(ஜெயரமணி)
காத்திருப்பேன் மகனே....
(ஜெயரமணி)
மோஹன் திடீரென்று தனக்குக் கிடைத்த கைத் தொலைபேசியின் செய்தியால் அதிர்ச்சி அடைந்தான். அவனுடைய மனைவி காமினி அவனிடம் அவனுடைய அம்மா கமலத்திற்கு திடீரென்று அதிகாலை முதலே மூச்சுத் திணறல் கண்டு, உடனடியாக அருகிலிருந்த ஒரு மருத்துவ மணையில் சேர்த்து, வேண்டிய அவசர மருத்துவ சிகிச்சை செய்து வருவதாகவும். மோஹனை உடனடியாக வரவழைக்க வேண்டுமென்று டாக்டர்கள் தன்னிடம் கூறியதால், அவனுக்குச் சொல்லி, அவனையும் உடனே தன்னுடைய பணியிலிருந்து திரும்பி ஊருக்கு வரவும் சொல்லிவிட்டாள். அவள் மருத்துவமனையிலிருந்து பேசியதாலும், அவளைத் தவிர தன்னுடைய அம்மாவின் அருகிலிருக்க அப்போது யாருமில்லை என்பதாலும், அவள் மிகவும் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி, போனை வைத்து விட்டாள். மோஹனும் காலத்தை விரயமாக்காமல், தன்னுடைய அலுவலகப் பணியை தன்னுடைய உதவியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, விமானம் மூலம் சென்னைக்குச் திரும்பினான். அவன் நேற்று காலையில் தான் தன்னுடைய பணி நிமித்தம், கொச்சினுக்குச் சென்றான். அவன் கிளம்பும்போது அவனுடைய அம்மா மிகவும் நல்ல ஆரோக்கியத்துடந்தான் இருந்தான். அவனுக்கு விடியற்காலையில் அவன் கிளம்புமுன் காப்பி போட்டுக்கொடுத்தவளும் அவள்தான். அவன் கிளம்பு முன் அவன் முன்வந்தவன், “மோஹனா, உன்னுடையவேலை முடிந்தவுடனே சீக்கிரம் திரும்பி வந்துவிடு”எனவும் சொன்னாள். அதைக் கேட்டு சிரித்தபடியே “அம்மா நான் போவது ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு எங்களுடைய கம்பெனிக்கு புதிய பெரிய ஆர்டர்கள் பெறத்தான். அதன் மதிப்பு கிட்டத்தட்ட கோடிகணக்கில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வேலையை எப்படியம்மா சீக்கிரம் செய்ய முடியும். ஒப்பந்தம் கையெழுத்து ஆகுமுன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனை இருக்கும். எல்லாவற்றுக்கும் தேவையான கால அவகாசம் வேண்டாமா. நான் என் பணி முடிந்தவுடன், ஒரு நிமிடம்கூட தாமசிக்க மாட்டேன். உனக்குச் தெரியாதா. என்றுமில்லாமல் இன்று ஏன் இப்படி கேட்கிறாய்? எனவும் கேட்டான். அதற்கு பதிலாகச் சொன்னாள் ”என்னவோ தெரியவில்லை எனக்கு. நீ எப்பவும் எங்க்கூடவே இருக்கனும்போலிருக்குப்பா. அதனால்தான் சொல்லனும்னு தோணித்து, சொன்னேன், எனக்காக நீ அவசரப்பட வேண்டாம். உன்னுடைய பணியை நல்லவிதமாக முடித்துவிட்டு வந்தால் போதும், மனதில் எந்தக் கலக்கமும் கொள்ள வேண்டாம்” என்றும் சொல்லிவிட்டு, வழக்கம்போல் தான் வெளியில் செல்லும்போது வைத்து விடும் வீபூதியையும் இட்டாள்.
