(ஜெயரமணி)
அன்று காலை பத்து மணிக்கு மேல் சந்திரா, தன்னுடைய வீட்டிலிருந்து ஒவ்வோரு வாரமும் போகும் கருமாரியம்மன் கோவிலுக்குப் பயணப்பட்டாள். அவள் தன்னீட்டின் அருகிலுள்ள கோயம்பேடு பஸ் நிலைத்திற்குப் போய் அங்கிருந்தே கிளம்பும் பஸ்ஸில், ஏறி வசதியாக அமர்ந்து கொண்டாள். அவளுடைய சீட்டின் பக்கத்திலேயே ஒரு நடுத்தர வயதுப் பெண் ஒருத்தியும் அமர்ந்திருந்தாள். சாதாரணமாகவே சந்திராவுக்கு தன்னைச் சுற்றி இருப்பவைகளை அதிகமாகவே கவனிப்பவள். அதுமாதிரியே தன்னுடைய அருகில் இருந்த அந்தப் பெண்ணின் முகத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் தன்னுடைய முகத்தை கூடியவரையில் புடவைத் தலைப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள். அவளின் முதுகும் அவ்வப்போது குலுங்கியது. அதனால், சந்திராவுக்கும் புரிந்தது அந்தப் பெண் ஏதோ துன்பத்தில் இருப்பாள் போலிருக்கிதென்று. அப்போது கண்டெக்டர் டிக்கெட் கொடுக்கும் போதும் அந்தப் பெண் தன்னுடைய முகத்தைத் தூக்கவோ தான் எங்கு போகவேண்டுமென்பதையோ சொல்லாமல் இருக்க, சந்திரா அவளுக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட்டுக்கள் கருமாரியம்மன் கோவிலுக்கு எனச் சொல்லி, வாங்கிக் கொண்டாள். பயணத்தின்போது இருமுறைகள் அவளைக் கவனித்த போதும், அவளிடம் எந்த சலனமும் இல்லை.
கருமாரியம்மன் கோவிலுடன் அந்த பஸ்ஸும் நின்று விட்டது. எல்லாருடனும் சந்திரா இறங்கிய போதும் அந்தப் பெண் எழுந்திருக்காமல் இருப்பதைப் பார்த்தவள் அவளிடம் “அம்மா, நாம் இறங்க வேண்டிய இடம் வந்தாகிவிட்டது. கீழே இறங்கு” எனச் சொல்லி, அவளை எழுப்பினாள். அப்போது அவளைப் பார்த்தவள், “நான் டிக்கேட் வாங்கவில்லையே” எனத் தடுமாறியபோது, சந்திரா :நான் சேர்த்து வாங்கி விட்டேன். நீ ஏதோ குழப்பத்தில் இருந்தாய் போலிருக்கிறது. கண்டக்டர் வந்தபோது, நீ வாங்காததால், நானே உனக்கும் சேர்த்து இரண்டாக வாங்கிவிட்டேன். நீ இப்போ, என்னுடன் கோவிலுக்கு வா:” எனச் சொல்லி கீழே இறங்கினாள். பதில் எதுவும் பேசாது அந்தப் பெண்ணும் சந்திராவுடன் தொடர்ந்தாள்.
இருவரும் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் மௌனமாக அவரவர் மனதிற்குள் பிராய்த்தித்துக் கொண்டார்கள். குருக்களீடம் குங்கும பிரசாதம், வீபூதி வாங்கிக் கொண்டு, பிரகாரம் சுற்றி வந்து ஒரிடத்தில் அமர்ந்தார்கள். சந்திரா அப்போது அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்து :அம்மா உன் பெயர் என்ன. எனக்கு உன்னைப் பார்த்தபோது, நீ எதோ ஒரு கஷ்டத்தில் இருக்கிறாய் என தோன்றியது. உன்னிடம் எனக்கு ஒரு பரிவும் வந்தது. அதனால்தான், நான் நீ எங்கு போகவேண்டுமெனத் தெரியாமல் இருந்தாலும், உனக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட்டுகள் வாங்கினேன். இப்ப உனக்கு கோவிலுக்கு வந்து அம்மனிடம் மனம் உருகி வேண்டிக்கொண்ட பின், மனதில் சிறிது சமாதானம் வந்திருக்கும், உன்னைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் உனக்கு யாதோரு ஆட்சேபனை இல்லையென்றால், சொல்: எனச் சொன்னாள்.
