(ஜெயரமணி)
சிதம்பர இரகசியம்
(ஜெயரமணி)
காலையில் வழக்கம்போல் சபேசன் கறிகாய் வாங்க மார்கெட்டுக்குச் சென்றார். அங்கு அவர் தன்னுடைய வெகு நாளைய நண்பரின் வீட்டு வேலைக்காரன் ராமுவைப் பார்த்தார். அவனிடம் ‘ராமு, எங்கே உன்னை அடிக்கடி பார்ப்பதில்லை. எங்காவது ஊருக்குப் போனாயா?’ எனவும் குசலம் விசாரித்தார். அதற்கு அவன் சலிப்பாகவேச் சொன்னான் “எங்கனாச்சும் போனால் போதும்தான் நானும் இருக்கிறேன். ஆனால் அந்த மகாராசியை விட்டுப் போய்விட்டால், அதற்கு ஏனென்று கேட்கக்கூட யாருமில்லையே என்பதால்தான் நான் என் மனதைக் கல்லக்கிக் கொண்டு, அந்த வீட்டிலேயே இருந்து வருகிறேன். எல்லாம் அந்த மகராசி இருக்கும்வரைதான். அப்புறம் எனக்கென்ன தலைவிதியா அங்கிருக்கும் நன்றி கெட்ட பிசாசுகளிடம் குப்பை கொட்ட” எனவும் சொன்னான். அவனின் குரலில் இருந்த கோபத்தைப் புரிந்து கொண்ட சபேசன், ‘ராமு, ஏன் இப்படி வருத்தமாக பேசுகிறாய். நீ என்ன இன்றா அந்த வீட்டில் வேலை செய்கிறாய். என் நண்பன் சுந்தரம் கால முதலேயே அங்குதானே இருக்கிறாய். அந்தக் குழந்தைகள் எல்லாம் உன் கையில் வளர்ந்தவர்கள்தானே. அப்படியிருக்க திடீரென்று உனக்கேன் அவர்களின் பேரில் அத்தனை வெறுப்பு, கசப்பு” எனவும் கேட்டார்
அவர் அப்படி கேட்டவுடன், ராமுவும் தன்னுடைய வருத்தமும் கோபமும் துக்கமாக மாற, சிறு குழந்தைபோல் கண்ணீர் விட்டு அழலானான். அவனின் அழுகையைப் பார்த்தவுடன், அந்த வீட்டில் ஏதோ ஒரு வருத்தப்படும்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமென்று புரிந்து கொண்ட சபேசன், ராமுவை உடனடியாக அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றார். ‘வா ராமு, நாமிருவரும் ஒரு காப்பி குடிக்கலாம்”எனவும் சொல்லுக் கொண்டு உள்ளே நுழைந்தார். அங்கே இருவருக்கும் சாப்பிட டிபனுக்குச் சொல்லி விட்டு, மெதுவாக ‘இப்போ சொல் அந்த வீட்டில் என்ன நடந்தது, ஏன் நீ இப்படி கலங்கி இருக்கிறாய்?’ எனவும் பரிவாகக் கேட்டார்.
‘ஐயா, நானே உங்களை ஒரு முறை நேரில் பார்த்து, அந்த வீட்டில் அந்த மகாராசிக்கு நடக்கும் கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றுதான் இருந்தேன். நல்ல வேளையாக உங்கள் இன்றே இங்கே பார்த்து விட்டேன். உங்களிடம் என் மனதில் இருக்கும் வருத்தத்தையும் கோபத்தையும் கொட்டி விடுகிறேன். நீங்களாகப் பார்த்து, அந்த புத்தி கெட்ட பசங்களுக்கு உறைக்கும்படி நன்றாக புத்தி சொல்லி, அவர்களை அவர்களுடைய அம்மாவிற்கு நல்லபடியாக சிகிச்சை செய்து, நல்லா கவனிக்கச் சொல்லுங்கள்.’ எனச் சொல்லிவிட்டு, விஷயத்தை விளக்கமாகச் சொன்னான்.