மோஹன் எத்தனை அவசரப்பட்டாலும், கொச்சினிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர குறைந்தது ஐந்து மணிநேரமாவது ஆகும். அப்புறம் அங்கிருந்து கால் டாக்ஸி பிடித்துக் கொண்டு,மருத்துவன மனைக்குப் போக இரண்டு மணிநேரமாவது ஆகும். அவன் மனதில் காமினி சொன்னது மட்டுமல்லாது, தானே டாக்டரிடம் பேசிய போது அவர் சொன்னது அப்படியே அவன் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. “மிஸ்டர் மோஹன், உங்களின் தாயாரின் உடல் நிலை மிகவும் பலகீனமாக இருக்கிறது. அவருக்கு மார்புச் சளி அதிகமாகி இருக்கிறது. அதொடு இரத்தக் கொதிப்பும் சேர்ந்திருக்கிறது. வயதும் அதிகம். எப்படியாவது காப்பாற்றத்தான் முயற்சி செய்கிறோம். ஆனால் எதுவும் உறுதியாகச் சொல்லமுடியாது. அதனால்தான், உங்களை உடனடியாக வரவழைக்கச் சொன்னோம். நீங்களும் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து சேருங்கள்” எனவும் சொல்லி விட்டார். அதனால் மனதில் ஒரு பயம் இருந்தது. தான் போய்ச்சேரும் வரை அம்மா இருப்பாளா மாட்டாளா. பகவானே அவளுக்கு ஒன்றும் ஆகக் கூடாது. இப்பத்தான் என்னுடைய நிலைமை சீராகி வருகிறது. எனக்கு அம்மாவை காசிக்கும், மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கும் கூட்டிக் கொண்டு போக வேண்டுமென ஆசை இருக்கிறது. அதையெல்லாம் நிறைவேற்ற என் அம்மாவிற்கு ஆயுசு கொடு ஸ்வாமி. என் அம்மாவை நான் என்னுடன் நிறைய காலம் வைத்திருக்க எனக்கும் அருள் வேண்டும் பகவானே” எனபலவாறாக வேண்டிக் கொண்டே தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான். பயணத்தின் போதே அவன் மனம் தன்னுடைய குழந்தை பருவம் முதல், தன்னுடைய ஒவ்வோரு நாளும் அம்மாவின் அன்பும் கரிசனமும், தன்னை எப்படியெல்லாம் பக்குவப்படுத்தியதை நினைவு கொண்டது.
சிறிய வயதாக இருந்த போதே மோஹனுடைய அப்பா விஷசுரத்திற்கு பலியாகிவிட்டார். அன்று முதல் அவனுடைய அம்மா தான் அவனுக்கு எல்லாம். கமலாவும் ஒரு இடை நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்ததால், அவனுக்கு அந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படித்து முடித்தான். மேல் படிப்பிற்காக கல்லூரிக்குச் சென்றான். அதுவும் அவன் இருந்த ஊரிலேயே இருந்த்தால் அவனுக்கு அம்மாவை விட்டு பிரிய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய பள்ளி காலத்தில், மாலையில் தன்னுடைய நண்பர்களுடன் பள்ளி மைதானத்திலேயே கால்பந்து விளையாடிவிட்டு,வரும்வரை மோஹனுக்காக அவனுடைய அம்மாவும் பள்ளியிலேயே இருப்பாள் அல்லது அருகிலுள்ள கோவிலுக்குச்சென்று வந்தும் காத்திருப்பாள். அவனும் அவனுடைய நண்பர்களும் எத்தனை முறைகள் அவளிடம் “டீச்சர், நீங்கள் ஏன் மோஹனுக்காக