இந்திரகுமாரியின் தியாகம் (ஜெயரமணி) ஆசிரியையின் சிறு முன் குறிப்பு. இந்தக் கதையின் கரு, நான் படித்த, புகழ் பெற்ற சரித்திர நவீனங்களின் பிதாமகர் திருவாளர் சாண்டில்யன் அவர்களின் ஒரு சரித்திர குறு நாவல் “பல்லவ திலகம்” எனும் பூந்தோட்டத்திலிருந்து என் மனதில் படிந்த சிறு கற்பனையின் வெளிப்பாடு. இந்தக் கதையில் பல்லவ அரசரின் சகோதரி மகளான, இந்திரகுமாரி, தான் விரும்பிய தன் நாட்டு வீரனும் பல்லவ மன்னர் தந்திவர்மனின் வளர்ப்பு மகனான இதயவர்மனை மணம் புரிந்து நல்வாழ்வு வாழுவாள். அதே ஊரில் ஒரு குதிரைலாயத்தில் காவலனாக இருந்த ஒரு வயதான வீரனின் மகளான இரஞ்சனியும் இதயவர்மனை விரும்புவாள். அவளை சிறு வயதிலிருந்தே பழகியிருந்த, இதயவர்மனும் வாலிபனான பின் விரும்புவாள். இருவரும் மனம் ஒன்றி தங்களின் திருமண நாளை எதிர்பார்த்து இருந்தார்கள். அப்போதுதான் பல்லவனாட்டில் போர் மூண்டது. அதில் இதயவர்மனின் பங்கு மிகவும் அதிகமாகவே இருந்தது. என்னுடைய கற்பனையில் அரசகுமாரியான இந்திரகுமாரி, தன் நாட்டு குடிமகளான ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொண்டு, அவளுக்காகத் தன் வாழ்க்கையை இல்லறத்திலிருந்து துறவறத்திற்கு மாற்றிக் கொண்டாள். அவளின் தியாகத்தை என்னுடைய சக்திக்கேற்றவாறு தொடுத்ததுதான் இந்த சிறு மலர் மாலையாகும். இது என்னுடைய மனதில் சுயமாக தோன்றிய ஒரு சிந்தனைப் பூக்கள்தான். இந்த பூ மாலையை என் மதிப்பிற்குரிய ஆசான் திருவாளர் சாண்டில்யன் அவர்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். ************** பல்லவ மன்னர் தந்திவர்மனின் அரண்மனை அன்று விழாக் கோலம் கொண்டுள்ளது. மன்னரின் அன்புக்குப் பாத்திரமான வளர்ப்பு மகனும், பல்லவ தலைமைப் படைத் தளபதியுமான இதயவர்மனுக்கும், பல்லவ-இராஷ்ட்ரகூட குலத்தில் உதித்தவளும், மன்னனின் மருமகளுமான இந்திரகுமாரிக்கும் அன்று மணவிழா நடக்க இருக்கிறது. திருமணத்தைக் காண ஏராளமான சிறு, குறு நில மன்னர்களும், அரசாங்க அதிகாரிகளும், கலைவிற்பனர்களும், மக்களும் குழுமி இருந்தார்கள். மண்டபத்தின் அலங்காரங்களுக்கும் குறைவில்லை. ஆனால், முக்கிய பாத்திரங்களான மணமகன் இதயவர்மனின் முகத்தில் மணமகனுக்கான குதூகலமோ, மகிழ்ச்சியோ இல்லை. போர்க்களத்தில் இருக்கும் ஒரு வீரனுக்கு இருக்கும் இரும்பு முகத்துடன், எவ்விதமான ஆசாபாசங்கள் அற்ற கடமை வீரனாக இருந்தான். ஆம். அவனின் மனதில் ஏற்கெனவே குடியேறி, நாளும் தோறும் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்ட ஆசைக் காதலி இரஞ்சனியின் நினைவுகளால் அவனின் மனம் மிகவும் துன்பப்பட்டது. திடீரென்று மன்னர் தனக்கு காஞ்சியின் தலைமைப் படைத் தளபதி பதவியும் கொடுத்து, அதனுடன் தன் தந்தையார் செய்த