Monday, 10 June 2013

வேர்ப்பலா

 

(ஜெயரமணி)

வேர்ப்பலா

(ஜெயரமணி)

தன் படுக்கையில் படுத்திருந்த மகேஸ்வரன், தன் படுக்கையின் வலது பக்கத்தில் இருந்த மணியின் ஓசையைக் கேட்டு எழுந்தார். தன்னுடைய தூக்கம் கலைந்ததில் அவருக்குச் சிறிது கோபமும் உண்டாயிற்று. ஆனால், யார் வந்து காலை நேரத்தில் வாசலில் மணியை அடித்து விட்டு காத்திருப்பது எனப் பார்க்க வாசற் கதவைத் திறந்தார். அவருக்குப் பார்வையின் திறன் குறைந்திருப்பதால், தன்னுடைய படுக்கை அறையை விட்டு வந்து கதவைத் திறக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியது. வாசலில் ஒரு சிறு பையன் கைகளில் ஒரு பிளாஸ்டிக் பையில் கொஞ்சம் பூக்கள், வாழைப்பழம் வைத்துக் கொண்டு நின்று இருந்தான். வழக்கம்போல் வீட்டிற்கு பூ, பழம் என வேண்டுவதைச் கொண்டு வந்து கொடுக்கும் பையந்தான். “ஏனடா, இன்று காலையிலேயே வந்து என்னை எழுப்புகிறாய்? கொஞ்சம் நேரம் கழித்துத்தான் வந்தால் என்ன? “ என தன்னுடைய கோபத்தை அவனிடம் கொஞ்சம் காட்டினார். பையன் ஒன்றும் மகேஸ்வரனின் கோபத்தைக் கண்டு பயப்படவில்லை. “தாத்தா, பாட்டிதான் என்னிடம் நேற்றே சொன்னார்கள் இன்று காலையிலேயே சீக்கிரம் வந்து பூஜைக்கு வேண்டிவற்றை கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார்கள். இன்று உங்கள் வீட்டில் ஏதோ விஷேசமான நாளாம், பூஜை செய்ய வேண்டுமென்றார்கள். அதனால்தான் நான் காலையிலேயே வந்து உங்களைச் தொந்திரவு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என பவ்யமான குரலில் சொல்லிச் சென்று விட்டான். அவன் சென்றபிந்தான், மகேஸ்வரனின் நினைவுக்கு வந்தது அன்று என்ன விஷேசம் என. அவருடைய கோபமும் நொடியில் மறைந்து போனது.

கைகளில் பையன் கொடுத்த பூ, பழங்களைக் கொண்டு போய் சுவாமி அறையில் வைத்து விட்டு, தன்னுடைய மனைவி ஜானு எங்கே எனப் பார்க்கலானார். சமையல் கட்டில், அவள் இருப்பதற்கு அடையாளமாக, ஒரு கேசட்டில் அம்மனின் ஸ்லோகங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அதுவும் கொஞ்சமல்ல. அதிகமான சப்தத்தில்தான் பாடிக் கொண்டிருந்தது. தான் வந்திருப்பதை ஜானுவுக்கு உணர்த்த, மகேஸ்வரன், பாடிக் கொண்டிருந்த கேசட்டை நிறுத்தினார். அப்போதும் ஜானு திரும்பிப் பார்க்க வில்லை. பாவம் அவளால் முடியாது. அவளுக்குக் காது கேட்கும் திறன் கொஞ்சம் மந்தமாகி விட்டது. அதுவும் அவளின் வலது காது பக்கம் நெருங்கிச் சென்று பேசினால் மட்டுமே அவளால் கேட்க முடியும். குறிப்பாக அவளின் குறையைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒரு சிலரால் மட்டுமே அவளுடன் சம்பாஷிக்க முடியும். அவளால் கேட்க முடியும்படியே, அவள் தன்னுடைய கேசட்டை தனது வலது காது பக்கமே வைத்துக் கொள்வாள். அன்றும் ஆவள் அப்படித்தான் வைத்து தினப்படி தான் சொல்லும் ஸ்லொகங்களையெல்லாம் பாட விட்டாள். அவளும் தன் வாய்விட்டு, தினப்படி சொல்லும் ஸ்வாமி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளுக்குக் காதுதான், குறைபட்டதே தவிர, மற்ற திறமைகளில் ஒன்றும் குறைவில்லை. காதுக்கு இதமான சுநாதமான சாரீரம். நல்ல சீட்சையின் காரணமாக, இராகங்களின் இனிமை மாறாது பாடுவது அவளுக்கே இருக்கும் இயற்கையான வரம். மனைவியின் இனிமையான குரலைக் கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்த மகேஸ்வரன் அவளின் கவனம் கலையாதவாறு அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தார். அவளின் கவனம் கலையாதபடி, கேசட்டை நிறுத்தினார். தன்னுடைய சுபாவப்படியே, அவளின் மனம் தன்பாட்டில் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே, கைகள் சுபாவமாக வேலையில் ஈடு பட்டு, பரபரவென்று சமையலறையில் வேலைகளை முடித்துக் கொண்ட ஜானு அலமாரியில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். கணவர் எழுந்திருக்கும் நேரம் வந்ததை உணர்ந்து, அவரை எழுப்ப சமையலறையை விட்டு, வெளியே திரும்பினாள். அப்போதுதான், தன் அருகில், மௌனமாக சேரில் இருந்த மகேஸ்வரனைப் பார்த்தாள். அவரைப் பார்த்தவுடனேயே, அவளுடைய முகத்தில் ஒரு சிரிப்பும் சந்தோஷமும் கூடியது. கணவரைப் பார்த்து, “நீங்கள் எப்போது வந்தீர்கள். பல் தேய்த்து விட்டீர்களா?” எனக் கேட்டபடியே அவருக்கும் தனக்கும் சூடாக் காப்பி தயாரிக்கலானாள். எப்பவுமே மகேஸ்வரன் காப்பியை மிகமிகச் சூடாகத்தான் குடிப்பார். அதனால், ஜானு அவர் எழுந்த பிந்தான், பாலைச் சூடு பன்னி, காப்பி கலப்பாள். மகேஸ்வரன் ஜானு அவசரம் வேண்டாம். நான் இன்னும் இன்று பல் துலக்கவே யில்லை” என்றார். அப்போதுதான் வழக்கம்போல் தான் போய்த்தான் கணவனை தினமும் எழுப்புவாள். அன்று ஏன் அவராகவே எழுந்து வந்தார் எனப் புரியாமல் அவரைப் பார்த்தாள். அவரும் சிரித்துக் கொண்டே, வாயால் எந்த பதிலும் சொல்லாமல், கண்களால் அங்கே தான் கொண்டு வந்து வைத்த பூ, பழங்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையைக் காண்பித்தார். பையைப் பார்த்தவுடனே புரிந்து கொண்டாள், அவரின் தூக்கத்தை யார் கலைத்தது என. “பையன் வந்தானா? பெல்லை அடித்துத்தான் உங்களை எழுப்பினானா? பெல் சத்த்த்தை நான் கவனிக்க வில்லையே? எனச் சொல்லவளிடம் “எப்படி உனக்குக் கேட்கும். நீதான் இந்த ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் கேட்கும்படி உன் அம்மனின் ஸ்லோக கேசட்டை ஓட விட்டிருக்கிறாயே. சப்தமே இல்லையென்றாலும் உன்னால் வாசல் மணியின் ஓசையைக் கேட்க முடியாது. அப்படியிருக்க இத்தனை சப்தத்தில் அது எப்படி கேட்கும். மணியின் ஓசையைக் கேட்டு நாந்தான் எழுந்து கதவைத் திறந்தேன்” எனச் சொல்லிக் கொண்டே ஜானுவின் அருகில் சென்று “ஆமாம் இன்று என்ன விஷேசம். சீக்கிரமாகவே பூஜைக்கு எல்லாம் வேண்டுமென்று பையனிடம் நேற்றேயேச் சொல்லிவிட்டாய்? என தனக்கு ஒன்றும் தெரியாதது போல அவளிடம் கேட்டார். அவருடைய குரலில் இருந்த குறும்புத்தனத்தை, அவரின் கண்களைப் பார்த்து எல்லாம் புரிந்து கொண்ட ஜானு தானும் அவருக்கு சரியாக பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்தாள். அதனால் “என்னமோ தெரியவில்லை. என் கனவில் வந்து ஒருவர் சொன்னார் “ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ஒரு அறியாத பெண்ணை அவளின் தகப்பனாரிடமே கேட்டு தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்த நாள்தான் என்று” சிரித்தபடியேச் சொல்லி விட்டுச்சென்றாள். தன்னைத் தாண்டிச் செல்ல வந்தவளைத் தன் கைகளால் தடுத்து நிறுத்தியவர் அவளின் வலது காது பக்கம் திரும்பி நின்று கொண்டு, ”ஜானு, உன்னுடைய அப்பாதான் எங்களிடம் வந்து, “மகேஸ்வரா நீ தான் பெரிய மனசு பண்ணி, என்னுடைய பெண்ணை ஏற்றுக் கொள். தாயில்லாப் பெண், அதுமட்டுமல்லாது சிறு வயதில் கண்ட விஷ ஜுரத்தால், காதின் கேட்கும் திறமையும் குறைபட்ட பெண். வேறு புதியவர்கள் வீட்டிற்கு வாக்கப்பட்டுப் போனால், அவளின் குறையால் அவளைத் துன்புறுத்தினால் என்னால் தாங்க முடியாது. உனக்கும் என் அக்காவிற்கும்தான் அவளின் குறை என்ன என்று சிறு வயதிலிருந்தே தெரிந்திருப்பதால், நீங்கள் அவளைக் கண் கலங்காது வைத்துக் கொள்வீர்களென்று எனக்கும் தெரியும். எனக்கு வயதாகியதால், அவளுக்குச் சீக்கிரமே கலியாணம் செய்து விடுகிறேன்” என மிகவும் கெஞ்சினார். என்னுடைய அம்மாவும் தன்னுடைய சகோதரனுக்கு வயதான ஒரு பெண் இருப்பதால், அவளுடைய கலியாணத்தை தாங்களும் சேர்ந்து முடிக்க வேண்டுமென்று இருந்தார்கள். நானும் என்னுடைய மாமா பெண்ணை நம்மை விட்டால் வேறு யார் வந்து கலியாணம் செய்து கொள்வார்களென்றுதான், சம்மதித்தேன்” எனப் பரிகாசமாகச் சொன்னார். அதைக் கேட்ட ஜானகியும் “ஆமாம்மாம், உங்களுடைய தாராளமான மனது எங்களுக்குச் தெரியாதா? உங்கள் தகப்பனாரின் முன் கோபத்தால், உங்களுடைய குடும்பத்தினரிடம் நெருங்க யாருக்கும் தைரியமில்லை. அதனால், உங்களுக்கும் வயதாகியதே தவிர, உங்களுக்குப் பெண் கொடுக்க யாரும் தயாரில்லை. உங்களின் அப்பா காலம் ஆன பின், என்னுடைய அத்தைதான் தன் சகோதரனிடம் வந்து “நீ யே உன் பெண்ணை என் பிள்ளைக்குக் கொடுக்க வில்லையென்றால், தனியான தன்னால் உங்களுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்ய முடியுமா? என்றெல்லாம் பலப்பல பேசி எனப்பாவை சம்மதிக்கச் செய்தது எனக்குச் தெரியாதென்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.” ஜானுவின் கேலிப் பேச்சைக் கேட்ட மகேஸ்வரனும் விடாது, “அப்படி என்ன நான் செல்லாக் காசாகவா இருந்தேன். நானும் டிகிரி படிப்புப் படித்து விட்டு, நல்ல பொறுப்பான வேலையில்தான் இருந்தேன். என்னுடைய அந்தஸ்த்துக்கும், நல்ல குணத்துக்கும் எனக்கும் எத்தனையோ இடங்களிலிருந்து பணக்காரப் பெண்கள், ஏன் படித்தவர்கள் கூட என்னைக் கலியாணம் செய்து கொள்ளத் தயாராகத்தானிருந்தார்கள். எங்கே நான் அவர்களில் ஒருவரைப் பார்த்து பிடித்துப் போய் திருமணம் செய்ய முடிவு செய்து விடுவேனென்ற பயத்தில் நீ தானே என்னிடம் வந்து என்னை விட்டு நீங்கள் வேறு யாரையும் மணக்கச் சம்மதித்தால், நான் அந்த நிமிஷமே விஷம் குடித்து உயிரை விட்டுவிடுவேன்: என மிகவும் கெஞ்சினாய். மறந்துவிட்டாயா? எனச் சீண்டினார். பதிலுக்கு ஜானகியும் “ஏன் நீங்கள் என்னிடம் தனியாக வந்து சொன்னதை மறந்து விட்டீர்களா? ஜானு, அம்மா பணத்திற்கு ஆசைபட்டு, ஒரு பணக்காரப்பெண்ணை நிச்சயம் செய்து விட்டால், என்னுடைய வாழ்க்கை ஒரு பாலைவனமாகி விடும். என்னதான் டிகிரி வாங்கியிருந்தாலும், வரும் பெண்ணும் எனக்குச் சரியாக படித்து இருந்தால், என்னை மதிப்பாளா, மாட்டாளே. என்னிடம் பணம் இல்லையென்பதால், அவர்கள் வீட்டிலும் எனக்குச் சரியான மரியாதை கிடைக்காதே. அதனால் நீ தான் எப்படியாவது உன் அப்பாவிடம் சொல்லி, நம்முடைய கலியாணத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும்”என என்னிடம் வந்து அழாத குறையாக நின்றது எனக்கு இன்னும் கண்” முன்னாலே யிருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் நான் மசியவில்லை. ஏன் தெரியுமா, என்னை உண்மையிலேயே விரும்பாது, தன்னுடைய சவுகரியங்களுக்காக என்னை நீங்கள் மணக்க முடிவு செய்தது எனக்குப் படிக்க வில்லை.” அதற்கு மகேஸ்வரன் ஜானுவிடம் நெருங்கி நின்று, அவளின் காதில் மெதுவாக “ஏன் ஜானு, உனக்குத் தெரியாதா நான் உன் மீது சின்ன வயதிலிருந்தே எத்தனைப் பித்தாக இருந்தேனென்று. எனக்கு என் தாயாரிடமோ, என் மாமாவான உன் அப்பாவிடமோ நேரில் சொல்லத் திராணியற்றுத்தானே உன் மூலம் அவர்களுக்கு என் மனசை தெரியப் படுத்தினேன்.” என்றார். அதற்கும் ஜானு விட்டுக் கொடுக்காமல், “எனக்குத் தெரியாதா உங்களின் தந்திரம். எங்கே நீங்களாகச் சொன்னால், உங்களின் ஆசையை நிராகரித்து விடுவார்களோ எனப்பயந்துதானே என்னைச் தூண்டினீர்கள். மேலும் வெட்கம் கெட்டு நான் போய் என் அப்பாவிடம் எனக்கு உங்களைத்தான் பிடித்துப் போய் விட்டது. உங்களைவிட்டு வேறு யாரையும் நான் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாகச் சொல்லித்தானே உங்களின் அம்மாவின் சம்மதத்துடன் நம் கலியாணம் நடந்தது. உங்களுக்கு உதவப் போய் மற்றவர்களுக்கெல்லாம் நான் ஒரு அதிகப் பிரசங்கியாகவும், வெட்கம் கெட்டவளாகவும் ஆனது உங்களுக்குத் தெரியாதா?” என மிகவும் வருத்தமடைந்ததுபோல் சொன்னாள். வருடங்கள் எத்தனை யானாலும், தங்களுடைய கலியாணம் கூடி வர, தான் ஜானுவின் மூலம் எத்தனை நாடகங்கள் ஆடினோம் என்பதும் மகேஸ்வரனின் நினைவில் நடனமாடியது. அதனால், ஜானுவின் கைகளை மிகவும் பரிவுடன் பிடித்துக் கொண்டு “ஜானு, உண்மையாகச் சொல் நீ இப்போது என்னுடன் சந்தோஷமாகத்தானே இருக்கிறாய். அன்று உன்னை எல்லாரும் கேலி செய்தாலும், அதை நீ இன்னுமா நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் உன்மேல் அன்று கொண்ட ஆசையும், பாசமும் இத்தனை நாட்களுக்குப் பின்னும் மாறாமல் இருப்பது உனக்குத் தெரியாதா? இன்று நமக்கு மிகவும் முக்கியமான நாள். நாமிருவரும் சந்தோஷமாகவே இன்று பூராவும் இருப்போம்.” எனச் சொல்லிக் கொண்டே தானும் பூஜைக்குத் தயாராக குளிக்கப் போனார். ஜானுவும் அவரிடம் “எனக்கு எப்ப உங்களிடம் கோபம் வந்திருக்கறது?நானும் உங்களிடம் கொஞ்சம் விளயாட்டாகத்தான் பேசினேன். என் மனதில் ஒன்று மில்லை. சீக்கிரம் குளித்து வாருங்கள். நானும் பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன்” எனச் சொல்லி மகேஸ்வரனை சமாதானப் படுத்தினாள்.

