எந்த ஆபத்தையும் உண்டாக்கி விடாதீர்கள்.  எனக்கும் புரிகிறது நான் இப்படி அடிக்கடி இரத்தம் கொடுத்து பணம் வாங்கி, என் பிள்ளையின் ஆசைகளை நிறைவேற்றுவது எத்தனைத் தப்பானது என.  ஆனால், அவனைக் குழந்தையிலிருந்தே என் நெஞ்சிலும், மார்பிலும் போட்டு வளர்த்து, என் மனைவிக்கு கொடுத்த சத்தியத்தின் படி, எக்காரணத்தைக் கொண்டும் அவன் அழக்கூடாது, ஏங்க கூடாது என நான் இத்தனைக் கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.  நான், உங்களிடம் கடைசியாக சொல்லுகிறேன்.  இன்று மட்டும் நீங்கள்  எனக்கு இல்லை எனச் சொல்லாது, பணம் கிடைக்க வழி சொல்லுங்கள்.  என்னால் கடன் வாங்கினால், திரும்பிக் கொடுக்க வழியில்லை.  என் சம்பளத்தில் நான் 80 சதவீதம் வாங்கிய கடன்களுக்கே  போகிறது.  அதனால்தான், வேறு வழியில்லாமல், என் பிள்ளை என்னிடம் பணம் கேட்குக்போதெல்லாம், வேறு எந்த விதமாகவும், எனக்குப் பணம் கிடைக்கவில்லை என்றால், கடைசி வழியாகத்தான் என்னுடைய இரத்தத்தை விற்று, அவனுடைய ஆசையை நிறைவேற்றுகிறேன்.” எனச் கதறினான்.
              அப்போது, மறைவில் இருந்த செந்திலுக்குத் தான் அடிக்கடி பணம் கேட்கும் போதெல்லாம், எப்படி அப்பா கொடுத்து வந்தார் எனத் தெரிந்தவுடன்,   தாள முடியாத துக்கத்தாலும், தன் பிடிவாத குணத்தால், அப்பாவைத் எப்படிக் கஷ்டப் பட வைத்தோம் எனவும் புரிந்து கொண்டான்.  அதனால், தந்தை தனக்காக் , தன் இரத்தத்தையே விற்றுப் பணம் பெற்றதற்குக், என்ன பரிகாரம் செய்யப் போகிறேன் எனவும் மனதைக் கேட்டுக் கொண்டான். அதனால், அவன் “வேண்டாம் அப்பா, இனிமேல் நீங்கள் எனக்காக, உங்களின் இரத்தத்தை விற்க வேண்டாம்.  எனக்கு கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டாம்.  என் அப்பா மட்டுமே போதும். இனிமேல், எக்காரணத்தைக் கொண்டு, உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டேன்.  என்னை மன்னித்துன் விடுங்கள்” எனக் கதறிக் கொண்டே, தந்தையின்  கால்களில் வீழ்ந்தான். திடீரென அங்கேச் செந்திலைக் கண்டவுடன், சுந்திரமூர்த்தியும் திகைத்து நின்றார்.  இருவரையும் பார்த்த மருத்துவர் “சுந்திரமூர்த்தி, உன்னால் உன் மகனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆனால், இன்று அவன் என்னிடம் வந்து, உன் பெயரைச் சொல்லி, உனக்கு என்ன வியாதி, ஏன் அடிக்கடி இங்கு வருகிறாய்” எனக் கேட்டான்.  அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன், நீ இங்கு வருவதையோ, உனக்குப் பணம் தேவைப்படும்பெதெல்லாம் ;உன் இரத்தத்தைத் தானம் செய்து, அதற்கு அரசு கொடுக்கும் மானியத்தைப் பெற்றுக் கொள்வதையோ, உன் குழந்தைகளுக்குத் தெரியாது என.  அதனால்தான், நான் உன் மகனிடம் உன் அப்பாவின் நோய்க்கு மூல காரணம் என்ன எனக் கண்டு பிடித்து அதை நாம் நீக்கி விட்டால், அவரின் வியாதியும் தீர்ந்து விடும், உன்னுடைய சந்தேகமும் தீர்ந்து விடும் எனச் சொல்லித்தான், அவனை இந்த அறையிலேயே மறைவில் இருக்கச் செய்தேன்.  நாமிருவரும் பேசியதைக் கேட்டவுடனே, அவன் புரிந்து  கொண்டான். தன்னுடைய புத்திகெட்டத் தனத்தால், நீ எப்படிக் கஷ்டப்பட்டாய், உன் தியாகத்தின் எல்லை என்ன. அவன் மீது நீ கொண்ட பாசத்தில் விலையும் என்ன என்பதை. அதனால்தான், அவன் இன்று உன்னிடம் தனக்கு கிரிக்கேட் மாட்ச் முக்கியமில்லை, நீதான் முக்கியம் எனவும் சொன்னான்.  உன் மகன் மீது தப்பில்லை. உன் மீதுதான் குற்றம்.  பிள்ளைப் பாசம் சரிதான்,  ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா?  அவன் வயதில் பார்ப்பதையெல்லாம் ஆசைப்படத்தான் செய்வான்.  ஆனால், உன் கடமை என்ன?  அது சரியா, தவறா என உன் பிள்ளைக்குச் யார் எடுத்துச் சொல்லுவார்கள்.  பிள்ளைகள் தப்புச் செய்தால் மட்டும்தான், பெரியவர்கள் புத்தி சொல்ல வேண்டுமா?  இல்லையே, அவர்களின் எதிர்காலத்தில் என்ன செய்தால் அவர்களுக்கு நல்லது என்பதையும் பெற்றவர்கள்தானே எடுத்துச் சொல்லனும்.  சென்றது போகட்டும், இனி மேலாவது, நீ உன் மகனிடம் சிறிது கண்டிப்பாகவும், பாசத்துடனும், அவன் ஆசைப் படுவது அவசியம்தானா, தேவையா என ஆராய்ந்து அவனுக்குப் புத்தி சொல்.  நியாயமானதைச் செய்.  ஆற்றில் நீர் வற்றாமல்தான் இருக்க வேண்டும்.  அதே சமயம், அந்த நீர் கரையில்லாமல் ஓடக்கூடாது.  அப்படி ஓடினால், என்ன ஆகும், நீரும் வீணாகும், மக்களின் வாழ்வும் துன்பமாகும்.  அதற்காகத்தான், ஆற்றுக்கு இரு புறமும் கரைகள் இருக்க வேண்டுமென்பது அப்படித்தான் பிள்ளைகளின் மீது நம் பாசம் எல்லையில்லாமல் இருக்கலாம்.  ஆனால், அதற்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்: எனச் சொல்லி விட்டு, செந்திலிடம் “என்னப்பா, உன் தகப்பனாரின் வியாதி என்ன எனப் புரிந்து கொண்டாயா, அதன் மூலக்காரணம்  என்ன என்பதையும் தெரிந்து கொண்டாய்தானே.  இனிமேல், நீ தான் அவரிடம் உன் தேவைகளைச் சொல்லும் முன், அது உனக்கு அவசியம்தானா, அதை விட, உன் எதிர்காலத்திற்கு தேவையானது என்ன என யோசித்துப் பார்.  உன் வாழ்வும் வளமாகும், உன் தந்தையின் துன்பங்களும் குறையும்.  சென்று வாருங்கள்” எனச் சொல்லி, இருவரையும் அனுப்பி வைத்தார்.
              அவரின் மனதில், இந்தக் காலத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தை தடம் மாற்ற எத்தனை எத்தனை சோதனைகள்?  விளையாட்டே வினையாகக் கூடாது.   ஆசைக்கும் அளவு வேண்டும் எனவும் மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

              

Sunday, 18 December 2016

இதயத்தில் வளர்ந்த உறவு

இதயத்தில் வளர்ந்த உறவு
 (ஜெயரமணி)
              மதுரையில் பிரபல வக்கீலின் வீட்டில் அன்று மிகவும் விசேஷதினம். ஆமாம், வக்கீலுடைய  சீமந்தப் புத்திரன் பிரசன்னா அன்றுதான் மருத்துவத் துறையில்  தன்னுடைய மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்து, பின்னர் லண்டனிலேயே சில வருஷங்கள் மருத்துவமணைகளில் இருதய சிகிச்சை பகுதியில் தனிச் சிறப்பு மருத்துவராகப் வேலை செய்து விட்டு, விடுமுறையில் தன் பெற்றோரைப் பார்க்க வந்திருக்கிறான். பிரசன்னா சென்னையில் மருத்துவப் படிப்பை முடித்து, உடனேயே மேற்படிப்பிற்காக லண்டன் சென்றவன், தன் மேல் படிப்பு முடித்து, அங்கேயே ஒரு மருத்துவமனையில் பணியும் புரிந்து, இப்போதுதான் நீண்ட கால இடைவெளிக்குப் பின் மதுரைக்கு வந்திருக்கிறான். அதனால், அவனுடைய வருகையை வீட்டில் எல்லாருமே மிகவும் ஆவலோடும், ஆசையோடும் வரவேற்றார்கள்.
 அவன் முதல் மகனாக இருந்தாலும், அவனுக்குப் பின் பிறந்த மூன்று சகோதரிகளில் இருவருக்குத் திருமணம் முடிந்து, கடைசி சகோதரி திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள்.  அவளுக்கும் பிறகு, கடைசியாக, பிரசன்னாவுக்கு ஒரு சகோதரனும் உண்டு.  அவன், இப்போது  சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். வக்கீலும், தன்னுடைய தொழிலில் மிகவும் நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்.  வீட்டிலிருந்த அத்தனை பேர்களும், பிரசன்னா லீவில் வருகிறான் எனச் தெரிந்த வுடனேயே, தங்களுக்கு என்னென்ன வேண்டும் என் ஒரு பெரிய லிஸ்டே கொடுத்து இருந்தார்கள்.  பிரசன்னாவும், அவர்கள் எல்லாருடைய ஆசையையும் பூர்த்தி செய்து கொண்டுதான் வந்திருக்கிறான்.
              வந்தவன், சிறிது நேரம் எல்லாரிடமும் பேசி விட்டு, மெதுவாக தான் கொண்டு வந்திருக்கும் பரிசுப் பொருட்களை வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி எல்லாருமே மிகவும் ஆவலுடன் தாங்கள் கேட்டவைகள் எல்லாம் வாங்கி வந்திருக்கிறானா எனவும், அதை தங்களுக்கு எப்பக் கொடுக்கப் போகிறான் எனவும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.  மற்றவர்களைப் போல பொறுமை இல்லாத மூத்த சகோதரிகள் இருவருமே பெட்டியிலிருந்து ஒவ்வோன்றாகத் தாங்களும் வெளியே எடுத்தார்கள்.  அப்படி அவர்கள் எடுக்கும் பொருட்களையும் பிரசன்னா வாங்கித் தன் அருகிலேயே வைத்துக் கொண்டான். எல்லாருடைய ஆவலுமே அதிகமாகிக் கொண்டிருந்தது.  வீட்டிற்கு அப்பாவிற்கு அடுத்த மூத்தவன் என்பதால், எல்லாருக்குமே அவனிடம் சிறிது பயமும், மரியாதையும் உண்டு.
