Monday, 3 June 2013

உன்னதமான தானம்

(ஜெயரம

உன்னதமான தானம்

(ஜெயரமணி)

ஈஸ்வரன் மருத்துவமணையின் வாராண்டாவில் அமர்ந்திருந்தார். அவரின் முகத்தில் கவலைரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன. அவரின் மனைவி ஜெஹதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைக்காகச் வந்திருந்தாள். ஆனால் அவளின் உடல் நலம் மேலும் மேலும் சீர்கெட்டுப் போய், டாக்டர்கள் அவரிடமும், அவரின் பிள்ளைகளிடமும் “இனிமேல் உங்களின் தாயாருக்கு எந்த விதமான சிகிச்சையும் தேவையில்லை. அவர் தன்னுடைய இறுதிகாலத்திற்கு வந்து விட்டார். நீங்கள் இனிமேல் அவரை இங்கு வைத்து எந்த விதமான மருத்துவமும் பார்க்க முடியாது. அதனால் நீங்கள் அவரை நல்லபடியாக இப்போதே உங்களின் வீட்டிற்கு எடுத்து சென்று விடுங்கள். அவர் வாழந்த வீட்டிலேயே அவர் அடக்கமாகட்டும்”என மிகவும் வருத்தத்துடன் சொல்லிவிட்டார்கள். அதனால், பிள்ளைகளும் தாங்கள் செலுத்தவேண்டிய சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அம்மாவை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்து விட்டார்கள்.

வீட்டில் ஜெஹதாவின் படுக்கையறையிலேயே படுக்க வைத்து விட்டார்கள். கட்டிலின் பக்கத்தில் ஈஸ்வரன் உட்கார்ந்து, கண்களில் நீர் வழிய தன் மனைவியின் முகத்தேயேப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குள் தான் இனிமேல் எப்படி யிருப்போம், நமக்குத்தான் யாரிடமும் இதமாக பழகவோ. அநுசரனையாக பேசவோ தெரியாதே. தனக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் ஜெஹதாவே பார்த்துப்பார்த்து செய்து விட்டதால், அவருக்கு தன்னுடைய தேவைகள் எதுவென்றேத் தெரியாது வாழ்ந்து விட்டார். அவர் சின்னக் குழந்தையாக இருந்தப்போதே அவருடைய தகப்பனார் கால மானதால், அவருடன் கூடப் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. அவருடைய அம்மாவும், தன் சொந்த உழைப்பினாலேயே மகனை வளர்த்து வந்ததால், கூடிய வரையில் இருவருமே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடனோ, உறவினர்களுடனோ ஒதுங்கியே வாழ்ந்து வந்ததால். மற்றவர்களிடம் பழகும் சந்தர்ப்பங்களும் இல்லை. படித்து முடித்துவுடன், உடனடியாக அரசுத்துறையில் ஒரு பெரிய பதவியில் சேர்ந்துவிட்டதால் அலுவலத்திலும் அதிகமாக யாருடனும் நெருங்கிப் பழகவும் இல்லை. இயற்கையாகவே அவருக்குள் இருந்த கூச்ச சுபாவத்தினாலும், தன்னுடைய பணியில் இறுக்கத்தாலும், யாருடனும் நெருங்கிப் பழகினால், அவர்கள் தன்னிடம் ஏதும் உதவி கேட்டால், அதை நம்மால் சட்டப்பூர்வமாகச் செய்ய முடியாமல் போனால் வீணாக மற்றவர்களின் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாக வேண்டுமென்பதாலும், அவராக யாருடனும் சிநேகமாக இருக்க இயலவில்லை. அதனால், அவருக்கு அலுவலகத்தில் “சிடுமூஞ்சி, யாருடனும் ஒட்டாத ஓணான்” எனப் பலப் பேர்கள் ஏற்பட்டன. அதெல்லாம் தெரிந்தும், தன்னுடைய சுவாப்படியே அவர் எதற்கும் கவலைப்படாமல், தனி மரமாகவே இருந்துவிட்டார். அவ்வப்போது ஜெஹதா சொல்லுவது உண்டு. “நாம் தனியாக காட்டில் வாழும் மிருகஇனமல்ல. ஊரில் மனிதர்களுடன் வாழும் மானிடர்கள்தான். நீங்கள் உங்கள் சுவாபத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நமக்கு எப்பவும் அக்கம் பக்கத்தவர்கள், உறவினர்களின் உறவும் சிநேகமும் வேண்டும்”எனச் சொல்லும்போதும் அவர் சிரித்தபடியே “எனக்குப் பதில் நீ தான் எல்லாருடனும் நன்றாகப் பழகுகிறாயே. எனக்கு நீ மட்டும் போறும். உலகில் வேறு யார் உறவோ, பிரியமோ வேண்டாம்” என மறுத்துவிடுவார்.

வீட்டிற்கு ஜெஹதாவின் ஆபீசிலிருந்து யார் வந்தாலும் அவர்களுடன் எதுவும் பேச மாட்டார். உடனடியாக, அங்கிருந்து வேறு இடத்திற்குப் போய் விடுவாரே தவிர, வருபவர்களை வரவேற்று, அவர்களுடன் சில வினாடிகள் கூட செலவிடமாட்டார். அதைப்பற்றி யாரும் ஜெஹதாவிடம் கேட்டால், அவள்தான் சிரித்தபடியே, செல்லுவாள். அவளுக்கும் தன் கணவர் எல்லாரையும் போல் வருபவர்களிடம் சகஜமாகப் பழகவில்லையே என மனத்தாங்கல் இருந்தாலும், அவரின் மன நோகும்படி எதுவும் சொல்ல மாட்டாள். இதையெல்லாம் நினைத்து பார்த்தவருக்கு, கண் முன்னேயே அவருடைய எதிர்காலம் ஒரு போராட்டமாக இருந்தது. மற்றவர்களுடன் மட்டுமல்ல, அவர் தான் பெற்ற பிள்ளைகளிடம் கூட அப்படித்தான் ஒரு இடைவெளியுடனே இருந்து பழகிவிட்டார். அவருக்கும் பிள்ளைகளுக்கும் ஜெஹதாதான் பாலமாக இருந்து வந்தாள். அந்தப்பாலம் இனி இல்லை. நமக்கென்று இனி யார் இருக்கிறார்கள் என எண்ணிப்பார்த்து தனிரக்கம் அடைந்தார். இத்தனை நாட்களும் பிள்ளைகளிடம் ஒட்டாமல், அவர்களுக்குத் தேவையானவற்றையெல்லாம், பார்த்துப் பார்த்து ஜெஹதாதான் செய்து வந்தாளேதவிர, அவராக ஒரு நாள் கூட பிள்ளைகளிடம் சென்று பரிவுடனோ, பாசத்துடனோ பேசியதுகூட இல்லை. அவர்களின் திருமனங்கள்கூட ஜெஹதாவின் முயற்சியாலேயே நடந்ததுதான். திருமனத்தின் போது மற்ற உறவினர்களைப்போல் அவரும் இருந்தாரே தவிர, தகப்பனார் என்ற வகையில் எந்த ஒரு தனியான ஈடுபாட்டுடன் நடத்தவில்லை. ஆனால் ஜெஹதாதான் தன் இயற்கையான சுபாவத்தால் எல்லாரிடமும் கலகலப்பாக இருந்து, அவரின் ஈடுபாடற்ற தன்மையை பிறருக்குத் தெரியாமல் நடந்து கொண்டாள். திடீரென்று, இனிமேல் பிள்ளைகளிடம் பாசமாகவோ, பரிவுடனோ பழகுவது எப்படியெனத் தெரியாமல் மனதிற்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். மனதிற்குள் மருகிக்கொண்டிருந்தவரின் காதுகளில் கூடத்தில் தன் பிள்ளைகள் இருவரும், அவர்களின் மனைவிமார்களுடன் பேசிக்கொண்டிருந்த உரையாடல் கேட்டது.

கூடத்தில் மூத்தவனும், இளயவனும் தங்களின் மனைவி சகிதம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தெளிவாகவே பேசியதால், அவர்களின் உரையாடல் ஈஸ்வரனின் கவனத்தை நன்றாகவே ஈர்த்த்து. மூத்தவனான ராகவன், தன் தம்பி சுந்தரிடம் கேட்டான்.

“சுந்தர், நீ எத்தனை நாட்கள் விடுமுறையில் வந்துள்ளாய்?

நானும் உன்னைப்போல்தான், அப்பாவிடமிருந்து ஃபோன் வந்தவுடன், உடனடியாக இரு நாளுக்குத்தான் லீவு போட்டுவந்தேன். ஆனால் இங்கு வந்தபின், அம்மாவின் நிலையைப் பார்த்து, என் ஆபீசுக்குப் போன் போட்டு, இந்த வாரம் வரையில் லீவில் இருப்பதாகச் செய்தி அனுப்பினேன். எனக்கும் வரும் திங்கட்கிழமை போயாகவேண்டும். உன் விஷயம் எப்படி?

நானும் உன் மாதிரிதான் வந்தேன். ஆனால் என்னால் உன்னைப்போல் லீவு போட்டுவிட்டு, இங்கேயே இருக்கமுடியாது. உன்னிடம் ஏற்கனவே சொன்னதுபோல், எனக்கு ஒரு வருடகாலத்திற்கு மலேசியாவுக்குப் போக உத்திரவு வந்துவிட்டது. நான் எந்தக் காரணத்தைச் சொல்லியும், என்னுடைய லீவை அதிகப்படுத்தமுடியாது. மேலும் நான் உடனடியாக என்னுடைய வெளிநாட்டுப் பணியில் சேராவிட்டால், எனக்குப் பதில் உடனடியாக என்னுடைய ஆபீசில் வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அனுப்பி விடுவார்கள். நான் இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக, கிட்டத்தட்ட ஓராண்டு காலம் மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது இந்த தடவை நான் போகமுடியாது போனால், பிறகு என் ஆபிசில் மீண்டும் ஒருமுறை என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஒருவருக்கு ஒரு முறைதான் சந்தர்ப்பம் தருவார்கள். தவற விட்டோமானல், அவ்வளவுதான், என்னுடைய ஒரு வருட உழைப்பும் பலனின்றிப் போய்விடும்.

அப்போது, ராகவனின் மனைவி, சுந்தரிடம் “சுந்தர், நீதான் இந்த சமயத்தில் உன் அண்ணாவுக்குத் துனையாக இருக்கவேண்டும். இப்போதே அவருக்கு வயது நாற்பதைக் கடந்துவிட்டது. இந்த வாய்ப்பு எங்களுக்கு ஒருமுறைதான் கிடைக்கும். இப்போது, அவர் வெளிநாடு போகும் வாய்ப்பைத் தவற விட்டால், இனிமேல் அது அவருக்குக் கிடைக்காத ஓன்றாகத்தான் போகும். இப்போது நீ மட்டும் உன் அண்ணாவின் எதிர்காலத்தை உணர்ந்து, அவர் உடனடியாக ஊருக்குப் போய் அலுவலில் சேர்ந்து, அவர் பணியில் தொடர்ந்து, வெளிநாடு போகும் வசதி கிடைத்தால், அவருக்கு அது ஒரு பெரிய வாய்ப்பாகும். அதனால்தான், நீ இங்கேயே இருந்து அம்மாவின் இறுதி காலத்தில், பிள்ளைகள் செய்யவேண்டியதைச் செய்தால் போதும். நீ என்ன சொல்கிறாய்?”எனக் கேட்டாள். சுந்தர் என்ன பதில் சொல்வதென்று யோசிப்பதற்குள், சுந்தரின் மனைவி சாரு “அதெப்படி முடியும். தாய்க்குத் தலைப்பிள்ளைதானே எல்லாம் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் உங்களின் கடமையை நீங்கள் செய்யாவிட்டால், அது சரியாகுமா? மேலும் எங்களுக்கும் பல பிரச்சினைகள் உண்டு. அவரின் ஆபிஸில் இப்போதுதான் இவருக்குப் பிரமொஷன் கிடைக்க இருக்கிறது. இவர் வேலை செய்வது தனியார் நிறுவனம். அதில் சீனியாரிட்டியெல்லாம் கிடையாது. முதலாளியின் மனதுப்படிதான் எல்லாம் நடக்கும். அப்போதுதான் அவரின் பெயரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இவரும் இப்போது, அம்மாவிற்காக் லீவு போட்டுவிட்டு இங்கேயிருந்து விட்டால்,மீண்டும் உங்கள் தம்பிக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்குமென்று சொல்ல முடியாது. அதனால்,எங்களாலும் இங்கேயே இருக்க முடியாது. மேலும் எங்களின் பிள்ளைகளின் படிப்பும் தடை படும்” என்றும்திட்டமாக சுந்தரின் கோரிக்கையை மறுத்து விட்டாள். சகோதரர்கள் இருவருக்கும் தங்களின் எதிர்காலந்தான் முக்கியமாக இருந்ததேதவிர, இந்த சோதனையான சமயத்தில், தங்களின் தகப்பனார் தனியாக எப்படி கஷ்டப்படுவார்,அவருக்கு தங்களைத்தவிர, ஆறுதலாக இருக்க யாருமில்லையே என்ற உணர்வுகூட இல்லாமல் இருந்தார்கள்.

ஜெஹதாவுடன் அவர்களுடைய படுக்கையரையில் இருந்த ஈஸ்வரைன் காதில் விழுந்தது. பிள்ளைகளின் வாதத்தில் இருந்த சுயநலம் தெரிந்தது. பிள்ளைகளிருவருக்கும் திருமணமாகி, அவர்களுகென்று ஒரு குடும்பம் வந்த பின் இது நாள்வரை, ஜெஹதாவோ, ஈஸ்வரனோ ஒரு முறைகூட அவர்களின் வீட்டிற்குப் போனதுமில்லை, அவர்களிடம் உதவியென்றோ, அன்பளிப்பென்றோ ஒரு பொருளும் ஏற்றுக் கொண்டதுமில்லை. இப்போது ஜெஹதா தன்னுடைய இறுதி காலத்தில் இருக்கும்போதுகூட, பிள்ளைகளுக்குத் தங்களின் தாயாரின் நிலையோ, தன்னுடைய தனிமையோ தெரியவில்லையே. பெற்றோர்கள் கேட்காமலேயே, பிள்ளைகளாகச் செய்ய வேண்டிய தார்மீகக் கடமையைக்கூட ஒரு சுமையாக நிணைக்கின்றவர்களிடம் போய், இதெல்லாம் உங்களின் ஜீவாதார கடமைகள் என எடுத்துச் சொல்லவேண்டுமா என நிணைத்து, ஈஸ்வரன் மனதுக்குள் துக்கித்துக் கொண்டார். ஜெஹதா இருந்த வரையில் அவருக்கும், சுந்தர், ராகவன் இருவருக்குமிடையில் ஒரு பாலமாக இருந்தாள். பிள்ளைகள் அவரிடம் நேரில் போய் தங்களுக்கு வேண்டுமென்று ஒரு நாளும் எதுவும் கேட்டதுமில்லை, அவரும் பிள்ளைகளிடம் உங்களுக்கு ஏதும் தேவையா எனக் கேட்டுச் செய்து கொடுத்த்துமில்லை. எல்லாமே ஜெஹதாவின் மூலம்தான் நிறேவேறும். பிள்ளைகள் கூட அவளிடம் சென்று தங்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்கும்வரை அவளும் காத்திருக்க மாட்டாள். அவர்களின் முகத்தைப் பார்த்தே யார் யாருக்கு என்னென்ன தேவை எனத் தெரிந்து தானே முன் வந்து அவைகளை முடித்துத் தருவாள். அந்தத் தாயா இனி அவர்களிடம் போய் எனக்கு நீங்கள் என்ன செய்யனுமெனச் சொல்வாள். ஒரு போதும் மாட்டாள். ஜெஹதாவின் சலனமற்ற முகத்தைப் பார்த்தவரின் துக்கம் எல்லை மீறிப் போனது. அவளின் கடந்த காலச் சம்பவங்கள் இரண்டு அவரின் மனதில் ஓடியது.

ஒரு முறை ராகவன் தன் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது, ஈஸ்வரனும் தன் அலுவல் நிமித்தம் வேறு ஊரில் இருந்தார். அப்போது, ஜெஹதாவின் கல்லூரியில் ஒரு கலாசார மாணவர் பரிவர்த்தனை என அவளின் கல்லூரியிலிருந்து பத்து மானவிகள் சிங்கப்பூருக்கு ஒரு பத்து நாட்கள் சுற்றுளாச் செல்ல திட்டமொன்று கூடி வந்தது. அந்தக் கல்லூரியில் ஜெஹதாதான் செல்ல வேண்டுமென்று தீர்மானித்து, அவளை அந்தப் பணிக்காக, பத்து நாட்கள் செல்ல உத்திரவும் கொடுத்தார்கள். அந்தச் செய்தியைக் கேட்டவுடன், ஈஸ்வரன் மிகவும் சந்தோஷமடைந்து அவளிடம் உடனேயேச் சொன்னார், “ஜெஹதா, இது நீ இத்தனை நாட்களாக உன் கல்லூரியில் செய்த உழைப்பிற்கும், உன்னுடைய ஈடுபாட்டிற்கும் கிடைத்த ஒரு அங்கீகாரம்தான். நீ எதைபற்றியும் யோசிக்காமல், பத்து நாட்கள், உனக்காக இரு. உன்னுடைய தாயாரையும், தகப்பனாரையும் ஒரு பத்து நாட்கள் வந்து பிள்ளைகளுக்கும், வீட்டிற்கும் துனையாக வைத்துவிட்டுச் செல். நானும் வாரக் கடைசி நாட்களில் வந்து அவர்களுக்குத் துனையாக இருப்பேன்” எனவும் ஆறுதலாகச் சொல்லி, அவளின் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்யச் சொன்னார். ஆனால், அப்போது அங்கு வந்த, ராகவனோ விஷயத்தைக் கேட்டுத் தன் தாய்க்குவந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தைப் பற்றிச் சந்தோஷப்படாமல், ஜெஹதாவைப் பார்த்து “என்னம்மா நீ எங்களிடம்கூட கேட்காமல் போக முடிவு செய்து விட்டாயா? எனக்கு இப்போதுதான் இறுதிப் பரீட்சைக்குப் பிராட்டிகல் இருக்கும். இப்போதுபோய் நீ என்னைத் தனியாக விட்டுப் போனால், எனக்கு என் பாடத்திற்கும், மற்றவைகளைக் கவனிக்கவும் யார் இருப்பார்கள்? என்னால் நீ இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. நீ இல்லையென்றால், என்னால் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்தவும் முடியாது. இந்த வருஷம் நீ போக வேண்டாம்,” எனக் கோபமாகவேச் சொன்னான். அதைக் கேட்ட ஈஸ்வரன்கூட அவனிடம் “என்ன ராகவன். நீ இனியும் குழந்தையில்லை. வரும்வருடம் நீயும் கல்லூரிக்குப் போக வேண்டியவன். அப்படியிருக்குபோது, இதேன்ன குழந்தையைப் போல அம்மாவிடம் பிடிவாதம் செய்வது? ஒரு பத்து நாட்கள் உங்களால் தனியாக இருக்க முடியாதா? உங்களிருவருக்கும் அதற்கான வயது இல்லையா. உங்களின் துனைக்குத்தான் தாத்தா, பாட்டி வரைபோகிறார்களே, நீ உன்னைத்தான் நினைத்துப் பார்க்கிறாயே தவிர, உன் தாயின் ஆசை என்னயெனக் கூட அறிந்து கொள்ள வில்லையே? அவளும் இந்தக் கல்லூரியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறாள். அவளின் தகுதிக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பை நீஉனக்காக இழக்கச் சொல்வது நியாயமல்ல. உன்னால் அவளூக்கு இப்படி ஒரு வாய்ப்பை வாங்கித்தர முடியுமா? சமூகத்தில் அவளுக்குக் கிடைக்கும் வசதிகளை நம்மால் அவள் இழக்கக் கூடாது. நீ அம்மா போவதற்குத் துனையாக இருக்க வேண்டுமேயன்றி தடங்கலாக இருக்காதே” என கட்டாயமாகச் சொல்லிவிட்டு வெளியேப் போய்விட்டார்.

ஆனால், அன்று இரவு அவர் வீட்டிற்குத் திரும்பிய போது, ஜெஹதா அவரிடம் மெதுவாகச் சொன்னாள் “ நீங்கள் என்னை தவறாக நினைகாதீர்கள். உங்களின் ஆசையை நான் புரிந்து கொண்டேன். அதே சமயம் நம்முடைய பிள்ளைகளின் தேவைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டாமா. இது வரை நான் உங்களையோ, அவர்களையோத் தனியாக விட்டுவிட்டு, எங்கும் சென்றதில்லையே. திடீரென்று, நான் கல்லூரிக்காக் அவர்களைவிட்டுத் தனியாக ஒரு பத்து நாள் போவதைக் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கம் தான் ராகவனை இப்படி கட்டாயமாகப் பேச வைக்கிறது. நீங்கள் அவனின் மேல் கோபம் கொள்ளாதீர்கள். அவர்களின் உலகம் நாமாக இருப்பதால்தான், ஒரு சிறு இடைவெளியைக் கூட அவர்கள் சந்திக்கத் தயாராக இல்லை. எனக்கும், உங்களையும், அவர்களையும் விட்டுவிட்டுத் தனியாகப் போய் சிங்கப்பூரில் இருப்பதும் கஷ்டமாக இருக்கும். உல்லாசமாக வெளியூருக்குப் போய்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமோ, எனக்குத் தீராத ஆசையோ இல்லை. நான் நாளைக் காலையில் எங்களின் பிரின்ஸ்பாலிடம் பக்குவமாகச் சொல்லிவிடுகிறேன். எனக்குப் பதில் போவதற்குத் தயாராக பலர் இருக்கின்றனர். அதனால் அவருக்கும் இதனால் எந்தவிதமானச் சங்கடமும் இருக்காது. நீங்கள் ராகவனின் பேரில் கோபம் கொள்ளாதீர்கள். இதுதான் நான் உங்களிடம் கேட்டுக்கொள்வேதென்றாள். மூத்தனுக்காக தனக்குக் கிடைத்த ஒரு வெளிநாட்டு வாய்ப்பை ஜெஹதா இழந்தாள். இன்று அவளின் அந்தப் பிள்ளைதான், அவளின் கடைசிகாலத்தில் கூட அவளுடன் இருக்கவும், தனக்கு வருகின்ற வெளிநாட்டு வாய்ப்பையும் இழக்கத் துணியவில்லை. ஜெஹதா தாய். ராகவனோ ஒரு பிள்ளைதானென்று, சொல்லாமல் சொல்லி விட்டான். அவனிடம் இனி இது பற்றி பேசுவது தனக்கோ, தன்னுடைய அன்புமனைவிக்கோ தரமற்றதென்று உணர்ந்தார்.

அடுத்ததாக, சுந்தரின் மனைவி சொன்னதை நினைவு படுத்திக் கொண்டார். இதே மாதிரி ஒரு வாய்ப்பைத் தான் ஜெஹதாவும் சுந்தருக்காக இழந்தாள். அது சுந்தரின் மனைவிக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் சுந்தருக்கு கட்டாயம் நினைவில் இருக்க வேண்டுமே? அவனும் பள்ளியிறுதி ஆண்டில் படிக்கும் போது தான், ஜெஹதாவிற்கும் பதவி உயர்வு வந்தது. அவளை துனைப் பிரின்சிபாலாக அங்கீகரித்து, பக்கத்தில் உள்ள ஒருகல்லூரிக்கு மாற்றல் செய்தார்கள். அவளும் அரசுப் பணியில் இருந்ததால், பணியிடம் மாற்றம் வழக்கம்தான். அதுவும் மேற் பணிக்குப் போகும் போது கட்டாயம் வேறு இடத்திற்குத்தான் போகவேண்டும். இது எழுதாத ஒரு சட்டம்தான். அப்போது சுந்தர் அவளின் பிரமோஷனுக்குக் குறுக்கே நின்றான். தான் 12ஆம் வகுப்பில் இருப்பதால், தனக்குக் கட்டாயம் அம்மாவின் உதவி தேவையென்றும், அவள் தன்னை விட்டுப் போனால், தான் தன் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவதாகவும் முரண்டு பிடித்தான். அப்போது ஈஸ்வரன் அவர்களுடந்தான் இருந்தார். அவரும் சுந்தரைப் பார்த்து, “சுந்தர் நீ சொல்வது சரியல்ல. அம்மாவிற்கு தகுதியடிபடையில் வரும் பதவி உயர்வுக்கு நீ தடையாக இருக்காதே. உனக்கும் வயது ஆகியது. நீ இன்னும் அம்மாவிடம் சலுகையை எதிர்பார்க்கும் பிள்ளையல்ல. உங்களையெல்லாம் விட்டுவிட்டு அம்மா இதுவரை எங்குமே போனதில்லை. இப்போது அவளுக்கு அவசியம் வெளியூர் செல்லவேண்டிய வாய்ப்புவந்துள்ளது. நான் இங்கு இருக்கும்போது உனக்கு என்ன கஷ்டம். நான் உங்களையெல்லாம் கவனித்துக் கொள்ள மாட்டேனா. உங்களின் சாப்பாட்டிற்காக அம்மா தனியாக ஒரு பாட்டியே ஏற்பாடு செய்து விட்டுப் போவாள். அந்தப் பாட்டி உங்களுக்குத் தேவையானதெல்லாம் வந்து செய்து வைக்கப் போறாள். மேலும் அம்மாவும் இரு வாரங்களுக்கு ஒரு முறை வார இறுதியில் வந்துதான் போவாள். அவளுக்கும் கல்லூரி விடுமுறை நாட்கள் வருமல்லவா. அப்போதெல்லாம் அவள் இங்கு தானே வரப்போகிறாள். அப்போது நீங்கள் உங்களின் தேவைகளை அவளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதனால், வீனாகப் பிடிவாதம் செய்யாதே. நீ இப்போது படிப்பை நிறுத்தினாலோ, அல்லது அதில் சரியான கவனம் செலுத்தவில்லையென்றாலோ உனக்குத்தான் நஷ்டம். உன் எதிர்காலம் தான் பாதிக்கும். புரிந்து கொண்டு பொறுப்பான பிள்ளையாக நடந்து கொள். என்னைக் கோபப் படுத்தாதே” எனத் தானும் கோபமாகச் சொன்னதும் அவரின் நினைவில் வந்தது.

ஆனால் நடந்தது என்ன. சிறுவயதிலிருந்தே தன்னுடைய பிடிவாதத்தால் சாதித்துக் கொண்டது போல் இப்போதும் அவனின் பிடிவாதம் எல்லையில்லாமல் போயிற்று. சுந்தர் இரு நாட்களாக தாயிடம் முகம் கொடுத்துப் பேசாமலும், உண்ணாமலும் இருந்து, கடைசியில் தான் நினைத்ததை அடைந்தே தீர்ந்தான். ஈஸ்வரன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஜெஹதா தன் மகனுக்காக தன்னுடைய பிரமோஷனைத் தியாகம் செய்வதில் உறுதியாக நின்றாள். ஈஸ்வரனிடம், “என் மேல் கோபம் கொள்ளாதீர்கள். என்னால் என் பிள்ளைகளைதாண்டி, எனக்காக என எதுவும் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. குழந்தை இரு நாளாக என்னுடன் முகம் கொடுத்துப் பேச வில்லை, சாப்பிடவும் இல்லை. அவனின் உடம்பு பலகீனமாகாதா. அவனுக்கு மேலா எனக்கு ஒரு பிரமோஷன் வேண்டும். நான் என் பிரமோஷன் முக்கியமென்று இன்று போய்விட்டு, அதனால் என் பிள்ளையின் மனமும், உடலும், படிப்பும் பாதித்தால், என்னால் பின்னால் அவைகளைச் சரியாக்க முடியுமா? ஒருமுறை என் மீது என் பிள்ளைகளுக்கு வெறுப்பு வந்துவிட்டால், அதை என்னால் ஒரு நிமிஷம் கூடத் தாங்கமுடியாது. எனக்கு என் பிள்ளைகளின் சந்தோஷம் தான் முக்கியமாகிறது. என் மனதை நீங்கள் ;புரிந்து கொள்வீர்கள். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வருகின்ற ஒவ்வொரு வாய்ப்பையும், உங்களின் விருப்பத்தையும் மீறி, நான் தவிர்த்து விடுவதற்குக் காரணம், என் மனதில் நான் ஒரு தாயாகத்தான் முதலில் இருக்கிறேன். அவர்கள் பிறந்தபின், சில சமயங்களில் நான் உங்களின் மனைவிஎன்பதைக் கூட முக்கியமாக நினைக்கவில்லை. அவர்களின் ஆசைக்காக, நான் உங்களின் விருப்பத்தைக் கூட மறுத்திருக்கிறேன். அப்போதுகூட எனக்கு என் குழந்தைகளின் தேவைகள்தான் முதலில் இருந்த்து. அப்படிப்பட்ட எனக்கு, இன்று என்னுடைய பிரமோஷன் முக்கியமாகத் தெரியவில்லை. நான் இப்போது இருப்பது போலவே, நான் ரிடையர் ஆகும் வரை இருந்துவிடுகிறேன். அதற்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட மாட்டேன்” என மிகவும் வருத்தத்தோடு சொல்லி, அவனின் கோபத்தையும் அடக்கி விட்டாள்.

தாயார் தன்னை விட்டு, பிரமோஷனில் வெளியூர் செல்வதை விரும்பாது, தன்னுடைய முரட்டுப் பிடிவாதத்தால், அவளின் தகுதியால் கிடைத்த பிரமோஷனைத் தடுத்த சுந்தர்தான், இன்று அவளின் கடைசி காலத்தில்கூட அவளுக்காக தன்னுடைய சுகத்தை தியாகம் செய்ய முன் வராமல், சுயநலமாக இருப்பதைப் பார்த்தவருக்கு, இப்படிப்பட்ட பிள்ளைகளுக்காக தன் வாழ்நாள்பூராவும் தனக்காக ஒரு நிமிடம் கூட வாழாத அந்தத் தாயைப் பார்த்து மனதிற்குள் சொல்லுக் கொண்டார் தான் அவளிடம் அடிக்கடி சொல்லுவதை :ஜெஹதா என்னதான் நீ ஒரு தாயாக வாழ்ந்தாலும், அவர்கள் எப்போதும் உன் பிள்ளைகள்தான். அவர்கள் தங்களுடைய சுகத்திற்காகத்தான், தாயார் என எண்ணம் கொண்டவர்கள். உனக்காக ஒரு போதும் அவர்களின் வாழ்நாளில் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டார்கள். நீதான் பைத்தியமாக இருக்கிறாய். அவர்கள் உன்னுடைய குழந்தைகள் தான். ஆனால், அவர்களையும், என்னையும் மீறி, உனக்கென்று, ஒரு முறையாவது நீ வாழத்தான் வேண்டுமென்றுஅப்போது, ஜெஹதா சொல்வாள், “நான் ஒரு தாயாகத்தான் வாழ விரும்புகிறேன். என் வரையில் அவர்கள் என்றும் என் குழந்தைகள்தான். அவர்கள்மீது நான் ஒரு நாளும் கோபப்படமாட்டேன். நீங்களும் அவர்களிடம் வருத்தம் காட்டாதீர்கள். அவர்களுக்கென்று உலகம்பரவலாகும். ஆனால், நமக்கு அவர்கள் இருவரும்தான் உலகம். அந்தச் சுகம் போதும்: என பக்குவமாகச் சொல்லி சிரித்து விடுவாள். அதற்குமேல் அவளிடம் விவாதிப்பதும் பலனளிக்காது. ஈஸ்வரனுக்கு தன்னுடைய பிள்ளைகளின் மீது மிகவும் கோபம் வந்த போதிலும், அதை அவர்கள் மீது காட்ட, ஜெஹதாவின் மனம் முன் வராது என்பதும், தன்னையும் அவளின் அன்புக் கட்டளைத் தடுத்து விட்டதையும் நினைத்தார்.

தங்களுடைய வாழ்நாளில் நடந்த சம்பவங்களை நினைத்துக் கொண்டிருந்த ஈஸ்வரன், தன்னுடைய பிள்ளைகள் இருவரும் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தார். அவர்களின் முகத்தைப் பார்த்தவருக்கு, அவர்களின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்கள் தெரிந்தது. “என்னப்பா, எல்லாம் முடியும் நிலைக்கு வந்து விட்டது. இனி அதை நினைத்து வருத்தம் கொள்ளலாமே தவிர, நடப்பவற்றை நம்மால் தடுக்க முடியாது. நாம்தான் நமக்குள் தைரியம் கொள்ள வேண்டும். ஆமாம், நீங்கள் இருவரும் எவ்வளவுநாட்கள் லீவில் வந்திருக்கிறீர்கள்”எனக் கேட்டார். அதை கேட்டவர்கள் இருவரும், ஒருவர் பின் ஒருவராக தங்களுடைய அலுவல் விஷயங்களைச் சொன்னார்கள். இருவரும் நேர்முகமாக, தங்களால் அம்மாவின் இறுதி காலம்வரை இருக்க முடியாதென்பதைச் சொல்லாவிட்டாலும், அவர்களின் நோக்கம் தங்களின் பணியும், எதிர்காலமும்தன் முக்கியமானதென்பதைத் தெளிவாகத் தெரிந்தது. ஈஸ்வரனுக்கு அப்பக்கூட அவர்களின் மேல் கோபம் வந்தது ஆனால் கோபம் கொண்டால் நடக்கப்போவது ஒன்றுமில்லைஎன்பதையும் புரிந்து கொண்டார். ஜெஹதாவிற்கும், தான் பிள்ளைகளிடம் கடுமையாக நடப்பது பிடிக்காதென்பதையும் நினைத்துக் கொண்டார்.

அவருடைய இயற்கையான சுபாவமே, ஒவ்வோருவரும் அவர்களின் பொறுப்பறிந்து கொள்ளவேண்டுமே தவிர, அவர்களின் கடமைகளை மற்றவர்கள் எடுத்துச் சொல்லி, செய்யத் தூண்டுவது நாகரீகமற்றது என்பதே. அதனால் அவர் மெதுவாக ‘நான் உங்களுக்கு அம்மாவின் உடல் நிலையைப் பற்றித்தான் சொல்லி, உங்களை வரவழைத்தேனேயன்றி, வேறு எந்த ஒரு உதவிக்காகவும் இல்லை. நாங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே, அவளுக்காக நான், எனக்காக அவள் என்றுதான் வாழ்ந்து வந்தோம். இது நாள் வரை நான் அவளுக்கு எந்தக் குறையும் வைத்தது இல்லை. இனியும் அவள் எதுக்காகவும், யாரிடமும் எதிர்பார்த்து இருக்க நான் விட மாட்டேன். அவளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அவையெல்லாம் நான் செய்யத் தயாராக இருக்கிறேன். அதனால், நீங்கள் நாளைகேகூட ஊருக்குப் போய் உங்களின் பணியில் சேர்ந்து கொண்டு, உங்களின் எதிர்காலத்தைப் பாருங்கள். அவளுக்கு எதுவும் நடந்தாலும் அதற்காக நீங்கள் மீண்டும் வரத் தேவையில்லை. அப்போது என்ன செய்ய வேண்டுமோ, அவற்றே நானே செய்து விடுவேன். நீங்கள் அது பற்றிக் கவலைப்பட வேண்டாம்: என்றார். அப்போது, :’அப்பா, அப்படி நீங்கள் அப்படிச் சொன்னால், அம்மாவின் கடைசி கால கர்மாக்களை யார் செய்வார்கள்? எனக் கேட்டார். அதற்கும் அவர் வருத்தத்துடன், “ராகவா, சுந்தரா, நாம் நினைப்பது போல் உங்கள் அம்மா ஓன்றும் உலகம் தெரியாதவள் இல்லை. தான் போனபின்பும், தன்னால் யாருக்கும் எந்த விதமான கஷ்டமும் இருக்கக்கூடாதென்றே, அவள் இருக்குக் போதே, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். அவள் மட்டுமல்ல, என்னையும் அந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ளச் செய்து விட்டாள். அதனால், நாங்களிருவரும் எங்களின் முழு மனதுடன், எங்களின் காலம் முடிந்தபின், எங்களின் உடலை அரசு மருத்துவக்கல்வி மாணவர்களின் படிப்பிற்காகத் தானமாக தருவதாக இருவரும் ஒப்புதல் கடிதம் எங்களின் முழு நினைவுடனேயே அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு கையெழுத்துப் போட்டு கொடுத்து விட்டோம். அதனால், எங்களின் உயிர் பிரிந்தவுடன், எங்களின் உடல் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு பயிற்சிப் புஸ்தகமாகி விடும். எங்களின் உடலால் எங்களால் செய்ய முடியும் ஒரு சிறு தானமாகும். எங்களைப் பொறுத்தவரையில், ஆண்டவன் கொடுத்த எங்களின் உடலால் நாங்கள் செய்யும் ஒரு உன்னதமான சமூகப் பணியாகும். இதுவே ஒரு உன்னதமான தானமுமாகும்.

எங்களின் முடிவில் இருக்கும் சமூக நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் நீங்கள் வாழும் இந்தச் சமூகத்திற்கு, உங்களால் செய்யக்கூடிய கடமைகளை மறக்காமல், மறுக்காமல் செய்ய வேண்டும். அது ஒவ்வோரு தனி மனிதனின் முதற் கடமையாகும்” என மெதுவாகச் சொல்லி, அவர்களுக்கு ஊருக்குப் போக உத்திரவும் கொடுத்துவிட்டு ஜெஹதாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டார். அவரின் கண்களில், ஜெஹதாவின் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை ஒளி விட்டது தெரிந்தது. ஜெஹதாவின் தூண்டுதலால்தான், தானும் தன்னுடைய உடலை பிற்காலத்தில் ஒரு உன்னதமான பணிக்காகத் தரச் சம்மதித்த்தை நினைத்தும் பெருமை கொண்டார். தானத்தில் சிறந்தது உடல் தானமே” என தன்னுடைய அன்பு மனைவி அடிக்கடி சொல்லுவதும் அவரின் காதில் ஒலித்தது.

ணி)

No comments:

Post a Comment