அந்த வீட்டு ஐய்யா இருக்கும்வரை எல்லாருமே அவங்க அம்மாவிடம் மிகுந்த பாசத்துடனும், மரியாதையுடனும்தான் இருந்தார்கள். ஐய்யா காலத்திற்குபின், கொஞ்ச காலம் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. பிறகு பசங்களுக்கு பண ஆசைவந்து விட்டது. கூடவே அவங்களுக்கு வந்து சேர்ந்த மணைவிமார்களும் தூபம் போட, பிள்ளைகள், பெண்கள் எல்லாவுமாக அம்மாவின் மனதைக் கலைத்து, அத்தனை சொத்துக்களையும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு விட்டார்கள். நான் ஒரு முறை அம்மா தனியாக இருக்கும்போது சொன்னேன் “அம்மா எல்லாம் உங்களுக்குப் பின் உங்களின் பிள்ளை, பெண்களுக்குத்தான் போகும். அப்படி இருக்கும்போது இப்போதே ஏனம்மா எல்லாவற்றையும் நீங்கள் பங்கு போட்டு அவர்களின் பெயருக்கு மாற்ற வேண்டும்.’எனக் கேட்டதிற்கு, “ராமு, எனக்கோ வயசாகிவிட்ட்து. எனக்கு வேண்டியதெல்லாம் அனுபவித்து விட்டேன். எனக்கு இனிமேல் எந்த விதமான பணமோ, நகைகளோ, மற்ற வசதிகளோ வேண்டாம். நானிருக்கும்போதே என்னுடைய சொத்துக்களை, சம்மாக அவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டால், என் காலத்திற்கு பின் அவர்களுக்குள் ஒரு மனஸ்தாபம் வராதில்லையா. என் குழந்தைகள், என்னிடம் எத்தனை பிரியமாக இருக்கிறார்கள் பார். என்னிடம் சொத்தில்லாவிட்டாலும், பிள்ளைகளின் பாசம் இல்லாமலா போய்விடும். அவர்கள் என்னை கடைசி வரைக்கும், நன்றாகத்தான் கவனித்துக் கொள்வார்கள். ஊரில் மற்ற பிள்ளைகளைப் போல என் பிள்ளைகளும் மாறிவிடுவார்கள் என நீ நினைக்கிறாயா? பைத்தியக்காரா, அவர்களை நான் அப்படியெல்லாம் வளர்க்க வில்லை. என் மீது அத்தனை பேருக்கும் உசிர். நான் எல்லாம் யோசித்துத்தான் செய்வேன்” எனவும் சொன்னார்கள். அப்பவும் நான் அவர்களிடம் ‘அம்மா, எதற்கும் நீங்கள் ஒரு முறை நம்முடைய சபேசன் சாரிடம் பேசிவிட்டு முடிவு செய்யுங்கள்’ எனவும் சொன்னேன். அதற்கும் அந்த அம்மா “போப்பா உனக்கு எப்பவுமே எல்லார் பேரிலும் சந்தேஹந்தான். சபெசன் அண்ணாவுக்கு மட்டும் என் குழந்தைகளைப் பற்றித் தெரியாதா? அவருக்கும் இப்படி செய்வது சரியாகத்தான் படும். நீ என்னிடம் பேசியது போல் வேறு யாரிடமும் பேசாதே” எனவும் என்னை எச்சரித்துவிட்டுப் போய்விட்டார்கள்.
பங்கு பிரிக்க வக்கீல் வந்தபோதும், அவர்கூட அம்மாவிடம் ‘உங்களின் கணவர் சொத்துக்களைமட்டும், உங்களின் தாய் வீட்டுச் சீதனம் தவிர, மற்றவைகளை நான் உங்களின் விருப்பப்படியே அவர்கள் ஐவரின் பேரில் சமமாக பிரித்து பத்திரம் பதிவு பண்ணிவிடுகிறேன். உங்களின் தாய் வீட்டுச் சொத்தான, இந்த வீடு, உங்களின் காலம் வரை உங்களின் அனுபவத்தில் இருக்கட்டும். உங்களின் காலத்திற்கு பின் அதையும் அவர்கள் ஐவரும் சமமாக பிரித்துக் கொள்ளும்படியும் எழுதி விடுங்கள்” எனவும் சொன்னார். வக்கீல் சொன்னதைக் கேட்டவுடன், அம்மாவின் மூத்த மகன் தவிர மற்றவர்கள் நால்வரும், ‘அம்மாவிற்கு இப்போதே வயதாகி விட்டது. எப்படியும் அம்மாவின் காலத்திற்குப் பிறகு, இதுவும் எங்களுக்குத்தானே. அப்படியிருக்க, ஒரே முறையாக எல்லாவற்றையுமே பங்கு போட்டுவிடுவதுதான் உசிதம். இப்போ ஒரு முறை பத்திரம் பதிவு செய்ய, பிறகு ஒரு தரம் பத்திரம் பதிவு செய்ய என எதற்கு இருமுறை செலவு செய்யனும். மேலும், எங்களுக்கும் எத்தணையோ செலவுகள் இருக்கும். எங்களுக்கு என்ன கிடைக்குமோ, அதை இப்போதே எங்களிடம் கொடுத்து விட்டால், எங்களுக்கு தேவைக்கேற்ப நாங்கள் செய்து கொள்ளுவோம். நாங்கள் என்ன இந்தச் சொத்திற்காகவா அம்மாவிடம் பாசமாக இருக்கிறேம். எங்களுக்கு எங்கள் அம்மா முக்கியம்தான். நாங்கள் ஒன்றும் அவர்களை கடைசிகாலத்தில் கவனிக்காமல் விட்டுவிடமாட்டோம்.’ எனவும் பலப்பல பேசி, தங்களுடைய அம்மாவிடம் “என்னம்மா உன் உசிதம் என்ன. உனக்கு உன் பேரில் இந்த வீடு இருக்கனும்னு இருக்கா. எப்படியும் எங்களுக்குத்தானே கொடுக்கப்போகிறாய். அதை இப்போதே ஒரே வழியாக கொடுத்து விட்டால், உனக்கும் நிம்மதி தானே. என்ன சொல்லு” என அவளுக்கு யோசிக்கக்கூட சாவகாசம் கொடுக்காமல், அன்றே எல்லாவற்றை;யும் முடித்துக் கொள்ளுவதில்தான் குறியாக இருந்தார்கள். பிள்ளைகளின் குணத்தைப் புரிந்து கொள்ளாத, அந்த அப்பாவி அம்மாவும் வக்கீலிடம் ‘வக்கீலய்யா, நீங்கள் எங்களின் பிள்ளைகளின் விருப்பப்படியே, என் தாய் வீட்டு சீதனம், அவருடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் சரிசமமாக ஐவரின் பேரிலும் எழுதி விடுங்கள்” எனவும் சொல்லிவிட்டார். அந்த அம்மாவின் முடிவைக் கேட்ட வக்கீலய்யாவும் ‘அம்மா, நீங்கள் இப்போதே இதைப்பற்றி உடனடியாக ஒரு முடிவுக்கு வரத் தேவையில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் நீங்கள் நன்றாக யோசித்து ஒரு திடமான முடிவுக்கு வரலாம். நீங்கள் எப்போ கூப்பிட்டாலும், நான் வரத் தயார். அப்போது நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, உங்களின் ஆப்த நண்பர்களும் கூட இருப்பது நல்லதே.”எனச் சொல்லி, பத்திரப் பதிவை சில நாட்களுக்கு தள்ளி வைக்க யோசனை சொன்னார். அதற்கு அங்கிருந்த பெண்களும், மாப்பிள்ளைகளும் சேர்ந்து, “இப்பவே எங்களுக்கு ஊரில் நிறைய வேலைகள் தங்கியிருக்கிறது. மேலும் சில நாட்கள் இங்கேயே இருக்க முடியாது. எப்படியும் அம்மா எங்களுக்குத்தானே கொடுக்கப் போகிறார்கள். அதை எதற்கு தேவையில்லாமல் நாட்களை கடத்த வேண்டும். இப்போது பத்திரம் பதிவு செய்வதாயிருந்தால், நாங்கள் இருப்போம். இல்லையென்றால் பிறகு எங்களுக்கு எப்ப முடியுமோ அப்பத்தான் எங்களால் வரமுடியும். நீங்கள் கூப்பிடும்;போதெல்லாம் எங்களால் வர முடியாது” என தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள். அதனால் அம்மாவும் வக்கீலிடம் உடனேயே எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி, அன்றே பத்திரத்தையும் பதிவு செய்து கொடுத்து விட்டார். அப்போது எல்லாரும் மிகவும் சந்தோஷமாக கிளம்பி போய்விட்டார்கள். பிறகுதான் ஒவ்வோருவரும் தங்களின் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தார்கள். முதலில் அந்த வீட்டில் பெரிய பிள்ளையும் குடும்பமும் இருப்பதால், அந்த வீட்டிற்கு ஒரு வாடகை நிர்ணயம் செய்து, அதில் தங்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென ஆரம்பித்தார்கள். அப்போது அம்மா தங்களுடன் இருப்பதால், அந்த வீட்டிற்குத் தனியாக எதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டுமென்பது பெரிய பிள்ளையின் வாதம். பெரிய மருமகள், நீங்கள் எல்லாம் வெகு தூரத்தில் இருக்கிறீர்கள், நாங்கள்தானே அம்மாவிற்குத் தேவையான எல்லாச் சிலவுகளையும் பாத்துக் கொள்ளுகிறேம், அப்படியிருக்க நீங்கள் எப்படி எங்களிடம் வாடகை கேட்க முடியும் எனவும் வாதம் செய்தாள். இப்படி பிள்ளைகளும், பெண்களும் தன்னை விட தன்னுடைய சொத்தையும், வீட்டையும் அடைவதைதான் முக்கியமாக நினைத்ததை அம்மாவும் புரிந்து கொண்டார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்யவோ, சொல்லவோ முடியவில்லை, அவர்களின் மனம் மிகவும் உடைந்து போனது. மனத்தில் சொல்லமுடியாத கவலைகளை சுமந்து கொண்டு, தன்னுடைய வீட்டிலேயே தன்னுடைய உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்ட, அம்மாவின் உடல் நிலையும் தளர்ந்த்து. ஒரு