Friday, 26 May 2023

வர்ணம் கருப்பு.

 

-“வர்ணம் – கருப்பு”-

(ஜெயரமணி)

மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்த சாந்தா, தன் வீட்டில் இருள் சூழ்ந்திருந்ததைப் பார்த்து, உள்ளே வந்து விளக்குச்  சுவிட்சைப் போட்டாள்.. அங்கே அவளுடைய அப்பா ராஜாராமன்,  தலையை மேஜையின் மீது கவிழ்த்துக் கொண்டு, துக்கத்தால் விம்மிக் கொண்டிருந்தார்.  அவரின் கையில் இருந்த உரையைப் பார்த்தவளுக்கு தந்தையின் துக்கத்திற்குக் காரணம் புரிந்து விட்டது.  அதனால் மெதுவாக அப்பாவின் அருகில் போய் அவருடைய கையில் இருந்த உரையை எடுத்துக் கீழே போட்டாள்.  தன்னைத் தொட்ட பெண்ணைப் பார்த்தவரை “எதற்கு அப்பா இப்படி வருத்தப்படுகிறீர்கள்?  நமக்குத் தெரிந்தவைதானே.  ஒவ்வொரு முறையும் என்னை ஒருவர் பார்க்க வருவதும், பிறகு என்னுடைய குறையைச் சொல்லி, தங்களுக்கு பிடித்தமில்லை என்று தெரிவிப்பதும், நமக்குப் புதியதா? நானும் எத்தனை தடவைகள் உங்களிடம் வேண்டாம் இந்த பரீட்சை எனச் சொல்லியும், நீங்கள் கேட்காமல் என்னையும் கஷ்டப்படுத்துகிறீர்கள். உங்களுக்கேத் தெரியும் நான் என்னுடைய விருப்பம் இல்லாமல்தான், உங்களின் மனம் கஷ்டப்படக்கூடாதென்று இந்த நாடகத்தில் மேடை ஏறி நிற்கிறேன்.  நாடகம் முடிந்தவுடன் நான் அதை மறந்து விடுகிறேன்.  ஆனால், நீங்கள்தான் ஏதோ ஒரு மாயம் நடக்குமென கேளுங்கள். போதும் எனக்கும் மனம் மரத்து விட்டது.  ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்க ஒருவரை தரகர் கூட்டி வருவதும், நானும் புடவைகளை நிறம் மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்டு, அவர்களை நமஸ்கரிப்பதும் எத்தனை வேதனையாக இருக்கு தெரியுமா?  எனக்கும் கன்னிப் பருவம் போய் விட்டது.  நானும் முதிர்கன்னியாகி விட்டேன்.  கிட்டத்தட்ட பத்து வருட காலத்தில், எத்தனை பேர்கள் வந்தார்கள்.  ஒருவருக்கும் கூட என்னுடைய நிறம் பிடிக்கவில்லையே அப்பா.  நான் என்ன செய்வது?  என்னுடைய புடவைகளின் நிறத்தைத்தான் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது. ஆனால், என்னுடைய தோலின் நிறத்தை மாற்ற முடியவில்லையே”.  எனச் சொல்லி, வருத்தப்பட்டாள்.       