பூஜையறையில் அன்று செய்ய வேண்டிய பூஜைக்குத் தேவையானதை எடுத்து வைத்து விட்டு, விளக்கிற்கு நெய் விட்டு புது திரி போட்டு விளக்கை ஏற்றினாள். விளக்கு ஏற்றிபோதே வழக்கம்போல் திரு விளக்கு ஸ்லோகம் சொன்னாள். மகேஸ்வரனும் குளித்து முடித்து சுத்தமாக பூஜை அறைக்கு வந்து விபூதி இட்டுக் கொண்டு, ஜானுவைப் பார்த்து “பூஜைக்கு எல்லாம் தயாராக இருக்கிறதா? என் கேட்டுக் கொண்டே, பூஜை செய்ய மனையில் அமர்ந்தார். ஜானுவும் அவருக்கு உதவியாக புஷ்பக்கூடையை எடுத்து அவர் கைகளில் அருகில் வைத்தாள். இருவரும் சேர்ந்து சுவாமியை நமஸ்கரித்து விட்டு, பூஜை செய்ய ஆரம்பித்தார்கள். மகேஸ்வரனுக்குப் பார்வை குறையால் அடிக்கடி பூஜை சாமாங்கள் எடுக்க சங்கடப்பட்டார். அப்போதெல்லாம் ஜானு சிரித்தபடியே “எங்கே உங்களால் ஒரு தட்டைக் கூட சட்டுன்னு எடுக்க முடிகிறது. பக்கத்திலேயே இருக்கும் சாமானுக்குக்கூட என்னைக் கூப்பிடாமல் எடுக்க மாட்டீர்களே” எனவும் சொன்னாள். அதற்கு ஆமாம். நான் கூப்பிட்டவுடனேயே வந்து விடுகிறாப்போல்தான் நினைப்பு. என் தொண்டைத் தண்ணி வற்றும் வரைக்கும் நான் பத்துதடவைச் சொன்னால், நீ யோசித்துப் புரிந்து வந்து எடுத்துக் கொடுக்கட எத்தனை நாழி ஆகறது தெரியுமா? இந்தச் சின்ன பூஜைக்கே எனக்கு எத்தணை நாழியாகிறது. ஏதோ நான் சாதுவானதால் உன் காலம் நடக்கிறது. இல்லையென்றால், யார் ஐம்பத்திரண்டு வருஷம் உன்னை வைத்துக் கொண்டு குப்பைக் கொட்டுவான்? எனவும் சொன்னார். அதற்கும் சலிக்காது “ஆமாமாம். பெரிய தியாகி என்ற எண்ணம் போலத்தான். நீங்கள் மட்டும் என்னவாம். சின்ன சாமானை எடுக்க வேண்டுமென்றாலும், நூறுதரம் ஜானு..ஜானு.. என இந்தத் தெருவே கேட்பதுபோல் கூப்பாடு போடறது கொஞ்சமா. எனக்குக் கொஞ்சம் காது கேட்காதுதான். அதற்காக இப்படியா ஊரே கூடுவதுபோல் கூப்பிடவேண்டும். தெருவிலே போனால் சின்ன பசங்க்கூட என்னைப் பார்த்து ஜானு..ஜானூ..என்று கூப்பிட்டு என்னைக் கேலி செய்கிறார்கள். என்ன இருந்தாலும் பெண்களுக்கு இருக்கும் பொறுமையும் பாசமும் உங்களைப் போல் ஆண்களுக்குக் கிடையாது” எனச் சொல்லி தனக்கு இருக்கும் குறையால் மனம் துக்கித்தாள். அதைப் பார்த்த மகேஸ்வரன “அசடே நான் உன்னைக் கேலி செய்யவில்லை. எனக்கும்தான் குறை இருக்கு. ஆனால் நாந்தான் கலியாணத்திற்கு முன்பே கண்ணாடி போட்டிருந்தேனே அதைக் கண்டு எனக்கும் கண் பார்வையில் பழுது இருக்கிறது என நீ தெரிந்து கொள்ளவில்லையா?” எனவும் கேட்டார். அதற்கு ஜானுவும் “எங்கே எனக்கு அத்தனை புத்தியும் சாமர்த்தியமும் இருந்தது போராத்திற்கு உங்கள் அம்மாவும் என்னிடம் வந்து என் பிள்ளை கண்ணும் கண்ணாடியுமாக ராஜாமாதிரி ஆபிசுக்குப் போவதைப் பார்க்கவே எங்கள் தெருவில் பெண்கள் வரிசையில் நிற்பார்கள் என நீங்கள் அழகில் சிறந்த மன்மதன்போல் சொல்லி இருந்தார். அப்போவெல்லாம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் “ஏன் தெரியுமா இத்தனை அழகுடையவர் தன்னை ஆசையுடன் பார்க்கும் அத்தனைபேரையும் விட்டுவிட்டு, அரைக் காது கேட்கும் என்னைப் பார்த்து ஆசைப் பட்டாரே” என மிதப்பில்தான் இருந்தேன். எனக்கு முதலில் தெரியாது உங்களுக்குப் பார்வையில் கோளாறு என்று. பிறகுதான் தெரிந்தது. உங்களுக்குத்தான் என்னைப் பற்றி தெரியுமே? அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னைப் பண்ணிக்கனும்னு பிடிவாதம் பிடித்து என்னிடம் வந்து பேசனீர்கள்? எனவும் கேட்டாள். அதற்கு அவரும் “எந்தக் கொடுமையைச் சொல்வது, உன்னைப் பற்றி உன்னிடம் என் அம்மா பெருமையாக சொன்னது போல்தான்,உங்கப்பாவும் என்னிடம் வந்து “என்னுடைய ஜானகி, மிகவும் சாதுவான பெண். எதையும் ஒரு முறைக்கு இருமுறை சொன்னால்தான், நம்மிடம் முகத்தைக் காட்டிக் கேட்பாள். யாரிடமும் அதிகமாகப் பேசக் கூட மாட்டாள். மிகவும் அமைதியானவள்” என்றார். நானும் உன்னைச் முறையாக உன்னைப் பெண் பார்க்க வந்த போது உன்னிடம் கேட்டதிற்கெல்லாம் நீ என்னிடம் நேரில் பதில் சொல்லாது, உன் அப்பாவையேப் பார்த்து மிகவும் மெதுவாக பதில் சொன்னாய். நீ சொன்னது எதுவும் எனக்குக் கேட்கவும் இல்லை புரியவும் இல்லை. உன் அப்பாதான் உனக்குப் பதிலாக அன்றுமுழுவதும் என்னிடம் பேசினார். நானும்கூட அதைப் பார்த்து, உண்மையிலேயே நீ மிகவும் சாது, அமைதியான பெண் என நினைத்து நீ என்னிடம் எதற்கும் சண்டை போடமாட்டாய் எனவும் நினைத்து புரித்தேன். அதே மயக்கத்தில்தான் என் முழு சம்மதத்தையும் சொல்லி, உடனேயே கலியாணம் முடிக்கவும் கேட்டுக் கொண்டேன்: எனவும் சிரித்துக் கொண்டேச் சொன்னார். அதைக் கேட்ட ஜானுவும் “ஆமாம்தான். நம்மிருவருடைய குறைகள் தெரியாமலேயே உங்கள் அம்மா சொன்னதை நானும், என் அப்பா சொன்னதை நீங்களும் யதார்த்தமாக எடுத்துக் கொண்டு விட்டோம் என மிகவும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் சொன்னாள். என்ன எனக்கு ஒன்றும் குறைவாகத் தெரியவில்லை. கண் பார்வையில் பழுது இருந்தாலும், நீங்களும்தான் இத்தனைகாலம் பதவியில் இருந்து நல்லபடியாகவே ஓய்வு பெற்றுவிட்டீர்கள். இன்றும்கூட உங்களுக்கு என்ன குறை. வெளியில் போகும்போது ஒரு துனை வேண்டும், அதைவிட எனக்கு வேறு என்ன சுகம் வேண்டும். பார்ப்பவர்களுக்கெல்லாம் நாமிருவரும் எங்கு போனாலும் ஒன்றாகப் போவது பொராமையாகத்தான் இருக்கிறது.” எனப் பெருமையாகச் சொல்லி தனக்கு கணவரின் குறைகள் பெரியதாகத் தெரியவில்லை என அவருக்குச் சமாதானம் சொன்னாள். பதிலுக்கு அவரும் “விடம்மா ஜானு யார் என்ன பொய்யும் சொல்லி நம்முடைய கலியாணம் நடக்கவில்லை. அது நம்மிருவர் விருப்பத்தின் காரணம்தானே. இப்பவும்கூட நீ என்னிடம் மிகவும் பிரியமாகவும், ஆதரவாகவும்தான் இருக்கிறாய். என் நண்பர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? மகேஸ்வரனைப்போல் அதிர்ஷ்டக்காரன் உலகத்தில் இல்லை. அவனிடம் என்றும், எதற்கும் ஜானு வாக்குவாதம் செய்வது இல்லை, அவன் மனதுப்படியே இருக்கிறாள். அதனால்தான் மகேஸ்வரன் இத்தனை சந்தோஷமாக இன்னும் இருக்கிறான். கொடுத்து வைத்தவன்” என என் காது படவே பேசுவார்கள். அதெல்லாம் எனக்கு மிகவும் பெருமைதான். நம்மிருவருக்கும்தான் பொருத்தம் என்று அன்றே பகவான் முடுச்சுப் போட்டு விட்டான். நாமும் இன்றுவரை குறையில்லாமல்தான் இருக்கோம்.” என ஜானுவை சமாதானம் செய்தார். அன்றுமட்டும்மல்ல, அவர்கள் இருவரும் அப்படியேதான் தங்கள் வாழ்க்கை முழுவதும் ஒருவரை வொருவர் கேலியும், பரிகாசமும் செய்து கொண்டேயிருந்தார்கள். இது அவர்கள் இருவருக்கும் தினப்படி நடக்கும் விளையாட்டுத்தான். திருமணமாகி அரை நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் ஒருவருடன் ஒருவர் அன்நோன்யமாகவும், பாசமாகவும் இருப்பதே இருவருக்கும் ஒரு ஜீவாதாராமானது. ஆம். காலக் கிரமத்தில், அவர்களின் பிள்ளையும், பெண்ணும் தங்கள் தங்கள் குடும்பம் என்றும், வேலையென்றும் வெளியூர்களில் இருப்பதால், அவர்கள் தங்களின் முதுமையையும், தனிமை ஏக்கத்தையும் அதிகம் பாராட்டாதிருக்கிறார்கள்.

பூஜையை முடித்துக் கொண்டு, எழுந்த மகேஸ்வரன், தன்னருகில் இருந்த ஜானுவையும் கைத்தாங்கலாகப் பிடித்து எழுப்பி விட்டார். கொஞ்சகாலமாக அவளுக்கு வாயுப் பிடிப்பால், சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. பிறகு தன் அறைக்குச் சென்று ஜானுவுக்காக வாங்கியிருந்த புடவையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார். ஜானுவும் தான் அவருக்காக வாங்கி வைத்திருந்த ஒரு வேஷ்டி, ரேடிமேட் சட்டையையும் அவரிடம் கொடுத்து நமஸ்காரம் செய்தாள். இருவரும் அன்று பூஜைக்குப்பின் சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்கள். மாலையில் இருவரும் புதுத் துணியை அணிந்து கொண்டு கோவிலுக்குப் போய்விட்டு, அப்படியே வரும் வழியில் தங்களின் இரவு ஆகாரத்தையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

தங்களின் அறையில் அமர்ந்து புஸ்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த மகேஸ்வரனின் மடியில் தன்னுடைய தலையை வைத்துக் கொண்ட ஜானுவின் கண்களில் நீர் வழிந்து மகேஸ்வரனின் மடியை நனைத்தது. தன் மடியில் விழுந்த கண்ணீரைக் கண்டவர் தன் மடியில் தலையைச் சாய்த்திருந்த ஜானுவின் முகத்தைத் தூக்கி “என்னம்மா நீ ஏனின்று கண்ணீர் விடுகிறாய். இது வரை நீ சந்தோஷமாகத்தானே இருந்தாய். இப்பேன்ன காரணம்? எனக் கேட்டவரிடம்” இது ஆனந்தக்கண்ணீர். நான் எத்தனை வருடங்கள் எத்தனை தேவர்களுக்குப் பூப்போட்டு பூஜை செய்தேனோ தெரியாது, இந்த ஜென்மத்தில் உங்களுடன் என் வாழ்வை இனைத்து வைத்திருக்கிறது தெய்வம். ஐம்பத்துஇரண்டு வருடங்கள் வாழ்ந்தது போறாது, இன்னும் பல வருடங்கள் உங்களுடன் வாழ்ந்து நீங்கள் ஒவ்வொரு வருட திருமணநாளுக்கும் எனக்கு புடவை வாங்கிக் கொடுக்க நான் தவம்தான் செய்யனும்.” என மன நிறைவாக அவரிடம் சொல்லி தன் மகிழ்ச்சியைக் காண்பித்தாள். பதிலுக்கு மகேஸ்வரனும் “நீமட்டுமல்ல ஜானு, நானும்தான் எத்தனையோ ஜென்மங்கள் பகவானுக்குப் பூஜை செய்திருப்பேன். இல்லையென்றால், ஸ்ரீராமனின் தேவி ஜானகியைப் போல நீ எனக்கு கிடைத்திருப்பாயா? உனக்கு ஒவ்வோரு வருடமும் புடவை வாங்கிக்கொடுக்கவாவது நானும் உன்னுடன் நீண்ட நாள் வாழ வேண்டுமென்றுதான் இன்றுகூட கோவிலில் ஸ்வாமியை வேண்டிக்கொண்டேன்.” என அவரும் ஜானுவின்மீது தான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாகச் சொல்லி அவளை அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்த பின் ஜானு கேட்டாள் “பிறப்பும் முடிவும் நம் கையில் இல்லை. அப்படியிருக்கும் போது நம்மிருவருக்கும்தான் எத்தனை பேராசை பார்த்தீர்களா. இத்தனை நாட்கள் நம்மை பிரியாது வைத்திருக்கும் பகவான், இனி எத்தனை காலம் நம்மிடம் கருணை காட்டுவாரோ தெரியாது. இயற்கையின் நியதியை நாம் மாற்ற முடியுமா? அதற்காக உங்களைப் பிரிந்து ஒருநாள்கூட வாழ நான் இருக்க மாட்டேன்” என ஜானு சொன்னது, மகேஸ்வரனும் “என்னால் மட்டும் நீ இல்லாமல் இருக்க முடியுமா? நாமிருவரும் இன்று இதற்காக வருத்தப்படுவது பைத்தியக்காரத்தனம்தான். எது நடக்குமொ அதுதான் நடக்கும். எல்லாம் அவன் செயல். நம்மைச் சேர்த்தவனும் அவந்தான். அவனின் கருணை நமக்கு இன்னும் இருந்தால், நாமிருவரும் ஒரு நிமிடம் கூட பிரியாமல் வாழுவோம். அவனிடம் நம்பிக்கை வைத்து, இன்று இரவைக் தூங்கிக் கழிப்போம். நாளைப்போழுது அவன் கட்டளை.

அவர்களுக்கும் தெரியாது அதுதான் அவர்களின் வாழ்வின் கடைசி நாளென்று. அவர்களின் வேண்டுதல்கள் தெய்வத்தின் காதில் விழுந்ததோ அல்லது கூற்றுவனாலும் அன்பால் கட்டுண்ட அந்த இருவரின் ஆத்மாக்களைப் பிரிக்க முடியாமல், ஒன்றாகவே எடுத்துச் சென்று விட்டானொ தெரிய வில்லை. மறுநாள் காலையில் வெகு நேரம் அவர்கள் வீட்டின் கதவு திறக்காததைப் பார்த்த கடைப் பையன், பயந்து போய் அக்கம் பக்கத்தவர்களை அழைத்து வந்து பார்த்தபிந்தான் மற்றவர்களுக்குச் தெரிந்தது அவர்களின் ஆத்மா வானுலகில் சேர்ந்து பறந்து விட்டன என.

தெய்வம்கூட பிரிக்க விரும்பாத அன்புப்பலாதான் அந்த வேர்ப்பலா.

