Friday, 22 November 2013

ஒரு கூட்டில் இரு புறாக்கள்

ஒரு கூட்டில் இரு புறாக்கள்

(ஜெயரமணி)

ஆசிரியையின் சிறு முன் குறிப்பு

மாமேதை திருவாளர் சாண்டில்யனின் “காவியப்புறா” என அகிலமெங்கிலும் வாழும் தமிழ் வாசகர்கள் அணைவராலும் ஒரு மனதாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஈடுஇணையில்லா சரித்திர காவியமான :”கடல்புறா” எனும் நவீனத்திலிருந்து என்னை மட்டுமல்ல எல்லா வாசகர்களின் இதயத்தில் வாசம் செய்த காவியநாயகன் இளையபல்லவன் என்றும் கருணாகர பல்லவன் எனவும் உலாவியவனும், அவனின் இதயக்கூட்டில் வாசம் செய்ய வந்த இரு புறாக்களான காஞ்சனா தேவி, மஞ்சளழகி என்னும் இரு காதற்புறாக்களைச் சுற்றிய என்னுடைய சித்தனைகளின் தொகுப்புத்தான் இந்த சிறுகதை. இந்த சின்னஞ்ச்சிறிய மீனை நான் மாபெரும் கடலான கடல் புறா என்னும் சாகரத்தின் கரையில் ஊர்ந்து வர விடுகிறேன். இந்த என்னுடைய அற்ப ஆசையை வாசகர்கள் பெரும் மனது கொண்டு பரிகசிக்காமல், குற்றம் குறைகள் இருக்கும், அவற்றை மறந்து மன்னித்து விட்டு, எனக்கு தங்களின் ஆதரவைத் தர முன் வரவேண்டும். இந்த என்னுடைய முயற்சி அன்னாரின் பாதங்களுக்கு என்னுடைய பணிவான ஆத்மார்த்தமான கதையாஞ்சலியென சமர்ப்பிக்கிறேன்.

================================

அலைகடலென பகைவரின் படைவெள்ளம் திரண்டு வந்தபோதும், பயமென்பதையே அறிந்திராத அஞ்சாநெஞ்சன், எந்தவிதமான இக்கட்டான சூழ்நிலையிலும் கண் சிமிட்டும் நேரத்தில் தெளிவு பெறுபவனும், தன்னந்தனியாக, சோழதேவரின் சமாதான லிகிதத்தை எடுத்துக் கொண்டு, பாலூர் பெருந்துறைக்கு வந்தவனும், அங்கு தன் உயிர்த்தோழனும், சோழ இளவல் அநபாயனை கலிங்க மன்னன் சிறைபிடித்தான் எனக் கேட்ட வினாடியே, கோபம் கொண்டு சூறாவளிபோல் அங்கிருந்த வீர்ரர்களையெல்லாம் பந்தாடியவனும், அக்ஷயமுனையில் எந்தவிதமான சட்ட திட்டங்களுக்கும் அடங்காத பலவர்மனின் மாளிகைக்குத் தனியாகச் சென்றவனும், அங்கேயே தங்கியிருந்து பலவர்மன், இடும்பன் போன்ற கொள்ளைக்காரர்களுடன் இருந்தும், நரமாமிசம் சாப்பிடும் பதக்குகளுடனும் பயமின்றி போராடி, உலகுக்குத் தெரியாத பல உண்மைகளை உலகுக்குக் காட்டி, வெற்றி வீரனாக பார்க்கும் திசையெல்லாம் தன்னுடைய வீரதீரச் செயல்களால் கடலரசைனையே தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் இளையபல்லவன், அன்று மலையூர் கோட்டைத்தலைவியின் அறையில் தன்னுடைய திட்டங்கள் எல்லாம் சிதைந்து போய் விட்டதையும், தான் எப்படியெல்லாம் மாற்றி மாற்றித் திட்டங்கள் தீட்டி, சோழ இளவலின் ஆனையையும் மீறி, தன்னுடைய கடல் புறாவையும், மற்ற மரக்கலங்களையும் கொண்டு மலையூர்க் கோட்டையை கைப்பற்ற செய்த ஏற்பாடுகள் எல்லாம் தன் கண் முன்னேயே புஸ்வானமென போனதையும், தான் எந்த இருவர் நேருக்கு நேர் சந்திக்கக்கூடாதென செய்த அத்தனை சாகசங்களையும் மீறி அந்த அறையில் வீசிய சூறாவளிப் புயற்காற்றில் எதுவும் செய்யச் சக்தியற்ற ஒரு துரும்பாக இங்கிருந்த பஞ்சனையில் மிகவும் பரிதாபத்தோடு சிறைப்பட்டவனைப் போல் இருந்தான் பெரும் வீரனென்று பலராலும் புகழப்பட்ட இளையபல்லவன்.