நாள், குளியலறையில் இருக்கும்போது, அம்மாவிற்கு தலைசுற்றல் வந்து, கீழே விழுந்து விட்டார்கள். டாக்டர் வந்த பார்த்தவுடன், உடனடியாக மருத்துவ மணைக்கு அழைத்துச் சென்று அங்கேயே உள் நோயாளியாக இருக்க வேண்டிய நிலை வந்தது. விஷயம் கேட்டு, மற்றவர்கள் வந்தார்கள். தங்களுடைய தாயாரின் மூட்டுகள் வலுவிழந்து விட்டதாகவும், இனிமேல் அவர்களால் தனிப்பட தன்னுடைய தேவைகளைக் கவனித்துக் கொள்ள முடியாதென்பதால், அவர்களுக்குத் தனியாக வீட்டிலேயே ஒரு அறை, குளியலறை வசதியுடன் ஏற்பாடு செய்து, அதில் அவர்கள் தங்கவும், அவர்களுக்கு தவறாது வேண்டிய பணிவிடைகள் செய்ய வேண்டுமென்றும் சொல்லி, வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டில் அவர்களை கவனிக்கவென தனியாக ஒரு உதவியாளரையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. தன் வாழ்நாளில் அன்றுவரை சிறு தலைவலிஎனப் படுக்காத அம்மாவிற்கு திடீரென்று, முடக்குவாதம் தாக்கி, அவர்களால் தன்னுடைய தேவைகளுக்கூடமற்றவர்களின் உதவியை எதிபார்க்கும் நிலை வந்தது மிகவும் கொடுமையானதுதான். முதலில் ஒரு வாரம் எல்லாரும் இருந்து அம்மாவை மிகவும் பக்குவமாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். பிறகு மற்றவர்களுக்கெல்லாம் தங்களின் பணி காரணமாக, அவர்களின் இருப்பிடத்திற்கு போகவேண்டிய அவசியம் வந்தது. மூத்த மருமகளுக்கு அப்படி தன்னுடைய மாமியாரை விட்டு வேறு எங்கும் போக வழியில்லை. அதனால், அவளுக்கு தாந்தான் அவர்களுக்கு தினமும் எல்லாம் செய்ய வேண்டுமென்பதை உணர்ந்ததால், வெளிப்படையாகவே தன்னுடைய கஷ்டத்தை சொல்ல ஆரம்பித்தாள். ‘உங்களுக்கென்ன இன்று வந்து விட்டு, நாளை போய்விடுவீர்கள். எனக்குத்தானே காலம் பூராவும் சுமை. இப்போது அவருக்கு தனியாக ஒரு நர்ஸ், வேளாவேளைக்கு மருந்து, பிசியோதிரப்பி சிகிச்சை, அவருக்கு வசதியான படுக்கை, தள்ளூ வண்டி, நடை பயில தனியான உதவிகரணங்கள் என எத்தனை செலவுகள் வருமோ, அதையெல்லாம் யார் செய்வது எனவும் கேட்க, மற்றவர்களோ, ‘அம்மா எங்கு இருக்கிறார்களோ அவர்கள்தான் அத்தனையும் செய்யவேண்டும். மேலும், நீங்கள் தானே இந்த வீட்டை அனுபவிக்கிறீர்கள். அதற்கு பதிலாக, நாங்கள் வாடகை கேட்டபோது அம்மா இங்கு இருப்பதால், வாடகை என எதுவும் தனியாக கொடுக்க முடியாது என நீங்கள்தானே கண்டிப்பாக பேசினீர்கள். இப்போ மட்டும், செலவுக்கு நாங்கள் தரணுமா எனவும் ஆளாளுக்கு ஒருவிதமாக பேச தலைப்பட்டார்கள். வீட்டிற்கு வந்த அம்மாவின் காதில் இத்தனையும் விழுந்ததும், அவர்களுக்கு அழுகைதான் வந்தது. ஆனால் யாருமே அம்மாவின் நிலைக்கு மனம் கலங்கவில்லை. எங்கே அம்மாவைத்தாங்கும் சுமை தங்களிடம் வந்து விடுமோ எனப்பயந்து, ஒவ்வோருவரும் சத்தம் போடாமல், கலைந்து போனார்கள். பெரிய பிள்ளையும், மருமகளும் அதே வீட்டில் இருந்து விட்டபடியால், அவர்களால் அம்மாவை விட்டுப் போக முடியவில்லை. முதலில் சிலநாட்கள் பயிற்சி பெற்ற உதவியாளர்களை, மருத்துவமணையினரின் ஆலோசனையின் பேரில் வைத்து பார்த்தார்கள். அவர்களுக்கு தனியாக அதிக ஊதியம் கொடுக்க வேண்டி யிருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக, அதை நிறுத்தி விட்டு, வீட்டில் வேலை செய்யும் அம்சாவை, கூடக் கொஞ்சம் பணம் கொடுப்பதாகச் சொல்லி, அம்மாவையும் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்கள். அதிக பணம் மட்டுமல்லாது, அவளுக்கு சாப்பாடும் கொடுக்கவும் சம்மதித்தார்கள். இப்படி சில நாட்கள் சென்றன. வீட்டில் நடுக்கூடத்தில், அம்மாவின் அறையிலேயே அம்மாவை