Friday, 26 February 2016

எங்கே என் மகன்?......

என் மகன் எங்கே?
(ஜெயரமணி)
       வழக்கம்போல் சுந்திரத்தின் வீட்டில் கூட்டம் அதிகமிருந்தது.  அவன் அந்த ஊரிலேயே தன் முயற்சியால் முன்னுக்கு வந்து, இப்ப ஒரு அரசியல் கட்சியில் தன்னை இனைத்துக் கொண்டவன். கூடியசீக்கிரம் எம். எல்.ஏ. பதவிக்கும் வருவான் என பரவலாக செய்தியும் இருந்தது. சின்னவயதிலிருந்தே யாருக்கு என்ன தேவையென்றாலும், தயங்காது தன்னால் முடிந்த வரையில் உதவுவான்.  தன்னிடம் கேட்கும் முன்பே ஓடிச் செல்வான். சின்னவயதில் இருந்த அதே குணம் இப்பவும் உண்டு.  ஆனால், அதில் சேவை எங்கிற எண்ணம் மறைந்து, விளம்பரம், புகழ் போதை ஏறியிருந்தது. இது அவனுடைய தாயாரின் மனதை மிகவும் துன்பப்படுத்தியது.
       அன்று காலையில்கூட, அந்த ஊரில் இருக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பிரசவ வலிகண்டு, மருத்துவமனைக்குப் போக வசதியின்றி தவித்துக் கொண்டிருப்பதாகவும் அவனிடம் உதவி  வேண்டியும் வந்திருக்கிறார் ஒரு வயதான மாது. சுந்திரத்திடம் ஒரு அவசரவசதி மருத்துவ வண்டி இருக்கு. அதைக் கேட்டுத்தான் அந்த பெண்மணி வந்திருக்கிறார்.அன்று பார்த்து, அவன் அதே ஊர்தியை வேறு ஊரில் தன்னுடைய கட்சியால் நடத்தப்படும் ஒரு இலவச மருத்துவ முகாமிற்கு அனுப்ப உத்தேசித்திருந்தான்.  இன்றுவரை அவனிடம் யாரும் அந்த ஊர்தியைக் கேட்கவில்லை. தன்னுடைய பெயரும் அந்த நிகழ்ச்சியில் பெரியதாகப் பேசப்பட வேண்டும் எங்கிற ஒரே எண்ணத்தில்தான் அவன் இருந்தான். அதனால் அவன் அந்தப் பெண்ணிடம் கொஞ்சம் பணம் கொடுத்து,
அம்மா,  நீங்கள் உடனேயே வேறு ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டு செல்லுங்கள். நான் இப்ப என்னுடைய வண்டியுடன், அவசரமாக வெளியேச் செல்ல வேண்டும்” எனச் சொன்னவனிடம் “தம்பி, நான் என்ன உனக்கு புதியவளா? நீ சின்னக்குழந்தையிலிருந்தே என்னிடம் பாசமாக இருந்தவந்தானே. என்னுடைய பெண்ணிற்கு பிரசவவலி  கண்டிருக்கு, நான் எப்படியும் இருபது கிலோதூரத்தில் இருக்கும் ஆசுபத்திரிக்குத்தானே செல்லவேண்டும். காராக இருந்தால், சீக்கிரம் போகமுடியும். நம்மூரில் குதிரை வண்டிகூட இல்லையே, மாட்டு வண்டியில்தானே கூட்டிக் கொண்டு போக முடியும், வழியில் ஏதாவது ஆகி, என் பெண்ணின் உயிருக்கு ஆபத்தாகிவிட்டால் நான் என்ன செய்வேன்” எனக் கதறி அழுதாள்.