தன்னால் எதும் அறியாத பேதையென எண்ணிக் கொண்டிருந்த மஞ்சளழகியின் புத்திக் கூர்மையாலும், அக்ஷயமுனையை கொள்ளைக்காரர்களிடமிருந்தும், பதக்குகளிடமிருந்தும் காப்பாற்ற தான் செய்திருந்த அத்தனை பாதுகாப்பு முறைகளையும், நதிக்கரையிலிருந்த கோட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் கடல் புறாவையும், மற்ற நான்கு மரக்கலங்ககளையும் ஒரு சில முயற்சிகளிலேயே அழிக்கத்தக்க இயந்திர வசதிகளையும் அமைத்திருந்த மஞ்சளழகியின் ஏற்பாடுகளை அவளாகவே அவனிடம் சொல்லியபின்பும், ஸ்ரீ விஜயமன்னரால் தன் கட்டுப்பாட்டில் இருக்கின்ற மலையூர்க் கோட்டையைக் காப்பாற்றாமல், தன்னிடமிருந்த காதலால் இடையில் உறவு கொண்டாட வந்த தகப்பனுக்கும் துரோகம் செய்ய முன்வந்து, தான் செய்திருந்த முன்னேற்பாடுகள் ஒன்றைக்கூட செயல்படுத்தாமல், தன்னைத் சந்திக்க வந்திருந்த இளையபல்லவனிடம் தனக்கு இருந்த மாறாத காதலையும், அதே சமயத்தில் அவன் மனதில் தனக்கு முன் கடார இளவரசி குடியிருந்த கசப்பான உண்மையையும் உணர்ந்திருந்தும், இளையபல்லவனின் நீண்ட கால இலட்சியமான ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜிய அழிவையும், கலிங்கத்தின் கடற்பலத்தையும் அழிக்க வசதியாக, தன்னுடைய இன்னுயிரை எடுத்துக் கொண்டு, அவனைத் தப்பிச்செல்லவும் யோசனை சொன்ன மஞ்சளழகியின் ஈடு இனையில்லாத தியாகத்தாலும், தன்னுடைய இலட்சியத்தை அதிக முயற்சியின்றி தன்னால் அடைய முடிந்ததையும் நினைத்து நினைத்து இன்னதென்று சொல்லமுடியாத மனச்சுமையுடனும், தனக்கு உதவிய மஞ்சளழகி, ஸ்ரீவிஜய மன்னரின் தீராத கோபத்திற்கு ஆளாகிவிட்டதையும், பிறந்த போதே சின்னஞ்சிறு குழந்தையாக தன்னை விட்டு பலவர்மனின் பாதுகாப்பில் வைத்திருந்த பெண்ணை, திடீரென்று தன்னுடைய மகளாக ஏற்று கொண்டதற்கும், அவளை இந்தக் கோட்டையின் தலைவியாக நியமித்ததிற்கும் தகுந்த அரசியல் சூழ்ச்சியின் அடித்தளம் இருக்குமென்றும் அவனின் புத்தியில் பட்டது. நடுவிலே உறவு கொண்டாட வந்த தகப்பனும், இப்போ அவளுக்கு விரோதியாகி விட்டபடியால், இனிமேல் மஞ்சளழகிக்கு தன்னைத் தவிர வேறு யாரும் பாதுகாப்பளிக்க முடியாதென்றும், தான் இன்று அடைந்திருக்கும் மிகப் பெரிய வெற்றியின் பின்னால் அவளின் ஈடு இனையில்லா தியாகமும், தன்மீது அவளுக்கு இருக்கும் அளவிளமுடியாத காதலும்தான் காரணம் என்பதையும் நன்றாக அறிந்திருந்தான், அதே சமயத்தில் அவனுக்கும் நன்றாக ஒரு உண்மை தெரிந்தது. அதுதான், தன்னுடைய இதயத்தில் முதலில் நுழைந்தவள் காஞ்சனாதேவி என்றாலும், இன்று அதே இதயத்தில் ஆழமாக பதிவாகி இருப்பது மஞ்சளழகியின் நினைப்பும், உருவமும்தான் என. அதனால் அவனுள் ஒரு திடமான முடிவும் உண்டானது இந்த உலகில் தான் உயிரோடு இருக்கும்வரை தான் ஒரு நிமிஷம் கூட மஞ்சளழகியை பிரியவிடக்கூடாதென்றும், சந்தர்ப்பக் சூழ்நிலைகாரணமாக தன் வாழ்வில் இருவரில் ஒருவருக்குத்தான் இடமென நேர்ந்தால், அந்த இடம் காஞ்சனாதேவியை விட மஞ்சளழகிக்குத்தான் உரிமையானது என்றும் தன் மனதிற்குள் உறுதி செய்து கொண்டான்.

இப்படிப்பட்ட எண்ணச் சிறைகளில் சுற்றிக் கொண்டிருந்த இளயபல்லவனின் சிந்தனை, திடீரென்று தான் இருக்கும் அறையில் ஏற்பட்ட சத்தத்தினாலும், இரு பெண்களின் உஷ்ணமான அக்னிசிதறல்களைப் போன்ற வாக்குவாதத்தாலும் சிதறியது. இருவருக்குமிடையில் தீவிரமாக இருந்தது அரசு உரிமை போராட்டத்தை விட, இளயபல்லவனின் இதயத்தில் யாருக்கு அதிக உரிமை என்பதுதான். இதுவரை தன் மனதில் தன்னைத் தவிர வேறு ஆதரவு யாருமற்ற அந்த மாடப்புறாவான மஞ்சளழகியின் கோபாவேசக் காற்றால் இந்த அறையே ஆட்டங்கொண்டிருந்ததையும் அவனுடைய கண்கள் கண்டன.

. முதல் முதலாக பாலூர்ப் பெருந்துறையிலிருந்த கூலவாணிகனின் மாளிகையில் தன்னை அரைகுறை ஆடையோடு சிறிதும் அச்சமோ பயமோ இன்றி தன் பூப்போன்ற கைகளில் வாளேந்தி, கண்களில் தீவிர ஒளியோடு வீரப்பெண்ணாக தன்னை எதிர்நோக்கிய வீரப்புறாவான காஞ்சனாதேவி அன்று, கன்னங்களில் அறை வாங்கிக்கொண்டு அவமானத்தோடு துக்கத்தால் துடித்து கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த அந்த சில வினாடிகளைக் கண்ட இளயபல்லவன், இத்தகைய ஒரு பேராபத்தைத் தடுக்க தான் செய்த அத்தனை சாகசங்களும் வீணாகி, தன் மனம் கவர்ந்த இரு பங்கையங்களுமே ஒன்றையோன்று தீராப் பகையோடு ஒன்றை ஒன்று அழிக்கத் துடிப்பாக இருப்பதைப் பார்த்தவன் என்ன செய்வதென திகைத்து நின்று விட்டான்

அக்ஷ்யமுனையில் தன்னுடைய மருண்ட மான் விழியால், காந்தமென தன் இரும்பு மனதை தன்பால் வசீகரித்துக் கொண்ட மஞ்சளழகியையும் இளையபல்லவன் பார்த்தான். கட்டுப்படுத்தமுடியாத கோபத்திற்கு ஆளானவள், கண் சிமிட்டும் நேரத்தில் தன் கண் எதிரிலியேயே காஞ்சனாவின் கன்னங்களில் பளீரென்று அடித்தபின், அடி வாங்கி அவமானப்பட்ட காஞ்சனாவுடன் அவளும் துன்பப்படுவதையும் கண்டவன் காரணம் புரியாது தவித்தான். பார்த்த மாத்திரத்திலேயே மற்றவர்களின் மனதில் ஓடும் எண்ணங்களை புரிந்து கொள்ளும் சக்தி படைத்த படைத்தலைவனுக்கு, அன்று அந்த அறையில் தன் இதயக் கூட்டில் கூடி வாழ வேண்டிய இரு நங்கைகளின் மனதில் ஓடும் சூறாவளிக்காற்றின் வேகத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