சந்திராவின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் மனதில் எதோ ஒரு உணர்வு “தன் நிலையை இந்தப் பெண்மணியிடம் சொல்லலாம். அதற்கு ஒரு பரிகாரமும் கிடைக்கும்” எனவும் தோன்றியது. அதனால் மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.
“அம்மா, என் பெயர் பத்மா. நல்ல பெயர்தான். ஆனால் அதிர்ஷ்டம் கெட்டது. நானும் எல்லாரையும் போல்தான் நல்ல குடும்பத்தில் பிறந்தேன். என் அப்பா, அம்மா எளிமையானவர்கள். கிராமத்தில் ஒரு பெரிய வசதியானவரிடம் வேலையில் இருந்தார். அதனால், எங்களுக்கு வசிக்க ஒரு இடமும், சாப்பாட்டிற்காக அரிசி, மற்ற சாமான்களும் அவர்கள் வீட்டிலிருந்தே கிடைத்தது. அதிக வசதி இல்லாவிட்டாலும், பட்டினி இல்லாமல், கௌரவமாக வாழ்ந்தோம். காலப் போக்கில், என்னுடைய பெரிய சகோதரிகள் இருவருக்கும், என்னுடன் பிறந்த இரு அண்ணன்மார்களுக்கும் திருமணம் முடிந்து, அவர்களும் குடும்பம் என வாழ்ந்தார்கள். என்னுடைய அப்பாவுக்கும், வயதாகி விட்டதால், அவர் செய்து வந்த வேலையை என்னுடைய மூத்த சகோதரர் ஏற்றுக் கொண்டு விட்டார். கடைசிகாலத்தில், என்னைக் கலியாணம் செய்ய என் பெற்றோருக்கு வசதி இல்லை. அப்படி இருந்த போதிலும், என் சகோதரியின் மாமியார் வழியில் ஒரு பிள்ளையைப் பார்த்து எனக்கு கலியாணமும் செய்து வைத்தார்கள். கலியாணத்திற்கு முன் ஒரு முறை கூட நான் அவரைப் பார்க்கவில்லை. திருமணம் முடிந்து அவர்களூடைய வீட்டிற்கும் சென்றேன். அன்று முதல் என்னுடைய கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது போலும்.
பெரியவர்களீன் வற்புறுத்தலுக்காக என்னை மணந்து கொண்டவர், என்னிடம் முதல் நாளிலேயே வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தார். அவரைப் பெற்றவர்களுக்கு பிள்ளைக்குக் கலியாணம் செய்து முடித்தவுடன், தங்களூடைய கடமைதீர்த்து விட்டதென்று நினைத்து விட்டார்கள். தன்னுடைய பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு, வந்த ஒரு சின்னப் பெண் எப்படி வாழ்கிறாள், அவளை தன் பிள்ளை பிரியமாக வைத்திருக்கிறானா என்பதெல்லாம் அவர்கள் கவனிக்க வில்லை. பிள்ளை என்னிடம் பிரியமில்லாமல் இருப்பதற்கும் நான் தான் காரணம் என்று என்னிடமே குற்றம் கண்டார்கள். எனக்கு கணவனைக் கைக்குள் போட்டுக் கொள்ளத் தெரியவில்லை என்னிடம் தான் குறை சொன்னார்கள். கொஞ்ச நாட்கள் என் கணவர் அமைதியாக இருந்தார். என்னிடம் இருந்த நகைகளையெல்லாம் என் மாமியார் வாங்கிக் கொண்டார். பிறகு நான் அவர்கள் வீட்டில், தாலியுடன் அடிமையாக ஒரு வேலைக்காரியாகத்தான் இருந்தேன். என்னுடைய பெற்றோர்களும் காலமாகி விட்டனர். பிறந்த வீட்டு பந்தமும் விலகிக் கொண்டது.
என் மாமனார், மாமியார் இருந்த வரை, என் கணவர் என்னிடம் பிரியமாக இல்லையென்றாலும், நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விடுவார். அவர் எங்கு வேலை செய்கிறார், என்ன சம்பளம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் செய்யும் வேலைக்கு, எனக்கு இருக்க இடமும், துணியும், சாப்பாடும் கொடுத்தால்போதும் என அவர்கள் நினைத்து விட்டார்கள். என் மாமனார், மாமியார் காலம் முடிந்தவுடன், என் கணவர் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டு விட்டார். வீட்டில் அவருடைய தம்பிகளுக்கு நான் வேலை செய்ய வேண்டி இருந்தது. அண்ணன் கவனிக்காத அண்ணியை தம்பிகள் கவனித்துக் கொள்ளலாம் எனவும் அவர்கள் விஷமம் செய்ய ஆரம்பித்தார்கள்.
நான் எத்தனைதான் சாதுவாக இருந்தாலும், என்னுடைய மானத்திற்கு பங்கம் வரும் எனத் தெரிந்தவுடன், அக்கம் பக்கத்திலிருந்த பெரிய மனிதர்களின் உதவியை நாடினேன் என்னுடைய நிராதரவான நிலையைப் புரிந்து கொண்டவர்கள், என்னுடைய கணவரைத் தேடி அழைத்து வந்து, எனக்கு நியாயம் சொல்லக் கேட்டார்கள். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா “நான் இவளை என் பெற்றோரின் கட்டாயத்திற்காகத்தான், விருப்பமில்லாமலேயே திருமணம் செய்து கொண்டேன். அதுவும் இவளுக்கு இங்கே வந்தவுடனே தெரிந்து விட்டது. இவள் தான் இங்கிருந்து போகாமல், இருந்தாள். இவளுக்கு எங்கள் விட்டில் சாப்பாடு, உடை, இடம் எல்லாம் இருந்தது. அவளும் வேலை செய்தாள். எனக்குத்தான் இவளைப் பிடிக்கவில்லை. என் தம்பிமார்களுக்கு பிடித்திருப்பதால், இவள் இப்பக்கூட என் தம்பிகளில் ஒருவருடன் இங்கேயே வாழலாம். எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. மாறாக, இவளுக்கும் ஒரு வாழ்வு கிடைக்கும். என்னை பொறுத்தவரை, இவள் எங்கிருந்தாலும், யாருடன் வாழ்ந்தாலும் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. இவளுடைய வாழ்வை இவள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்” எனச் சொல்லி விட்டு, காலில் போட்டுக் கொண்ட செருப்பைக் கழட்டுவது போல் சொல்லி விட்டார். நான் அந்தப் பெரியவர்களிடம், என் கணவரே என்னைக் கை விட்டபோது, இனிமேல் இந்த விட்டில், இப்படிப்பட்ட தம்பிகளுடன் எப்படி இங்கே வாழ முடியும். அதனால், என்னை எப்படியாவது என் பிறந்த விட்டினருடன் சேர்த்து விடுங்கள் எனச் சொல்லி, அவர்களுடன் என் பிறந்த விட்டு மனிதர்களைத் தேடி வந்தேன்..
பிறந்த வீட்டிலும் என்னை யாரும் விரும்பவில்லை. என் மீது எந்த விதமான குற்றம் இல்லையென்றாலும், என்னை ஆதரிக்க யாருக்கும் மனமில்லை. அவர்களின் கருத்துப்படி கலியாணம் என ஒன்று முடிந்த பின் பெண் எத்தனைக் கஷ்டப்பட்டாலும், கணவர் வீட்டை விட்டு வரக்கூடாது. ஆனால் என் நிலை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்த கொள்ளக் கூட அவர்களுக்கு மனமில்லை. என்னுடன் வந்திருந்த ஊர் பெரியவர்கள் அவர்களிடம் “இந்தப் பெண் உங்கள் வீட்டுப் பெண்தானே, அவளைக் கட்டியவன் முதல் நாளிலிருந்தே அவளிடம் பிரியமாக இல்லை. அப்படியும் இந்தப் பெண் அந்த விட்டிலேயே இருந்தாள். இவளுடைய மாமனார், மாமியார் இறந்த பின், கட்டியவன் வீட்டிற்கே வருவதில்லை. அதனால், யாருமற்ற இந்தப் பெண்னிடம், இவளுடைய மச்சினர்மார்கள் இஷ்டப்படி நடக்க முற்பட்டபோது, இந்தப் பெண்ணுக்கு அந்த வீட்டில் என்ன பாதுகாப்பு கிடைக்கும். கட்டியவனோ இவள் யாருடன் வாழ்ந்தாலும், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என மிகவும் தீவிரமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டான். நீங்களே சொல்லுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் இனிமேல் பத்மாவால் எப்படி அந்த இடத்தில் இருக்க முடியும். பெண்ணுக்கு மானம்தானே முக்கியம். உங்களின் தங்கைக்கு மானத்திற்கும், வாழ்விற்கும் நீங்கள்தானே துனையாக இருக்க வேண்டும். அப்படியிருக்க், உங்களுடைய சொந்த சகோதரியை ஆதரவில்லாமல் விடுவது உங்களுக்கே சரியாகப் படுமா?நாங்கள் வெளி மனிதர்கள். ஏதோ ஓரிரு நாட்கள், இந்தப் பெண்ணை பாதுகாக்கலாம். உங்களின் பொறுப்பை நீங்கள் தட்டிக் கழிக்கக் கூடாது. இனிமேல் பத்மா உங்களுடன் தான் இருக்க வேண்டும்” எனவும் தீர்மானமாகச் சொல்லி விட்டு போய் விட்டார்கள்.
என்னதான் பற்றற்று இருந்தாலும் அவர்களும் என் உடன் பிறந்தவர்கள் தானே. அதனால், என் பெரிய அண்ணாவும், மன்னியும் என்னைத் தங்களுடனே வைத்துக் கொண்டார்கள். அப்பவே மன்னிக்கு இரு குழந்தைகள் இருந்தன . மேலும் மீண்டும் மன்னி மாசமாகவும் இருந்ததால், அப்போது அவர்களுக்கு வீட்டைக் கவனித்துக் கொள்ளவும், வேலை செய்யவும் உடனடியாக ஒரு வேலைக்காரி தேவைப்பட்டது. எனக்கும் ஒரு பாதுகாப்பான பிறந்தகம் கிடைத்தது. அவர்களுக்கும் விட்டோடு ஒருவள் கிடைத்து விட்டாள். ஆரம்பத்தில் நல்ல படியாகத்தான் போயிற்று.
பெரிய மன்னிக்கு குழந்தை பிறந்தபோது, நான் அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தேன். பெரிய குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, அண்ணா, மன்னிக்கும் தேவையானவற்றை செய்து கொண்டும் இருந்தேன். ;பிறந்த குழந்தையின் அன்பு முகத்தைப் பார்தது பத்மாவுக்கும் சிறிது சந்தோஷமும் பிறந்தது. சதா அந்தக் குழந்தையுடன் விளையாடுவதும், அவனைத் தூங்க வைப்பது, குளிப்பாட்டுவது, அவனுடைய துணிகளைத் தனியாக சுத்தமாக தோய்த்து எடுத்து வைப்பது என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். உண்மையிலேயே அவளுடைய வாழ்க்கையில் நீண்ட நாட்களுக்குப் பின், சிரித்தும் மகிழ்ந்தாள். கலியாணமாகியும் கன்னி கழியாத அந்த முதிர் கன்னிக்கு குழந்தையின்பம் கிடைத்தது. அவள் வாழ்வில் வீசிய சிறிய தென்றல்.
. பத்மாவின் உழைப்பைக் கண்டமற்ற சகோதரனும், சகோதரிகளும் இப்போ அடிக்கடி பத்மாவை தங்களுடைய வீட்டிற்கும் அழைத்துச் சென்றார்கள். எல்லார் வீட்டிலும் அதிகப்படியான வேலைகள் வந்தால், பத்மாவை கட்டாயம் அழைத்துச் சென்றார்கள். தங்களுடைய தேவைகள் முடிந்த ஓரிரு நாளுக்குள் அவளை திரும்பவும் மூத்தவரிடமே அனுப்பி விடுவார்கள். மொத்தத்தல் பத்மாவின் கூட பிறந்தவர்களும் அவளுக்கு அனுசரனையாக இல்லாமல், தங்களுடைய தேவைகளுக்கு அவளை ஒரு பந்து போல அங்கும் இங்கும் தள்ளிக்கொண்டேயிருந்தார்கள். காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது, பத்மாவும் நாற்பது வயதைக் கடந்து விட்டாள்.
அவளுடைய சகோதரர்களின், சகோதரிகளின் குழந்தைகளும் படித்து பெரியவர்களாகி, அவர்களுக்கென்று ஒரு குடும்பமும் ஏற்பட்டு விட்டது. இனிமேல் பத்மாவின் உதவி அவர்களுக்கு தேவையில்லை. அப்போதுதான் அவர்கள் எல்லாருக்கும் இனிமேல் பத்மாவை யாரிடம் அனுப்புவது என யோசித்தார்கள். ஒரே வயிற்றில் குடியிருந்தாலும், அவர்களுக்கு பத்மாவிடம் ஒற்றுதலோ, பரிவோ இல்லை. சகோதரர்களும் வயதாகி விட்டபடியால், அவர்களே தங்களின் குழந்தைகளின் ஆதரவில் இருக்க வேண்டியவர்களாயினர். அப்படி இருக்கும் போது, அவர்களால் பத்மாவையும் தங்களுடன் வைத்துக் கொள்ள மனமில்லை.
அதனால் ஒரு நாள் எல்லாரும் கூடிக் கொண்டு, பத்மாவை இனிமேல் உன்னை எங்களுடன் வைத்திருக்க் முடியாது. இத்தனை நாட்கள் நாங்கள் எல்லாரும் எங்களின் கஷ்டத்திக்கிடையே, உன்னையும் பராமரித்து வந்தோம். இனிமேல் உன் வாழ்வுக்கான வழியை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். நீ எங்கிருந்தாலும், அவ்வப்போது வந்து எங்களால் இயன்ற அளவு உனக்குப் பணம் கொடுத்து போவோம். நீ யோசித்து உன் முடிவைச் சொல்” என்றார்கள். இரவு முழுதும் யோசித்துப் பார்த்தேன்.
அப்போதுதான் எனக்கும் தெரிந்தது. வாழ்நாள் பூராவும், சுயமாக யோசிக்காமல், மற்றவர்களின் நிழலிலேயே வாழ்ந்து வந்தது எத்தனை முட்டாள்த்தனம் என. ஒவ்வோரு நாளும் கொஞ்சம் கூட என்னைப் பற்றி நினைக்காமல், நம்முடைய உறவினர்கள் தானே என நினைத்து, பரிவோடும், பாசத்தோடும் உழைத்தேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகாலமாக எல்லாருக்கும் உழைத்து விட்டேன். கடைசியில் எல்லாருக்குமே நான் சுமையாகிவிட்டேன். அதனால் ஒருவரும் என்னை ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை. யாரிடம் என்ன உரிமையை எதிர்பார்க்க முடியும். ஊரரிய, முப்பத்து முக்கோடி தேவர்களின் சாட்சியென அத்தனை பெரியவர்களும் சேர்ந்து செய்து வைத்த திருமணமே சரியாக அமையவில்லை. என்னை வேண்டாமென்று சொன்ன, கணவரிம் என்னுடைய உரிமையைக் கேட்கக்கூட வாயில்லாது ஊமையாக இருந்தது என் குற்றம்தானே. அதுதான் போகட்டும். என் பிறந்த விட்டிலிலேயே என்னை ஒரு வேலைக்காரியாக நடத்தினார்களே அப்போதாவது அவர்களிடம் எனக்கும் இந்த வீட்டில் உரிமை உண்டு எனக் கேட்டேனா? இல்லையே. என் எதிர்காலத்தைப் பற்றி ஒரு நிமிஷம் கூட யோசித்துப் பார்க்காமல், ஒவ்வோரு நாள் கடந்தாலே போதும், அன்றைய உணவு, படுக்க இடம் கிடைத்ததா என சந்தோஷப்பட்டேனே, அது என்னுடைய அறியாமைதானே. இனிமேல் யார் பேரில் கோபப் படுவது காலங்கடந்த பின் என்னுடைய உரிமைக்காக யாரிடம் போராட முடியும். எப்ப என்னை அவர்கள் அன்னியமாக நினைத்துக் கொண்டார்களோ, இனிமேல் இவர்களுடனும் இருப்பது சரியாகப் படவில்லை. அந்த இடத்திலிருந்து வெளியே வரவேண்டுமென ஒரு உந்துதல்தான் தோன்றியது.
நாலு கால் ஜீவங்களைத் தங்களுடன் வைத்து பராமரிப்பவர்கள், தங்களுடைய தேவைகள் முடிந்த வுடன் அந்த ஜீவனின் தேவைகள், ஆசைகள், உரிமைகள் என எதுவும் இருப்பதாக நினைக்காமல், தங்களுக்கு உழைத்தவைகள், உடல் தளர்ந்தபோது, அடிமாட்டு வேலைகளுக்காகவும், கசாப்புக் கடைகளுக்கும் விற்கும் மனிதர்களிடம், ஆதரவற்ற தங்களுடைய சகோதரி என்கிற பரிவோ, பச்சாதாப்மோ எதிர்பார்க்க முடியுமா? அதே போல்தான் என் நிலைமையும். அதை நான் புரிந்து கொண்ட போது, என் வாழ்நாளில் பெரும் பகுதி முடிந்து விட்டது. இனி என்னுடைய நிலையும் அந்த மாதிரி அடிமாடுகள் மாதிரிதானே.
அதனால், காலையில் யாரும் எழுந்திருக்கு முன், என்னுடைய இரண்டு புடவை, துணிகளை எடுத்துக் கொண்டு, அவ்வப்போது அண்னன்மார்கள் கொடுத்த பணத்தை சிறிது சிறிது சேர்த்து வைத்திருந்தேன், அதையும் எடுத்துக் கொண்டு கிளம்பி வந்தேன். எங்கு போவது எனவும் தெரியாது. யாரையும் கேட்க தைரியமும் இல்லை. அதனால், கண்ணில் கண்ட ஒரு பஸ்ஸில் ஏறி விட்டேன். ;பிறகு நடந்தது உங்களுக்கேத் தெரியும்” எனச் சொல்லி விட்டு, கண்களில் வழிந்த நீரைக் கூட துடைக்க மனமின்றி இருந்தாள்.. “.
பத்மாவின் துன்பமான வாழ்க்கையைப் பற்றிக் கேட்ட சந்திராவுக்கும் மனம் வலித்தது. எத்தனை உறவுகளுடன் பிறந்தாலும், ஒவ்வொருவரும் தனி மனிதர்கள் தானே. அதிகம் படிக்கவும் இல்லை. சாமர்த்தியமும் இலை. இனிமேல் இந்த சுயநல உலகில், பேராசைக்காரர்களின் நடுவே, சூழ்ச்சிக்காரர்களுக்கிடையே இந்தப் பெண் எப்படி வாழ்வாள். இப்போ தான் என்ன செய்ய வேண்டுமெனவும் யோசித்தாள்.
சந்திரா, ஓரளவு சுதந்திரமானவள்தான். அவளுக்கு கணவர் மூலம் கிடைத்த வீடும், அவருடைய ஓய்வூதியமும், அவளுடைய ஓய்வூதியமும் வருகிறது. பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து, வளர்த்து, அவர்களுக்கென்று ஒரு குடும்பமும் அமைத்துக் கொடுத்தாகிவிட்டது. பிள்ளைகளும், தனியாகவே இருக்கிறார்கள். தாயும் பிள்ளைகளும் அவ்வப்போது ஒருவரையோருவர் சந்திப்பதும் உண்டு. தற்சமயம், சந்திரா தன்னுடன் தன்னுடைய சினேகிதிகளின் பெண்கள் இருவருடனும் தனியாகத்தான் இருக்கிறாள். அந்தப் பெண்களுக்கு சென்னையில் ஒரு என்.எம்.ஸி. கம்பெனியில் வேலை. இருவரும், தங்களின் பெற்றோரை விட்டு தனியாக சென்னைக்கு வந்து முதலில் லேடீஸ் ஹாஸ்டலில் இருந்தார்கள். அங்கு அவர்களுக்கு வசதிபடாததால், சந்திராவின் சினேகிதிகள் இருவரும் தங்களுடைய பெண்களைத் சந்திராவின் பாதுகாப்பில் அவளுடனேயே வைத்துக் கொள்ளுமாறு கேட்டபின், சந்திராவும் அந்தப் பெண்களுடன் வசித்து வருகிறார்கள். அவர்களும், தாங்கள் ஹாஸ்டலுக்குச் செய்யும் செலவை சந்திராவிடம் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் நல்ல, இடம்,வீட்டுச் சாப்பாடு, தங்களைப் பற்றிக் கருத்துடன் கவனிக்க ஒரு அம்மாவைப்போல் சந்திராவும் இருப்பதால், மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.
தன்னுடன் பத்மாவையும் தன்னுடைய வீட்டிற்கே கூட்டி வந்தாள். வரும்போதே, தன்னுடன் இரு பெண்களும் தங்கி இருப்பதையும், பத்மாவும் இப்போது அவர்களுடன் சேர்ந்து தங்கலாம் எனவும் சொல்லி விட்டாள். வீட்டிற்கு வந்தவுடன், இருவரும் சாப்பிட்டார்கள். பிறகு பத்மாவையும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு, அவளும் தன்னுடைய வேலைகளைக் கவனித்தாள். மாலையில் வேலைக்குப் போய்விட்டு வந்த, சாருமதிக்கும், ரேவதிக்கும் பத்மாவை அறிமுகப்படுத்தி விட்டு, இனிமேல் பத்மாவும் தங்களுடனே இருக்கப் போவதையும் சொன்னாள். மறுநாள் காலையில் சந்திரா எழுந்து விட்டு வேலைகளைச் செய்யும் போதே, பத்மாவும் உடன் எழுந்து,அவளுக்கு உதவினாள். மெதுவாக சந்திராவிடம் “அம்மா, எனக்குத் தெரிந்தஒரே வேலை சமையல்தான். அதனால், இனிமேல் இந்த வீட்டில் நான் சமையல் வேலைகளைச் செய்து விடுகிறேன். அது எனக்கும் சவுகரியமாகவும்,மனதிற்குநிம்மதியாகவும் இருக்கும்: எனச் சொல்ல, சந்திராவும் சம்மதித்தாள்.
தன்னுடைய பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் செய்த அதே சமையல் வேலையைத் தான் பத்மா இந்த வீட்டிலும் செய்தாள். ஆனால், அதற்கு அவளுக்குக் கிடைத்த மரியாதையும், அனுசரிப்பும் அவளை மிகவும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஒவ்வோரு நாளும் அவள் செய்த புதிய வகையான பதார்த்தங்களை அவர்கள் எல்லாருமே மிகவும் ருசித்து சாப்பிட்டது மட்டுமல்லாது, அதனை எப்படிச் செய்தாய் எனவும் விசாரித்து தெரிந்து கொண்டார்கள். சில சமயங்களில், அவர்களின் நண்பர்கள் எதுவும் புதியமாதிரி உணவு தயார் செய்ய வேண்டுமென்றாலும், அதற்கும் பத்மாவின் ஆலோசனையும், உதவியையும் அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். இதனால், பத்மாவும் அந்தக் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தாள்.
ஒரு நாள் இதையெல்லாம் நினைத்து கொண்டவளுக்கு, தன்னுடைய உறவு எனச் சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் தன்னை எப்படியெல்லாம் நடத்தினார்கள் என்பதையும். தற்போது இந்த வீட்டில் அவளையும் ஒரு உறவுக்காரியாக நினைத்து பழகுவதையும் நினைத்து, தன்னையுமறியாமல் கண்களில் நீர் வழிய நின்றாள். அவளைப் பார்த்த ரேவதி “என்ன பத்மாக்கா எதுக்கு நீங்கள் அழுகிறீர்கள். என்ன வருத்தம் சொல்லுங்கள்” எனவும் கேட்க, பத்மா அவளிடம் “இது ஒன்றும் வருத்தத்தால் அழத கண்ணீர் இல்லை, என்னையுமறியாமல், நீங்கள் எல்லாம் என்னிடம் எத்தனை உறவுடன், பாசமாக, அன்பாக இருப்பதை உணர்ந்து வந்த சந்தோஷக் கண்ணீர்தான். நான் அழுத காலம் எல்லாம் முடிந்து விட்டது. இப்பத்தான் என்னுடைய சொந்தமான உறவுகளுடன் இருப்பது போல் உணருகிறேன்” எனவும் சொன்னாள்.
அதற்கு சந்திரா “பத்மா, இத்தனை நாட்கள் ஆனபின்னும் உன்னால் உன்னுடைய கடந்த காலத்தை மறக்க முடியவில்லையா? நீ நினைப்பது போல் உன் சொந்தக்காரர்களும் பொல்லாதவர்களில்லை. அவர்களின் அன்றைய சூழ்நிலை. உன்னிடம் அப்படி நடந்து கொள்ளச் செய்திருக்க வேண்டும். எப்பவும், உன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி குற்றம் பாத்துக் கொண்டிருக்காதே. அவர்களால் உனக்கு நடந்த நல்ல விஷயங்களையும் நீ அடிக்கடி நினைத்துக் கொள். உன்னுடைய இளமை வயதில் அவர்கள் உன்னை ஆதரிக்காமல், விட்டிருந்தால், உன்னுடைய நிலைமை என்னவாயிருக்கும். அப்போழுது உன்னுடைய வயது இருபது, இல்லை இருபத்து இரண்டிருக்குமா? அப்படிப்பட்ட வயதில், உன்னை யாரும் ஆதரிக்காமல், விட்டிருந்தார்ளே ஆனால், நீ உன் வாழ்க்கையில் எத்தனை ஆபத்தான சூழ்நிலைகளைச் சந்தித்து இருக்க வேண்டியிருக்கும். அப்படி இல்லாமல், உன்னுடைய இளமையான வயதில், உனக்கு ஒரு பாதுகாப்பையும், ஆதரவையும் கொடுத்தவர்களைப் பற்றி, தப்பாக நினைக்காதே. நீயும் ஊரில் உலகில் நடக்கும் கொடுமைகளையும், ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதுப் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பாயே. அப்படியோரு நிலையில் உன்னை ஆண்டவன் வைக்க வில்லையே, உன்னை அன்று பாதுகாக்க உனக்கென்று மனிதர்களையும் அவர் காட்டினாரல்லவா? அப்படி அவர்கள் உன்னை வெளியே அனுப்பி இருக்காவிட்டால், நீ எங்களையும் சந்தித்து இருக்க முடியுமா? இன்று இருப்பது போல் சந்தோஷமாக, சுதந்திரமாக இருக்க முடியுமா? எத்தனை கஷ்டத்திலிருந்தும், கட்டாயம் ஒரு நல்லதுதான் கிடைக்கும்.
நீ நினைப்பது போல், கூடப் பிறந்தவர்களும், புருஷன் வீட்டுக் காரர்களும் மட்டும் தான் உறவென்று இல்லை. இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை மக்களும், எதாவது ஒருவகையில் ஒருவருக்கோருவர் உறவாகத்தான் இருப்பார்கள். ஆறரிவு கொண்ட நாம்தான், நம்முடைய உறவுகளை மட்டும் சொந்தமென்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தால் மனம் நோகிறோம். ஐந்து அறிவு கொண்ட மிருகங்கள், பறவைகளைப் பார். இன்று கூடி இருக்கும், மற்ற இனங்கள் பிரிந்தால், அதற்காக அவைகள் தங்களின் சுகத்தை இழப்பதில்லை. உறவோ, அல்லவோ, யாரா இருந்தாலும், கூடி இருந்தால் கோடி காலம் நன்றாக வாழலாம் என்கிற தத்துவத்தை நீயும் ஏற்றுக் கொள். அப்போ தெரிந்து கொள்வாய் இந்த பரந்த உலகில் உறவுக்குப் பஞ்சமில்லை. நாம் நல்லதே நினைத்தால், நமக்கும் நல்லதே நடக்கும். என தார்மீக நினைப்போடு, நம் வாழ்னாளைக் கழிக்க வேண்டும். அதுவே நிம்மதியான வாழ்க்கையாகும்.” எனச் சொல்லி விட்டு, பத்மாவின் கைகளைப் பிடித்து அதரவாக குலுக்கி விட்டு, படுக்கப் போனாள்.
No comments:
Post a Comment