வைத்துக் கொண்டுதால், வீட்டில் மற்றவர்களுக்கு அந்த ஹாலில் இருப்பதும் கஷ்டமாக இருந்தது. வலி தாங்காமல், அம்மா அடிக்கடி முனகுவதும், நர்ஸ் பிசியோதிர;ப்பிச் சிகிச்சை செய்யும்போது, வலி தாங்காமல் அம்மா அலறுவதும், அவர்களுக்கு கேட்க மிகவும் சங்கடமாகவும். வீட்டிற்கு யாரும் வந்தால், மிகவும் அவமானமாக இருப்பதாகவும் பேரனும், பேத்தியும் சொல்ல ஆரம்பித்தார்கள். அதனால், பெரிய பிள்ளை ஒருமுறை தன்னுடைய தம்பி, தங்கைகளுக்கு கடிதம் போட்டு, எல்லாரும் மாதத்தில் இரு மாதங்கள் என அம்மாவை வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டார். அதற்கு அவர்கள் யாரும் சம்மதிக்கவும் இல்லை, எங்கே அடிக்கடி வந்து அம்மாவை பார்த்தால், ஒரு நாள் அம்மாவை காக்கும் சுமை தங்களின் தலையில் விழுந்து விடுமோ என பயத்தால், அவர்கள் கடிதமோ, நேரில் வருவதோ இல்லை. இப்படி யாருமே அம்மாவை அக்கறையோடு கவனிக்க முன் வராததால், மூத்த பிள்ளை, மருமகளின் கொடுமை அதிகமாகியது. அம்மா இப்போது ஏனென்று கேட்க நாதியற்ற ஒரு நடைபிணமாகிவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக, அம்மாவை கூடத்திலிருந்த அவருடைய அறையிலிருந்து, வீட்டில் பின்பக்கத்தில் உள்ள, வேண்டாத சாமான் களையெல்லாம் போட்டு வைக்கும் ஒரு சிறிய இருட்டு அறைக்கு மாற்றி விட்டார்கள். அவர்களுக்கு வசதியாக, அந்த அறையிலேயே, ஒரு சிறு மோடாவில், அவர்களின் இயற்கை வெளியேற்றங்களுக்கும் ஏற்பாடு செய்து விட்டார்கள். ஆக அம்மாவை, அந்த வீட்டில் ஒரு மகாராணியாக இருந்தவர், இப்போது ஒரு சிறு அறையில், எந்தவிதமான ஆரோகிய வசதிகளின்றி, தங்க வைத்திருக்கிறார்கள். இப்போதான் அம்மா விற்கு தான் செய்த முட்டாள்தனம் தெரிகிறது. தன்னுடைய தாய் வீட்டு சீதனமான அந்த வீட்டையாவது தன்னுடைய பெயரிலேயே வைத்திருக்காமல் போய் விட்டதின் விளைவு. தன்னுடைய பிள்ளைகள் ஒருநாளும் தன்னை ஒரு சுமையாக நினைக்க மாட்டார்கள், தன்னிடம் மாறாத பாசத்துடனும், அன்புடனும், பிரியமாக இருப்பார்களென்று எதிர்பார்த்த அந்தத் தாயுள்ளம் படும் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை ஐயா. அம்மா, இந்த பெரிய பிள்ளை பள்ளியில் விளையாடும்போது, கீழே விழுந்து கால் முட்டிஉடைந்த போது, இந்த அம்மாதானே, எட்டாம் வகுப்பு படிக்கும் பையனை, தினமும் இடுப்பில் தூக்கி எல்லாம் செய்து, பள்ளிக்கு தூக்கிப் போனதை அவர் மறந்து விட்டார். ஆனால் என்னால் மறக்க முடியவில்லைய்யா. அப்போ அம்மா தன்னுடைய கடைசி குழந்தையை கருவில் சுமந்தவர்தான். அப்படிப்பட்ட அம்மாவை, அவர்களின் வயதான காலத்தில், மூட்டு வலியால் கஷ்டப்படுவரை, இப்படி தனியாக ஒரு இருட்டு அறையில் வைத்து, இருந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால், போகட்டும் என சுயநலமாக இருக்கும் ;பிள்ளைகளையும், பெண்களையும் பார்த்தால் எனக்குத் தாங்க முடியாத வருத்தமும் கோபமும்தான் வருகிறது. ஆனால் நான் ஒரு வேலைக்காரந்தானே. என்னால் முடிந்தது, அந்த அம்மாவிடம் சிறிது நேரம் பிரியமாக பேசுவேன். என் மணைவியை விட்டு, அம்மாவுக்கு குளிப்பாட்டி, துணி கட்டி, சாப்பாடு ஊட்டுவேன். வேறென்ன செய்ய முடியும். நீங்கள் ஒரு முறை வந்து அம்மாவை பார்த்து விட்டு, அந்த பிள்ளைகளுக்கு நல்ல புத்தி சொல்லி வாருங்கள். உங்களின் புத்தியாவது அவர்களை மாற்றட்டும். இன்னும் எத்தனை நாட்கள் அந்த மகராசி இருப்பார்களோதெரியாது, இருக்கும் கொஞ்ச நாட்களுக்காவது அந்த அம்மாநல்லபடியாக இருக்க வேண்டுமய்யா: என தன்னுடைய துக்கம் தீர கண்ணீருடன் சபேசனிடம் சொல்லிவிட்டு, ராமு கிளம்பினான்.