       “பாரும்மா, நான் சின்ன வயதில் இருந்தபோது இருந்தமாதிரியே இப்பவும் இருக்க முடியுமா? நான் வளர வேண்டாமா? நான் இப்ப ஒரு அரசியல் கட்சியில் இனைந்துள்ளேன். இன்று எனக்கு கட்சி விழா இருக்கு. அங்கு இந்த வண்டிக்கு வேலை இருக்கு. என்னால் இன்று உனக்கு வண்டி தரமுடியாது. அதனாலென்ன, பணம் தருகிறேனே? எடுத்துக் கொண்டு, என்னைத் தொந்திரவு பண்ணாமல் போங்கள்” எனச் சொல்லி விட்டு, மிகவும் வேகமாக கிளம்பி விட்டான். வயதான பெண்மணியோ என்ன செய்வது எனத் தயங்கி, கண்களில் நீர் வழிய நின்றாள்  அழுதுகொண்டு இருக்கும் அஞ்சலையைப் பார்த்த ஒரு வேலைக்காரி “அம்மா, நாமெல்லாம் ஏழை சாதி. நமக்கு உதவ யாருமில்லை. இங்கிருந்து என்ன
                                  ==2==
செய்யப்போகிறாய்.  சீக்கிரம் வீட்டிற்குப் போய், வேறு ஏதாவது வழியில் உன் பெண்ணை `ஆசுபத்திரிக்குக் கூட்டிண்டுபோ”எனச் சொல்லி, அனுப்பிவைத்தாள்..                                    வீட்டிற்கு வந்து, மார்க்கெட்டில் நின்றிருந்த ஒருமாட்டு வண்டி பிடித்து, தன்னுடைய மகளை ஏற்றிச் சென்றாள். அவளுடன் அக்கம் பக்கத்தவர்கள் துணையுடன் சென்றாள்.  ஆனால், அவளுடைய வண்டியின் வேகத்தைவிட, விதியின் வேகம் அதிகமானதே. வழியிலேயே, அந்தப் பெண் மரணமடைந்தாள்.  வயிற்றிலேயே குழந்தை அதிக நீரைக் குடித்து மரணமடைந்த விபரம் தெரியாமல், அவர்கள் நேரம் கடத்தியதால், தாயும் மரணமடைந்தாள். தன்னுடைய பெண்ணைக் காப்பாற்ற முடியாமல், அவளுடைய மரணத்திற்கு தன்னுடைய ஏழ்மையேக் காரணம் எனப் புரிந்த தாய், கதறுவதைத் தவிர வேறு வழியில்லை.
              சுந்திரத்தின் தாயார் சாவித்திரியம்மா, தன்னுடைய கிராமத்தில் அறுவடைக்காகச் சென்றவள், திரும்பி வந்தவுடன், தன்னுடைய வேலைக்காரர்கள் முகத்தில் ஒரு வருத்தம் தெரிவதைப் பார்த்தாள்.  அவள் நினைத்தால், சாருலதா அவர்களை மிகவும் விரட்டி வேலை வாங்கியிருப்பாள் என.  அவளுடைய குணம் எல்லாரையும் தன் மக்களாக நினைத்து அரவனைத்துப் போவது, அந்தக் குணம் சாருவிடம் இல்லை. பணக்கார, அரசியல்வாதியின் வாரிசு. அந்த அகம்பாவம், ஆணவம் அப்படியே இருக்கு.  சுந்தரத்தின் சாமர்த்தியத்தை புரிந்தவர், அவனுக்குப் பெண்ணைக் கொடுத்து, அவனையே தன்னுடைய அரசியல் வாரிசாக வளர்த்துக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரமும் அவருடைய பாதையிலேயே உலகத்தையும், மக்களையும் பார்க்கத் தொடங்கிவிட்டான். இதைப் புரிந்த சாவித்திரி சிலசமயம் அவனிடம் “சுந்தரம், உன்னுடைய இயற்கையான குணத்தை நீ விடக்கூடாது.  