இதயத்தில் வளர்ந்த உறவு
(ஜெயரமணி)
மதுரையில் பிரபல
வக்கீலின் வீட்டில் அன்று மிகவும் விசேஷதினம். ஆமாம், வக்கீலுடைய சீமந்தப் புத்திரன் பிரசன்னா அன்றுதான்
மருத்துவத் துறையில் தன்னுடைய மேற்படிப்பை
வெற்றிகரமாக முடித்து, பின்னர் லண்டனிலேயே சில வருஷங்கள் மருத்துவமணைகளில் இருதய
சிகிச்சை பகுதியில் தனிச் சிறப்பு மருத்துவராகப் வேலை செய்து விட்டு, விடுமுறையில்
தன் பெற்றோரைப் பார்க்க வந்திருக்கிறான். பிரசன்னா
சென்னையில் மருத்துவப் படிப்பை முடித்து, உடனேயே மேற்படிப்பிற்காக லண்டன்
சென்றவன், தன் மேல் படிப்பு முடித்து, அங்கேயே ஒரு மருத்துவமனையில் பணியும்
புரிந்து, இப்போதுதான் நீண்ட கால இடைவெளிக்குப் பின் மதுரைக்கு வந்திருக்கிறான்.
அதனால், அவனுடைய வருகையை வீட்டில் எல்லாருமே மிகவும் ஆவலோடும், ஆசையோடும்
வரவேற்றார்கள்.
அவன் முதல் மகனாக
இருந்தாலும், அவனுக்குப் பின் பிறந்த மூன்று சகோதரிகளில் இருவருக்குத் திருமணம்
முடிந்து, கடைசி சகோதரி திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள். அவளுக்கும் பிறகு, கடைசியாக, பிரசன்னாவுக்கு
ஒரு சகோதரனும் உண்டு. அவன், இப்போது சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்துக்
கொண்டிருக்கிறான். வக்கீலும், தன்னுடைய தொழிலில் மிகவும் நல்ல நிலைமையில்தான்
இருக்கிறார். வீட்டிலிருந்த அத்தனை
பேர்களும், பிரசன்னா லீவில் வருகிறான் எனச் தெரிந்த வுடனேயே, தங்களுக்கு என்னென்ன
வேண்டும் என் ஒரு பெரிய லிஸ்டே கொடுத்து இருந்தார்கள். பிரசன்னாவும், அவர்கள் எல்லாருடைய ஆசையையும்
பூர்த்தி செய்து கொண்டுதான் வந்திருக்கிறான்.
வந்தவன், சிறிது
நேரம் எல்லாரிடமும் பேசி விட்டு, மெதுவாக தான் கொண்டு வந்திருக்கும் பரிசுப்
பொருட்களை வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி எல்லாருமே
மிகவும் ஆவலுடன் தாங்கள் கேட்டவைகள் எல்லாம் வாங்கி வந்திருக்கிறானா எனவும், அதை
தங்களுக்கு எப்பக் கொடுக்கப் போகிறான் எனவும் ஆவலுடன் காத்திருந்தார்கள். மற்றவர்களைப் போல பொறுமை இல்லாத மூத்த
சகோதரிகள் இருவருமே பெட்டியிலிருந்து ஒவ்வோன்றாகத் தாங்களும் வெளியே
எடுத்தார்கள். அப்படி அவர்கள் எடுக்கும்
பொருட்களையும் பிரசன்னா வாங்கித் தன் அருகிலேயே வைத்துக் கொண்டான். எல்லாருடைய
ஆவலுமே அதிகமாகிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு
அப்பாவிற்கு அடுத்த மூத்தவன் என்பதால், எல்லாருக்குமே அவனிடம் சிறிது பயமும்,
மரியாதையும் உண்டு.
பிரசன்னா
பெட்டியிலிருந்து ஒவ்வோன்றாக எல்லாவற்றையும் வெளியேஎடுத்து, யார் யாருக்கு
என்னென்ன பரிசுகள் வாங்கி வந்திருக்கிறோம் என்பதையும் சரி பார்த்துக்
கொண்டிருந்தான். கடைசியில், பெட்டியில்
அடியிலிருந்து தனியாக ஒரு பரிசுப் பொருளையும் எடுத்தான். அதை மட்டும், யாருக்கும் காட்டாமல், தனியாக
எடுத்துக் கொண்டு, தன்னுடைய தனிப் பெட்டியில் வைத்து விட்டு வந்து, மற்றவர்களுக்கு
வாங்கியதை எல்லாவற்றையும்
==2==
அவரவர்களிடம் கொடுத்து விட்டான்.