வீட்டிற்கு வந்த சபேசனின் மனமும்,தன்னுடைய நண்பர்களின் பிள்ளைகளும், பெண்களும், எத்துனை சுயநலமிகளாக, பாசமற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதை நினைத்து வருந்தினார். தான் தன் நண்பர் இருந்த போது, எத்தனை தடவைகள் அந்த வீட்டிற்கு போனதும், போகும் ஒவ்வோரு முறையும், தன்னுடைய உடன் பிறவாத சகோதரி, தன்னுடன் எத்தனை அன்பாக, பாசமாக இருப்பாளென்பதையும், மகாலட்சுமியாக அந்த வீட்டில் வளைய வந்தவள், இப்போ ஒரு இருட்டு அறையில், தன்னுடைய கடைசி காலத்தில், கைகால் சுயமாக அசைக்க முடியாதுபடுத்திருப்பதையும் எண்ணிப் பார்த்து மனம் கலங்கினார். எப்படியாவது, அந்தப் பிள்ளைகளும், பெண்களும், தங்களுடைய தாயாரை கொஞ்ச காலமாவது, அன்பாக, பிரியமாக, அவரது அந்திம காலம் வரை வைத்திருக்க தன்னால் என்ன செய்ய முடியுமெனவும் யோசித்தார். அவர் மனதில் ஒரு திட்டமும் ஏற்பட்டது.
மறுநாள், தனக்கு எதுவும் தெரியாது என்பது போல், வழக்கம்போல் அந்தப் பக்கம் போனபோது, அவர்கள் வீட்டிற்கு போகும் வழக்கமாக அங்குச் சென்றார். சென்றபின் மூத்த மருமகளிடம் ‘என்னம்மா, உன்னுடைய மாமியார் எங்கே, கோவிலுக்கு போயிருக்கிறாளா என விசாரித்தார்.அதற்கு அவள், ‘அதெல்லாம் இல்லை மாமா. உங்களுக்குத் தெரியாது. என் மாமியாருக்கு மூட்டு வாதம் வந்த, ஒரு சமயம் கீழே விழுந்ததில், காலின்மூட்டுக்கள் நழுவி விட்டது. அதனால் அவரால் நடக்கவோ, மற்ற எதுவுமே செய்து கொள்ள முடியாது படுத்து விட்டார். இவர்தான் மூத்த பிள்ளையென்பதால், அவர்தான் தன்னுடைய தாயாரை கடைசிவரைக்கும் பார்த்துக் கொள்ள வேண்டுமென மற்றவர்களெல்லாம் தங்களுடைய கைகளை கழுவிக் கொண்டு போய்விட்டார்கள். அப்படி எங்களால் உதறமுடியவில்லை. அதனால் அவரை நாங்கள் தான், இந்த வீட்டிலேயே தனியாக ஒரு அறையில் வைத்து, உதவிக்கு ஆட்களையும் போட்டு பார்த்துக் கொள்ளுகிறோம். சொத்தில் எல்லாருக்கும் சம பங்கு வேண்டுமெங்கிறார்கள். ஆனால் அம்மாவை மட்டும் நாங்கள் மட்டும்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமெங்கிறார்கள். இந்த நியாயத்தை நீங்களே சொல்லுங்கள்”
எனவும் முறையிட்டாள்.