   மகளின் துன்பத்தைப் பார்த்தவரும் “என்ன செய்வதம்மா, நான் உன்னைப் பார்க்க வருபவர்களிடம் உன்னுடைய மற்ற எல்லாத் திறமைகளையும் சொல்லுகிறேன்.  அவர்களுக்கு உன்னுடைய படிப்பு, பட்டம், நீ பார்க்கும் வேலை, நமக்கு இருக்கும் சொத்து விபரம், நீ என்னுடைய ஒரே பெண் என்கிற எல்லாம் பிடித்திருந்தாலும், உன்னுடைய மேல் தோலின் நிறத்தைக் கண்டு, பின்வாங்கி விடுகிறார்கள்.  வருபவர்களில் ஒருவருக்காவது, நிறம் என்பது ஆண்டவனாக அளிப்பது, நாம் கேட்டு வாங்குவது இல்லை என புரியவில்லையே” எனப் புலம்பினார்.                         “அப்பா, நீங்கள் பேசுவது நமக்குச் சரியாக இருக்கும்.  ஆனால், அவர்களின் கண்களுக்கு?  ஏனப்பா, கடையில் போய் வாங்கும் பொருளையே எத்தனை வகையாகத் தரம் பார்த்து வாங்குவோம்.  அந்தப் பொருட்களையெல்லாம், நாம் ஆயுளுக்கும் வைத்துக் கொள்ளுவதில்லை.  அப்படி இருக்கும்போதே, நாம் தேர்ந்தெடுக்கும் பொருள் நமக்குப்பிடித்து இருக்கா எனத்தானே பார்க்கிறோம்.  அதிக விலை கொடுத்தாவது, பளிச்சென்று, வசீகரமாக இருப்பதைத்தானே வாங்குவோம்.  அப்படியிருக்க, வாழ் நாள் பூராவும் இணைந்து வாழ ஒரு பெண்ணைத் தேரந்தெடுக்கும்போது, கண்ணுக்கு நிறைவான வெளித் தோற்றத்தைத்தானே பார்ப்பார்கள்.  மாறாக, படிப்பு, வசதி, சொத்து எனப் பார்த்து வரனும்னு நாம் ஆசைப் படலாம். ஆனால் அது நடக்குமா?  நம் வீட்டில் ஒரு பையனுக்குப் பெண் பார்த்தால், நாமும் அதைத்தானே முதலில் பார்ப்போம். குறை நம்மிடம்தான் இருக்கு.  நான் சிலரைப் போல் சிகப்பாக, கண்ணுக்குப் பளீரென இல்லாதது என்னுடையதோ, உங்களுடையதோ குற்றம் இல்லை.  ஆண்டவனின் செயல்.  அதனைக் குறை சொல்ல நமக்கு என்ன தகுதி?

                நீங்களே நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொருவரையும் ஆண்டவன் படைக்கும் போது அதற்கு ஒரு காரணம், பொருள் இருக்கும் என.  என்னையும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் பகவான் மற்றவர்கள் காணக் கூசும் நிறத்தில் படைத்து விட்டான்.  ஆனால், என்னுடைய நிறம்தான் குறையானதே தவிர, மற்றபடி என்னுடைய வாழ்க்கையில் எனக்கு என்ன குறை? நல்ல கல்வி கொடுத்திருக்கிறீர்கள், நல்ல பண்புகளைச் சொல்லி, என்னை பக்குவமாகத்தான் வளர்த்திருக்கிறீர்கள்.

 என்னைக் கேட்டால் என்னுடைய மனதில் திருமணம் என்கிற ஆசையே இல்லை. என்னுடைய பணியில் நான் மிகவும் சந்தோஷமும் திருப்தியும் அடைகிறேன்.  திருமணமானால், ஒரிரு குழந்தைகள் பிறக்கும். இப்போ, ஒவ்வொரு வருஷமும் என்னைச் சுற்றி நாற்பதுக்கும்மேல் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் என்னை அன்புடனும் பாசத்துடனும் “டீச்சர், டீச்சர்” எனக் கூப்பிடும்போது, எனக்கு ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது.  என்னால், நிறைய பச்சிளம் பிராயக் குழந்தைகளுக்கு எழுதவும், படிக்கவும் சொல்லிக்கொடுத்து, நாளை அவர்கள் இந்த பாரதத்தை தாங்கும் தூண்களாகச் செய்ய முடியும்.  இனிமேலும், நமக்குக் கிடைக்காத ஒரு சின்ன ஆசைக்காக் ஏங்காதீர்கள்.  நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? நினைத்துப் பாருங்கள்.  என் மனதில் நன்றாக பதிந்து விட்டதப்பா.  ஆண்டவன் என்னை மற்றவர்களைப் போல், சின்னக் குடும்பம், திருமணம் என்கிற சிறைக்குள் வைத்து வாழப்படைக்கவில்லை.  மாறாக, இந்த சமூகத்திற்கு, என் நாட்டுக்கு என்னால் ஆன நல்ல செயல்களைச் செய்து பரந்த உலகில் நிறைந்த மனதோடு வாழும் ஒரு வாழ்க்கையை அளித்திருக்கிறார்.  மனம் தேறுங்கள். எழுந்து சாப்பிட வாருங்கள்” எனச் சொல்லிக் கொண்டு, உள்ளே சென்றாள்.