தாங்கள் கேட்டதைப் பெற்றுக் கொண்டவர்களின், மனதில் முழுத் திருப்தி
இல்லை. தங்களுக்குக் காட்டாமல், தனியாக
ஒரு பரிசுப் பொருளை யாருக்காக வாங்கி வந்திருப்பான், அதில் என்ன இருக்கும்,
மிகவும் பெரிய மதிப்பு வாய்ந்த பொருளோ, அது என்னாவாயிருக்கும் என்பதிலேயே அத்தனை
பேரின் கவனமும், கருத்துக் இருந்தது.
சாதாரணமாகவே, அவனிடம் பேசப் பயப்படுபவர்கள், இன்று எப்படி அந்தத் தனிப்
பரிசு யாருக்கு அதில் என்ன இருக்கு எனக் கேட்பது எனவும் பயந்து கொண்டே
இருந்தார்கள்.
பெட்டியிலிருந்த
எல்லாவற்றையும் வெளியே எடுத்து விட்டு, மீதி தன்னுடைய சில சாமாங்களை அதில் வைத்து,
பிரசன்னா அந்தப் பெட்டியையும் தன்னுடைய அறைக்குள் எடுத்து சென்று விட்டான். வெளியில் இருந்த அம்மா, அக்கா மார்கள், தங்கை,
தம்பி என எல்லாருக்கும் அதில் என்ன இருக்கும் என பலவாறு பேசிக் கொள்ளத்
தொடங்கினார்கள். கடைசித் தங்கையான சித்ரா, “அண்ணாவுக்கு நான் என்றால் மிகவும்
செல்லம். அதனால், எனக்குத் தனியாக
ஸ்பெஷலாக ஏதாவது அண்ணா எனக்குத்தான் வாங்கி வந்திருப்பார்: எனப் பெருமையுடன்
சொல்லவும், தம்பி அவளிடம் “அதெல்லாம் இல்லை,
நாந்தான் இப்ப காலேஜ் ஃபினல் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத்தான், என் மேற்படிப்புக்காக அண்ணா தனியாக
எதாவது வாங்கி வந்திருப்பார், அதை
என்னிடம் தனியாக, எனக்குச் சர்ப்ரைஸாக கொடுக்க இருப்பார்” எனவும் தன்னுடைய
எதிர்பார்ப்பைச் சொல்லிக் கொண்டான். சகோதரிகள் இருவரும், :”ஏன், அந்தப்பரிசு
எங்களின் கணவர்களுக்காக எதாவது வாங்கி வந்திருக்கலாமே” எனவும் தங்களின்
பங்குக்குக் சொல்லிக் காட்டினார்கள்.
தன்னுடைய மற்ற குழந்தைகள் பேசியவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த
பிரசன்னாவுடைய அம்மா அங்கு வந்து “உங்களை எல்லாரையும் விட நாந்தான் அவனுக்கு
முக்கியம். அதில் எனக்குத்தான் எதாவது
தனியாக ஸ்பெஷலாக வாங்கி இருப்பான். அதை
அவன் என்னிடம் தனியாகத்தான் கொடுப்பான்”என மிகவும் பெருமையுடன் சொன்னாள்.
தன்னறையிலிருந்து,
கூடத்தில் இருந்தவர்களுடைய பேச்சையெல்லாம் கேட்ட பிரசன்னா தனக்குள் சிரித்துக்
கொண்டான். தான் இன்னும் சில நாட்கள்
அவர்களை எல்லாரையுமே விஷயம் தெரியாமல் இருக்கும்படி செய்யவும் திட்டமிட்டான். தன்னுடைய
திட்டப்படியே பிரசன்னாவும் யாரிடமும் அந்த தனிப் பரிசுப் பொருளைப்பற்றி எதுவும்
குறிப்புக்கூடக் காட்டவில்லை. அதைப் பற்றித் தன்னிடம் கேட்கவும் தயங்கி, தன்னுடன்
பிறந்தவர்களும், தன்னைப் பெற்றவளுமே மனதிற்குள் சங்கடப்படுவதையும் தெரிந்தவன்,
அதையும் மௌனமாகவே இரசித்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம்
பிரசன்னா, இரு நாட்களுக்கு வெளியூரில் இருக்கும் தன் நண்பர்களைப் பார்க்கவும்
சென்றான். அந்தச் சமயத்தில், அவனுடைய
அறைக்குள் சென்று அந்த்த் தனிப் பரிசுப் பொருளை எங்கு வைத்திருப்பான் எனவும்
எல்லாருமே சேர்ந்தும், தனித்தனியாகவும் தேடிப் பார்த்து, கிடைக்காமல் ஏமாற்றமும்
அடைந்தார்கள். ஊரிலிருந்து வந்தவனிடம் தனியாக ஒரிரு சமயங்களில் அவனுடைய தங்கையும்,
அம்மாவும் மட்டுமே
==3==
அந்தப் பரிசுப் பொரூள் யாருக்கு, அதில் என்ன இருக்கு எனவும்
மெதுவாகேட்டும் பார்த்தார்கள். அதற்கும்
அவனிடமிருந்து சிரிப்புத்தான் வந்தது, தன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாருமே,
ஏதோ ஒரு விஷயத்தில், பிரசன்னாவுடன் நேரில் கேட்பதற்கும்
தயங்குவதைப் பார்த்த பிரசன்னாவின் அப்பா ஒரு நாள் அவனிடமே அது பற்றி கேட்டார்.