தன்னுடைய ஒளிமூலம் அனுப்பிய செய்திகளின் படி, கடற்புறாவிலிருந்து வெளிப்பட்ட அமீர், கண்ட தேவர், மற்ற உப் தலைவர்களுடன் சேர்ந்து மலைக்கோட்டையை கைப்பற்ற வந்த காஞ்சனாதேவி, வெற்றிச் செய்தியை முதலில் அவனிடம் தாந்தான் சொல்ல வேண்டுமென்ற தாளாத ஆசையோடு வந்தவள், அறையின் கதவைத் தட்டி, அதைத் திறந்த மஞ்சளழகியையும், அங்கு பஞ்சனையில் சாய்ந்திருந்த தன்னையும் பார்த்தவுடனேயே அவளின் இதயத்தை பொறாமை ஆட்கொண்டுவிட்டது. அதன் காரணமாக, கொஞ்சமும் நிதானமின்றி, தனக்குச் சொந்தமான இளயபல்லவனின், பக்கத்தில், பஞ்சனையில் தன்னுடைய எதிரியும், தன் வாழ்வில் போட்டியாக இருக்கும் மஞ்சளழகியைப் பார்த்தவள் தன்னைப் பார்க்காமல், அவளுடன் அநாகரீகமான முறையில் வார்த்தைகளைச் சிதறிவிட்டாள். நெருப்புத் துண்டங்களாக விழுந்த வார்த்தைகளின் உஷ்ணத்தால் மஞ்சளழகியும் வெகுண்டாள். தான் கண்ணால் பார்த்திராத தன்னுடைய தாயைக் களங்கப்படுத்தி பேசியவளின் கன்னங்களைத் தன் பூக்கைகளால் இடியென தாக்கிவிட்டு, தன்னுடைய செயலால் திகைத்து நின்ற மற்ற இருவர்களில், இளைய பல்லவனைப் பார்த்து “மன்னியுங்கள். காஞ்சனா தேவியாரின் கொடுஞ்ச் சொற்கள் என்னை நிதானமிழக்கச் செய்து விட்டன. உங்களின் எதிரில், உங்களின் அடிமையான நான் இப்படிச் செய்தது மன்னிக்க முடியாத செயல்தான். அதற்காக நான் உங்களிடம் மனமார மன்னிப்புக் கேட்கிறேன். இனிமேல், தாங்கள் மேற்கொண்டு செய்யவேண்டியவைகளைச் செய்யுங்கள். நான் உங்களின் கட்டளைக்குக் காத்திருக்கிறேன்” எனவும் தன் கண்களில் வழிந்த நீரைத் துடைக்கக்கூட எண்ணமில்லாது, படைத்தலைவரைப் பார்த்துச் சொல்லி, தன் தலையை குனிந்து கொண்டாள்.

தன் எதிரில் நின்றிருந்த இருவரையும் பார்த்த இளையபல்லவன் மெதுவாகப் பஞ்சனையைவிட்டு எழுந்து அறைக்கதவைத் தாளிட்டான். பிறகு மஞ்சளழகியிடம் “மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாய்?” எனவும் கேட்டான். அவன் வந்திருக்கும் தன்னை வரவேற்கவும் இல்லை, தன்னிடம் மரியாதையின்றி நடந்து கொண்ட மஞ்சளழகியின் செயலையும் கண்டிக்காமல், அவளிடம் மென்மையாக “மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென” அவளிடமே கேட்டதைப் பார்த்த காஞ்சனாவின் கோபமும், வெறுப்பும் எல்லை மீறின. இளையபல்லவனை நோக்கி “என்னிடம் கண்டதேவர் நீங்கள் கோட்டைத்தலைவர் அறையில் சிறை வைக்கப்பட்டதாகவும், கடல் புறாவிலிருந்து உபதலைவர்களுடன் வந்து உங்களையும் மீட்டுக் கொண்டு, இந்தக் மலையூர்க் கோட்டையை கைபற்றியதையும் சொல்லத்தான் நான் இத்துனை சீக்கிரத்தில் இங்கு வந்தேன். ஆனால் வந்த இடத்தில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எத்தனை நாட்களாக என்னை இப்படி அவமானப்படுத்த வேண்டுமென நீங்கள் காத்திருந்தீர்கள்” எனவும் மஞ்சளழகியின் மீது தன்னால் காட்ட முடியாத கோபத்தை, படைத்தலைவனிடம் காட்டினாள்.