Wednesday, 5 June 2013

இந்திரகுமாரியின் தியாகம் (ஜெயரமணி) ஆசிரியையின் சிறு முன் குறிப்பு. இந்தக் கதையின் கரு, நான் படித்த, புகழ் பெற்ற சரித்திர நவீனங்களின் பிதாமகர் திருவாளர் சாண்டில்யன் அவர்களின் ஒரு சரித்திர குறு நாவல் “பல்லவ திலகம்” எனும் பூந்தோட்டத்திலிருந்து என் மனதில் படிந்த சிறு கற்பனையின் வெளிப்பாடு. இந்தக் கதையில் பல்லவ அரசரின் சகோதரி மகளான, இந்திரகுமாரி, தான் விரும்பிய தன் நாட்டு வீரனும் பல்லவ மன்னர் தந்திவர்மனின் வளர்ப்பு மகனான இதயவர்மனை மணம் புரிந்து நல்வாழ்வு வாழுவாள். அதே ஊரில் ஒரு குதிரைலாயத்தில் காவலனாக இருந்த ஒரு வயதான வீரனின் மகளான இரஞ்சனியும் இதயவர்மனை விரும்புவாள். அவளை சிறு வயதிலிருந்தே பழகியிருந்த, இதயவர்மனும் வாலிபனான பின் விரும்புவாள். இருவரும் மனம் ஒன்றி தங்களின் திருமண நாளை எதிர்பார்த்து இருந்தார்கள். அப்போதுதான் பல்லவனாட்டில் போர் மூண்டது. அதில் இதயவர்மனின் பங்கு மிகவும் அதிகமாகவே இருந்தது. என்னுடைய கற்பனையில் அரசகுமாரியான இந்திரகுமாரி, தன் நாட்டு குடிமகளான ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொண்டு, அவளுக்காகத் தன் வாழ்க்கையை இல்லறத்திலிருந்து துறவறத்திற்கு மாற்றிக் கொண்டாள். அவளின் தியாகத்தை என்னுடைய சக்திக்கேற்றவாறு தொடுத்ததுதான் இந்த சிறு மலர் மாலையாகும். இது என்னுடைய மனதில் சுயமாக தோன்றிய ஒரு சிந்தனைப் பூக்கள்தான். இந்த பூ மாலையை என் மதிப்பிற்குரிய ஆசான் திருவாளர் சாண்டில்யன் அவர்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். ************** பல்லவ மன்னர் தந்திவர்மனின் அரண்மனை அன்று விழாக் கோலம் கொண்டுள்ளது. மன்னரின் அன்புக்குப் பாத்திரமான வளர்ப்பு மகனும், பல்லவ தலைமைப் படைத் தளபதியுமான இதயவர்மனுக்கும், பல்லவ-இராஷ்ட்ரகூட குலத்தில் உதித்தவளும், மன்னனின் மருமகளுமான இந்திரகுமாரிக்கும் அன்று மணவிழா நடக்க இருக்கிறது. திருமணத்தைக் காண ஏராளமான சிறு, குறு நில மன்னர்களும், அரசாங்க அதிகாரிகளும், கலைவிற்பனர்களும், மக்களும் குழுமி இருந்தார்கள். மண்டபத்தின் அலங்காரங்களுக்கும் குறைவில்லை. ஆனால், முக்கிய பாத்திரங்களான மணமகன் இதயவர்மனின் முகத்தில் மணமகனுக்கான குதூகலமோ, மகிழ்ச்சியோ இல்லை. போர்க்களத்தில் இருக்கும் ஒரு வீரனுக்கு இருக்கும் இரும்பு முகத்துடன், எவ்விதமான ஆசாபாசங்கள் அற்ற கடமை வீரனாக இருந்தான். ஆம். அவனின் மனதில் ஏற்கெனவே குடியேறி, நாளும் தோறும் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்ட ஆசைக் காதலி இரஞ்சனியின் நினைவுகளால் அவனின் மனம் மிகவும் துன்பப்பட்டது. திடீரென்று மன்னர் தனக்கு காஞ்சியின் தலைமைப் படைத் தளபதி பதவியும் கொடுத்து, அதனுடன் தன் தந்தையார் செய்த சத்தியத்தைக் காக்கும் கடமையே முன்னிட்டு, அவனுக்கு அரச குலத்தில் பிறந்த ஒரு அரசகுமாரியைத்தான் திருமணம் செய்யவேண்டுமென்ற கடமை உணர்வும், அதே சமயம் தன்னுடைய நாட்டுக்கு ஒரு வலிமைமிக்க, தந்திரமிக்க, எந்த சமயத்திலும் பயம் எனற உணர்வின்றி, போரில் எத்தகைய வலிமை வாய்ந்த எதிரிகளையும் முறியடிக்கத்தக்க ஆற்றல் கொண்ட இதயவர்மனின் மனம் அறிந்தும், பிடிவாதமாகத் தன் மருமகளும், அன்புக்கு பாத்திரமான இந்திரகுமாரியை திருமணம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் அவனைச் சம்மதிக்க வைத்திருந்தான். மன்னரின் கட்டளையை மீறமுடியாமலும், தன்னுடைய பிறப்புன் இரகசியம் தெரிந்து, தன்னுடைய தகப்பனாரும், பல்லவ சக்ரவர்த்தியுமான நந்திவர்மனின் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, மனம் ஏற்காவிட்டாலும், மன்னரின் அடிமையாக அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, திருமணம் செய்வதற்கு மணமேடையில் அமர்ந்திருந்தான் இதயவர்மன். மன்னரான தந்திவர்மனுக்கும் மனதில் ஒரு கோடியில், அபலைப் பெண் இரஞ்சனியின் கலையான முகம் கண்களில் தெரிந்து, மன்னரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தன்னுடைய காதலை துறந்து, காஞ்சியிலிருந்தே வெளியேற சம்மதித்து, கண்களில் நீர் நிறைய, தன்னுடைய அந்தப்புரத்தை விட்டு, மௌனமாக வெளியேறிய கண்கள் தன்னைக் குற்றம் சாட்டுவதுபோல் உணர்ந்தான். தான் மட்டும், ஒரு அரசனாக இல்லாதிருந்தால், தானே முன்நின்று, அந்த அபலைப் பெண்ணின் காதலனுடன் சேர்த்து வைத்திருப்பேனே, என்ன செய்வது, அரசாங்க உரிமை என்னுடைய கைகளைக் கட்டி போட்டிருக்கிறதே. ஒரு நாட்டிற்காக, ஒரு ஊரையே கொளுத்தலாம் என அரச நீதியிருக்க, காஞ்சியின் எதிர்கால பாதுகாப்பிற்கும், தன்னுடைய தகப்பனார் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற கடமைபட்டவனாக இருப்பதால், என் மனதை கல்லாக்கிக் கொண்டு, அந்த ஏழைப் பெண்ணின் கண்களில் நீர் வர நானே காரணமாகிவிட்டேனே. அவளுக்கு இதயவர்மன் கிடைக்கவில்லையே தவிர, என்னுடைய அன்பும், பரிவும் எப்பவுமே உண்டு. இந்த காஞ்சியில் அவள் இல்லையே தவிர, என் மனதில் நிறைந்து இருக்கிறாள். காலப் போக்கில், அவளின் மனதை தெளியவைத்து, சதா காலமும் அவளை வைகுந்தனின் பணியில் ஈடுபடச் செய்வேன்.’ எனப் பலவாராக மனதில் எண்ணியபடியே, திருமண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரைத்தவிர, தன் மனம் விரும்பிய இதயவர்மனையே மணாளனாக அமையப் பெற்ற, இந்திரகுமாரியின் மனதிலும் பூரண சந்தோஷம் இல்லை. தன்னுடைய மாமன், இதயவர்மனிடம், தன்னை மணக்கச் சொன்னபோது, அவன் காட்டிய தயக்கத்தின் காரணம் அவளுக்கும் தெரிந்து இருந்தது. அரண்மணையில் இருந்தாலும், காஞ்சியில் அவ்வப்போது நடக்கும் சங்கதிகளும் அவளின் கவனத்திற்கு வருவது உண்டு. அதிலிருந்து, இதயவர்மனின் மனதில் தங்களுடைய அரண்மணைக் குதிரைக்காப்பாளரின் மகளும், அழகிய, கள்ளங்கபடமற்ற சின்னஞ்சிறு சிட்டுக்குருவிபோல் சதா தங்களுடைய அரண்மணைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இரஞ்சனியைப் பற்றி அவளுக்கும் தெரிந்திருந்தது. தன்னுடைய அரச மகள் என்ற அந்தஸ்தின் காரணமாக, தன்னால் நெருங்க முடியாத, இதயவர்மனிடம் இரஞ்சனி நெருங்கி உறவாடுவதும் அவளுக்குள் ஒரு ஏமாற்றத்தையும், ஏக்கத்தையும் உண்டாக்கியது. அப்போதெல்லாம் நினைப்பாள், தான் ஏன் இந்த அரசகுடும்பத்தின் வாரிசாகப் பிறந்தோம் எனவும் வருந்துவாள். அந்தஸ்து காரணமாக, தன்னுடன் இதயவர்மன் நெருங்கி பழகவும் இல்லை. அவன் கண்களில் காஞ்சியின் பெருமைக்குரிய பேரழகியாக, தானிருந்தும், தன்னுடைய இளமையோ, அழகோ அவனுள் எந்தவிதமான சலனத்தையும் உண்டாக்கவில்லை என்பதையும் அவள் அறிந்துதான் இருந்தாள். திடீரென்று, மன்னர் அவனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டவுடன், உடனேயே தன்னுடைய சம்மதத்தை அவன் தெரிவிக்காதது மட்டுமல்ல, தன்னுடைய மனதை ஏற்கெனவே ஒரு ஏழைப் பெண்ணிடம் இழந்ததையும் மன்னரிடம் தெரிவித்து, தனக்கு அந்தக் கலியாணத்தில் சம்மதம் இல்லை என்பதையும் தெரிவித்தான். ஆனால், மன்னரோ அவனின் பிறப்பின் இரகசியத்தையும் சொல்லி, தன்னுடைய தந்தையாரும் பல்லவ சக்ரவர்த்தியுமான நந்திவர்மனும், இதயவர்மனின் தகப்பனரான இராஷ்ட்ரகூட மன்னரின் சகோதரரும் செய்து கொண்ட சத்தியத்தைக் காக்கும் கடமை தங்கள் இருவருக்கும் உண்டென்பதையும் சுட்டிக்காட்டி, மன்னர் குலத்தில் பிறந்தவர்களின் திருமணம் நாட்டின் நலத்திற்காகத்தான் ஏற்பட்டது எனவும் சொல்லி, அவனைக் கட்டாயப்படுத்தியதையும் அவள் உணர்வாள், அதனால்தான், முகத்தில் சிறிதும் சந்தோஷமின்றி, போர்க்களத்தில் நிற்கும் ஒரு கடமை வீரனைப் போல் மணமேடையில் இருக்கும் இதயவர்மனின் முகமும் அவளுக்குள் ஒரு வேதனையை ஏற்படுத்தியிருந்தது. அவளின் நினைவுகள் சில நாட்கள் பின்னோடிப் போனது. அன்று மாலை நேரத்தில் தான் அரண்மனை விளாகத்தில் உள்ள வைகுந்தப்பெருமான் சன்னிதிக்குச் செல்ல முயலும்போது, அங்கு தன்னுடைய மாமனான தந்திவர்மன் இரஞ்சனியுடன் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. உடனே அங்கிருந்த ஒரு தூணில் மறைவில் நின்று, அவர்கள் பேசுவதைக் கேட்டாள். மன்னர்: இரஞ்சனி நான் ஏன் உன்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேனென்று உன்னால் யோசிக்க முடிகிறதா? உன்னால், பல்லவ-காஞ்சியின் ஒரு திடமான பாதுகாப்பிற்கும், இன்று முதல் உதயமாகும் இராஷ்ட்ரகூட-காஞ்சிக்கும் ஒரு அரசப்பிரதிநிதியாக இதயவர்மன் பதவியேற்கவும் வேண்டும். ஆம், நீ உன் மனதில் ஏற்று இருக்கும் இதயவர்மனை மறந்திட வேண்டும். அவன் நீ நினைப்பதுபோல் யாருமற்ற அனாதை இல்லை. எல்லாரும் நினைத்திருக்கிறார்கள் அவன் யாருமற்றவன். என் அன்புக்கும், பாசத்துக்கும் கட்டுப் பட்டவன். என்னால் வளர்க்கப்பட்டவனென்று. ஆனால் அது உண்மையல்ல. அவன் ஒரு இராஜ குலத்தைச் சேர்ந்தவன். இராஷ்ட்ரகூட மன்னரின் சகோதரனின் மகன். என் தகப்பனாரான நந்திவர்மனின் ஆப்த நண்பரான அவர், இந்தக் காஞ்சியில் ஒரு சாதாரண குலத்தில் பிறந்த ஒரு பெண்ணை விரும்பி, அவளையே இரகசியமாகாத் திருமணம் புரிந்து வாழ்ந்தார். அவர்களின் திருமண வாழ்வில் உதித்தவந்தான் இதயவர்மன். பிறந்தவுடனே அவனுடைய தாயார் மரணமடைந்துவிட்டதால் அவனை என் தகப்பனார் தன்னுடைய அரண்மனையிலேயெ வளர்த்து வந்தார். இதயவர்மனின் தகப்பனார் தான் மரணமடையும் சமயம் என் தந்தையிடம் தன்னுடைய மகனை ஒரு சிறந்த வீரனாகவும், நல்ல ஒழுக்கங்களுடனும், கல்வி, போர்ப்பயிற்சி, தகுந்தவனாகவும் வளர்த்து, அவனுக்கு இராஜ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்து, அவனுக்காக இராஷ்ட்ர-காஞ்சியை உருவாக்கி அவனை அதற்கு காஞ்சி இராஷ்ட்ரகூட அரசப் பிரதிநிதியாக்க வேண்டுமென்றும் சத்தியம் வாங்கிக்கொண்டார். என் தகப்பனார் மறைந்தாலும், அவர் செய்த சத்தியம் என்னையும் கட்டுப் படுத்தும். அதனால் இன்று நான் இதயவர்மனை பல்லவ-காஞ்சியின் தலைமைப் படைத் தளபதியாகவும், புதிதாக உருவாக இருக்கும் இராஷ்ட்ர-காஞ்சியின் அரசப்பிரதிநிதியாகவும் பிரகடனப்படுத்த வேண்டும். அவனுக்கு இனிமேல் வர இருக்கும் வளமான வாழ்க்கைக்கு நீ தடங்கலாக இருக்கக் கூடாது. அதனால்தான் நான் உன்னிடம் யாசிக்கிறேன் ‘நீ இதயவர்மனை மறக்க வேண்டுமென்று”. நீ அவன் வாழ்விலிருந்து பிரிந்து விட்டால், அவன் என் விருப்பப்படியும், அவனுடைய தகப்பனாரின் ஆசைப்படியும், இராஜ குலத்தில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து, இராஷ்ட்ர-காஞ்சியின் பொறுப்பை ஏற்றுக் கொள்வான். அரசனான நான் என் கடமையைச் செய்து முடிக்கவும், நம் காஞ்சியின் பாதுகாப்பிற்கும் தக்க ஏற்பாடுகளைச் செய்ய எனக்கு இதயவர்மன் என்னுடைய தலைமைப் படைத் தளபதியாகவும், அவனின் தகப்பனாரின் விருப்பப்படி புதிதாக உருவாகும் இராஷ்ட்ரகூட காஞ்சியின் பாதுகாவனாகவும் பதவி ஏற்கவேண்டும். நீயும் இந்நாட்டுப் பிரஜை. உன் கடமையைச் செய். நான் உனக்கு என்றும் உதவியாக இருப்பேன். நீயும் என்னுடன் இன்றுமுதல் வைகுந்தனின் பாதங்களுக்கேச் சேவைசெய். என்றும் மாறாத பரந்தாமனின் பாதங்களில் சரணடை. அதுவே உனக்கு முக்தியாகும்” என உறுதியாக கூறினார். மன்னரின் கருத்தைக் கேட்ட, இரஞ்சனி மெதுவாக “எனக்கு மன்னவரின் உத்திரவு என்ன. நான் உடனே இந்தக் காஞ்சியை விட்டுப் போக வேண்டுமா?