              பிரசன்னா பெட்டியிலிருந்து ஒவ்வோன்றாக எல்லாவற்றையும் வெளியேஎடுத்து, யார் யாருக்கு என்னென்ன பரிசுகள் வாங்கி வந்திருக்கிறோம் என்பதையும் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.  கடைசியில், பெட்டியில் அடியிலிருந்து தனியாக ஒரு பரிசுப் பொருளையும் எடுத்தான்.  அதை மட்டும், யாருக்கும் காட்டாமல், தனியாக எடுத்துக் கொண்டு, தன்னுடைய தனிப் பெட்டியில் வைத்து விட்டு வந்து, மற்றவர்களுக்கு வாங்கியதை எல்லாவற்றையும்
                                         ==2==
அவரவர்களிடம் கொடுத்து விட்டான்.  தாங்கள் கேட்டதைப் பெற்றுக் கொண்டவர்களின், மனதில் முழுத் திருப்தி இல்லை.  தங்களுக்குக் காட்டாமல், தனியாக ஒரு பரிசுப் பொருளை யாருக்காக வாங்கி வந்திருப்பான், அதில் என்ன இருக்கும், மிகவும் பெரிய மதிப்பு வாய்ந்த பொருளோ, அது என்னாவாயிருக்கும் என்பதிலேயே அத்தனை பேரின் கவனமும், கருத்துக் இருந்தது.  சாதாரணமாகவே, அவனிடம் பேசப் பயப்படுபவர்கள், இன்று எப்படி அந்தத் தனிப் பரிசு யாருக்கு அதில் என்ன இருக்கு எனக் கேட்பது எனவும் பயந்து கொண்டே இருந்தார்கள்.
              பெட்டியிலிருந்த எல்லாவற்றையும் வெளியே எடுத்து விட்டு, மீதி தன்னுடைய சில சாமாங்களை அதில் வைத்து, பிரசன்னா அந்தப் பெட்டியையும் தன்னுடைய அறைக்குள் எடுத்து சென்று விட்டான்.  வெளியில் இருந்த அம்மா, அக்கா மார்கள், தங்கை, தம்பி என எல்லாருக்கும் அதில் என்ன இருக்கும் என பலவாறு பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். கடைசித் தங்கையான சித்ரா, “அண்ணாவுக்கு நான் என்றால் மிகவும் செல்லம்.  அதனால், எனக்குத் தனியாக ஸ்பெஷலாக ஏதாவது அண்ணா எனக்குத்தான் வாங்கி வந்திருப்பார்: எனப் பெருமையுடன் சொல்லவும், தம்பி அவளிடம் “அதெல்லாம் இல்லை,  நாந்தான் இப்ப காலேஜ் ஃபினல் படித்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்குத்தான், என் மேற்படிப்புக்காக அண்ணா தனியாக எதாவது வாங்கி வந்திருப்பார்,  அதை என்னிடம் தனியாக, எனக்குச் சர்ப்ரைஸாக கொடுக்க இருப்பார்” எனவும் தன்னுடைய எதிர்பார்ப்பைச் சொல்லிக் கொண்டான். சகோதரிகள் இருவரும், :”ஏன், அந்தப்பரிசு எங்களின் கணவர்களுக்காக எதாவது வாங்கி வந்திருக்கலாமே” எனவும் தங்களின் பங்குக்குக் சொல்லிக் காட்டினார்கள்.  தன்னுடைய மற்ற குழந்தைகள் பேசியவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிரசன்னாவுடைய அம்மா அங்கு வந்து “உங்களை எல்லாரையும் விட நாந்தான் அவனுக்கு முக்கியம்.  அதில் எனக்குத்தான் எதாவது தனியாக ஸ்பெஷலாக வாங்கி இருப்பான்.  அதை அவன் என்னிடம் தனியாகத்தான் கொடுப்பான்”என மிகவும் பெருமையுடன் சொன்னாள்.
              தன்னறையிலிருந்து, கூடத்தில் இருந்தவர்களுடைய பேச்சையெல்லாம் கேட்ட பிரசன்னா தனக்குள் சிரித்துக் கொண்டான்.  தான் இன்னும் சில நாட்கள் அவர்களை எல்லாரையுமே விஷயம் தெரியாமல் இருக்கும்படி செய்யவும் திட்டமிட்டான். தன்னுடைய திட்டப்படியே பிரசன்னாவும் யாரிடமும் அந்த தனிப் பரிசுப் பொருளைப்பற்றி எதுவும் குறிப்புக்கூடக் காட்டவில்லை. அதைப் பற்றித் தன்னிடம் கேட்கவும் தயங்கி, தன்னுடன் பிறந்தவர்களும், தன்னைப் பெற்றவளுமே மனதிற்குள் சங்கடப்படுவதையும் தெரிந்தவன், அதையும் மௌனமாகவே இரசித்துக் கொண்டிருந்தான்.
              ஒரு சமயம் பிரசன்னா, இரு நாட்களுக்கு வெளியூரில் இருக்கும் தன் நண்பர்களைப் பார்க்கவும் சென்றான்.  அந்தச் சமயத்தில், அவனுடைய அறைக்குள் சென்று அந்த்த் தனிப் பரிசுப் பொருளை எங்கு வைத்திருப்பான் எனவும் எல்லாருமே சேர்ந்தும், தனித்தனியாகவும் தேடிப் பார்த்து, கிடைக்காமல் ஏமாற்றமும் அடைந்தார்கள். ஊரிலிருந்து வந்தவனிடம் தனியாக ஒரிரு சமயங்களில் அவனுடைய தங்கையும், அம்மாவும் மட்டுமே
                                  ==3==
அந்தப் பரிசுப் பொரூள் யாருக்கு, அதில் என்ன இருக்கு எனவும் மெதுவாகேட்டும் பார்த்தார்கள்.  அதற்கும் அவனிடமிருந்து சிரிப்புத்தான் வந்தது,             தன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாருமே, ஏதோ ஒரு விஷயத்தில், பிரசன்னாவுடன் நேரில் கேட்பதற்கும் தயங்குவதைப் பார்த்த பிரசன்னாவின் அப்பா ஒரு நாள் அவனிடமே அது பற்றி கேட்டார்.
              தன்னுடைய அப்பாவே தன்னிடம் நேரிடையாக கேட்ட பின்னும், தான் அதைப் பற்றிச் சரியாக சொல்லாமல் இருந்தால் அது தவறு என உணர்ந்த பிரசன்னாவும், அவரிடம் சிரித்துக் கொண்டேஅப்பா, அந்தப் பரிசு எனக்கு மிகவும் பிடித்தவர்களுக்காக நான் வாங்கி வந்திருப்பதுஅதை நானே அவரிடம் கொடுத்து, அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென இருக்கிறேன்நான் வந்தபிந்தான் தெரிந்தது, அவர் இந்த ஊரை விட்டு தன்னுடைய மனிதர்கள் வசிக்கும் இடத்திற்குப் போய் விட்டார் எனஅதனால்தான், அவரைத் தேடி நான் அங்கு சென்று பார்த்தேன்ஆனால் அவர் அங்கும் இல்லையாம். நான் அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றான்.
              அவனுடைய பதிலால் திருப்தி அடையாத அவனுடைய அம்மாவும், சகோதரிகளும், தங்களுக்குள் ஒரு முடிவு செய்தார்கள்எப்படியாவது, பிரசன்னாவின் அறைக்குள் இருக்கும் பெட்டியிலிருந்து அந்தப் பரிசை வெளியில் எடுத்துப் பார்த்து விடுவது என.   தன்னுடைய தாயும் தங்கையும் எப்படியும் தன்னுடைய அறைக்குள் வந்து அந்தப் பரிசுப் பொருளை எடுத்துப் பார்ப்பார்கள் எனபதை தெரிந்த பிரசன்னாவும், ஒரு சமயம் அவர்களுக்கு வசதியாக, தன்னுடைய பெட்டியின் மேலேயே அந்தப் பொருளை வைத்து விட்டு,மறந்து விட்டது போல் வெளியில் சென்றான்.
              பிரசன்னா வெளியில் சென்றால், வருவதற்கு எப்படியும் அதிக நேரம் ஆகும் எனத் தெரிந்த அவனுடைய தங்கை அம்மாவையும் கூட்டிக் கொண்டு அவனுடைய அறைக்குள் சென்றாள்அவளுக்கு வசதியாகவே, அந்தப் பரிசுப் பொருள் பெட்டியின் மேலேயே இருப்பதைப் பார்த்து, அதை எடுத்துப் பார்த்தார்கள்அதில் துணி இருப்பதைக் கண்டவர்கள், அது என்னவாக இருக்கும் எனவும் பார்க்க பெதுவாக அந்த பொட்டலத்தைப் பிரித்துக் பார்த்தார்கள்அதில் ஒரு நல்ல விலை உயர்ந்த பட்டுப் புடவை, நீல நிறத்தில் இருப்பதைப் பார்த்தவுடன், பிரசன்னாவின் தாயாருக்கு மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டது. தன் பெண்ணிடம்நான் என்ன சொன்னேன், பிரசன்னா எனக்குத்தான் தனியாக ஸ்பெஷலாக வாங்கி வந்திருப்பான் என. பார், இப்போ இதில் இருப்பது ஒரு விலை உயர்ந்த பட்டுப் புடவை. இந்த வீட்டில் யார் புடவை கட்டுகிறார்கள். நான் மட்டும்தானேஇது, என்னுடைய பிறந்த நாளுக்காக வாங்கி வந்திருப்பான்என்னுடைய பிறந்த நாள் இந்த மாதம் தானே வரும். அன்று எனக்காக சர்பிரஸாகக் கொடுப்பான்எனவும் மிகவும் பெருமையுடனும், கர்வத்துடனும் சொன்னாள். தாயாரின் சந்தோஷத்தைப் பார்த்த பெண்ணிற்கு வருத்தம் வந்தது.  “உனக்குத்தான் எத்தனையோ புடவைகள் இருக்கே. இப்ப எதற்கு பிரசன்னாவும் உனக்குத்
                                  ==4==
தனியாக வாங்கி வரவேண்டும்எனச் சொல்லி, தன்னுடைய ஏமாற்றத்தையும் வெளிக்காட்டினாள்.
              இருவரும் அறைக்குள் இருக்கும்போதே பிரசன்னா உள்ளே வந்தான்வந்தவன் தன்னுடைய தாயும், தங்கையும் இருப்பதையும், அவர்களின் கையில் தன்னுடைய இரகசிய   பரிசுப் பொருள் இருப்பதையும் பார்த்து, அவர்களிடம் சிரித்துக் கொண்டேஎன்ன இருவரும் ஒருவழியாகத் தேடி கண்டு பிடித்து விட்டீர்களா?” எனவும் கேட்டான்
              பிரசன்னாவைப் பார்த்த அவனுடைய அம்மாஎன்னப்பா, நீ எனக்குத்தானே இந்தப் புடவையை வாங்கி வந்திருக்கிறாய்லண்டனில் கூட நம்ம ஊர்ப் புடவைகள் கிடைக்கிறதா?   யார் மறந்தாலும், நீ என் பிறந்த நாளை மறக்க மாட்டியேஎனச்  சொல்லிக் கொண்டே அந்தப் புடவையைத் தன் கையில் எடுத்துக் கொண்டு வெளியே போகலானாள். ஆனால் அதற்குள் பிரசன்னா அவளிடமிருந்து அந்தப் புடவையை வேகமாகப் பிடுங்கிக் கொண்டே :யார் சொன்னது இது உனக்காக வாங்கி வந்தது?” எனக் கேட்டுக் கொண்டே, அம்மாவின் கையிலிருந்து அந்தப் புடவையை திரும்பவும் எடுத்துதன்னுடைய பெட்டியில் வைத்துக் கொண்டான்ஏமாற்றத்துடன் பார்த்த அம்மாவை நோக்கிஅம்மா, இது எனக்கு மிகவும் வேண்டியவர்களுக்காக நான் வாங்கி வந்தது.   நான் இன்னும் அவரைப் பார்க்கப் போகவில்லைஅவர் இருக்கும் இடம் தெரியாமல்தான் நானே தவித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு என்னுடைய மனதில் இருப்பதைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் மனசுக்குத் தோன்றியபடியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்என தன் மன வருத்தத்தையும் வெளிக் காண்பித்தான்.
              தனக்குத்தான் பிள்ளை ஆசையாக வாங்கி வந்திருப்பான் என எண்ணீயவளுக்கு, தன்னைவிட தன் பிள்ளைக்கு பிரியமான அந்தப் புதிய பெண் யார் எனத் தெரியாமலும், தெரியாதவளின் மேல் ஒரு பொறாமையும் ஏற்பட்டது.   பிள்ளையிடம்அப்படி யாரப்பா என்னைவிட உனக்கு முக்கியமானவள்எனவும் கொஞ்சம் கோபமாகவும் கேட்டு விட்டுப் போய் விட்டாள்.  தாயுடன் ஒன்றும் பேசாமல் தன்னுடைய ஏமாற்றத்தையும் காட்டிக் கொண்டு பிசன்னாவின் தங்கையும் அறையை விட்டு வெளியேறினார்கள்.  செல்பவர்களைப் பார்த்த பிரசன்னாவும், தனக்குள் “எத்தனை வசதிகளுடன் வாழ்ந்தாலும், இந்தப் பெண்களுக்கு மட்டும் ஆசைக்கு குறைவே இல்லை. தன்னைத் தவிர, கணவானாலும், பிள்ளையானாலும் கூட, வேறு யார் மீதும் அதிக ஆசையோ பாசமோ வைப்பதை எந்தப் பெண்ணும் சகித்துக் கொள்வதும் இல்லை.  என்ன ஜென்மங்களோ” எனவும் நினைத்து சிரித்துக் கொண்டான்.
              ஒரு நாள் காலையில் பிரசன்னா வீட்டு மனிதர்களுடன் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது, அவனுடைய தனிக் கைப்பேசியில் அழைப்பு வந்தது.  பேசுபவர் யார் எனத் திரையில் கவனித்தவன் மிகவும் ஆவலுடன் “சொல்லுடா மகேஷ்.  நீ அவரைக் கண்டு பிடித்து விட்டாயா? எப்படி இருக்கிறார்.  இப்போ அவருடன் யார்
                                  ==5==
இருக்கிறார்கள். நான் அவரை உடனேயே பார்க்க வேண்டுமே” எனக் கேட்டவனுக்கு பதிலாக மறுமுனையிலிருந்து “பிரஸன்னா, நான் சாந்தி அம்மாவைப் பார்த்து விட்டுத்தான் உன்னிடம் பேசுகிறேன்.  இப்போ அவர்கள் என்னுடந்தான் இருக்கிறார்கள்,  நீயே பேசு” எனச் சொன்னவுடன், உடனடியாக அவசர அவசரமாக அந்த இடத்திலிருந்து தன்னறைக்குள் சென்று விட்டான். சில நிமிஷ நேரங்கள் சென்றபின், பிரசன்னா வெளியே போகும் நிலையில் வந்து, கூடத்தில் இருந்த அப்பாவிடம் “அப்பா, நான் இத்தனை நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த எனக்கு மிகவும் வேண்டியவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டது.   நான் இப்பவே போய் அவரைக் கூட்டிக் கொண்டு வருகிறேன்.  அம்மா,என்னுடன் வருபவரை நீங்கள் எல்லருமே மிகவும் ஆவலோடு பார்க்க காத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும்.  அவரை நான் இன்று இங்கு கூட்டிக் கொண்டு வருகிறேன். வந்தபின் உங்களின் எதிர்பார்ப்பு குறையும்” எனச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, காரில் சென்று விட்டான்
              வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை.  பிரசன்னாவிற்கு அப்படி மிகவும் வேண்டப்பட்ட அந்த நபர் யாரா இருக்கும்? என.  தாயோ, “எனக்குத் தெரியும் அது அவனுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு பெண்தான்”எனச் சொன்னதும், அப்பா அவரிடம் “அதை எப்படி சொல்லமுடியும்.  வேண்டியவர் ஒருஆனாக இருக்கக்கூடாதா” எனவும் சிரித்துக் கொண்டே கேட்டார்.  இடையில் நின்று கொண்டிருந்த பிரசன்னாவின் தங்கை அப்பாவிடம் “அது நிச்சயம் ஒரு பெண்தான்.  எங்களுக்குத் தெரியும்.  இல்லாவிட்டால், அண்ணா, அன்று நமக்கெல்லாம் காட்டாமல் தனியாக ஒரு  பெரிய பரிசுப் பொட்டலத்தை தனியாக எடுத்துச் செல்வானா?  அதைத்தான் நானும் அம்மாவும் இரகசியமாக அவனுடைய அறைக்குள் சென்று பார்த்தோமே.  அது, ஒரு விலை உயர்ந்த ஊதா நிற பட்டுப் புடவை” எனவும் குறிப்பிட்டு, தங்களின் துப்பறிந்த விஷயத்தைப் பெருமையுடன் சொன்னாள்.