சபேசன் அவளுக்குப் பதில் சொல்லாது, ‘அப்போ அம்மா எங்கு இருக்கிறார்கள். நான் பார்க்கலாமா ‘ என மெதுவாகக் கேட்டபடியே,அவளுடன் தொடர்ந்து உள்ளேச் சென்றார். வீட்டில் கடைசியில் இருந்த அந்த இருட்டு அறைக்குள் சென்றார். அங்கு ஒரு பழைய கட்டிலில், ஒரு மெத்தைகூட இல்லாமல், வெறும் ஒரு ஜமக்காளத்தில் படுக்க வைக்கப்பட்டவளைப் பார்த்ததும், அவரின் கண்களில் நீர் நிறைந்தது. ;அம்மா, பாரு எப்படியிருக்கே. என்னைப் பார் ‘எனவும் கூப்பிட்டார். அவரின் குரல் கேட்டவுடன் திரும்பி பார்த்தவளின் கண்களில் நீர் நிறைய ‘அண்ணா, வாருங்கள். என்னைப் பார்த்தீர்களா? இன்னும் எத்தனை நாட்கள் நான் இப்படி இருக்க வேண்டுமோ? பகவான் என்ன நினைத்திருக்கிறார் எனத் தெரியவில்லையே? எனவும் மெதுவாகக் கூறினாள். சபேசன் அவளிடம் “ஆமாம், நீ ஏன் இந்த இருட்டு அறைக்கு வந்தாய். கூடத்தில் உன்னுடைய அறையிலேயே கொஞ்சம் வெளிச்சத்தில் இருக்கலாமல்லவா?’ எனவும் கேட்க, அதற்கு பாருவும் :அண்னா, அங்கிருந்தால், என்னால் மற்றவர்களுக்கு எத்தனை கஷ்டமாக இருக்கிறது. பாவம், வருபவர்களும், போவர்களும் என்னைப் பார்த்து அவர்களிடம் ஏதாவது சொன்னால் அது அவர்களுக்கு வருத்தமாக இருக்காதா. குழந்தைகளும் சதா என்னுடைய வேதனையைப் பார்த்துக் கொண்டு, அவர்களால் படிக்கவோ, மற்றபடி நிம்மதியாக இருக்கவோ முடியலையே. அதனால்தான், நானே அவர்களுக்கு சிரம்ம் வேண்டாமென்றுதான், இங்கே வந்து விட்டேன்” எனவும் யார் மீதும் குற்றமில்லையென தெரிவித்தாள். அவளைப் பார்த்தவுடனே, சபேசனுக்கு அவளின் குழந்தைகள் அவளை எப்படி நிராதரவாக, பாசமின்றி, ஒரு வேண்டாத சுமையாகக் கருதுகிறார்களென்பதையும் புரிந்து கொண்டார். தன்னால் முடிந்தால், பாரு இன்னும் இருக்கும் கொஞ்ச காலமாவது, ஓரளவு வசதியாக. தக்க மருத்துவ உதவியுடன் இருக்கவேண்டுமென்றும், அதற்கு அவளின் பிள்ளைகளை எப்படி முன்வந்து செயல் படுத்த வைக்கலாமெனவும் யோசித்தார். கடைசியில் அவர்களிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்குப் போனார்.
மறுநாள், காலையிலேயே பாருவின் மூத்த மகனுக்குப் ஃப்போன் செய்தார். அவனிடம் அம்மாவின் உடல்நிலையைப் பற்றிப் பேசியபின் மெதுவாக “ஆமாம், நீயும் வருமான வரிச் சட்டத்திற்குள் இருக்கிறாயா? எனவும் விசாரித்தார். அவனும் “ஆமாம் மாமா, எனக்கு வருட வருமானம் எப்படியும் பத்து இலட்சத்திற்கு அதிகமாக வருவதால், எப்படியும் எனக்கு வருமான வரி கட்ட வேண்டி இருக்கிறது. எனக்கு வீடு சொந்தமானதால், வீட்டு வாடகை எனவும், வீட்டுக் கடனுக்கு மாத தவணை எனவும் எந்தவிதமான விலக்கும் கிடைப்பதில்லை.” எனவும் சொன்னான். அதற்கு உனக்குத் தெரியாதா, வீட்டில் உன் பாதுகாப்பில் இருக்கும் தாயார், தந்தை போன்றவர்களுக்கு செய்யும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கு, உன் வருமான வரியிலிருந்து குறைந்தது ஒரு இலட்சம்வரை விலக்கு வருமே: எனவும் மெதுவாகச் சொன்னார். அதைக் கேட்டவுடன் “அப்படியா மாமா, எனக்கு அதைப்பற்றியெல்லாம் என் ஆபிசில் சொல்லவில்லையே” எனவும் சொல்ல, அவர் அவனை :நீ மாலையில் இங்கு வா. நான் உனக்கு வருமான வரிச் சட்டம், அதில் எந்த வகைச் சிலவுகளுக்கு விலக்கு உண்டென்பதை விவரமாக சொல்லுகிறேன்: எனக் கூறி வைத்து விட்டார். மாலையில் வந்தவனிடம் :நீ உன் அம்மாவை தற்போது வைத்திருப்பது போல் வீட்டில் வைத்துக் கொள்ளாதே. இங்குள்ள ஒரு வசதியான மருத்துவ மணையில் சேர்த்து, அவளுக்கு இந்த வயதில் மூப்பின் காரணமாக வந்துள்ள மூட்டு வியாதிக்குச் தேவையான சிகிச்சை செய். அதற்கு நீ செய்யும் பணத்திற்கு, முழுவதுமாக குறைந்தது ரூ.30000 முதல் ஒரு இலட்சம் வரை, நீ கட்ட வேண்டிய வருமான