தன்னுடைய அவமானத்தையும், கோபத்தையும் அடக்க முடியாமல் காஞ்சனாதேவி தன்னிடமும் மரியாதையின்றி வார்த்தைகளைச் சிதறச் செய்ததைக் கண்ட இளயபல்லவன் ஒரு நிமிஷம் அவளைப் பார்த்தான். அவனின் கண்களில் தெரித்த கோபச்சிதறல்களைக் கண்ட காஞ்சனாவுடன் சேர்ந்து, மஞ்சளழகியும் தன்னுடைய செயலில் மூர்க்கத்தனத்தை உணர்ந்து எதுவும் பேச இயலாது படைத்தலைவரின் கண்களை நேரில் சந்திக்கவும் தைரியமில்லாது, தன்னுடைய தலையைக் குனிந்து கொண்டாள். காஞ்சனாவின் கண்களில் இளயபல்லவன் தனக்கு எந்த விதமான முக்கியத்துவமும் காட்டாதது மன்றி, மஞ்சளழகியில் வதனத்தில் தெரிந்த பயத்தையும், தயக்கத்தையும் கண்டவனின் கண்கள் கலங்குவதையும் பார்த்தாள். அவளுக்கு நன்றாகப் புரிந்து விட்டது. தனக்கு இனிமேல் இளையபல்லவனின் இதயத்தில் இடமில்லை என். அதனால் மேலும் வெகுண்டு அவனை நோக்கி “படைத்தலைவருக்கு இப்போ எதற்கு இத்தகைய சந்தேகம். வெற்றி கொண்ட மன்னரின் படைத்தலைவர் செய்ய வேண்டிய அடுத்த கடமை அவருக்குப் புதியதா? இல்லை அதைச் செய்ய அவருக்கு தைரியமில்லையா?” எனவும் பரிகாசத்தோடு கேட்கலானாள். அவளின் துடுக்குத்தனத்தைக் கண்ட படைத்தலைவன் “இங்கு எனக்கு என்ன செய்ய வேண்டுமெனக் கூறும் உரிமையும், தகுதியும் யாருக்கும் இல்லை. இந்தக் கோட்டை இன்று முதல் என்னுடைய கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆனால், இந்த உரிமையை எனக்குக் கொடுத்தது யாரென்று தெரியாமல், பொராமையால் மனம் போனபடி பேசுவது, கடார இளவரசிக்கு அழகல்ல: எனவும் நெருப்புப்போல் சொற்களை வீசிவிட்டு, மீண்டும் மஞ்சளழகியைப் பார்த்து “நான் என்றைக்கும் நன்றி மறக்கும் இனத்தைச் சேர்ந்தவன் அல்ல. என்னை வளர்த்த பல்லவச் சோழ நாடும் அத்தகைய பாலை எனக்கு ஊட்டவில்லை. நேற்று வரை நீ ஸ்ரீவிஜயவர்மரின் மகளாக இருந்திருக்கலாம். ஆனால் எப்ப நீ என்னுடைய இதயராணியாக என்னுடைய இரண்டாண்டுகாலமாக இடைவிடாத முயற்சியை அடைய உதவியாக, உன் தகப்பனார் உனக்குக் கட்டளையிட்டபடி இந்தக் கோட்டையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றாமல், உன்னிடம் இருந்த அத்தனை சாதனைகளையும் உபயோகப்படுத்தாமல், என் மீது கொண்ட காதலை மட்டுமே நினைத்து, இந்தக் கோட்டையை நான் அடைவதற்ககாக உன்னுடைய மென்மையான உயிரைக் கூட தருவதற்கு சித்தமானாயோ, அந்த வினாடிமுதல் நீ என்னுடையவள். அதனால் நீ எதிர்பார்ப்பது போல் என்னால் உன்னைச் சிறை செய்யவோ, அல்லது என்னைச் சேர்ந்த மற்றவர்களின் பாதுகாப்பிலோ வைக்க என் மனம் வராது. நானே உன்னிடம் சிறைப்பட்டவந்தான்”. நாம் இப்போ கூட மூவரும் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும். அதுதான் இப்ப என் முன்நிற்கும் விஷயம்” எனச் சொல்லிக்கொண்டே, தாளிட்டக் கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போட்டு விட்டு, வேறு எவரும் வர விழியில்லாமல் செய்தான்.

பிறகு உள்ளே வந்தவனின் கைகள் இரண்டும் அங்கிருந்த இரு புறாக்களின் இடையில் படர்ந்து, அவர்களையும் தன்னுடைய அனைப்பில் வைத்துக் கொண்டே, அங்கிருந்த பஞ்சனையில் அமர்ந்தான். இளையபல்லவனின் கைகள் தங்களின் மீது பட்டபோதெல்லாம் உணர்ச்சிகள் அத்தனையும் சிதறவிடும் அந்தப் பாங்கியர்கள் இருவரும் தங்களுடைய உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, மௌனமாகவே அவனின் அழைப்புக்கு இனைந்து வந்து அமர்ந்தார்கள்.

நீங்கள் இருவரும் ஒருவரின் இதயத்தில் மட்டும் வாழவில்லை. இருவருமே ஒரே இராஜ வம்சத்தில் ஒரே கொடியில் இரு கிளைகளில் உதித்த இரு மலர்கள். ஆமாம், உங்களின் தந்தை வழிப் பாட்டனார் ஒருவர்தான். உங்களின் தந்தைமார், தாயார்கள் வேறுவேறு மனிதர்கள்தான். ஆனால் எல்லாமே ஸ்ரீ விஜயசாம்ராஜ்ஜியத்தின் வாரிசுகள்தான். அவர்களுக்குள் இருந்த தாயாதி பகையால், நீங்கள் இருவரும் குழந்தை பருவத்தில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவுமில்லை பார்த்ததும் இல்லை. அதனால் இருவருக்கும் நியாயமாக இருக்க வேண்டிய சகோதரப் பாசம் உங்களுக்குள் வளரவில்லை, இன்று உங்கள் இருவருக்குமே நன்றாக தெரிந்து விட்டது நீங்கள் யாரென்றும், எந்த வம்சத்தின் கிளைகள் என்பதும்.