காத்திருக்கிறீர்கள். வீட்டிற்குப் போங்கள். நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தானே திரும்பும் போது மோஹனையும் உங்கள் வீட்டில் விட்டுவிட்டுப் போவோம்”என சொன்னாலும் கமலா கேட்கமாட்டாள். மென்மையாக மறுத்துவிட்டு, தினமும் மோஹன் விளையாடும் வரை காத்திருப்பாள். கல்லூரிக்குச் செல்லும்போதும், அவன் தன்னுடைய கல்லூரி விட்டு வீட்டிற்கு வரும்வரை, மாலையில் ஒரு காப்பிகூட குடிக்காமல், அவனுக்காக காத்திருப்பாள். மோஹன் கேட்டாலோ, “ எனக்கு ஒருவருக்கென்று காப்பி போடவேண்டுமா? நீ வந்தவுடன் உனக்குச் சூடாக காப்பி போடவேண்டுமல்லவா அப்போதே நானும் குடித்துக் கொண்டால் போச்சு. எனக்கும் உன்னை விட்டு எதுவும் சாப்பிடப் பிடிப்பதில்லை எனவும் சொல்லி சிரிப்பாள். கமலாவின் கணவர் மறைந்த பின் அவளுக்கு மோஹனைத் தவிர வேறு உறவும் இல்லை. அதனால் அவளின் முழு கவனமும் மோஹனிடமே இருந்தது. மோஹனின் படிப்பு முடிந்தவுடன், அவனுக்கு அந்த ஊரிலேயே வேலை கிடைக்கும்வரை அவனை வேறு ஊருக்கு வேலைக்காக்கூட அவள் அனுப்பவில்லை. அவளின் மனம்போலவே அவனுக்கு அவனுடைய ஊருக்கு அருகிலேயே தினமும் போய்வரஏதுவாக ஒரு வெளிநாட்டு மோட்டார் கம்பெனியில் பணியாளர்களின் மேற்பார்வையாளராக நேலையும் கிடைத்தது. அவனும் தன்னுடைய வீட்டிலிருந்து காலையில் கிளம்பி மின்சார இரயில் மூலம் போய் மாலை வீடு திரும்புவது வசதியாக இருந்த்து. அவனுடைய திருமணமும் கமலாவின் விருப்ப்ப்படியே முடிந்தது. கமலா தேர்ந்தெடுத்த காமினியும் மோஹனுக்கு மிகவும் அனுசரனையாகவும், இதமாகவும் இருந்தாள். அவளுடைய அழகும், படிப்பும் மட்டுமல்ல, அவளுக்கு இசையிலும் நல்ல தேர்ச்சி இருந்த்தும் மோஹனுக்கு மிகவும் திருப்தியாகவும் இருந்தது. அதனால் மோஹனும், காமினியும் தாங்கள் ஒருவரையோருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டிருந்தாலும், இப்போது இருப்பதைப் போல் அத்தனை ஆனந்தமாக இருந்திருக்க மாட்டார்களேன்று அவர்களுக்குள்ளேயே ஒரு எண்ணமும் வந்தது. அதனால் இருவருமே கமலாவிடம் மிகவும் அன்பாக இருந்தார்கள். கமலாவின் ஆசைப்படியே திருமணமாகி ஐந்து வருடங்களில் மோஹனுக்கு ஒரு பெண்ணும், பையனும் பிறந்தார்கள். வீட்டில் சந்தோஷத்திற்கு ஒரு குறையும் இல்லை. மோஹனுக்குள் தான் இன்னும் கொஞ்சம் கை நிறைய சம்பாதித்து, கமலாவை காசிக்கும், மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கும் கூட்டிச் செல்ல வேண்டுமென்ற கனவும் இருந்தது. இப்படி நினைவுகளுடன் விமானத்தில் வந்தவனுக்கு “எங்கே தன்னுடைய கனவு கலைந்து விடுமோ என மனதில் பயமும் ஏற்பட்டது. விமானம் வேகமாக வந்தாலும், அது அவனுடைய மன வேகத்திற்கு ஈடாகாது. எப்படியோ சென்னை வந்தவுடன், உடனடியாக கால்டாக்ஸி பிடித்துப் போக பரபரத்தான். சென்னை வந்தபிந்தான் அவனுக்குச் தெரிந்தது சென்னையில் அன்று