இன்று நம் ஊர்மக்களிடைய உன் பேரில் ஒரு அன்பும், பாசமும், பரிவும், மரியாதையும், நீ அவர்களுக்கு சாதகமானவன், உறவுடன் உதவுபவன் எனத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்போ, நீ கடந்த காலத்தை மறந்து ஏதோ பெரிய பதவி வருமென நினைத்து, உன்னை மாற்றிக் கொண்டிருக்கிறாய். உன் பணத்தாலோ, பதவியாலோ, அல்லது உன் மாமனாரின் செல்வாக்காலோ உன் வருங்காலம் நிலைக்காது.  உன்னுடைய உண்மையான குணங்களான மற்றவர்களின் துன்பம் கண்டவுடன் ஓடிச்சென்று அவர்களின் கண்ணீரைத் துடைத்ததால்தான், உனக்கு இன்று இந்த வாழ்வு வந்தது.  நீ மந்திரியாவதைவிட, எனக்கு என் மகன் ஒரு நல்ல குடிமகனாக, தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கைக்குத் துனையாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.” எனச் சொன்னபோது, அங்கு வந்த சாருலதா “அப்படி இருந்த உங்களின் பிள்ளைக்கு என்ன வாழ்வு கிடைத்தது.  இப்பத்தான், அவர் தன்னுடைய வளர்ச்சியைப் பற்றி நினைத்து, என் தகப்பனாரிடம் சேர்ந்து இருக்கிறார். உங்களுக்கு உங்களிடம் இருக்கும் கொஞ்சம் சொத்து போரும்.  எங்களுக்கு அது போராது. அவர் இன்னும் நிறைய சொத்து சேர்க்கவேண்டும், அதற்கு அரசியலை விட்டால், வேறு வழியில்லை. அவருக்கும் ஒரு குடும்பம் ஆயிடுத்து.  இனிமேலும், அவரை ஒரு குழந்தைபோல் நினைத்து புத்திமதி என தேவையில்லாமல் பழைய கதையைச் சொல்லி,

                                         ==3==
அவரை மாற்றவேண்டாம் “என முகத்தில் அடித்தமாறி சொல்லிவிட்டாள். அதன்பின், சாவித்திரி எந்த விஷயத்திலும் தலையிடுவது இல்லை. ஒதுங்கி விட்டாள்.
              ஊரிலிருந்து வந்தவள், “மாரி, அஞ்சலையின் பெண்ணுக்கு குழந்தை பிறந்து விட்டதா? என்ன குழந்தை?” எனக் கேட்டவுடன், மாரி அவளிடம் “அந்தக் கொடுமையை ஏனம்மா கேட்கிறீர்கள்.  அஞ்சலை ஒரு நாள் வந்து நம்ம ஐய்யாவிடம், தன் பெண்ணுக்கு பிரசவ வலி வந்து துடிக்கிறாள் சுகப்பிரசவத்திற்கு வழியில்லைபோல் இருக்கு. ஆசுபத்திரிக்கு கொண்டு போகவேண்டும் எனச் சொல்லி, அழுது கொண்டே, ஐய்யாவுடைய ஆம்புலன்ஸைக் கேட்டதற்கு அவர் “இன்று என்னுடைய வண்டிக்கு வேறு வேலை இருக்கு. நான் உனக்கு கொடுக்க முடியாது, கொஞ்சம் பணம் தருகிறேன், வேறு ஏதாவதுஏற்பாடு பண்ணிக்கோ” எனத் திட்டமாகச் சொல்லியும், அஞ்சலை அவரின் காலில் விழிந்து “தம்பி, உன்னைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியுமே? என் புருஷன் அடிபட்டபோது எப்படித் துடித்துக் கொண்டு வந்து, உதவினாய்.  