உங்களின் இருவரின் இதயத்தில் கோவில் கொண்டிருக்கும் என்னைப் பற்றியும் நான் சில விஷயங்களைச்சொல்ல விரும்புகிறேன். நான் இரண்டான்டுகளுக்கு முன் மகாராஜா இராஜேந்திரச் சோழ தேவரின் சமாதானத் தூதுவனாக தெங்கலிங்க மன்னனான கலிங்க பீமனைச் சந்திக்க, பாலூர்த் துறைமுகத்தில் கடல் வழியாக வந்தேன். வந்த இடத்தில் என் உயிர் நண்பன் அநபாயச் சோழ இளவலை தெங்கலிங்க பீமன் சிறை செய்தானென்று கேட்டவுடன், கொதித்த என் கோபத்திற்கு இலக்காகி, நிதானத்தை தவறியதால், நானும் கலிங்க வீரர்களிடமிருந்து தப்பி, காஞ்சனாதேவி தங்கியிருந்த மாளிகைக்குள் குதித்து ஒளிந்திருந்தேன். அப்பத்தான் காஞ்சனாதேவி உடை மாற்றுவதற்காக அதே அறைக்குள் நுழைந்தாள். ஒரு பெண் உடை மாற்றும் அறைக்குள்தான் நான் ஒளிந்திருப்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஆனால் உடனே என்னால் வெளியில் செல்ல முடியாது மாளிகையைச் சுற்றிலும் கலிங்கவீரர்கள் இருந்தார்கள். நல்ல பண்பாட்டில் வளர்ந்த என்னால், ஒரு பெண்னின் தனிமையில் இருப்பதும் சங்கடமாகியது. ஆனால், அந்த அறையில் அந்நியன் ஒருவன் இருப்பதைத் தெரிந்தவுடன், எந்தப் பெண்ணும் பயத்தால் கூச்சல்தான் போடுவாள். அந்த அறைக்குள் வந்த பெண்ணோ, சாதாரணமானவள் இல்லை. சிறிதும் பயமின்றி, தன் கைகளில் வாளேந்தி என்னை திடமாக வெளியே வா: எனவும் குரல் கொடுத்தாள், வெளியே வந்தவனின் கண்களுக்கு பெரிய விருந்தே இருந்தது. கந்தர்வ லோகத்திலிருந்து வந்த தேவதை என இருந்தவளின் கண்களில், வீசிய வீர உணர்ச்சியும், உடலும், கைகளும், திடமாக மெல்லிய கைகளில் வாளையெந்தி நின்ற பாவனையும், பயமென மூச்சே இல்லாமல், என்னையும் வெளியெ வரச் சொன்ன உத்திரவுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது. அன்று வரை நான் கண்ட பெண்கள் எல்லாம் அழகு பதுமையாக, பயந்து பதுங்கும் பாவையர்களாகவே இருந்தார்கள். தைரியமாக வாளேந்தி போராடத் துடிக்கும் ஒரு வீரப்பெண்ணைப் பார்த்தவன் கண்களும் மனதும் என் வசத்தில் இல்லை. அந்த வினாடியிலேயே அந்த வீரப்பெண் என் உள்ளத்தில் குடியேறி விட்டாள். இயற்கையாகவே வீரனான எனக்கு இன்னோரு வீரமான பெண்ணைக் கண்டவுடன் நான் என் வசத்தில் இல்லை. என் இதயக் கதவுகள் தாராளமாகத் திறந்து அந்த வீராங்கனையை என்னுள் பதித்துக் கொண்டது. என் அன்பு இதயத்தின் வேண்டுகோளுக்கு அந்தப் பெண்ணும் இனைந்தாள். அந்தச் சங்கடமான சூழ்நிலையிலும் எங்களின் அன்புப் பயிரும் வளர்ந்தது. கடார இளவரசர், அவருடைய புத்திரி காஞ்சனாதேவி, அநபாயச் சோழர் முதலிய எல்லாருமே, கலிங்கத்திலிருந்து மிக்க போராட்டங்களுக்கிடைய தப்ப முயற்சித்த போது, முன் நின்று எதிரில் வருகின்ற வீரர்களைத் தடுத்து நிறுத்த நான் கீழேயே தங்கி விட்டதால், என்னால் அவர்களுடன் அதே மரக்கலத்தில் தப்பி சோழ நாடு போக முடியவில்லை. கடலில் தங்கிய என்னை எங்களைக் காத்து தமிழ் நாட்டுக்கு அனுப்ப உதவியவர்களுடன் நானும் வேறு மரக்கலத்தில் பயணமானேன்.

நான் கடலிலேயே அகூதாவிடம் சேர்ந்து, மரக்கலப் பயிற்சி பெற்றேன். அவருடன் இருந்த காலத்தில் நான் சிறந்த கடற்படை வீரனாகவும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமானதால் எனக்கென்று சொந்தமான ஒரு மரக்கலத்தையும் பெற்றேன். என்னுடன் எனக்கு உதவியாக அமீரும், கண்டதேவர், கூலவாணிகனான சேந்தனும் என்னுடன் இனை பிரியாது வந்தனர். அப்போதுதான் நான் என் கடற்படைக்கு ஒரு தளம் தேடி, அக்ஷயமுனைக்கு வந்தேன். அங்கும் என்னைக் கொலை செய்ய பலர் முயற்சித்தார்கள். அங்கேதான் நான் பலவர்மனின் கோட்டைக்குச் சென்று வலுவில் பலவர்மனின் நட்பைப் பெற்றேன். அதற்கும் பல சாகசங்களைச் செய்ய வேண்டியிருந்தது. நான் பலவர்மனிடம் நட்பை பெற முயற்சித்தாலும், பலவர்மனுக்கு என்னைக் கொல்வதில்தான் நாட்டம் இருந்தது. அங்குதான் அக்ஷயமுனைக் கோட்டையின் தலைவர் பலவர்மனின் பெண் என் எல்லாராலும் அழைக்கப்பட்ட மஞ்சளழகியைச் சந்தித்தேன். எங்களுடைய முதற் சந்திப்பே மிகவும் போராட்டமாகத்தான் இருந்தது. அவளைக் கொண்டே என்னை அழிக்க பலவர்மன் முயற்சித்தான். அதற்காக அவனே மஞ்சளழகியையும் என்னையும் பல இடங்களில் சந்திக்கச் செய்து, அந்த மக்களிடையே அவளைப் பற்றி விரும்பத்தகாத கதைகளைச் ஜோடித்தான். அப்போதுதான் நான் அந்த மாடப்புறாவைக் கேட்டேன். உன் தகப்பனார் உண்மையிலேயே உன்னைப் பெற்றவர்தானா? என. அப்போதுதான் மஞ்சளழகியின் மனதை என்னிடம் திறந்து சொன்னாள். அவளும் என்னைச் சந்தித்த நாள் வரையில் நினைத்திருந்தாளாம் தான் அக்ஷயமுனைக் கோட்டையின் தலைவரான பலவர்மனின் புத்திரி என. ஆனால் அன்றைய வருட சித்ரா பௌர்ணமியன்று அவளின் நாட்டியத்தைப் பார்க்க மிகவும் யோசனைக்குப் பின் எனக்கு அவளும் அவளின் தந்தை பலவர்மனும் வரவேற்றார்கள். அவர்கள் ஒவ்வோரு வருடமும் அன்றைய தினத்தில் கட்டாயம் மூன்று அல்லது நாங்கு உயிர்பலிகளைக் கொடுப்பது வழக்கமாம். அன்றும் அப்படி ஏதும் நடந்து விடுமோ என பயத்தால் நான் மஞ்சளழகி எனப் பெயரிட்டு அழைத்த அந்தப் பெண் மிகவும் தடுமாற்றத்திலிருந்தார்கள். அன்று எத்தனையோ முன்னேற்பாடுகளைச் செய்திருந்த போதிலும் ஒரு உயிர் பலி நடந்து விட்டது. அதன் பிறகு அந்தக் கோட்டையில் இனிமேல் தினமும் பல உயிர்கள் மரிக்குமெனவும், நான் அந்த நெருப்புக்கு என்ணைய் வார்த்தவன் என்றும் பலவர்மன் என்னிடம் கோபமாகப் பேசி விட்டு, தன்னுடைய கோட்டை மாளிகைக்குப் போய்விட்டான். அன்று இரவுதான் அவனும் மஞ்சளழகியிடம் அவளுடைய பிறப்பின் மர்மத்தின் முடிச்சை ஓரளவுக்கு அவிழ்த்தான். ஆனால், அவனுக்குத் தெரிந்திருந்தும் மஞ்சளழகியின் பெற்றோர் யார் என்பதை வெளியில் சொல்லதனக்கு உரிமையோ, உத்திரவோ இல்லை என திடமாக மறுத்தும் விட்டானாம். பதினெட்டு வருடங்களுக்கு முன் ஒரு இரவு ஒரு வீரன் சின்னப் பெண்ணாக இருந்த மஞ்சளழகியை கொண்டுவந்து அவனிடம் கொடுத்து, அத்துடன் ஒரு ஓலையையும் கொடுத்து விட்டுச் சென்றதாக. ஆனால், பலவர்மன் அந்த வீரனையும் தன்னுடைய கோட்டை அறையிலேயே கொன்று விட்டான். பிறகு அவளை தன் மகளென்றே சொல்லி வளர்த்தும் வந்தான்.

எனக்கு மட்டும் ஒரு சந்தேகம் இருந்தது. எப்படிப்பட்ட கோடூரமான தகப்பனாக ஒருவன் இருந்தாலும், மணமாகாத, தாயற்ற ஒரு பெண்ணை, பிற வாலிபனோடு பழக விட மாட்டான். மாறாக பலவர்மன் மஞ்சளழகியை என்னுடன் சுதந்திரமாகச் சுற்ற அனுமதித்தது மட்டுமில்லாது, அப்படி நானும் அவளும் ஒன்றாக அந்தக் கடற்கரையில் சுற்றுவதை மற்ற கொள்ளைக்காரர்களுக்கும், தன்னுடைய கோட்டை மக்களுக்கும் அடிக்கடி சுட்டிக் காட்டியும் வந்தான். அவனின் செயலில் உள்ள சூழ்ச்சியைப் புரியாது நான் ஒரு நாள் மஞ்சளழகியைக் கேட்டேன் பலவர்மன் அவனுடைய உண்மையான தகப்பந்தானா என. அப்போதுதான், கண்ணீரோடு மஞ்சளழகி, தனக்குத் தெரிந்த அந்த இரகசியத்தைச் சொல்லி, தான் இப்போது அந்த அக்ஷயமுனையில் சுற்றும் ஒரு பாதுகாப்பு அற்ற மாருமில்லாத அனாதை பெண் என. அப்போதுதான் நானும் யோசித்தேன். ஏதோ ஒரு சூழ்ச்சிக்காக பலவர்மன் என்னுடன் அந்தப் பெண்ணை இனைத்து பழக விட்டு, அவளின் மூலம் என்னை அழிக்கப் பார்க்கிறான் என்பதையும். அப்போதுதான் என்னிடம் ஒரு நாள் மஞ்சளழகி கெஞ்சிக்கொண்டான். என்னை அன்று இரவே இந்தத் தீவை விட்டு, இரவுக்கிரவாக யாருக்கும் தெரியாமல், ஒரு கொள்ளைக்காரனைப்[ போல நங்கூரம் பாய்ச்சிக் கொண்டு என் மரக்கலங்களை எடுத்துக் கொண்டு கடலில் பாய்ந்தோடி விடுமாறும், அப்படி நான் செய்யாவிட்டால், அந்தக் கோட்டையில் இருக்கும் ஒரு அநாகரீக சட்டப்படி, என்னால் மஞ்சளழகி கெடுக்கப்பட்டாள் எனச் சொல்லி, என்னை நரமாமிசம் தின்னும் பதக்குகளின் கைகளில் ஒப்படைத்துவிடுவான் என்றும் சொல்லி, அழுதாள். அப்போது அவளிடம் நான் கேட்டேன், அப்படி நான் ஏன் ஓட வேண்டும். நாந்தான் உன் அப்பாவின் விருப்பப்படியே உன்னை மணக்கத்தயாரக இருக்கிறேனே. அப்படியிருக்க நான் உன்னைக் கெடுத்து விட்டதாக எப்படி ஒரு அபாண்டமான வதந்தியை கிளப்பமுடியுமென. அதற்கும் அவள் சொன்னான் இந்தத் தீவில் அப்படிபட்ட நாகரீகமான கட்டுப் பாடுகள் எதுவும் கிடையாது. தனக்குப் பிடிக்காத, பகைவர்களை பலவர்மன் எப்படி வேண்டுமானாலும் அழிக்க முடியுமென்றும், அதற்கு அந்தக் கோட்டையில் உள்ளவர்கள் யாரும் எதிராகப் பேச மாட்டார்கள் என்றும். மேலும் அன்றே என்னிடம் கேட்டாள், “உங்களுக்கும் கடார இளவரசி காஞ்சனாதேவிக்கும் உள்ள உறவும், நெருக்கமும் எனக்கும் தெரியும். நீங்கள் இங்கே என்னுடன் இருக்கிறீர்கள். ஆனால், நிரந்திரமாக என்னுடன் இருக்க மாட்டீர்கள். இந்த கடலில் ஆடும் அலைகளைப் போல் என்னைத் தொட்டு விளையாடிவிட்டு, ஒரு நாள் நீங்களூம் போய் விடுவீர்கள். நான் என்றும் போல் இந்தக் கடற்கரையிலேயே இந்த அலைகளுக்கிடையே இருக்கத்தான் வேண்டும். எனக்கு யாரும் துனை இல்லை. இந்த கடற்கொள்ளைக்காரர்களும், அந்த அலைகளும்தான் என் துனை என கண்களில் நீர் வழியக் கூறினாள். அப்பவும் நான் அவளுக்குச் சொன்னேன், நான் என்றும் அவளைக் கைவிடவோ, மறக்கவோ மாட்டேன். கட்டாயம் ஒருனாள் வந்து அவளை என்னுடன் அழைத்துச் செல்வேன் என். அப்பவும் அவள் தீர்மானமாகச் சொன்னான். பலவர்மனுக்கு ஒரு நாளும் தனக்கும் இயளையபல்லவனுக்கும் நல்ல வாழ்வு அமைத்துக் கொடுக்கும் எண்ணம் இல்லையென்றும். அவனுடைய குறிகோள் எல்லாம் என்னை எப்படியாவது சோழர் படைத்தலைவன் என்றபொறுப்பிலிருந்து விலக்கி, அவளை மணந்து கொண்டு, அந்தத் தீவிலியேயே பலவர்மனுக்கு அடங்கிய ஒரு கடற்படை வீரனாக இருக்கவேண்டும். அல்லது அவளுடன் எனக்கு தகாத உறவு இருப்பதாகவும், அதனால் நான் அவளைச் சீரழித்து விட்டதாக கதை பரப்பி, என்னைக் கொல்லவும் முயற்சி செய்வான். அன்றும் மஞ்சளழகி என்னிடம் சொன்னாள் என்னை அன்றிரவே யாருமறியாமல் நங்கூரம் பாய்ச்சி என்னுடைய மரக்கலத்தை எடுத்துக் கொண்டு அந்தத் தீவின் எல்லைக்கப்பால் ஓடிவிடும்படி. ஆனால், வீரனான என்னால் அந்தமாதிரி ஒரு கோழைபோன்று ஓட மனமில்லை. அதுமட்டுமன்றி, அந்தத் தீவில் மஞ்சளழகியின் நிலையை யோசித்தேன். கொடூரமான வேங்கை, சிங்கம், குள்ளநரி, மதம் பிடித்த காட்டுயாணைகளின் நடுவில், தாங்கவோ, அனைத்துப் பிடித்து ஆதரவு அளிக்கவோ யாருமின்றி, தன்னந்தனியாக ஒரு மனித பிசாசுகள் வாழுகின்ற காட்டுப் பிரதேசத்தில், மருண்ட விழிகளோடு இருந்த அந்த மஞ்சள் நிற அழகியின் நிராதரவான நிலையைதான் என் கண் முன் நின்றது. அப்போதே நான் தீர்மானித்தேன் எத்தனை துன்பங்கள் வந்தாலும், மஞ்சளழகியின் பிறப்பு மர்மத்தை அறியவும், அந்தக் கோட்டையை என்னுடைய ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்து, அதனையே அவளுக்கு முழு உரிமையாக்கி, அவளுக்கு ஒரு அந்தஸ்த்தும், அதிகாரமும் கொடுக்க வேண்டுமென். அப்படியே என்னுடைய முயற்சியால் மஞ்சளழகியின் தாய், தந்தை யாரெனவும் அறிந்தேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரி, ஏதோ யாருமற்ற ஒரு அனாதை போல், தாய், தந்தை முகம் பார்க்காமல், சொந்த அப்பா என எண்ணி, அன்பும் பாசமும் செலுத்திய பலவர்மனும் வளர்ப்புத் தந்தை எனவும், தன்னுடைய சுயநலத்திற்காக யாரையும் பலி கொடுக்கவும் தயங்காத ஒரு அரக்கன் என்பதையும் தெரிந்து கொண்டேன். அவளிடம் முதலில் எனக்கு ஏற்பட்டது அனுதாபத்தால் ஏற்பட்ட ஒரு பாசமும் பரிவும் என்றுதான் நினைத்தேன். அதனால்தான், நான் இருமுறை காஞ்சனாவிடம் கொண்டதுதான் காதல் எனவும், மஞ்சளழகியிடம் என்னுள் வளர்ந்தது ஒரு பரிவும், பரிதாபமும்தான் எனவும் நினைத்திருந்தேன். ஆனால், நேற்று அவள் என்னுடைய இலட்சியம் நிறைவேறுவதற்காக, தன்னையே அழித்துக் கொள்ளவும் துணிந்தபிந்தான், என்னால் அவளின் இதயதுடிப்பையும், என்மீது அவளுக்கு இருக்கும் காதலின் ஆழத்தையும் உணர்ந்தேன்.