எனவும் கேட்டாள். அதற்கு பல்லவ மன்னன் “அது மட்டுமல்ல, நீ உன் கைப்பட இதயவர்மனுக்கு ஒரு லிகிதமும் எழுத வேண்டும். அதிலிருந்து, யாருடைய கட்டாயமும் இல்லாமல், நீயே அவனிடமிருந்து, விலகிப் போவதாகவும், அவனுக்கு வர இருக்கும் வளமான வாழ்விற்கு நீ தடங்கலாக இருக்க மாட்டாயென்றும்” உறுதிபடுத்திக் கொடு.” எனவும் உத்திரவு இட்டான். அவன் சொன்னபடியே, இரஞ்சனியும் தன் கைப்படஒரு லிகிதம் எழுதி மன்னரின் பாதங்களில் வைத்தாள். பிறகு கண்களில் நீர் வழிய “மன்னவரே,நான் இனிமேல் இங்கிருந்து போக உத்திரவு கிடைக்குமா? எனவும் பணிவாகக் கேட்டாள். அவள் எழுதிய லிகித்த்தைப் படித்த மன்னவன், “இரஞ்சனி, உன்னால் இன்று பல்லவ காஞ்சிக்கும், இராஷ்ட்ரகூட-காஞ்சிக்கும் ஒரு வளமான காலம் வந்து விட்டது. உனக்கு வேறு என்ன வேண்டும். கேள், தாராளமாகத் தருகிறேன்” எனவும் மன மகிழ்ச்சியோடு கூறினான். அதைக் கேட்ட இரஞ்சனி, ‘என் கைகளின் விரல்களை வெட்டிவிட்டு, எனக்கு மகரவீணையையேத் தந்தாலும், அது எனக்கு மகிழ்ச்சி தருமா? அல்லது அந்த வீணையைத்தான் என்னால் மீட்டி, மகிழ முடியுமா? எங்கிருந்தாலும், அவரின் புகழ் பரவ வேண்டும், அதை என் காதால் கேட்டாலே போதும். என் வாழ்வு நிம்மதியடையும்” எனவும் கூறிவிட்டு, மன்னரின் முன் பணிந்து சென்று விட்டாள். அரண்மனையைச் சேர்ந்த வைகுந்தப் பெருமானின் சன்னதியில் நடைபெற்றவைகளைக் கேட்ட, இந்திரகுமாரி, தான் அங்கிருப்பது தெரியாவண்ணம் உடனே தன்னிருப்பிடம் சென்று விட்டாள். ஆனால் அவள் மனதில் நிம்மதி இல்லை. ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வை சிதைத்து விட்டு, அந்தச் சாம்பலின் மேல் தன் திருமண வாழ்வு கிடைப்பது சரியா? ஏழையென்றாலும், அந்தப் பெண்ணும் இதயகுமாரனும் இருவரும் மனமொத்து வாழத் துடித்ததும். இருவரிடைய எந்தவிதமான அந்தஸ்து வேறுபாடுகள் இல்லாத்தால், தங்களின் காதல் கைகூடும் எனவும் தீர்மானமாக இருந்தவர்களின் கனவு, திடீரென்று இதயவர்மனின் பிறப்பின் இரகசியமும், மன்னர்களின் சத்தியம் என்னும் ஆயுத்ததாலும் வெட்டி வீழ்த்தியது அவர்களின் துரதிர்ஷ்ட்டம்தான். இருவரின் மன வருத்தம் தன் வாழ்வுக்கு வளமாகுமா? அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைத் தனக்கு வேண்டுமா? எப்படி யிருந்தாலும், இஷ்ட்டமில்லாது, கட்டாயத்தால் தனக்குக் கிடைக்கும் மண வாழ்வு, தனக்குத் திருப்தியளிக்குமா? “என பலவாரான சிந்தனைகள் அவள் மனதில் குடியேறின. இந்தச் சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டுமெனவும் அவள் மனம் யோசிக்கலாயிற்று. நீண்ட நேரம் கடந்தபின் அவளின் மனதில் ஒரு தீர்மானமும் உண்டாயிற்று. தன்னுடைய தீர்மானத்தை நிறைவேற்றும் தருணமும் வந்து விட்டதென்பதையும் உணர்ந்தாள். மணமேடைக்கு வந்தவள், மணமேடையை அனுகாது, “புரோகிதரே, மணமகனின் வாளைத் தரச் சொல்லுங்கள்” எனவும் கேட்டாள். அவளின் கேள்வியின் உள்ளர்த்தம் புரியாது அங்கிருந்தவர்கள் இப்போது மணமகனின் வாளுக்கு என்ன அவசியம் எனவும் யோசித்தனர். ஆனால், இதயவர்மனோ அவள் கேட்டபடியே தன்னுடைய வாளை அவளிடம் தந்தான். வாளை வாங்கியவள் அதனை நன்றாக அலங்கரித்து, சந்தனம், ஜவ்வாது, குங்கும பொட்டிட்டு, வஸ்திரம் சுற்றி, அங்கிருந்த ஒரு மலை மாலையையும் அணிவித்தாள். பிறகு அதனை அங்கிருந்த ஒரு ஆசனத்தில் வைத்து, அதற்கு நமஸ்காரமும் செய்தாள். தொடர்ந்து, தன் இடுப்பில் வைத்திருந்த ஒரு மங்கலசூத்திரத்தையும் எடுத்து, அதனைத் தானே தன் கழுத்தில் கட்டிக் கொண்டாள். அவளின் செய்கையைப் பார்த்த மன்னர் உள்பட அணைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மன்னர் “இந்திரா நீ என்ன செய்கிறாய்? இங்கு மணமகன் நேரில் இருக்கும்போதே, அவருடைய வாளுக்கு மாலை அணிவித்தது ஏன். மேலும் நீயே உனக்குத் தாலி கட்டிக் கொண்டால் அது முறையா, சரியாகுமா? ஏன் இப்படி செய்கிறாய்? எனவும் தன்னுடைய கோபம் வெளிப்படக் கேட்டார். அதற்கு இந்திரகுமாரி “மாமா, நான் எதுவும் முறையற்றுச் செய்யவில்லை. மணமகனின் வாளுக்கு மாலை அணிந்து, திருமணம் செய்வது அரசகுல வழக்கம்தானே. உங்களின் சத்தியப்படி, அவருடன் அரசதர்பாரில் மனைவியாக அமரத்தான் ஒரு அரசகுலத்தில் பிறந்த பெண் வேண்டுமென்றீர்கள். அப்படியே நான் இனிமேல் அவருடன் அரச சபையில் அமரலாம். உங்களின் சத்தியத்தில் அவரின் இதய சிம்மானசத்தில் அமரும் பெண் அரசகுல மகளாக இருக்கவேண்டுமென்ற நிபந்தனை இல்லையே. உங்களின் விருப்பப்படியும், சத்தியப்படியும், நான் இன்றுமுதல் அவரின் அரசியாகிறேன். அவருடன் அரச தர்பாரில் அமரும் தகுதியும் எனக்குத்தான். ஆனால், அவரின் இதயக் கோவிலில் குடியேறும் உரிமை எனக்கில்லை. அதில் ஏற்கெனவே ஒரு பெண் குடியிருக்கிறாள். இன்று உங்களுடைய அதிகாரம், அவளை இந்தக் காஞ்சியிலிருந்து வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அவள் இன்னமும் இதயவர்மனின் இதயத்தில்தான் வாழுகிறாள். என் வாழ்வு, ஒரு ஏழைப் பெண்ணின் ஆசைகளை சிதைத்துவிட்டு, அதில் மாளிகைகட்டி வாழ நான் விரும்பவில்லை. ஏழை, பணக்காரர் எனக் காதலுக்கு தரமில்லை. இருமணங்களின் சங்கமம்தான் உன்னதமான காதல். அரசன் என்ற அதிகாரத்தால் உங்களால் இருவரின் இனைப்பைத்தான் தடை செய்ய முடியும். ஆனால் அவர்களின் இதயத்தில் குடியிருக்கும் இருவரின் பாசத்தையும், அன்பையும் அழிக்கமுடியாது. எனவே அவருடன் என் வாழ்வு அரச வாழ்வில் மட்டும்தான். அவரின் இதயத்தில் வாழும் உரிமை அந்த ஏழைப் பெண்ணிற்குத்தான் உரியது.” எனவும் திடமாகச் சொன்னாள். மன்னரோ அதற்கு பதிலாக, “நீ நினைப்பது போல் நான் ஒன்றும் என் அதிகாரத்தால் இரஞ்சனியின் மனதை மாற்றவில்லை. மாறாக, அவளை இதயவர்மனின் பிறப்பின் இரகசியம் தெரிந்து, தனக்கு அவனுடன் வாழ தகுதியில்லை எனத் தெரிந்துதான், என்னிடம் உத்திரவு வாங்கிக் கொண்டு, காஞ்சியிலிருந்து போனாள். தன்னுடைய ஆசைக்காக, காதலனின் எதிர்காலத்தை இருளாக்க அவள் விரும்பவில்லை. உண்மையான காதல் தியாகத்திற்கு தயங்காது” இதில் என்னுடைய கட்டாயம் எதுவுமில்லை. சிறிய பெண்ணான உனக்கு இப்போ இதில்லாம் புரியாது. நான் சொல்வதைக் கேட்டு, திருமணத்திற்கு தயாராக வா? எனவும் தீர்மானமாகச் சொன்னார். அதற்கு இந்திரகுமாரி, “மாமா, உங்களின் கடமைக்காக, அதிகாரத்திற்காக, என்னால் என்னை விரும்பாத ஒருவருடன் கட்டாயத்திற்காக வாழ முடியாது. அந்தப் பெண்ணிற்கு நீங்கள் காட்டிய பரந்தாமனின் பாதங்கள் எனக்கும் கிடைக்கும். இனி நான் அந்தப் பரந்தாமனின் பக்தியில் வாழப்போகும் ஒரு அரசிதான். இதில் மாற்றமில்லை. இப்போது இதே மண்டபத்தில், என் சகோதரிக்கும் காஞ்சியில் படைத்தலைபதியாருக்கும் திருமணம் நடைபெறும். நீங்கள் எல்லாரும் அதற்கு ஆசி தாருங்கள்” எனவும் சொல்லிவிட்டு, திரும்பவும் தன்னுடைய அந்தப்புரத்திற்குச் சென்றாள். அவளுடன் ஒரு பெண்ணிற்கு மணமகளாக அலங்கரித்து அழைத்து வந்தாள். சபையில் உள்ளோர்களிடம் “இன்றுமுதல் என்னுடைய சகோதரியாக நான் ஏற்றுக் கொண்ட இரஞ்சனிதான் இன்று இங்கு மணமேடைக்குப் போகப் போகிறாள். இதயவர்மனின் இதயத்தில் வாசம் செய்த அவள்தான், இனியும் அவருடைய இல்லத்தில் வாசம் செய்வாள். அன்பால் கட்டுண்ட இருமனங்களையும் இனைத்து வைப்பதுதான் தர்மமாகும். அவர்களின் இனிய வாழ்விற்கு உங்களின் ஆசிகளை வழங்குங்கள்.” எனக் கூறியபடியே, இரஞ்சனியை மணமேடையில் அமர்த்தினாள். புரோகிதரிடம் “புரோகிதரே, உங்களின் பணியைச் செய்யுங்கள். மணநிகழ்ச்சிகள் நடைபெறட்டும்” என ஒரு இராணிபோல் உத்திரவிட்டாள். புரோகிதர் மந்திரம் சொல்ல, இதயவர்மன்-இரஞ்சனியின் திருமணம் நிறைவேறியது. மணமக்கள் மூவரும், அங்கிருந்த மன்னரை வணங்கினார்கள். தந்திவர்மன் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் தன்னை மீறிவிட்டதால், தன்னுடைய மருமகளின் செய்கையை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. அவனும் தன்னுடைய ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினாண். மன்னரைப் பின்பற்றி, சபையோர்களின் வாழ்த்துக்களும் அவர்களுக்குக் கிடைத்த்து. திருமணம் முடிந்த்தும், மணமக்கள் மூவரும் அரண்மணை வாசலில் நிறுத்தியிருந்த இரத்த்தில் ஏறி, மணமகனின் இல்லத்திற்குப் போனார்கள். அவர்களுடன் அரண்மணைப் பெண்களும் தொடர்ந்தனர். தன்னுடைய இல்லத்திற்குப் போனபிந்தான், இதயவர்மன் இந்திரகுமாரியிடம் “அரசகுமாரி, உங்களின் திடீர் முடிவால் நாங்கள் திகைத்துப் போய்விட்டோம். ஏனிப்படி செய்தீர்கள். மன்னரின் முடிவுக்கு மாறாக என்னைச் செயல் படுத்த வைத்து விட்டீர்களே. இது நான் மன்னருக்குச் செய்த துரோகம் ஆகாதா?’ எனவும் கேட்டான். அதற்கு இந்திரகுமாரி “நீங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. மன்னரின் உத்திரவுப்படி, நான் உங்களின் மணைவியாகிவிட்டேன். உங்களின் வாழ்வில் நான் உங்களின் அரசப் பணிகளில் பங்கேற்ப்பேன். இரஞ்சனி, உங்களின் இல்லறவாழ்வில் பங்கேற்பாள். இனி நாங்கள் இருவரும் உங்களின் வாழ்வில் இருப்போம். நம்மிருவருக்கும் இருக்கும் நெருக்கம் அரச தர்பார் மட்டும்தான். நான் என்றும் எக்காலத்திலும் உங்களின் பள்ளியறைக்கு வரமாட்டேன். நீங்களும் என்னுடைய மாளிகைக்கு வரவேண்டாம். இது நம் மூவருக்குள்ளும் இருக்கவேண்டிய ஒப்பந்தம்.” எனவும் உறுதியாகச் சொன்னாள். இந்திரகுமாரியின் முடிவைக் கேட்ட இரஞ்சனி “அக்கா, எனக்காக உங்களின் வாழ்வைத் தியாகம் செய்துவிட்டீர்களே. இதற்கு நான் தகுதியுள்ளவளா? என்னால் உங்களுக்கு என்ன கைமாறு செய்யமுடியும். வாழ்நாள் பூராவும் உங்களுக்குக் கடமைப்பட்டவள் நான். என்றும் உங்களின் அடிமை நான்” எனக் கூறிக்கொண்டே, இந்திரகுமாரியின் பாதங்களில் வீழ்ந்தாள். தன்னுடைய பாதங்களில் வீழ்ந்தவளை அன்புடன் தூக்கித் தழுவிக் கொண்டவள் அவளின் காதில் மெதுவாகச் சொன்னாள் “இரஞ்சனி, நீ எனக்கு ஒரு பரிசு மட்டும் கொடு. அது, இன்னும் ஒரு வருடத்தில், பல்லவ-இராஷ்ட்ரகூட அரசிற்கு ஒரு வாரிசு பெற்று, என்னிடம் கொடுத்து விடு. அதுவே என்னுடைய மகனாக நான் ஏற்றுக் கொண்டு, என் வாழ்வில் வளம் காணுவேன்” எனவும் சொன்னான். இந்திரகுமாரியின் விருப்பத்தைக் கேட்ட இரஞ்சனியின் முகம் தாமரையாக பிரகாசித்தது. அவளின் முகத்தில் வெட்கச் சிரிப்பும் பூத்தது. இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த இதயவர்மன் “நான் இங்கிருப்பதை நீங்கள் இருவரும் மறந்து, என்னையறியாமல் அங்கென்ன இரகசியம்” எனவும் கேட்டான். அதற்கு அவர்களிருவரும் “இது எங்களின் விஷயம். உங்களுக்குச் சொல்லமுடியாது” எனச் சொல்லிச் சிரித்தனர். அவர்களிருவரும் பேசியதை ஓரளவு ஊகித்தவன், “உங்களின் விருப்பம் நிறேவேற்ற நான் வேண்டாமா: எனச் சிரித்தபடியேக் கேட்டவன், அவர்களுடன் மாளிகையின் உள்ளேச் சென்றான். தியாகத்தில் அன்பு மலர்கள் பூத்தன அவர்களுக்குள்.இந்திரகுமாரியின் தியாகம்