அன்றிலிருந்து நீங்கள்தானே ஏனக்குத் துனையாக இருக்கு. இப்பவந்து, என்னைக் கைவிட்டால், நான் என்ன செய்வேன்? எனக்கு இருப்பது ஒரே பெண் தம்பி. அவளைக் காப்பாற்று” எனவும் கதறினாள். அப்ப அங்கு வந்த சின்னம்மா “என்னயிது காலைவேளையில் வந்த சனியன்.  இதற்கெல்லாம் செய்யத்தான் அத்தனை பணம் கொடுத்து ஆம்புலன்ஸ் வாங்கினீர்களா?  ஏனம்மா, வண்டி கேட்கிறாயே, அதற்கு வாடகை, பெட்ரோல், டிரைவர் கூலி எனக் கொடுக்க உன்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்காச் சொல், இப்பவே தரச் சொல்லுகிறேன்.  இது ஒன்றும் சத்திரமல்லை, உங்களைப்போல் அன்றாடங்காய்ச்சிகளுக்கு அள்ளிக்கொடுக்க. போய் வேலயைப் பார். காலங்காத்தாலே வந்து விட்டாள் மூக்கைச்சிந்திக் கொண்டு” எனச் சொல்லி, சுந்தரத்தை வெளியே அனுப்பி விட்டாள். அப்படியும் அஞ்சலை வேறு ஏதாவது வழியில் சாருலதா உதவுவாள் என எதிர்பார்த்தாள் போல் நின்றிருந்தாள். அப்ப, வெளியேச் செல்லக் தன்னுடைய காரை எடுக்கச் சொன்னபோதும், அஞ்சலை அவரிடம் அம்மா, நீங்கள் போகும்போது என்னுடைய பெண்ணை வழியில் ஆசுபத்திரியில் இறக்கி விடுங்கம்மா, உங்களுக்கு புண்ணியமாகும். நீங்களும் ஒரு பெண்தானே, பெண்ணுக்கு பிரசவம் எத்தனை வலியானது எனத் தெரியுமே?” எனக் செஞ்சினாள். அதைக் கேட்டவுடன், சின்னம்மாவுக்கு அதிகக் கோபம் வந்து, அந்தக் கோபத்தை வாட்ஸ்மேனிடம் காட்டி, “உனக்கு எதுக்கு சம்பளம் தரோம்.  கண்டகண்ட நாய்களை உள்ளே விடவா? இன்றுடன் உன் வேலை முடிந்தது. வீட்டிற்குப் போய்விடு” எனச் சொல்லி விட்டு, வேகமாகக் காரில் ஏறிப் போய்விட்டார். பிறகுதான், அஞ்சலை அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றாள்.  பிறகுதான், வேறு வண்டி பிடித்து பெண்ணை ஆசுபத்திரிக்கு கூட்டிக் கொண்டு போகும்போதே, அந்தப் பெண் செத்து விட்டாள்.  பாவம், ஏழைங்களுக்கு என்ன இருக்கு இந்த உலகில்” எனச் சொல்லி, நடந்து போன விஷயத்தை வருத்தத்துடன் சொல்லிச் சென்றான்.
              விஷயங்களைக் கேட்ட சாவித்திரியின் இதயம் இடியால் தாக்குண்டதுபோல் துடித்தது.  அவளின் கண்முன் சுந்தரம் சின்ன வயதில், தன்னுடைய பரிட்சைக்குப் படிக்காமல் கூட, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் எந்த ஒரு சின்ன உதவிக்கும் ஓடோடிச் செல்வான்.