தன்னுடைய அப்பாவே தன்னிடம் நேரிடையாக கேட்ட
பின்னும், தான் அதைப் பற்றிச் சரியாக சொல்லாமல் இருந்தால் அது
தவறு என உணர்ந்த பிரசன்னாவும், அவரிடம் சிரித்துக் கொண்டே
“அப்பா, அந்தப் பரிசு எனக்கு மிகவும் பிடித்தவர்களுக்காக
நான் வாங்கி வந்திருப்பது. அதை நானே அவரிடம் கொடுத்து, அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென
இருக்கிறேன். நான் வந்தபிந்தான்
தெரிந்தது, அவர் இந்த ஊரை விட்டு தன்னுடைய மனிதர்கள் வசிக்கும்
இடத்திற்குப் போய் விட்டார் என. அதனால்தான், அவரைத் தேடி நான் அங்கு சென்று பார்த்தேன். ஆனால் அவர் அங்கும் இல்லையாம்.
நான் அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.” எனச்
சொல்லிவிட்டு சென்றான்.
அவனுடைய பதிலால் திருப்தி அடையாத அவனுடைய அம்மாவும்,
சகோதரிகளும், தங்களுக்குள் ஒரு முடிவு செய்தார்கள். எப்படியாவது, பிரசன்னாவின் அறைக்குள் இருக்கும் பெட்டியிலிருந்து அந்தப் பரிசை வெளியில்
எடுத்துப் பார்த்து விடுவது என. தன்னுடைய தாயும் தங்கையும் எப்படியும் தன்னுடைய அறைக்குள் வந்து அந்தப் பரிசுப்
பொருளை எடுத்துப் பார்ப்பார்கள் எனபதை தெரிந்த பிரசன்னாவும், ஒரு சமயம் அவர்களுக்கு வசதியாக, தன்னுடைய பெட்டியின்
மேலேயே அந்தப் பொருளை வைத்து விட்டு,மறந்து விட்டது போல் வெளியில்
சென்றான்.
பிரசன்னா வெளியில் சென்றால், வருவதற்கு எப்படியும் அதிக நேரம் ஆகும் எனத் தெரிந்த அவனுடைய தங்கை அம்மாவையும்
கூட்டிக் கொண்டு அவனுடைய அறைக்குள் சென்றாள். அவளுக்கு வசதியாகவே, அந்தப் பரிசுப் பொருள் பெட்டியின் மேலேயே இருப்பதைப் பார்த்து, அதை எடுத்துப் பார்த்தார்கள்.
அதில் துணி இருப்பதைக் கண்டவர்கள், அது
என்னவாக இருக்கும் எனவும் பார்க்க பெதுவாக அந்த பொட்டலத்தைப் பிரித்துக் பார்த்தார்கள். அதில் ஒரு நல்ல விலை உயர்ந்த பட்டுப்
புடவை, நீல நிறத்தில் இருப்பதைப் பார்த்தவுடன், பிரசன்னாவின் தாயாருக்கு மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டது. தன் பெண்ணிடம் “நான் என்ன சொன்னேன், பிரசன்னா எனக்குத்தான் தனியாக ஸ்பெஷலாக வாங்கி வந்திருப்பான் என. பார், இப்போ இதில் இருப்பது ஒரு விலை உயர்ந்த பட்டுப்
புடவை. இந்த வீட்டில் யார் புடவை கட்டுகிறார்கள். நான் மட்டும்தானே. இது, என்னுடைய பிறந்த நாளுக்காக வாங்கி வந்திருப்பான். என்னுடைய பிறந்த நாள் இந்த மாதம்
தானே வரும். அன்று எனக்காக சர்பிரஸாகக் கொடுப்பான்” எனவும் மிகவும் பெருமையுடனும், கர்வத்துடனும் சொன்னாள்.
தாயாரின் சந்தோஷத்தைப் பார்த்த பெண்ணிற்கு வருத்தம் வந்தது. “உனக்குத்தான் எத்தனையோ புடவைகள்
இருக்கே. இப்ப எதற்கு பிரசன்னாவும் உனக்குத்
==4==
தனியாக வாங்கி வரவேண்டும்” எனச் சொல்லி, தன்னுடைய ஏமாற்றத்தையும் வெளிக்காட்டினாள்.