வாகன நிறுத்தப் போராட்டமென்று. என்ன செய்வது எனப் புரியாமல் தன்னையுமறியாமல் “அம்மா என்னம்மா எனக்கு இத்தனை சோதனை. உன்னை உயிருடன் பார்க்க மாட்டேனா? என மெல்லிய குரலில் அனத்திக் கொண்டே அழலானான். அப்போது அவனின் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் “என்னப்பா உனக்கு என்ன சோதனை. இந்த வயதில் நீ ஒரு சிறு குழந்தையாக கலங்கினால் என்ன காரணம்” எனவும் கேட்டார். அவரைப் பார்த்தவன் மனதில் அவரிடம் தன்னுடைய ஏக்கத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனவும் தோன்றியதால், கொஞ்சமும் அவர் தனக்கு முன்பின் தெரியாதவர் என்ற கூச்சமோ எதுவுமின்றி, தன் மனதில் இருந்த ஏக்கத்தை சொல்லிவிட்டான். அதைக் கேட்ட அவர் “அப்பா உன் நிலை மிகவும் துன்பமானதுதான். ஆனால், நான் உனக்கு உதவி செய்ய முடியும். என் வீட்டிற்குப் போக எனக்கு என் கம்பெனியிலிருந்து கார் வரும். நான் உன்னை அதிலேயே உன் அம்மாவிடம் கொண்டுபோய் விட்டுவிட்டுப் போகிறேன். மனம் கலங்காதே. உன் தாயாரின் உடல் நிலை நன்றாகவே இருக்க நாம் வேண்டிக் கொள்ளுவோம். எல்லாம் பகவான் துனையிருப்பார்: என பலவாறாகச் சொல்லி அவனைத் தேற்றிக் கொண்டே, அவனைத் தன் காரிலேயே அழைத்துச் சென்றார்.
மருத்துவமணைக்கு வந்தவன் உடனே தன்னுடைய தாயார் இருக்கும் ஐ.சி.யு வுக்குப் பறந்தான். அவன் வருவதைக் கவனித்த காமினியும் அவனிடம் வந்து, “அப்பாடா வந்து விட்டீர்களா? அம்மா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார் போலைருக்கிறது” என அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டாள். பாவம் விடியற்காலையிலிருந்தே யாருமின்றி தனியாக மிகவும் தவித்து விட்டாள். காமினி அழுவதைப் பார்த்த மோஹனுக்கும் பயம் அதிக மாகியது. “அம்மாவுக்கு திடீரென்று என்னாச்சு? எனக்கு ஒன்றுமே ஓடவில்லை உன் போனைக் கேட்டதிலிருந்து. என கூறிக் கொண்டே அவளுடன் அம்மா இருந்த அறைக்குச் சென்றான். அங்கே அம்மா தன்னுடைய கடைசி பயணத்திற்காக காத்திருப்பதையும் தெரிந்து கொண்டான். அம்மாவுக்கு சுவாசம் விடுவதற்காக வெண்டிலேட்டர் மானிடர் பொறுத்தி இருந்தது. உடன் வந்தவருக்கும் அங்கு உள்ள நிலை புரிந்தது. அவரும் மௌனமாகவே கமலம் படுக்கவைத்திருந்த கட்டிலுக்கு அருகில் சென்று பார்த்தார். அப்போது அங்கு வந்த ஒரு உதவி டாக்டர் அவரைப் பார்த்து “சீப் ஸார். நீங்கள் எங்கே இங்கு வந்தீர்கள். இந்த அம்மாவை உங்களுக்குத் தெரியுமா? எனவும் கேட்டுக்கொண்டே, அவரிடம் அந்த அம்மாவின் மருத்துவ விபரங்கள் அடங்கிய அட்டையை எடுத்துக் கொடுத்தார். அப்போதுதான் மோஹனுக்கும் தெரிந்த்து தன்னுடைய நிராதரவான நிலையில் தனக்கு உதவியவர் இந்த மருத்துவமணையில் பிரதான மருத்துவர் என்பது. கமலம்மாவின் நோயைப் பற்றிய விபரங்களைப் படித்து விட்டு, அவருக்குச் செய்த சிகிச்சைகளையும் பார்த்துவிட்டு மோஹனிடம் “மோஹன், உங்களின் தாயாருக்கு முதலில் வந்த மூச்சுத்திணறலுக்குக் காரணம் அவருக்கு நேற்று இரவில் தூக்கத்திலேயே ஏற்பட்ட “ஸைலண்ட் ஹார்ட் அட்டாக்” தான். ஏறக்குறைய அவரின் இருதயதுடிப்பு, மற்ற உறுப்புகளின் செயல்பாடு எல்லாம் நேற்றே முடிந்து விட்டவைதான். ஆனால் அவரால் இத்தணைநேரம் எப்படி தன்னுடைய மூச்சையும், துடிப்பையும் தங்க வைத்துக் கொண்டார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இந்த நிலை மருத்துவத்தால் ஏற்பட்டிருக்க முடியாது. சாதாரணமாக இத்தனை வயது சென்றபின் அவருக்கு வந்த ஹார்ட் அட்டாக்கின் வீரியம் அதிகம்தான். அதையும் அந்த அம்மையார் தாங்கிக்கொண்டு கிட்டத்தட்ட இருபது மணிநேரம் தன்னுடைய உயிர் துடிப்பை வைத்துக் கொண்டிருப்பது ஒரு மருத்துவ அதிசயமே. அவர் யாருக்காகவோ காத்திருக்கிறார் எனபதே என்னுடைய தீர்மானம். என் அநுமானம் சரியாக இருந்தார் அவர் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார் என நினைக்கிறேன். நீங்கள் அவரின் அருகில் சென்று இருங்கள். அவர் உங்களையும், உங்களின் வருகையையும் உணர்வார் என எதிர் பார்க்கிறேன்:எனவும் சொன்னார்.
டாக்டரின் பேச்சுக்கள் எதுவும் மோஹனின் காதிலோ கருத்திலோ ஏறவில்லை. தன்னுடைய தாயார் தன்னுடைய கடைசி நிமிஷங்களில் இருக்கிறார் எனப் புரிந்து கொண்டவனின் துக்கம் எல்லையைக் கடந்து விட்டது.. தானிருப்பது ஒரு மருத்துவ மனை என்றும் அவனின் கவனத்தில் இல்லை. தாய்ப்பசுவைத் தேடும் ஒரு கன்றாக “அம்மா...அம்மா..” என கதறிக்கொண்டே கட்டிலில் அருகில் சென்று தன்னுடைய தாயின்மீது தன் முகத்தை வைத்துக் கொண்டு கதறினான். அவனின் ஸ்பரிசமோ, குரலோ எது கமலத்தில் உணர்ச்சியைச் தூண்டியதோ தெரியாது. அவளும் மெதுவாக தன்னுடைய கைகளைத் தூக்கி தன்மீது முகம் வைத்துக் கொண்டு அழுத மோஹனின் தலையைத் தூக்கினாள். அவளின் கண்களில் ஒரு ஒளி ஏற்பட்டது. “மோஹனா வந்து விட்டாயப்பா? உனக்காகத்தான் நான் காத்திருந்தேன். உன்னைப் பார்க்காமல் என்னால் போக முடியுமா? உன்னைப் பார்க்கும்வரை எமனை என்னிடம் வரவேண்டாமென்று வேண்டிக்கொண்டிருந்தேன். இனி கவலையில்லை. என் மனம் நிறைந்தது. நான் உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன். உன்னுடனேயே இருப்பேன்: என மெதுவாக அரற்றிக்கொண்டே, மோஹனின் முகத்தோடு தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு, கண்களால் அவனைப் பார்த்துக் கொண்டே தன்னுடைய ஆத்மாவை அவனுடன் இனைத்து விட்டு, தன் கண்களை மூடினாள். அவளின் பூதவுடலை விட்டு உயிர் மோஹனுடன் கலந்து விட்ட்துபோல் அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியது. தாய்ப் பாசத்தின் ஆழத்தை யாரால் அளக்க முடியும்.
கமலாவின் கடைசி மூச்சு நின்றவுடன், அடுத்து நடக்கவேண்டிய காரியங்கள் எல்லாம் மளமளவென நடக்கலாயின. மோஹனும் தன்னுடைய பிறந்தகடமையை சீராகவே செய்தான். கமலத்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவளுக்குச் செய்யவேண்டிய வைதீக காரியங்களை ஒன்றுவிடாமல், மிகவும் பக்தி, சிரத்தையுடன் செய்து முடித்தான். ஆனாலும், அவனால் அவ்வப்போது தன்னுடைய அம்மா இனிமே தன் கண் எதிரில் வரமாட்டாள் என ஏக்கம் அதிகமாகி, அவ்வப்போது வாய்விட்டு அழவும் செய்தான். அவனின் துடிப்பை உணர்ந்த காமினிக்கும் அவனை எப்படி தேற்றுவதென்றும் தெரியவில்லை. அப்படி ஒரு நாள் மோஹன் தன்னுடைய துக்கத்தை அடக்க முடியாது அழுது கலங்கியபோது காமினி அவனிடம் வந்தாள். அவனுடைய முகத்தை தன்னுடைய பஞ்சுபோன்ற கைகளால் மெதுவாகவும் ஆதரவாகவும் எடுத்துக் கொண்டு, அவனுடைய கண்களைத் தன்னுடைய கண்களால் பார்த்தாள். அவளின் கண்களிலும் நீர் நிறைந்திருந்த்து. அவனிடம் அன்பாக இதமாகச் சொன்னாள் “எங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் அம்மா எத்தனை நல்லவர், அன்பானவர், அவருங்களுடன் எத்தனை பாசமாக இருந்தார் என. நீங்களும் உங்களின் உலகமாக் அம்மாவைதான் வைத்திருக்கிறீர்கள் என்பதும் எனக்கும் நம்முடைய குழந்தைகளுக்கும் தெரியும். அந்தக் சின்னக்குழந்தைகளின் முகத்தைப் பாருங்கள். நீங்கள் மனம் உடைந்து அழும்போது அவர்களும் எத்தனை துன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதை. உங்களின் கடமை உங்களின் அம்மாவுடன் முடிய வில்லை. உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, ஒரு பெண்னும், பையனும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தைபருவம் நீங்கவில்லை. இனிமேல்தான் அவர்களின் வாழ்வு மலர வேண்டும். அவர்களுக்கு நாமிருவரும் செய்ய வேண்டியவைகள் இனிமேல்தான் நடக்க வேண்டும். நீங்கள் இப்படி மனம் கலங்கி, குன்றிப்போனால், அவர்களின் ;பிற்காலம் எப்படி ;பிரகாசிக்கும். அம்மாவின் இழப்பு நமக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றுதான். அதற்காக நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் இருட்டில் இருக்க விடலாமா. உங்களுக்குத் தெரியாதா. உலகில் பிறந்தவர்கள் எல்லாம் ஒருநாள் பிரிய வேண்டும் என்பது அழிக்க முடியாத தீர்ப்பு என. எங்களுக்காக, நம் குழந்தைகளுக்காக் நீங்கள் உங்களின் மனதை திடப்படுத்திக் கொள்ளவேண்டும். எங்களின் வாழ்வே உங்களின்ன் கைகளில்தான் இருக்கிறது. மறந்து விடாதீர்கள் தயவுசெய்து உங்களின் துக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு, நிஜமான நிதர்சனமான வாழ்க்கைக்கு திரும்புங்கள். உங்கள் அம்மாவின் இட்த்தை யாராலும் நிரப்ப முடியாதுதான். ஆனால் அதில் ஒரு பங்கையாவது நாங்கள் நிரப்ப முயற்சி செய்கிறேம். நீங்களும் எங்களுடன் மனதை தேர்த்துக் கொண்டு வாழவாருங்கள்” என மிகவும் பரிவோடு சொன்னாள். மோஹனுக்கும் காமினியின் கவலை புரிந்த்து. அவளிடம் இதமாக ;காமினி, நீ சொல்வதுபோல் நானும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக திடப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். உடனே முழுவதுமாக என்னால் முட்யாவிட்டாலும், கூடிய சீக்கிரம் உங்களுடன் இனைந்து வாழுவேன். கவலைப்படாதே. இனி எனக்கு எல்லாமே நீதான்: எனச் சொல்லிக் கொண்டே அவளைத் தன்னுடன் இதமாக அனைத்துக் கொண்டான். அவனின் கணெதிரில் அம்மாவின் முகம் மலர்ந்து சிரித்தன.
கமலம் காலமாகி மூன்று வாரங்கள் முடிந்தபின், மோஹன் தன்னுடைய அலுவலத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். அன்றுதான் முதலில் போகலானான். அவன் ஆபீசுக்குப் போகும்போது வழக்கம்போல் “அம்மா நான் ஆபிசிக்குக் கிளம்பறேன்” எனச் சொல்லிவிட்டு, பிறகு தன்னுடைய அம்மா படத்தில் இருப்பதை உண்ர்ந்து, கண் கலங்கினான். அப்போது அவனுடைய பெண் பானு அவனருகில் வந்து “என்னப்பா ஆபீசுக்குக் கிளம்பிட்டாயா” எனக் கேட்டுக்கொண்டே வந்தாள். அவளைப் பார்த்தவன் உடனே அவளைத்தூக்கிக் கொண்டு அவளை முத்தமிட்டான். பானுவும் அப்பா என்னை பாட்டிக்கிட்டே தூக்கிக் போப்பா எனவும் சொல்ல. அவளையும் தூக்கிக்கொண்டு தன்னுடைய தாயாரின் மாலை போட்டு, பூ வைத்திருந்த பட்த்தினருகில் சென்றான். பானு தன்னுடைய பிஞ்சு கரத்தால், பாட்டியின் பட்த்தினருகில் வைத்திருந்த வீபூதி சம்பட்த்திலிருந்து, வீபுதியை எடுத்து மோஹனின் நெற்றியில் இட்டாள். அவளின் அந்தச் செய்கை அப்படியே தன்னுடைய அம்மாவின் செயலைப் போலவே இருந்த்தைக் கண்டவன் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டான். பிறகு குழந்தையை காமினியிடம் கொடுத்துவிட்டு, எதுவும் பேசாமல் ஆபிசுக்குப் போனான். அன்று இரவு அவனுக்கு தன்னுடைய மூன்று வார கால விடுப்பில் விடுபட்டுப்போன வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு வர நேரம் ஆகிவிட்டது. மனம் நிறைய அம்மாவின் நினைவுகளுடனே வீட்டிற்கு வந்தான். அவனுக்குக் கதவைத் திறந்து விட்ட காமினியைத் தொடர்ந்து உள்ளே வந்தவனின் காதில் பானுவின் குரல் கேட்டது. :அப்பா வந்துவிட்டாயா” என. திடுக்கிட்டுத் திரும்பியவனின் கண்களில் “பானு தன்னுடய அம்மா வழக்கம்போல் உட்கார்ந்து இருக்கும் ஒத்த சோபாவில் இருப்பதையும், தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பதையும். பானுவைப் பார்த்தவன் :என்னடாச்செல்லம். நீ இன்னும் தூங்கவில்லையா? எனவும் கேட்டுக்கொண்டே தூக்கினான். அவனிடம் தாவியபடியே “இன்னும் தூங்கவில்லையப்பா. நான் உனக்காகத்தான் இங்கேயே காத்துக் கொண்டிருந்தேன்: என தன்னுடைய மழலைக்குரலில் சொன்னாள். மோஹனின் காதில் பானுவின் குரல் கேட்கவில்லை. அம்மா கமலத்தின் குரலே கேட்டது. உணர்ச்சிவசப்பட்டவன், ‘அம்மா நீ என்னை விட்டு எங்கும் போகவில்லையம்மா, என் குழந்தை பானுக்குள் நீதான் இருக்கிறாயம்மா: என சொல்லிக்கொண்டே, தன் கைகளில் இருந்த குழந்தை பானுவை முத்தமிட்டான். அவனின் கண்களில் நீர் வடிந்தது. தன்னுடைய அம்மா தனக்காக எப்போதும் காத்திருக்கிறாள் எனவும் உணர்ந்தான்.