 

(ஜெயரமணி) ஹூஸ்டன்.

Tuesday, 4 June 2013

ஒன்றெ குஓரே இனம், ஒரே தேவன் (ஜெயரமணி) அன்று பண்ணையாரின் வீட்டில் எல்லாரும் மிகவும் பரப்பாகத்தான் இருந்தார்கள். இருக்காதா? அன்று அவர்களின் வாரிசு வரும் நேரம் நெருங்கிவிட்டது. பண்ணையாரின் ஒரே பேரனின் மனைவிக்குத்தான் பிரசவலி கண்டு, அவளை உடனடியாக மருத்துவ மணைக்கு அழைத்துச் செல்ல அணைவரும் தயாராகி வந்தனர். அன்று அவர்களின் காரை ஓட்டும் வழக்கமான டிரைவர் இஸ்மாயினுடைய மனைவிக்கும் அதுதான் பேருகாலமாதமாக இருந்தது. எல்லாருக்கும் அவனை எப்படி நாம் மருத்துவ மணைக்குக் காரை ஓட்டும்படி கேட்கமுடியும் என தவித்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால், இஸ்மாயின் அங்கு வந்து, “அம்மா, நான் காரைத் தயார் நிலையில்தான் வைத்திருக்கிறேன். நீங்கள் தாமதம் செய்யாமல் உடனடியாகக் கிளம்புங்கள். நான் காரை மிகவும் நிதானமாகவும், கவனத்துடனும் ஓட்டிக்கொண்டு போகிறேன், வாருங்கள் போகலாம்” எனவும் அழைத்தான். அப்போது பண்ணையாரின் பேரனான கார்த்திகேயன் அவனிடம்”இஸ்மாயின், நீ இன்று காரை ஓட்டவேண்டாம், உன் மனைவிக்கும் இதுதான் பிரசவ காலம். உன் மனைவிக்கு உன்னைத் தவிர இங்கு யாரும் துணை இல்லை. நானே மெதுவாக காரை ஓட்டிக்கொண்டு போகிறேன். நீ இனிமேல் உன் மனைவியை விட்டு எங்கும் போகக்கூடாது.” எனக் கண்டிப்பாகவேச் சொன்னான். ஆனால், இஸ்மாயின் அதற்கு உடன்படவில்லை. ஐயா, நான் எங்கே தனியாக இருக்கிறேன். எப்பவும் உங்கள் பாட்டியம்மாதான் எங்களுக்குத் துணையாக இருக்கிறார்களே? என் மனைவியை அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வார்கள். மேலும், என் மனைவிக்கு இன்னும் மூன்று வாரங்களாகும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் என்னைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள். நாம் உடனடியாக மருத்துவ மணைக்குச் செல்லலாம்” எனக் கூறிவிட்டு, காரை எடுத்து வாசலில் தயாராக நிறுத்தினான். இஸ்மாயின் போகும்போது பாட்டியிடம் சென்று, ‘பாட்டி, நான் உங்களை நம்பித்தான் என் மனைவி சலீமாவை விட்டுவிட்டுப் போகிறேன். நான் வரும்வரை அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.” பணிவாகச் சொல்லிவிட்டுப்போனான், பாட்டியும் பதிலுக்கு அவனிடம் ‘இஸ்மாயின், நீ எங்களுக்காகத்தான் உன் மனைவியைத் தனியாகவிட்டுவிட்டுப் போகிறாய். நான் அவளை என் உயிர் போல் பார்த்துக் கொள்கிறேன். நீ தைரியமாகப் போய்வா” என அவனுக்குத் தைரியம் கொடுத்தாள். அவர்களெல்லாம் மருத்துவமனைக்குப் போன பின் பாட்டியும் தனியாக வீட்டில் இருந்தபடியே பேரனின் மனைவி சாந்தாவிற்கு நல்ல விதமாகப் பிரசவம் முடிய வேண்டுமென்றும், அவர்கள் திரும்பி வரும்வரை சலிமாவிற்கும் வலி எதுவும் வரக்கூடாதென்றும் வேண்டிக்கொண்டாள். அவள் மனதுக்குள் “அம்மா, கர்ப்பரட்சாம்பிகே, இரு குழந்தைகளும், நல்லவிதமாக பிரசவிக்க வேண்டும்” எனவேண்டிக்கொண்டே, அம்மனின் நாமத்தை ஸ்மரணம் செய்துகொண்டிருந்தாள். பாட்டி வீட்டில் தனியாக இருந்து மனதிற்குள் ஸ்வாமியின் நாமத்தை ஜபம் செய்து கொண்டிருந்த போது, வீட்டு வாசலில் நிழல் தெரிந்து, வாசலுக்கு வந்தாள். வாசலில், இஸ்மாயின் வீட்டிலிருந்து ஒரு பையன் வந்து, “பாட்டியம்மா, இஸ்மாயின் மாமா இருக்கிறாரா? அவருடைய மனைவிக்கு திடீரென்று வலி வந்து துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டுமாம். அதனால் மாமாவைக் கூட்டிக்கொண்டு போக வந்தேன். அவரைக் கூப்பிடுங்கள் பாட்டி” என படபடப்போடு சொன்னான். பாட்டிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. ஆனால், இந்த சமயம் நாம் தயங்கி நிற்பது சரியல்ல என புரிந்து கொண்டவள், அவனிடம் “உங்க மாமா எங்களின் பேரனின் மனைவிக்கும் பிரசவ வலிகண்டு, அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு, காரை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறான். நீ கவலைப் படாதே, நான் உன்னுடன் வந்து, இஸ்மாயின் மனைவிக்கு வேண்டியதைச் செய்கிறேன். வா போகலாம்” என சொல்லி அவனுடன் கிளம்பினாள். போகும்போதே மனதிற்குள் “பகவானே, எங்களுடைய அவசரத்திற்காக உதவ ஒடோடி வந்தவனின், மனைவிக்கு ஒரு கஷ்டமுமின்றி, நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள். அங்கு சென்றபிந்தான் தெரிந்தது அந்தப் பெண்ணுக்கும் பிரசவ வலிதான் கண்டிருக்கிறதுஎன. பாட்டி தன்னுடைய அனுபவத்தின் காரணமாக, அந்தப் பெண்ணிற்குத் தேவையான உதவிகளையும், அவளுக்குத் தைரியமும் சொல்லிக்கொண்டே, பக்கத்தில் இருந்த இரு வயதானவர்களின் உதவியுடன் பிரசவம் பார்க்கத் தயாரானாள். அவளின் வேண்டுதல் பலித்தது. ஓரிருமணிகளின் வலியுடன், சலிமாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நேரத்தையும் சரியாக குறித்துக் கொண்டு, சலிமாவிடம் “சலிமா நீ அதிர்ஷ்டசாலியம்மா. உனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. சமத்துப்பாப்பா, அவனின் அப்பாவை எங்களின் அவசரத்திற்காக வெளியில் அனுப்பியபோது உனக்கும் வலி கண்டவுடன், எனக்கு மிகவும் சங்கடமாகியது. பகவான் புண்ணியத்தில், உனக்கு நல்லபடியாக பிரசவம் முடிந்து, அழகான பிள்ளை பிறந்து விட்டான். என் பக்கம் பகவான் இருந்திருந்து, எங்களை காப்பாற்றிவிட்டார். இனிமேல் உனக்கு ஒரு சிரமமும் இல்லை. சந்தோஷமாயிரு” எனக் கூறிக்கொண்டே, அவளுக்கும், குழந்தைக்கும் மேற் கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சைகளை செய்து முடித்தாள். சலிமாவிற்கும், அவளைச் சுற்றியிருந்தவர்களுக்கும், ஒரு மேற்குடியில் பிறந்த, ஆசாரநியமங்களை தவறாது கடைபிடிக்கும், வயதான ஒரு பிராமணப் பெண்மணி, கீழ்க் குடியில் பிறந்த ஒரு பெண்ணின் பிரசவத்தை கொஞ்சமும் கூசாது பார்த்துச் செய்தபின்னும், அங்கேயே இருந்து, அங்கிருந்தவர்களுடன் சகஜமாகப் பழகியதையும் பார்த்து, அவர்களின் கண்களைக்கூட இமைக்காது ஆச்சரியப்பட்டுக் கொண்டு, கண்களில் கண்ணீர் ததும்ப நின்றார்கள். அவர்கள் தங்கள் கரங்களைக் கூப்பி பாட்டியைப் பார்த்து வணங்கினார்கள். பாட்டி அவர்களைப் பார்த்து, “என்ன இதல்லாம். நானும் உங்களைப் போலவே ஒர் சாதாரண பெண்மணிதான். ஆண்டவன் முன் எல்லாரும் சமம் தான். இஸ்மாயின் எங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவந்தான். அவனின் மனைவியும் எங்களின் மகள்தான். நான் என் தார்மீக கடமையைத்தான் செய்திருக்கிறேன். எல்லாம் நல்ல படியாக முடிந்ததிற்காக பகவானுக்குத்தான் வணக்கத்தைச் செலுத்த வேண்டும்”. நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்கு இருந்துவிட்டுப் போகிறேன்” எனக் கூறிக்கொண்டே அமர்ந்தாள். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவர் அங்கிருந்த ஒரு பையனிடம் பத்து ரூபாய் கொடுத்து, “அகமத், நீ போய் பாட்டியம்மாவிற்கு நல்லதாக வாழைபழங்கள் வாங்கிவா. அவர்கள் நம் விட்டில் சாப்பிடக்கூடாது. நம் வீட்டிற்கு வந்து சமயத்தில் பெரிய உதவி செய்த்திற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்” என்றும் சொன்னார். அதைக் கேட்ட பாட்டி, “எதெற்கப்பா வாழைப்பழம் வாங்க வேண்டும். உன் வீட்டில் சர்க்கரை இருக்கிறதல்லவா? அதைக் கொஞ்சம் கொடுப்பா போறும்” எனக் கூறவும், பெரியவர் “அம்மா, நீங்கள் எங்கள் விட்டிலிருந்து சர்க்கரை எடுத்துப்பீர்களா? நாங்கள் எல்லாம் கீழ்குடி மக்களல்லவா? அது சரியாகுமா?” எனக் கேட்டார். அதற்கு பாட்டி, “நீயும் ஆண்டவனின் படைப்புத்தான், நானும் அவனுடைய படைப்புத்தான். மேலும், நாங்கள் எங்களுக்கு வேண்டிய மளிகைச் சாமான்களேல்லாம் ஜின்னா கடையிலிருந்துதானே வாங்குவது வழக்கம்தானே. அப்படி யிருக்கும்போது, உங்கள் வீட்டில் சர்க்கரை சாப்பிட்டால் ஒன்றும் தப்பில்லை. உனக்கு சம்மதமென்றால், நான் சர்க்கரை எடுத்துக் கொள்வேன்” எனத் தீர்மானமாக கூறிவிட்டு, அங்கிருந்த சர்க்கரை பாட்டிலிருந்து ஒரு ஸ்பூன் சர்க்கரை எடுத்துக் கொண்டு, தன் வீட்டுக்குச் சந்தோஷமாக வந்தாள். பாட்டியின் மனதில் ஒரு நிம்மதியும், சந்தோஷமும் கூடியது. எதிர்பார்க்காத நேரத்தில் பிரசவ வலி கண்டு, சலீமாவிற்கு நல்லபடியாகப் பிள்ளைக் குழந்தை பிறந்தது பகவானின் அனுக்கிரஹம்தான். அதேபோல் சாந்தாவிற்கும் நல்லவிதமாக பிரசவம் முடிய வேண்டும். பாவம், தாயில்லாப் பெண், நாந்தான் அவளுக்கு தாயாக இருக்கவேண்டும்” எனப் பலவிதமாக நினைத்துக்கொண்டே, மருத்துவமனைக்குப் போனவர்கள் வருகிறார்களா எனப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போழுது, பாட்டியின் பேரன் கார்த்திக்கும், இஸ்மாயினும் வந்தார்கள். இருவர் முகத்திலும் எந்தவிதமான சந்தோஷமும் இல்லை. மாறாக, இருவரின் முகமும் சோகத்தால் களையிழந்து இருந்தன. பாட்டி அவர்களைப் பார்த்து என்ன நடந்த்து எனக் கேட்குமுன்பே, பேரன் “பாட்டி” எனக் கதறிக்கொண்டே, பாட்டியின் மடியில் விழுந்தான். பேரனின் கதறலைக் கேட்டவுடன், பாட்டியின் சப்த நாடிகளும் துடித்தன. விபரம் புரியாது, இருவரையும் பார்த்து, “என்ன நடந்தது, சாந்தாவுக்கு குழந்தை பிறந்து விட்டதா? அவள் எப்படி யிருக்கிறாள்” எனக் கேட்டாள். பாட்டியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாது, கார்த்திக் அழுது கொண்டே இருந்தான். மெதுவாக இஸ்மாயின் பாட்டியைப் பார்த்து, “பாட்டியம்மா, நாம் எதிர்பார்த்த்துபோல் சாந்தாயம்மாவுக்கு பிரசவம் ஆகவில்லை. குழந்தை வயிற்றிலேயே இறந்துபோய்விட்ட்து. அது மட்டுமல்லாது, சாந்தாம்மாவின் கர்ப்ப்ப்பையும் மிகவும் பலகீனமாகவும் இனி மேல் ஒரு கருவைத் தாங்கும் சக்தியும் இழந்து விட்டதாம். அதனால், டாக்டர்களெல்லாம், சாந்தாவின் உயிர் பிழைக்க வேண்டுமென்றால், உடனடியாக அவர்களின் கர்ப்ப்ப்பையையும் எடுத்துவிட வேண்டும். தவறினால், அவர்களின் உயிர் தாங்காது” என்றும் தீர்மானமாக்க் கூறிவிட்டார்கள். பாவம் கார்த்திக்சார். யாருடனும் கலந்து யோசிக்கக்கூட நேரம் இல்லாது, சாந்தாவின் உயிர்தான் முக்கியம் என முடிவெடுத்து, அவர்களின் கருப்பையைஎடுத்துவிட சம்மதித்து, கை யெழுத்தும் போட்டுவிட்டார். உடனடியாக ஆபரேஷன் செய்து, வயிற்றில் இறந்து இருந்த குழந்தையுடன், அவருடைய கருப்பையையும் வெளியே எடுத்து விட்டார்கள். இனிமேல் சாந்தாவின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இனிமேல் அவர்களால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது. இதுபோன்ற கொடுமை இனி யாருக்கும், வரக்கூடாது. நீங்கள் செய்த பூஜையெல்லாம் எந்த வித பலனையும் கொடுக்கவில்லையே”என துக்கம் தாளாது சொல்லுவிட்டு, அவனும் வாய்விட்டு அழத்தொடங்கினான். பாட்டியினால் எதையும் தாங்கும் சக்தி இல்லை. ஆனால், குழந்தைபோல் தன் மடியில் அழும் பேரனைப் பார்த்து, தானும் அழுதால் அவனுக்குச் தைரியம் யார் சொல்வது என நினைத்து, “கார்த்திக், உன்னை அழக்கூடாதென்று சொல்ல என்னால் முடியவில்லை. ஆனால், ஆண்டவனின் சித்தம் அப்படியிருந்தால், நாம் என்ன செய்ய முடியும். ஏதோ, இந்தமட்டும், நமக்கு சாந்தாவின் உயிர் நிலைத்ததே, அதுவே போறும். நமக்கு குழந்தை வேண்டுமென்றால், ஊரில் எத்தனையோ குழந்தைகள் இருக்கு. ஒன்றே எடுத்து நாம் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், சாந்தா இல்லையென்றால், இந்த வீட்டின் சந்தோஷமே போய்விடுமே? குழந்தை இல்லாவிட்டால் என்ன, உன்னால் சந்தாவுடன் சந்தோஷமாக வாழ முடியாதா. உனக்கு அவள், அவளுக்கு நீ எனக் குழந்தையாக இருங்கள். இனி நீ தான் அவள் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நீ இப்போதே உன் துக்கம் தீருமட்டும் அழுது விடு. ஆனால் எக்காரணம் கொண்டும் நீ அவள் முன் வருத்தத்தைக் காட்டக்கூடாது. குழந்தையை விட சாந்தாதான் உனக்கு முக்கியம் என அவளுக்குப் புரியும்படி நீ நடந்து கொள்ள வேண்டும். இனிமேல் அவள் தேறவேண்டும். அவளின் மனமும், உடலும் தேறுவது நம் கையில்தான் இருக்கு. நீதான் அவளுக்குத் தைரியம் சொல்ல வேண்டும்” என மெதுவாக, தன்னுடைய துக்கத்தை அடக்கிக்கொண்டு சொன்னாள். சிறிது நேரம் சென்றபிந்தான், பாட்டிக்கு, இஸ்மாயினுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லவில்லையே என நினைவுக்கு வந்தது. பாட்டி, எழுந்து போய், சமையற்கட்டிலிருந்து, சர்க்கரை சம்படத்தை எடுத்து வந்து, “கார்த்திக், நம்முடைய துக்கத்தில் ஒரு சந்தோஷ சமாசாரத்தை நான் சொல்ல மறந்து விட்டேன். இஸ்மாயின், இங்கு வா, இந்தா நீ என் கையால் சர்க்கரை வாங்கிக் கொள்”எனக் கூறியதும், இருவரும் ஒன்றும் புரியாது பாட்டியைப் பார்த்து திகைத்தார்கள். அவர்களின் முகத்தைப் பார்த்து, “என் பேரனுக்கு குழந்தை இல்லையென்று யார் சொல்ல முடியும். நீயும் என் பேரந்தானே. உன் மனவி சலீமாவிற்கு இன்று காலையில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து தாயும் பிள்ளையும் நன்றாக இருக்கிறார்கள். நீ உடனே உன் வீட்டுக்குப் போய் உன் பிள்ளையையும், மனைவியையும் பார்த்துக் கொள்” எனச் சொல்லி அவனிடம் சந்தொஷமாக சர்க்கரையை கை நிறைய எடுத்துக் கொடுத்தாள். பாட்டி சொன்னதைக் கேட்டவுடன் ஒரு நிமிஷம் இஸ்மாயின் எதுவும் பேச முடியாது திகைத்து நின்றான். பிறகு மெதுவாகக் கேட்டான் “பாட்டி, சலீமாவுக்கு பிரசவம் ஆக இன்னும் இரு வாரங்களுக்கு மேல் ஆகுமென்றுதானே டாக்டர் சொன்னார்” என்றவனிடம், “இஸ்மாயின், மழையும், பிள்ளைபோறும் நம் கணக்கில் இல்லை. ஆண்டவனின் சித்தம் இன்று சலிமா ஒரு பிள்ளைக்குத் தாயாக வேண்டுமென்பது. நீங்கள் போனபின், உன் வீட்டிலிருந்து ஒரு பையன் வந்து, சலீமாவிற்கு பிரசவ வலி கண்டு அவள் துடிக்கிறாளென்றும், உடனடியாக உன்னை அழைத்துபோக வந்தான். நீ இல்லாத்தால், நானே அவனுடன் போய் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அவளால் ஒரு அடிகூட நடக்க முடியாதென்றும், அவளுக்கு பனிக்குடம் உடைந்து, பிரசவ நேரம் நெருங்கிவிட்டது என்று. அதனால், நானே உடனே அங்கிருந்த இரு பெண்மணிகளின் உதவியுடன், அவளுக்குப் பிரசவம் பார்த்தேன். பகவான் அருளால், கொஞ்ச நேரத்திலேயே அவளுக்கு நல்லபடியாக பிரசவம் ஆகி, ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. பிரசவம் முடிந்தபின், அவளுக்கும் குழந்தைக்கும் செய்ய வேண்டிய சிகிச்சைகளையும் செய்து முடித்து விட்டு, நான் சந்தோஷமாக வந்து, குளித்துவிட்டு, நீங்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் சந்தோஷம், துக்கம் இரண்டையும் நாம் அனுபவிக்க்க வேண்டுமென்பது இன்றைய விதி. புது வரவை நினைத்து, நம்முடைய துக்கத்தை மறப்பதுதான் புத்திசாலித்தனம். கார்த்தி, நீயும் அவனுடன் போய் குழந்தையையும்,சலீமாவையும் பார்த்துவிட்டு, அவனுக்குத் தேவையான பணத்தையும் கொடுத்துவிட்டு வா. இஸ்மாயின் ஒரு வாரம் வீட்டிலேயே இருந்து சலீமாவையும், குழந்தையையும் கவனித்துக் கொள்ளட்டும்.” எனச் சொல்லி, இருவரையும் அனுப்பினாள். கொஞ்சம் கொஞ்சமாக சாந்தாவின் உடலும் தேறி, அவளும் விட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவளுடன் பாட்டிக்கு உதவியாக ஒரு மாமியும் இருந்தார்கள். இருவருமாக சாந்தாவை நல்லவிதமாகப் பார்த்துக் கொண்டார்கள். கார்த்திக்கும், பாட்டி சொன்னபடியே, தன்னுடைய துக்கத்தை வெளியில் காட்டாமல், சாந்தாவின் மனதிற்கு இதமாகவே இருந்தான். இஸ்மாயினும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டிருந்தான். சலீமாயும் குழந்தையும் நன்றாகவே இருந்தார்கள். ஆனால், திடீரென்று, ஒரு நாள் சலீமாவிற்கு ஜுரம் கண்டது. டாக்டரிடம் மருந்து வாங்கிவந்தார்கள். டாக்டரும் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டுத்தான் போனார்கள். ஆனால் ஜுரம் மட்டும் குறையவில்லை. அதுவே நிமோனியாவாகி, ஜன்னி கண்டுவிட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தும், பலனின்றி, சலீமா குழந்தையையும், இஸ்மாயினையும் தவிக்க விட்டு, இறைவனிடம் சேர்ந்தாள். பாட்டியம்மாவிற்கு, தாளாத துக்கம் உண்டானது. யார் யாருக்கு என்ன ஆறுதல் சொல்வது. எல்லாரும் ஒருவொரு விதமான இழப்பில் இருந்தார்கள். குழந்தைக்கு எந்த இழப்பையும் உணர உணர்வு இல்லை. அதற்கு பசி வந்தபோது, வாய்விடாது அழுது தன்னைச் சுற்றி இருந்தவர்களையும் அழச்செய்தது. குழந்தையழும்போது, என்ன செய்வதென்று தெரியாமல், இஸ்மாயின் குழந்தையை பாட்டியிடம் கொடுத்துவிட்டு, “பாட்டி, நான் இந்தக் குழந்தையை எப்படிக் காப்பாற்றுவேன், அழும் அவனுக்கு நான் என்ன கொடுக்க முடியும் ஏன் என்னையும் ஆண்டவன் சோதனை செய்கிறார். நான் யாரிடம் போயென்ன கேட்க முடியும்” எனக் கதறினான். பாட்டி குழந்தையை எடுத்துக் கொண்டு, உள்ளே போனாள். அங்கு சாந்தா, தன் மார்பகங்களில் ஏற்பட்ட வலியினால் துடித்துக் கொண்டிருந்தாள். பாட்டி ஒரு கணம் தன் கைகளில் இருந்த சிசுவைப் பார்த்தாள். அதுவே பசி தாளாமல் அழுது கொண்டிருந்தது. பேத்தி, சாந்தாவைப் பார்த்தாள். குழந்தையிழந்த சாந்தாவோ, தன் மார்புகளில் சுரந்த பாலினால், மார்பு கட்டிக்கொண்டு, வலி தாளாமல் அவளும் கண்ணீர் விட்டு அழுதாள். இருவரின் அழுகையையும் நிறுத்த ஒரேவழி பாட்டியின் மனதில் தோன்றியது. உடனே, குழந்தையை சாந்தாவிடம் கொடுத்து, “சாந்தா, அழும் குழந்தையின் பசியை ஆற்று. உன் வலியும் போகும், குழந்தையின் பசியும் தீரும்” எனக் கூறினாள். பாட்டியின் முகத்தைப் பார்த்தாள் சாந்தா. அவளுள் ஒரு உணர்வும் தோன்றியது. ஒன்றும் சொல்லாது, பாட்டியின் கையிலிருந்த குழந்தையை வாங்கினாள். உடனே தன்னுடைய படுக்கையினை அடைந்து, குழந்தையை அனைத்துக் கொண்டு, தன்னுடைய மார்பில் குழந்தையின் வாயை வைத்தாள். குழந்தையின் அழுகை உடனேயே நின்று விட்டது. அது சாந்தாவின் மார்பில் சுரந்த அமுதத்தை ஆனந்த்துடன் சுவைத்துக் குடித்தது. சாந்தாவின் மனமும் உடலும் ஒரே நேரத்தில் சாந்தி அடைந்தது. இருவரின் நிலையைப் பார்த்துப் பாட்டியும் மன நிறைந்தது. பாட்டியும் முகத்தில் சாந்தியுடன் வெளியே வந்தாள். குழந்தையில்லாது வெளியே வந்த பாட்டியைப் பார்த்து, கார்த்திக்கும், இஸ்மாயினும் ஒன்றும் புரியாது திகைத்தனர். அவர்களிப் பார்த்த பாட்டி, “குழந்தைக் கண்ணன் தன் தாயார் யசோதையிடம் சேர்ந்து விட்டான். இதுதான் ஆண்டவனின் சித்தம் போல் இருக்கிறது. இல்லையென்றால் ஒரே சமயத்தில், நம் இருவர் வீட்டியும் இப்படிப்பட்ட சம்பங்கள் நடக்குமா? இனிமேல் சலீமாவின் குழந்தைக்கு சாந்தாதான் தாய். பாட்டியம்மா சொன்னதைக் கேட்டவுடன் இஸ்மாயினுக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. மெதுவாக பாட்டியிடம் கேட்டான் :என்ன சொல்கிறீர்கள் பாட்டியம்மா, ஒரு முஸ்லீம் தம்பதிகளுக்குப் பிறந்த ஒரு குழந்தை எப்படி ஒரு பிராமணக் குடும்பத்திற்கு குழந்தையாக முடியும்” எனத் தயங்கியபடியே. பாட்டி அவனுக்கு “இஸ்மாயின், நீ உன்னை முகமதியன் என்று சொல்கிறாய். எப்படி. உன் மூதாதையர்கள் மசூதிக்குச் செல்வதாலும், அவர்கள் உங்களின் மத நூல் குரானைப் படிப்பதாலுந்தானே. நாங்களும் எங்களின் மூதாதையர்களின் வழி பற்றி, கோவிலுக்கும், இராமாயணம், பகவத்கீதை முதலிய மத நூல்களை படித்து வருவதாலும், இருவருக்கும் வேவ்வேறு மதமாக இருக்கிறேம். மதமென்பது மனிதனால், தங்களின் சுகத்திற்காக, வசதிக்காக நாமே ஏற்படுத்திக்கொண்ட பிரிவுகள்தானே தவிர, எந்த ஒரு இந்து கடவுளோ, உன் மனமான முஸ்லீம் கடவுளோ உண்டாக்கவில்லை. கடவுளுடைய உன்னதமான நோக்கமே மனிதர்கள் மனித நேயத்துடன், ஒன்றுபட்டு, ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதுதான். உண்மையிலேயே துக்கப்படுபவர்களுக்கு துனையாக இருந்து, அவர்களின் துக்கத்தில் பங்கு கொண்டு, அவர்களுக்கு நல்ல ஆறுதல்களைச் சொல்லி, அவர்களை துன்பத்தின் வலையிலிருந்து விடுவிப்பதுதான் மனித நேயத்தில் கொள்கையாகும். இப்போது, உன் குழந்தைக்குத் தாயின் அரவணைப்பும், பரிவும் தேவை. சாந்தாவிற்குத் தேவை அவளின் இழப்பிற்கு ஈடாக ஒரு குழந்தை. அவர்களின் இருவரின் இழப்பிற்கும், மற்றவரிடம் மருந்து இருக்கிறது. இப்போது நம் கடமை இருவரின் துன்பமும் தீர்ந்து, இருவரின் வாழ்வும் இன்பமாக இருக்க வேண்டும். துன்பத்தைக் கொடுத்த ஆண்டவன், அதற்கான மருந்தையும் நம்மிடமே வைத்திருக்கிறான். ஆண்டவன் நமக்குச் சுட்டிக்காட்டிய கடமையைச் செய்யவதுதான் நம்முடைய வாழ்வின் வரமாகும். மற்றவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள், அவர்களின் கூற்றுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கொண்டு நம்முடைய வாழ்வை இருளாகச் செய்ய வேண்டாம். அவர் காட்டிய வழியில் வெளிச்சத்தைக் காண்போம். வாழ்க்கை வாழ்வதற்காகத்தானே அன்றி, நமக்கு நாமே துன்பவலையைப் பின்னிக்கொண்டு, நிம்மதியற்று இருப்பதற்கல்ல. குறிகிய நோக்கில் வாழ வேண்டாம். நாமெல்லாம் ஒருவரின் குழந்தைகள்தாம். ஒருவந்தான் தேவன். நாமெல்லாம் இந்தியர்கள், ஒரே குலம்தான் என்ற பரந்த நோக்கோடு வாழுவோம். வந்த துக்கங்களை மாற்றி, அதிலேயே இன்பம் கண்டு வாழுவோம்.” என இஸ்மாயினுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வாழும் வகை என்னவென்று கூறி, உள்ளேச் சென்று பசிதீர்ந்து, சொப்புவாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கும் கண்ணணைத் தூக்கிக் கொண்டாள். ஆண்டவனின் தோட்டத்தில் பூத்திருக்கும் இன்பப் பூக்களைப்பார்த்து நாளும் மகிழுவோம் எனப் பூரிப்பாகச் சொல்லி சிரித்தாள் பாட்டியம்மா, அவருடைய சந்தோஷம் மற்றவர்களையும் பற்றிக் கொண்டது.

 

(ஜெயரமணி)

Monday, 3 June 2013

உன்னதமான தானம்

(ஜெயரம

உன்னதமான தானம்

(ஜெயரமணி)

ஈஸ்வரன் மருத்துவமணையின் வாராண்டாவில் அமர்ந்திருந்தார். அவரின் முகத்தில் கவலைரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன. அவரின் மனைவி ஜெஹதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைக்காகச் வந்திருந்தாள். ஆனால் அவளின் உடல் நலம் மேலும் மேலும் சீர்கெட்டுப் போய், டாக்டர்கள் அவரிடமும், அவரின் பிள்ளைகளிடமும் “இனிமேல் உங்களின் தாயாருக்கு எந்த விதமான சிகிச்சையும் தேவையில்லை. அவர் தன்னுடைய இறுதிகாலத்திற்கு வந்து விட்டார். நீங்கள் இனிமேல் அவரை இங்கு வைத்து எந்த விதமான மருத்துவமும் பார்க்க முடியாது. அதனால் நீங்கள் அவரை நல்லபடியாக இப்போதே உங்களின் வீட்டிற்கு எடுத்து சென்று விடுங்கள். அவர் வாழந்த வீட்டிலேயே அவர் அடக்கமாகட்டும்”என மிகவும் வருத்தத்துடன் சொல்லிவிட்டார்கள். அதனால், பிள்ளைகளும் தாங்கள் செலுத்தவேண்டிய சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அம்மாவை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்து விட்டார்கள்.

வீட்டில் ஜெஹதாவின் படுக்கையறையிலேயே படுக்க வைத்து விட்டார்கள். கட்டிலின் பக்கத்தில் ஈஸ்வரன் உட்கார்ந்து, கண்களில் நீர் வழிய தன் மனைவியின் முகத்தேயேப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குள் தான் இனிமேல் எப்படி யிருப்போம், நமக்குத்தான் யாரிடமும் இதமாக பழகவோ. அநுசரனையாக பேசவோ தெரியாதே. தனக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் ஜெஹதாவே பார்த்துப்பார்த்து செய்து விட்டதால், அவருக்கு தன்னுடைய தேவைகள் எதுவென்றேத் தெரியாது வாழ்ந்து விட்டார். அவர் சின்னக் குழந்தையாக இருந்தப்போதே அவருடைய தகப்பனார் கால மானதால், அவருடன் கூடப் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. அவருடைய அம்மாவும், தன் சொந்த உழைப்பினாலேயே மகனை வளர்த்து வந்ததால், கூடிய வரையில் இருவருமே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடனோ, உறவினர்களுடனோ ஒதுங்கியே வாழ்ந்து வந்ததால். மற்றவர்களிடம் பழகும் சந்தர்ப்பங்களும் இல்லை. படித்து முடித்துவுடன், உடனடியாக அரசுத்துறையில் ஒரு பெரிய பதவியில் சேர்ந்துவிட்டதால் அலுவலத்திலும் அதிகமாக யாருடனும் நெருங்கிப் பழகவும் இல்லை. இயற்கையாகவே அவருக்குள் இருந்த கூச்ச சுபாவத்தினாலும், தன்னுடைய பணியில் இறுக்கத்தாலும், யாருடனும் நெருங்கிப் பழகினால், அவர்கள் தன்னிடம் ஏதும் உதவி கேட்டால், அதை நம்மால் சட்டப்பூர்வமாகச் செய்ய முடியாமல் போனால் வீணாக மற்றவர்களின் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாக வேண்டுமென்பதாலும், அவராக யாருடனும் சிநேகமாக இருக்க இயலவில்லை. அதனால், அவருக்கு அலுவலகத்தில் “சிடுமூஞ்சி, யாருடனும் ஒட்டாத ஓணான்” எனப் பலப் பேர்கள் ஏற்பட்டன. அதெல்லாம் தெரிந்தும், தன்னுடைய சுவாப்படியே அவர் எதற்கும் கவலைப்படாமல், தனி மரமாகவே இருந்துவிட்டார். அவ்வப்போது ஜெஹதா சொல்லுவது உண்டு. “நாம் தனியாக காட்டில் வாழும் மிருகஇனமல்ல. ஊரில் மனிதர்களுடன் வாழும் மானிடர்கள்தான். நீங்கள் உங்கள் சுவாபத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நமக்கு எப்பவும் அக்கம் பக்கத்தவர்கள், உறவினர்களின் உறவும் சிநேகமும் வேண்டும்”எனச் சொல்லும்போதும் அவர் சிரித்தபடியே “எனக்குப் பதில் நீ தான் எல்லாருடனும் நன்றாகப் பழகுகிறாயே. எனக்கு நீ மட்டும் போறும். உலகில் வேறு யார் உறவோ, பிரியமோ வேண்டாம்” என மறுத்துவிடுவார்.

வீட்டிற்கு ஜெஹதாவின் ஆபீசிலிருந்து யார் வந்தாலும் அவர்களுடன் எதுவும் பேச மாட்டார். உடனடியாக, அங்கிருந்து வேறு இடத்திற்குப் போய் விடுவாரே தவிர, வருபவர்களை வரவேற்று, அவர்களுடன் சில வினாடிகள் கூட செலவிடமாட்டார். அதைப்பற்றி யாரும் ஜெஹதாவிடம் கேட்டால், அவள்தான் சிரித்தபடியே, செல்லுவாள். அவளுக்கும் தன் கணவர் எல்லாரையும் போல் வருபவர்களிடம் சகஜமாகப் பழகவில்லையே என மனத்தாங்கல் இருந்தாலும், அவரின் மன நோகும்படி எதுவும் சொல்ல மாட்டாள். இதையெல்லாம் நினைத்து பார்த்தவருக்கு, கண் முன்னேயே அவருடைய எதிர்காலம் ஒரு போராட்டமாக இருந்தது. மற்றவர்களுடன் மட்டுமல்ல, அவர் தான் பெற்ற பிள்ளைகளிடம் கூட அப்படித்தான் ஒரு இடைவெளியுடனே இருந்து பழகிவிட்டார். அவருக்கும் பிள்ளைகளுக்கும் ஜெஹதாதான் பாலமாக இருந்து வந்தாள். அந்தப்பாலம் இனி இல்லை. நமக்கென்று இனி யார் இருக்கிறார்கள் என எண்ணிப்பார்த்து தனிரக்கம் அடைந்தார். இத்தனை நாட்களும் பிள்ளைகளிடம் ஒட்டாமல், அவர்களுக்குத் தேவையானவற்றையெல்லாம், பார்த்துப் பார்த்து ஜெஹதாதான் செய்து வந்தாளேதவிர, அவராக ஒரு நாள் கூட பிள்ளைகளிடம் சென்று பரிவுடனோ, பாசத்துடனோ பேசியதுகூட இல்லை. அவர்களின் திருமனங்கள்கூட ஜெஹதாவின் முயற்சியாலேயே நடந்ததுதான். திருமனத்தின் போது மற்ற உறவினர்களைப்போல் அவரும் இருந்தாரே தவிர, தகப்பனார் என்ற வகையில் எந்த ஒரு தனியான ஈடுபாட்டுடன் நடத்தவில்லை. ஆனால் ஜெஹதாதான் தன் இயற்கையான சுபாவத்தால் எல்லாரிடமும் கலகலப்பாக இருந்து, அவரின் ஈடுபாடற்ற தன்மையை பிறருக்குத் தெரியாமல் நடந்து கொண்டாள். திடீரென்று, இனிமேல் பிள்ளைகளிடம் பாசமாகவோ, பரிவுடனோ பழகுவது எப்படியெனத் தெரியாமல் மனதிற்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். மனதிற்குள் மருகிக்கொண்டிருந்தவரின் காதுகளில் கூடத்தில் தன் பிள்ளைகள் இருவரும், அவர்களின் மனைவிமார்களுடன் பேசிக்கொண்டிருந்த உரையாடல் கேட்டது.

கூடத்தில் மூத்தவனும், இளயவனும் தங்களின் மனைவி சகிதம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தெளிவாகவே பேசியதால், அவர்களின் உரையாடல் ஈஸ்வரனின் கவனத்தை நன்றாகவே ஈர்த்த்து. மூத்தவனான ராகவன், தன் தம்பி சுந்தரிடம் கேட்டான்.

“சுந்தர், நீ எத்தனை நாட்கள் விடுமுறையில் வந்துள்ளாய்?

நானும் உன்னைப்போல்தான், அப்பாவிடமிருந்து ஃபோன் வந்தவுடன், உடனடியாக இரு நாளுக்குத்தான் லீவு போட்டுவந்தேன். ஆனால் இங்கு வந்தபின், அம்மாவின் நிலையைப் பார்த்து, என் ஆபீசுக்குப் போன் போட்டு, இந்த வாரம் வரையில் லீவில் இருப்பதாகச் செய்தி அனுப்பினேன். எனக்கும் வரும் திங்கட்கிழமை போயாகவேண்டும். உன் விஷயம் எப்படி?

நானும் உன் மாதிரிதான் வந்தேன். ஆனால் என்னால் உன்னைப்போல் லீவு போட்டுவிட்டு, இங்கேயே இருக்கமுடியாது. உன்னிடம் ஏற்கனவே சொன்னதுபோல், எனக்கு ஒரு வருடகாலத்திற்கு மலேசியாவுக்குப் போக உத்திரவு வந்துவிட்டது. நான் எந்தக் காரணத்தைச் சொல்லியும், என்னுடைய லீவை அதிகப்படுத்தமுடியாது. மேலும் நான் உடனடியாக என்னுடைய வெளிநாட்டுப் பணியில் சேராவிட்டால், எனக்குப் பதில் உடனடியாக என்னுடைய ஆபீசில் வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அனுப்பி விடுவார்கள். நான் இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக, கிட்டத்தட்ட ஓராண்டு காலம் மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது இந்த தடவை நான் போகமுடியாது போனால், பிறகு என் ஆபிசில் மீண்டும் ஒருமுறை என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஒருவருக்கு ஒரு முறைதான் சந்தர்ப்பம் தருவார்கள். தவற விட்டோமானல், அவ்வளவுதான், என்னுடைய ஒரு வருட உழைப்பும் பலனின்றிப் போய்விடும்.

அப்போது, ராகவனின் மனைவி, சுந்தரிடம் “சுந்தர், நீதான் இந்த சமயத்தில் உன் அண்ணாவுக்குத் துனையாக இருக்கவேண்டும். இப்போதே அவருக்கு வயது நாற்பதைக் கடந்துவிட்டது. இந்த வாய்ப்பு எங்களுக்கு ஒருமுறைதான் கிடைக்கும். இப்போது, அவர் வெளிநாடு போகும் வாய்ப்பைத் தவற விட்டால், இனிமேல் அது அவருக்குக் கிடைக்காத ஓன்றாகத்தான் போகும். இப்போது நீ மட்டும் உன் அண்ணாவின் எதிர்காலத்தை உணர்ந்து, அவர் உடனடியாக ஊருக்குப் போய் அலுவலில் சேர்ந்து, அவர் பணியில் தொடர்ந்து, வெளிநாடு போகும் வசதி கிடைத்தால், அவருக்கு அது ஒரு பெரிய வாய்ப்பாகும். அதனால்தான், நீ இங்கேயே இருந்து அம்மாவின் இறுதி காலத்தில், பிள்ளைகள் செய்யவேண்டியதைச் செய்தால் போதும். நீ என்ன சொல்கிறாய்?”எனக் கேட்டாள். சுந்தர் என்ன பதில் சொல்வதென்று யோசிப்பதற்குள், சுந்தரின் மனைவி சாரு “அதெப்படி முடியும். தாய்க்குத் தலைப்பிள்ளைதானே எல்லாம் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் உங்களின் கடமையை நீங்கள் செய்யாவிட்டால், அது சரியாகுமா? மேலும் எங்களுக்கும் பல பிரச்சினைகள் உண்டு. அவரின் ஆபிஸில் இப்போதுதான் இவருக்குப் பிரமொஷன் கிடைக்க இருக்கிறது. இவர் வேலை செய்வது தனியார் நிறுவனம். அதில் சீனியாரிட்டியெல்லாம் கிடையாது. முதலாளியின் மனதுப்படிதான் எல்லாம் நடக்கும். அப்போதுதான் அவரின் பெயரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இவரும் இப்போது, அம்மாவிற்காக் லீவு போட்டுவிட்டு இங்கேயிருந்து விட்டால்,மீண்டும் உங்கள் தம்பிக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்குமென்று சொல்ல முடியாது. அதனால்,எங்களாலும் இங்கேயே இருக்க முடியாது. மேலும் எங்களின் பிள்ளைகளின் படிப்பும் தடை படும்” என்றும்திட்டமாக சுந்தரின் கோரிக்கையை மறுத்து விட்டாள். சகோதரர்கள் இருவருக்கும் தங்களின் எதிர்காலந்தான் முக்கியமாக இருந்ததேதவிர, இந்த சோதனையான சமயத்தில், தங்களின் தகப்பனார் தனியாக எப்படி கஷ்டப்படுவார்,அவருக்கு தங்களைத்தவிர, ஆறுதலாக இருக்க யாருமில்லையே என்ற உணர்வுகூட இல்லாமல் இருந்தார்கள்.

ஜெஹதாவுடன் அவர்களுடைய படுக்கையரையில் இருந்த ஈஸ்வரைன் காதில் விழுந்தது. பிள்ளைகளின் வாதத்தில் இருந்த சுயநலம் தெரிந்தது. பிள்ளைகளிருவருக்கும் திருமணமாகி, அவர்களுகென்று ஒரு குடும்பம் வந்த பின் இது நாள்வரை, ஜெஹதாவோ, ஈஸ்வரனோ ஒரு முறைகூட அவர்களின் வீட்டிற்குப் போனதுமில்லை, அவர்களிடம் உதவியென்றோ, அன்பளிப்பென்றோ ஒரு பொருளும் ஏற்றுக் கொண்டதுமில்லை. இப்போது ஜெஹதா தன்னுடைய இறுதி காலத்தில் இருக்கும்போதுகூட, பிள்ளைகளுக்குத் தங்களின் தாயாரின் நிலையோ, தன்னுடைய தனிமையோ தெரியவில்லையே. பெற்றோர்கள் கேட்காமலேயே, பிள்ளைகளாகச் செய்ய வேண்டிய தார்மீகக் கடமையைக்கூட ஒரு சுமையாக நிணைக்கின்றவர்களிடம் போய், இதெல்லாம் உங்களின் ஜீவாதார கடமைகள் என எடுத்துச் சொல்லவேண்டுமா என நிணைத்து, ஈஸ்வரன் மனதுக்குள் துக்கித்துக் கொண்டார். ஜெஹதா இருந்த வரையில் அவருக்கும், சுந்தர், ராகவன் இருவருக்குமிடையில் ஒரு பாலமாக இருந்தாள். பிள்ளைகள் அவரிடம் நேரில் போய் தங்களுக்கு வேண்டுமென்று ஒரு நாளும் எதுவும் கேட்டதுமில்லை, அவரும் பிள்ளைகளிடம் உங்களுக்கு ஏதும் தேவையா எனக் கேட்டுச் செய்து கொடுத்த்துமில்லை. எல்லாமே ஜெஹதாவின் மூலம்தான் நிறேவேறும். பிள்ளைகள் கூட அவளிடம் சென்று தங்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்கும்வரை அவளும் காத்திருக்க மாட்டாள். அவர்களின் முகத்தைப் பார்த்தே யார் யாருக்கு என்னென்ன தேவை எனத் தெரிந்து தானே முன் வந்து அவைகளை முடித்துத் தருவாள். அந்தத் தாயா இனி அவர்களிடம் போய் எனக்கு நீங்கள் என்ன செய்யனுமெனச் சொல்வாள். ஒரு போதும் மாட்டாள். ஜெஹதாவின் சலனமற்ற முகத்தைப் பார்த்தவரின் துக்கம் எல்லை மீறிப் போனது. அவளின் கடந்த காலச் சம்பவங்கள் இரண்டு அவரின் மனதில் ஓடியது.

ஒரு முறை ராகவன் தன் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது, ஈஸ்வரனும் தன் அலுவல் நிமித்தம் வேறு ஊரில் இருந்தார். அப்போது, ஜெஹதாவின் கல்லூரியில் ஒரு கலாசார மாணவர் பரிவர்த்தனை என அவளின் கல்லூரியிலிருந்து பத்து மானவிகள் சிங்கப்பூருக்கு ஒரு பத்து நாட்கள் சுற்றுளாச் செல்ல திட்டமொன்று கூடி வந்தது. அந்தக் கல்லூரியில் ஜெஹதாதான் செல்ல வேண்டுமென்று தீர்மானித்து, அவளை அந்தப் பணிக்காக, பத்து நாட்கள் செல்ல உத்திரவும் கொடுத்தார்கள். அந்தச் செய்தியைக் கேட்டவுடன், ஈஸ்வரன் மிகவும் சந்தோஷமடைந்து அவளிடம் உடனேயேச் சொன்னார், “ஜெஹதா, இது நீ இத்தனை நாட்களாக உன் கல்லூரியில் செய்த உழைப்பிற்கும், உன்னுடைய ஈடுபாட்டிற்கும் கிடைத்த ஒரு அங்கீகாரம்தான். நீ எதைபற்றியும் யோசிக்காமல், பத்து நாட்கள், உனக்காக இரு. உன்னுடைய தாயாரையும், தகப்பனாரையும் ஒரு பத்து நாட்கள் வந்து பிள்ளைகளுக்கும், வீட்டிற்கும் துனையாக வைத்துவிட்டுச் செல். நானும் வாரக் கடைசி நாட்களில் வந்து அவர்களுக்குத் துனையாக இருப்பேன்” எனவும் ஆறுதலாகச் சொல்லி, அவளின் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்யச் சொன்னார். ஆனால், அப்போது அங்கு வந்த, ராகவனோ விஷயத்தைக் கேட்டுத் தன் தாய்க்குவந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தைப் பற்றிச் சந்தோஷப்படாமல், ஜெஹதாவைப் பார்த்து “என்னம்மா நீ எங்களிடம்கூட கேட்காமல் போக முடிவு செய்து விட்டாயா? எனக்கு இப்போதுதான் இறுதிப் பரீட்சைக்குப் பிராட்டிகல் இருக்கும். இப்போதுபோய் நீ என்னைத் தனியாக விட்டுப் போனால், எனக்கு என் பாடத்திற்கும், மற்றவைகளைக் கவனிக்கவும் யார் இருப்பார்கள்? என்னால் நீ இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. நீ இல்லையென்றால், என்னால் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்தவும் முடியாது. இந்த வருஷம் நீ போக வேண்டாம்,” எனக் கோபமாகவேச் சொன்னான். அதைக் கேட்ட ஈஸ்வரன்கூட அவனிடம் “என்ன ராகவன். நீ இனியும் குழந்தையில்லை. வரும்வருடம் நீயும் கல்லூரிக்குப் போக வேண்டியவன். அப்படியிருக்குபோது, இதேன்ன குழந்தையைப் போல அம்மாவிடம் பிடிவாதம் செய்வது? ஒரு பத்து நாட்கள் உங்களால் தனியாக இருக்க முடியாதா? உங்களிருவருக்கும் அதற்கான வயது இல்லையா. உங்களின் துனைக்குத்தான் தாத்தா, பாட்டி வரைபோகிறார்களே, நீ உன்னைத்தான் நினைத்துப் பார்க்கிறாயே தவிர, உன் தாயின் ஆசை என்னயெனக் கூட அறிந்து கொள்ள வில்லையே? அவளும் இந்தக் கல்லூரியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறாள். அவளின் தகுதிக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பை நீஉனக்காக இழக்கச் சொல்வது நியாயமல்ல. உன்னால் அவளூக்கு இப்படி ஒரு வாய்ப்பை வாங்கித்தர முடியுமா? சமூகத்தில் அவளுக்குக் கிடைக்கும் வசதிகளை நம்மால் அவள் இழக்கக் கூடாது. நீ அம்மா போவதற்குத் துனையாக இருக்க வேண்டுமேயன்றி தடங்கலாக இருக்காதே” என கட்டாயமாகச் சொல்லிவிட்டு வெளியேப் போய்விட்டார்.

ஆனால், அன்று இரவு அவர் வீட்டிற்குத் திரும்பிய போது, ஜெஹதா அவரிடம் மெதுவாகச் சொன்னாள் “ நீங்கள் என்னை தவறாக நினைகாதீர்கள். உங்களின் ஆசையை நான் புரிந்து கொண்டேன். அதே சமயம் நம்முடைய பிள்ளைகளின் தேவைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டாமா. இது வரை நான் உங்களையோ, அவர்களையோத் தனியாக விட்டுவிட்டு, எங்கும் சென்றதில்லையே. திடீரென்று, நான் கல்லூரிக்காக் அவர்களைவிட்டுத் தனியாக ஒரு பத்து நாள் போவதைக் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கம் தான் ராகவனை இப்படி கட்டாயமாகப் பேச வைக்கிறது. நீங்கள் அவனின் மேல் கோபம் கொள்ளாதீர்கள். அவர்களின் உலகம் நாமாக இருப்பதால்தான், ஒரு சிறு இடைவெளியைக் கூட அவர்கள் சந்திக்கத் தயாராக இல்லை. எனக்கும், உங்களையும், அவர்களையும் விட்டுவிட்டுத் தனியாகப் போய் சிங்கப்பூரில் இருப்பதும் கஷ்டமாக இருக்கும். உல்லாசமாக வெளியூருக்குப் போய்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமோ, எனக்குத் தீராத ஆசையோ இல்லை. நான் நாளைக் காலையில் எங்களின் பிரின்ஸ்பாலிடம் பக்குவமாகச் சொல்லிவிடுகிறேன். எனக்குப் பதில் போவதற்குத் தயாராக பலர் இருக்கின்றனர். அதனால் அவருக்கும் இதனால் எந்தவிதமானச் சங்கடமும் இருக்காது. நீங்கள் ராகவனின் பேரில் கோபம் கொள்ளாதீர்கள். இதுதான் நான் உங்களிடம் கேட்டுக்கொள்வேதென்றாள். மூத்தனுக்காக தனக்குக் கிடைத்த ஒரு வெளிநாட்டு வாய்ப்பை ஜெஹதா இழந்தாள். இன்று அவளின் அந்தப் பிள்ளைதான், அவளின் கடைசிகாலத்தில் கூட அவளுடன் இருக்கவும், தனக்கு வருகின்ற வெளிநாட்டு வாய்ப்பையும் இழக்கத் துணியவில்லை. ஜெஹதா தாய். ராகவனோ ஒரு பிள்ளைதானென்று, சொல்லாமல் சொல்லி விட்டான். அவனிடம் இனி இது பற்றி பேசுவது தனக்கோ, தன்னுடைய அன்புமனைவிக்கோ தரமற்றதென்று உணர்ந்தார்.