அப்போது அவர்கள் வீட்டுத் தொலைபேசி அடித்தது. எடுத்தவர் “சாந்தா” உனக்குத்தான் எனக் கொடுக்க, சாந்தாவும் வாங்கிப் பேசினாள்.  அவள் பதிலாக “எந்த ஆஸ்பத்திரி.” எனக் கேட்க, பதிலும்  கிடைத்தது, அவளும் தொடர்ந்து, “கவலை வேண்டாம்.  நான் இப்பவே கிளம்பி வருகிறேன்.  உங்களுக்கு எத்தனை பாட்டில்கள் இரத்தம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்.  நான் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்” எனச் சொல்லி விட்டு, அப்பாவைப் பார்த்து “அப்பா, என்னுடைய மேல் தோலைத்தான் ஆண்டவன் கருப்பாக வைத்து விட்டார்.  ஆனால், அதனுள் ஓடும் இரத்தமோ சிவப்பு நிறம்தான். இப்பவும், ஒரு சிறு பெண் விபத்தில் அடிபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.  அவளுக்கு உடனடியாக நிறைய இரத்தம் தேவைபடுகிறதாம்.  அதனால், ஆஸ்பத்திரியிலிருந்து என்னைக் கூப்பிட்டார்கள்.  இப்போ பாருங்கள், என்னுடைய இரத்தத்தின் நிறம் சிவப்பாக இருப்பதுடன், அதன் பிரிவும் எல்லார் உடம்புக்கும் ஒத்துப் போவதால், என்னால் எத்தனை பேருக்கு உயிர் காக்க உதவியாக இருக்க முடிகிறது. என்னுடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்குப்பா. நம்மால், இந்தச் சமுகத்திற்கு பாரமாக இல்லாமல், உபகாரமாக இருக்க முடிகிறதே, அதுவே சுகமானது.  நீங்கள் சாப்பிட்டு விட்டு, தூங்குங்கள், நான் பத்திரமாக வருவேன்” எனச் சொல்லிவிட்டு, தன்னுடைய ஸ்கூட்டரின் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

           அன்று ஒரு கல்லூரி பெண் கல்லூரிக்குப் போகும் வழியில், எதிரில் வந்த ஒரு இரு சக்கர வண்டியில் மோதி, பக்கத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் தூக்கி எறியப்பட்டாள்.  அங்கிருந்தவர்கள், உடனடியாக ஆசுபத்திரிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு செய்தியும் சென்றது.  விஷயத்தைக் கேட்டு பதறிக் கொண்டு வந்த, உறவினர்கள் ஆசுபத்திரியில் அங்கிருந்தவர்களிடம், “என் மகள் எங்கே இருக்கிறாள்.  நாங்கள் அவளை உடனே பார்க்க வேண்டும்.: எனப் பரபர்ப்புடன் விசாரிக்க, அங்கிருந்த ஒரு நர்ஸ் “அம்மா, உங்களின் மகளுக்கு தலையில் அடி பட்டதால், இரத்தம் நிறைய வீணாகி விட்டது. அவருக்குத் தக்க சிகிச்சை அளிப்பதற்கு முன், இரத்தம் ஏற்ற வேண்டும். அதற்காகத்தான், நாங்கள் உடனே இந்த ஊரில் இருக்கும் இரத்த வங்கி மூலம் ஏற்பாடு செய்து, ஒரு பெண்ணும், இரத்தம் கொடுக்க வந்திருக்கிறாள்.  நீங்கள் கொஞ்சம் அமைதியாக இங்கேயே இருங்கள்” எனச் சொல்லி விட்டு, உள்ளேச் சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.  அவள் அங்கிருந்தவர்களிடம் “அம்மா, உங்கள் பெண்ணிற்குத் தேவையான இரத்தம் கிடைத்து விட்டது. உடனடியாக உங்களுடைய பெண்ணிற்கு சிகிச்சையும் தொடங்கி விட்டது.” எனச் சொல்லி, மற்ற வேலைகளைச் கவனிக்கச் சென்று விட்டார்.

           ஓரு மணி நேரத்தில், உள்ளேயிருந்த வந்த சாந்தாவைப் பார்த்த நர்ஸ் “வாங்கம்மா,  உங்களைப் போல இரத்த தானம் செய்பவர்களின் உதவியால்தான், எங்களால் நிறையபேர்களின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது.  உங்களின் பணிக்கு ஈடு இனை கிடையாது” எனச் சொல்லிக் கொண்டே, “சாந்தா, இவர்கள்தான், நீ இரத்தம் கொடுத்த பெண்ணின் தாயார், சகோதரர், தகப்பனார்” எனச் சொல்லிக் கொண்டே, அங்கு கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த மூன்று பேர்களைச்சுட்டிக் காட்டி, அவர்களிடம் “அம்மா, இன்று உங்களின் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தவர் இந்தப் பெண்மனிதான்.  இவர் பெயர் சாந்தா. இங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.  இவர் தன் 18ஆம் வயதிலிருந்து, இன்று வரை, தேவைப் படுபவர்களுக்கு, தன்னுடைய இரத்தத்தை, எந்த பிரதி பலன் கருதாமல், தானம் செய்து வருகிறார்.  இப்படிப்பட்டவர்களால் இந்த உலகத்தில் தர்மம் நிலைத்து நிற்கிறது” எனவும் பெருமையுடன் சொன்னார்.

         ஆனால், சாந்தாவைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியுடன்,தங்களின் ந்நாகரீகமற்ற முடிவினால் நல்லதோரு பெண்ணின் மனதை வேதனைப் படுத்தி விட்ட்தையும் நினைத்து வெட்கமும் அடைந்தார்கள். நேற்றுத்தான் இந்தப் பெண்ணுடைய அப்பாவிற்கு, “உங்களின் பெண்ணை எங்களின் பையனுக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.  காரணம் உங்களுக்கே புரியும்” என  தெரிவித்ததையும் நினைத்து மிகவும் வெட்கினார்கள்.  சாந்தாவைப் பார்ப்பதற்குக் கூட அவர்களுக்கு முகம் இல்லை.  தயக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்த சாந்தா “அம்மா, நான் எப்பவும் செய்வதைத்தான் இன்றும் செய்தேன்.  கூடிய சீக்கிரம் உங்களுடைய பெண் குணமாக, நானும் வேண்டிக் கொள்கிறேன்.  கவலை வேண்டாம்” எனச் சொல்லி விட்டு, வீட்டிற்குத் திரும்பினாள்.

         மறு நாள் காலையில், தன்னை வேண்டாமென மறுத்தவர்கள், சாந்தாவின் அப்பாவைத் தேடி வந்து, “எங்களை மன்னித்து விடுங்கள்.  மேல் தோலின் நிறத்தை வைத்து, உங்களின் பெண்ணை நாங்கள் நிராகரித்து விட்டோம்,  ஆனால், நேற்றுத்தான் உங்களின் பெண்ணுடைய அருமைகளைப் புரிந்து கொண்டோம்.  இன்று எங்களுடைய பெண் எங்களுக்குக், உங்களுடைய பெண் கொடுத்த இரத்த தானத்தால்தான் எனத் தெரிந்து, எப்படிபட்ட ஒரு நல்ல பெண்ணை நிராகரித்து விட்டோம் என நினைத்து, வெட்கப் படுகிறோம்.  தயவு செய்து, நாங்கள் எழுதியதை மனதில் வைத்துக் கொள்ளாமல், உங்களுடைய பெண்ணை எங்களுடைய மகனுக்குத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக, முழு மனதுடன் சம்மதித்து வந்திருக்கிறோம். எங்களூடைய கோரிக்கை நிராகரித்து விடாதீர்கள்” எனச் சொல்லி, அவருடைய சம்மதத்தைக் கேட்டு காத்திருந்தார்கள்.   மகளுடைய சம்மதத்தை கேட்க உள்ளே போனவர், சிறிது நேரம் கழித்து மௌனமாக வந்தார்.  “அம்மா, என்னை மன்னித்து விடுங்கள்.  நான் இந்தக் கலியாண ஏற்பாடுகளை என் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகத்தான் செய்தேன்.  அவளுக்கு இஷ்டம் இல்லாமலேயே, எனக்காக அவள் ஒவ்வோரு முறையும், பெண் பார்க்க வருபவர்களுக்கு முன் வந்து நின்றாள்.  பத்து வருஷங்களாக என் வற்புறுத்தலுக்காக மௌனமாக இந்த பெண் பார்க்கும் நாடகத்தில் பங்கேற்றாள்.  ஆனால், நேற்று இரவே அவள் முடிவு செய்து விட்டாளாம். தன் வாழ் நாள் பூராவும், பொது மக்களின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவும், என்றும் என் மகளாகவே இருக்க.வும் தீர்மானமாக முடிவு செய்து விட்டாள்.  நானும் அவளின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இனிமேல் அவளைத் திருமணம் என்னும் கூட்டில்னடைத்து வைக்க வேண்டாம் எனவும் முடிவுக்கு வந்து விட்டேன்.   உங்களை நான் அவமானப்படுத்த வில்லை.  ஆனால், இனிமேல் என் பெண்ணை தனியாக ஒரு குடும்பம் என்னும் கூட்டில் சிறை வைக்க நான் விரும்பவில்லை.  அவளுடைய விருப்பப்படியே, அவளின் வாழ்க்கை இனிமேல் மக்கள் சேவைக்காத்தான்   இருக்கும்.” எனச் சொல்லி, வந்தவர்களை அமைதியாகப் போகச் சொல்லி விட்டார்.