வணக்கம் அம்மா. 'நல்ல கதை, நன்றாக எழுதி இருக்கிறீர்கள்' என்று மட்டும் பொத்தம் பொதுவாகச் சொல்லி விட்டுப் போகாமல் சில கருத்துகளை வைக்கிறேன். பயனுடையதாய் இருப்பின் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ReplyDeleteமொத்தத்தில் நல்ல கதை. வலிமையான எழுத்து. உணர்ச்சிகளை வடிப்பதில் வெற்றி கண்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த நல்ல கதை சற்றே ஒளிந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் எழுதுவதை விடச் சிலவற்றை எழுதாமல் விட்டுவிடலாம். (நான் செய்யும் தவறும் இதே தான்).
உதாரணத்துக்கு, முடிவினைக் குழந்தை தந்தையின் நெற்றியில் நீறு பூசும் காலைக் காட்சியோடே முடித்திருந்தால் போதும். சொல்ல வந்த கருத்து அங்கேயே தெளிவாகிறது. அதன் பிறகு மீண்டும் மாலைக் காட்சியில் இன்னும் வலுவாக அதை நிலைநிறுத்தப் போகும் போது கதை சற்று வலுவை இழக்கிறது. வாசகனுக்குப் புதிதாகக் கிடைப்பது ஒன்றுமில்லை.
பிளாஷ்பேக் முறையில் முன்கதையைச் சொல்லுவது நல்ல உத்தி. ஆங்காங்கே உரையாடலைக் கொஞ்சம் தெளித்தால் நன்றாக இருக்கும்.
பெரிய பத்திகளைத் தக்கவாறு இன்னும் சற்றுப் பிரித்துக் கொண்டால் நன்றாக இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு பத்தியில் தந்தையின் மறைவில் ஆரம்பிக்கும் கதை, மகனின் வளர்ச்சி, திருமணம், வேலை, தாயாரைக் கவனித்துக் கொள்ளும் விருப்பம், விமானப் பயணம், மூன்றாமவர் உதவி என நீண்டுகொண்டே இருக்கிறது.
மருத்துவமனைக் காட்சிகளும், வசனங்களும், உணர்ச்சிகளும் அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. கதையின் பலம் அங்கு இருப்பதாகப் படுகிறது. அதனால், கதையின் முடிவுக்கு அருகில் இருந்தால் நன்றாக இருக்கும். இடையில் காமினியின் அறிவுரைப் பகுதியும் நன்றாகவே இருந்தாலும், இந்தப் பலமான பகுதியில் இருந்து முடிவினைச் சற்று நீட்டித்து விடுகிறது. சற்றே செதுக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
ஏதோ, என்னாலானது! எழுதாவிட்டாலும், எழுதுபவர்களை விமர்சிப்பது எளிதானது தானே? :-)
மற்றபடி, சிறு எழுத்துப்பிழைகள், மோஹனை மோகன் என்றே எழுதலாமே என்பது போன்ற கிரந்தத் தவிர்ப்புக் கருத்துகள் என்னுடைய தனிப்பட்ட விருப்புகள் என்பதால் அதிகம் சொல்லாமல் விட்டுவிடுகிறேன் :-)
தொடர்ந்து எழுதுங்கள். நன்று. எழுத எழுத இன்னும் சிறக்கும்.
அன்புடன்
செல்வராசு.
அன்புள்ள செல்வா,
Deleteஉன்னுடைய வழிகாட்டுதல்கள் மிகவும் பயனுள்ளவை. நான் இனி எழுதும் கதைகளில் உங்களின் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளவைகளை மனதில் ஏற்று என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வேன். நன்றி.
என்றும் உன் பிரியமான அம்மா ஜெயரமணி.