அடுத்ததாக, சுந்தரின் மனைவி சொன்னதை நினைவு படுத்திக் கொண்டார். இதே மாதிரி ஒரு வாய்ப்பைத் தான் ஜெஹதாவும் சுந்தருக்காக இழந்தாள். அது சுந்தரின் மனைவிக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் சுந்தருக்கு கட்டாயம் நினைவில் இருக்க வேண்டுமே? அவனும் பள்ளியிறுதி ஆண்டில் படிக்கும் போது தான், ஜெஹதாவிற்கும் பதவி உயர்வு வந்தது. அவளை துனைப் பிரின்சிபாலாக அங்கீகரித்து, பக்கத்தில் உள்ள ஒருகல்லூரிக்கு மாற்றல் செய்தார்கள். அவளும் அரசுப் பணியில் இருந்ததால், பணியிடம் மாற்றம் வழக்கம்தான். அதுவும் மேற் பணிக்குப் போகும் போது கட்டாயம் வேறு இடத்திற்குத்தான் போகவேண்டும். இது எழுதாத ஒரு சட்டம்தான். அப்போது சுந்தர் அவளின் பிரமோஷனுக்குக் குறுக்கே நின்றான். தான் 12ஆம் வகுப்பில் இருப்பதால், தனக்குக் கட்டாயம் அம்மாவின் உதவி தேவையென்றும், அவள் தன்னை விட்டுப் போனால், தான் தன் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவதாகவும் முரண்டு பிடித்தான். அப்போது ஈஸ்வரன் அவர்களுடந்தான் இருந்தார். அவரும் சுந்தரைப் பார்த்து, “சுந்தர் நீ சொல்வது சரியல்ல. அம்மாவிற்கு தகுதியடிபடையில் வரும் பதவி உயர்வுக்கு நீ தடையாக இருக்காதே. உனக்கும் வயது ஆகியது. நீ இன்னும் அம்மாவிடம் சலுகையை எதிர்பார்க்கும் பிள்ளையல்ல. உங்களையெல்லாம் விட்டுவிட்டு அம்மா இதுவரை எங்குமே போனதில்லை. இப்போது அவளுக்கு அவசியம் வெளியூர் செல்லவேண்டிய வாய்ப்புவந்துள்ளது. நான் இங்கு இருக்கும்போது உனக்கு என்ன கஷ்டம். நான் உங்களையெல்லாம் கவனித்துக் கொள்ள மாட்டேனா. உங்களின் சாப்பாட்டிற்காக அம்மா தனியாக ஒரு பாட்டியே ஏற்பாடு செய்து விட்டுப் போவாள். அந்தப் பாட்டி உங்களுக்குத் தேவையானதெல்லாம் வந்து செய்து வைக்கப் போறாள். மேலும் அம்மாவும் இரு வாரங்களுக்கு ஒரு முறை வார இறுதியில் வந்துதான் போவாள். அவளுக்கும் கல்லூரி விடுமுறை நாட்கள் வருமல்லவா. அப்போதெல்லாம் அவள் இங்கு தானே வரப்போகிறாள். அப்போது நீங்கள் உங்களின் தேவைகளை அவளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதனால், வீனாகப் பிடிவாதம் செய்யாதே. நீ இப்போது படிப்பை நிறுத்தினாலோ, அல்லது அதில் சரியான கவனம் செலுத்தவில்லையென்றாலோ உனக்குத்தான் நஷ்டம். உன் எதிர்காலம் தான் பாதிக்கும். புரிந்து கொண்டு பொறுப்பான பிள்ளையாக நடந்து கொள். என்னைக் கோபப் படுத்தாதே” எனத் தானும் கோபமாகச் சொன்னதும் அவரின் நினைவில் வந்தது.

ஆனால் நடந்தது என்ன. சிறுவயதிலிருந்தே தன்னுடைய பிடிவாதத்தால் சாதித்துக் கொண்டது போல் இப்போதும் அவனின் பிடிவாதம் எல்லையில்லாமல் போயிற்று. சுந்தர் இரு நாட்களாக தாயிடம் முகம் கொடுத்துப் பேசாமலும், உண்ணாமலும் இருந்து, கடைசியில் தான் நினைத்ததை அடைந்தே தீர்ந்தான். ஈஸ்வரன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஜெஹதா தன் மகனுக்காக தன்னுடைய பிரமோஷனைத் தியாகம் செய்வதில் உறுதியாக நின்றாள். ஈஸ்வரனிடம், “என் மேல் கோபம் கொள்ளாதீர்கள். என்னால் என் பிள்ளைகளைதாண்டி, எனக்காக என எதுவும் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. குழந்தை இரு நாளாக என்னுடன் முகம் கொடுத்துப் பேச வில்லை, சாப்பிடவும் இல்லை. அவனின் உடம்பு பலகீனமாகாதா. அவனுக்கு மேலா எனக்கு ஒரு பிரமோஷன் வேண்டும். நான் என் பிரமோஷன் முக்கியமென்று இன்று போய்விட்டு, அதனால் என் பிள்ளையின் மனமும், உடலும், படிப்பும் பாதித்தால், என்னால் பின்னால் அவைகளைச் சரியாக்க முடியுமா? ஒருமுறை என் மீது என் பிள்ளைகளுக்கு வெறுப்பு வந்துவிட்டால், அதை என்னால் ஒரு நிமிஷம் கூடத் தாங்கமுடியாது. எனக்கு என் பிள்ளைகளின் சந்தோஷம் தான் முக்கியமாகிறது. என் மனதை நீங்கள் ;புரிந்து கொள்வீர்கள். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வருகின்ற ஒவ்வொரு வாய்ப்பையும், உங்களின் விருப்பத்தையும் மீறி, நான் தவிர்த்து விடுவதற்குக் காரணம், என் மனதில் நான் ஒரு தாயாகத்தான் முதலில் இருக்கிறேன். அவர்கள் பிறந்தபின், சில சமயங்களில் நான் உங்களின் மனைவிஎன்பதைக் கூட முக்கியமாக நினைக்கவில்லை. அவர்களின் ஆசைக்காக, நான் உங்களின் விருப்பத்தைக் கூட மறுத்திருக்கிறேன். அப்போதுகூட எனக்கு என் குழந்தைகளின் தேவைகள்தான் முதலில் இருந்த்து. அப்படிப்பட்ட எனக்கு, இன்று என்னுடைய பிரமோஷன் முக்கியமாகத் தெரியவில்லை. நான் இப்போது இருப்பது போலவே, நான் ரிடையர் ஆகும் வரை இருந்துவிடுகிறேன். அதற்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட மாட்டேன்” என மிகவும் வருத்தத்தோடு சொல்லி, அவனின் கோபத்தையும் அடக்கி விட்டாள்.

தாயார் தன்னை விட்டு, பிரமோஷனில் வெளியூர் செல்வதை விரும்பாது, தன்னுடைய முரட்டுப் பிடிவாதத்தால், அவளின் தகுதியால் கிடைத்த பிரமோஷனைத் தடுத்த சுந்தர்தான், இன்று அவளின் கடைசி காலத்தில்கூட அவளுக்காக தன்னுடைய சுகத்தை தியாகம் செய்ய முன் வராமல், சுயநலமாக இருப்பதைப் பார்த்தவருக்கு, இப்படிப்பட்ட பிள்ளைகளுக்காக தன் வாழ்நாள்பூராவும் தனக்காக ஒரு நிமிடம் கூட வாழாத அந்தத் தாயைப் பார்த்து மனதிற்குள் சொல்லுக் கொண்டார் தான் அவளிடம் அடிக்கடி சொல்லுவதை :ஜெஹதா என்னதான் நீ ஒரு தாயாக வாழ்ந்தாலும், அவர்கள் எப்போதும் உன் பிள்ளைகள்தான். அவர்கள் தங்களுடைய சுகத்திற்காகத்தான், தாயார் என எண்ணம் கொண்டவர்கள். உனக்காக ஒரு போதும் அவர்களின் வாழ்நாளில் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டார்கள். நீதான் பைத்தியமாக இருக்கிறாய். அவர்கள் உன்னுடைய குழந்தைகள் தான். ஆனால், அவர்களையும், என்னையும் மீறி, உனக்கென்று, ஒரு முறையாவது நீ வாழத்தான் வேண்டுமென்றுஅப்போது, ஜெஹதா சொல்வாள், “நான் ஒரு தாயாகத்தான் வாழ விரும்புகிறேன். என் வரையில் அவர்கள் என்றும் என் குழந்தைகள்தான். அவர்கள்மீது நான் ஒரு நாளும் கோபப்படமாட்டேன். நீங்களும் அவர்களிடம் வருத்தம் காட்டாதீர்கள். அவர்களுக்கென்று உலகம்பரவலாகும். ஆனால், நமக்கு அவர்கள் இருவரும்தான் உலகம். அந்தச் சுகம் போதும்: என பக்குவமாகச் சொல்லி சிரித்து விடுவாள். அதற்குமேல் அவளிடம் விவாதிப்பதும் பலனளிக்காது. ஈஸ்வரனுக்கு தன்னுடைய பிள்ளைகளின் மீது மிகவும் கோபம் வந்த போதிலும், அதை அவர்கள் மீது காட்ட, ஜெஹதாவின் மனம் முன் வராது என்பதும், தன்னையும் அவளின் அன்புக் கட்டளைத் தடுத்து விட்டதையும் நினைத்தார்.

தங்களுடைய வாழ்நாளில் நடந்த சம்பவங்களை நினைத்துக் கொண்டிருந்த ஈஸ்வரன், தன்னுடைய பிள்ளைகள் இருவரும் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தார். அவர்களின் முகத்தைப் பார்த்தவருக்கு, அவர்களின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்கள் தெரிந்தது. “என்னப்பா, எல்லாம் முடியும் நிலைக்கு வந்து விட்டது. இனி அதை நினைத்து வருத்தம் கொள்ளலாமே தவிர, நடப்பவற்றை நம்மால் தடுக்க முடியாது. நாம்தான் நமக்குள் தைரியம் கொள்ள வேண்டும். ஆமாம், நீங்கள் இருவரும் எவ்வளவுநாட்கள் லீவில் வந்திருக்கிறீர்கள்”எனக் கேட்டார். அதை கேட்டவர்கள் இருவரும், ஒருவர் பின் ஒருவராக தங்களுடைய அலுவல் விஷயங்களைச் சொன்னார்கள். இருவரும் நேர்முகமாக, தங்களால் அம்மாவின் இறுதி காலம்வரை இருக்க முடியாதென்பதைச் சொல்லாவிட்டாலும், அவர்களின் நோக்கம் தங்களின் பணியும், எதிர்காலமும்தன் முக்கியமானதென்பதைத் தெளிவாகத் தெரிந்தது. ஈஸ்வரனுக்கு அப்பக்கூட அவர்களின் மேல் கோபம் வந்தது ஆனால் கோபம் கொண்டால் நடக்கப்போவது ஒன்றுமில்லைஎன்பதையும் புரிந்து கொண்டார். ஜெஹதாவிற்கும், தான் பிள்ளைகளிடம் கடுமையாக நடப்பது பிடிக்காதென்பதையும் நினைத்துக் கொண்டார்.

அவருடைய இயற்கையான சுபாவமே, ஒவ்வோருவரும் அவர்களின் பொறுப்பறிந்து கொள்ளவேண்டுமே தவிர, அவர்களின் கடமைகளை மற்றவர்கள் எடுத்துச் சொல்லி, செய்யத் தூண்டுவது நாகரீகமற்றது என்பதே. அதனால் அவர் மெதுவாக ‘நான் உங்களுக்கு அம்மாவின் உடல் நிலையைப் பற்றித்தான் சொல்லி, உங்களை வரவழைத்தேனேயன்றி, வேறு எந்த ஒரு உதவிக்காகவும் இல்லை. நாங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே, அவளுக்காக நான், எனக்காக அவள் என்றுதான் வாழ்ந்து வந்தோம். இது நாள் வரை நான் அவளுக்கு எந்தக் குறையும் வைத்தது இல்லை. இனியும் அவள் எதுக்காகவும், யாரிடமும் எதிர்பார்த்து இருக்க நான் விட மாட்டேன். அவளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அவையெல்லாம் நான் செய்யத் தயாராக இருக்கிறேன். அதனால், நீங்கள் நாளைகேகூட ஊருக்குப் போய் உங்களின் பணியில் சேர்ந்து கொண்டு, உங்களின் எதிர்காலத்தைப் பாருங்கள். அவளுக்கு எதுவும் நடந்தாலும் அதற்காக நீங்கள் மீண்டும் வரத் தேவையில்லை. அப்போது என்ன செய்ய வேண்டுமோ, அவற்றே நானே செய்து விடுவேன். நீங்கள் அது பற்றிக் கவலைப்பட வேண்டாம்: என்றார். அப்போது, :’அப்பா, அப்படி நீங்கள் அப்படிச் சொன்னால், அம்மாவின் கடைசி கால கர்மாக்களை யார் செய்வார்கள்? எனக் கேட்டார். அதற்கும் அவர் வருத்தத்துடன், “ராகவா, சுந்தரா, நாம் நினைப்பது போல் உங்கள் அம்மா ஓன்றும் உலகம் தெரியாதவள் இல்லை. தான் போனபின்பும், தன்னால் யாருக்கும் எந்த விதமான கஷ்டமும் இருக்கக்கூடாதென்றே, அவள் இருக்குக் போதே, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். அவள் மட்டுமல்ல, என்னையும் அந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ளச் செய்து விட்டாள். அதனால், நாங்களிருவரும் எங்களின் முழு மனதுடன், எங்களின் காலம் முடிந்தபின், எங்களின் உடலை அரசு மருத்துவக்கல்வி மாணவர்களின் படிப்பிற்காகத் தானமாக தருவதாக இருவரும் ஒப்புதல் கடிதம் எங்களின் முழு நினைவுடனேயே அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு கையெழுத்துப் போட்டு கொடுத்து விட்டோம். அதனால், எங்களின் உயிர் பிரிந்தவுடன், எங்களின் உடல் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு பயிற்சிப் புஸ்தகமாகி விடும். எங்களின் உடலால் எங்களால் செய்ய முடியும் ஒரு சிறு தானமாகும். எங்களைப் பொறுத்தவரையில், ஆண்டவன் கொடுத்த எங்களின் உடலால் நாங்கள் செய்யும் ஒரு உன்னதமான சமூகப் பணியாகும். இதுவே ஒரு உன்னதமான தானமுமாகும்.

எங்களின் முடிவில் இருக்கும் சமூக நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் நீங்கள் வாழும் இந்தச் சமூகத்திற்கு, உங்களால் செய்யக்கூடிய கடமைகளை மறக்காமல், மறுக்காமல் செய்ய வேண்டும். அது ஒவ்வோரு தனி மனிதனின் முதற் கடமையாகும்” என மெதுவாகச் சொல்லி, அவர்களுக்கு ஊருக்குப் போக உத்திரவும் கொடுத்துவிட்டு ஜெஹதாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டார். அவரின் கண்களில், ஜெஹதாவின் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை ஒளி விட்டது தெரிந்தது. ஜெஹதாவின் தூண்டுதலால்தான், தானும் தன்னுடைய உடலை பிற்காலத்தில் ஒரு உன்னதமான பணிக்காகத் தரச் சம்மதித்த்தை நினைத்தும் பெருமை கொண்டார். தானத்தில் சிறந்தது உடல் தானமே” என தன்னுடைய அன்பு மனைவி அடிக்கடி சொல்லுவதும் அவரின் காதில் ஒலித்தது.

ணி)