அவர்களின் எதிர்பார்ப்புக்கும் முடிவு வந்தது,  கிளம்பிச் சென்ற பிரசன்னா, வெகு சீக்கிரத்தில் தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் எனச் சொல்லி இருந்தவரை வீட்டிற்குள் அழைத்து வந்தான்.  ஆனால், வந்தவருக்கோ, பிரசன்னாவுடன் இந்த வீட்டிற்குள் நுழைய தயக்கமாக நின்றார்.  அதைப் பார்த்த பிரசன்னா “என்ன சாந்தம்மா, இந்த வீடு உங்களுக்குப் புதியதா? ஏன் உள்ளே வரத் தயங்குகிறீர்கள்” எனச் சிரித்துக் கொண்டே, வந்தவரின் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.
உள்ளே வந்த சாந்தம்மாவைப் பார்த்தவுடனே எல்லாருக்கும் மிகவும் ஆச்சர்யமாகவும், திகைப்பாகவும் இருந்தது.   ஆனால், உள்ளே வந்த சாந்தம்மாவோ,  தன்னுடைய எஜமானரையும், எஜமானியம்மாவையும் பார்த்து, தயங்கியவாரே “ஐய்யா, அம்மா வணக்கங்க” எனப் பணிவாகச் சொன்னாள்.
சாந்தம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்த பிரசன்னா, “சாந்தம்மா, இப்படி உட்காருங்கள்” எனவும் சொல்லி விட்டு, தன்னறைக்குச் சென்று, தான் வாங்கி வந்த தனிப்
                           ==6==
பரிசான ஊதா நிறப் பட்டுப் புடவையை அவரின் கைகளில் வைத்தான், ஆசையுடன். பிறகு தன் அம்மவைப் பார்த்து, “அம்மா, உங்களுக்கேத் தெரியும்.  நான் சின்னக் குழந்தையாக இருந்த நாளிலிருந்தே, என்னைப் பாசத்துடனும், ஆசையுடனும் வளர்த்தவர் இவர்தானே.  அப்போ நீங்களும் உங்களுடைய வேலைக்குப் போய் விடுவீர்கள்.  எனக்கு மூன்று வயதானவுடனேயே, உங்களுக்கு அடுத்ததாக தங்கையும் பிறந்தாள்.  அப்போதும், அவர்கள் தானே, எங்களையெல்லாம் கவனித்துக் கொண்டார்கள்.  அதற்கு நீங்கள் அவர்களுக்கு நிறையத்தான் பணம், வசதி எனக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்.  உங்களுடைய பணத்தை மட்டும் அவர் பார்க்கவில்லை.  எங்களிடம் உண்மையாகவே, ஒரு தாயாக இருந்துதான் பாசத்தைக் காட்டினார்.  உங்களுக்கு நினைவிருக்கிறதா?  எங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்ற போதும், உங்களூக்கு பாங்கில் வருட முடிவில் வேலை அதிகம் இருந்ததால், லீவும் போட முடியாமல் தவித்த போதும், உங்களுக்கு துனையாக எங்களைப் பார்த்துக் கொண்டதும் இந்த அம்மாதானே.  எனக்கு நன்றாக நினைவிருக்கிறதம்மா.  இவர்கள் எனக்கும் பாமாவுக்கும், எத்தனைக் கதைகள் சொல்லி, சாப்பாடு ஊட்டியிருப்பார்கள், நாங்கள் இருவரும் நீங்கள் வரவில்லை என ஏங்கும் போது, எங்களுக்குக் கதை யெல்லாம் சொல்லி, எங்களின் ஏக்கத்தையும், அப்பவும், “பிரசன்னா செல்லம், அம்மாவும் பாங்கில் நிறைய வேலை இருக்கும்.  வருவதற்கு நேரம்தான் ஆகும்.  நான் இருக்கிறேனே,  நீ அழுதால், உன்னைப் பார்த்து பாமாவும் அழுகிறாளே.  அதனால், நீ அழக்கூடாது”எனச் சொல்லிச் சொல்லி, என்னையும் தங்கைகளுடன் பாசத்துடன் பழகவும் சொல்லிக் கொடுத்தார். எங்களுக்கு எப்பக் கதை சொன்னாலும், அதில் ஊதா நிறத்தில் புடவையோ, பாவாடையோ கட்டிக் கொண்டு ஒரு தேவதைப் பெண் வருவதாகத்தான் சொல்லுவார்கள்.  அப்போ நானும் பாமாவும் கேட்போம் “என்ன சாந்தம்மா, உங்களுக்குன்  ஊதா நிறத்தைத் தவிர வேறு நிறங்களேத் தெரியாதா? எனவும் கேலியாக கேட்டுச் சிரிப்போம்.  அப்போ அவர் என்னிடம் சொல்லுவார் “அதென்னோவோ தெரியாதுப்பா,  எனக்கு ஊதா நிறம் மட்டும்தான் மிகவும் பிடிக்கும்” எனவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.
நான் லண்டனிலிருந்து, இங்கு வரும் போது, உங்களுக்கெல்லாம் நீங்கள் கேட்டபடியே லண்டனிலேயே வாங்கி வந்து விட்டேன்.  அங்கு சாந்தம்மாவுக்கு பிடித்த மாதிரி எதுவும் எனக்கு கிடைக்கவில்லை.  அப்போதே முடிவு செய்து விட்டேன்.  இந்தியாவில், இறங்கியவுடனேயே, இவர்களுக்கு ஏதாவது ஒன்று வாங்கிச் செல்ல வேண்டுமென.  அதற்கு வசதியாக,என்னுடைய பிலைட் சென்னையில் இறங்கியவுடனேயே, வெளியே வந்து, அங்கேயே இருந்த போத்தீஸ் கடைக்குள் சென்று ,சாந்தம்மாவுக்குப் பிடித்த மாதிரி, ஒரு ஊதா நிறத்தில் பட்டுப் புடவை வாங்கி வந்தேன்.  என்னைப் பொருத்தவரையில், நீங்கள் என்னைப் பெற்ற அம்மா.  சாந்தம்மாவோ என்னை வளர்த்த அம்மா.  எனக்கு இருவரின் அன்பும், ஆசிகளும்தான் வேண்டும்.  அதனால்தான், நானே இவர்கள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து, இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து, என்னுடைய அன்புப்பரிசை என் கையால் கொடுக்க தீர்மானித்தேன்.  உங்களிடம் கொடுத்து விட்டு, நீங்கள் இவரைப்
                           ==7==
பார்க்கும்போது கொடுத்து விடுங்கள் எனவும் சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.  அப்படிச் செய்ய எனக்குன் விருப்பமில்லை.  எத்தனை நாட்கள், இவர் எனக்கு உடம்பு துடைத்து விட்டிருப்பார், எத்தனை நாட்கள் நான் சாப்பிடாமல் படுத்தினால், என்னைத் தூக்கிக் கொண்டு சாதம் ஊட்டி இருப்பார்.  ஒர் நாள் கூட, நீ சாப்பிடவிலை என்றால், சரி எனச் சொல்லி, சாப்பாடு கொடுக்காமல் இருக்க மாட்டாரே.  என்னைப் பெற்ற பிள்ளையாகத்தான் நினைத்துப் பாசத்தையும், பரிவையும் காட்டியிருக்கிறார்.  அந்தப் பாசத்திற்கு, பரிவுக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்க வேண்டாமா?  . பெற்றால்தான் பிள்ளையா என்பது போலத்தானே அம்மா “பெற்றால்தால் அம்மாவா? எனவும் நான் பல நாட்கள் யோசித்திருப்பேன்.  லண்டனிலிருந்து உங்களுடன் எல்லாருடனும் போனில் பேசும் போது, சாந்தம்மாவின் குரலைக் கேட்க முடியவில்லையே? இவர் எங்கு போனார் எனவும் தெரியாமல் எத்தனை நாட்கள் மனதிற்குள் வருந்தி இருப்பேன் தெரியுமா?: எனக் கண்களில் நீர் வழிய தன்னுடைய பாசத்தைக் காட்டினான்.
பிரசன்னாவின் பேச்சைக் கேட்ட சாந்தம்மாவோ, “என் செல்லமே, உனக்கு என்னிடம் இத்தனைப் பாசமா?  நானும், எத்தனையோ வீடுகளில், இப்படி, அவர்களுடைய குழந்தையைக் கவனிப்பதற்காக வேலையும் செய்து வந்திருக்கிறேன்.  நான் தூக்கி வளர்த்த குழந்தைகள் எல்லாருமே, இப்ப எவ்வளவோ படித்து, பெரிய பெரிய பதவியில் வசதியாகவும், வாழ்கிறார்கள்.  நானும், அப்படி நான் வளர்த்த குழந்தைகளை பல இடங்களில் சந்தித்து இருக்கிறேன்.  சிலரிடம் வலுவில் சென்று பிரியமாக “என்னம்மா நல்லா இருக்கியா.  என்னைத் தெரிகிறதா, உன்னைக் குழந்தையில் உன் வீட்டிலே இருந்து, கவனித்துக் கொண்ட சாந்தம்மாதான்” எனச் என்னைப் பற்றிச் சொன்னாலும், தெரியாதது போல் “சின்ன வயதில் நடந்தைப் பற்றி இப்ப எனக்கு எதுவும்  ஞாபகம் இல்லை” எனச் சொல்லி விட்டு, என்னைப் பார்த்து பேசக் கூட கஷ்டப்பட்டு போயிருக்கிறார்கள்.  அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தக் காலத்தில், உன்னைப் போல், கொஞ்ச காலம் வளர்த்தவளை ஞாபகம் வைத்துக் கொண்டு, எனக்காக ஒரு புடவையையும் வாங்கிக் கொண்டு வந்து, இந்த ஊரிலேயே என்னைத் தேடியும் கூட்டிக் வந்து, கொடுத்து என்னைச் சந்தோஷப்படுத்திய, உன்னைப் எந்த வார்த்தைச் சொல்லி நான் பாராட்டுவேன்.   \இன்று நீ எத்தனை உயரத்தில் இருக்கிறாயப்பா.  எனக்குச் தெரியும் நீ பெரிய டாக்டர் எனவும், வெளி நாட்டில் வேலை செய்கிறாய் எனவும்.  எனக்கும் உன்னைப் பார்க்கனும்னு ஆசையாகத்தான் இருந்த்து.  அதே சமயம், இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் உன்னை ஐந்து வருடங்கள் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நீ என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பாயோ, அப்படியே இருந்தாலும், என்னைத் தேடி இந்த ஊரில் பல இடங்களில் நீ தேடியதையும் தெரிந்து, மனம் உன்னைப் பார்க்கவும் துடித்தது.  ஆனால், நான் திடீரென என்ன காரணம் சொல்லி, உன்னைப் பார்க்க இங்கு வர முடியும்.  நானோ, ஒரு ஏழை. என்னால் இந்த விட்டில் எந்த உரிமையில் நுழைய முடியும்” என பலதும் எண்ணி என் மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால், இன்று நீ எல்லா தடைகளையும் உடைத்துக் கொண்டு, என்னைத் தேடி வந்து, என்னைக் கூட்டிக் கொண்டு வந்தாயே, இந்த
                                  ==8==
ஒன்றே போருமப்பா, நான் உன்னைக் கொஞ்ச காலம் தூக்கிக் கொண்டதற்கு..   .என்னிடம் இத்தனை பாசத்தையும், பரிவையும் காட்டுகிறாயே.  அதற்கு மேலாகவா இந்தப் புடவைப் பெரியது” எனச் சொல்லி, தன் மனதில் துடித்தப் பாசத்தைக் கட்டுப் படுத்த முடியாமல், கண்களில் நீர் வழியக், பாசத்துடன் பிரசன்னாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்  சாந்தம்மா.  
              பாசத்தால் துடித்த சாந்தாம்மாவைப் பார்த்த வீட்டின் தலைவர் “சரி, சாந்தம்மா, இப்ப எதற்கு இத்தனை துடிக்கிறீர்கள்.  நீங்கள் எங்கிருந்தாலும், அவன் எங்கிருந்தாலும் உங்களுக்குள் ஒரு பாசம் கட்டாயம் இருக்குமல்லவா.  அவனும்  உங்களைப் தன்னைப் பெற்றத் தாய்க்குச் சரியாகத்தான் மதிக்கிறான்.  நீங்களூம், அவனிடம், உங்களுடைய சொந்தப் பிள்ளையைப் போலத்தானே பாசத்தைக் காட்டுகிறீர்கள்.  பரிவுக்கும், பாசத்துக்கும் எந்தவிதமா உறவோ, உரிமையோ கிடையாதம்மா.  அது, இதயத்தில்  வளரும் ஒரு உறவு.  உங்களிருவரின் இதயத் துடிப்பு இருக்கும் வரை, அதுவும் உங்களுடன் வளரும்.  சரி, இப்ப சாப்பாட்டுக்கு நேரம் ஆகி விட்டது.  நீங்களூம் எங்களூடனேயே சாப்பிடுங்கள்” எனச் சொல்லிக் கொண்டே, எல்லாரையும் கூட்டிக் கொண்டு சாப்பிடச் சென்றார்.
              எஜமானரின் பேச்;சைக் கேட்ட சாந்தம்மாவும் “சிரித்துக் கொண்டே,நல்லது ஐயா. வாருங்கள் நானே இன்று உங்கள் எல்லாருக்கும் பரிமாறுகிறேன்.  இன்று அம்மாவும் உங்களுடனே ஒன்றாக அமர்ந்து சாப்பிடட்டும்” எனவும் பழைய உரிமையுடன் சொல்லிக் கொண்டே, சமையல் அறைக்குள் சென்று, சமைத்தவற்றை வெளியில் எடுத்து வந்தாள்.
              சாப்பிட்டு முடிந்த வுடன், சாந்தம்மாவிடம் பிரசன்னா கேட்டான் “அம்மா, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்.  நான் இன்று நீங்கள் கோவிலில் இருப்பதாக என்னிடம் மகேஷ் சொன்னவுடன், உங்களைப் பார்க்க கோவிலுக்கு வந்தேன்.  உங்கள் வீடு எங்கு இருக்கு. இப்ப யாருடன் இருக்கிறீர்கள்” எனக் கேட்டவுடன், சாந்தம்மா “நான் இப்ப இந்த ஊரில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில்தான்  இருக்கிறேனப்பா” எனச் சொன்னாள். அதைக் கேட்டவுடன், பிரசன்னா மிகவும் வருத்தப்பட்டான்.  அவனைப் பார்த்த அவனுடைய அம்மா “சாந்தம்மா, இனி நீ எங்கும் போக வேண்டாம்.  எத்தனையோ வருஷங்கள் எங்கள் வீட்டில் உழைத்திருக்கிறீர்கள்.  இனியும், நீங்கள் உங்கள் காலம் வரை எங்களுடனேயே இருந்து விடுங்கள்.  நீங்கள் இங்கேயே எனக்கு உதவியாக இருங்கள்” எனச் சொல்லி, பிரசன்னாவைப் பார்த்து “என்னப்பா உனக்கு சந்தோஷந்தானே?” எனவும் கேட்டாள்.  அதைக் கேட்டவன், அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “என்ன இருந்தாலும், என் அம்மாவைப் போல யார் இருப்பா” எனவும் சொல்லி, தன்னுடைய சந்தோஷத்தைக் காண்பித்தான்.  உறவென சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லை என்ற நிலையில் முதியோர் இல்லம் தேடிப் ;போன, தனக்கும் பாசமும் பரிவும் காட்ட ஒரு குடும்பம் இருக்கு என்ற நினைப்பில், சாந்தம்மாவும், மன நிறைவு பெற்றாள்.