                                  ==4==
சிலசமயம் அவன் திரும்பி வரும்போது, வீட்டில் அவனுடைய அப்பா இருந்தால், அன்று அவனுக்கு கட்டாயம் அர்ச்சனை மட்டுமல்ல, தடியடியும் கிடைக்கும்  அப்போதும் அவன் தன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.  “ஏனடா, இப்படி அப்பாவிற்கு கோபம் வரும்படி செய்கிறாய்.  உன்னுடைய பரிட்சை முடியுமட்டும், நீ சும்மா இருக்கக்கூடாதா?” என பரிவாக அம்மா கேட்டால் “ஏனம்மா, கஷ்டம் படுபவர்களுக்கு உடனே உதவாமல், என்னுடைய பரிட்சை முடிந்து வருகிறேன் எனச்  சொல்வது பாவமல்லவா?  அவர்களுக்கு உடனடிடாக ஏதாவது உதவி கிடைத்தால்தானே அம்மா, அவர்களுடைய துன்பம் தீரும். நம்மால், முழுவதும் தீர்க்க முடியாவிட்டாலும், உடனடியாக ஏதாவது கொஞ்சமாவது செய்தால்தானே மனிதனாக ;பிறந்ததற்கு பலன்.  பரிட்சையில் பாசாகிவிடுவேன்.  முதல் மார்க் இல்லையென்றால் என்ன? முதல் மார்க் எடுத்தால் மட்டும் என்ன செய்யப் போகிறேன் நேற்கொண்டு அடுத்த வகுப்புக்குத்தானே போகனும். அதுவும் இப்ப இருக்கே.  அப்பாதானே அடித்தார். அதனால் என்ன. அவர் அடித்ததை விட, நான் ஓடிச் சென்று உதவியவர்களின் சந்தோஷமும், திருப்தியும்தான் எனக்கு பெரியதாக இருக்கு. நீ கவலைப்படாதே, நான் பெரியவனான பின்னும், என்னால் முடிந்ததை என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குச் செய்து கொண்டுதான் இருப்பேன்,  நான் உனக்கு மட்டும் பிள்ளையில்லை.  இந்த ஊருக்கேப் பிள்ளை” எனவும் பெருமையாகச் சொல்லிச் செல்வான்.  அவனின் பேச்சைக் கேட்ட சாவித்திரிக்கு, தன்னுடைய கணவரின் கோபமோ, வருத்தமோ பெரியதாகத் தெரியாது. மனதிற்குள் சந்தோஷப்படுவாள். அப்படிப்பட்ட பிள்ளையை இன்று பட்டம், பதவி, புகழ், ஆட்சியில் இடம், பெருமை எனப் பலபேய்கள் பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதையும் நினைத்து, இரவு முழுவதும் தூங்காமல் மனதிற்குள் இரத்தக்கண்ணீர் வடித்தாள்.
              ஏற்கெனவே இரத்த அழுத்தமும், இருதய பலகீனமும் உள்ள, சாவித்திரிக்கு தன்னுடைய மகனின் நிராகரிப்பால், ஒரு பெண் மரணம் அடைந்ததை எண்ணி, எண்ணி, துடித்ததால், காலையில் அவளால் எழுந்திருக்க முடியவில்லை.  மயக்கத்தில் வீழ்ந்து விட்டாள்.
              காலையில் சீக்கிரமே எழுந்திருக்கும் வழக்கமுடைய தாயார், எழுந்து வராததைக் கண்ட, சுந்திரம் அம்மாவின் படுக்கையறைக்குப்போய் பார்த்தான்.  அங்கு அம்மா, அசையாமல், படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், திகைத்தான்.  உடனடியாக, அம்மாவின் நாடியைப் பிடித்துப் பார்த்து, நாடியின் துடிப்பு மிகவும் மெதுவாக இருப்பதைப் பார்த்தவுடனேயே, தாயாரைச் சீக்கிரம் டாக்டரிடம் அழைத்துச் சென்றான்.  தனியார் மருத்துவமனையில் அம்மாவைச் சேர்க்கச் சொல்லி, டாக்டரும் உடனடியாக சாவித்திரிக்கு சிகிச்சை ஆரம்பித்தான்.  ஆனால், அவரின் நினைவு திரும்பவில்லை.  அடிக்கடி, என் மகனைக் காணோம்.  எங்கேயோ போய்விட்டான்.  சுந்தரா, நீ எங்கே காணாமற்போய்விட்டாய்? எனவும் மிகவும் மெல்லிய குரலில் அரற்றிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்ட சுந்தரம் திகைத்தான்.  திடீரென அம்மாவிற்கு என்னவாச்சு.  ஏன் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் இருக்கிறாள்?