கடார இளவரசிக்கு என தனியாக ஒரு நாடு, மக்கள், சுற்றம், உரிமையாக ஒரு தந்தை என பாசம் காட்டும் நல்ல மணம் கொண்ட குணவர்மர் இருக்கிறார். ஆனால், பாவம் இந்த மணிப்புறாவுக்கு யாருமில்லை. தாயில்லை, தாயுடன் பிறந்தவர் இருந்தும் நெருங்க முடியாதவர். நீண்ட காலம் காணாது கடைசியில் அவளை ஏற்றுக் கொண்ட தந்தையிடமும் இனிமேல் அவளால் நெருங்க முடியாது. அவள் எனக்குச் செய்த உதவியால், ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியம் அழியும் நிலைக்குப் போய்விட்டது அதனால் அவளிடம் ஸ்ரீவிஜய மக்களும், அரசரும் அன்பாக இருக்க மாட்டார்கள். மாறாக அவளைக் கொலை செய்வதற்குத்தான் தயாராக இருப்பார்கள். அதனால், இனிமேல் மஞ்சளழகியை இங்கே விட்டுச் செல்வது அவளைத் தனிமை சிறையில் அடைத்துவைத்து, கொலைவேறி கொண்ட காட்டு மிருகங்களிடையே விட்டுச் செல்வதற்கு ஒப்பாகும். எனக்குச் சொந்தமான மஞ்சளழகியை இனி வேறு யார் பார்வையிலும் நான் விட்டு வைக்க மாட்டேன். இந்த நிமிஷம் முதல் அவள் என்னுடன் இனைந்து விட்டாள். இப்படிச் சொல்லிக்கொண்டே, துக்கம் தாங்காமல், குரல் தளதளக்க, தன் இடப்புறம் இருந்த மாடப்புறாவை, தன்னுடன் இறுக்கி அனைத்துக் கொண்டான் படைத்தலைவன். ;அந்த மாடப்புறாவும், அவனின் இதயத்தில் தலைசாய்த்துக் கொண்டது.

என்னுடைய இதயத் தராசில் இருபுறாக்களையும், அவர்களிருவருக்கும் என்மீது இருக்கும் காதலையும் வைத்துப் பார்த்தேன். இரு தட்டுக்களும் சமமாகத்தானிருந்தது. எனக்கு ஆண்டவன் பஞ்ஜேந்திரங்கள் இரண்டாக கொடுத்தது போல், என்னுடைய இதயத்திலும் வாழ இரு புறாக்களையும் அளித்திருக்கிறான். எனக்கு இரு கண்கள், இரு கைகள், இரு கால்கள் தேவை என்பதைபோல், என் வாழ்வு நிறைவு பெற இந்த இரு புறாக்களும் என்னுடன் இனைந்து இருக்க வேண்டும். என்னுடைய இதய சிம்மானசனத்தில் , இருவருக்கும் சமமாக இடம் உண்டு. இருவரிடமும் என் அன்பு மாறாது குறையாது இருக்கும், என் வாழ்வு வளம் பெற வேண்டுமென்றால், என்னுடன் நீங்கள் இருவரும் வேற்றுமை பாராட்டாது, ஒற்றுமையாக, அன்பாக இருக்க வேண்டும். நான் சந்தோஷமாக இருப்பது உங்களிருவரின் அன்பால்தான். அதனால், நான் உங்களிடம் கேட்பது நீங்கள் இருவரும் உறவில் சகோதரிகள் தான். அதனால் அப்படியே அன்பால் கட்டுப்பட்ட இனைந்த சகோதரிகளாக, இரு புறாவாக என்னுடைய இதயக் கூட்டில் வாழ வேண்டும். செய்வீர்களா? என்னை சந்தோஷமாக வாழ துனையாக இருப்பீர்களா? சொல்லுங்கள் என் செல்லப் புறாக்களே.

இளையவல்லவனின் இதயபூர்வமான வார்த்தைகளைக் கேட்ட இரு புறாக்களும் முதல் சில நிமிஷங்களுக்குப் பேசவேயில்லை. பிறகு மெதுவாக மஞ்சளழகி சொன்னாள் “அன்பரே, எனக்கு உங்களால் இன்று முதல் ஒரு அன்பான சகோதரி கிடைத்திருக்கிறாள். சின்ன வயதிலிருந்தே தாய் முகத்தையோ, தாயன்பையோ அனுபவித்திராத, எனக்கு இன்று இந்த நிமிஷம் முதல் சகோதரி என்ற உறவில் என்னிடம் அன்பும், பாசமும் காட்ட ஒரு அன்னை கிடைத்திருக்கிறார். அவரை நான் என்றும் என் வணக்கத்திற்குரியவர். யாருமின்றி தனியாக இந்த தனித்தீவில் வாழ்ந்த எனக்கு இதுவே பெரும் பேறு. நான் என் வாழ்நாள் பூராவும் உங்களிடமும், என் சகோதரியிடமும் மாறாத பாசமும், பற்றும் கொண்டவளாகத்தான் இருப்பேன். அது உங்கள்மீது நான் வைத்திருக்கும் மாறாத காதலின் மேல் ஆனை. நாங்களிருவரும் உங்களுக்கு இதமாகவே இருப்போம். இனி வரும் நாட்கள் எல்லாம் உங்களுக்கு இனிமையான வசந்த காலங்களாகும்.” எனச் சொல்லி விட்டு, தன்னுடைய கண்களைத் துடைத்துக் கொண்டு அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியேச் செல்லலானாள். அப்போ அவளிடம் காஞ்சனாதேவி :இப்போ நீ எங்கே போகிறாய்” எனக் கேட்டாள். . அதற்கு சிரித்துக் கொண்டே, “தலைவர் கலைத்துப் போயிருக்கிறார். அவருக்கு பருக பாலும், கொஞ்சம் பழங்களும் எடுத்து வரப்போகிறேன். நீங்கள் இங்கேயே அவருடன் பேசிக் கொண்டிருங்கள்” என புன்னகையுடன் சொல்லிவிட்டு, அறையின் கதவை சாத்திக் கொண்டு போனாள். தங்களை இருவரையும் தனியாக விட்டு விட்டு, கொஞ்சமும் ஆசூயை இல்லாது செல்லும் அந்த வெள்ளை மனம் படைத்த மஞ்சப்புறாவை, கடற்புறாத்தலைவனும், காஞ்சனைப் புறாவும் சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்திற்கு முன் அந்த அறையில் வீசிய சூறாவளிக்காற்று அடங்கி, இனிமையான தென்றல் வீசத் தொடங்கியது. மனப்பாரம் குறைந்த இளையபல்லவனும் வாய் விட்டு மனதார சிரித்தான், தன்னருகில் இருக்கும் ஒரு புறாவை அனைத்தபடியே. சற்று நேரத்திற்கு முன் மஞ்சளழகியின் கரங்களால் சிவந்த அந்த பூப்போன் கன்னங்களை தன்னுடைய முரட்டுத்தனமான கன்னங்களால் இதமாக இனைத்துக் கொண்டவனின் மனக்கண்களில் ஓடியது இனிமேல் இப்படிப்பட்ட எத்தனை இரவுகள் தன் வாழ்வில் நிச்சயமென.வ்