இருவரும் அறைக்குள் இருக்கும்போதே பிரசன்னா
உள்ளே வந்தான். வந்தவன்
தன்னுடைய தாயும், தங்கையும் இருப்பதையும், அவர்களின் கையில் தன்னுடைய இரகசிய பரிசுப் பொருள் இருப்பதையும் பார்த்து,
அவர்களிடம் சிரித்துக் கொண்டே “என்ன இருவரும் ஒருவழியாகத்
தேடி கண்டு பிடித்து விட்டீர்களா?” எனவும் கேட்டான்.
பிரசன்னாவைப் பார்த்த அவனுடைய அம்மா
“என்னப்பா, நீ எனக்குத்தானே இந்தப் புடவையை வாங்கி
வந்திருக்கிறாய். லண்டனில்
கூட நம்ம ஊர்ப் புடவைகள் கிடைக்கிறதா?
யார் மறந்தாலும், நீ என் பிறந்த நாளை மறக்க
மாட்டியே” எனச்
சொல்லிக் கொண்டே அந்தப் புடவையைத் தன் கையில் எடுத்துக் கொண்டு
வெளியே போகலானாள். ஆனால் அதற்குள் பிரசன்னா அவளிடமிருந்து அந்தப்
புடவையை வேகமாகப் பிடுங்கிக் கொண்டே :யார் சொன்னது இது உனக்காக
வாங்கி வந்தது?” எனக் கேட்டுக் கொண்டே, அம்மாவின் கையிலிருந்து அந்தப் புடவையை திரும்பவும் எடுத்து, தன்னுடைய பெட்டியில் வைத்துக் கொண்டான். ஏமாற்றத்துடன் பார்த்த அம்மாவை நோக்கி
“அம்மா, இது எனக்கு மிகவும் வேண்டியவர்களுக்காக
நான் வாங்கி வந்தது. நான் இன்னும் அவரைப் பார்க்கப் போகவில்லை. அவர் இருக்கும் இடம் தெரியாமல்தான்
நானே தவித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு என்னுடைய மனதில்
இருப்பதைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் மனசுக்குத் தோன்றியபடியே
பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என தன் மன வருத்தத்தையும் வெளிக்
காண்பித்தான்.
தனக்குத்தான் பிள்ளை ஆசையாக வாங்கி வந்திருப்பான்
என எண்ணீயவளுக்கு, தன்னைவிட தன் பிள்ளைக்கு பிரியமான அந்தப் புதிய
பெண் யார் எனத் தெரியாமலும், தெரியாதவளின் மேல் ஒரு பொறாமையும்
ஏற்பட்டது. பிள்ளையிடம்
“அப்படி யாரப்பா என்னைவிட உனக்கு முக்கியமானவள்” எனவும் கொஞ்சம் கோபமாகவும் கேட்டு விட்டுப் போய் விட்டாள். தாயுடன் ஒன்றும் பேசாமல் தன்னுடைய
ஏமாற்றத்தையும் காட்டிக் கொண்டு பிசன்னாவின் தங்கையும் அறையை விட்டு
வெளியேறினார்கள். செல்பவர்களைப் பார்த்த
பிரசன்னாவும், தனக்குள் “எத்தனை வசதிகளுடன் வாழ்ந்தாலும், இந்தப் பெண்களுக்கு
மட்டும் ஆசைக்கு குறைவே இல்லை. தன்னைத் தவிர, கணவானாலும், பிள்ளையானாலும் கூட,
வேறு யார் மீதும் அதிக ஆசையோ பாசமோ வைப்பதை எந்தப் பெண்ணும் சகித்துக் கொள்வதும்
இல்லை. என்ன ஜென்மங்களோ” எனவும் நினைத்து
சிரித்துக் கொண்டான்.
ஒரு நாள் காலையில் பிரசன்னா வீட்டு
மனிதர்களுடன் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது, அவனுடைய
தனிக் கைப்பேசியில் அழைப்பு வந்தது.
பேசுபவர் யார் எனத் திரையில் கவனித்தவன் மிகவும் ஆவலுடன் “சொல்லுடா
மகேஷ். நீ அவரைக் கண்டு பிடித்து
விட்டாயா? எப்படி இருக்கிறார். இப்போ
அவருடன் யார்
==5==
இருக்கிறார்கள். நான்
அவரை உடனேயே பார்க்க வேண்டுமே” எனக் கேட்டவனுக்கு பதிலாக மறுமுனையிலிருந்து
“பிரஸன்னா, நான் சாந்தி அம்மாவைப் பார்த்து விட்டுத்தான் உன்னிடம்
பேசுகிறேன். இப்போ அவர்கள் என்னுடந்தான்
இருக்கிறார்கள், நீயே பேசு” எனச்
சொன்னவுடன், உடனடியாக அவசர அவசரமாக அந்த இடத்திலிருந்து தன்னறைக்குள் சென்று
விட்டான். சில நிமிஷ நேரங்கள் சென்றபின், பிரசன்னா வெளியே போகும் நிலையில் வந்து,
கூடத்தில் இருந்த அப்பாவிடம் “அப்பா, நான் இத்தனை நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த
எனக்கு மிகவும் வேண்டியவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டது. நான் இப்பவே போய் அவரைக் கூட்டிக் கொண்டு
வருகிறேன். அம்மா,என்னுடன் வருபவரை
நீங்கள் எல்லருமே மிகவும் ஆவலோடு பார்க்க காத்துக் கொண்டிருப்பது எனக்குத்
தெரியும். அவரை நான் இன்று இங்கு கூட்டிக்
கொண்டு வருகிறேன். வந்தபின் உங்களின் எதிர்பார்ப்பு குறையும்” எனச் சிரித்துக்
கொண்டே சொல்லிவிட்டு, காரில் சென்று விட்டான்
வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவும்
புரியவில்லை. பிரசன்னாவிற்கு அப்படி
மிகவும் வேண்டப்பட்ட அந்த நபர் யாரா இருக்கும்? என. தாயோ, “எனக்குத் தெரியும் அது அவனுக்கு மிகவும்
வேண்டப்பட்ட ஒரு பெண்தான்”எனச் சொன்னதும், அப்பா அவரிடம் “அதை எப்படி சொல்லமுடியும். வேண்டியவர் ஒருஆனாக இருக்கக்கூடாதா” எனவும்
சிரித்துக் கொண்டே கேட்டார். இடையில்
நின்று கொண்டிருந்த பிரசன்னாவின் தங்கை அப்பாவிடம் “அது நிச்சயம் ஒரு
பெண்தான். எங்களுக்குத் தெரியும். இல்லாவிட்டால், அண்ணா, அன்று நமக்கெல்லாம்
காட்டாமல் தனியாக ஒரு பெரிய பரிசுப்
பொட்டலத்தை தனியாக எடுத்துச் செல்வானா?
அதைத்தான் நானும் அம்மாவும் இரகசியமாக அவனுடைய அறைக்குள் சென்று
பார்த்தோமே. அது, ஒரு விலை உயர்ந்த ஊதா
நிற பட்டுப் புடவை” எனவும் குறிப்பிட்டு, தங்களின் துப்பறிந்த விஷயத்தைப் பெருமையுடன்
சொன்னாள்.
அவர்களின்
எதிர்பார்ப்புக்கும் முடிவு வந்தது, கிளம்பிச் சென்ற பிரசன்னா, வெகு சீக்கிரத்தில்
தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் எனச் சொல்லி இருந்தவரை வீட்டிற்குள் அழைத்து
வந்தான். ஆனால், வந்தவருக்கோ,
பிரசன்னாவுடன் இந்த வீட்டிற்குள் நுழைய தயக்கமாக நின்றார். அதைப் பார்த்த பிரசன்னா “என்ன சாந்தம்மா, இந்த
வீடு உங்களுக்குப் புதியதா? ஏன் உள்ளே வரத் தயங்குகிறீர்கள்” எனச் சிரித்துக்
கொண்டே, வந்தவரின் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.
உள்ளே
வந்த சாந்தம்மாவைப் பார்த்தவுடனே எல்லாருக்கும் மிகவும் ஆச்சர்யமாகவும்,
திகைப்பாகவும் இருந்தது. ஆனால், உள்ளே
வந்த சாந்தம்மாவோ, தன்னுடைய எஜமானரையும்,
எஜமானியம்மாவையும் பார்த்து, தயங்கியவாரே “ஐய்யா, அம்மா வணக்கங்க” எனப் பணிவாகச்
சொன்னாள்.
சாந்தம்மாவின்
கைகளைப் பற்றிக் கொண்டிருந்த பிரசன்னா, “சாந்தம்மா, இப்படி உட்காருங்கள்” எனவும்
சொல்லி விட்டு, தன்னறைக்குச் சென்று, தான் வாங்கி வந்த தனிப்
==6==
பரிசான ஊதா நிறப்
பட்டுப் புடவையை அவரின் கைகளில் வைத்தான், ஆசையுடன். பிறகு தன் அம்மவைப் பார்த்து,
“அம்மா, உங்களுக்கேத் தெரியும். நான்
சின்னக் குழந்தையாக இருந்த நாளிலிருந்தே, என்னைப் பாசத்துடனும், ஆசையுடனும்
வளர்த்தவர் இவர்தானே. அப்போ நீங்களும்
உங்களுடைய வேலைக்குப் போய் விடுவீர்கள்.
எனக்கு மூன்று வயதானவுடனேயே, உங்களுக்கு அடுத்ததாக தங்கையும்
பிறந்தாள். அப்போதும், அவர்கள் தானே,
எங்களையெல்லாம் கவனித்துக் கொண்டார்கள்.
அதற்கு நீங்கள் அவர்களுக்கு நிறையத்தான் பணம், வசதி எனக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். உங்களுடைய பணத்தை மட்டும் அவர்
பார்க்கவில்லை. எங்களிடம் உண்மையாகவே, ஒரு
தாயாக இருந்துதான் பாசத்தைக் காட்டினார்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
எங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்ற போதும், உங்களூக்கு பாங்கில் வருட
முடிவில் வேலை அதிகம் இருந்ததால், லீவும் போட முடியாமல் தவித்த போதும், உங்களுக்கு
துனையாக எங்களைப் பார்த்துக் கொண்டதும் இந்த அம்மாதானே. எனக்கு நன்றாக நினைவிருக்கிறதம்மா. இவர்கள் எனக்கும் பாமாவுக்கும், எத்தனைக்
கதைகள் சொல்லி, சாப்பாடு ஊட்டியிருப்பார்கள், நாங்கள் இருவரும் நீங்கள் வரவில்லை
என ஏங்கும் போது, எங்களுக்குக் கதை யெல்லாம் சொல்லி, எங்களின் ஏக்கத்தையும்,
அப்பவும், “பிரசன்னா செல்லம், அம்மாவும் பாங்கில் நிறைய வேலை இருக்கும். வருவதற்கு நேரம்தான் ஆகும். நான் இருக்கிறேனே, நீ அழுதால், உன்னைப் பார்த்து பாமாவும்
அழுகிறாளே. அதனால், நீ அழக்கூடாது”எனச்
சொல்லிச் சொல்லி, என்னையும் தங்கைகளுடன் பாசத்துடன் பழகவும் சொல்லிக் கொடுத்தார்.
எங்களுக்கு எப்பக் கதை சொன்னாலும், அதில் ஊதா நிறத்தில் புடவையோ, பாவாடையோ கட்டிக்
கொண்டு ஒரு தேவதைப் பெண் வருவதாகத்தான் சொல்லுவார்கள். அப்போ நானும் பாமாவும் கேட்போம் “என்ன
சாந்தம்மா, உங்களுக்குன் ஊதா நிறத்தைத்
தவிர வேறு நிறங்களேத் தெரியாதா? எனவும் கேலியாக கேட்டுச் சிரிப்போம். அப்போ அவர் என்னிடம் சொல்லுவார் “அதென்னோவோ
தெரியாதுப்பா, எனக்கு ஊதா நிறம்
மட்டும்தான் மிகவும் பிடிக்கும்” எனவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.
நான்
லண்டனிலிருந்து, இங்கு வரும் போது, உங்களுக்கெல்லாம் நீங்கள் கேட்டபடியே
லண்டனிலேயே வாங்கி வந்து விட்டேன். அங்கு
சாந்தம்மாவுக்கு பிடித்த மாதிரி எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அப்போதே முடிவு செய்து விட்டேன். இந்தியாவில், இறங்கியவுடனேயே, இவர்களுக்கு
ஏதாவது ஒன்று வாங்கிச் செல்ல வேண்டுமென.
அதற்கு வசதியாக,என்னுடைய பிலைட் சென்னையில் இறங்கியவுடனேயே, வெளியே வந்து,
அங்கேயே இருந்த போத்தீஸ் கடைக்குள் சென்று ,சாந்தம்மாவுக்குப் பிடித்த மாதிரி, ஒரு
ஊதா நிறத்தில் பட்டுப் புடவை வாங்கி வந்தேன்.
என்னைப் பொருத்தவரையில், நீங்கள் என்னைப் பெற்ற அம்மா. சாந்தம்மாவோ என்னை வளர்த்த அம்மா. எனக்கு இருவரின் அன்பும், ஆசிகளும்தான்
வேண்டும். அதனால்தான், நானே இவர்கள்
இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து, இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து,
என்னுடைய அன்புப்பரிசை என் கையால் கொடுக்க தீர்மானித்தேன். உங்களிடம் கொடுத்து விட்டு, நீங்கள் இவரைப்
==7==
பார்க்கும்போது
கொடுத்து விடுங்கள் எனவும் சொல்லி விட்டுப் போயிருக்கலாம். அப்படிச் செய்ய எனக்குன் விருப்பமில்லை. எத்தனை நாட்கள், இவர் எனக்கு உடம்பு துடைத்து
விட்டிருப்பார், எத்தனை நாட்கள் நான் சாப்பிடாமல் படுத்தினால், என்னைத் தூக்கிக்
கொண்டு சாதம் ஊட்டி இருப்பார். ஒர் நாள்
கூட, நீ சாப்பிடவிலை என்றால், சரி எனச் சொல்லி, சாப்பாடு கொடுக்காமல் இருக்க
மாட்டாரே. என்னைப் பெற்ற பிள்ளையாகத்தான்
நினைத்துப் பாசத்தையும், பரிவையும் காட்டியிருக்கிறார். அந்தப் பாசத்திற்கு, பரிவுக்கு நான் நன்றி
உள்ளவனாக இருக்க வேண்டாமா? . பெற்றால்தான்
பிள்ளையா என்பது போலத்தானே அம்மா “பெற்றால்தால் அம்மாவா? எனவும் நான் பல நாட்கள்
யோசித்திருப்பேன். லண்டனிலிருந்து
உங்களுடன் எல்லாருடனும் போனில் பேசும் போது, சாந்தம்மாவின் குரலைக் கேட்க
முடியவில்லையே? இவர் எங்கு போனார் எனவும் தெரியாமல் எத்தனை நாட்கள் மனதிற்குள்
வருந்தி இருப்பேன் தெரியுமா?: எனக் கண்களில் நீர் வழிய தன்னுடைய பாசத்தைக்
காட்டினான்.
பிரசன்னாவின்
பேச்சைக் கேட்ட சாந்தம்மாவோ, “என் செல்லமே, உனக்கு என்னிடம் இத்தனைப் பாசமா? நானும், எத்தனையோ வீடுகளில், இப்படி,
அவர்களுடைய குழந்தையைக் கவனிப்பதற்காக வேலையும் செய்து வந்திருக்கிறேன். நான் தூக்கி வளர்த்த குழந்தைகள் எல்லாருமே,
இப்ப எவ்வளவோ படித்து, பெரிய பெரிய பதவியில் வசதியாகவும், வாழ்கிறார்கள். நானும், அப்படி நான் வளர்த்த குழந்தைகளை பல
இடங்களில் சந்தித்து இருக்கிறேன்.
சிலரிடம் வலுவில் சென்று பிரியமாக “என்னம்மா நல்லா இருக்கியா. என்னைத் தெரிகிறதா, உன்னைக் குழந்தையில் உன்
வீட்டிலே இருந்து, கவனித்துக் கொண்ட சாந்தம்மாதான்” எனச் என்னைப் பற்றிச்
சொன்னாலும், தெரியாதது போல் “சின்ன வயதில் நடந்தைப் பற்றி இப்ப எனக்கு
எதுவும் ஞாபகம் இல்லை” எனச் சொல்லி
விட்டு, என்னைப் பார்த்து பேசக் கூட கஷ்டப்பட்டு போயிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தக்
காலத்தில், உன்னைப் போல், கொஞ்ச காலம் வளர்த்தவளை ஞாபகம் வைத்துக் கொண்டு, எனக்காக
ஒரு புடவையையும் வாங்கிக் கொண்டு வந்து, இந்த ஊரிலேயே என்னைத் தேடியும் கூட்டிக்
வந்து, கொடுத்து என்னைச் சந்தோஷப்படுத்திய, உன்னைப் எந்த வார்த்தைச் சொல்லி நான்
பாராட்டுவேன். \இன்று நீ எத்தனை உயரத்தில்
இருக்கிறாயப்பா. எனக்குச் தெரியும் நீ
பெரிய டாக்டர் எனவும், வெளி நாட்டில் வேலை செய்கிறாய் எனவும். எனக்கும் உன்னைப் பார்க்கனும்னு ஆசையாகத்தான்
இருந்த்து. அதே சமயம், இருபத்து ஐந்து
வருடங்களுக்கு முன் உன்னை ஐந்து வருடங்கள் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பாயோ,
அப்படியே இருந்தாலும், என்னைத் தேடி இந்த ஊரில் பல இடங்களில் நீ தேடியதையும்
தெரிந்து, மனம் உன்னைப் பார்க்கவும் துடித்தது.
ஆனால், நான் திடீரென என்ன காரணம் சொல்லி, உன்னைப் பார்க்க இங்கு வர
முடியும். நானோ, ஒரு ஏழை. என்னால் இந்த
விட்டில் எந்த உரிமையில் நுழைய முடியும்” என பலதும் எண்ணி என் மனதைக் கட்டுப்
படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால், இன்று நீ எல்லா தடைகளையும் உடைத்துக் கொண்டு,
என்னைத் தேடி வந்து, என்னைக் கூட்டிக் கொண்டு வந்தாயே, இந்த
==8==
ஒன்றே போருமப்பா, நான்
உன்னைக் கொஞ்ச காலம் தூக்கிக் கொண்டதற்கு..
.என்னிடம் இத்தனை பாசத்தையும்,
பரிவையும் காட்டுகிறாயே. அதற்கு மேலாகவா
இந்தப் புடவைப் பெரியது” எனச் சொல்லி, தன் மனதில் துடித்தப் பாசத்தைக் கட்டுப்
படுத்த முடியாமல், கண்களில் நீர் வழியக், பாசத்துடன் பிரசன்னாவின் கைகளைப்
பிடித்துக் கொண்டாள் சாந்தம்மா.
பாசத்தால் துடித்த சாந்தாம்மாவைப்
பார்த்த வீட்டின் தலைவர் “சரி, சாந்தம்மா, இப்ப எதற்கு இத்தனை
துடிக்கிறீர்கள். நீங்கள்
எங்கிருந்தாலும், அவன் எங்கிருந்தாலும் உங்களுக்குள் ஒரு பாசம் கட்டாயம்
இருக்குமல்லவா. அவனும் உங்களைப் தன்னைப் பெற்றத் தாய்க்குச்
சரியாகத்தான் மதிக்கிறான். நீங்களூம்,
அவனிடம், உங்களுடைய சொந்தப் பிள்ளையைப் போலத்தானே பாசத்தைக் காட்டுகிறீர்கள். பரிவுக்கும், பாசத்துக்கும் எந்தவிதமா உறவோ,
உரிமையோ கிடையாதம்மா. அது, இதயத்தில் வளரும் ஒரு உறவு. உங்களிருவரின் இதயத் துடிப்பு இருக்கும் வரை,
அதுவும் உங்களுடன் வளரும். சரி, இப்ப
சாப்பாட்டுக்கு நேரம் ஆகி விட்டது.
நீங்களூம் எங்களூடனேயே சாப்பிடுங்கள்” எனச் சொல்லிக் கொண்டே, எல்லாரையும்
கூட்டிக் கொண்டு சாப்பிடச் சென்றார்.
எஜமானரின் பேச்;சைக் கேட்ட
சாந்தம்மாவும் “சிரித்துக் கொண்டே,நல்லது ஐயா. வாருங்கள் நானே இன்று உங்கள்
எல்லாருக்கும் பரிமாறுகிறேன். இன்று
அம்மாவும் உங்களுடனே ஒன்றாக அமர்ந்து சாப்பிடட்டும்” எனவும் பழைய உரிமையுடன்
சொல்லிக் கொண்டே, சமையல் அறைக்குள் சென்று, சமைத்தவற்றை வெளியில் எடுத்து வந்தாள்.
சாப்பிட்டு முடிந்த வுடன்,
சாந்தம்மாவிடம் பிரசன்னா கேட்டான் “அம்மா, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள். நான் இன்று நீங்கள் கோவிலில் இருப்பதாக
என்னிடம் மகேஷ் சொன்னவுடன், உங்களைப் பார்க்க கோவிலுக்கு வந்தேன். உங்கள் வீடு எங்கு இருக்கு. இப்ப யாருடன்
இருக்கிறீர்கள்” எனக் கேட்டவுடன், சாந்தம்மா “நான் இப்ப இந்த ஊரில் இருக்கும் ஒரு
முதியோர் இல்லத்தில்தான் இருக்கிறேனப்பா”
எனச் சொன்னாள். அதைக் கேட்டவுடன், பிரசன்னா மிகவும் வருத்தப்பட்டான். அவனைப் பார்த்த அவனுடைய அம்மா “சாந்தம்மா, இனி
நீ எங்கும் போக வேண்டாம். எத்தனையோ
வருஷங்கள் எங்கள் வீட்டில் உழைத்திருக்கிறீர்கள்.
இனியும், நீங்கள் உங்கள் காலம் வரை எங்களுடனேயே இருந்து விடுங்கள். நீங்கள் இங்கேயே எனக்கு உதவியாக இருங்கள்” எனச்
சொல்லி, பிரசன்னாவைப் பார்த்து “என்னப்பா உனக்கு சந்தோஷந்தானே?” எனவும்
கேட்டாள். அதைக் கேட்டவன், அம்மாவின்
கைகளைப் பிடித்துக் கொண்டு “என்ன இருந்தாலும், என் அம்மாவைப் போல யார் இருப்பா”
எனவும் சொல்லி, தன்னுடைய சந்தோஷத்தைக் காண்பித்தான். உறவென சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லை என்ற
நிலையில் முதியோர் இல்லம் தேடிப் ;போன, தனக்கும் பாசமும் பரிவும் காட்ட ஒரு
குடும்பம் இருக்கு என்ற நினைப்பில், சாந்தம்மாவும், மன நிறைவு பெற்றாள்.
No comments:
Post a Comment