            அவர் சொல்லியதைக் கேட்டபின்னரும், வந்திருந்தவர்கள் சாந்தாவிடம் நேரடியாகவே “அம்மா, நாங்கள் நேற்று செய்தது பெரும் பாவமம்மா.  வெளி வேஷத்திற்கு அடிமையாகி, நல்ல ஒரு பெண்ணின் மனம் நோக அப்படி ஒரு பதிலை போட்டிருக்கவும் கூடாது. ஏன், அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கவும் கூடாது.  இப்போதுதான் உன்னுடைய பொது நோக்கம் தர்ம சிந்தனையும் எங்களுக்குப் புரிந்த்து.  கையில் கிடைத்த வைரத்தின் மதிப்பறியாது நடந்து கொண்டு விட்டோம்.  மன்னித்து விடம்மா.  தயவு செய்து எங்களின் மனதின் மாற்றத்தைப் புரிந்து கொண்டு, உன் மனதை மாற்றிக் கொள்ளம்மா: என மிகமிக உருக்கமாக கண்களில் நீர் வழிய வேண்டிக் கொண்டார்கள்.  கூடவே வந்திருந்த மாப்பிள்ளைப் பையனும் அவளிடம் “சாந்தா, உன் வெளித்தோலின் நிறம்தான் குறையே தவிர, உன் மனம் பொன் போன்றது என்பதை நேற்றே நான் புரிந்து கொண்டேன். மறுக்காமல் திருமணத்திற்கு சம்மதம் சொல். இனி உன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க நான் என்றும் துணை இருப்பேன்” எனவும் பணிவுடனும் தன்னுடைய முந்திய செயலை நினைத்து மனவருத்தமும் தெரியச் சொன்னான்.

      அவர்களிடம் சாந்தா “தயவு செய்து மன அமைதி கொள்ளுங்கள்.  எனக்கு உங்கள் யார்மீதும் எந்த வருத்தமும் இல்லை.  என் மனதளவில் சராசரி பெண்களைப் போல இல்லற வாழ்விற்காக நான் என்றுமே ஏங்க வில்லை. சொல்லப்போனால் தனி ஒரு குடும்பத்திற்காக வாழாமல், உலகில் துன்ப்ப்படும் அத்தனை உள்ளங்களுக்கும் உதவியாக வாழத்தான் ஆசைப்படுகிறேன். என்வழியின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.  மேலும் இன்று நீங்கள் உங்களீன் பெண்ணின் சிகிச்சைக்காக நான் செய்த ஒரு சிறு உதவியை பெரியதாக எண்ணி, மனதை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.  நாளாக நாளாக என்னுடைய நிறமும் உங்களின் கண்களையும் மனதையும் உருத்த்த்தான் செய்யும். வேண்டாம் விஷப்பரீட்சை.  என் வழியில் என்னை வாழ விடுங்கள். உங்களின் மகளின் உடல் சீக்கிரம் குணமாக பகவானை வேண்டிக் கொள்வேன். தயவு செய்து அமைதியாக போய் வாருங்கள்: எனச் சொல்லி விட்டாள். அவர்களும் வேறு எதுவும் சொல்ல வழியின்றி மௌனமாகப் போய் விட்டார்கள்.   

தன்னுடைய மகளின் வாழ்க்கைக்கும் ஒரு காரணம் இருக்கு என்பதை உணர்ந்தவர், தான் இந்த சமூகத்திற்காக வாழும் ஒரு தியாகத்தீபத்தின் தகப்பன் என்கிற பெருமையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.  பெற்றதிலும், பெரிது உவக்கும் தந்தையாக, தன்னுடைய பெண் ஒரு தேவதை என நினைத்து, மகிழ்ச்சி அடைந்தார். அவரின் மனதில் பரந்தாமன் கண்ணனும் கருப்புத்தான்.  அதற்காக கண்ணனை வேண்டாமென யாராவது ஒதுக்குவார்களா?  இல்லையே.  இந்த உலகம் உள்ளவரையில் அவனின் புகழ் பாடாமல் யாரால் இருக்க முடியும்?.  என் மகளும் எனக்கு அந்தக் கண்ணனின் கருனைதானே? எனவும் மிகவும் மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டு ஆன்ந்தமடைந்தார்.  அவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்த்து.  

                  தனி ஒருவருக்காக வாழாமல் சமூகத்திற்காக வாழ்வதே பிறந்த்தின் நோக்கமாக இருக்க வெண்டும்.

1 comment: