ரேவதி இனி என் மகள்
(ஜெயரமணி)
அன்று வக்கீல் குமாஸ்தா ரங்கனின்
வீட்டில் ஏகப்பட்ட சத்தம். அவருடைய
சம்பந்தியான சபாபதி, அவரிடம் மிகவும் கோபமாகவும் வருத்தத்துடனும் பேசிக்
கொண்டிருந்தார். அவருக்கு தன்னுடைய சின்னப்
பெண், ஒரே பெண், திருமணம் முடிந்து ஒரு வருட காலத்துக்குள் விதவையானது தாங்கமுடியாத
துக்கம். ஆனால், அந்தத் துக்கம்
ரங்கனுக்கும் இருக்கும் என்பதை அவரால் உணரமுடியவில்லை. ரங்கனுக்கும் தன்னைக் கடைசி
காலம் வரை வைத்து பார்த்துக் கொள்ளுவான் என மிக ஆசையாக இருந்த மகன் சந்திரகுமார்,
திடீரென தன்னுடைய பணி நிமித்தம் வெளியூர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதில்
சென்ற அத்தனை பேரும் மரணமடைய, சந்திரகுமாரும் அதில் ஒருவனானான். யாரும் எதிர்பார்க்காத ஒரு விதி தன்னுடைய கோர
தாண்டவத்தை ஆட்டி விட்டுச் சென்று விட்டது.
ஒவ்வோருவரும் தங்களுடைய துக்கம்தான் பெரிது என எண்ணிக் கொண்டதால்,
குழப்பமும் வருத்தமும் மிஞ்சியது.
ரேவதி தாயற்றவள். அதனால், அவளுடைய சித்திக்கு எங்கே திரும்பவும்
தன்னுடைய மூத்தாள் பெண் தங்களிடம் வந்து விடுவாளோ எனவும், அப்படி அவளை தன்னுடைய
கணவர் வீட்டிற்கு அழைத்து வந்தால்,அதனால் தனக்கும் தன் பெண்களுக்கும் ஏதாவது
அநுகூலம் உண்டா? ஏற்கெனவே திருமணத்திற்கு
செலவு செய்ததில் கடன் இருக்கு. தனக்கும், ரேவதிக்குப் பின் இரண்டு பெண் குழந்தைகள்
இருக்கு. அத்தனைக்கும் தக்க வசதியோ,
வருமானமோ கிடையாது. சபாபதியும் ஒரு மத்திய
தர அரசாங்க ஊழியர். அவருக்கும் வயது
அதிகமாகி விட்டது. இன்னும் மூன்று
வருடந்தான் சர்வீஸ் இருக்கு. அதற்குள்,
தங்களுடைய ஒரு பெண்ணிற்காவது திருமணம் முடித்து விட்டால், சின்னவளுக்கு ரிடையர்
ஆகி வரும் பணத்தில் செய்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தாள். திடீரென மாப்பிள்ளை மரணம் ஆயிற்று. ரங்கனுக்கும் ஒரே பிள்ளைதான். வேறு குழந்தை
இல்லை. ரங்கனும் தன் மகனை சக்திக்கு மீறி
செலவு செய்து, இஞ்சினீயராக்கி விட்டார். அவனும், படிக்கும் போதே, காம்பெஸ்
செலக்ஷனின் தேர்ந்து, ஒரு பெரிய நிறுவனத்தின் பம்பாய் கிளைக்கு
அமர்த்தப்பட்டான். அவனுக்கும் ஐந்து
வருஷம் சர்வீஸும் ஆச்சு. அதனால், ரங்கன்,
மகனுக்குத் தக்க இடத்தில் பெண்பார்த்து, ரேவதியை மிகவும் பிடித்துப் போனதால்,
அவர்களிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், திருமணம் நிச்சயித்து
முடித்தும் இருந்தார். ரேவதியும் புருஷன்
வீட்டிற்கு வந்து, அங்கு எல்லாருடைய பிரியத்துக்கும், பாசத்துக்கும் ஆளானாள். மிகவும் அமரிக்கையான பெண். அவளும
சந்திரகுமாரும் மிகவும் அன்யோன்யமாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தார்கள்.
சந்திரகுமார் ஒரு பெரிய நிறுவனத்தில்
பணியாற்றியதால், அவனுக்கு கம்பெனியின் மூலம் அவனுடைய மனைவிக்கு நிறைய இழப்பீடும்,
மற்ற சலுகைகளும் கிடைக்கும் எனவும் சபாபதிக்கும் தெரிந்திருந்தது. அவனுடைய மனைவியோ, ரேவதியின் இழப்பால் ஒன்றும்
கலங்கி விடவில்லை. மாறாக, அவளுக்கு
வரக்கூடிய பெரிய பணத்தில்தான் குறியாக இருந்தாள்.
ரேவதியைத் தங்களுடன் கூட்டிச் சென்று விட்டால், அவளுக்கு வரக்கூடிய
பணத்தால், தன்னுடைய கடன் சுமை தீர்ந்து விடும்.
எல்லாம் அவளுடைய கலியாணத்திற்காக வாங்கிய கடந்தானே. பிறகு தன்னுடைய மூத்த பெண்ணுக்கும் அந்தப்
பணத்திலும், ரேவதிக்குப் போட்ட நகைகளையும் வைத்துக் கொண்டு முடித்து விட்டால்,
சின்னவளுக்கு இன்னும் இரண்டு வருஷம் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம் என தன்
மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.
அதனால், தான் ரேவதியிடம் மிகவும் பாசம் கொண்டவள் போல் நடித்து, மாப்பிள்ளை
போன துக்கம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாகவும், தன் கணவர் அதிர்ச்சியால் நிலை
குலைந்து இருக்கிறார் எனவும் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் எல்லாம் சொல்லி,
சொல்லி மாய்ந்து போனாள். அதோடு, இனிமேல்
ரேவதி தங்களுடந்தான் இருக்க வேண்டுமெனவும், அதுதான் அவளுக்குப் பாதுகாப்பு எனவும்
எல்லாரிடமும் சொல்லி வைத்தாள்.
ரங்கனுக்கும், சபாபதியின் இளைய
மணைவியின் குணம் நன்றாகத்தெரியும்.
கலியாணத்துக்கு முன்பே அவரிடம் சொன்னவள்தான். என்னுடைய மூத்தாள் ஒன்றும் அதிகமாக கொண்டு
வரவில்லை. வாழ்ந்தற்கு ஒரு பெண்ணைத்தான் வைத்து விட்டுப் போனாள். நான் தான் அவளை வளர்த்தேன். எங்களின்
வருமானத்தில், எங்களால் ரேவதிக்கு அதிகமாகச் செய்ய முடியாது. உங்களின் பையன் இஞ்சினீயர் எங்கிறீர்கள். அதற்குத் தக்கவாறு எங்களால் செய்ய
முடியாது. நீங்கள் பெண் அழகாக
இருக்கிறாள், பி.ஏ. வரைக்கும்
படித்திருக்கிறாள் எங்கிற ஒரே காரணத்தால்தான் உங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள
வேண்டும். வேறு எதுவும் எதிர்பார்க்காதீர்கள் என கட்டாயமாகச் சொல்லித்தான்,
திருமணத்திற்கு சம்மதித்தாள். ரங்கனும்
அந்த ஊரில் விசாரித்து, இப்ப அவர்கள் இருப்பதும் ரேவதியின் தாய் வழி வீடு எனவும்
தெரிந்து கொண்டாலும், எதையும் வெளியில் காட்டாது, தங்களுக்கு பெண்தான் முக்கியம்,
அவள் கொண்டு வரும் சீர் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் எனச் சொல்லி, கூடிய வரை
திருமணத்திற்கு தேவையான நகைகள், புடவைகள், மகனுக்குத் தேவையானவைகளை அவரே வாங்கிக்
கொடுத்து, கலியாணத்தை முடித்துக் கொண்டார்.
அதனால், அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.
மாறாக ரேவதியிச்ன் களையான முகமும், மாறாத புன்சிரிப்புமே அவரையும்,
மற்றவர்களையும் ஈர்த்த்து. வாழ்க்கையும்
சந்தோஷமாகவே இருந்த்து. ஆனால், விதியின்
விளையாட்டை யார் தடுக்க முடியும்.
பிள்ளையை இழந்து துக்கத்தில்
இருந்தவர்களிடம், கொஞ்சமும் கூசாது, ரேவதியின் சித்தி “இந்தத் துக்கிர்ப்
பெண்ணுக்கு செய்தது எல்லாம் வீணாகிப் போச்சு.
நீங்களாகவே வந்து பெண் கேட்டு எங்களால் அதிகமாக சீர் செய்து கொடுக்க முடியாது
என தெரிந்தும், இத்தனைச் சீக்கிரமாக
கலியாணம் செய்ததுகூட ஏன் என எனக்கு இப்பத்தான் புரிகிறது. உங்களின் பிள்ளைக்கு ஆயுள்பலம் அதிகம் இல்லை
எனத் தெரிந்த பின்னும், எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடினீர்கள். இப்ப
வேதனைப் பட்டு நிற்பது எங்கள் வீட்டுப் பெண்தானே.
நாள் பூராவும், பட்டுப் போன மரமாக இருக்கும் இவளைப் பார்த்துப் பார்த்து
இவளின் அப்பாவும் நாங்களும் துன்ப்ப்படவேண்டும்.
நாங்களும் தீவிரமாக விசாரிக்காது, உங்களைப் பார்த்து பெரிய மனிதர், நல்லவர்
என நினைத்துத்தால், சக்திக்கும் மீறி கடன் வாங்கி கலியாணம் செய்தோம். இப்ப வட்டிதான் ஏறுகிறது. வாழ்க்கை முடிந்து போச்சு” எனப் பலவாறு பேசி
அவரைத் துன்ப்ப் படுத்தினாள். அந்தச்
சமயம் ரேவதி அங்கு வந்து “சித்தி, என்ன பேசுகிறீர்கள். உங்களுக்கு இருக்கும்
இழைப்பை விட இங்கு இருக்கும் அவருடைய பெற்றோர்களுக்கு அதிகம்தான். அவர்களின்
வேதனைக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்.
அப்படிப்பட்டவர்களிடம், ஆதரவாக இதமாகப் பேசாது, உங்களின் பேச்சு எத்தனை
அனாகரீகமானது எனத் தெரியாதா? விபத்திற்கு
யார் காரணம் சொல்லமுடியும். அதில் சென்ற
அத்தனை பேரும்தான் இறந்து விட்டார்கள். அவர்கள் எல்லாருக்குமே ஆயுள்பலம் இல்லையா?
தயவு செய்து, ஏற்கெனவே நாங்கள் இங்கு துக்கத்தால் துடித்துக் கொண்டிருக்கிறோம்.
அதில் நீங்கள் வந்து நெருப்பு மாதிரி வார்த்தைகளை வீசாதீர்கள். நீங்களும் அப்பாவும் அன்று வந்து, என்ன செய்ய
வேண்டுமோ அதைச் செய்து விட்டீர்கள். அதற்கு மேல் உங்களுக்கு இங்கு எந்த வேலையும்
இல்லை. இனிமேல், என்னைப் பார்க்கவும் நீங்கள் வரவேண்டாம். உங்களுக்கென்று இரு
பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கவனியுங்கள்: எனக் கோபமாகவும், துக்கத்துடனும்
சொல்லி விட்டு, தன்னுடைய மாமனார், மாமியாரிடம் “அப்பா, அம்மா தயவு செய்து என் சித்தியின் பேச்சுக்கு எந்த
அர்த்தமும் கொள்ள வேண்டாம். நான் இந்தக் குடும்பத்துப் பெண்தான், உங்களை மரியாதை
இல்லாமல் இருப்பவர்களுக்கு இனிமே இந்த வீட்டில் இடம் வேண்டாம்.எனக்காக பொறுத்துக்
கொள்ளுங்கள். யார் எப்படி கூப்பிட்டாலும், நான் இந்த இடத்தை விட்டு, உங்களைத்
தனியாக தவிக்க விட்டு போக மாட்டேன்” என நிதானமாகவே சொன்னாள். அவளின் பேச்சைக் கேட்ட ரேவதியின் சித்திக்கு
தான் இங்கு வருவதை ரேவ்தியே விரும்பவில்லை எனவும் புரிந்தவுடன், “ரேவதி, என்னால்
உன்னையிப்படிப் பார்க்க மனம் தாளவில்லை. அதனால்தான் என் கோபத்தையும், வருத்தத்தையும்
சொன்னேன். என் மீது வருத்தப்படாதே”எனச்சொல்லி விட்டு, திரும்பினாள். அவளுக்குள்
தான் திட்டமிட்டபடி, ரேவதியின் கணவனுக்கு கிடைக்கும் இழப்புத் பணம் பூராவும் தான்
வாங்கிக் கொள்ளச் செய்த திட்டம் இனி முடியாது எனவும் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்
ரேவதியின் சித்தி சென்றபின், மெதுவாக
ரங்கனும் அவருடைய மனைவியும் அவளிடம் ““ரேவதி, எங்களை நம்பும்மா. சத்தியமாக நான் உன்னுடன் என் பிள்ளை நூறாண்டு
காலம் வாழ்வான் எனத்தான், உன்னைக் கலியாணம் செய்து கொண்டு, என் மருமகளாக கூட்டி
வந்தேன். என்னுடைய கெட்ட நேரம் உன்னையும்
பாதித்து விட்டது. என்னுடைய துக்கத்தை
விட, எனக்கு உன்னுடைய துக்கமும் தோற்றமும்தான் மிகவும் கவலையாக இருக்கு. நீ நன்றாக யோசித்துச் சொல், உன்னால் எங்களை
விட்டு, உன் அப்பாவுடனும், சித்தியுடனும் வாழ முடியுமா? உன்னை நான் என்று பார்த்தேனோ அன்றைக்கே உன்னை
என்னுடைய பெண்ணாகத்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என் மகனுக்கு விதி முடிந்து விட்டது. ஆனால், எனக்கு ஒரு பெண்ணாக நீ
இருக்கிறாய். எங்களுக்கு வேறுயாரும்
இல்லையம்மா. உன்னைப் பார்த்தாவது, எங்களுடைய மகன் இழந்த துக்கத்தை தீர்த்துக்
கொள்ளனும். எனக்குத் தெரியும் உன் சித்தி என்ன காரணத்திற்காக, உன் மீது இத்தனை
கரிசனம் கொண்டு பாசம் காட்டுகிறாள் என. அது உனக்கும் தெரிந்து இருக்கும். உன் அப்பா பாவம், இப்போ கடனாலும் கஷ்டப்
படுகிறார். சந்திர குமார் இருந்தால்,
நிச்சயம் அவன் உன் அப்பாவின் கடனுக்காக பணம் கொடுப்பான். நானும் தடுக்க
மாட்டேன். என்ன இப்ப அவன் இல்லை. ஆனால்,
அவனுக்கு வரும் பணத்தில், நீ உன் கலியாணத்திற்காக வாங்கிய கடனை அடைத்து விடலாம்.
அதற்கு நானே ஏற்பாடு பண்ணுகிறேன். உன்
விருப்பத்தைச் சொல், இங்கேயே எங்களுடனே எங்களுடைய பெண்ணாக இருக்க சம்மதமா?
நிதானமாகவே யோசி, அவசரம் வேண்டாம்” எனச்
சொல்லி, அவளுக்கும் யோசிக்க அவகாசம் கொடுத்தார்.
ஆனால் ஒரு முறை அவளுடைய அப்பா
சித்தியுடன் வந்து அவளைத் தங்களூடனே இருக்கும்படி கேட்டபோதும், அவள் அவரிடம்
தெளிவாக, , தான் இனிமே இங்கேயே இருக்க விரும்புவதாகவும், தன்னுடைய மாமனார்,
மாமியார் இருவரும் பிள்ளையை இழந்த துக்கத்திலிருந்து மீள வில்லை. நான் இங்கு இருப்பதுதான் அவர்களுக்கு கொஞ்சம்
ஆறுதல். மேலும், கம்பெனியிலிருந்து
அவருடைய முதலாளி வந்து பேசும் போது, எல்லாவற்றிற்கும் என்னுடைய மாமனார்
இருந்தால்தான் எனக்குச் தைரியமாக இருக்கும்” எனச் சொல்லி விட்டாள். வீடு
திரும்பும்போது, தன் கணவரிடம் “ரேவதியின் மாமனார் லேசுப்பட்டவர் இல்லை. வக்கீல்
குமாஸ்தாவாச்சே. குறுக்குப் புத்தி
நன்றாகத்தான் வேலை செய்யும். எங்கே ரேவதி
தம்முடனே வந்து விட்டால், வரும் பணத்தை நம்மிடம்
கொடுத்து விடுவாளோ என பயத்தால்தான் எனப் பலதும் சொல்லியும், ரேவதிக்கு வெறுப்பு
வருமாறும் செய்திருக்கிறர். அதனால்தான் அவள் நம்முடன் வராது அங்கேயே
இருக்கிறாள். யார் கண்ட்து. என்ன சொல்லி
வைத்திருக்கிறாறோ?”.
நடப்பதெல்லாம்
தெரிந்து, ரேவதி திடமாகவே இருந்தாள். . அது மட்டுமல்லாது, ஒரு நாள் தன் அப்பாவைப்
பார்த்து, தன்னுடைய திருமணத்திற்காக அவர் செலவு செய்வதற்கு வாங்கிய கடன்கள் பற்றிய
விபரங்களையும் தெரிந்து கொண்டாள். தன்னுடைய மாமனாரிடம் தன்னுடைய கலியாணத்திற்கு
தன்னுடைய அப்பா வாங்கிய கடன் எவ்வளவு எனவும் சொல்லி விட்டாள். அதனால், பணம்
வந்தவுடனேயே, அவர்கள் கேட்பதற்கு முன்பே, ரங்கள் அவர்களிடம் கடனுக்கானப் பணத்தைக்
ஊராரின் முன் வைத்துக் கொடுத்து விட்டார். அது மட்டு மல்லாது, ரேவதியின் தாய் வழி
மனிதர்களையும் வைத்துக் கொண்டு, ரேவதி தன்னுடைய தாய்வழியில் தனக்குச் சொந்தமான
வீட்டில் அப்பா,சித்தியும் தங்களின் பெண்களுடன் வாழலாம். அதற்காக தனியாக வாடகை என எதுவும்
வேண்டாம். ஆனால், அந்த வீட்டில் மேல்
எந்தவிதமான கடனோ, அல்லது அதனை விற்கவோ அவர்களைத் தடை செய்து விட்டாள். அவர்களும் புரிந்து கொண்டாள் ரேவதி தன்னை
நம்பவில்லை என்பதை.
சந்திரகுமார் காலமாகி, நாங்கைந்து
மாதங்கள் முடிந்தன. அப்ப, காலேஜ்
திறக்கும் நேரம் வந்து விட்டது. அதற்கு
முன்பாகவே, ரேவதியை தன்னுடைய சீனியர் வக்கீலின் உதவியுடன், அரசு சட்டக் கல்லூரியில்
சேர தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
அதற்கு முன்பாக எழுத வேண்டிய பரீட்சைக்கும் அவள் படிக்க வசதியாக ஒரு
டியூஷனுக்கும் ஏற்பாடு செய்து விட்டார்.
அதனால், ரேவதி தினமும் அங்கு சென்று தன்னுடைய எதிர்காலத்திற்கு தேவையான
படிப்பை படிக்க தயாரானாள். அனுமதி
தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், சட்டக் கல்லூரியிலும் சேர தேவையான பணத்தையும்
கட்டினார். அனுமதி பாரத்தில், ரேவதியைத் தன்னுடைய மகள் என்றே குறிப்பிட்டார்.
அதைப் ;பார்த்த ரேவதிக்கு கண்களில் நீர் வழிந்த்து. அதைப் பார்த்த ரங்கன்
“எதுக்கம்மா இப்போ மனம் கலங்குகிறாய். இனிமேல் நீ தைரியமாக இருக்க வேணும்.
உன்னுடைய எதிர்காலத்தில் நீ யாருடைய தயவிலும் இருக்கக்கூடாது. உன் சுய பலத்தில் இருக்க வேண்டும்.
அதற்காகத்தான், நான், என் சீனியர் சொன்னபடியே உன்னை சட்டக் கல்லூரியில் சேர்க்கப்
போகிறேன். நீ நாங்கு வருஷங்கள் படித்து
முடித்தபின் யாருடைய நிழலிலும் நீ நிற்க வேண்டாம். இந்தப் பாரத்தில் உன்னை
என்னுடைய அபிமான, சுவீகார பெண் என்றே குறிப்பிட்டு உள்ளேன். அது மட்டுமல்ல,
சீனியரின் யோசனையுடன் என்னுடைய சொத்திற்கும், இந்த விட்டிற்கும் இனி நீ தான்
எனக்குப் பின் உரிமையுள்ளவள். என்னுடைய
தாயாதிக்காரன் யாரும் இதில் நுழையக் கூடாது. இனிமேல் சட்டப்படிநீ என் மகள்தான்”
எனப் பிரியமாகச் சொல்லி, அவளின் கண்களில் வழிந்த நீரைத் துடைத்து விட்டார். அவரின்
அன்பையும் பாசத்தையும் புரிந்து கொண்டாள்.
அன்று முதல் அவள் தன்னுடைய தகப்பனாரை விட, ரங்கனையேத் தன்னுடைய தகப்பனாராக
நினைத்துக் கொண்டாள். அதனால், அவளுக்கு மனதிலும் நிம்மதி உண்டாயிற்று. மாமியாரும்
ஒரு தாயாக மாறிவிட்டாள். தாயற்றவளுக்கு
ஒரு தாயும் கிடைத்து விட்டார்.
ஆண்டுகள் ஓடின. ரேவதியும் தன்னுடைய சட்டப் படிப்பை முடித்து,
ரங்கன் வேலை செய்த அந்த சீனியர் வக்கிலிடமே ஜுனியராகச் சேர்ந்து விட்டாள். ரேவதிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்க்கவும்
ரங்கன் தயாரானார். அப்போதுதான், அவர் தன்னுடைய வக்கீலிடமே அதுபற்றி ஆலோசனையும்
கேட்டார். அவரும் நீ முடிவு
செய்திருப்பதுதான் சரி. நானே, இது பற்றி உன்னிடம் பேச வேண்டுமென இருந்தேன். நீ இருக்கும் வரை அவளுக்கு துனையாக
இருக்கலாம். உனக்குப்பின், சின்ன வயதில்,
திரும்பவும் அவள் தனியாளாக இருக்கக்கூடாது.
நானே உனக்கு ஒரு நல்ல பையனாகப் பார்த்துச் சொல்கிறேன். இப்போ நீ இது பற்றி
ரேவதியிடம் எதுவும் பேச வேண்டாம்.
இப்பத்தான் அவள் தன் தொழிலில் மிகவும் அக்கறையுடன் இருக்கிறாள். மிகவும் சூட்டிடையான பெண். ஒரு முறை சொன்னால்,
கற்பூரம் மாதிரி உடனே கிரஹித்துக்கொண்டு விடுகிறாள். பாரேன்,எனக்கு பேரும் புகழும் வாங்கிக்
கொடுக்கும் ஜூனியர் அவளாகத்தான்
இருப்பாள்” எனவும் பெருமையுடன் சொன்னார்.
அவருடைய ஆபிசில் நிறைய ஜுனியர்கள் இருந்தார்கள். ஒவ்வோரு
பிரிவு வழக்குகளுக்கும் அவர் தன்னிடமிருந்து இரண்டு, மூன்று ஜுனியர்கள் என
பிரித்துக் கொடுப்பார். அப்படி அவர்
கொடுக்கும் போதெல்லாம், அவரிடம் இருந்தவர்களில் மூத்தவனான அஸ்வத்தாமன், எப்பவும்
தன்னுடைய பிரிவில் ரேவதி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவான். அவனுடைய தந்திரத்தை
தெரிந்த பெரியவரும், அது பற்றி அதிகம் விசாரிக்காமல், வேலை முக்கியம் என இருந்து
விடுவார். அதனால், ரேவதியும்,
அஸ்வத்தாமனும் கூடிய வரை ஒரே இடத்தில் இருப்பார்கள். சில நாட்கள், வேலை விஷயமாக வெளியேச் செல்ல
நேர்ந்தாலும், அவன் ரேவதியைத் தனியாக அனுப்ப மாட்டான். மாறாக, தன்னுடனேயே அவளையும் அழைத்துச்
செல்வான். இருவருக்குமிடைய நல்ல நட்பும், புரிதலும் இருந்தது. அஸ்வத்தாமனின் மனதில், ரேவதியின்பால் காதலும்
ஏற்பட்டது. ரேவதியைப் பற்றி அரசல் பரசலாகத் தெரிந்ததை, அவளிடம் நேரில் கேட்டு
அவளைச் சங்கடப் படுத்தவும் அவன் விரும்பவில்லை.
சமயம் வரும் போது, பக்குவமாகத் தன்னுடைய விருப்பத்தை அவளிடம் சொல்லி,
அவளின் அன்பைப் பெறவும் காத்திருந்தான்.
ரேவதியும், அஸ்வத்தாமனின் அன்பையும், நட்பையும், அவ்வப்போது
வேலை விஷயமாக அவன் அவளுக்கு எடுத்துச் சொல்லுவதையும், தனக்கு எந்தவிதமான உதவி
வேண்டுமென்றாலும், முதலில் அஸ்வத்தாமனிடம்தான் கேட்பாள். அவனைப் பற்றி அவ்வப்போது
வீட்டிலும் பேசுவாள். சந்திரகுமார் காலத்திற்குப்பின், ரேவதி, தன்னுடைய
படிப்பில்தான்முழு கவனமும் செலுத்தி வந்தாள். அவளுக்கு இதமாக, ரங்கனும், அவருடைய
மனைவியும், ரேவதியிடம், எக்காரணத்தைக் கொண்டும், சந்திரகுமாரைப் பற்றி எந்த நினைப்பும்
எழாமல் பார்த்துக் கொண்டார்கள்.
இருவருக்கும் தங்களுடைய ஒரே மகன் இல்லாமல் போனது தாளமுடியாத
துக்கம்தான், ஆனால், அதைக் காட்டி,
ரேவதியின் மனதையும் வருத்தச் செய்வதில் அர்த்தமோ, நல்லதோ இல்லை எனவும் புரிந்து
கொண்டார்கள். அதனால்தான், வீட்டில் கூட அவனுடைய
படம் எதுவும் வெளிப்படையாக இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். தனிமையில் இருக்கும்
போது, பிள்ளையின் ஞாபகம் வந்து இருவரும் மனம் கலங்கினாலும், ரேவதி வரும் நேரம்
அடங்கி விடுவார்கள். ரங்கன் தன் மனைவியிடம் “நம்முடைய துக்கம் பெருசுதான். ஆனால், போனவனை நினைத்து, இன்னும் இந்த உலகில்
வாழ வேண்டிய ரேவதியின் துக்கத்தை நாம் அதிகப் படுத்தக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் கொஞ்சமாக
அவனுடைய நினைப்பையும் ரேவதி மறக்கத்தான் வேண்டும். அவள் திரும்பவும் நன்றாக வாழ
வேண்டிய பெண். அது நம்முடைய கடமைதான். அதனால்,
நான் ரேவதி விஷயமாக என்ன செய்தாலும், நீ எந்த விதமான மறுப்பும் சொல்லக் கூடாது.
கூடியவரை என்னுடன் ஒத்தும் போக வேண்டும். ஊரார் எதுவும் சொல்வார்கள் என நினைத்து நீ மனம் கலங்கக்கூடாது. நமக்குப்பின் அந்தக் குழந்தைக்கு ஒரு
பாதுகாப்பும் வேண்டும், அதுவும் வாழ்க்கையை அனுபவித்து வாழ நல்ல துனையும்
வேண்டும். என்னுடைய அடுத்த வேளை, கூடிய சீக்கிரம் நம் பெண்ணுக்கு மாப்பிள்ளை
பார்த்து கலியாணம் செய்ய வேண்டியதுதான். ஊருக்கு அவள் நம்முடைய மருமகளானாலும்,
என்று அவள் இங்கு வந்தாலோ அன்று முதலே என் மனதில் அவளும் ஒரு மகளாகத்தான்
இருந்தாள். நாம் மகனுடன் வாழவில்லை. மகளுடன் வாழுகிறோம்” எனச் சொல்லி, தன்னுடைய
முடிவுக்கும் மனைவியைச் சம்மதிக்க வைத்தார்.
. அவரும் ரேவதியும், அஸ்வத்தாமனும் சினேகமாக இருப்பதை
தெரிந்து கொண்டார். அதனால், ஒரு நாள் அவர்
ரேவதியிடம் அவனைப் பற்றி விசாரித்தார். அவளிடம் பேசியபின், அவளுக்கு
அஸ்வத்தாமனிடம் ஒரு பிடிப்பும் இருப்பதைப் புரிந்து கொண்டார். அதற்குத் துனையாக
ஒரு சமயம் அஸ்வத்தாமன் ஒரு கேஸ் விஷயமாக வெளியூருக்குச் சென்ற போது, அங்கு திடீரென
இரு சாதியினருக்குள் கருத்து வேறு பாடு பெரிசாகி, ஊரில் போக்குவரத்து இரத்து
செய்து விட்டார்கள். வழியில் இருந்த வாகனங்களுக்கும் சேதம் செய்வதாக டிவி
செய்தியில் கேட்டவுடன், அந்த ஊருக்குத்தான் அஸ்வத்தாமன் சென்றிருப்பதாகவும்,
அதுவும் அவன் மட்டும் தனியாக தன்னுடைய காரில் சென்றிருப்பதாகவும் சொல்லி, அவனுக்கு
ஏதுவும் ஆபத்து வரக்கூடாது எனவும் கலங்கினாள். அதனால், ரங்கனிடமும் தன் வருத்தத்தையும்
வேதனையையும் சொன்னாள். அவரும் அவளிடம், “ஏனம்மா, நீ உடனேயே அவனுடைய செல்
போனுக்குப் பண்ணிப்பாரேன்” எனச் சொல்ல, அவளும் அப்படியேச் செய்தாள். தான்
பத்திரமாக, தன்னுடைய வேலை முடித்துக் கொண்டு, வரும் வழியில் ஒரு நண்பரைப் பார்க்கச்
சென்றதாகவும், அப்போதுதான் போக்குவரத்துத் தடையை தெரிந்து கொண்டதால், ஒரு நாள்
தங்கி, மறுநாள் வர முடிவு செய்ததைச் சொன்னதும், அவளுக்கு நிம்மதி வந்தது. அப்பவும்
ரேவதி அவனிடம் “அஸ்வத், தயவு செய்து நீங்கள் காரில் தனியாக வர வேண்டாம், காரை
அங்கேயே விட்டுவிடுங்கள். உங்கள் நண்பரிடம் சொல்லி, இன்னும் இரண்டு நாட்கள்
கழித்து, அவர் வேறு ஒரு டிரைவரைப் போட்டு அனுப்பட்டும். நீங்கள் இன்று இரவே
பிளைட்டில் வந்து விடுங்கள்: எனவும் தன்னுடைய ஆற்றாமையைத் தெரிவித்தாள். அதைக்
கேட்டவனும் :ரேவதி, நீ நினைப்பது போல் இங்கு அத்தனை தீவிரமாக இல்லை. ஆனாலும்,உன் சந்தோஷத்திற்காக, நான் காரை இங்கேயே விட்டு
விட்டு, பிளைட்டில் வருகிறேன். இப்ப சந்தோஷந்தானே” எனச் சொல்லி, அப்படியே
செய்யவும் செய்தான். அவனுடன் பேசிய பின் தான் ரேவதியின் முகத்தில் சிரிப்பும்,
சந்தோஷமும் வந்தது.அஸ்வத்தும் தான் ஊருக்குத் திரும்பியவுடனேயே, ரேவதியுடன்
தொடர்பு கொண்டு பேசியபின் தான் ரேவதியின் முகம் தெளிந்தது. அவளும் ரங்கனிடம் “அப்பா, அஸ்வத் பிளைட்டில்
திரும்பி வந்து விட்டாராம்: எனவும் சொல்லி தன்னுடைய நிம்மதியையும் காட்டிக்
கொண்டாள். அவளின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும், நிம்மதியையும் பார்த்த
ரங்கனுக்கும் ரேவதியின் மனதில் அஸ்வத்தின்பால் ஒரு பற்றும் பரிவும் இருப்பதை
தெரிந்து கொண்டார். அதனால் அவரும் ரங்கனுக்கும், தன்னுடைய முடிவை செயல் படுத்த
நேரம் வந்து விட்டது எனவும் தெரிந்து கொண்டார்.
அவருடைய சீனியர்
வக்கீலின் யோசனையுடன், ரங்கன் அஸ்வத்தாமனைத் தனியாகச் சந்தித்தார். அவரிடம்
ரேவதியின் கடந்த காலத்தில் நிகழ்ந்த துக்கத்தைச் சொல்லி, அந்த நாளிலிருந்து ரேவதி
தனக்கு ஒரு மகளாதையும் சொல்லி, இப்போ தான் ஒரு தகப்பனுடைய கடமையைச் செய்ய வேண்டிய
கட்டத்தில் இருக்கிறேன். எனக்குத்
திரும்பவும் ரேவதிக்கு ஒரு கலியாணம் செய்து, அவளுக்கு வாழ்நாள் பூராவும் ஒரு நல்ல
துனையை சேர்த்துக்கொடுக்க வேண்டும். அவருடைய மனதில், ரேவதியின் எதிர்காலம், நன்றாக
இருக்க வேண்டுமானல், அவளை அஸ்வத்தாமனுக்கே உரிமையுள்ளவளாக வேண்டும்” என தன் மனதில்
இருக்கும் ஆசையையும் சொன்னார். அவரின் மனதில் இருப்பதைத் தெரிந்தவுடனேயே,
அஸ்வத்தாமன் மிகவும் குதூகலமடைந்தான்.
அவரிடம் “மாமா, நானே உங்களிடம் வந்து ரேவதியை திருமணம் செய்து கொடுங்கள்
எனக் கேட்கத்தான் இருந்தேன். அது விஷயமாக, நான் என் சீனியருடனும் பேசி அவருடைய
ஆசியுடனேயே உங்களைக் கேட்க வேணும்னு இருந்தேன். ஆனால், நீங்களே என்னிடம் கேட்டது
மிகவும் சந்தோஷம். நான் இன்னும் ரேவதியின் மனதில் என்ன இருக்கு என்பதை தெரிந்து
கொள்ள முடியவில்லை. அவளிடம் அவள் மனம்
தெரியாமல், எதுவும் பேசவும் யோசனையாக இருந்தது. நீங்களே இது பற்றி ரேவதியிடமும்
சொல்லி அவளுடைய மனதையும் தெரிந்து கொண்டு நாம் மேலே என்ன செய்வது எனவும் முடிவு
செய்யலாம். என் பெற்றோரைப் பற்றி நீங்கள்
ஒன்றும் கவலைப் பட வேண்டாம். நான்
அவர்களிடம் ஏற்கெனவே என் மனதில் இருக்கும் ஆசையை சொல்லி ரேவதியும் சின்ன வயதில்
திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ஒரு விபத்தில் கணவரை இழந்தவள் எனவும் சொல்லி
இருக்கிறேன். என்னுடைய அத்தை ஒருவர்
சின்னவயதில் ரேவதியின் நிலையில்தான் இருந்தார். அவருக்கு என் பெற்றோர்தான் தீவிர
முயற்சி செய்து, அவருக்கு இரண்டாம் திருமணம் நடத்தி, இப்போ அந்த அத்தையும்
சந்தோஷமாகத்தான் இருக்கிறார். அவர்களுக்கும் நான் ரேவதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட
துன்பத்தைச் சொல்லி வைத்திருக்கிறேன். அவர்களுக்கும் ரேவதியின் ஆரம்ப இழப்பையும்
தெரியும். அவர்களுக்கும் அப்படி துன்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணை, தங்களுடைய
வீட்டிற்கு வாழ அழைத்து வருவது முழுச் சம்மதம். நான் அவர்களிடம் பேசி, உங்களின்
யோசனையையும் சொல்லி, ஒரு நல்ல முடிவுக்கு வரலாம்.
மேலும், என் அப்பா, அம்மா, என்னுடைய சீனியரின் பேச்சை எப்பவும் தட்டமாட்டார்கள். அதனால், நாம்
இந்த விஷயம் சினியருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம், நீங்கள் நிம்மதியாக,
ரேவதியின் சம்மதத்தை பெருங்கள்” எனவும் சொன்னான். அவரும் அவனிடம் நீயும் இது
விஷயமாக ஜாடையாகப் பேசி ரேவதியின் மனதில் என்ன ஆசை இருக்கு எனப் புரிந்து கொள்.
முடிந்தால், உன்னுடைய விருப்பத்தை அவளுக்குச் சொல்லி, அவளையும் ஏற்றுக் கொள்ளச்
செய்” எனவும் பதிலாகச் சொல்லிவிட்டு, தன் வீட்டிற்கு கிளம்பினார்.
ஒரு சமயம் தங்களுடைய அலுவல் காரணமாக, அஸ்வத்தாமனையும்,
ரேவதியையும் வெளியூருக்கு அனுப்பினார் சீனியர் வக்கீல். அங்கு இரு நாட்கள் தங்கும்படியாக இருக்கும்
என்பதையும் சொன்னார். ரேவதியும் வீட்டில்,
தன்னுடைய அப்பா, அம்மாவிடம் சொல்லி, சீனியரின் சொல்படி, தானும் அஸ்வத்தாமனும்
இருநாட்களுக்கு வெளியூர் செல்ல வேண்டுமெனச் சொன்னாள். அதற்கும் ரங்கன் “அதனால் என்னம்மா. ஆபீஸ் வேலை என்றால், போகத்தான் வேண்டும்.
மேலும் தனியாகப் போகப்போவதில்லையே.
துனையுடன் தான் செய்கிறாய்.
சந்தோஷமாகப் போய் விட்டு வாம்மா: என்ச் சொல்லி, சந்தோஷமாக அனுப்பி
வைத்தார். அஸ்வத்தாமனும், அவருடைய
வீட்டிற்கே வந்து, தன்னுடைய காரிலேயே ரேவதியையும் அழைத்துச் சென்றான். இருவரையும்
அனுப்பி வைத்த ரங்கன், மனசுக்குள் “பகவானே, இந்தப் பயணத்தில் ரேவதியின் மனதில்
நல்ல முடிவு வர வேண்டும். கூடிய
சீக்கிரம், எங்களின் ஆசைப்படி, அவள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்க
வேண்டும்.” எனவும் வேண்டிக் கொண்டார்.
எப்பவும் இருவரும் காரில் போகும்போது, பாட்டு ஓடிக் கொண்டே
இருக்கும், அத்துடன் அஸ்வத்தும் இனைந்து
பாடிக்கொண்டிருப்பான். இந்த முறை, முதல்நாள் தன்னுடைய ஆடியோ செட் ரிப்பேர் ஆனதால்,
அதனைச் சரிசெய்ய கொடுத்திருந்தான்.
திடீரென சீனியர் தன்னையும் ரேவதியையும் ஊருக்குப் போகச் சொன்னவுடன், ஆடியோ
செட் நினைவில் இல்லை. பாதி வழியில், ரேவதி
ஆடியோவை பார்த்து, அவனிடம் “உங்களின் செட் இன்னும் சரியாகவில்லையா?” எனக்
கேட்டவுடந்தான், அவனுக்கும் தான் அதனைப் போய் வாங்கவில்லை என நினைவுக்கு
வந்தது. “சாரி ரேவா,நான் அதை மறந்து
விட்டேன். சீனியர் திடிரென கூப்பிட்டுதால்
எல்லாம் மறந்து விட்ட்து. இப்ப என்ன செய்வது, பயணத்தில் அலுப்புத் தெரியும் என்ன
செய்வது? எனச் சொல்லிவிட்டு, காரைச் செலுத்தினான். கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே, ரேவதி
தன்னையுமறியாமல் கானடா இராகத்தில் ஒரு பாட்டைப் பாடினாள். அன்றுதான், ரேவதியின் பாடும் திறமையை அஸ்வத்
தெரிந்து கொள்ள வாய்ப்பு வந்தது.
ரேவதியின் இசையுடன் ஒன்றிப்போன அஸ்வத்தும், அந்த இசைக்கு இனையாக விசில்
அடித்து பாட ஆரம்பித்தான். இருவரும் அப்படியே பாடிக் கொண்டு, ஆனந்தமாக பயணம்
தோடர்ந்தார்கள். வழியில், ஒரு மலைக்
கோவிலைக் கண்டார்கள். அது என்ன சுவாமி
கோவில் என ரேவதி கேட்க, அஸ்வத், தனக்கும் தெரியாது. தான் அடிக்கடி அந்த வழியில் வரும்போது அந்தக்
கோவிலைப் பார்த்திருப்பதாகவும், ஆனால் ஒருமுறைகூட அதன் அருகில் சென்றதில்லை: எனச்
சொல்லி விட்டு, காரை அந்தக் கோவிலுக்கு அருகில் நிறுத்தினான். வண்டியிலிருந்து
இறங்கியவன், ரேவதியையும் அழைத்துக் கொண்டு, அந்த மலைக் கோவிலை நோக்கிப்
போனான். அந்தக் கோவில் மிகவும்
புராதனமானது. அங்கு சென்றபொது, குருக்கள் மட்டுமே இருந்தார். அவர் தினமும் அந்தக் கோவிலுக்கு வந்து காலை
பூஜை செய்து விட்டு, அங்கேயே காத்திருந்து, உச்சிக் கால பூஜை முடித்துக் கொண்டு
போய்விடுவார். மீண்டும் மறுநாள்தான் வருவார்.
விசேஷ நாட்களில்தான், அந்தக் கோவிலுக்கு மக்கள் வருவார்கள். அன்று அதிசயமாக கோவில்
வாசலில் ஒரு கார் நின்று அதிலிருந்து இறங்கிவந்த இருவரைக் கண்டவுடன்,
குருக்களுக்கு திருப்தி வந்த்து. என்று
இன்று ஒரு ஐம்பது ரூபாயாவது தட்டில் விழும் எனவும் நம்பினார்.
வந்தவர்களுக்கு அந்தக் கோவிலைப் பற்றிச் புராதன கதைகளைச்
சொல்லிக் கொண்டே, நிதானமாக இருவரிடமும் பேர் நட்சத்திரம் கேட்டு அர்ச்சனை செய்து
கற்பூரம் காட்டினார். பிரசாத்துடன்,
இருவரையும் ஆசிர்வதித்து அனுப்பினார்.
அஸ்வத் தட்டில் குருக்களுக்கு திருப்தியாக தட்சினையும் போட்டார்.
குருக்களிடம் கற்பாரத்தை மட்டும் எடுத்துக் கொண்ட, ரேவதி அவர் கொடுத்த குங்குமம்,
புஷ்பத்தை வாங்காமல், அந்தக் கோவிலைச் சுற்றிப் பார்ப்பவள்போல் நகர்ந்து விட்டாள்.
விஷயம் புரியாமல் முழித்த குருக்களிடம், “என்னிடம் கொடுத்து விடுங்கள், நாங்கள்
சீக்கிரம் பக்கத்தூருக்கு போகவேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே, அவர் கொடுத்த
குங்குமம், புஷ்பத்தையும் எடுத்துக் கொண்டு ரேவதியை நெருங்கினான், அவளுக்கு முன் நின்று கொண்டு, தன் கைகளில்
இருந்த குங்குமத்தை தன் விரலில் எடுத்து மிகவும் ஆசையாகவும், பாசத்துடனும் அவளுடைய
நெற்றியில் வைத்து விட்டான், அத்துடன், கையிலிருந்த புஷ்பத்தையும் அவளின் தலையைச்
சூட்டினான். பதற்றத்துடனும், கண்களில் நீருடன் அவனைத் தடுத்த ரேவதியின் கைகளைப்
பற்றிக் கொண்டு “ரேவா, தடுக்காதே. இந்தக் கோவிலுக்கு வந்தவுடன், எனக்குள் எதோ ஒரு
குரல் சொன்னது போல் உணர்ந்தேன். என் மனதில் உன்னைத்தான் தேவதையாக வைத்து பூஜை
செய்து வருகிறேன். தயவு செய்து என் மனதை முறித்துவிடாதே. இந்தக் கோவிலில்
கேட்கிறேன் என் ஆசைக்கு இணங்குவாயா? இன்று மட்டுமல்ல, உன் வாழ்னாள் ;பூராவும் என்
கையால் உனக்கு பொட்டு, பூ வைக்க எனக்கு உரிமை தருகிறாயா?” என மிகவும் காதலோடு
அவளின் முகத்தைப் பார்த்துக் கேட்டான். அவன் வாய் சொல்லமுடியாது தவித்ததை அவன் கண்கள்
அவளிடம் சொல்லியது. ரேவதிக்கும் அவன் மீது
ஒரு பரிவும், பாசமும் இருந்தபோதிலும், தன்னுடைய நிலையை நினைத்து, தன் மனதைக்
கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். இத்தனை நாட்கள் அஸ்வத் தன்னுடன் எத்தனையோ
நாட்கள் தனியாகவும், மற்றவர்கள் எதிரிலும் பழகிய போதும், ஒரு நாள்கூட தன்னிடம்
முறை தவறி நடந்ததில்லை. ஆனால், இன்று அவன்
தன் மனதை வெளிப்படுத்த இல்லை. திடீரென அவன் தனக்கு குங்குமம், பூ வைத்தவுடன்,
ரேவதி நடுங்கவும் செய்தாள். துக்கம் தாங்காமல், கண்களில் நீர் வழியவும்,
அஸ்வத்தின் ஆசையைத் தெரிந்தும் பயத்துடன் நின்றாள். அவளின் நடுக்கத்தையும்,
பயத்தையும் பார்த்தவன் அவளின் கைகளைப் பற்றி கொண்டு “ரேவதி, பயப்படாதே. நான்
ஒன்றும் முறை தவறி நடப்பவன் இல்லை. ரொம்ப நாளாகவே, என் மனதில் நீதான் இருக்கிறாய்.
எனக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும், அதன் காரணமாக நான் உன்னை கைவிட்டு
வடுவேனோ எனத் தயங்காதே. என்னுடைய
பெற்றோருக்கு என் மனதில் இருக்கும் ஆசையைச் சொல்லி, உன்னைப்பற்றியும் சொல்லி,
உன்னை உரிமையுடன் என் மனைவியாக்கிக் கொள்ள அவர்களின் முழு சம்மதத்தையும் பெற்று
விட்டேன். உன்னைப்போல என்னுடைய அத்தை
ஒருவரும் சின்ன வயதிலேயே துனையை இழந்து தனியாக நின்றார். என்னுடைய பெற்றோர்தான் அவரிடம் பக்குவமாக பேசி,
அவருக்கு இரண்டாம் திருமணமும் செய்து, இன்று அவர் தன் கணவருடன் சந்தோஷமாக
இருக்கிறார். அதனால், நான் உன்னைப் பற்றிச் சொல்லும் போதே, என் பெற்றோர்கள் உன்னை
தங்களுடைய மருமகளாக ஏற்கச் முழு மனதுடன் காத்திருக்கிறார்கள். உன் தகப்பனாரும்
என்னிடம் பேசியிருக்கிறார். நான்
அவரிடமும் எம் ஆசையைச் சொன்னேன், அதற்கு அவருடைய முழு ஆதரவும் கிடைத்து விட்டது. அவருக்கும் உனக்கு திரும்பவும் ஒரு நல்ல
வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டுமென முயற்சியில் இருக்கிறார். இது பற்றி நம்முடைய சீனியருக்கும்
தெரியும். நீ பயப்படாதே, நமக்கு
எல்லாருடைய ஆசிகளும் இருக்கு, உன் மனம்தான் தெளிய வேண்டும்.” எனவும் இதமாகச்
சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு திரும்பவும் காருக்குச் சென்றான். பயணத்தையும் தொடர்ந்தார்கள்.
காரில் மௌனமாகவே ரேவதி இருந்தாள். அவளுக்கு மனதில் குழப்பமும், பயமும் இருந்தது.
அஸ்வத் தன்னை நல்லபடியாக வாழ வைப்பான் எங்கிற உறுதி இருந்த போதிலும், ஒருமுறை
விதவையான தான், திரும்பவும் திருமணம் செய்து கொள்வது சரியா, தர்மமா? அப்படி செய்து
கொண்டால், தன்னைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள் எனவும் பயந்தாள். அவளின் முகத்திலிருந்தே அவளின் மனதில் ஓடும்
நினைவுகளைத் தெரிந்து கொண்ட அஸ்வத், “ரேவா, இப்ப உன் மனதில் என்ன குழப்பம் என
எனக்குத் தெரியும். வாழ்வில் ஒரு முறை இழப்பை அடைந்தவர்கள். திரும்பவும் ஒரு நல்ல
வாழ்க்கைக்கு தயாராகக் கூடாது என ஏதாவது சட்டம் இருக்கா? சாதாரணமாக எழுதும்
பரிட்சைகளில் தவறி விட்டால், திரும்பவும் நாம் எழுதி அதில் தேர்ச்சி பெறுவது
சகஜமானது தானே. மேலும், இப்ப நாமிருப்பது
எந்தக் காலம், திருமணம் ஆகி, புருஷனுடன் வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட
பெண்கள் கூட, தன்னுடைய எதிர்காலம் அந்த உறவில் நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது என
தீர்மானித்தால், அவர்கள் சட்டத்தின் துனையுடன், பிரிந்து வேறு ஒரு வாழ்க்கை
அமைத்துக் கொள்ளவில்லையா? வாழ்க்கை என்பது
ஒவ்வோருவரின் தனிப்பட்ட உரிமை. அவர்களின் நல்ல வாழ்விற்காகத்தான் சட்டம் இருக்கே
தவிர, அவர்க்ளைத் துன்பத்தில் ஆழ்த்த இல்லை. உன்னுடைய கடந்த கால வாழ்வில் ஏற்பட்டது
ஒரு விபத்தால் வந்த விதிதான். அதில் உன்
கணவருடன் எத்தனையோ பேர்கள் மறைந்தார்கள்.
அதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் துன்பத்திலிருந்து மீண்டு,
வாழ வில்லையா? இப்போ நீ சொல்வாய் நானும் என் வாழ்க்கைக்கு ஆதரவாக சட்டம்
படித்திருக்கிறேன். என்னால், தனியாக
வாழமுடியும் என. அது ஒரு வாதம் என்றாலும்,
உனக்கு இத்தனை நாட்கள் ஆதரவாக இருந்த ரங்கமாமாவையும், மாமியையும் நினைத்துப்
பார். அவர்கள் ஒவ்வோரு நாளும்,
தங்களுக்குப் பின் உனக்கு யார் துனை? என எண்ணி, எண்ணி எத்தனை ஏங்குகிறார்கள்
தெரியுமா? மாமா என்னிடம் வந்து பேசும் முன்பே, நம்முடைய சீனியரிடம் கலந்து
பேசித்தான், உனக்கு திரும்பவும் ஒரு திருமணம் செய்வித்து, நீ சந்தோஷமாக வாழ்வதைப்
பார்க்கத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும், தங்களுடைய ஒரே
மகனை இழந்த போதிலும், தங்களுடைய துக்கத்தைத் தாங்கிக் கொண்டு, உன்னை எத்தனை
அன்பாக, பாசத்தோடு பரிவோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போ அவர்கள் வேண்டுவது என்ன உன்னுடைய
நிம்மதியான, பாதுகாப்பான ஒரு இனிமையான வாழ்க்கைதான். அவர்களை திருப்தி படுத்துவது
உன்னுடைய கடமை இல்லையா? அவர்கள் உனக்கு, ஒரு பெற்றோராக இருந்து செய்ய வேண்டிய
அத்தனைக் கடமைகளையும் செய்து வைக்கத் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த
அன்புத் தெய்வங்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமையும் உண்டல்லாவா? அவர்கள் உனக்குப் பெற்றோர் என்றால், நீயும்
அவர்களுக்கு மகள் தானே. தன்னைப்
பெற்றவர்களின் சந்தோஷத்திற்கு மகள் தடையாக இருக்கலாமா? நன்றாக யோசித்துப் பார்.
நானும் யோசிக்காமல், உன்னுடைய சம்மதமும் கூட கேட்காமல், உனக்குப் பொட்டும், பூவும்
வைத்த்தை நீ தப்பாக எண்ணாதே. என் மனதில்
எத்தனையோ நாட்கள் நீ குங்குமப் பொட்டு இல்லாமலும், சின்னதாக கருப்பு ஸ்டிக்கர்
பொட்டும், பூவுமின்றி நடமாடுவதைப் பார்த்து மனம் வாடியிருக்கிறேன் தெரியுமா? என்று
உன்னை முதல் முதல் நாள் அப்படிப் பார்த்தேனோ, அன்றே என் மனதில் உன் வாடிய
முகம் பதிந்து விட்டது. பிறகு சீனியர்,
தன்னுடைய ஜூனியர்சைப் பிரித்து, ஒவ்வோரு பிரிவுக்கும் ஒருவர் லீடராக போட்டு,
என்னையும் ஒரு லீடராக எடுத்த போது, என்னிடம் கேட்டார் “உன் குரூப்பில் எத்தனை பேர்
வேண்டும்” என. அதற்கு நானும் “எனக்கு அதிகமாக வேண்டாம். ஒருவர் மட்டும் போறும்” எனச் சொல்ல, அவரும்
சிரித்துக் கொண்டே, உனக்கு யார் வேனுமோ எடுத்துக் கொள் என என்னிடம் புதிதாக
வந்தவர்களின் லிஸ்டைக் கொடுத்தார். அதை நான் அதிக நேரம் பார்க்காமல், ஒரு வினாடியிலேயே
உன்னுடைய பெயரைச் சொன்னேன். அதற்கு சிரித்துக் கொண்டே, என்னுடைய சாய்ஸும் அந்தப்
பெண்தான் எனச் சொல்லி, என்னை அனுப்பி வைத்தார்.
அப்போதுதான் என்னிடம் தனியாகச் சொன்னார் நீ யார் என்பதையும், உன் வாழ்வில்
ஏற்பட்ட இழப்பையும் சொல்லி, நீ அந்த துன்பமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வர நான்
முயற்சி செய்ய வேண்டுமெனவும் சொல்லி அனுப்பினார். என் மனதை நான் திறந்து காட்டி
விட்டேன். இனிமேல், நீ தான் எனக்கு உன்
மனதில் இடம் உண்டா?எனத் தெளிவாக்க வேண்டும்” எனச் சொல்லி விட்டு, அந்த விஷயத்தைப்
பற்றி அதிகமாகப் பேசவில்லை.
அஸ்வத்தின் நிதானமான, தீவிரமான வாதங்களைக் கேட்ட
ரேவதிக்கும், தான் தன்னுடைய பெற்றோர்களைத் திருப்தி பண்ண வேண்டிய அவசியத்தையும்
புரிந்து கொண்டாள். ஆனாலும், பெண்
என்பதால், உடனேயே தன்னுடைய மனதில் ஏற்பட்ட சலனத்தைக் காட்டாது மௌனமாகவே வந்தாள்.
அவர்கள் வந்து சேர வேண்டிய ஊரும் வந்து, பார்க்க வேண்டியவர்களையும் பார்க்கப்
போனார்கள். அன்று முழுவதும் அவர்கள் இருவருக்கும் அலுவலகப் ;பணியே சரியாக
இருந்தது. இருவரும் தங்களுக்காக ஏற்பாடு
செய்திருந்த ஓட்டலில் தங்களுடைய ரூமில் தனித்தனியாக இரவைக் கழித்தார்கள். மறு நாள் காலையில் ரேவதி எழுந்த தன்னுடைய
காலைப்பணியை முடித்துக் கொண்டு, கிளம்ப தயாரானாள். ஆனால், அஸ்வத் காலையிலேயே எழுந்து வெளியே
போய்விட்டான் எனத் தெரிந்தவள், எங்கு போயிருப்பான் எனவும் புரியாமல்
காத்திருந்தாள். வந்தவனின் கைகளில்
மல்லிகைப்பூச்சரம் இருந்தது. அதைப்
பார்த்த, “இங்கு எந்த சாமி படம் இருக்கு பூ வாங்கி வந்திருக்கிறீர்கள்? எனச்
சிரித்துக் கொண்டே கேட்டவளிடம் “என்னுடைய தேவதைக்குத்தான் இந்தச் சரம்” எனச்
சொல்லிக் கொண்டே, உரிமையுடன் அவளுடைய தலையில் பூவை வைத்து, அவளுடைய முகத்தைத்
தூக்கிப் பார்த்தான். அவனுடைய கண்களில்
பரவசம் பரவியது. அவளுடைய முகத்தில் எப்பவும் காணும் சின்னக் கருப்புப் பொட்டுப்
போய், அழகாக சிகப்புக் குங்குமத்தில் திலகம் போல் ஒரு பொட்டும்,
அதற்குக்கீழே,சின்னதாக விபூதியும் இருந்த்து.
அதைப் ;பார்த்தவனுக்கு ரேவதியின் மனதில் வந்த முடிவு தெரிந்து விட்டது.
அதனால் தன்னுயுமறியாமல் “ரேவா, இப்பத்தான் எனக்குத் திருப்தியாக இருக்கு. உன்னைப் இப்படி பார்க்க மாட்டோமா என எத்தனை
நாட்கள் நான் ஏங்கி இருக்கிறேன் தெரியுமா?
நேற்று நாம் சென்றகோவிலில் இருக்கும் தெய்வம்தான், உன் மனதில் இந்த
மாற்றத்தை கொடுத்தது. நாம் இருவரும்
இன்றும் அந்த்க் கோவிலுக்குப் போகலாம், வா?” என மிகவும் ஆசையோடு அவளைத் தன்னுடன்
சேர்த்து அனைத்துக் கொண்டான்.
அவனுடைய அனைப்பில்
ரேவதியும் தன்னை மறந்து இருந்தாள். தன்னிலை மறந்த நிலையில் இருந்த அஸ்வத்
ரேவதியின் முகத்தைத் தூக்கி ஆசையுடன் அவளின் கண்களையும், களையான முகத்தையும்
நோக்கி, மெதுவாகத் தன் முகத்தையும் மிக அருகில் எடுத்துச் சென்று, மெதுவாக அவளின்
பவழ இதழ்களைத் தன்னுடைய உறுதியான மெல்லிய இதழ்களால் சிறைப் படுத்தினான். அந்தச்
சிறையில் ரேவதியும் இனைந்தே இருந்தாள். மெதுவாக சுயநிலைக்குத் திரும்பிய அஸ்வத்
“ரேவதியைப் பார்த்து, என்னுடைய உரிமையைக்கு முத்திரை பதித்து விட்டேன்” எனவும்
சொல்ல, நாணம் மிகுந்த ரேவதியும் அவனைப் பார்க்க வெட்கப்பட்டு, தன் முகத்தைக்
கைகளால் மூடிக்கொண்டு, “உரிமை கொண்டாடுமுன் சொந்தக்காரரிடம் அனுமதி கேட்க
வேண்டாமா?” எனவும் கேட்டாள். அவளின்
முகத்தில் இருந்த சந்தோஷத்தையும் நாணத்தையும் பார்த்தவனும் முகத்தை மூடியிருந்தவளின் கைகளை விலக்கியபடியே, சந்தோஷத்துடனே,
“உரிமை கொண்டாடும் சொத்துக்களை எனக்கு உரிமையாகத்தான் பத்திரப் பதிவு செய்ய,
முத்திரை வைத்தேன். சொத்துக்களை உரிமை கொண்டாட முத்திரைதாளில் தானே பதிவு
செய்கிறோம். வக்கீலான உனக்குத் தெரியாதா” எனவும் சிரித்தபடியே கேட்க,அவளும்
அவனுக்குச் இதமாகவே “ஆமாமாம், சொத்துக்களை உரிமை கொண்டாடும்போது, அதில் முத்திரைப்
பதிக்க அந்த சொத்துக்களிடம் அனுமதி கேட்பார்களா என்ன.” எனச் சொல்லி சிரித்தாள்.
அதற்கும் அஸ்வத் “என்னுடைய உரிமையை நான் உன்னிடம் கேட்காமலேயே எடுத்துக் கொண்டேன்
என்றால், அதற்கு நான் உன் மீது கொண்ட அளவில்லாத காதல்தான். அதனைச் சொல்வதற்கு
எனக்கு நேற்றுத்தான் காலம் கனிந்து வந்தது. இப்பச் சொல், என்னுடைய பரிசு உனக்குப்
பிடித்திருக்கா? எனக் கேட்டுக் கொண்டே, திரும்பவும் அவளுடைய இதழ்களைத் தேடினான். சிறிது நேரம் சென்றப்பின், “ரேவா, ஒரு நிமிஷம்”
எனச் சொல்லி, அவளைத் தன்னுடைய செல் போனில் போட்டோ எடுத்தான். “இது எதற்கு?” எனக்
கேட்டவளுக்கு, “இனிமேல், ரேவா எப்பவும் என் கண் எதிரில் இருப்பாள்” எனவும்
செல்லமாகச் சொல்லி, அவளையும் ஆனந்தப் பட வைத்தான்.
அவர்கள் வந்த வேலையும் நல்ல படியாகவே முடிந்து விட்டதால்,
அஸ்வத் அன்றே ஊருக்குக் திரும்பினான்.
போகும் வழியில், தாங்கள் சென்ற மலைக்கோவிலுக்கும் சென்று, தங்களுடைய ஆசையை
நிறை வேற்ற பகவானிடம் வேண்டிக் கொண்டு, சந்தோஷமாகத் திரும்பினார்கள். திரும்பி வந்தவர்களைப் பார்த்த ரங்கனும்
“என்னம்மா, போன காரியம் நல்ல படியாக முடிந்ததா?” எனச் கேட்டவரிடம் அஸ்வத்
சிரித்துக் கொண்டே “எங்களுடைய ஆபிஸ் வேலை மட்டுமல்ல மாமா, எங்களுடைய எல்லா
விஷயங்களுமே சந்தோஷமாக முடிந்தது
ரேவதியும் இனிமேல் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாள்: எனச் சிரித்துக்
கொண்டே சொல்லி விட்டு, தன் வீட்டிற்குத் திரும்பினான். அன்று ரேவதியும், தான் ஆபிஸ் கிளம்பு முன்,
ஞாபமாக நெற்றியில் சிவந்த நிறத்தில் குங்குமப் பொட்டும், கீழே சின்னதாக
வீபுதியையும் எட்டுக் கொண்டாள். அதைப் பார்த்த, அம்மாவும் அவளிடம் வந்து, அம்மன்
படத்தில். போட்டிருந்த மல்லிகைப்பூவையும்
எடுத்து ரேவதியின் தலையில் வைத்து, அவளுக்குத் திருஷ்டியும் கழித்தாள். அதைப்
பார்த்த ரங்கனும் “இன்றுதான் அம்மா, என் மகளை நிறைவாகப் பார்க்கிறேன்” எனச்
சொல்லி, தன்னுடைய சந்தோஷத்தையும் காட்டிக் கொண்டார்.அவர்களுடைய
சந்தோஷத்தைப்பார்த்த ரேவதிக்கும் தான் எப்படி இருந்தால் அவர்களுக்குத் திருப்தியாக
இருக்குமெனவும் புரிந்து கொண்டாள்.
அதனால், அவள் அப்பாவையும், அம்மாவையும் நிற்க வைத்து, நமஸ்கரித்தாள். “அப்பா, அம்மா நான் உங்களின் மகள். நீங்கள் எனக்காக செய்யும் எதையும் நான்
மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்” என ஜாடையாக, தான் இன்னோரு திருமணத்திற்கு
சம்மதம் என்பதை ஜாடையாகச் சொல்லி, வெட்கத்துடன் சின்னதாகச் சிரித்துக் கொண்டாள். வக்கீலுக்குப் படித்திருப்பதால், தன்னுடைய
முடிவை ஒரே வார்த்தையில் தெரிவித்த பெண்ணின் புத்திசாலித்தனத்தை நினைத்து ரங்கனும்
சந்தோஷமாக சிரித்துக் கொண்டே, அவளுடைய தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்தார்.
ஆபிசில் அவளுக்கு முன்பே வந்திருந்த அஸ்வத், தனக்குப் பிடித்தமான தோற்றத்தில் வந்திருக்கும்
ரேவதியைப் பார்த்து ஒரு நிமிஷம் சந்தோஷத்தால் திகைத்துப் போனான். பிறகு மெதுவாக விசில் அடித்தபடியே, தாங்கள்
முதல் நாள் காரில் பாடிய கானடா ராகத்தைப் பாடிக் காட்டி, தன்னுடைய திருப்தியையும்
காட்டிக் கொண்டான். அவர்களின் சந்தோஷத்தைக்
கண்ட சீனியரும் “என்னப்பா, உங்கள் வேலையெல்லாம் சக்சஸ்தானே?” எனச் சிரித்தபடியே
கேட்க, இருவருக்கும் அவருடைய கேள்வியில் இருந்த உட்பொருள் புரிந்ததால், மௌனமாக
தலையைக் குனிந்து கொண்டு, தங்களின் சந்தோஷத்தைக் காட்டினார்கள். அதைப் பார்த்த
சீனியர் “வெரி குட். எந்த முடியும் உடனடியாக எடுப்பதில்தான், நம்முடைய வெற்றியே
இருக்கு” எனச் சொல்லிச் சென்றார்.
ரேவதியின் பூரணமான சந்தோஷத்தைத் தெரிந்த ரங்கன்
தம்பதியினர், ஒரு நாள் மாலையில் சபாபதியின் வீட்டிற்குச் சென்று, அவரிடம் ரேவதி
தற்போது ஒரு வக்கீலாக இருப்பதாகவும், அவளுடன் இனைந்து பணியாற்றும் அஸ்வத்தாமன்
எங்கிற வக்கீலுக்கும் அவளுக்கும் ,திருமணம் செய்ய விரும்புவதாகவும், தங்களுடைய
இல்லத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலையில் நடக்க இருக்கும்
நிச்சயதார்த்த்த்திற்கு இருவரும் வரவேண்டுமெனவும் வேண்டிக் கொண்டார்கள். சின்ன வயதில் வாழ்க்கையில் துனையை ஒரு
விபத்தில் பறி கொடுத்த பின்,ஒரு நாள் கூட அந்தப் பெண்ணைப் பார்க்காமல் தான் இருந்ததையும்,
அவளுடைய இழப்பிற்கு ஆறுதலாகவும் தான் இல்லாமல் இருந்ததை நினைத்து சபாபதி கண்களில்
நீர் வழிய “ரங்கண்ணா,உண்மையிலேயே நீங்கள் மிகவும் பெரியவர். நான் உங்களின் முன் நிற்கக்கூட
தகுதியற்றவன். பெற்ற பெண்ணின் வாழ்வில்
அக்கறை காட்டாமல், என்னுடைய இரண்டாவது மனைவி, குழந்தைகள் எனவே இருந்து
விட்டேன். நானும் அவ்வப்போது ரேவதியின்
வாழ்க்கைக்கு நீங்கள் செய்து வரும் அத்தனை நல்ல காரியங்களையும் அறிந்துதான்
இருக்கேன். இப்போ, நீங்கள் என்னை வந்து
“உன்னுடைய மகள் ரேவதி” எனச் சொல்லி, அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைத்துக்
கொடுப்பதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து இருக்கிறீர்கள். உங்களின் நல்ல மனதைப் புரியாமல், என்னுடைய கடன்
சுமையை மனதில் வைத்துக் கொண்டு, உங்களிடம் நாங்கள் எத்தனை அனாகரீகமாக நடந்து
கொண்டோம்.
எங்களுடைய இழப்பை விட, உங்களுடைய இழப்பை எடை
போடமுடியாது. உங்களின் ஒரே மகனின் மறைவை,
மனதின் அடியில் புதைத்து விட்டு, உங்கள் வீட்டுக்கு வாழ வந்த ரேவதிக்காக நீங்கள்
ஐந்து வருடங்களுக்கு மேல் பட்ட சிரமத்தை நாங்களும் புரிந்து கொண்டோம். உங்களின் மகனுக்கு வந்த இழப்பு பணத்தில்
நீங்கள் ஒரு ;பைசாகூட உங்களுக்கென்று எடுத்துக் கொள்ளாமல், ரேவதியின்
திருமணத்திற்காக நான் வாங்கிய கடனையும் அடைத்து விட்டீர்கள். இன்று ஒன்றுமே
தெரியாமல், பச்சை மண் மாதிரி இருந்த ரேவதியை மேலும் படிக்க வைத்து, இன்று அவள் ஒரு
அந்தஸ்தில் இருக்கிறான் என்றால் அது உங்களின் கருனையால்தால். உண்மையிலேயே நீங்கள்தான் ரேவதியின் பெற்றோர்.
அந்த உரிமையைக் கொண்டாட எங்களுக்கு எந்த தகுதியும் இல்லை ஒரு பெண்ணை பெற்றால் மட்டும் ஒருவன் தகப்பனாகி
விட முடியாது. அவளுடைய ஒவ்வோரு நாளும்
அவளுடைய வாழ்வை சீராக்கி, செம்மையாக்குபவர்தான் உண்மையான தகப்பனார். அது
நீங்கள்தான். உங்களுடைய பெண் ரேவதி எனச்
சொல்லுங்கள். அதுதான் நியாயமானது” எனச் சொல்லி, தன் கண்களில் நீர் வழிய, ரங்கனின்
கைகளைப் பற்றிக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.
உணர்ச்சியால் தடுமாறிக் கொண்டிருக்கும் சபாபதியை அனைத்துக்
கொண்டே,
“சபாபதி, உங்களின் மேல் எந்த ஒரு குற்றமும் இல்லை. உங்களால் என்னுடைய மருமகளான ரேவதிதான், இன்று என் மகளாக இருக்கிறாள். அவள் உங்களுக்கும் மகள்தானே. உங்களின் ஆசிகள் அவளுக்கு வேண்டும். எதையும் நினைத்து குழம்பாமல், நீங்களும் என்னுடன் முன்நின்று நம்முடைய மகள் ரேவதியின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவோம். வாருங்கள்” என அழைத்து விட்டு, வந்தார். அவர்களும் ரேவதியின் திருமணத்தில் எல்லா விஷயங்களுக்குக் கூடவே இருந்து, ரேவதியை திருப்தி படுத்தினார்கள்.
“சபாபதி, உங்களின் மேல் எந்த ஒரு குற்றமும் இல்லை. உங்களால் என்னுடைய மருமகளான ரேவதிதான், இன்று என் மகளாக இருக்கிறாள். அவள் உங்களுக்கும் மகள்தானே. உங்களின் ஆசிகள் அவளுக்கு வேண்டும். எதையும் நினைத்து குழம்பாமல், நீங்களும் என்னுடன் முன்நின்று நம்முடைய மகள் ரேவதியின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவோம். வாருங்கள்” என அழைத்து விட்டு, வந்தார். அவர்களும் ரேவதியின் திருமணத்தில் எல்லா விஷயங்களுக்குக் கூடவே இருந்து, ரேவதியை திருப்தி படுத்தினார்கள்.
அடுத்த வந்த சில நாட்களியேலே, ரங்கனின் தீவிர
முயற்சியாலும், அஸ்வத்தின் பெற்றோரின் ஆதரவாலும், சினியருடைய ஆசிர்வாதத்தாலும்,
ரேவதி அஸ்வத் வாழ்க்கையில் இனைந்தார்கள். மருமகளாக வந்த ரேவதி, தன்னுடைய மகளானதையும்,
இன்று அந்த மகளால் தனக்கு ஏற்பட்ட மனத் திருப்தியை வெளிக் காட்ட முடியாத ரங்கனும்,
அவர் மனைவியும் கண்களில் நீர் வழிய,
மனதிற்குள் பகவானின் கருனையை நினைத்து மனம் கசிந்தார்கள். அங்கு வந்தவர்கள் எல்லாரும், ரங்கன்
தம்பதிகளின் பெரிய மனதை மனதாரப் போற்றி, உங்களைப் பார்த்துத்தான் மருமகளும் மகளாக முடியும் என
நாங்கள் புரிந்து கொண்டோம்:எனப் பெருமையாக அவரைப் பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment