(ஜெயரமணி)
கணேசன் தன்னுடைய கடையிலிருந்து இரவு பத்து மணி வாக்கில் வீட்டிற்குத் திரும்பினான். வழக்கம்போல் அவனுடைய வயதான அம்மா வந்து மெதுவாக வாசற்கதவைத் திறந்தாள். அவளின் கண்களில் தூக்கம் தளும்பியது. தள்ளாத வயதில் தன்னுடைய அம்மா தனக்காக கஷ்டப்படுவதைப் பார்த்து கணேசனின் மனம் கலங்கியது. ஆனால் அவனால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. உள்ளே வந்து, தன்னுடைய முகம், கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு வந்தவனுக்கு, தட்டில் உணவு கொண்டு வந்து கொடுத்தாள் அவனுடைய அம்மா. கணேசன் உணவு சாப்பிடும்வரைதான் அவளால் பொறுமையாக இருக்க முடிந்தது. மெதுவாக “கணேசா, இன்றும் அந்த கலியாண புரோக்கர் வந்தார். உனக்கு பெண் பார்க்க வரச் சௌகரியப்படும் நாளைச் சொல்லச் சொன்னார். பெண் வீட்டுக்காரர்கள் அவரிடம் இரண்டு முறை கேட்டு விட்டார்களாம். உன் முடிவு என்னப்பா?” எனக் கேட்டாள்.
தினமும் தான் கடையை மூடி விட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் அம்மாவின் கோரிக்கைதான் இது. பாவம் அவளுக்கு தன் மகனுடைய வாழ்க்கை எல்லாரையும் போல் சுகமாக இல்லையே என்ற ஏக்கம். கணேசனின் வாழ்க்கை தனிமரமாக சுவையின்றி இருப்பதற்கு, காரணம் கணேசன் எல்லாரையும்போல் அழகாகவும், கம்பீரமாகவும் இல்லாததுதான். அது அவனின் குற்றமல்லவே. அவனைப் படைத்தவனின் செயல். எல்லாம் தெரிந்தும் தினமும் அம்மா தன்னிடம் தன்னுடைய இரண்டாவது திருமணத்தைப் பற்றி பேச்சை எடுத்தாலும், வழக்கப்படியே தன்னுடைய ஏக்கத்தையோ மன வேதனையோ வெளிக்காட்டாது, “அம்மா நீயும் எத்தனை நாட்கள்தான் என்னிடம் இதே கேள்வியை கேட்பாய். உனக்கேத் தெரியும் என்னுடைய குறை. ஒருமுறை உன்னுடைய வற்புறுத்தால், நான் கலியாணம் செய்து, ஒரு பெண்ணின் வாழ்வை சீரழித்தது போதும். ஒருமுறை நான் ஒரு பெண்ணை மனக்கஷ்டப்படுத்தியது போராதா? திரும்பவும் இன்னோரு பெண்னையும் கஷ்டப்படுத்தனுமா. என்னிடம் இருக்கும் சிறுமை எனக்குத் தெரியும். அப்படி யிருந்தும் உன்னைத் திருப்தி படுத்த ஒரு பெண்ணைக் கலியானம் செய்து அவளுக்கு துன்பத்தைக் கொடுத்தது போதும். என் பிறவிக்கு ஒரு திருமணம் போறும். எனக்கு வாழ்நாள் பூராவும் உன்னுடைய துணையே போதும். என்னை தனியாக நிம்மதியாக வாழவிடு” என தன்னுடைய மனதில் இருக்கும் வருத்தத்தை கூடிய வரையில் வெளிக்காட்டாமல், சொன்னான். “நீ சொல்லிவிடுகிறாய். என்னால் அப்படி இருக்கமுடியவில்லையே. உலகத்தில் எல்லாருமா சிகப்பாக, அழகாக, கம்பீரமாக இருக்கிறார்களா, இல்லையே குறையுள்ளவர்களெல்லாம் தங்களுடைய மணைவி, குழந்தை என குதூகலத்துடன் வாழவில்லையா? அப்படியென்ன, நீ குறைந்து விட்டாய்? கொஞ்சம் நிறம் குறைச்சல்தான். நீ கொஞ்சம் குட்டையாக, குண்டாக இருக்கிறாய். அது பகவானின் செயல், மற்றபடி, நீ மற்றவர்களைப் போல் படிக்கலையா, இல்லை சம்பாதிக்கத்தான் இல்லையா. இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களைவிட நீ வசதியாகத்தான் இருக்கிறாய். உனக்கு சொந்தமாக வீடும், கடையும் இருக்கிறது. மற்றவர்களிடம் போய் நீ கைகட்டி சேவகம் செய்யவில்லை. சொந்த சம்பாத்தியம். யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். காலம் பூராவும் வாழ சொந்த வீடும், நிலமும், வருமானத்திற்கு சொந்தமான கடையும் இருக்கு. உன்னால் நாலு குடும்பம் வாழுகிறது. ஒருத்தி புத்திகெட்டு ஏதோ சொல்லிவிட்டாள் என்பதற்காக, நீ ஏன் சன்யாசியாக வாழ வேண்டும்?” என தன் ஆற்றாமையை வெளியிட்டாள். அதற்கெல்லாம் நின்று பதில் சொல்ல கணேசனுக்கு மனமும் இல்லை, மனதில் தெம்பும் இல்லை. அம்மா சொல்லுவதெல்லாம் உண்மைதான். ஆனால், தன்னை மணந்து கொண்டவளின் கண்களில் பட்ட குறைகளை தன்னிடம் இல்லையென இவனால் சொல்ல முடியுமா? உண்மைதானே. பெண்கள் முதலில் எதிர்பார்ப்பது கண்ணுக்கு நிறைந்த வசீகரமான கணவந்தானே. அதற்குப் பிந்தானே, அவனுடைய சொத்தும் சம்பாத்தியமும். அவனின் மனம் பூவாக இருந்தாலும், மற்றவர்களின் எதிரில் தன்னுடைய கணவன் அழகாக இல்லை என்ற உறுத்தல் மணைவியாக வாழ வந்தவளுக்கு இருக்காதா? காலம் பூராவும் மனதில் ஏக்கத்துடன், வாழ வேண்டுமென்று ஒரு பெண்ணைக் கஷ்டப்படுத்துவது நியாயமா? பெண்னென்றாலும் அவளுக்கும் ஒரு எதிர்பார்ப்பு, ஆசை, கனவு இருக்கக்கூடாதா?தன்னுடன் வாழ வந்த பவானியும் பாவப் பட்டவள்தான். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, குழந்தையிலேயே தாயை இழந்து, மாற்றாந்தாயிடம் கொடுமைகளை அனுபவித்தவள்தான். அன்பற்ற தகப்பன். தன்னுடைய இளையாளின் சொல்லைமீறி எதுவும் செய்யச் சக்தியற்றவன். மூத்தாளின் பெண்ணிற்கு நன்றாக சீர் செய்து கலியாணம் செய்ய மனமில்லாமல், எப்படியாவது அவளைத் தன் வீட்டிலிருந்து விரட்டி விடுவதில்தான் குறியாக இருந்தவளின் கண்களில், கணேசன் பட்டான். கணேசனின் தாயாரும் மிகவும் சாதுவானவள். தன்னுடைய பிள்ளைக்கு எந்த விதமான வரதட்சணையோ, சீர் வகைளோ எதிர்பார்க்காமல், ஒரு அமைதியான பெண்ணை தன்னுடைய மருமகளாக ஏற்க தயாராகத்தான் இருந்தாள். அவளுடைய நல்ல குணத்தை, தன்னுடைய திட்டத்திற்கு வசதியாக பவானியின் சிற்றன்னை பயன் படுத்திக் கொண்டாள். பவானியும், எப்படியாவது தன்னுடைய சித்தியின் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என இருந்தாள். அதனால் அவள் திருமணத்திற்கு முன் ஒருமுறைகூட தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.
அவளிடம் சொன்னதெல்லாம் கணேசன் கொஞ்சம் கருப்பாக, குண்டாக, குட்டையாக இருப்பானென்றும், ஒரே பிள்ளை,தகப்பனார் இல்லை, தாயார் மட்டும்தான். பத்தாவது வரைதான் படித்திருக்கிறான். சொந்தமாக ஊரிலேயே பலசரக்குக் கடை வைத்திருக்கிறான். சொந்த வீடு, விவசாய நிலம் இருக்கிறது. என்பதுதான். மற்றவர்கள் அவளிடம் “பவானி நீ உண்மையிலேயே அதிர்ஷடக்காரிதான். பிக்கல் பிடுங்கல் இல்லாத புகுந்த வீடு. சாது மாமியார். ஒரே பிள்ளை. சொத்துக்காரன். இனிமேல் உனக்கு கஷ்டமே இல்லை. மகாராணிபோல் இருப்பாய்” என சொன்னதைக் கேட்டு அவளும் உண்மையிலேயே சந்தோஷப்பட்டாள். தன்னை கணேசனுடன் அவன் அம்மாவும் வந்து தன்னைப் பார்த்தபோதும் கூட அவள் கணேசனை ஒரு முறைதான் பார்த்தாள். மற்றவர்கள் சொன்ன விபரங்களில், தன்னுடைய புகுந்த வீட்டில் தன்னைக் கொடுமைப் படுத்த யாரும் இல்லை என்பதும், கணேசனின் அம்மாவும் அவளிடம் பிரியமாக, அன்பாக பழகியதும் அவளின் மனதில் படிந்தது. அதனால் அவளின் கண்களில் கணேசனின் நிறமோ, உருவமோ எந்த விதமான மனக்கிலேசத்தையும் உண்டாக்கவில்லை. அவளும் தன்னுடைய திருமணத்தை சீக்கிரமாகவே எதிர்பாத்து இருந்தாள். சுபஸ்ய சீக்கிரம் எனவும், மிகவும் விரைவிலேயே அவளுடைய கலியாணமும் கூடியது. திருமணமான புதிதில், அவளுக்கு கணேசனின் நிறமோ, உருவமோ குறையாகத் தெரியவில்லை. மாமியாரும் ஒரு தாய்க்குமேல் பிரியமாக இருந்ததால் வாழ்க்கை ஒரு வசந்தகாலமாகவே இருந்தது. கணேசனும் பவானியிடம் மிகவும் பிரியமாக, பாசமாக இருந்தான். தான் அழகாக இல்லையென்றாலும், தனக்கு வாய்த்த மணைவி அழகாக இருந்தது அவனுக்கு உணமையிலேயே பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அவர்களின் சந்தோஷத்திற்கு அடையாளமாக பவானியும் சீக்கிரத்திலேயே கர்ப்பமானாள்.
கணேசனின் தாயாருக்கு சந்தோஷம் தாளவில்லை. தன்னுடைய மருமகளை ஒரு இராணிபோல் தாங்கினாள். தினமும் அவளுக்கு மசக்கைக்கு இதமாக விதவிதமாக சமைத்துப் போட்டாள். பார்த்துப் பார்த்து சீராட்டினாள். விதவிதமான புடவைகள், நகைகள் என மருமகளை தினந்தோறும் அழகு படுத்திப் பார்த்தாள். கணேசனும் அம்மாவுடன் சேர்ந்து, பவானியை தன் கண்ணுக்குள் வைத்து, பூப்போல பார்த்துக் கொண்டான். காலக் கிரமத்தில், கணேசனுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தான். தன்னுடைய பிள்ளை, தன்னைப்போல் இல்லாமல், பவானியைப் போல் சிகப்பாக, அழகாக இருந்ததும் அவனுக்கு எல்லையில்லா ஆனந்தமளித்தது. காலம் ஒரே மாதிரியாக இருக்குமா? இல்லையே? அவர்களின் சந்தோஷத்திற்கும் ஒரு வில்லங்கம் வந்தது.
சிறுவயதிலிருந்தே எட்டிப் பார்க்காத, பவானியின் அத்தையும் அவனுடைய மகன் பரணிதரனும் ஒருநாள் பவானியைப் பார்க்க வந்தார்கள். வந்த அத்தானுக்கு பவானியின் அழகு கண்ணை உறுத்தியது. பவானி ஒரு மணமானவள், ஒரு குழந்தைக்குத் தாய் என்பதெல்லாம் அவன் கண்ணில் படவில்லை. தளதளவென புத்துக் குலுங்கும் பூங்கொடியாக இருக்கும் பவானியை தான் மணந்து கொள்ளாமல் போனது எத்தனை முட்டாள்த்தனம் என மனதிற்குள் மருகினான். கணேசனைக் கண்டவுடன் அவனுக்குள் கொஞ்சம் பொறமையும் தோன்றியது. கணேசனின் அழகற்ற, உருவமே அவனுக்குள் அவனுடைய பொறாமைக்கு ஒரு காரணமாகவும் இருந்தது.
தன்னுடைய மனதில் ஏற்பட்ட சலனங்களை வெளிக்காட்டாமல் மிகவும் நல்ல பிள்ளையாக, கணேசனின் அம்மாவிடம் “மாமி நீங்கள் எங்களின் பெண்ணை இத்தனை அருமையாகப் பார்த்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் நல்ல மனசுதான். பவானியையும், குழந்தை ராஜாவையும் கொஞ்ச நாட்கள் எங்கள் வீட்டில் வைத்திருக்க ஆசைபடுகிறோம். பவானிக்கு அம்மா இல்லையென்றாலும், அத்தை இருக்கிறார்கள். அவளுக்கும் தன்னுடைய பிறந்தவீட்டு மனிதர்கள் என நாங்கள்தான் இருக்கிறோம். எனவே நீங்கள் கொஞ்ச நாட்கள் பவானியையும், குழந்தை ராஜாவையும் எங்களுடன் அனுப்பிக்கொடுக்க வேண்டும். எங்களுக்கும் மனதிற்கு சந்தோஷமாக இருக்கும்” என மிகவும் பரிவுடனும், கரிசனத்துடனும் வேண்டிக் கொண்டான். பவானியின் அத்தைக்கு தன் மகன் திடீரென்று, அப்படி ஒரு வேண்டுதலை கணேசனின் அம்மாவிடம் கேட்டுவிட்டது சங்கடமாகவே இருந்தது. ஆனால் மறுத்து எதுவும் கூறுவது தனக்கும் அழகாக இருக்காது எனவும் புரிந்து கொண்டாள். அதனால், அவளும் தன்னுடைய மகனின் பாட்டிற்குச் சரியாக பின்பாட்டு பாடினாள். கணேசனின் தாயாரிடம் “மாமி, நான் சொல்ல ஆசைபட்டதை, என் பிள்ளை சொல்லிவிட்டான். எனக்கும் பவானி ஒரு பெண்தான். எங்களுடன் கொஞ்ச நாட்கள் அவர்கள் இருக்கட்டும். அனுப்பிக்கொடுங்கள்” எனவும் கேட்டாள். கணேசனுக்கு பவானியையும், ராஜாவையும் பிரிந்து இருக்க விருப்பமில்லாவிட்டாலும், கலியாணமாகி தங்களின் வீட்டிற்கு வந்த பவானி இதுவரை ஒரு முறைகூட பிறந்தவீட்டிற்கு என்று போனதில்லையாதலால், முதல் முறையாக அத்தையும், அவருடைய மகன் பரணிதரனும் கேட்டதை மறுக்கவும் முடியவில்லை. அதனால் பவானியைத் தனியாக உள்ளே அழைத்துச் சென்று, “பவானி உன்னுடைய அத்தை வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு போவதாக கேட்கிறார்களே, உன்னுடைய விருப்பம் என்ன. உனக்கு அவர்களுடன் போக விருப்பமா? சொல்”எனவும் கேட்டான். கணேசன் கேட்டவுடன், பவானிக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. மெதுவாக அவனிடம் “நான் இது வரையில் ஒருமுறை கூட என்னுடைய அத்தை வீட்டிற்குப் போனதில்லை. என்னுடைய சித்தி என்னை எங்கும் அனுப்பமாட்டாள். நான் போய்விட்டால், வீட்டில் வேலை செய்ய ஆள் கிடையாது என்பதால், என்னை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்தாள். முதல் முறையாக நான் எங்கள் விட்டை விட்டு வந்ததே, நம்முடைய கலியாணத்திற்குப் பின்தான். எனக்கும் எங்குமே போகாததால், ஒருமுறை போய்வரவும் ஆசையாக இருக்கிறது. நீங்களும், அம்மாவும் என்ன சொல்கிறீர்களோ அதுவே எனக்குச் சம்மதம்.” எனவும் சொன்னாள். கணேசனும் அவளிடம் “எனக்கும் அம்மாவுக்கும் இங்கு நீயும் ராஜாவும் இல்லையென்றால் கஷ்டமாகத்தானிருக்கும். அதற்காக உன்னுடைய வீட்டிலிருந்து அத்தை வந்து கூப்பிடும்போது அனுப்பாமல் இருந்தால் நன்றாக இருக்காது. நாங்கள் கொஞ்ச நாள் சமாளித்துக் கொள்கிறோம். நீயும் அவர்களுடன் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் பத்து நாட்கள் இரு. நானே ஒருமுறை அங்கு வந்து உன்னையும் குழந்தையும் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறேன். உனக்குத் தேவையான பணத்தையும், துணிமணிகளையும் எடுத்துக் கொள். நான் அம்மாவிடம் சொல்லிக் கொள்கிறேன்” எனக் கூறி விட்டு, வெளியில் வந்து அம்மாவிடம் “அம்மா, பவானிக்கும் கொஞ்ச நாள் அவளுடைய அத்தை வீட்டில் இருக்க ஆசையாக இருக்கும். அதனால் அவளை நாம் இப்போது இவர்களுடன் அனுப்புவோம். அடுத்த வாரத்தில் ஒரு நாள் நான் போய் அவர்களை திரும்பவும் அழைத்து வந்து விடுவேன்” எனவும் சொல்லி, பவானிக்குத்தவையான பணமும், மற்றவைகளையும் எடுத்து பயணத்திற்கு தயார் படுத்தினான். பரணிதரனுக்கு தான் ஒரு முறை கூப்பிட்டவுடன், பவானியும் தன்னுடைய வீட்டிற்கு வரச் சம்மதித்த்து மிகவும் சந்தோஷமாகியது. அவனும் கணேசனிடம் “மாப்பிள்ளை, ரொம்பச்சந்தோஷம். நாங்களும் பவானியையும், குழந்தையையும் மிகவும் அருமையாக, நன்றாகவே வைத்துக் கொள்வோம். நீங்கள் எதற்கும் கவலைப் படவேண்டாம்.” எனவும் மிகவும் கலகலப்பாகச் சொன்னான். அவர்களும் அன்றே தன்னுடைய ஊருக்குத்திரும்பினர்கள்.
பவானிக்கும் தன்னுடைய அத்தையுடன் வந்ததில் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தாள். பவானியின் அத்தை இருந்த ஊரான மதுரை மிகவும் பெரிய ஊர். அங்கு இருக்கும் கோவில்களுக்கெல்லாம் தினமும் அத்தையுடனும், அத்தானுடனும் சேர்ந்து சென்று வந்தாள். பிறந்ததிலிருந்தே சின்ன கிராமத்தில் வசித்து வந்தவளுக்கு மதுரையைப் பார்த்த பிரமிப்பே அதிகமாக இருந்தது. பரணிதரன், பவானியின் வெகுளித்தனத்தை தனக்குச் சாதகமாகவே பயன் படுத்திக் கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவளை மட்டும் தனியாக வெளியே அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். முதலில் அவனின் அம்மா கொஞ்சம் தயங்கிய போது, அவன் தன் அம்மாவிடம் “பாவம் பவானி அம்மா. சின்ன வயதுமுதலே கிராமத்தில் இருந்ததால் அவளுக்கு மதுரை போன்ற ஒரு ஊரைப் பார்க்க பார்க்க சந்தோஷம் தாங்கமுடியவில்லை. சின்னக் குழந்தை போல் ஒவ் வொரு விஷயத்தையும் எப்படி பார்த்து பரசவப் படுகிறாள் தெரியுமா. எனக்கு அவளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறதம்மா. ஏதோ இங்கு இருக்கும் கொஞ்ச நாளாவது அவள் நம்முடன் சந்தோஷமாக இருக்கட்டும்மம்மா. நான் அவளை இங்கிருக்கும் போதே எத்தனை இடங்களுக்குக் கூட்டிக் கொண்டுபோய் அவளை சந்தோஷப்படுத்த முடியுமோ அத்தனையும் செய்கிறேன்.” என பவானியிடம் மிகவும் பரிவுள்ளவன்போல் சொன்னான். அதைக் கேட்டு அவனின் அம்மாவும் சந்தோஷப்பட்டாள். முதல் இரு நாட்கள், பவானியுடன் தன்னுடைய அம்மாவையும் குழந்தையையும் கூட்டிச் சென்றவன், பிறகு அதிக கூட்டமான இடங்களுக்கு அம்மாவையும் ராஜாவையும் கூட்டிப் போவது மிகவும் சிரமமாக இருக்கும் எனச் சொல்லி, பவானியை மட்டும் தனியே அழைத்துப் போகலானான். முதல் நாள் பவானி குழந்தை பாலுக்கு அழுமே என சொல்ல, அதற்கும் அவனே “பவானி, உன் ராஜா மூன்று மாதம் முடிந்த குழந்தை. இனிமேல் அவனுக்கு உன் தாய்ப்பால் மட்டும் போதாது, மேல்பால் கொடுத்தால்தான் அவன் தெம்பாக இருப்பான். அதனால், நாமிருவம் வெளியே போன போது அம்மா அவனுக்கு பசும்பால் கொடுத்து பழக்கி விடுவாள். அவன் அழாமல் இருப்பான்” என அவளுக்குச் தைரியம் சொல்லி, அன்று முதல் அவளை மட்டும் தன்னோடு அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். அப்படி செல்லும் போது ஒரு முறை சினிமாவுக்குச் சென்றார்கள். புதிய படமானதால், கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதிகக் கூட்டத்தில் அவள் இடிபடாமல் அழைத்துச் செல்வதுபோல் அவன் அவளை கூடிய வரையில் அணைத்துச் சென்றான். கொஞ்சம் கொஞ்சமாக பரணிதரன் பவானியை தன் வலைக்குள் இழுக்கலானான். முதலில் பவானிக்கு பரணிதரன் தன்னை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பழகுவது மிகவும் சங்கோஜமாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ அவனின் செயலை அவள் தப்பாக நிணைக்கவில்லை மாறாக அவளுக்குள் ஒரு திருப்தியும் இருந்தது. முதலில் பவானியுடன் தான் அதிகமாக நெருங்கி பழகியதை அவள் வித்தியாசமாக எண்ணாத்தால் பரணிதரணுக்கு துளிர் விட்டுத்தான் போனது. ஒரு முறை அவளைக் கூட்டிக்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனான். அங்கு அர்ச்சனை செய்யும்போது, பவானியின் பெயருக்குச்செய்தான். அப்போது அவளை தன்னுடைய மணைவி என்றே சொல்லிச் செய்யச் சொன்னான். அங்கிருந்தவர்கள் அவனிடம் “ஏனப்பா எங்களுக்கெல்லாம் சொல்லாமல் இரகசியமாக கலியாணம் செய்து கொண்டாயா?” எனக் கேட்டபோது, சிரித்தபடியே “அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போனபோது, என்னுடைய மாமா பெண்ணையே அம்மா எனக்கு பேசி முடித்து கலியாணமும் செய்து விட்டாள். எனக்கும் பவானியை மிகவும் பிடித்துப் போனதால், வீணாக காலம் கடத்தாது ஊரிலேயே சீக்கிரம் கலியாணம் செய்து கொண்டு கூட்டிக் கொண்டே வந்து விட்டேன்” என மிகவும் தைரியமாகச் சொன்னான். உடனே கூடி இருந்தவர்களும் இருவரையும் பார்த்து “மிகவும் பொறுத்தமான ஜோடி. இருவரையும் பார்க்கும்போது அந்தப் பார்வதி பரமேஸ்வரன் போலவே இருக்கிறீர்கள். நீண்ட காலம் நன்றாக இருக்கவேண்டும்” எனவும் ஆசிர்வாதம் செய்தார்கள். கோவிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் பவானி அவனுடன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் திடீரென்று, தன்னை அவனுடைய மணைவி எனச் சொல்லி கோவிலில் அர்ச்சனை செய்ததும், மற்றவர்களிடம் தனக்கும் அவளுக்கும் திருமணமாகி விட்டது என்ற பொய்யை வாய்க் கூசாமல் சொல்லியதும் மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதே சமயம் அவனிடம் ஏனிப்படி தன்னை மணைவியென்றும், ஊரில் கலியாணம் செய்து கொண்டு விட்டோம் என்றும் கோவிலில் மற்றவர்களிடம் சொன்னதை தான் ஏன் மறுத்து ஓன்றும் சொல்லாமல் இருந்தோம் எனவும் புரியவில்லை. ஒரு விதமான குழப்பத்திலேயே அவள் அன்று இரவைக் கழித்தாள்.
மறுநாள் பவானியின் அத்தை அன்று பிரதோஷம் என அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று விட்டாள். அவள் கோவிலிருந்து வீடு திரும்ப நேரம் ஆகுமென்றும் சொல்லிவிட்டுச் சென்றாள். பவானியும் அன்று பிற்பகலில் தன்னுடைய குழந்தை ராஜாவை தூங்கப்பண்ணிவிட்டுத் தானும் சிறிது நேரம் தூங்கச் சென்றாள். அப்போது பரணிதரன் தன்னுடைய வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான். அவன் செய்வது மருந்து வினியோகம் செய்யும் அதிகாரி என்ற பணி. அவனுடைய பணிக்கு நேரம் காலம் கிடையாது. எப்பவேண்டுமானாலும் அவனுடைய வேலைக்குச் செய்வான். வந்தவன் தன்னுடைய அம்மா இல்லை எனப் புரிந்து கொண்டான். பவானியிடம் கேட்டதற்கு அவளும் அத்தை பிரதோஷப் பூஜைக்குச் சிவன் கோவில் சென்றுள்ளதாகச் சொல்லி, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள். அவனும் சாப்பிட்டுவிட்டு, பவானியிடம் வந்து “பவானி உனக்கு என் மீது எதுவும் கோபமா? காலையில் நான் ஆபிசுக்குக் கிளம்பும்போது உன்னைப் பார்க்கவில்லையே. எங்கே போய்விட்டாய்?” எனக் கேட்டான். பவானியும் “எனக்கு எதற்காக உங்களின் மேல் கோபம் வரவேண்டும்? நீங்கள் என்னை ஓன்றும் சொல்லவில்லையே? எனச் சாதாரணமாக கேட்டாள். அப்போது பரணிதரனுக்கு தன்மனதில் ஒரு சிறு தெம்பும் உண்டாயிற்று. அவனுள் ஒரு சந்தெகம் இருந்தது “எங்கே தான் பவானியை தன்னுடைய மணைவி என கோவிலில் சொன்னதை அவள் தப்பாக எடுத்துக் கொண்டு விட்டாளோ” என. அதனால் அவள் தன்னை தப்பாக நிணைக்கவில்லையென தெரிந்தவுடன் மிகவும் சகஜமாகவே அவளுடன் பேச ஆரம்பித்தான்.
பவானியைப் பார்த்து பிரியமாக கேட்டான் “ஏன் பவானி உன்னிடம் சில்க் புடவைகள் இல்லையா. எப்பவுமே இப்படி நூல்புடவைகளாகவே கட்டிக் கொள்கிறாய். உன்னுடைய அழகுக்கும், சின்ன வயசுக்கும் நீ கலர் கலராக விதவிதமான சில்க் புடவைகள் கட்டிக் கொண்டால். இன்னும் சிக்கென்று அழகாகத் தெரிவாயே? என. பதிலுக்கு “அத்தான் என்னிடம் இருக்கும் புடவைகளைத்தானே நான் கட்டிக் கொள்ள முடியும். கலியாணத்திற்கு முன் எனக்கென்று யாரும் புதிதாக புடவைகளைக் கொடுக்க வில்லை. எல்லாம் என் சித்தி கட்டிய பழய புடவைகளைத்தான் எனக்குக் கிடைக்கும். கலியாணத்திற்குப் பிந்தான், என் கணவர் அவரின் அம்மாவிடம் சொல்லி எனக்கு புதியதாக புடவைகளை வாங்கிக் கொடுத்தார். என் மாமியாரும் அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு புடவைக்காரனிடம் சென்று அவன் கடையில் இருந்த நூல் புடவைகளை எனக்காக வாங்கிவந்தார். எங்களூரில் இந்த ஊரில் இருப்பது போல் பெரிய பெரிய துணிக்கடைகள் இல்லையே. அதனால் எனக்கு இந்த மாதிரி நாகரீகமாக, அழகான புடவைகளை வாங்கவோ, ஏன் பார்க்கவோ வசதியில்லை.” எனச் சொன்னாள். அதைக் கேட்டு, “விடும்மா. நாமிருவரும் இன்றே கடைக்குப் போய் உனக்குப் பொறுத்தமாக அழகான புடவைகள், நைட்டிகள் மற்றும் நாகரீகமான சுடிதார் என வகைவகையாக வாங்கி வரலாம். நானிருக்கிறேன். உனக்கு வேண்டியதெல்லாம் செய்ய. இனிமேல் நீ உனக்கு யாருமில்லையென்ற கவலை படவேண்டாம்.”எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அன்று மாலையிலேயே அவனுடைய அம்மா வந்தவுடன் குழந்தை ராஜாவை அவளிடம் விட்டுவிட்டு இருவரும் மதுரையிலுள்ள ஒரு பெரிய புடவைக் கடைக்குச் சென்று, பவானிக்குப் பிடித்தமான வகையில் நிறைய துணிகள், விதவிதமான சுடிதார் செட் என வாங்கிவந்தார்கள். அதைப் பார்த்த அத்தையிடம் பவானி ‘அத்தை அத்தானுக்குத்தான் என்மீது எத்தணை பாசம் பார்த்தீர்களா. நான் பாட்டிமாதிரி, இப்போதே இப்படிக் கட்டம்போட்ட நூல்புடவைகளைக் கட்டிக் கொள்வது பிடிக்கவில்லையாம் என் வயதுக்கேற்றமாதிரி இப்படி விதவிதமான சில்க் புடவைகளைத்தான் கட்டிக்கொள்ளவேண்டும் சொன்னார். அத்தை எனக்கு இந்த மாதிரி சில்க் புடவைகளைக் கட்டிக் கொண்டால் நன்றாக இருக்குமா” என மிகவும் ஆசையுடன் கேட்டாள். அவளின் குழந்தைதனத்தைப் பார்த்தவளுக்கு அவளிடம் கோபமாக எதுவும் பேச முடியவில்லை. அதேசமயம் பரணிதரனும் அம்மாவிடம் “பாவம் பவானி அம்மா. இத்தணை நாள் வரை அவளை யாரும் புடவைக்கடைக்கே கூட்டிச் சென்றதில்லையாம். அவளுக்கு நம்மூர் கடைக்குள் சென்றவுடன் அதைச் பார்த்து சந்தோஷம் தாங்கவில்லை. ஒரு குழந்தைபோல் குதூகலத்துடன் ஒவ்வோரு புடவையாகச் தொட்டுத்தொட்டுப் பார்த்து மகிழ்ந்தாள். அதனால் அவள் மனம் திருப்தியடையும்படி நாந்தான் அவளுக்கு ஏற்ற புடவை, நைட்டி, சுடிதார் வகைகள் என வாங்கிவந்தேன். அவளுடைய ஊரில் இருக்கும் ஒரே புடவைக்காரன் கொண்டு வந்து தரும் புடவைகளைத் தான் அவள் பார்த்திருக்கிறாள்” ஏதோ நம்மால் ஆனது அவள் கொஞ்சகாலம் இங்கே சந்தோஷமாக இருக்கவேண்டுமம்மா” எனச் சொல்லி தன்னுடைய அம்மாவை மற்றமாதிரி வித்யாசமாக எதும் யோசிக்க இடம் கொடுக்காமல் முடித்தான். அவனுடைய அம்மாவிற்கும் அவன் சொல்வதில் எந்தவிதமான கெடுமதியும் இருப்பதாகச் தெரியவில்லை.
அடுத்த நாள் பாணிதரன் காலையிலேயே பவானியிடம் “பவானி, இன்று நாள் நன்றாக இருக்கிறதா என அம்மாவிடம் கேட்டுக் கொண்டு, அம்மா கையினால் ஒரு புது புடவையை வாங்கிக் கட்டிக் கொள்” எனச் சொன்னான். பவானியும் தன்னுடைய அத்தையிடம் சென்று பரணிதரன் தனக்கு வாங்கிக்கொடுத்த புடவை,மற்றவகை ஆடைகளையும் எடுத்து வந்து கொடுத்தாள். மகன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த பவானியின் அத்தையும் அவள் கொண்டு வந்த உடைகளையெல்லாம் பார்த்து, “மிகவும் நன்றாகத்தான் பார்த்து எடுத்து இருக்கிறாய். பவானி உனக்கு இந்த ஆகாச வெளிர் நிற நீலப் புடவையும், அதற்குப் பொறுத்தமான பிளவுசும் நன்றாக இருக்கும். பரணிதரன் ஆசைப்படியே இன்று நீ இதைப் பிரித்து கட்டிக் கொள்” எனவும் சொல்லி, ஒரு புடவையை அவளிடம் எடுத்துக் கொடுத்தாள். அவளின் விருப்பப்படியே பவானியும், குளித்து முடித்து, அந்தப் புடவையையும், பொறுத்தமான பிளவுசையும் போட்டுக் கொண்டு வந்து சுவாமியையும், அத்தையையும் நமஸ்கரித்தாள். அந்தப் புடவையில் பவானி மிகவும் அழகாகத்தான் இருந்தாள். அவளுக்கே தன்னைக் கண்ணாடியில் பார்த்த போது மிகவும் பரவசமாக இருந்தது. அம்மாவையும். சுவாமியையும் நமஸ்காரம் செய்த பவானியைப் பார்த்து சிறு புன்னகையுடன் பரணிதரன் கேட்டான் “ஏன் பவானி, என்னை நமஸ்காரம் செய்ய மாட்டாயா? நான் உன்னைப் பார்த்து சந்தோஷப் பட மாட்டேனா? எனவும் கேட்டான். அப்படி அவன் கேட்டவுடன் பவானிக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவன் தன்னிடம் எத்தனை பிரியமாக இருக்கிறான் என்பதையும் உணர்ந்திருந்தாள். ஆனால் அவனை தான் நமஸ்காரம் செய்வது சரியா தப்பா எனப் புரியாமல், அத்தையைப் பார்த்தாள். அத்தையும் “பவானி, முறைப்படி அவந்தான் உன் கழுத்தில் தாலிகட்டவேண்டியவன். ஆனால் உன் சித்தியின் குணத்தால்,நாங்கள் உன் அப்பாவுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ளவில்லை. நீயும் கணேசனுக்கும் மணைவியாகிவிட்டாய். எல்லாம் பகவான் சித்தம். நீ அவனுக்கு சின்னவள்தான் அதனால் அவனை நமஸ்காரம் செய்வது ஒன்றும் தப்பாகாது. நீ அவன் விருப்பப்படியே செய்” எனவும் சொல்ல, பவானியும் புன்சிரிப்புடன் பரணிதரணை நமஸ்கரித்தாள். அத்தையும் அவனிடம் “பரணி, நீ இன்று பவானியை பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டு, அங்கிருந்தே ஒரு ஹோட்டலுக்கும போய் சாப்பிட்டுவிட்டு வாருன்கள் எனவும் சொன்னாள். அதைக் கேட்டவுடன் பரணிக்கும் மிகவும் சந்தோஷமாகியது. பவானியிடம் “என்ன பவானி, அத்தை சொன்னபடியே என்னுடன் கோவிலுக்கும், இரவு வெளியில் சாப்பிடவும் வர உனக்குச் சம்மதம்மா? எனவும் கேட்டான். பவானியும் சந்தோஷத்துடன் கிளம்பினாள்.
பவானியைத் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் கூட்டிச் செல்ல விரும்பிய பரணி அவளிடம் “பவானி உன்னால் என்னுடன் வண்டியில் வருவாயா. பயப்படமாட்டாயே” எனக் கேட்டான். அதற்கு பவானி “இன்று வரைநான் இப்படி வண்டியில்போனதில்லை. ஆனால் எனக்கும் விருப்பமாக இருக்கிறது. நீங்கள் என்னை பத்திரமாக மெதுவாக கூட்டிக் கொண்டு போவதானால், நான் வருகிறேன்” என் தன் விருப்பத்தைச் சொன்னள். பரணியும் உடனே அவளையும் கூட்டிக் கொண்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு கோவிலுக்குக் கிளம்பினான். முதலில் வண்டியில் செல்லப் பயப்பட்ட பவானியை “நீ பயப்படாதே. என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள். நான் மெதுவாகவே ஓட்டிச் செல்வேன்” என தைரியம் சொன்னான். முதலில் பயந்த பவானி, சிறிது நேரத்திலேயே பயம் தெளிந்து, அவனுடைய இடுப்பைச் சுற்றித் தன் கைகளைச் சுற்றிப் பற்றிக் கொண்டு சிரித்துக் கொண்டே அவனுடன் பயணம் செய்தாள். இருவரும் அப்படி கோவிலுக்குப் போனதும் பவானிக்கு ஒரு புது அநுபவமாக இருந்த்து. கோவிலில் பிரகாரம் சுற்றிவந்து, இருவரும் அங்கிருந்த ஒரு மண்டபத்தில் உட்கார்ந்தனர். பரணியேயே பார்த்துக் கொண்டிருந்த, பவானியின் கண்களில் அவளையுமறியாமல் கண்ணீர் வழிந்தது. அவளின் கண்ணீரைக் கண்ட பரணி, “என்ன பவானி, ஏன் திடீரென்று உன் கண்களில் நீர் வருகிறது. உன் வீட்டு மனிதர்களை நிணைத்து அழுகிறாயா அல்லது குழந்தை ராஜாவைத் தனியாக விட்டுவிட்டு வந்ததுபற்றி ஏங்குகிறாயா?” எனப் பரிவுடன் கேட்டுக்கொண்டே, அவளின் கைகளைப் பிடித்தான்.அவனின் பரிவைக் கண்டவள் “அப்படியெல்லாம் இல்லை பரணியத்தான். என் வாழ்நாளில் இந்தப் பத்து நாட்களாகத்தான் என்மீது மற்றவர்களுக்கு இருக்கும் அன்பை உணருகிறேன். என் பிறந்த வீட்டில் என்னை அவர்களின் சம்பளமில்லாத வேலைகாரியாகத்தான் நடத்திவந்தனர். என் கணவர் வீட்டில் அத்தையும் என் கணவர் கணேசனும் மிகவும் நல்லவர்கள். ஆனால் அவர்களுக்கு உங்களைப் போல அத்தையைப் போல என்னிடம் பரிவும் பாசமும் காட்டத்தெரியவில்லை. என்னை மிகவும் நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். எனக்கு எந்தக் குறையும் இல்லாமல்தான் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுடன் இருக்கும்போது எனக்கு ஒரு பாதுகாப்புத்தான் தெரிந்ததே தவிர, என்னால் அவர்களிடம் ஒரு உரிமையோ, அன்நோன்யத்தைதோ காட்டமுடியவில்லை. நானும் அவர்கள் வீட்டில் வாழ்ந்து வந்தேன். குடும்பம் நடத்தி, ஒரு குழந்தையையும் பெற்றேன். எல்லாம் ஒரு இயந்திரத்தனமான உணர்வுதான் என்னுடன் இருந்தது. இங்கு வந்தபிந்தான் நம்மீது மற்றவர்களும் பாசமாக, பிரியமாக, இதமாக இருப்பதை உணர்ந்ததால், என்னையுமறியாமல் மனம் ஆன்ந்த்த்தில் மூழ்கிறது. ஆனால் இதெல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு. என் கணவர் அவர் சொல்லியபடியே இன்னும் ஒரு வாரத்தில் வந்து என்னையும், ராஜாவையும் கூட்டிக் கொண்டு சென்று விடுவார். பிறகு அந்த வீட்டில் ஒரு இயந்திரமான வாழ்வுதான் எனக்கு இருக்கும். ஒரு முறை தித்திப்பு மிட்டாயைச் சுவைத்த குழந்தை திரும்பவும் அந்த தித்திப்பு மிட்டாய் தனக்கு கிடைக்குமா என ஏங்கும் நிலையில்தான் நான் இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்னிடம் காட்டும் இத்தணை அனபையும் பாசத்தையும் நான் சீக்கிரமே இழக்கனும் என எண்ணும்போது என் மனம் உடைந்து போகிறது. அந்த நினைவால்தான் என்னையுமறியாமல் நான் என் மனதுக்குள் அழுது கொண்டிருந்தேன். அதன் வெளிப்பாடே இந்தக் கண்ணீர்” என தன்னுடைய கண்களைச் துடைத்துக் கொண்டே சின்ன விசும்பலோடு சொன்னாள். அவளின் மனதில் இருக்கும் ஏக்கத்தைப் புரிந்து கொண்ட பரணி, தன்னுடைய நோக்கத்தை அவளிடம் வெளியிட இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது எனபதையும், மேலும் பவானியே தன் மனதளவில் தன்மீது எத்தனை அன்பை வைத்திருந்தால், தான் கூப்பிட்டவுடன் எந்த மனக்கிலேசமின்றி சந்தோஷமாக தன்னுடன் வந்திருப்பாள் என்பதையும் உணர்ந்து கொண்டான். “பவு, நான் இப்போது இந்தக் கோவிலில் வைத்து உன்னிடம் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்கிறேன். நான் சொன்னபின் நீ என்னைப் பற்றி எந்த விதமான தவறான முடிவுக்கும் வராதே. எனக்கு உன்னிடம் எந்தனை காதல் இருக்கிறதென்று புரிந்து கொள். நான் சின்ன வயதிலிருந்தே உன்னைத்தான் என் மணைவியாக அடைய வேண்டுமென்ற ஒரு கனவோடு இருந்தேன். ஆனால் உன் சித்தியோ எங்களை எங்களின் மாமாவிடம்கூட பழக அனுமதிக்கவில்லை. அதனால் எங்களால் அடிக்கடி, அப்படியேன், ஒரு முறைகூட உன் வீட்டிற்கு வர முடியவில்லை. அதனால் என் அம்மாவும் ஒதுங்கியே இருந்து விட்டாள். உன்னுடைய கல்யாணம் நிச்சயமானதையும், உடனடியாக உன்னுடைய திருமணம் முடிந்ததைக் கூட உன்னுடைய அப்பாவோ, சித்தியோ எங்களுக்குச் தெரியப்படுத்தவும் இல்லை. ஒருமுறை உங்களின் ஊரிலிருந்து வந்திருந்த என் அம்மாவின் புக்கக உறவினர் ஒருவர் சொல்லித்தான், நீ திருமணமாகி, உன் கணவர் வீட்டில் திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருப்பதாகத் தெரிந்தது. என்னுடைய ஏமாற்றத்தை வார்த்தைகளால் சொல்லமுடியாது நான் பட்ட கஷ்டம் அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். ஒருநாள் திடிரென்றுஎன் அம்மா என்னிடம் வந்து அவளுக்கு உன்னைப் பார்க்கவேண்டுமென்று ஏக்கமாக இருப்பதாகவும், என்னை ஒருமுறை உங்கள் கிராமத்திற்கு கூட்டிச் செல்ல வேண்டுமென்றும் கேட்டாள். எனக்கும் அப்படியே ஒரு முறை உன்னைப்பார்த்த திருப்தியும் இருக்குமென்றுதான் நானும் உடனே அம்மாவைக் கூட்டிக் கொண்டுவந்தேன். பின் நடந்தவைகள்தான் உனக்குத் தெரியுமே. எனக்கும் உன்னையும் ராஜாவையும் பிரிய மனமில்லை. நீ மட்டும் சம்மதித்தால் நாமிருவரும் வாழ் நாள் பூராவும் ஒன்றாகவே இருக்கலாம். நீ உன் மனதை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பரணியின் வாத்த்தைக் கேட்ட பவானிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் குழப்பத்துடன் அவனிடம் கேட்டாள் “நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. நானெப்படி இங்கேயே நிரந்தரமாக உங்களுடன் இருக்க முடியும். நானோ ஒரு கிராமத்தில் பிறந்து வந்தப் பெண். மேலும் மணமானவள். அடையாளமாக ஒரு குழந்தையும் இருக்கிறது. என்னுடைய கணவரும் அவருடைய அம்மாவும் என்னை உங்களுடனே விட்டு வைத்திருப்பார்களா? நானும் என் ஆசைப்படியே உங்களுடனேயே இருந்திரத்தான் முடியுமா அதுவும் ஊரார் கண்களில் தப்பாகப் படாதா?. இன்னும் ஓரிரு நாட்களில் என்னுடைய கணவர் வருவாரே என்னைக் கூட்டிக் கொண்டு போக. அவரிடம் எப்படி நான் உங்களுடனேயே இங்கேயே இருந்து விடுகிறென என்னால் எப்படிச் சொல்ல முடியும்? உங்களையும் அத்தையையும் நல்லவர்களென்றுதானே என் வீட்டார் என்னையும் ராஜாவையும் உங்களுடன் நீங்கள் கூப்பிட்ட உடனே அனுப்பினார்களே? அவர்களுக்கு நான் என்ன சொல்லுவது? எனவும் சொன்னாள். அதற்கும் பரணி “பவும்மா நம்முடைய வாழ்க்கைக்கு நாம்தான் அதிகாரி. நீ எங்கே இருந்தால் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியுமோ அங்கிருப்பது உன் உரிமை. நீ கிராமத்துப் பெண்னானதால், உனக்கு இப்படி நினைப்பது கூட தப்பாகப் படுகிறது. அப்பவெல்லாம் தன்னுடைய மண வாழ்வில், திருமணமான கணவனுடம் வாழ ஒரு பெண்ணிற்கு விருப்பம் இல்லையென்றாலும், அல்லது அப்படிப்பட்ட வாழ்வில் அவளை கட்டாயப்படுத்த அவளை மணந்தவனுக்குக்கூட உரிமையில்லை. உனக்குச் சம்மதமானால் உங்களின் திருமண வாழ்வை நீ சட்டபூர்வமாகவே முறித்துக் கொள்ளலாம். நீ உன்னுடைய விருப்பம், மன உறுதி, உன் வாழ்வை யாருடன் வாழ முடிவு செய்கிறாய் எனபதுதான் முக்கியம். நீ மட்டும் உறுதியாக இருந்தால், ஒரு முறை இணய முடியாத நாம், திரும்பவும் சட்டத்தின் துனையால் வாழ்வில் ஒன்றுபட்டு வாழலாம். உன் விருப்பத்தை என்னிடம் தீர்மானமாகச் சொல். நான் என்றும் உன் மனசுப்படியே இருப்பேன். என்னைப் பொறுத்தவரையில், இந்தக் கோவிலில் இருக்கும் அத்தனை தெய்வங்களின் சாட்சியாகச் சொல்கிறேன் நீ என்னுடன் வாழ்ந்தாலும், என்னை விட்டுப் போனாலும், என்னுடைய மணைவியாகத்தான் உன்னை வைத்திருக்கிறேன். நீ நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வா. நீ ஒரு முடிவுக்கு வரும்வரையில், உன் கணவரின் வருகையை நான் தள்ளிப் போடுகிறேன். எப்படி என நீ கவலைப்படாதே. கூடியவரையில் யார் மனதும் புண் படாமல், நீ என்னுடன் சந்தோஷமாக வாழும் வகையை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் சொல்கிறபடியே, உன் கணவருக்கு ஒரு கடிதம் எழுது. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறென்.” இப்போது நாம் சாப்பிட்டுவிட்டுப் போகலாம். நேரமாகி விட்டது. அம்மவும் குழந்தையும் தனியாக இருப்பார்கள்” எனச் சொல்லிக் கொண்டே அவளையும் அழைத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தார்கள்.
பரணியும் சொன்னபடியே கணேசனுக்கு தன்னுடைய தாயாரின் உடல்நிலை சிறிது பலகீனப்பட்டிருப்பதாகவும், அவளுக்கு சர்க்கரை, இரத்தக்கொதிப்புத் தொந்திரவும் இருப்பதால், தற்போது மருத்துவர் ஒருவரின் கண்கானிப்பில் இருப்பதால், அவருக்கு இந்தச் சமயம் பவானியின் துனையும் உதவியும் மிகவும் அவசியமாக இருக்கிறது. அதனால் கணேசன் சம்மதித்தால், இன்னும் கொஞ்ச காலம் பவானியையும், குழந்தை ராஜாவையும் தங்களூடன் வைத்திருந்து தன் தாயாரின் உடல் நிலை சீர்பட்டதும். தானே இருவரையும் ஊருக்கு கூட்டிக் கொண்டு விட இருப்பாதாகவும் கடிதம் எழுதினான். அவனின் சொல்படியே பவானியும் தன்னுடைய மாமியாருக்கு ஒரு கடிதம் எழுதி, மேலும் கொஞ்ச நாட்கள் இங்கேயே இருப்பதற்கு சம்மதிக்குமாறும் கேட்டு கடிதம் எழுதி, பரணியிடம் கொடுக்க, அவன் இரு கடிதங்களையும் அன்றே தபாலில் அனுப்பிவிட்டான். பதிலுக்கு கணேசனும் அவர்கள் விருப்பப்படியே கொஞ்சகாலம் இருவரும் அவர்களுடனேயே இருக்கலாம் எனவும் எழுதிவிட்டான்.
கரைப்பார் கரைத்தால் கல்லே கரையும் என இருக்கும்போது, ஒரு கலிமண்ணாக இருக்கும் பவானியை தன்னுடைய திட்டத்திற்கு உட்பட வைக்க பரணிக்கு அதிகம் கஷ்டப்படத் தேவேயில்லை. பரணியும் தன்னுடைய வேலையை வெகு தூரத்தில் இருக்கும் அஸ்ஸாமுக்கு மாற்றிக் கொண்டான். அதற்கு ஏற்ப, அவர்களுடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஒரு தொழிற்சாலை அஸ்ஸாமில் இருந்த்து. அதற்கு ஒரு பொறுப்பான நிர்வாகி வேண்டுமென்று அவனுடைய முதலாளி தேடிக்கொண்டிருந்தார். பரணி அவரை நேரில் பார்த்து, தனக்கு அந்தப் பணியைக் கொடுத்தால், அஸ்ஸாமுக்குப் போக சம்மதிப்பதாகவும் சொன்னான். அவனுடைய முதலாளிக்கு தன்னுடைய நேர்ப் பார்வையில் இருந்த பரணிதரனே அங்கு போகச் சம்மதித்தது, மிகவும் திருப்தியாகி விட்டது. அவரும் அவனுக்கு ஊதிய உயர்வு, இருக்க வீடு, மற்றபடி குடும்பத்திற்கு வேண்டிய தட்டுமுட்டு சாமான்கள் என எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு இருப்பிடமும் கொடுத்தார். அவனும் வீட்டிற்கு வந்து தன்னுடைய தாயாரிடம், தன்னை தன் முதலாளி அவருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மற்றோரு அலுவலகத்திற்கு பணி உயர்வும், ஊதிய உயர்வுடன், இருக்க வீடும் கொடுத்து, அஸ்ஸாமுக்குப் போக உத்திரவு கொடுத்து விட்டாரென்றும், தான் மறுத்தால், தன்னுடைய வேலையே போய்விடுமென்றும் சொல்லி தான் அங்கு போவதைத் தவிர வேறு வழியில்லையென சொல்லிவிட்டான். அதற்கு மேல் அவனின் அம்மாவால் எதையும் சொல்ல முடியவில்லை. அதே சமயம் பரணியும் அவளிடம் அவளுடைய உடல் நிலை காரணத்தாலும், வடக்கில் இருக்கும் குளிர் சீதோஷ்னம், மொழிப் பிரச்சினையாலும், அவளால் அங்கு வர முடியாதென்றும், அதனால் அவள் இந்த ஊரிலேயே இருக்கலாம். தான் இரு மாதத்திற்கு ஒருமுறைவந்து பார்த்துக் கொள்ளுவதாகவும் சொல்லிவிட்டான். தானே தான் ஊருக்கு மாற்றல் ஆகிப் போகுமுன், பவானியையும், ராஜாவையும் அவர்கள் இருப்பிடத்திற்கு கூட்டிச் செல்லுவதாகவும் சொல்லிவிட்டான்.
ஆனால் பவானியிடம் மட்டும், தன்னுடைய முடிவின் காரணம் என்ன என்பதை தெரியப் படுத்தினான். அதற்குள் பவானியும், தன் மனதளவில் அவனுடன் அஸ்ஸாமுக்குச் சென்று, அவனுடைய மணைவியாகவும் வாழ இசைந்துவிட்டாள். அவளின் மனதைப் புரிந்து கொண்டவனுக்கு சந்தோஷம் எல்லையின்றிப் போனது. தன்னுடைய தாயாருக்கும் கூட தெரியாமல், அவளுக்கும் சேர்த்து விமானத்தில் போக பயணத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டான். அலுவலத்தில் பவானியையும், குழந்தை ராஜாவையும் தன்னுடைய மணைவி, மகன் எனவும் சொல்லிவிட்டான். திட்டமிட்டபடியே, பரணியும், பவானியும் குழந்தையுடன் கணேசனுடைய வீட்டிற்குப் போவதாகச் சொல்லிவிட்டு, அன்று இரவு இரயிலில் மதுரையிலிருந்து சென்னைக்கு பயணமானார்கள். அங்கு இரு நாட்கள் இருந்து, தன்னுடைய அலுவல் பணிகளை முடித்துக் கொண்டு, இருவரும் விமானம் மூலம் அஸ்ஸாமுக்கும் சென்று விட்டார்கள். தன்னுடைய வாழ்க்கையில், இரயிலிலேயே போகாத, பவானிக்கு தானும் தன்னுடைய குழந்தை ராஜாவும், பரணியின் உதவியால் விமானத்தில் பறந்தது நம்பமுடியாத அதிர்ஷடமாகவே இருந்த்து. அத்தனைக்கும் காரணமான பரணியின் அன்புக்கும், பரிவுக்கும் தன்னால் என்ன மாற்று கைமாறு செய்ய முடியும். தன்னால் முடிந்ததெல்லாம் இனி வாழ்நாள் பூராவும் அவனுடனே இருந்து, அவனைஎல்லா விதத்திலும் சந்தோஷப் படுத்தவேண்டியது தன்னுடைய தலையாய கடமை எனவும் முடிவும் செய்து கொண்டு, அவனுடன் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினாள்.
தான் பரணியுடன் வாழ வந்தபின், தன்னுடைய கணவர் கணேசனுக்கு பவானி ஒரு கடிதம் எழுதினான். அதைக் கடிதம் என சொல்லுவது சரியல்ல. ஏனென்றால் அதில் அவள் தன்னுடைய மனதில் புதிதாக ஏற்பட்ட ஒரு மாறுதலை மிகவும் நாகரீகமாகவே தெரியப் படுத்தியிருந்தாள். தன்னுடைய வாழ்வில் தன்னுடைய தகப்பன் வீட்டில் சித்தியிடம் தான் பட்ட துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன்னுடைய திருமணம் நடந்தது. அதனால் அவள் ஒரு கொடுமையான நரக வாழ்க்கையிலிருந்து மன அமைதியடைத் தக்க ஒரு நல்ல வாழ்வையும், சமூகத்தில் தனக்கோரு அந்தஸ்த்தையும் கணேசனாலும் அவனுடைய தாயாராலும் தனக்கு கிடைத்தது என்பதில் அவளுக்கு சந்தோஷம் தான். அந்த அதிக ஆர்பாட்டமில்லாத இயந்திர வாழ்வில், ஒரு இனியசம்பவம் தான் தாயானது. கணேசனின் மூலம் தனக்கு ராஜா பிறந்தான். அப்போதுதான் தன்னுடைய அத்தையும் அவரின் மகனான பரணிதரனும் வந்து அவளைத் தங்களுடன் கொஞ்ச நாள் வைத்துக் கொள்ளவும் விரும்பி, கணேசனும் அனுப்பி வைத்ததை மிகவும் நன்றியுடன் நினைத்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.
தன்னுடைய அத்தையின் வீட்டிற்கு வந்தபிந்தான், அவள் மனதில் அவளையுமறியாமல், தன்னுடைய கணவர் வீட்டில் வாழ்ந்த ஒரு வாழ்வும், தற்போது தன்னுடைய அத்தையின் வீட்டில் அவளுக்குக் கிடைத்த மனத் திருப்தியும், வாழ்வில் சில சந்தர்ப்பங்களும், அவளுக்கு தன்னுடைய வாழ்வில்மற்றோரு பக்கத்தைப் பற்றி சில ஏக்கங்கள் ஏற்பட்டன. அதுநான்வரையில் தான் பார்த்தறியாத, ஏன் கேட்டேயறியாத பல வசதிகளும் வளமான வாய்ப்புகளும் தெரிந்தன. சிறு குழந்தை போல் தானும் அத்தகைய ஒரு வசதியான, ஓளிநிறைந்த வாழ்வு வாழவேண்டுமென்றும், தனக்கும் அப்படியோரு வாழ்க்கை கிடைக்க நான் என்னசெய்ய வேண்டுமென்றும் யோசிக்கலானாள். அப்படி மனதுக்குள் யோசிக்கும் போதுதான், தன்னுடைய அத்தான் பரணிதரனும் தன்னிடம் அவனுடைய அன்பையும் காதலையும் தெரிவித்து, பவானி முழுமனதுடனும் சம்மதித்தால், வாழ்நாள் பூராவும் அவளையும் ராஜாவையும் தன்னுடன் வைத்துக் கொள்ள மிகவும் ஆவலாக இருப்பதாகவும், பவானியிடம் மிகவும் பரிவுடனும், அன்புடனும் பேசி, அவளுடைய மனதிற்குள்ளும் ஒரு சலனத்தை ஏற்படுத்தி விட்டான். அந்தச் சலனம் ஒரு வண்டுபோல் அவள் மனதைக் குடைந்து, இனி தான் கணேசனுடன் வாழ்வது முடியாத ஒன்று எனவும், தன்னுடைய வாழ்க்கை இனிமேல் தன்னுடைய விருப்பப்படியே இருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தாள். அதனால் தன் மனதில் எழுந்த விருப்பத்தை மிகவும் பணிவாக அவனுக்குச் தெரிவித்தும் இருந்தாள்.
அவளுடைய கடிதத்தின் வாசகங்கள்.
“மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய கணவருக்கு,
என்னிடமிருந்து வெகு நாட்களுக்குப் பின் உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதிய என்மீது உங்களுக்கு நியாயமாக கோபம் வந்தாலும், என்னுடைய வேண்டுகோளை படித்து விட்டு, என்மீது உங்களுக்கு உண்மையாகவே ஒரு பரிதாபம்தான் தோன்றும். ;பிறந்த நாள் முதல் காராக்கிரக்ஹத்தில் இருந்த் என்னை, நீங்கள் திருமணம் செய்துகொண்டு, உரிமையுடன் அந்தச் சிறைச்சாலையின் துன்பங்களிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து, ஒரு அமைதியான வாழ்வைஎனக்கு அளித்தீர்கள். என்னை உங்கள் வீட்டின் குத்துவிளக்காகத்தான் கொண்டாடினீர்கள். நிங்களும், என் மாமியாரும் என் மீது வைத்திருந்த அன்புக்கும், பாசத்துக்கும் நான் என்றேன்றும் கடமை பட்டுள்ளேன். உங்களால் எனக்கு ஒரு குழந்தையும் கிடைத்தது. ஆரவாரமற்ற ஒரு இயந்திரமான வாழ்க்கையை நான் அங்கு அனுபவித்தேன். அங்கிருந்தவரை எனக்கு என் வாழ்வு திருப்தியானதாக, ஆனந்தமானதாகத்தான் இருந்தது. என் அத்தை கேட்டபடி, என்னை நீங்கள் இங்கு அனுப்பும் வரை, எனக்கு வாழ்க்கையின் மறுபக்கம் என ஒன்று இருக்கும் எனவும் தெரியாது இருந்தேன். இங்கு வந்தபிந்தான், என்னுடைய அத்தானின் அழகும், அவருடைய சினேகமும் என்னுள் சிறிது சலனத்தை ஏற்படுத்தியது. அதற்கேற்றாற்போல் என் அத்தானும் என்னிடம் அவர் என்னை சிறு வயதுமுதல் விரும்பியதாகவும், என்னை மணந்து கொள்ள தனக்குச் தகுதி ஏற்படும் வரை காத்திருந்தாகவும் சொன்னார். ஆனால் அவர் தன் வாழ்வில் தனக்கென ஒரு அந்தஸ்தும், கௌரமும் அடைந்தபோது, என்னைச் தேடி வந்தாராம். அப்போது நான் உங்கள் மணைவியாகி, ஒரு குழந்தைக்கும் தாயானது தெரிந்து மனதிற்குள் உடைந்து விட்டாராம். அப்படியும் அவருக்கு என்மீது ஒரு பரிவும் பாசமும் இருந்ததால், உங்களிடமும் அம்மாவிடமும் உத்திரவு வாங்கி, என்னை தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்தார். இங்கு வந்தபின், என்னை அவர் பல இடங்களுக்கும் கூட்டிக் கொண்டு போய் பல விஷயங்களைக் காண்பித்தார். அப்போதெல்லாம் அவர் என்னிடம் காட்டிய அன்பும், பாசமும் என்னையும் அவர்மீது அன்பு கொள்ள வைத்தது. என்னையுமறியாமல், என் மனதிற்குள் அவரது உருவமும் இடம் பெற்றது. கொஞ்சம் கொஞ்சமாக என் மனம் அவரிடம் ஈடுபாடு கொண்டதால், சிறுகச் சிறுக நானும் அவருடன் மனதாலும் உடலாலும் ஒன்றி வாழ விரும்பினேன். அதேசமயம் அத்தானும் என்னிடம் தன் மனதில் உள்ள விருப்பத்தையும் தெரிவித்து, என்னை தன்னுடனே வாழ வருமாறும் வேண்டிக்கொண்டார். என் மனதில் அவரின் வேண்டுதலே முக்கியமாகியது. அதனால் நானும் அவருடன் வாழ முடிவு செய்துவிட்டேன். அதே சமயம், உங்களின் உரிமையையும் நான் யோசித்துப் பார்த்தேன், நீங்கள் என்னைக் கலியாணம் செய்து கொண்டு என்னுடன் வாழும் உரிமையும் பெற்றவர்தான். நானும் என் அப்பாவின் சித்தியின் தீர்மானத்திற்குக் கட்டுப்பட்டு உங்களுடன் வாழ வந்தேன். வந்த என்னை நீங்கள் அன்பாகத்தான் வைத்திருந்தீர்கள். ஒரு சமயம் நான் என் அத்தானைப் பார்த்து அவருடன் பழகாமல் இருந்தால், என் மனதில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் உங்களுடனே என் வாழ்வு இருந்திருக்கும். இருட்டிலிருந்து வெளியே வர, உங்களின் உறவு எனக்கு ஒர் அகல்விளக்காக இருந்தது. ஆனால், என் அத்தான் எனக்குக் காட்டிய வாழ்க்கை எனக்கு ஒரு பிரகாசமானதாகத் தெரிந்தது. என் மனம் அந்த பிரகாசத்தில் இருக்கவே விரும்பியதால், நான் உங்களின் அனுமதியின்றி என் வாழ்வை அவருடன் இனைத்துக் கொண்டுவிட்டேன். நீங்கள் சட்டத்தின் உதவியால், என்னை அவரிடமிருந்து பிரித்து உங்களுடன் வாழ கூட்டிக் கொண்டு போகலாம். அப்படி நீங்கள் செய்தால், நான் சட்டத்தால் உங்களுடன் வாழ வேண்டுமேதவிர, என் மனதால் உங்களுடன் வாழ முடியாது. எனக்கு விருப்பமில்லாத ஒரு வாழ்வை நான் உங்களுடந்தான் வாழ வேண்டுமென்று நீங்கள் கட்டாயப்படுத்த மாட்டீர்கள் என என் உள் மனதும் சொல்லியது. அதனால் நான் உங்களிடம் சரணடைந்து வேண்டிக் கொள்வது என்னை தயவு செய்து என் விருப்பப்படியேஎன் அத்தானுடன் வாழ அனுமதியுங்கள். நான் இப்படி கேட்பது எந்த தர்மத்திலும் ஏற்க முடியாதுதான். அன்புமயமான உங்கள் உள்ளம் என்னுடைய வேண்டுதலை மறுக்காது எனவும் தெரிகிறது. தயவு செய்து, நீங்கள் என்னை வாழ்த்த வேண்டாம். பதிலுக்கு என் மீது நீங்கள் கோபம் கொண்டு சாபம் கொடுக்காதீர்கள்.உங்களின் அன்பும் ஆதரவும் தான் என்னுடைய இரண்டாவது வாழ்க்கையில் ஒரு வசந்தம் கொடுக்கும். உங்களின் ஆசிகளைக் கேட்டு, உங்களின் பாதம் பணியும் இந்த அறியாதவளை மன்னித்து விடுங்கள். ராஜா என்றும் உங்களின் பிள்ளைதான். ஆனால் அவனுக்குத் தாயாக நான் இருக்கவும் அனுமதியுங்கள், அவனை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்.” என ஒரு உருக்கமான கடிதம் எழுதினாள்.
கடிதம் கணேசனின் கைக்குக் கிடைத்ததும், அதைப் படித்தவனுக்குள் ஒரு முறை ஆக்ரோஷமும், மனக்குமுறலும்தான் ஏற்பட்டது. முதலில் தான் ஒரு ஆண்மகன் என்பதும், ஒரு சிறிய பெண் தன்னுடைய ஆண்மைக்குச் சவால் விட்டது போல்தான் துடித்தது. தன்னுடைய உரிமையை நாம் ஏன் விட வேண்டும். இப்போதே போய் அங்கிருந்து பவானியையும், ராஜாவையும் தன்னுடைய வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வருவதை யார் தடுக்க முடியும். சட்டப்படி அவள் இந்த வீட்டில் வாழ வேண்டியவள்தான். என்னை குரூபமாகப் படைத்தது ஆண்டவனின் சித்தம். என்னை மணக்கும்போதே என்னைப் பார்த்து, சம்மதம் சொன்னவள்தானே இந்த பவானி. திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயானபிந்தான் என்னுடைய அழகற்ற முகம் அவள் கண்களில் பட்டதா? தான் அழகற்றவந்தான். என்றாலும். என்றாவது ஒருநாளாவது பவானியிடம், அன்பின்றி, பாசமின்றி இருந்தேனா? இல்லையே. அவள் எது கேட்டாலும் அடுத்த வினாடியே வாங்கிக் கொடுக்கத் தயாராக இல்லையா? ஏனோ என்னிடம் அவள் வாய் விட்டு எதுவும் கேட்டதில்லை. என் அம்மாவும் தான் அவளை தன்னுடைய மகளைப்போலவேதான் சீராட்டிளாள். பிரசவத்திற்குக்கூட அவளின் சித்தியிடம் அனுப்பாமல், எல்லாவற்றையும் அம்மாதானே செய்தாள். அவளுக்கு வளைகாப்பு, சீமந்தம், பிள்ளைபேறு, பிறந்த ராஜாவுக்கும் என்ன குறை வைத்தோம். காலத்தால் அழியக்கூடிய அழகுக்காக், எங்களின் தூய்மையான அன்பையும், பாசத்தையும் வேண்டாமென போய்விட்டாளா? என் குழந்தையின் மழலைச் சொற்களையெல்லாம் கேட்க முடியாமல், குழந்தையுடனும் தன்னுடைய அத்தானிடம் சென்றவளைப் பற்றி, யாரிடம் என்ன சொல்வது. சொன்னால் எனக்குத் தானே அவமானம். எல்லாரும் என்ன சொல்வார்கள் “பாவம் ஏழைப் பெண் தன்னுடைய சித்தியிடம் பட்ட கொடுமைகளிலிருந்து வெளியே வரவேண்டி உன்னைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதித்து இருப்பாள். இல்லையென்றால் செக்கச் செவக்க, ஒரு சித்திரபாவைபோன்ற பவானி, எந்தவிதமாகவும் அவளுக்கு இணையற்ற, கருப்பான, குட்டையான, குரூரமான முகம் கொண்ட, தன்னை விருப்பப்பட்டா திருமணம் செய்து கொண்டிருப்பாள். பவானியைத்தவிர வேறு எந்தப் பெண் தன் முகத்தைப் பார்த்தபின்பும், தன்னை மணம் செய்து கொண்டு, தன்னுடன் கொஞ்ச காலம் வாழ்ந்திருப்பாள். கடனே எனக் காலம் கழித்திருந்தவளின் கண்களில் மன்மதன்போல் அழகாக, படித்த, பகட்டான வேலையில் இருக்கும் ஒருவனைக் கண்டால் மனம் மாறாமல் இருப்பாளா? அவளுக்கும் மற்றவர்களைப்போல் வாழ ஆசையிருக்காதா?” உன்னைவிட அதிக தகுதியோடு ஒருவன் வந்து வாழ வா எனக் கூப்பிட்டவுடன் போகத்தான் செய்வாள்” எனவும் பலவாறாகத்தான் பேசுவார்கள். அதெல்லாம் எனக்கு அவமானந்தானே. அவளை எழுதியிருப்பது போல் நான் உரிமையுடனும், சட்ட்த்தின் துனையுடனும், அவளைக் கட்டாயப்படுத்தி என்னுடன் வாழ அழைத்து வந்தால் போதுமா? இங்கு அவளின் மனம் ஈடுபடுமா? என்னுடன் உள்ளத்தாலும், உடலாலும் இனைந்து மகிழ்ந்து என்னை மகிழச் செய்வாளா? அவளேதான் சுட்டிக் காட்டியிருக்காளே. என்னைக் கட்டாயமாக உங்களுடன் அழைத்துச் சென்றால், என்னுடன் ஒரு உணர்ச்சியற்ற வெறுமையான வாழ்க்கைதான் வாழுவேன் என.அப்படி ஒரு விருப்பமற்ற பெண்ணுடன் கட்டாயப்படுத்தி வாழ்ந்து, என்னால் என்ன சுகம் அடைய முடியும். இது நாள் வரைநான் அவளின் கண்களில் ஒரு அழகற்ற, கருப்பான, குரூரமான முகமுடைய மனிதனாகத் தெரிந்தவன். இனிமேல் அவளின் கண்களுக்கு ஒரு அரக்கனாக, கொடூரமான ஈவு இரக்கமற்ற மனிதனாகத்தானே தெரிவேன். என்னுடைய புற அழகைத்தான் அவள் விரும்பவில்லையே தவிர என்னுடைய அன்பையும், பாசத்தையும் மறுக்கவில்லை. சின்னப் பெண், சிறு வயது முதல் சொல்லமுடியாத துன்பங்களையும், ஏமாற்றாங்களையுமே கண்டிருக்கிறாள். இப்போதுதான் அவன் மனதிற்குள்ளும் ஆசை, காதல், பருவமென உணர்ச்சிகள் கிளம்பியிருக்கின்றன. தன் மனதில் இருப்பதை மறைக்காமல், வெள்ளை உள்ளத்துடன் என்னிடம் சொல்லியிருப்பதிலிந்தே அவளுக்கு என்னிடம் எத்துனை நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். என்னால் அவளின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க முடியாதே. என் முகத்தை என்னாலே பார்க்க முடியாததால்தானே, இதுவரை ஒரு முறை கூட கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்டதில்லை. என்னாலே பார்க்கச் சகிக்காத முகமுடைய ஒருவனுடன் தாயற்ற ஒரு பெண்ணை வாழ்நாள் பூராவும் என்னைப் பார்த்துக் கொண்டே என்னுடன் வாழு என நான் நிர்பந்திப்பது எந்த வகையில் தர்மமாகும். யாருமற்ற ஏழைப் பெண் என்பதால், அவளுக்குள் இருக்கும் தார்மீக உணர்வுகளையெல்லாம் அழிக்கனுமா. அவளுடைய வாழ்க்கை அவளுடையதுதான். அதை அவளின் விருப்பப்படியே வாழ அவளுக்கும் எல்லரையும்போல் முழு உரிமை உண்டு. சட்டத்தின் படி அவளின் விருப்பத்தை முறியடித்தாலும், அதே சட்டத்தின் துணையால், அவளுக்கு என்னுடன் வாழ விருப்பமில்லை எனச்சொன்னால், அதையும் மீறி அவளை என்னுடந்தான் வாழ வேண்டுமென சொல்ல அந்தச் சட்டத்தாலும் முடியாதே. இது நாள் வரை எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஊரில் ஒரு மரியாதை, நல்ல குடும்பம் எனப் பெயர் உண்டு. இப்போழுது, நான் அவளின் பேரில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தால், என் குடும்பத்தின் பெயரும் தான் சந்திக்கு வருமே. என் அம்மா மற்றவர்கள் எங்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுவதைக் கேட்டால், துடித்துப் போவாளே. இப்போது நான் என்ன செய்வது? இப்படியெல்லாம் தன் மனதிற்குள்ளே குமைந்து கொண்டு, யாரையும் பார்க்கப் பிடிக்காமல், தன்னுடைய கவனத்தை கடையிலும் செலுத்த முடியாமல் தவித்தவன், கடைப் பையனிடம் “முருகா நான் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன். நான் திரும்ப கடைக்கு வரமாட்டேன். நீயே ஒன்பது மணிக்குக் கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்குப் போய் சாவியைக் கொடுத்து விட்டு, என் அம்மாவிடம் நான் வேலை விஷயமாக வெளியேச் சென்றதாகவும், அப்படியே வீட்டிற்கு வருவதாகவும் சொன்னதாகச் சொல்லி விட்டுப்போ” எனவும் சொல்லிவிட்டு, கல்லாப் பெட்டியைப் பூட்டிச் சாவியைஎடுத்துக் கொண்டு தன்னுடைய சைக்கிளில் கிளம்பினான். தான் எங்கு செல்லவேண்டுமென நோக்கமின்றி, சைக்கிளைச் செலுத்தினான். அவணையுமறியாமல் அவன் அந்த ஊரிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கேச் சென்றான். உள்ளேச்சென்று, பிள்ளையாரின் முன்பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னத் திண்ணையில் அமர்ந்து, மௌனமாக தன்னுடைய வாழ்வில் வந்த பவானியையும், தற்போது அவள் தன்னை விட்டுப் பிரிந்து போக முடிவு செய்திருப்பதையும், அப்படி அவள் முடிவு செய்யத் தன்னுடைய தோற்றாமே ஒரு காரணாமாகியதையும் உணர்ந்தான். ஆமாம் தன்னுடைய தோற்றம் உலகத்திற்கு ஏற்காத ஒரு விகாரமே. தன்னை ஏன் பகவான் அப்படி ஒரு குறையோடு படைத்தான். தன் முகம் தனக்கே சகிக்காதபோது, உலகில் எல்லாரும் எதிர்பார்க்கும் புற அழகும் கண்கவர் நிறமுமின்றி, வளர்ச்சியிம் இல்லாது ஒரு கருப்பு உருவத்துடன் இருக்கும் தன்னை பவானி வாழ்நாள் பூராவும் சகித்துக் கொண்டு எப்படி வாழ விரும்புவாள். முதலில் அவள் கண்களில் படுவது என் புறத் தோற்றமே அல்லவா. பகவானே நான் என்ன பாவம் செய்தேன், என்னை ஏன் இப்படி பார்ப்பவர்களெல்லாம் முகஞ்சுழிக்கத்தக்க ஒரு உருவத்துடன் படைத்து விட்டாய். அதனால் நீ அடைந்த திருப்திதான் என்ன. சிறுவயது முதலே என் உற்றார், உறவினர், மற்ற நண்பர்கள் என எல்லாரையும் விட்டுவிட்டுத் தனியாக யாருமற்ற ஒரு பிறவியாக நான் வளர வேண்டிய சூழ்நிலையில்தான் இருந்தேனே.நான் அப்படி யிருப்பதுதான் உனக்கு இன்பமா? அப்படியிருக்கும்போது என்ன காரணத்திற்காக பவானி போன்ற ஒரு அழகு பதுமையை என் வாழ்வுடன் இணைத்து வைத்தாய். என் வாழ்விலும் கொஞ்ச நாள் பசுமையான நெகிழ்வுகள் நடக்க வேண்டுமென விதியிட்ட சட்டமோ. இப்போது நான் என்ன செய்வது. என்னுடன் வாழ விருப்பமில்லையென எழுதிய பவானியை நான் எப்படி என்னுடந்தான் வாழவேண்டுமென்று கட்டாயப் படுத்த முடியும். அப்படி கட்டாயத்தால் அவளுடன் வாழ்ந்தால், என் மனதில் என்ன திருப்தி ஏற்படும். என்னை விரும்பாத ஒரு பெண்ணை, தாலி கட்டிய மணைவி என உரிமையால், என்னுடன் வாழ வைத்தால், அது அந்தப் பெண்ணுக்குச் செய்யும் துரோகமல்லவா? பிரியமில்லாத ஒருத்தியுடன் கட்டாயமாக உடலுறவு கொண்டால், அதுவும் ஒரு அருவருக்கத்த பலாத்காரம்தானே. நான் என்ன நல்ல உணர்ச்சிகளுடன் வாழ்ந்த ஒரு நியாயமான மனிதல்லவா. நான் ஒரு மிருகமாக வேண்டுமா? அல்லது என்னிடம் தன் மனம் திறந்து சொல்லி, வேறு ஒருவருடன் வாழத் துடிக்கும் பவானியை மனதார அவளின் விருப்பப்படியே வாழ அனுமதிப்பதா? ஒன்றுமே புரியவில்லை. உன்னைத் தவிர வேறு யாரிடம் போய் என் மனக்குமுறலையும், அதற்குப் பரிகாரத்தையும் கேட்பேன். என் தாயாரிடம் கேட்க முடியுமா. முதலில் இந்த விவகாரத்தை கேட்டவுடனே அவளின் மனம் உடைந்து விடாதா? வயதானளைப் பற்றி யோசித்தால், வாழ வேண்டியவளான பவானிக்கு என்ன பதில் சொல்வது. என் மனதிற்குள் ஒரு முடிவை நீதான் உண்டாக்க வேண்டும்: என பலப்பல நினைத்துக் கொண்டே, கண்களில் நீர் வழிய தன்னெதிரில் இருந்த கல்லுப் பிள்ளையாரையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது, அந்தக் கோவிலுக்கு அருகில் கனேசனுடன் ஒரே வீட்டில் மற்றோரு பகுதியில் இருக்கும் கோவில் குருக்கள் ராகவன் வந்தான். அவனுடன் அவனுடைய மூன்று வயதுப் பெண்ணும் வந்தான். சிறுமி அழுது கொண்டே இருந்தாள். அதைப் பார்த்த கணேசன் “என்னம்மா எதற்கு அழுகிறாய். அப்பாஅடித்தாரா” எனவும் கேட்டான். அதற்கு அச்சிறுமி ஆமாம் என தன் தலையை ஆட்டிக் கொண்டே இன்னும் பலமாக அழுதது. அப்போது ராகவன் அவளிடம் “இதப்பாரு, நீ இப்படியே பிடிவாதம் பிடித்து அழுதால் எல்லாம் நான் உனக்கு ஒன்றும் வாங்கிக் கொடுக்க மாட்டேன். நீ கேட்பதல்லாம் வாங்கித்தர எனக்கு சம்பாத்தியம் இல்லை. குழந்தையாச்சேன்னு, நீ கேட்டபடியே உனக்கு ஒரு பொம்மை வாங்கித்தந்தேன். ஒரு பத்து நாள் கூட நீ அதை வைத்துக் கொண்டு விளையாட வில்லை. இப்போது அந்தப் பொம்மை வேண்டாமெங்கிறாய். உடனே உனக்கு ஒரு புது பொம்மை வாங்கணும் என்றால், என்னால் முடியாது. நீ அந்தப் பொம்மையுடன் சமத்தாக விளையாடினால் விளையாடு, இல்லையென்றால் உன்னை நான் விட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகமாட்டேன். இங்கேயே இரு என விட்டு விட்டுப் போய்விடுவேன்” எனவும் கண்டிப்பாகச் சொல்லி அந்தச் சிறுமியிடம் கடுமையாக நடந்துகொண்டான். அதைப் பார்த்த கணெசன், குழந்தையிடம் “ஏனம்மா உனக்கு அப்பா வாங்கிக் கொடுத்த பொம்மை வேண்டாமா. இந்தப் பொம்மை அழகாக நல்லா வெள்ளைநிறத்தில் பளிச்சென இருக்கே. உனக்குப்பிடிக்கலையா? எனவும் கேட்டான். அதற்கு அந்தப் பெண்குழந்தை சொல்லியது “மாமா பக்கத்து வீட்டு பாரதி ஒரு சிகப்புச் சட்டைபோட்டு ஒரு பெரிய பொம்மை வைத்திருக்கிறாள். அதை எனக்குக் காட்டக்கூட மாட்டேன் என்கிறாள். என்னுடைய பொம்மை சின்னதாக, சாதாரணமாகத்தான் இருக்கிறது. இப்போ இந்தப் பொம்மையை பார்க்கக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு இது வேண்டாம். பாரதிவைத்திருப்பதுபோல் அந்த மாதிரி அழகான, சிவப்புச் சட்டை போட்ட பெரிய கண்களுடன். தலை நிறைய வெள்ளநிறமுடியுடன் இருக்கும் பொம்மைதான் வேணும். இந்தப் பொம்மையை நான் தூக்கிப் போட்டுவிட்டேன். இது இப்போ ஆயாச்சு. எனக்கு வேண்டாம்” என தீர்மானமாகவே சொல்லியது. ராகவனுக்கு அந்தக் குழந்தையின் பேச்சு என்ன சொல்லியதோ தெரியவில்லை, கணேசனுக்கு அந்தக் குழந்தையின் முகத்தில் பவானியையேப் பார்த்தான். மனதுக்குள் பவானியிடம் பேசிக்கொண்டே, வெளியில் குழந்தையிடம் சொன்னான் “வேண்டாம் அழாதே. நீ அப்பாவைப் படுத்தக் கூடாது. நான் உனக்கு நீ கேட்ட அந்தப் பெரிய சிகப்புச் சட்டைபோட்ட பொம்மையை வாங்கிக் தருகிறேன். இனிமேல் அழமாட்டாயே. சந்தோஷமா? எனவும் மென்மையாகக் கேட்டான். அவனைப் பார்த்த ராகவனி
டம் “பாவம்டா குழந்தை ஆசைப்படுகிறாள். நம்மால் முடிந்தது. எனக்கும் வேறு யாருடா இருக்கா. எனக்கு இனிமேல் உன் குழந்தைதான் எனக்கு சந்தோஷம் கொடுக்க வேண்டும். இனிமேல் நானும் அம்மாவும் தான் வாழப்போகிறோம். பவானியும் குழந்தையும் இனிமேல் அவளுடைய அத்தையுடனும், அத்தானுடம்தான் இருக்கப் போகிறார்கள். பவானிக்கு அவர்களுடன் இருக்கத்தான் விருப்பமாம். இன்றுதான் எனக்குக் கடிதம் எழுதி, அவளையும் குழந்தையையும் அவர்களுடனேயே இருக்க அனுமதிக்கும் படி கேட்டிருக்கிறாள். இஷ்டமில்லாதவளைக் கட்டாயப் படுத்தினால், நமக்கும் வேதணைதான் மிஞ்சும். வா போகலாம்” எனச் சொல்லிக் கொண்டே வீட்டிற்குக் கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவுடன், தன்னுடைய தீர்மானத்தை சுருக்கமாக பரணிதரனுக்கும், பவானிக்கும் தெரிவித்து விட்டான். அவனின் கடிதத்தில் தன் கருத்தை மிகவும் நாகரீகமாகவே தெரிவித்து விட்டான்.
“பரணிதரன், பவானிக்கு,
உங்களின் விருப்பப்படியே உங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பவானிக்கு முழு சுதந்திரமும் உண்டு. நம்மை ஆண்டவன் இவ்வுலகுக்கு அனுப்பியதே தனி மனிதன் மட்டுமின்றி, தன்னைச் சார்ந்தவர்களும், தன்னைச் சுற்றியிருப்பவர்களுடன் இனைந்து, புரிந்து ஒருவருடன் ஒருவர் சினேகமாகவும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றுதான். தனி மனிதன் ஒருவனின் சுகத்திற்காக, மற்றவர்களின் வாழ்க்கையை நரகமாக்குவது சரியல்ல. என்னுடைய வாழ்க்கையில் கொஞ்ச காலம் பவானி என்ற இன்பத் தென்றல் வீசியது. இப்போது அது திசைமாறிப் போகிறது. எல்லாம் ஆண்டவன் சித்தம். என்னுடன் கொஞ்ச காலம் பவானி வாழ்ந்ததே எனக்கு அபரிமிதமான இன்பத்தை அளித்தது. இனி என் காலம் பூராவும் நான் அந்த இனியநினைவுகளுடனே இருந்து விடுவேன். எந்த காரணத்தாலும், உங்களின் மீது எனக்கு எந்த வருத்தமோ வேறு விதமான ஏமாற்றமோ இல்லை. எங்கிருந்தாலும் பவானியும் ராஜாவும் சௌக்கியமாக எல்லா நலங்களுடனும் வாழ வேண்டுமென்பதே என்னுடைய பிராத்தனையாகும். அவர்களிருவரின் வாழ்க்கையும் பரணிதரனின் நிழலில் பிரகாசமாக இருக்கும் என பரிபூரண நம்பிக்கை எனக்கு உண்டு. பவானிக்கு நல்லதொரு இன்பமான வாழ்வு கொடுக்க முன்வந்த பரணிதரன் உண்மையிலேயே ஒரு உத்தமர்தான். அவருக்கு என் இதயங்கலந்த நன்றியும் வாழ்த்துக்களும். இனிமேல் நீங்கள் இருவரும் எந்தவிதமான மன உறுத்தலின்றி, சுகமான இல்லற வாழ்வின் எல்லா வசந்தகளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டுமென என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
பரணிதரன் பவானியின் புது வசந்த வாழ்க்கைக்கு ஒரு ஜோதியாக இருக்க வேண்டும்.” எனவும் முடித்து அவர்களுக்கு அனுப்பி வைத்தான்.
அட! இந்தக் கதையையும் இன்று படித்தேன். இவ்வளவு நீண்ட கதையைப் படிக்கிறேன் என்று அதிகம் அலுக்காத வகையில் நல்ல நடை. வாசிப்பின் ஈர்ப்புப் பெரும்பாலும் குறையாமல் இருக்கும்படி tension and conflict போன்றவை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. பிறர் தொடத் தயங்கும், அஞ்சும் விளிம்புகளில் விளையாடும் கதை பிறகு அதனை அனாயசமாகக் கடக்கிறது. அந்தத் தொடர் ஈர்ப்புக்கு இதுவும் கூடக் காரணமாக இருக்கலாம். இன்னும் இப்படி எத்தனை கதைகளை ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? (என்னைக் கேட்டால் கொஞ்சம் மானே தேனே எல்லாம் போட்டு இதனை ஒரு நல்ல திரைப்படமாகக் கூட எடுக்கலாம் என்பேன்).
ReplyDeleteஅன்பு மகன் செல்வா,
Deleteஉன்னுடைய ஊக்கமான பரிந்துரையைப் படித்தேன். என் மனதில் ஒரு நாள் ஒரு சிந்தனை ஏற்பட்டது. எதனால் இன்றைய காலகட்டத்தில் இத்துனை விவாகர இரத்து வழக்குகள் வருகின்றன. இருமனமும் ஒத்து வாழ்வதுதான் இனிமையான இல்லறவாழ்வு. இதில் ஒரு மனம் மாறினாலும், வாழ்வு துறவறம்தான். இருவரும் அன்னியர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்காமல், தங்களுக்கேயே இருவருடைய மனதை திறந்து பேசிக்கொண்டார்களென்றால், இருவரின் வாழ்வும் சுகமாகுமே. என்னுடைய நினைவலைகளில் எழுந்த ஒரு பின்னலாடைதான் என் கற்பணைக் கதை. இது உன்னுடைய எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இனைந்து இருப்பது எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.
உன்னுடைய மற்ற வழிகாட்டிகளையும் நான் இனி எழுதும் என் கதைகளில் பின்பற்றுவேன்.
உன்னுடைய ஊக்குதல் எனக்கு என் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும்.
என் அன்பு ஆசிகள் பலப்பல.
உன் அன்பு அம்மா.