                                  ==5==
தாயின் அருகில் சென்று, கண்களில் நீர் வழிய “அம்மா, என்னைப் பாரும்மா.நான் உன்னுடந்தான் இருக்கிறேன். எங்கேயும் போகவில்லை” எனச் சொல்லிக் கொண்டே, தாயின் முகத்தைத் திருப்பினான்.  மெதுவாக கண்களைத் திறந்த அம்மா, சுந்தரத்தை சில வினாடிகள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளின் கண்களில் ஒரு வருத்தமும் வேதனையும் படர்ந்தன. மௌனமகவே கைகளால் செய்கை செய்தாள் “நீ என் மகன் அல்ல. என் மகன் எங்கே?” என்னும்படியாக, மகனின் கைகளைத் தட்டி விட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டு, கண்களில் நீர் வழிய இருந்தாள்.  அம்மாவின் சைகைகளின் அர்த்தம் புரியாமல், சந்தரமும் கலங்கினான்.  ஊரிலிருந்து வந்தவுடன், அம்மாவிற்கு என்னவாயிற்று.  அவளின் மனம் நோகும்படி யார் என்ன சொன்னார்கள்? எனத் தெரியாமல் தவித்தான்.  ஆயினும் ஏதோ ஒன்று அவனுள் சொல்லியது.  தன்னுடைய எந்த ஒரு செயலோ அம்மாவின் மனதை வருத்தியிருக்கு என, அது என்னவாயிருக்கும் எனவும் யோசித்தான், ஒன்றும் புலப்படவில்லை.தன் மனதில் உள்ளதை மகனிடம் எடுத்துச் சொல்லச் சக்தியற்ற அம்மா, மகனின் முகத்தைப் பார்த்தவாரே இருந்தார். 
              அப்போது அஞ்சலை, சாவித்திரியம்மாவின் உடல் நிலையைக் கேள்விப்பட்டு, துடிப்புடன் அவரைப் பார்க்க ஆசுபத்திரிக்கு வந்தாள்.  வந்தவளைக் கண்ட சாவித்திரியம்மாவும் அவளிடம் தன் கண்களாலே அவளின் துக்கத்தில் பங்கு கொண்டாள். மெதுவாக அஞ்சலையின் கைகளைப் பற்றிக் கொண்டு, “அஞ்சலை, உன் இழப்பிற்கு என் மகன் காரணமாகியது என்னால் தாங்க முடியவில்லை. அவனை மன்னித்து விடு” எனச் சொல்லி, தன்னுடைய வேதனையை வெளிக்காட்டினாள்.  அப்போதுதான் சுந்தரத்திற்குப் புரிந்தது அம்மாவின் மனதில் ஏற்பட்ட வேதனைக்கு யார் காரணம் என.  ஆனாலும், அவனுள் இருக்கும் ஆசை, அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுத்தது.  மகனின் முகத்தைப் பார்த்தே அவனின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட, சாவித்திரி ஏமாற்றத்துடனும், வேதனையுடனும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.  பிறகு பிள்ளையின் பக்கம் திரும்பவில்லை.  சிறிது நேரம் நின்று விட்டு, அஞ்சலை சாவித்திரியின் பாதங்களைப் பற்றி, கண்களில் ஒற்றிக் கொண்டு சென்று விட்டாள்.

              மறுனாள் விடியும்போது, சாவித்திரியின் உடல்தான் இருந்தது.  அவளுடைய ஆத்மா, அன்புக்கும், பாசத்துக்கும் ஆட்பட்ட, தன்னுடைய இளவயது சுந்தரத்தை தேடி, அலைந்து கொண்டிருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.  காணாமல் போன மகனை எங்கு தேடுமோ அவளின் ஆத்மா? 

No comments:

Post a Comment