சத்தியத்தைக் காக்கும் கடமையே முன்னிட்டு, அவனுக்கு அரச குலத்தில் பிறந்த ஒரு அரசகுமாரியைத்தான் திருமணம் செய்யவேண்டுமென்ற கடமை உணர்வும், அதே சமயம் தன்னுடைய நாட்டுக்கு ஒரு வலிமைமிக்க, தந்திரமிக்க, எந்த சமயத்திலும் பயம் எனற உணர்வின்றி, போரில் எத்தகைய வலிமை வாய்ந்த எதிரிகளையும் முறியடிக்கத்தக்க ஆற்றல் கொண்ட இதயவர்மனின் மனம் அறிந்தும், பிடிவாதமாகத் தன் மருமகளும், அன்புக்கு பாத்திரமான இந்திரகுமாரியை திருமணம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் அவனைச் சம்மதிக்க வைத்திருந்தான். மன்னரின் கட்டளையை மீறமுடியாமலும், தன்னுடைய பிறப்புன் இரகசியம் தெரிந்து, தன்னுடைய தகப்பனாரும், பல்லவ சக்ரவர்த்தியுமான நந்திவர்மனின் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, மனம் ஏற்காவிட்டாலும், மன்னரின் அடிமையாக அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, திருமணம் செய்வதற்கு மணமேடையில் அமர்ந்திருந்தான் இதயவர்மன். மன்னரான தந்திவர்மனுக்கும் மனதில் ஒரு கோடியில், அபலைப் பெண் இரஞ்சனியின் கலையான முகம் கண்களில் தெரிந்து, மன்னரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தன்னுடைய காதலை துறந்து, காஞ்சியிலிருந்தே வெளியேற சம்மதித்து, கண்களில் நீர் நிறைய, தன்னுடைய அந்தப்புரத்தை விட்டு, மௌனமாக வெளியேறிய கண்கள் தன்னைக் குற்றம் சாட்டுவதுபோல் உணர்ந்தான். தான் மட்டும், ஒரு அரசனாக இல்லாதிருந்தால், தானே முன்நின்று, அந்த அபலைப் பெண்ணின் காதலனுடன் சேர்த்து வைத்திருப்பேனே, என்ன செய்வது, அரசாங்க உரிமை என்னுடைய கைகளைக் கட்டி போட்டிருக்கிறதே. ஒரு நாட்டிற்காக, ஒரு ஊரையே கொளுத்தலாம் என அரச நீதியிருக்க, காஞ்சியின் எதிர்கால பாதுகாப்பிற்கும், தன்னுடைய தகப்பனார் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற கடமைபட்டவனாக இருப்பதால், என் மனதை கல்லாக்கிக் கொண்டு, அந்த ஏழைப் பெண்ணின் கண்களில் நீர் வர நானே காரணமாகிவிட்டேனே. அவளுக்கு இதயவர்மன் கிடைக்கவில்லையே தவிர, என்னுடைய அன்பும், பரிவும் எப்பவுமே உண்டு. இந்த காஞ்சியில் அவள் இல்லையே தவிர, என் மனதில் நிறைந்து இருக்கிறாள். காலப் போக்கில், அவளின் மனதை தெளியவைத்து, சதா காலமும் அவளை வைகுந்தனின் பணியில் ஈடுபடச் செய்வேன்.’ எனப் பலவாராக மனதில் எண்ணியபடியே, திருமண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரைத்தவிர, தன் மனம் விரும்பிய இதயவர்மனையே மணாளனாக அமையப் பெற்ற, இந்திரகுமாரியின் மனதிலும் பூரண சந்தோஷம் இல்லை. தன்னுடைய மாமன், இதயவர்மனிடம், தன்னை மணக்கச் சொன்னபோது, அவன் காட்டிய தயக்கத்தின் காரணம் அவளுக்கும் தெரிந்து இருந்தது. அரண்மணையில் இருந்தாலும், காஞ்சியில் அவ்வப்போது நடக்கும் சங்கதிகளும் அவளின் கவனத்திற்கு வருவது உண்டு. அதிலிருந்து, இதயவர்மனின் மனதில் தங்களுடைய அரண்மணைக் குதிரைக்காப்பாளரின் மகளும், அழகிய, கள்ளங்கபடமற்ற சின்னஞ்சிறு சிட்டுக்குருவிபோல் சதா தங்களுடைய அரண்மணைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இரஞ்சனியைப் பற்றி அவளுக்கும் தெரிந்திருந்தது. தன்னுடைய அரச மகள் என்ற அந்தஸ்தின் காரணமாக, தன்னால் நெருங்க முடியாத, இதயவர்மனிடம் இரஞ்சனி நெருங்கி உறவாடுவதும் அவளுக்குள் ஒரு ஏமாற்றத்தையும், ஏக்கத்தையும் உண்டாக்கியது. அப்போதெல்லாம் நினைப்பாள், தான் ஏன் இந்த அரசகுடும்பத்தின் வாரிசாகப் பிறந்தோம் எனவும் வருந்துவாள். அந்தஸ்து காரணமாக, தன்னுடன் இதயவர்மன் நெருங்கி பழகவும் இல்லை. அவன் கண்களில் காஞ்சியின் பெருமைக்குரிய பேரழகியாக, தானிருந்தும், தன்னுடைய இளமையோ, அழகோ அவனுள் எந்தவிதமான சலனத்தையும் உண்டாக்கவில்லை என்பதையும் அவள் அறிந்துதான் இருந்தாள். திடீரென்று, மன்னர் அவனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டவுடன், உடனேயே தன்னுடைய சம்மதத்தை அவன் தெரிவிக்காதது மட்டுமல்ல, தன்னுடைய மனதை ஏற்கெனவே ஒரு ஏழைப் பெண்ணிடம் இழந்ததையும் மன்னரிடம் தெரிவித்து, தனக்கு அந்தக் கலியாணத்தில் சம்மதம் இல்லை என்பதையும் தெரிவித்தான். ஆனால், மன்னரோ அவனின் பிறப்பின் இரகசியத்தையும் சொல்லி, தன்னுடைய தந்தையாரும் பல்லவ சக்ரவர்த்தியுமான நந்திவர்மனும், இதயவர்மனின் தகப்பனரான இராஷ்ட்ரகூட மன்னரின் சகோதரரும் செய்து கொண்ட சத்தியத்தைக் காக்கும் கடமை தங்கள் இருவருக்கும் உண்டென்பதையும் சுட்டிக்காட்டி, மன்னர் குலத்தில் பிறந்தவர்களின் திருமணம் நாட்டின் நலத்திற்காகத்தான் ஏற்பட்டது எனவும் சொல்லி, அவனைக் கட்டாயப்படுத்தியதையும் அவள் உணர்வாள், அதனால்தான், முகத்தில் சிறிதும் சந்தோஷமின்றி, போர்க்களத்தில் நிற்கும் ஒரு கடமை வீரனைப் போல் மணமேடையில் இருக்கும் இதயவர்மனின் முகமும் அவளுக்குள் ஒரு வேதனையை ஏற்படுத்தியிருந்தது. அவளின் நினைவுகள் சில நாட்கள் பின்னோடிப் போனது. அன்று மாலை நேரத்தில் தான் அரண்மனை விளாகத்தில் உள்ள வைகுந்தப்பெருமான் சன்னிதிக்குச் செல்ல முயலும்போது, அங்கு தன்னுடைய மாமனான தந்திவர்மன் இரஞ்சனியுடன் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. உடனே அங்கிருந்த ஒரு தூணில் மறைவில் நின்று, அவர்கள் பேசுவதைக் கேட்டாள். மன்னர்: இரஞ்சனி நான் ஏன் உன்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேனென்று உன்னால் யோசிக்க முடிகிறதா? உன்னால், பல்லவ-காஞ்சியின் ஒரு திடமான பாதுகாப்பிற்கும், இன்று முதல் உதயமாகும் இராஷ்ட்ரகூட-காஞ்சிக்கும் ஒரு அரசப்பிரதிநிதியாக இதயவர்மன் பதவியேற்கவும் வேண்டும். ஆம், நீ உன் மனதில் ஏற்று இருக்கும் இதயவர்மனை மறந்திட வேண்டும். அவன் நீ நினைப்பதுபோல் யாருமற்ற அனாதை இல்லை. எல்லாரும் நினைத்திருக்கிறார்கள் அவன் யாருமற்றவன். என் அன்புக்கும், பாசத்துக்கும் கட்டுப் பட்டவன். என்னால் வளர்க்கப்பட்டவனென்று. ஆனால் அது உண்மையல்ல. அவன் ஒரு இராஜ குலத்தைச் சேர்ந்தவன். இராஷ்ட்ரகூட மன்னரின் சகோதரனின் மகன். என் தகப்பனாரான நந்திவர்மனின் ஆப்த நண்பரான அவர், இந்தக் காஞ்சியில் ஒரு சாதாரண குலத்தில் பிறந்த ஒரு பெண்ணை விரும்பி, அவளையே இரகசியமாகாத் திருமணம் புரிந்து வாழ்ந்தார். அவர்களின் திருமண வாழ்வில் உதித்தவந்தான் இதயவர்மன். பிறந்தவுடனே அவனுடைய தாயார் மரணமடைந்துவிட்டதால் அவனை என் தகப்பனார் தன்னுடைய அரண்மனையிலேயெ வளர்த்து வந்தார். இதயவர்மனின் தகப்பனார் தான் மரணமடையும் சமயம் என் தந்தையிடம் தன்னுடைய மகனை ஒரு சிறந்த வீரனாகவும், நல்ல ஒழுக்கங்களுடனும், கல்வி, போர்ப்பயிற்சி, தகுந்தவனாகவும் வளர்த்து, அவனுக்கு இராஜ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்து, அவனுக்காக இராஷ்ட்ர-காஞ்சியை உருவாக்கி அவனை அதற்கு காஞ்சி இராஷ்ட்ரகூட அரசப் பிரதிநிதியாக்க வேண்டுமென்றும் சத்தியம் வாங்கிக்கொண்டார். என் தகப்பனார் மறைந்தாலும், அவர் செய்த சத்தியம் என்னையும் கட்டுப் படுத்தும். அதனால் இன்று நான் இதயவர்மனை பல்லவ-காஞ்சியின் தலைமைப் படைத் தளபதியாகவும், புதிதாக உருவாக இருக்கும் இராஷ்ட்ர-காஞ்சியின் அரசப்பிரதிநிதியாகவும் பிரகடனப்படுத்த வேண்டும். அவனுக்கு இனிமேல் வர இருக்கும் வளமான வாழ்க்கைக்கு நீ தடங்கலாக இருக்கக் கூடாது. அதனால்தான் நான் உன்னிடம் யாசிக்கிறேன் ‘நீ இதயவர்மனை மறக்க வேண்டுமென்று”. நீ அவன் வாழ்விலிருந்து பிரிந்து விட்டால், அவன் என் விருப்பப்படியும், அவனுடைய தகப்பனாரின் ஆசைப்படியும், இராஜ குலத்தில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து, இராஷ்ட்ர-காஞ்சியின் பொறுப்பை ஏற்றுக் கொள்வான். அரசனான நான் என் கடமையைச் செய்து முடிக்கவும், நம் காஞ்சியின் பாதுகாப்பிற்கும் தக்க ஏற்பாடுகளைச் செய்ய எனக்கு இதயவர்மன் என்னுடைய தலைமைப் படைத் தளபதியாகவும், அவனின் தகப்பனாரின் விருப்பப்படி புதிதாக உருவாகும் இராஷ்ட்ரகூட காஞ்சியின் பாதுகாவனாகவும் பதவி ஏற்கவேண்டும். நீயும் இந்நாட்டுப் பிரஜை. உன் கடமையைச் செய். நான் உனக்கு என்றும் உதவியாக இருப்பேன். நீயும் என்னுடன் இன்றுமுதல் வைகுந்தனின் பாதங்களுக்கேச் சேவைசெய். என்றும் மாறாத பரந்தாமனின் பாதங்களில் சரணடை. அதுவே உனக்கு முக்தியாகும்” என உறுதியாக கூறினார். மன்னரின் கருத்தைக் கேட்ட, இரஞ்சனி மெதுவாக “எனக்கு மன்னவரின் உத்திரவு என்ன. நான் உடனே இந்தக் காஞ்சியை விட்டுப் போக வேண்டுமா?எனவும் கேட்டாள். அதற்கு பல்லவ மன்னன் “அது மட்டுமல்ல, நீ உன் கைப்பட இதயவர்மனுக்கு ஒரு லிகிதமும் எழுத வேண்டும். அதிலிருந்து, யாருடைய கட்டாயமும் இல்லாமல், நீயே அவனிடமிருந்து, விலகிப் போவதாகவும், அவனுக்கு வர இருக்கும் வளமான வாழ்விற்கு நீ தடங்கலாக இருக்க மாட்டாயென்றும்” உறுதிபடுத்திக் கொடு.” எனவும் உத்திரவு இட்டான். அவன் சொன்னபடியே, இரஞ்சனியும் தன் கைப்படஒரு லிகிதம் எழுதி மன்னரின் பாதங்களில் வைத்தாள். பிறகு கண்களில் நீர் வழிய “மன்னவரே,நான் இனிமேல் இங்கிருந்து போக உத்திரவு கிடைக்குமா? எனவும் பணிவாகக் கேட்டாள். அவள் எழுதிய லிகித்த்தைப் படித்த மன்னவன், “இரஞ்சனி, உன்னால் இன்று பல்லவ காஞ்சிக்கும், இராஷ்ட்ரகூட-காஞ்சிக்கும் ஒரு வளமான காலம் வந்து விட்டது. உனக்கு வேறு என்ன வேண்டும். கேள், தாராளமாகத் தருகிறேன்” எனவும் மன மகிழ்ச்சியோடு கூறினான். அதைக் கேட்ட இரஞ்சனி, ‘என் கைகளின் விரல்களை வெட்டிவிட்டு, எனக்கு மகரவீணையையேத் தந்தாலும், அது எனக்கு மகிழ்ச்சி தருமா? அல்லது அந்த வீணையைத்தான் என்னால் மீட்டி, மகிழ முடியுமா? எங்கிருந்தாலும், அவரின் புகழ் பரவ வேண்டும், அதை என் காதால் கேட்டாலே போதும். என் வாழ்வு நிம்மதியடையும்” எனவும் கூறிவிட்டு, மன்னரின் முன் பணிந்து சென்று விட்டாள். அரண்மனையைச் சேர்ந்த வைகுந்தப் பெருமானின் சன்னதியில் நடைபெற்றவைகளைக் கேட்ட, இந்திரகுமாரி, தான் அங்கிருப்பது தெரியாவண்ணம் உடனே தன்னிருப்பிடம் சென்று விட்டாள். ஆனால் அவள் மனதில் நிம்மதி இல்லை. ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வை சிதைத்து விட்டு, அந்தச் சாம்பலின் மேல் தன் திருமண வாழ்வு கிடைப்பது சரியா? ஏழையென்றாலும், அந்தப் பெண்ணும் இதயகுமாரனும் இருவரும் மனமொத்து வாழத் துடித்ததும். இருவரிடைய எந்தவிதமான அந்தஸ்து வேறுபாடுகள் இல்லாத்தால், தங்களின் காதல் கைகூடும் எனவும் தீர்மானமாக இருந்தவர்களின் கனவு, திடீரென்று இதயவர்மனின் பிறப்பின் இரகசியமும், மன்னர்களின் சத்தியம் என்னும் ஆயுத்ததாலும் வெட்டி வீழ்த்தியது அவர்களின் துரதிர்ஷ்ட்டம்தான். இருவரின் மன வருத்தம் தன் வாழ்வுக்கு வளமாகுமா? அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைத் தனக்கு வேண்டுமா? எப்படி யிருந்தாலும், இஷ்ட்டமில்லாது, கட்டாயத்தால் தனக்குக் கிடைக்கும் மண வாழ்வு, தனக்குத் திருப்தியளிக்குமா? “என பலவாரான சிந்தனைகள் அவள் மனதில் குடியேறின. இந்தச் சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டுமெனவும் அவள் மனம் யோசிக்கலாயிற்று. நீண்ட நேரம் கடந்தபின் அவளின் மனதில் ஒரு தீர்மானமும் உண்டாயிற்று. தன்னுடைய தீர்மானத்தை நிறைவேற்றும் தருணமும் வந்து விட்டதென்பதையும் உணர்ந்தாள். மணமேடைக்கு வந்தவள், மணமேடையை அனுகாது, “புரோகிதரே, மணமகனின் வாளைத் தரச் சொல்லுங்கள்” எனவும் கேட்டாள். அவளின் கேள்வியின் உள்ளர்த்தம் புரியாது அங்கிருந்தவர்கள் இப்போது மணமகனின் வாளுக்கு என்ன அவசியம் எனவும் யோசித்தனர். ஆனால், இதயவர்மனோ அவள் கேட்டபடியே தன்னுடைய வாளை அவளிடம் தந்தான். வாளை வாங்கியவள் அதனை நன்றாக அலங்கரித்து, சந்தனம், ஜவ்வாது, குங்கும பொட்டிட்டு, வஸ்திரம் சுற்றி, அங்கிருந்த ஒரு மலை மாலையையும் அணிவித்தாள். பிறகு அதனை அங்கிருந்த ஒரு ஆசனத்தில் வைத்து, அதற்கு நமஸ்காரமும் செய்தாள். தொடர்ந்து, தன் இடுப்பில் வைத்திருந்த ஒரு மங்கலசூத்திரத்தையும் எடுத்து, அதனைத் தானே தன் கழுத்தில் கட்டிக் கொண்டாள். அவளின் செய்கையைப் பார்த்த மன்னர் உள்பட அணைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மன்னர் “இந்திரா நீ என்ன செய்கிறாய்? இங்கு மணமகன் நேரில் இருக்கும்போதே, அவருடைய வாளுக்கு மாலை அணிவித்தது ஏன். மேலும் நீயே உனக்குத் தாலி கட்டிக் கொண்டால் அது முறையா, சரியாகுமா? ஏன் இப்படி செய்கிறாய்? எனவும் தன்னுடைய கோபம் வெளிப்படக் கேட்டார். அதற்கு இந்திரகுமாரி “மாமா, நான் எதுவும் முறையற்றுச் செய்யவில்லை. மணமகனின் வாளுக்கு மாலை அணிந்து, திருமணம் செய்வது அரசகுல வழக்கம்தானே. உங்களின் சத்தியப்படி, அவருடன் அரசதர்பாரில் மனைவியாக அமரத்தான் ஒரு அரசகுலத்தில் பிறந்த பெண் வேண்டுமென்றீர்கள். அப்படியே நான் இனிமேல் அவருடன் அரச சபையில் அமரலாம். உங்களின் சத்தியத்தில் அவரின் இதய சிம்மானசத்தில் அமரும் பெண் அரசகுல மகளாக இருக்கவேண்டுமென்ற நிபந்தனை இல்லையே. உங்களின் விருப்பப்படியும், சத்தியப்படியும், நான் இன்றுமுதல் அவரின் அரசியாகிறேன். அவருடன் அரச தர்பாரில் அமரும் தகுதியும் எனக்குத்தான். ஆனால், அவரின் இதயக் கோவிலில் குடியேறும் உரிமை எனக்கில்லை. அதில் ஏற்கெனவே ஒரு பெண் குடியிருக்கிறாள். இன்று உங்களுடைய அதிகாரம், அவளை இந்தக் காஞ்சியிலிருந்து வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அவள் இன்னமும் இதயவர்மனின் இதயத்தில்தான் வாழுகிறாள். என் வாழ்வு, ஒரு ஏழைப் பெண்ணின் ஆசைகளை சிதைத்துவிட்டு, அதில் மாளிகைகட்டி வாழ நான் விரும்பவில்லை. ஏழை, பணக்காரர் எனக் காதலுக்கு தரமில்லை. இருமணங்களின் சங்கமம்தான் உன்னதமான காதல். அரசன் என்ற அதிகாரத்தால் உங்களால் இருவரின் இனைப்பைத்தான் தடை செய்ய முடியும். ஆனால் அவர்களின் இதயத்தில் குடியிருக்கும் இருவரின் பாசத்தையும், அன்பையும் அழிக்கமுடியாது. எனவே அவருடன் என் வாழ்வு அரச வாழ்வில் மட்டும்தான். அவரின் இதயத்தில் வாழும் உரிமை அந்த ஏழைப் பெண்ணிற்குத்தான் உரியது.” எனவும் திடமாகச் சொன்னாள். மன்னரோ அதற்கு பதிலாக, “நீ நினைப்பது போல் நான் ஒன்றும் என் அதிகாரத்தால் இரஞ்சனியின் மனதை மாற்றவில்லை. மாறாக, அவளை இதயவர்மனின் பிறப்பின் இரகசியம் தெரிந்து, தனக்கு அவனுடன் வாழ தகுதியில்லை எனத் தெரிந்துதான், என்னிடம் உத்திரவு வாங்கிக் கொண்டு, காஞ்சியிலிருந்து போனாள். தன்னுடைய ஆசைக்காக, காதலனின் எதிர்காலத்தை இருளாக்க அவள் விரும்பவில்லை. உண்மையான காதல் தியாகத்திற்கு தயங்காது” இதில் என்னுடைய கட்டாயம் எதுவுமில்லை. சிறிய பெண்ணான உனக்கு இப்போ இதில்லாம் புரியாது. நான் சொல்வதைக் கேட்டு, திருமணத்திற்கு தயாராக வா? எனவும் தீர்மானமாகச் சொன்னார். அதற்கு இந்திரகுமாரி, “மாமா, உங்களின் கடமைக்காக, அதிகாரத்திற்காக, என்னால் என்னை விரும்பாத ஒருவருடன் கட்டாயத்திற்காக வாழ முடியாது. அந்தப் பெண்ணிற்கு நீங்கள் காட்டிய பரந்தாமனின் பாதங்கள் எனக்கும் கிடைக்கும். இனி நான் அந்தப் பரந்தாமனின் பக்தியில் வாழப்போகும் ஒரு அரசிதான். இதில் மாற்றமில்லை. இப்போது இதே மண்டபத்தில், என் சகோதரிக்கும் காஞ்சியில் படைத்தலைபதியாருக்கும் திருமணம் நடைபெறும். நீங்கள் எல்லாரும் அதற்கு ஆசி தாருங்கள்” எனவும் சொல்லிவிட்டு, திரும்பவும் தன்னுடைய அந்தப்புரத்திற்குச் சென்றாள். அவளுடன் ஒரு பெண்ணிற்கு மணமகளாக அலங்கரித்து அழைத்து வந்தாள். சபையில் உள்ளோர்களிடம் “இன்றுமுதல் என்னுடைய சகோதரியாக நான் ஏற்றுக் கொண்ட இரஞ்சனிதான் இன்று இங்கு மணமேடைக்குப் போகப் போகிறாள். இதயவர்மனின் இதயத்தில் வாசம் செய்த அவள்தான், இனியும் அவருடைய இல்லத்தில் வாசம் செய்வாள். அன்பால் கட்டுண்ட இருமனங்களையும் இனைத்து வைப்பதுதான் தர்மமாகும். அவர்களின் இனிய வாழ்விற்கு உங்களின் ஆசிகளை வழங்குங்கள்.” எனக் கூறியபடியே, இரஞ்சனியை மணமேடையில் அமர்த்தினாள். புரோகிதரிடம் “புரோகிதரே, உங்களின் பணியைச் செய்யுங்கள். மணநிகழ்ச்சிகள் நடைபெறட்டும்” என ஒரு இராணிபோல் உத்திரவிட்டாள். புரோகிதர் மந்திரம் சொல்ல, இதயவர்மன்-இரஞ்சனியின் திருமணம் நிறைவேறியது. மணமக்கள் மூவரும், அங்கிருந்த மன்னரை வணங்கினார்கள். தந்திவர்மன் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் தன்னை மீறிவிட்டதால், தன்னுடைய மருமகளின் செய்கையை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. அவனும் தன்னுடைய ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினாண். மன்னரைப் பின்பற்றி, சபையோர்களின் வாழ்த்துக்களும் அவர்களுக்குக் கிடைத்த்து. திருமணம் முடிந்த்தும், மணமக்கள் மூவரும் அரண்மணை வாசலில் நிறுத்தியிருந்த இரத்த்தில் ஏறி, மணமகனின் இல்லத்திற்குப் போனார்கள். அவர்களுடன் அரண்மணைப் பெண்களும் தொடர்ந்தனர். தன்னுடைய இல்லத்திற்குப் போனபிந்தான், இதயவர்மன் இந்திரகுமாரியிடம் “அரசகுமாரி, உங்களின் திடீர் முடிவால் நாங்கள் திகைத்துப் போய்விட்டோம். ஏனிப்படி செய்தீர்கள். மன்னரின் முடிவுக்கு மாறாக என்னைச் செயல் படுத்த வைத்து விட்டீர்களே. இது நான் மன்னருக்குச் செய்த துரோகம் ஆகாதா?’ எனவும் கேட்டான். அதற்கு இந்திரகுமாரி “நீங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. மன்னரின் உத்திரவுப்படி, நான் உங்களின் மணைவியாகிவிட்டேன். உங்களின் வாழ்வில் நான் உங்களின் அரசப் பணிகளில் பங்கேற்ப்பேன். இரஞ்சனி, உங்களின் இல்லறவாழ்வில் பங்கேற்பாள். இனி நாங்கள் இருவரும் உங்களின் வாழ்வில் இருப்போம். நம்மிருவருக்கும் இருக்கும் நெருக்கம் அரச தர்பார் மட்டும்தான். நான் என்றும் எக்காலத்திலும் உங்களின் பள்ளியறைக்கு வரமாட்டேன். நீங்களும் என்னுடைய மாளிகைக்கு வரவேண்டாம். இது நம் மூவருக்குள்ளும் இருக்கவேண்டிய ஒப்பந்தம்.” எனவும் உறுதியாகச் சொன்னாள். இந்திரகுமாரியின் முடிவைக் கேட்ட இரஞ்சனி “அக்கா, எனக்காக உங்களின் வாழ்வைத் தியாகம் செய்துவிட்டீர்களே. இதற்கு நான் தகுதியுள்ளவளா? என்னால் உங்களுக்கு என்ன கைமாறு செய்யமுடியும். வாழ்நாள் பூராவும் உங்களுக்குக் கடமைப்பட்டவள் நான். என்றும் உங்களின் அடிமை நான்” எனக் கூறிக்கொண்டே, இந்திரகுமாரியின் பாதங்களில் வீழ்ந்தாள். தன்னுடைய பாதங்களில் வீழ்ந்தவளை அன்புடன் தூக்கித் தழுவிக் கொண்டவள் அவளின் காதில் மெதுவாகச் சொன்னாள் “இரஞ்சனி, நீ எனக்கு ஒரு பரிசு மட்டும் கொடு. அது, இன்னும் ஒரு வருடத்தில், பல்லவ-இராஷ்ட்ரகூட அரசிற்கு ஒரு வாரிசு பெற்று, என்னிடம் கொடுத்து விடு. அதுவே என்னுடைய மகனாக நான் ஏற்றுக் கொண்டு, என் வாழ்வில் வளம் காணுவேன்” எனவும் சொன்னான். இந்திரகுமாரியின் விருப்பத்தைக் கேட்ட இரஞ்சனியின் முகம் தாமரையாக பிரகாசித்தது. அவளின் முகத்தில் வெட்கச் சிரிப்பும் பூத்தது. இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த இதயவர்மன் “நான் இங்கிருப்பதை நீங்கள் இருவரும் மறந்து, என்னையறியாமல் அங்கென்ன இரகசியம்” எனவும் கேட்டான். அதற்கு அவர்களிருவரும் “இது எங்களின் விஷயம். உங்களுக்குச் சொல்லமுடியாது” எனச் சொல்லிச் சிரித்தனர். அவர்களிருவரும் பேசியதை ஓரளவு ஊகித்தவன், “உங்களின் விருப்பம் நிறேவேற்ற நான் வேண்டாமா: எனச் சிரித்தபடியேக் கேட்டவன், அவர்களுடன் மாளிகையின் உள்ளேச் சென்றான். தியாகத்தில் அன்பு மலர்கள் பூத்தன அவர்களுக்குள்.இந்திரகுமாரியின் தியாகம்
No comments:
Post a Comment