வரியில் தள்ளுபடி கிடைக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறது. உனக்கும் வயது காலத்தில் அம்மாவுக்கு நல்ல சிகிச்சை கொடுத்தோம் என ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்கும். மற்றவர்களிடமும் அம்மாவை சரியாக கவனிக்க வில்லை என கெட்டபேரும் வராது. நீ கட்ட வேண்டிய வருமான வரியிலும், தள்ளுபடி கிடைக்கும். அதனால், நீ இது பற்றி யாருடனும் பேசி, காலத்தை கடத்தாது, அம்மாவை கடைசி காலம் வரை நல்லபடியாக வைத்துக் கொள்” எனவும் சொல்லி அனுப்பிவிட்டார். அவன் சென்றபின், தானே பாருவின் மற்ற பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் மேற்படி வருமான வரியில் கிடைக்க இருக்கும் சலுகையைச் சொல்லி, அவர்களையும் பாருவுக்குத் தேவையானவற்றை முன்வந்து செய்யும்படி சொல்லிவிட்டார். ஒருவரிடம் சொன்னதை, தான் வேறு யாருக்கும் சொல்லவில்லையெனவும் சொல்லி, ஒருவருக்குத் தெரியாமல், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி, எல்லாருமாகச் சேர்ந்து, பாருவை அவளுடைய கடைசி காலத்தில், நல்லபடியாக மருத்துவமணையில் சேர்த்து, தக்க சிகிச்சையுடனும், கவனிப்புடனும் இருக்குமாறு செய்து விட்டார். காலங்கள் ஓடுன. பாருவும் கிட்டத்தட்ட, இரு மாதங்கள், மருத்துவமணையில் இருந்து, சிகிச்சை பெற்றாலும், வயோதிகத்தின் காரணமாக ஒருநாள் நிம்மதியாக இறைவனிடம் சென்றாள்.
பாருவின் காலம் முடிந்தபின், அவளின் ;பிள்ளைகளும், பெண்களும், தங்களுடைய வருமானத்திற்கு கட்டவேண்டிய வரியில், தாங்கள் தங்களின் தாயாருக்குச் செய்த மருத்துவ சிகிச்சைக்கான செலவினங்களுக்கு வரி விலக்க வேண்டி மனு செய்தபோதுதான். அப்படி ஒரு வரி விலக்கு தற்சமயம் சட்டத்தில் இல்லையென தெரிந்து கொண்டார்கள். எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் சபேசன் வீட்டிற்கு வந்து “என்ன மாமா, நீங்கள் சொன்னபடி வருமான வரிச் சலுகை கிடையாது என எங்கள் ஆபிசில் சொல்லுகிறார்களே” எனவும் அவரிடம் குற்றமாக வந்து முறையிட்டார்கள். அதற்கு அவரும் தனக்கு தற்போதுள்ள சட்டம் தெரிய வில்லையென சொல்லி, சமாளித்து விட்டார். வந்தவர்களும் மேற்கொண்டு அவரிடம் எந்த விதமான வாதங்களும் செய்யாமல், போகும்போது, அவர்களைக் கூப்பிட்டு “உங்களுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்க வில்லையே என வருத்தப்படுவது சரியல்ல. நீங்கள் உங்களை பெற்ற தாயாருக்குத்தான், நீங்கள் செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தீர்கள். அவள் பாவம், தன்னிடம் இருந்ததையெல்லாம், உங்களுக்குக் கொடுத்துவிட்டு, தன்னுடைய வயது காலத்தில், நோயால் கஷ்டப்பட்டபோது நீங்கள் அவளைக் கவனிக்காமல் சுயநலமாக இருந்தீர்களே, அது சரியா. எப்படி வாழ்ந்தவளை, ஒரு இருட்டு அறையில் சரியான பராமரிப்பின்றி, தன்னுடைய நோயின் கொடுமையுடன், தான் பெற்ற பிள்ளை, பெண்களின் அலட்சியத்தால், அன்பற்ற நடவடிக்கையால் அவள் மனம் எத்தனை வேதனைப் பட்டிருக்குமென உங்களால் உணர் முடியவில்லையா. நான் உங்கள் வீட்டு வேலைக்காரன் ராமு என்னிடம் வந்து வருத்தப்பட்டவுடன், உங்களை எல்லாம் எப்படியாவது பாருவிடம் அன்பாக, அவளுக்குத் தக்கபடி மருத்துவ வசதிதந்து, கடைசி வரை அவள் நிம்மதியாக , தன்னுடைய பிள்ளைகளும், பெண்களும் தன்னிடம் பாசமாக, பிரியமாகஇருக்கிறார்கள் என ஒரு சந்தோஷத்தில் அவளின் கடைசி காலம் கழிய வேண்டுமென நான் செய்த ஒரு சின்ன இரகசியமான விஷமம்தான் இது: எனவும் சொல்லி அவர்களை அனுப்பினார். அவர்களெல்லாம் சென்றவுடன் :இதுவும் ஒரு சிதம்பர இரகசியம்தான்’ என தன் மனதுக்குள் சொல்லிச் சிரித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment