(ஜெயரமணி)
ஒரு நடிகனின் வாழ்க்கை
(ஜெயரமணி)
தினமும் விடியும் காலைப் பொழுது நடிகன் மன்மதன் வீட்டில் கூட்டத்துடன் தான் மிளிரும். எப்போதும் அவன் வீட்டில் அவனுடைய நண்பர்கள், உதவியாளர்கள், படத் தயாரிப்பாளர்கள் மற்றும் அவன் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் என அதிகமானோர் இருப்பார்கள். வீட்டிற்கு வரும் அத்தனை பேருக்கும் காலை உணவு, காப்பி, டீ போன்றவைகளும் குறைவற எல்லோருக்கும் கிடைக்கும். மன்மதன் அந்த ஒரு விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருந்தான். அதுதான் அவன் வீட்டிற்கு வரும் யாரும் சாப்பிடாமல் போகக்கூடாது. வீட்டினுள் உள்ளவர்கள் தவிர, பாமர மக்கள் நிறையபேரவன் வீட்டின் முன் கூடியிருந்தார்கள். அவர்களுக்கு அன்று காலையில் மன்மதனின் தரிசனம் கிடைத்தால் போதும், அவர்களின் ஜென்மபலன் கிடைத்துவிடும். அவன் மீது பாமர மக்களுக்கு அப்படியோரு ஈடுபாடு. காரணம் அவன் நடிக்கும் படங்களில் எல்லாம் அவன் ஒரு ஏழைப் பங்காளனாகவே இருப்பான், அதைப்பார்த்த ஜனங்களுக்கு அவன் ஒரு ஆதரிசமனிதனாகவே தெரிந்தான். வீட்டின் முன் நிற்கும் காவலாளிகளுக்கு எப்போதும் அந்த வீட்டின்முன் வந்து நிற்கும் மக்களுக்குப் பதில் சொல்லுவது பெரும்பாடு. உண்மையாகவே மன்மதன் வெளியூர் படப்பிடிப்பிற்குப் போயிருந்தாலும், மக்கள் நம்ப மாட்டார்கள். அவன் வீட்டில்தான் இருப்பான், காலையில் படப்பிடிப்பிற்கு போவதற்கு முன் அவனைப் பார்க்க வேண்டுமென நிற்பார்கள். வழக்கம்போல் அவன் கிளம்பும் நேரம் வரை காத்திருந்து, பிறகுதான் காவலாளிகள் சொன்னது உண்மையெனத் தெரிந்து வருத்தத்துடன் போவார்கள். அப்படி போகிறவர்களைப் பார்க்கவும் பரிதாபமாக இருக்கும்.
அத்தனை பரபரப்பான காலையிலும், அந்த வீட்டினுள் வேறு ஒருவரும் இருந்தார். அவர்தான் நடிகனின் தாயார் சிவகாமியம்மாள். அவர் மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்து தன்னுடைய ஒரே மகனான மாதவனை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே ஒரு குழந்தையுடன் கணவனை இழந்தவர். அதன் பிறகு, தன்னுடைய சலியாத உழைப்பால்
உயர்ந்தவர். அவர் ஒரு ஆசிரியை. தன் வருமானத்தில், மிகவும் கஷ்டப்பட்டு, மாதவனை வளர்த்தார். சிறிய வயதிலிருந்தே மாதவனுக்கு நடிகனாக மாறவேண்டுமென ஆசை இருந்தது. அவன் தன் பள்ளியில் நடத்தும் எல்லா விழாக்களிலும் பங்கேற்பான். மிகவும் நன்றாக படிக்கவும் செய்வான். அதனால் படிப்பு விஷயத்தில் மாதவனின் தாயாருக்கு மிகவும் சிரமம் இல்லை. படிப்போடு மாதவன் மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொண்டான். அவன் படித்துக் கொண்டிருக்கும்போதே, அவனுள் இருந்த நடிப்பாசைக்கு அவனுடைய பள்ளி ஆசிரியர்களும் ஊக்கம் கொடுத்து வந்தனர். அதனால் அவன் குழந்தை பருவத்திலேயே திரைப் படங்களில் குழந்தை நடிகனாகவும் நடித்திருந்தான். அதனால் அவன் வாலிபனானதும் அவன் விருப்பப்படியே நடிகனாகவே வளர்ந்தான். ஆரம்ப காலத்தில் மிகவும் ஊக்கத்தோடு நடித்து தன்னுடைய இடத்தை மிகவும் உறுதியாக்கிக் கொண்டான். நடிக்க ஆரம்பித்து சில வருடங்களுக்குள்ளே மாதவன் மன்மதன் என்ற பெயரில் ஒரு பிரபல நடிகனாகவும். மாற்றுக் காணமுடியாத ஒரு கதாநாயகனாகவும் வளர்ந்தான். அவன் திரை உலகத்தில் இருக்கும் மற்ற குணங்களும் அவனுள் குடி கொண்டன. ஆமாம் அவன் தன்னிஷ்டப்படி வாழத் தொடங்கினான். ஆரம்பத்தில் அவனுடைய பிரபலத்தைப் பற்றியே தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்த அவனுடைய அம்மாவிற்கு, கொஞ்ச கொஞ்சமாகத் தெரிந்தது. தன்னுடைய மகன் தன்னுடைய கட்டுப்பாட்டை விட்டுப் போய்விட்டது. இப்போதெல்லாம் அவன் தன்னுடைய விருப்பப்படியே வாழ விரும்பினான்.
ஆரம்பத்தில் மன்மதன் வீட்டிற்கு வர நேரமாகினால், தன்னுடைய கைப்பேசியின் மூலம் தன்னுடைய தாயாருக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சம்மாக அதுவும் நின்று விட்டது. என்றாவது மன்மதனின் தாயார் அவன் காலையில் படிப்பிடிப்பிற்குப் போகும்போது, அவனிடம் மதிய உணவு எந்த ஸ்டூடியோவுக்கு அனுப்ப வேண்டுமெனக் கேட்டால், தனக்கு மதிய உணவு வேண்டாம் எனப் பதில் மட்டும் வருமே தவிர, மதியத்திற்கு தான் யாருடன் உணவுன்னப்போகிறான் என்பதை சொல்லாமல் மறைத்து விடுவான். தன்னுடைய மகனின் போக்கைப் புரிந்து கொண்டவள், தான் போகுமிடங்களைப் பற்றித் தன் தாயார் அறிந்து கொள்வதை அவன் தவிர்ப்பதையும் தெரிந்து கொண்டாள். அதனால் அவளும் அவனிடமிருந்து அதிகமாகவே விலகி வாழத் தொடங்கினாள். அப்படியும் ஒருநாள் அவன் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டவள் அவனிடம் சொன்னாள், “மாதவா, இப்போதெல்லாம் நீ அதிகமாக வீட்டில் தங்குவதில்லை. உனக்கும் வீட்டில் சரிக்குசமமான உறவுகள் இல்லை. உன் வயதில் உனக்கென ஒருவள் இந்த வீட்டில் இருக்கவேண்டும். அப்போதுதான் உனக்கும் இது உன்னுடைய இடம். இங்குதான் நீ உன் ஆசைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமென உணர்வும் வரும். ஆனால், நீயோ இத்தனை வருடம் வரை திரைஉலகில் உனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பதிலேயே இருந்து விட்டாய். நானும் உன் மனம் தெரிந்து, உன்னை அதிகம் வற்புறுத்தவில்லை. இப்போதுதான் நீ ஒரு நிலையான இடத்தில் இருக்கிறாய். உனக்கும் வாலிப வயது தாண்டும் நிலை வந்து விட்டது. இனியும் உனக்கு வாழ்வில் ஒரு நல்ல துணையின்றி இருப்பது சரியல்ல. உன் மனதில் இருப்பதை என்னிடம் தெளிவாகச் சொல். உன் விருப்பப்படியே நான் உன் வாழ்க்கைக்கு ஒரு நல்ல துணையை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். எனக்கும் மனம் நிம்மதியடையும். என் வாழ் நாளில் உனக்கு ஒரு நல்ல இல்லறத்தை அமைத்துக் கொடுத்து விட்டால், என்னுடைய கடமையும் முடியும். நான் என் கடைசி காலத்தில், பேரன், பேத்தி என வாழ்ந்து விட்டுப்போவேன்: எனவும் சொன்னாள்.
தாயின் சொல்லைக் கேட்டவன், “அம்மா நீ நினப்பதுபோல் எனக்கு எந்த ஒரு பெண்ணிடமும் ஈடுபாடு ஏற்படவில்லை. எனக்குத் தோன்றும்போது அன்று என்னுடன் இருக்க விரும்பும் சினேகிதியுடன் இருக்கிறேன். அதனால் எனக்கும் யாதோரு சங்கடமும் இல்லை. மனம் பிடித்திருக்கும் வரை அந்த உறவு தொடரும். மனம் கசந்தால், இருவருமே ஒருவருக்கோருவர் மனம் விட்டுப் பேசி, பிரிந்து விடுவோம். இதனால் எந்த விதமான குடும்ப பாரமும் இல்லை. அதனால் என்னால் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை, நான் யாருக்கும் அடிமையாகவும் இல்லை அதே சமயம் நான் யாரையும் எந்த விஷயத்திற்கும் கட்டுப் பாடு செய்வதில்லை. எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி, சுதந்திரமான வாழ்வுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. என் நடிப்புத் திறமையால், எப்போதும் எனக்கென்று ஒரு நிலையான இடம் திரைஉலகில் எனக்கு இருக்கும். எனக்கென்று ஒரு இரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. எனக்கு ஒன்றென்றால் என்னைத் தொடர்ந்து வர ஒரு கூட்டம் இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் வட்டமும் திடமாகவே இருக்கிறது. இப்படிபட்ட ஒரு சுதந்திரமான வாழ்வு எனக்காக இருக்கும்போது, எதற்கெம்மா எனக்கென்று ஒரு குடும்பம், ஒரு பெண் என சிறு வட்டத்தில் வாழ வேண்டும். உங்கள் காலம் வேறு. இப்போ இது எங்களின் காலம். எங்களுக்கு எந்த விதமான சட்டதிட்டங்களும் இன்றி, மனதிற்கேத்தபடி வாழ வசதியிருக்கும்போது அதனை அனுபவிப்பது தவறல்ல. நான் இப்படியே சுதந்திரமாக ஒரு வாணம்பாடி பறவைப்போல் வாழவே விரும்புகிறேன். நீ என்னை எந்தவிதமான குடும்பக் கூண்டிலும் அடைக்க முயற்சி செய்ய வேண்டாம். எனக்கும் என் வாழ்வு எப்படி யிருக்கவேண்டுமென தீர்மானிக்கத் தக்க வயதும் இருக்கிறது. என் வாழ்வு எப்படியிருந்தாலும் எனக்கும் உனக்கும் உள்ள பந்தமோ, பாசமோ குறையாது. எனக்காக நீ இத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் போரும். இனி நீ நிம்மதியாக இரு. வாழ்வில் நீ என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாயோ, அத்தனையும் செய்து கொள். உன் விருப்பங்களை நான் தடை செய்ய மாட்டேன். அதேபோல் நீயும் என் மனம் தெரிந்து, என்னிஷ்டப்படி வாழ விடு. இருவரின் வாழ்வும் தனித்தனி தான். அதை புரிந்து கொள்” என மெதுவாகவும், திடமாகவும் சொல்லி விட்டான்.
அதைக் கேட்ட அவனின் அம்மா :மாதவா நான் வேறு யாரோ ஒருவர் அல்ல. உன்னைப் பெற்ற தாயார். எந்த ஒரு தாய்க்கும்,தன் மகன் வாழ்வில் ஒரு பிடிப்பும், பற்றுதலுமின்றி, வாழ சம்மதிக்க மாட்டாள். இப்போது நீ செய்வது உனக்குச் சரியாகத்தான் தோணும். அது வயதின் திமிர். இந்த திமிர் அடங்கினால், அப்போது புரியும் அம்மா சொன்ன வாழ்வு என்னவென. இப்போது நீ இருப்பது எப்படி யிருக்கிறதென்றால், நீ திண்ணை கண்ட இடத்தில் தூங்குவதும், காற்று கண்ட இடத்தில் வீசிக் கொள்வதும், பசி கண்ட நேரத்தில் எங்கிருந்தாலும் அங்கு கிடைப்பதை புசிப்பதும், நண்பர்கள் கண்ட இடத்தில் அவர்களுடன் உல்லாசமாக குடிப்பதும், போகம் கண்ட நேரத்தில், கண்ணில் காணும் பெண்களுடன் எந்தவிதமான உறவோ, உரிமையோ இன்றி போகிப்பதும் சரியல்ல. இன்றைய காலத்தில், இதெல்லாம் நாகரீகம் என ஒரு பொய்ப் போர்வையைப் போர்த்திப் பார்த்து நீ திருப்தி அடைகிறாய். ஆனால் இதல்லாம் ஒரு கால கட்டம்வரை உனக்கு ஏற்றதாக இருக்கும் நீ நினைப்பாய், இந்தக் கால கட்டத்தில் இருக்கும் மருத்துவ சாதனைகள், மனிதன் என்னதால் முறைதவறி நடந்தாலும், அதன் உதவியுடன் வாழ் நாள் பூராவும் திடமாக, ஆரோக்கியமாக இருக்கலாமென்று. ஆனால் அது தவறு. எத்தனை திடமான கட்டிடமும், அதற்கென ஒரு உரிமையாளர் இல்லாமல், சரியான பராமரிப்பும் இல்லையென்றால், ஒரு நாள் உளுத்துத்தான் போகும். அப்போது அந்தக் கட்டிடத்தைச் சுற்றி இருந்த பறவைக் கூட்டங்கள் பறந்துதான் போகுமே தவிர, இடிந்த நிலையில் இருக்கும் கட்டிடத்தின் கீழ், தான் எத்தனை நாட்கள் நிழலில் இருந்தோம் என்பதை நினைக்க மாட்டார்கள். இப்போது நான் சொல்வது உனக்குப் பிடிக்காது. என்னுடைய கடமை, தாயுள்ளம் மறக்காமல் சொல்லவேண்டியதை நான் சொல்லி விட்டேன். உனக்கும் கேட்கும் பருவம் இல்லை, எனக்கும் சொல்லும் காலமும் கடந்து விட்டது. இன்று சொன்னதுதான், நான் உனக்குக் கடைசியாகச் சொல்வது. நான் இனிமேல் இங்கிருப்பதில் என் மனதிற்குச் சம்மதம் இல்லை. அதனால், நான் ஏற்கெனவே, நம்மூரில் நம் அப்பாவின் பெயரில் நடத்தும், முதியோர் இல்லத்திற்கே போய்விடுகிறேன். என்றாவது, நீ உன் வாழ்வில் மாற்றம் வேண்டி, முறையாக வாழ விடும்பினால், என்னை, நான் இருந்தால், வந்து பார். இல்லையென்றால், என் மரணச் செய்தி கிடைத்தால், வந்து உன் கடமையைச் செய்து விட்டுப் போ. நான் காலையில் உன்னிடம் சொல்லிக் கொள்ளவில்லை. இப்போதே சொல்லி விட்டேன். நான் நாளைக்காலையில் காரில் நம்ம ஊருக்கே போய்விடுகிறேன். இந்த விஷயம் வீணாக விளம்பரப்படுத்த வேண்டாம். நான் ஒரு நடிகனின் அம்மாதானே தவிர, நானே ஒரு நடிகை இல்லை.: எனத் தீர்மானமாகச் சொல்லிச் சென்று விட்டாள்.
மன்மதன் எனும் மாதவனும், தன் தாயின் முடிவைத் தெரிந்து கொண்டபின், எதுவும் பதில் சொல்லாமல், தூங்குவதற்காக தன்னுடைய அறைக்குள் சென்றான். அங்கு சென்றபின்பும், அவன் காதில் அம்மாவின் சொற்கள் ஒலித்தன. அதனின் ஓசையையும், அதனால் அவனுடைய மனதில் எழும் சலனத்தையும் அடக்க, அவன் வழக்கம்போல் தன்னை மறக்கச் செய்யும் பானங்களைத் தேடிச்சென்றான். அவன் தன்னுடைய வீட்டிலேலே தேவையான அளவுக்கு மதுபான வகைகளை வைத்திருந்த படியால், அவன் தனக்கு வேண்டியவரை மதுவைக் குடித்து விட்டு, தன்னை மறந்த நிலையில் உறங்கினான். மறு நாள் காலையில் அவனை எழுப்ப அவனுடைய அம்மா அங்கில்லை.
கண் முழித்தவன், தன்னுடைய வீட்டில் இருக்கும் அமைதியை உணரவில்லை. அவன் நினைத்தான், தன்னுடைய அம்மா வழக்கம்ப்போல் பூஜை செய்து கொண்டிருப்பாள், இன்னும் சிறிது நேரத்தில் அவளுடைய பூஜை முடித்து, தீபாராதனையும், அதனுடன் சேர்ந்து ஒலிக்கும் மணியோசையுடன், அம்மாவின் பக்திப்பாடல்களும் ஒலிக்கும் என. ஆனால் அது ஒன்றும் நடைபபெறவில்லை, ஆமாம் அவனுடைய அம்மா சொன்னதுபோல், விடியற்காலையிலேயே தங்களுடைய பூர்வீக ஊருக்குப் போய்விட்டார். நீண்ட நேரம் படுக்கையிலேயே இருந்தவன், வெகு நேரமாகியும், தன்னை எழுப்ப வராத அம்மாவை நினைத்துப் பார்த்தான். வெளியில் வந்து பார்த்தபோதுதான், அவனுடைய கார் டிரைவர் வீட்டிற்கு வந்து அவனிடம் “ஐயா, அம்மாவை நான் பத்திரமாக உங்களின் ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டேன். உங்களிடம் அம்மா சொல்லச் சொன்னார்கள்”எனவும் சொன்னான். அதன்பின்னர்தான் அவனுக்கு உரைத்தது, தன்னுடைய அம்மா தான் சொன்னபடியே செய்து விட்டாள். அம்மா தன்னுடைய செய்கைகளைப் பிடிக்காமல், தன்னிடம் கடுமையாகப் பேசியதை, அவன் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் எத்தனை செய்தாலும், அம்மாவிற்கு தன்னிடம் உள்ள பற்றுதல் குறையாது, தன்னைவிட்டு ஒருநாளும் போக மாட்டாரென்றுதான் தீர்மானமாக இருந்தான். ஆனால், இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, தன்னுடைய செய்கைகளால், அம்மா எத்தனைதூரம் மனம் நொந்து போயிருந்தால், கடைசியில் தன்னை விட்டே விலகிப் போக முடிவு செய்து, அதன்படியே தன்னை விட்டுவிட்டு ஊருக்கும் போய் விட்டார்கள் என்பதை. அதேசமயம் அவன் தன்னுடைய செய்கைகளை மாற்றிக் கொள்ளவேண்டுமென நினைக்கவில்லை. கொஞ்ச நாள் போனால் அம்மாவே வந்துவிடுவார் எனவும் ஒரு அசட்டுத் தீர்மானம் அவனுள் இருந்தது. அதனால் அவனும் தன்னுடைய தினப்படி வாழ்க்கையில் மூழ்கிப் போனான்.
மன்மதன் என்னும் நடிகனுக்கு திரைஉலகில் நிறைய சந்தர்ப்பங்கள் வந்தன. அதனால் அவன் வசதியும் அதிகமாகவே ஆனது. கூடியவரையில் அவனைத் தேடி வரும் படத் தயாரிப்பாளர்களின் ஆசையை பூர்த்தி செய்து வந்தான். அதனால் அவனுக்கு திரைஉலகில் ஒரு நல்ல பொறுப்பான நடிகன், அவனை நம்பிப் பணம் போட்டு படம் எடுக்கலாம், நல்ல பணமும் கிடைக்கும் என எல்லாருக்கும் ஒரு நம்பிக்கையும் வளர்ந்தது. அவனும் தன்னுடைய மனம் போன படியே, ஒரு கட்டுவார் இல்லாத, மாடு போல் வாழத்தொடங்கினான். அவன் செய்கை பிடிக்காதவர்களும், அவனுடைய திரைஉலக அந்தஸ்த்தின் காரணமாக அவனுடைய குறைகளை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். எப்போதும் அவனைச் சுற்றி, பெண்களும் அதிகமாகவே இருந்தார்கள். அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் அவ்வப்போது சில கிசுகிசுக்கள் வந்தாலும், அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், தன் இஷ்டம்ப்போல் வாழ்ந்து வந்தான். அப்படியிருக்கும் காலத்தில், அவனுடைய நண்பனும், ஒரு நடிகனுமான நிகிலேஷ், திடீரென்று, ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவும் செய்து, அதனை மன்மதனிடம் சொன்னான். அப்போது மன்மதன் அவனிடம் “நீ எப்படி திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாய்?’ எனவும் கேட்க, அவனோ, “என் வீட்டில் என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு பிடித்தம், பிடிமானம் வேண்டுமெனவும், எனக்கு ஒரு குடும்பம், குழந்தைகள் என இருந்தால்தான் என் சொந்த வாழ்க்கையில் ஒருசுகம் இருக்குமென்றும் சொல்லி, என் தாயார் தானாகவே ஒரு பெண்ணைப் பார்த்து, எனக்கென முடிவும் செய்து விட்டார்கள். நானும் அவர்களின் விருப்பப்படியே அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எனக்கும் அவளை ஒரு முறை பார்த்தபோதே, மனதிற்குள் பிடித்து விட்டதால், நானும் உடனேயே திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்து விட்டேன். இது இரு குடும்பங்களுக்குள் பிடித்து விட்டதால், உடனேயே திருமண நாளூம் குறித்து விட்டார்கள். வரும் 23ந் தேதியில், என்னுடைய திருமணம் திருப்பதியில் இருக்கிறது. நீ கட்டாயம் வர வேண்டும்: எனவும் சொல்லிச் சென்று விட்டான். அவனின் விருப்பப்படியே, மன்மதனும் அவனுடைய திருமணத்திற்கு திருப்பதிக்குச் சென்று வந்தான். நிகிலேஷும் அவன் மனைவி நிரஞ்சனாவும் தேனிலவுக்காக காஷ்மீர் சென்று விட்டார்கள்.
திருப்பதியிலிருந்து திரும்பி வரும்போது மன்மதனின் கண்களின் முன் அவனுடைய தாயார் சிவகாமியம்மாளின் உருவம் தோன்றியது. அது அவனிடம் :நீ எப்போது உன் நண்பனைப் போல் என்னை திருப்தி செய்வாய்” எனக் கேட்பதுபோலவும் தோன்றியது. நிகிலனுடைய தாயாரும் மற்ற சகோதரர்கள், சகோதரிகளும் அந்த திருமணத்தில் எத்தனை சந்தோஷமாக இருந்து கொண்டு, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றது அவன் முன் நினைவுக்கும் வந்தது. ஆமாம், தன் வீட்டில் ஒருவருக்கு திருமணமென்றால், சுற்றியிருக்கும் உறவினர்களுக்கு எத்தனை ஆனந்தம். தான் மட்டும் ஏன் தன்னுடைய தாயாரின் ஆசையை நிராகரித்து விட்டு, அவளையும் தன்னை விட்டு விலகி யிருக்குமாறு செய்தோம்:எனவும் அவன் மனதில் ஒரு மூலையில் அவனை சங்கடப்படுத்தியது. தானும் ஏன் தன் தாயாரிடம் போய் அவரின் விருப்பத்திற்க்கு இனைந்து, திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற ஒரு சின்ன ஆசைகூட அவனுள் தோன்றியது. அந்த ஆசையை உடனடியாக செயல் படுத்த தான் போனால், ஒரு வேளை தன்னுடைய சுயமரியாதை சிதைந்து போய்விடுமா? தன்னுடைய திரைஉலகச் சுதந்திரம் போய்விட்டால், தன்னால் இப்போது இருப்பது போல் நம்பர் ஒன்றாகத் திகழமுடியுமா? என பலவகையான எண்ணங்கள் அவனுள் உதித்துக் கொண்டிருந்தன. அவனும் கொஞ்சம் கொஞ்சமாக தன் நினைவுகளிடையே தூங்க ஆரம்பித்தான். அப்போதும் மனதிற்குள் தான் ஒருமுறை போய் அம்மாவை பார்க்க வேண்டுமென ஒரு உந்துதலும் அவனுக்குள் வந்தது. காலையில் எழுந்தவுடன் ஒரு முடிவுக்கு வரலாமெனவும் இருந்தான்.
மறுநாள் காலையில் அவன் எழுந்திருக்கு முன்பே அவனுடைய கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். ‘நிகிலேஷ்’எனவும் தெரிந்தது தன்னுடைய தேனிலவில் இருக்கும் நிகிலேஷுக்கு அத்தனை காலையில் தன்னுடன் பேச என்ன விஷயம் இருக்குமென யோசித்துக் கொண்டே, கைபேசியின் அழைப்புக்குப் பதில் கொடுத்தான். அப்போது நிகில் அவனிடம் “மதன்,நீ எங்கே இருக்கிறாய்?உன் வீட்டிலா அல்லது வேறு எங்காவதா? ; எனவும் கேட்க, அவனுக்குப் பதிலாக, நான் இப்போ என் வீட்டில்தான் இருக்கிறேன். என்ன விஷயம்?எனவும் கேட்டான். பதிலுக்கு நிகில் தான் உடனே அங்கு வருவதாகவும், வீட்டில் அவன் மட்டும் இருக்குமாறு செய்யவும் சொல்லி விட்டு, கைபேசியை முடித்து விட்டான். மதனுக்கு ஒன்றும் புரியவில்லை. நேற்றுத்தான் திருமணமுடித்துக் கொண்டு, தன் புதிய மனைவியுடன், தேனிலவுக்கு காஷ்மீர் செல்வதாகச் சொன்னவன், திடீரென்று இன்று காலை தன்னைத் தேடி தன் வீட்டிற்கு வரவேண்டிய அவசியம் என்னவாயிருக்குமெனவும் அவனால் யோசிக்க முடியவில்லை., நிகில் வரும் வரை காத்திருப்பதைத் தவிர, தன்னால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை எனவும் புரிந்து, காத்திருந்தான்
நிகில் ஃபொனில் சொன்னது போல், காலையிலேயே மன்மதனின் வீட்டிற்கு வந்தான். அவனுடைய முகம் புது மாப்பிள்ளைக்கான சந்தோஷத்துடன் இல்லை. மாறாக, தாங்கமுடியாத பாரம் மனத்தை அழுத்துவது போல் அவனின் முகம் துன்பத்தால் துடித்துக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்தவுடன் மன்மதனுக்கு எதுவும் புரியவில்லை. நேற்றுதான் அவன் தன் புதிய மனைவியுடன் காஷ்மீருக்கு விமானத்தில் கிளம்பிப் போனான். ஆனால் இன்று மிகவும் துக்கத்துடன் வந்திருக்கிறான். காஷ்மீரில் என்ன நடந்திருக்கும்? அது தெரியாமல் எந்த முடிவும் செய்ய முடியாது. அதனால், மன்மதன் நிகிலனை ஆதரவுடன் அனைத்துக் கொண்டு, தன் தனி அறைக்குப் போய் கதவைத் தாளிட்டான். பிறகு கேட்டான் :என்ன நடந்தது. ஏன் இப்படி கலவரமாக இருக்கிறாய்?காஷ்மீரில் ஏதாவது விரும்பத்தகாதது நடந்துவிட்டதா? சொல்: என பரிவாகக் கேட்டான். கொஞ்ச நேரம் அவனுடைய கேள்விக்கு நிகிலன் எதுவுமே சொல்லவில்லை. பிறகு மெதுவாகச் சொன்னான்.
“நான் தப்பு பண்ணிட்டேன். ஒரு சினிமா நடிகன் தனக்கென்று ஒரு பெண்ணை திருமணம் செய்தது தப்பு. என் அம்மா சொன்னாரே என்று நான் அந்தப் பெண்ணிடம் தனியாக எதுவுமே கேட்காமல், திருமணத்திற்கு சம்மதமும் சொல்லி, உடனடியாக திருமணமும் செய்து கொண்டேன். ஆனால், அவள் நான் எதிர்பார்த்தபடி இல்லை. அவன் என்னை மணம் செய்து கொண்டது, நான் ஒரு பிரபல நடிகன் என்பதாலும், தன்னுடைய சினேகிதிகளிடையே என் கணவர் ஒரு நடிகன் என பெருமை படுவதற்காகவும்தானாம். எங்களுடைய முதல் நாள், நான் அவளுடன் தனியாக இருந்தபோது, அவள் என்னிடம் கேட்டது என்ன தெரியுமா? நீங்கள் படத்தில் பல பெண்களுடன் காதல் காட்சிகளில் நடித்திருப்பீர்களே. அப்படி நடிக்கும்போது உங்களுக்கு எப்படி யிருக்கும் என்றுதான். நானும் அவளுக்கு, நான் நடிப்பதற்காக ஒப்பனை செய்து கொண்டு விட்டால், நான் நிகில் எனற ஒரு தனி மனிதன் என்பதை மறந்து விடுவேன், என்னுடைய கதாபாத்திரமாக மாறி, அந்த உணர்வுடன் ஒன்றி நடித்தால்தான், என்னால் முழு நடிப்பையும் வெளிக் கொண்டுவரமுடியும். படமும் வெற்றியடையும்” எனவும் சிரித்துக் கொண்டே சொன்னேன். பிறகு, நாங்கள் தனியாக இரவில் இருக்கும்போது அவளைத் தீண்டும்போதும் கேட்டாள் :என்னைத் தொடும்போது, உங்களுக்கு மற்ற நடிகைகளுடன் சேர்ந்து நடிக்கும்போது தொடுவீர்களே அப்படித்தான் இருக்கிறதா? எனவும் கேட்டாள். அதற்கும் நான் பதில் சொன்னேன் “நான் உன்னிடம் சொன்னதுபோல், படத்திற்காக ஒப்பனை செய்து கொண்டுவிட்டால், நான் அந்தக் கதையின்படி அந்த நடிகையின் காதலனாகத்தான் இருப்பேன். அப்படி இருந்தால்தான், என்னால் முழு உணர்ச்சிகளுடன் காட்சியில் நன்றாக நடிக்க முடியும். ஆனால், இப்போ நான் நடிகன் இல்லை, இன்று என்னுடைய வாழ்வில் முதல் நாள். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில், நீ ஏன் இப்படியெல்லாம் கேட்டு என் மூடை மாற்றுகிறாயா? நீ என்னுடன் படத்தில் நடிக்கும் கதாநாயகி இல்லை. என்னுடைய மனைவி. நான் அந்த ஒரு உறவில்தான், உன்னுடன் இருப்பேன. நம்முடைய வாழ்வில் நாமிருவரும் யாருக்காகவும் நடிக்க வேண்டாம். நாம் நமக்காக் வாழுவோம்” எனவும் பரிவுடன் சொல்லிவிட்டு, மீண்டும் அவளைத் தொட்டேன். ஆனால், அவளோ நீங்கள் சொல்லுவதை என்னால் நம்ப முடியாது. நீங்கள் இன்று என்னுடன் நடிக்கவில்லை, உண்மையாகவே இருக்கிறேன் என்று சொல்வது சரியல்ல. நான் இன்று உங்களுடன் இருக்கும்போதும், என் கண்களில் நீங்கள் படத்தில் மற்ற கதாநாயகிகளுடன் இனைந்து இருந்த காட்சிகள் தான் தெரிகின்றன. உங்களுக்கு இன்று என்னுடன் இருப்பதுதான் முதல் பெண்னுடன் இருக்கும் இரவா? உண்மையாகச் சொல்லுங்கள் நீங்கள் மற்ற பெண்களுடன் உல்லாசமாக இருந்ததில்லையா? உங்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் எல்லாம் வந்திருக்கிறதே. நானும் என் சினேகிதிகளும் எத்தனை முறை அவைகளையெல்லாம் படித்து, எங்களுக்குள் விவாதித்திருப்போம் என உங்களுக்குத் தெரியுமா?. அப்படியிருக்கும்போது, இன்று நீங்கள் என்னுடன் மனம் ஒப்பி, உண்மையாகத்தானிருக்கிறேன் என்று சொன்னால் என் மனம் அதை ஏற்க வில்லையே. அப்படி அந்தமாதிரி வந்த விஷயங்கள் எல்லாம் பொய்யா?அப்படியானால், நீங்களோ, சம்மந்தப்பட்ட அந்த பெண்களோ எந்தவிதமான மறுப்பும் சொல்லவில்லையே? எனவும் கேட்டாள். நானும் அவளுக்குப் புரியும்படியும் சொன்னேன், “நிரஞ்சனா, எங்கள் மாதிரி நடிப்புத் துறையில் இருப்பவர்கள் எப்பவும் இந்தமாதிரியான வம்பு ;பேச்சுக்களுக்கு ஆளாகத்தான் வேண்டும். எங்களைப் பற்றிவரும் சில விஷயங்கள், விளம்பரத்திற்காகக் கூட வந்த விஷயமாக இருக்கும். தொழில் போட்டி, பொறாமை காரணமாகக் கூட இருக்கலாம். நாங்கள் எல்லாவற்றிற்கும் மறுப்புச் சொல்ல ஆரம்பித்தால், எங்களால் நிம்மதியாக நடிப்பில் கவனம் செலுத்தி, எங்களின் முன்னேற்றத்தை அடைய முடியாது” எனவும் சொன்னேன். அப்படியும் அவள் விடாது என்னிடம் கேட்டால், “நான் கேட்டதற்கு நீங்கள் நேரடியாக பதில் சொல்லவில்லை. எனக்குமுன் உங்களுக்கு வேறு பெண்னிடம் தொடர்பு, உறவு இருந்ததா?எனவும் தீர்மானமாகக் கேட்டாள். அவளின் போக்கிரித்தனமான கேள்விகள் எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. நானும் பதிலுக்குக் கேட்டேன் “நான் பகிரங்கமாக படத்தில் நடிக்கிறேன். ஆனால், உங்கள் மாதிரி பெரிய வீட்டுப் பெண்கள் படிக்கும்போதே .நண்பர்கள் என்றும், ஜஸ்ட் லைக்தட் கம்பானியன் என்றும் மற்ற வயசுப் பிள்ளைகளுடன், பீச், சினிமா, பிக்னிக், ஹோட்டல் என்றெல்லாம் சுற்றுவது எனக்கும் தெரியும். ஏன் நீயும் அந்தமாதிரி உன் கல்லூரியில் படிக்கும்போது பழகி இருக்கக்கூடாது. அப்படியெல்லாம் நான் உன்னை சந்தெஹப்பட்டேனா? இல்லையே. என் தாயார் சொன்னார் நீ எனக்கு சரியான மனைவியாக இருப்பாய் என. நானும் உன்னைப் பார்த்தபின், மனதிற்குப் பிடித்ததால், சம்மதித்தேன். இன்று இத்தனைதூரம் என்னிடம் கேட்பவள் நான் உன்னைப் பார்க்க வந்த அன்றே கேட்டிருக்கவேண்டியதுதானே? அப்போது ஒன்றும் கேட்காமல், திருமணம் முடிந்து, நாம் சந்தோஷமாக தேனிலவுக்கு வந்த போதுதான் இப்படியெல்லாம் கேட்கனும்னு உனக்குத் தோன்றியதா?எனவும் கேட்டேன்.என்னை மணந்து கொள்ளும்போது நான் ஒரு நடிகன், படங்களில் பல பெண்களுடன் சேர்ந்து நடிப்பவன் எனத் தெரிந்துதானே சம்மதித்தாய். நான் இப்பவும் சொல்கிறேன் என் பழைய வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யாதே. நான் அப்படியோன்றும் சத்தியமானவன் இல்லை. நானும் சில பெண்களுடன் பழகியிருக்கிறேன். ஆனால், அதெல்லாம் ஒரு கால கட்டத்தில் முடிந்து போனது. இன்று, இந்த நிமிஷம் முதல், உன்னுடன் உண்மையாக இருப்பேன் என உனக்கு நான் சத்தியம் செய்து கொடுக்கிறேன். அப்படி சொன்னதால், நான் மிகவும் கெட்டவனென்று எண்ணாதே. நானும், உன்னுடைய கல்லூரி வாழ்க்கையில், உனக்கு யார் யாருடன் நட்பு உண்டு, எப்படியெல்லாம் இருந்திருப்பாய் என்வெல்லாம் கேட்கவோ, அதைபற்றி என் மனதில் வருத்தப்படவோ மாட்டேன். உன் பழைய வாழ்க்கை முடிந்து விட்டது. இன்று முதல் நாமிருவரும் புதிய வாழ்க்கை தொடங்கலாம் எனவும் பரிவாகச்சொன்னேன். அப்படியும் அவன் சம்மதிக்கவில்லை. மாறாக, என்னை முழுமையாக உடல் பரிசோதனைக்கு உடன்படச்சொன்னாள். அப்போதுதான், என்னிடம் எந்தவிதமான நோய்க்கு அறிகுறிகள் இருக்கிறதா எனவும், இரத்தப் பரிட்சை செய்து முழுமையாக நான் சுத்தமானவன் எனத் தெரிந்தால்தான் என்னுடன் வாழ முடியும் எனவும் சொல்லிவிட்டு, இன்றே நாமிருவரும் ஊருக்குப் போகலாமென்றும் சொல்லி விட்டாள். ;பிறகு எனக்கும் அவளுடன் சமாதானமாகப் போகமுடியவில்லை. அதனால், எனக்கும் என்னுடைய ஈகோவும் அதிகமாகியது. நடிகனென்றால் அப்படி ஒரு கேவலமா: அப்படியென்றால், அவள் என்னை மணக்கத்துடித்தபோது அவளுக்கு என் பிரபலம், பணம் முழுமையாகத் தெரிந்தது. மணமுடிந்து, என்னுடன் வாழ ஆரம்பிக்கும்போதுதான், என்னுடைய ஒழுக்கம் எப்படிப்பட்டது என அவளுக்கு சந்தேஹம் வந்திருக்கிறது. அப்படி ஒரு சந்தேஹப்படும் பெண்ணுடன் வாழ்நாள் பூராவும், நான் ஒவ்வோருநாளும் விளக்கம் சொல்லிக் கொண்டு வாழுவது தேவையா எனவும் எனக்குள் தோன்றுகிறது. அதனால், நானும் என்னுடைய மணவாழ்க்கை ஒரு நாள் கூட வாழாமல் முடிந்துவிட்டது என ஊணர்வோடு, ஊருக்கு வந்து விட்டேன். அவளை அவளுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டு, என் தாயாரிடம் மட்டும் எங்களுக்குள் நடந்த வாதங்களைச் சொல்லிவிட்டு, இனி என்னால் இப்படி முதல் நாளே என்னுடன் சந்தேஹப்படும் ஒரு பெண்ணுடன் எப்படி வாழமுடியும் எனவும் என் அம்மாவிடம் கேட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்து விட்டேன். இனி எங்களின் திருமணவாழ்க்கைப் பற்றி எத்தனைவிதமான வம்புகள் வெளியாகுமோ தெரியாது. என்னால் இனிமேல் பழையபடி உலகில் வெளி வரமுடியுமா” எனவும் கவலையாக இருக்கிறது: எனச் சொல்லி விட்டு, தன்னுடைய ஏமாற்றம் தாளாமல், வாய்விட்டு அழவும் செய்யலானான். மன்மதனும் அவனுடைய மனதில் இருக்கும் அழுத்தம் குறையுமட்டும். அவனும் அழட்டுமென மௌனமாக இருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக நிகிலும் தனக்குள் சமாதானமானான். அவன் மதனிடம் சொன்னான் “மதன், நம்மைப் போல் பிரபலமான நடிகரெல்லாம் மற்றவர்களைப் போல் ஒரு அழகான, மனைவி, குடும்பம் என்ற கூட்டில் நிம்மதியாக வாழமுடியாது. நம்மைவிட பிரபலமான மற்றதுறை மனிதர்கள் எல்லாருக்கும் கிடைக்கும் அமைதியான வாழ்வு நமக்கில்லையோஎனதான் தோன்றுகிறது. படித்த, நல்ல வசதியான நாகரீகமான குடும்பத்தைச் சேர்ந்த பெண் எனவும், என் தாயாரால் எனக்காக தேர்ந்தெடுத்த பெண் என்பதாலும், நானும் என் தாயின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். அந்தப் பெண் மிகவும் அழுத்தக்காரியாகத்தான் இருப்பாள் போலிருக்கிறது. பாரேன் மிகவும் நிதானமான, அமரிக்கையான பெண் போல் தோன்றியவள், எங்களுடைய முதல் மணநாளிலேயே, அதுவும், ஊரெல்லாம் பெருமையுடன் பார்க்க, நாங்கள் தேனிலவு என காஷ்மீருக்குப் போனபின், அவ்ள் தன்னுடைய சுயரூபத்தைக் காண்பித்திருக்கிறாளே? என்ன ஒரு சாமர்த்தியம். நாமெல்லாம் அவளுடைய நடிப்பின் முன் நிற்கக்கூட முடியாது போலத்தான் இருக்கிறது. நாமும் சகல உணர்ச்சிகளும் உள்ள ஒரு சராசரி மனிதன் தானே. நம்முடைய தொழில் நடிப்பது. அதை இந்த சமூகமும் ஏற்றுக் கொண்டுதானே இருக்கிறது. அப்படியிருக்க, நடிகன் என்றால் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை வாழ மாட்டான். அவன் ஒரு ஒழுக்கத்துடன் இருக்க மாட்டான் என பல பெண்கள் நினைப்பது எத்தனை தவறானது. எல்லாத்துறைகளிலும் பலதரப்பட்ட ஆண்கள் இருப்பது சகஜம்தானே. நம்முடைய பிரபலமே நமக்கு எதிரியாகிது. நம்மைப் பற்றி, தங்களுடைய விளம்பரத்திற்காக, தன்னிச்சையாக உண்மைஎன்னவென அறிய முற்படாமல், தங்களுக்குக் காதில் பட்டவைகளை தன்னுடைய கற்பனைக்கேற்ப, பத்திரிக்கை விளம்பரம், வியாபாரம் ஒன்றையே குறியாகக் கொண்டு, கண்டபடி எழுதி வருவதைத்தான் இப்படிப்பட்ட பெண்களும் உண்மை என எண்ணி விடுகிறார்கள். நாமட்டும்தான் வாலிப வயதில் நிலை தடுமாறுகிறோமா? நம்மைப் பற்றி மட்டும் இப்படி ஒரு வதந்தி இருப்பது சரியா? இதனால் யார் பாதிக்கப்படுகிறார்கள் பார். என்னைப் போன்ற ஒரு நடிகந்தானே. என்னை நடிகன் என் தெரிந்துதானே, திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள். பிறகு, தன்னுடைய மனம் போனபடி பேசி, என்னை எத்துனை துன்பத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாக்கி விட்டான். நானும் சுயமரியாதை உள்ளவந்தான். அவள் கேட்டாள் என்பதற்காக நான் ஒரு போதும் மருத்துவ பரிசோதணைக்கோ, இரத்தப் பரிசோதனைக்கோ உட்படப்போவதில்லை. இதனால் என்ன வாகும் என் திருமண வாழ்க்கை முடிந்து விடும். நல்ல வேளை இப்படி ஒரு அற்பமான குணம் கொண்ட ஒரு பெண் தன்னை முதல் நாளே வெளிப்படுத்திக் கொண்டாலே அதுவே சந்தோஷம். நானும் அதிகம் பாதிக்கடுவதற்கு முனென்னை திடப்படுத்திக் கொள்வேன். போதும் இப்படிப்பட்ட வாழ்வு எனக்கு. நான் உன்னைப் போல் திடமாக, நடிகனின் வாழ்வு எப்படி இருக்கவேண்டுமெனபதில் உறுதியாக இருப்பேன். “ எனப் பலப்பல பேசி, தன்னுடைய மனக்குமுறல்களை கொட்டினான். அவனுள் இருக்கும் ஆன்மை செத்துப் போகவில்லையே. அதன் துடிப்பும், வேகமும் இருக்கத்தானே செய்யும்.
நிகிலன் அமைதியாக நேரம் வேண்டுமென்பதை உணர்ந்த மதனும் மௌனமாகவே இருந்தான். அவன் மனதிலும் ஒரு நிம்மதி கிடைத்தது. எங்கே தான் இன்றே காலையில் அம்மாவைப் போய் பார்த்து, அவளுடைய விருப்பம்போல் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்தோமே எனவும் நினைத்தான். தன்னுடைய பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்த நிகிலனின் வாழ்விலேயே இப்படி ஒரு நிலை என்றால், எந்த விதமான ஒழுக்கத்துக்கும் ஒப்பாது, தன்னுடைய மனம் போன ;போக்கில் இருக்கும் தன்னுடைய வாழ்வில் ஒரு பெண் வந்தால், அவளால் என்னென்ன பிரச்சினைகள் வருமோ? நல்ல காலம். நாம் இப்படியே நம்முடைய காலத்தை முடித்துக் கொள்ளலாம். இருக்கும்வரை வாழலாம். பின், நம்முடைய சொத்துக்களையெல்லாம், தன் தாயார் நடத்துக் முதியோர், மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கே கொடுத்துவிடலாம். அதுவே நல்லது எனவும் தன்னை திடப்படுத்திக் கொண்டான்.
ஒரு முறை திருந்த நினைத்தவனுக்கு, ஒரு தடங்கல் நிகிலனின் மூலம் வந்தது. பிறகு, மதன் தன் இச்சைப்போலத்தான் இருந்தான். ஆனால், அவன் யாரிடமும் அதிகமாகப் பழகாததால், அவனுடைய செயல்களவனை அதிகம் பாதிக்க வில்லை. என்னதான் புத்திசாலித்தனமாக நடப்பதாக மதன் இருந்தானோ, அதற்கும் ஒரு முறை ஒரு எச்சரிக்கை வந்தது.
ஒருமுறை தன்னுடன் புதிதாக நடிக்கத் தேந்தெடுத்த ஒரு புதிய சின்னப் பெண்ணை தன்னுடன் கூட்டிக் கொண்டு, உல்லாசமாக இருக்கச் சென்றான் மதன். அந்தப் பெண்னும், சின்னப்பெண் என்றாலும், திரைஉலகத்தைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள். அதனால் அவளும் மதனின் விருப்பத்திற்கு இனைந்தே இருந்தாள். ஒரு வாரகாலமாக இருவரும் சேர்ந்து இருந்தார்கள். அவர்களிருவரும் சேர்ந்து இருந்தபோது ஒருமுறை அந்தப் புது நடிகை சுனந்தா, மதனின் முதுகிலும், மார்பிலும் சின்னச்சின்னதாக கரும்புள்ளிகளைக் கண்டாள். உடனே அதுபற்றி மதனிடமும் காட்டி, ‘மதன் நீங்கள் உங்களின் மேக்கப்மேனை மாற்றியிருக்கிறீர்களா? எனவும் கேட்டாள். ஏனென்று கேட்டவனிடம், “இதைப் பாருங்கள், உங்களின் உடம்பில் சின்னசிசின்னதாக கரும்புள்ளிகள் இருப்பதை. நீங்கள் எப்பவும் உபயோகிக்கும் கிரீமை மாற்றிவிட்டீர்களா, அல்லது வேறு ஏதாவது காரணமா? உடனே உங்களுடைய மருத்துவரைப் பாருங்கள், உங்களில் மின்னலடிக்கும் சிவப்பு நிறந்தான் உங்களுக்கு மிக்க பலமாக இருக்கிறது. உங்களின் நிறம் மாறினால், பழையபடி நீங்கள் பிரபலமாக இருக்க முடியாது. உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்”எனவும் பரிவாகத்தான் சொன்னாள். அவனும் தன்னுடைய மார்பை கண்ணாடியில் பார்த்து, சின்னச்சின்னதாக இருக்கும் கரும்புள்ளிகளைக் கண்டான். அவனுக்கும் மனதில் சின்ன கவலை ஏற்பட்டது. தான் தன்னுடைய மேக்கப்கிரீமையோ, அல்லது தன்னுடைய உணவுப் பழக்கத்தையோ மாற்றவில்லை. அப்படியிருக்க, திடீரென்று இப்படி தன்னுடைய உடலில் கரும் புள்ளிகள் தோன்றக் காரணம் என்ன? எனவும் புரியவில்லை சுனந்தா சொன்னபடியே, உடனேயே தன்னுடைய அந்தரங்க மருத்துவரை அழைத்துப் பேசினான். அவரோ அவனை உடனே தன்னுடைய வீட்டிற்கு வரச்சொன்னார். மதனும், தன்னுடன் சுனந்தாவையும் கூட்டிக் கொண்டே மருத்துவரைப் பார்க்கச் சென்றான்.
மதனுடன் அவனுடைய மருத்துவரின் வீட்டிற்குச் சென்ற சுனந்தாவை, மதன் தன்னுடைய காரிலேயே அவளை வீட்டில் விட்டுவிட்டு வருமாறு தன்னுடைய ட்ரைவருக்குச் சொன்னான். சுனந்தாவும் காரில் தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். மருத்துவர் மதனின் உடலை நன்றாகப் பரிசோதித்தார். மெதுவாக அவனிடம் கேட்டார்.
“என்ன நடந்தது. நீ எங்காவது உனக்குப் பழக்கமில்லாத அல்லது போதை வேண்டுமென்பதற்காக, எதாவது மதுபானத்தைக் குடித்தாயா? உனக்கு ஒத்துக் கொள்ளும் வகையைச் தவிர மற்றதெல்லாம் நீ தொடக்கூடக் கூடாது என நான் கண்டிப்பாகச் சொல்லியிருந்ததை மறந்து விட்டாயா? நீ இப்போது உன் கூட வைத்திருக்கும் இந்தப் பெண் எப்படிப்பட்டவள். உனக்கு முன் அவளுக்கு வேறு யாருடனாவது பழக்கம் இருந்திருக்குமா?” எனவும் பரிவாகக் கேட்டார். அவர் கேட்டதைப் பார்த்தவுடன் மதனுக்கு மனதிற்குள் ஒரு சின்ன அச்சம் வந்தது. :மாமா, என் உடம்பில் என்ன குறை. நான் புதிதாக எந்தவிதமான மதுவையும் பழக வில்லை. எனக்கு எப்போதும் ஒத்துக்கொள்ளும்வகையையே, அதுவும் மிகவும் கட்டுப்பாடான அளவில்தான் எடுத்துக் கொள்ளுகிறேன். இப்போதெல்லாம், நான் என் வீட்டிலியே எனக்குத் தேவையான மதுவகைகளை, வைத்திருப்பதால், நான் குடிப்பதற்காக யாரி வீட்டிற்குமோ, அல்லது வேறு ஒருபொது இடத்திற்கோ ;போவதில்லை. யாருக்காக இல்லாவிட்டாலும், என் தொழிலில் நான் பின்னடையாமல் இருக்கவாவது, என்னுடைய வெளி பழக்கங்ககளையெல்லாம் குறைத்துக் கொண்டு விட்டேன். இப்போ என்னுடன் வந்த பெண் ஒரு புதியநடிகை. இப்போதுதான் கல்லூரி படிப்பு முடித்து விட்டு, மீடியாவின் மூலம் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு, என்னுடன் முதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாள். அவளுக்கு ஒரளவு திரைஉலகத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதால், தன்னுடைய முன்னேற்றத்திற்காக, டைரெக்டர்களின் விருப்பப்படி சில சமயம் இருந்திருப்பாள். இப்போது தான் என்னுடன் முதல் முதலில் வந்திருக்கிறாள். அவள் மிகவும் சின்னப் பெண் என்பதால், நானும் என் கட்டுப்பாட்டை மீறவில்லை. கூடிய வரையில் அவளுடன் ஒரு நட்புரீதியில்தான் பழகினேன். இன்றுகூட அவள்தான், என் உடம்பில் இருக்கும் சின்னச்சின்ன கரும்புள்ளிகளைக் கண்டு என்னைக் கேட்டாள். அதன் பிந்தான், நான் உடனடியாக் உங்களைச் தொடர்பு கொண்டு, இங்கு வந்தேன், இந்த நிமிஷம் வரை அவளை நான் எல்லைமீறித் தொடவில்லை. நீங்கள் தயவு செய்து என்னை நம்புங்கள்” என மிகவும் கழிவிரக்கத்துடன் சொன்னான். மேலும் கேட்டான் “மாமா, எனக்கு எந்தனால் திடீரென்று உடம்பில் இப்படி கரும் புள்ளிகள் வந்திருக்கிறது, எதேனும் கெட்ட நோய்க்கு இது அறிகுறியா? என மிகவும் பயத்துடன் கேட்டான். அதைக் கேட்ட அவனுடைய குடும்ப நண்பரும் மருத்துவருமான டாக்டர் இராஜசேகரன் அவணைப் பரிதாபமாகப் பார்த்தார். “மதன் உனக்கு இப்போ ஒரு பயம் வந்திருக்கிறதே அது எதனால் என உனக்குச் தெரியுமா? உன் பழக்க வழக்கங்கள் தான் காரணம். உன்னுடைய தாயாரும், நானும் உன்னிடம் சொன்ன போதெல்லாம் உன் இளவயது திமிரில் நீ எங்களின் பயத்தை மதிக்கவில்லை. இப்போ அதுவே இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தியபின் உனக்குள் ஒரு பயம் வந்திருக்கிறது. ஆனால், நீ நினைக்கிறபடி இது ஒரு தவறான நோய்க்கு அறிகுறியாக இல்லை. எதற்கும் நான் உனக்கு உடனடியாக ஒரு இரத்தப் பரிட்சை செய்து பார்க்கிறேன். அதன் ரிசல்ட் வந்தவுடன், நான் மேற்கொண்டு உனக்கு எந்த மாதிரி சிகிச்சை செய்யனும் தெரிந்து கொள்வேன். ஆனால், இனி மேல் என்ன காரணத்தால் உனக்கு இப்படி ஒரு உடல் மாற்றம் இருந்தாலும், நீ உன் வாழ்க்கையில் ஒரு சில தீவிரமான ஒழுக்கங்களைக் கடை பிடிக்க வேண்டும். முதலில் இன்று முதல் எந்த விதமான மதுவோ, மாதர்களோ ;உன் வாழ்க்கையில் இருக்கக்கூடாது. நீ எனக்கு இது பற்றி ஒரு உறுதிமொழி கொடுத்தால்தான், நான் என்னுடைய சிகிச்சையை ஆரம்பிப்பேன்.” என கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
டாக்டரின் முடிவுக்கு மதனும் உறுதி அளித்தான் தன் மனதிற்ட்குள் வேண்டிக் கொண்டான் “பகவானே, நான் இத்தனை நாட்கள் உன்னை மறந்திருந்தேன். என்னுடைய அம்மாவின் பேச்சைக் கேட்காமல், மனம் போனபடி வாழ்ந்து விட்டேன். அது தப்புத்தான் என இப்போ உணருகிறேன். என்னுடைய திரைஉலகப் பிரபலம் அழிந்து போகாமல் நீதான் எனக்குச் துனை இருக்க வேண்டும். நான் இன்று டாக்டரிடம் மட்டுமல்ல, உன்னிடமும் சத்தியம் செய்கிறேன் “இனிமேல் நான் ஒருபோதும் ஒழுக்கம் மீற மாட்டேன். என்னை இப்போ காப்பாற்றிவிடு:என மனமுறுக கண்களில் நீரோடு வேண்டிக் கொண்டான். மதனின் முகத்திலிருந்தே அவன் எத்தனைதூரம் துன்பம் கொண்டிருக்கிருக்கிறான் எனப் புரிந்து கொண்டவர், ஒரு முறை மனதிற்குள் நினைத்தார் “அவனுடைய இரத்தத்தில் ஒரு சின்ன குறைபாடுதான் இந்தக் கரும்புள்ளிகளுக்கு காரணம், கவலைப்படும்படி ஒன்றும் இல்லை” எனச் சொல்லி அவனிடம் உண்மையை சொல்லிவிடலாமா என. அதேசமயம் இப்படி ஒரு பயத்தில் அவனை வைத்திருக்காவிட்டால், அவன் கடைசி வரை தன்னுடைய இஷடம் போல் வாழ்ந்து, அழிந்து விடுவான் எனவும் புரிந்ததால், தன்னுடைய பயமுறுத்தலிலேயே அவன் கொஞ்ச நாள்கள் இருக்கட்டும் எனவும் தீர்மானித்து கொண்டார். ;பிறகு அவனுக்கு தன்னுடைய வீட்டிலேயே இரத்தப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்துகொண்டார்.
தன்னுடைய வீட்டிற்கு வந்த சுனந்தாவிற்கு திடீரென்று மதனின் உடல் நலக் குறைவு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவளுக்குள் ஒரு கர்வம் இருந்தது. தன்னுடைய முதல் திரைபடமே ம்தனுடன் நடிக்கும் படமாக இருந்ததே. அவளுடைய பலநாள் ஆசை இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. ஆனால் அதற்குள் ம்தனுக்கு உடல் நிலை சரியாக இல்லையே. அவனால் தொடர்ந்து நடிக்க முடியுமா அல்லது தன்னுடைய முதல் படமே பாதியில் நின்று விடுமா?எனவும் மனதில் ஒரு பயம் உண்டானது. அவளுக்கு சின்ன வயதிலிருந்தே எந்த ஒரு விஷயத்தையும் தன்னுள் பூதமாக்கிப்பார்த்து, உடனடியாக் தன்னுடைய சினேகிதிகளிடம் அதைப் பற்றி பேசுவதுதான். அப்படியே இன்றும் அவளுக்கு முதலில் யாருடனாவது தானறிந்த மதனில் உடல்குறைவைப் பற்றிப்பேச வேண்டுமென்பதுதான். அவளுடன் மீடியா மூலம் தேர்வுசெய்யப்பட்ட மின்மினியிடம் பேச விரும்பினாள். உடனேயே ஃபொனிலவளுடன் தொடர்பும் கொண்டாள். அப்போது மின்மினியுடன் ஒரு பத்திரிகை நிருபரும் இருந்தார். அவர் சுடச்சுட உண்மையில்லாத ஒரு திரைப்படம் சம்பந்தப்பட்ட செய்திகளையே மிகவும் பரபரப்பாக வார்த்தை ஜாலங்களுடன் வெளியிடுவதில் மிகவும் சாமர்த்தியம் கொண்டவர். அவருடைய பரபரப்பான கிசுகிசுக்களுக்கு மக்களின் மத்தியில் மிகவும் வரவேற்பும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவருக்கு அன்று சுனந்தா தன்னுடைய தோழீ மினிமினியுடன் பேசியது பெரிய விருந்தாகி விட்டது. அவ்வளவுதான், உண்மையில் என்ன நடந்திருக்கும் என சம்மந்தப்பட்ட மதனிடம் கேட்கும் வரையில் அவரால் பொறுமையாக இருக்கமுடியவில்லை. தன்னுடைய எழுத்தில்தான் மதனைப் பற்றிய செய்தி முதல் முதலாக வர வேண்டுமென ஆசையால், அன்று மாலைச் செய்தியாகவே மதனுக்கு உடல் நிலை குறைபாடென்றும், அதனால் அவன் அதற்காக மிகவும் இரகசியமாக தன்னுடைய குடும்ப மருத்துவர் டாக்டர் இராஜசேகரனிடம் வைத்தியத்தில் இருப்பதாகவும், மதனும் சுனந்தாவும் மிகவும் உல்லாசமாக இருந்த நேரத்தில், மதனின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக அவனுடைய யோசனையால் சுனந்தாதான் அவனை அவனுடைய குடும்ப மருத்துவர் வீட்டிற்கு அவசராவசரமாக அழைத்துச் சென்று, நேற்று பிற்பகல் முதல் மதன் அந்த மருத்துவரின் நேரடி பார்வையில் இருப்பதாகவும், அவரைத்தவிர மதனை அவனுடைய வேலையாட்கள் தவிர மற்றவர் யாரையும் பார்க்கவும் தடை யிருப்பதாகவும், மதனின் திடீர் உடல் நலக் குறைவால் அவனுடைய இரசிகர்களின் மனம் உடைந்து போய் அவர்கள் எல்லாரும் அவன் கூடிய சீக்கிரம் குணமாக வேண்டுமென பல கோவில்களில் அவனுக்காக பூஜைகள் செய்வதாகவும், எப்படியாவது அவனைப்பார்க்க வேண்டுமென இரசிகர்கள் கூட்டம் அவன் இருக்கும் இராஜசேகரனின் வீட்டின் முன் கூடியிருப்பதாகவும், அதைத்தவிர திரைப் படத்தைச் சேர்ந்த பெரிய பெரிய படத்தாயாரிப்பாளர்கள், டைரெக்டர்கள் எல்லாம் மிகவும் கவலையுடனும், இருப்பதாகவும், பொய்யான கற்பனையில் பந்தல் போட்டு விட்டான். அவ்வளவுதான், மாலை பத்திரிக்கை செய்தி வந்ததைப் பார்த்து, உடனடியாக பிரபல டி.வி. சேனல்களெல்லாம் உடனடியாக மதனின் உடல் நிலைப்பற்றிய செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு, விஷயத்தை இன்னும் தீ . மருத்துவரின் வீட்டில் இருந்த மதனுக்கு தன்னைப் பற்றிய ஒரு அவசர செய்தி மீடியாக்களிலும், பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. தான் உடல் நிலைக்காக மருத்துவரின் வீட்டிற்கு வந்தது, தன்னுடைய டிரைவரைத்தவிர, புதிய நடிகை சுனந்தாவிற்கு மட்டும் தான் தெரியும். அப்படியிருக்கு திடீரென பத்திரிகையிலும், மீடியாக்களிலும் தன்னைப் பற்றி அப்பாடியோரு செய்தி பரபரப்பாக வெளியாகியதும் அவனுடைய அதிர்ச்சி அதிகமாகியதும், தன்னைக் கூட கேட்காமல், அப்படியோரு செய்தி வந்தது அவனுடைய வாழ்க்கையில் எத்தகைய திருப்பங்கள் ஏற்பட வழியாகி விட்டது எனவும் நினைத்து மனதிற்குள் குமைந்தான். அதே சமயம் மருத்துவரும் அவனிடம் :”என்னப்பா, என்னைக் கூடக் கேட்காமல் அப்படி என்ன ஒரு அவசரம் உனக்கு உடனடியாக பத்திரிக்கைக்கும், மீடியாக்களுக்கும் தெரியப் படுத்தியிருக்கிறாய்” எனவும் கேட்க, அவனோ, அவரிடம் தான் இந்த நிமிஷம் வரை தன்னுடைய உடல் நலக் குறைபாட்டைப் பற்றி யாரிடமும் பேசவில்லை எனவும், இந்த விஷயம் கண்டிப்பாக புதிய நடிகை சுனந்தாவின் மூலம் தான் வெளியாகி யிருக்குமென அவரிடம் சொன்னான்.
மதன் மருத்துவரிடம் “மாமா இந்த விஷயம் இருக்கட்டும். எனக்கு மிகவும் முக்கியமானது எனது மெடிகல் ரிச்ல்ட்தான். அதைப் பற்றித்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது.” எனவும் கேட்டான். இராஜசேகரனின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. “மதன் உனக்கு பயப்படும்படியாக எதுவும் இல்லை. உன்னை எதோ சில நீர்ப்பூச்சிகளின் கடித்திருக்கிறதுபோல் இருக்கு. அதனால்தான் உன் இரத்தத்தில் விஷம் பரவியுள்ளது. உன்னுடைய இரத்தத்தில் அந்த விஷத்தில் தாக்குதலால், இருந்த சிகப்பு அணுக்கள் மடிந்து விட்டன. அதனால்தான் உன் உடலில் சின்னச்சின்ன கரும்புள்ளிகள் தோன்றியிருக்கு. நான் உனக்கு சிகிச்சை செய்கிறேன். கொஞ்ச நாட்கள் தொடர்ந்து ஊசி போட்டுக்கொள். உன் இரத்த்தில் இருக்கும் விஷங்கள் இறங்க வேண்டும். மேலும் உன் உடம்பில் இரத்த்த்தின் சிகப்பு அணுக்கள் உற்பத்தி ஆக வேண்டும். அப்போதுதான் உன் உடம்பில் காணும் கரும்புள்ளிகள் மறையத் தொடங்கும். எப்படியும் நீ முழுமையாக குணமாக சிலகாலம் ஆகும். அதுவரை நீ எந்த விதமான படத்திலும் நடிக்க வேண்டாம். கொஞ்ச நாள் நீ முழுமையாக ஓய்வு எடுத்துக் கொள். உனக்கும் கொஞ்சம் ஓய்வு அவசியம். பிறகு நீ நடிக்கலாம். ஆனால், மறந்து விடாதே. என்னிடம் சத்தியம் செய்திருக்கிறாய். உன் வாழ்க்கையில் பழைய குணங்கள் வரக்கூடாது. உன் அம்மா செய்த புண்ணியம் உனக்கு பகவான் துணை இருக்கு. அதனால்தான், உன் உடம்பில் பரவிய விஷத்தில் தன்மை தீவிரமாக இல்லை. உன் கடந்த காலங்களில் நீ எப்படி யிருந்தாலும், உன் இரத்தம் சுத்தமாகவே இருக்கிறது. கவலைப் பட வேண்டாம்.” எனவும் சொல்லிவிட்டு, பிறகு கேட்டார் “நீ இந்த பத்திரிக்கைகளுக்கு என்ன செய்தி அளிக்கப்போகிறாய்? நான் உன் மருத்துவர் என்ற முறையில் உன் உடல் நிலையைப் பற்றி சொல்லலாமா? எனவும் கேட்டார். அதற்கு மதன் தேவையில்லை மாமா. நீங்கள் உண்மையிலேயே என் இரத்தத்தில் கலந்த சாதாரண பூச்சிக் கடியின் விஷத்தைப் பற்றிச் சொன்னாலும், பரபரப்புச் செய்திகளுக்காக அலையும் சிலர் அதையும் நீங்கள் என்னுடைய அந்தரங்க மருத்துவர் என்பதால், உணமையை மறைத்து, பொய்யான சில சமாதானங்களைச் சொல்கிறீர்கள் என்றுதான் மறுபடியும் தங்களின் வழக்கப்படியே செய்திகளை வெளியிடுவார்கள். அவர்களின் அலங்காரமான விமரிசனத்தின் முன், உண்மை மறைந்துதான் போகும். விளம்பரத்தில் வாழும் என்னைப் போன்ற சிலர் இத்தகைய விளம்பரங்களையும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். எனக்கும் நான் இது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கையின் பாதிப்பு இருக்கு. என்னையும் நான் சிறிது மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். அதனால் என்னைப் பற்றிய செய்திகளை நான் மறுக்கவோ, அல்லது அது அப்படி வெளிவரக் காரணமாக இருந்தவர்களையோ வெறுக்கவில்லை. என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு திருப்பம் வேண்டுமென்றும் நான் உணருகிறேன். இனி நான் என்னசெய்ய வேண்டுமென யோசிக்க எனக்கும் சில காலம் அவகாசம் வேண்டும். நான் கொஞ்ச காலம் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் இருக்க விரும்புகிறேன். அதற்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்து இருக்கிறது. அதுவும் ஆண்டவனின் தீர்ப்புத்தான். இந்த சூழ்நிலையில் நான் இருக்கும் இடம் தெரியாமல், விளம்பரமின்றி அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என எனக்கு யோசனை சொல்லுங்கள்” எனவும் கேட்டான்.
இராஜசேகரனும் “அதுவும் சரிதான். எனக்கு உன் தனிப்பட்ட வாழ்க்கைதான் முக்கியம். உன் திரைஉலகத்தில் உன் நிலை எப்படியானாலும் எனக்குக் கவலையில்லை. அப்படியே பார்த்தாலும், இன்னும் கொஞ்ச காலத்தில், உனக்கு மாறாக இன்னோருவர் இந்த திரைஉலகில் உதயமாகத்தான் போகிறார். அதனால், நீமட்டும் இதற்கு சாஸ்வதமானவன் இல்லை. உன் விருப்பப்படியே நான் யார் கேட்டாலும் :மதனு என்னுடைய தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவருடைய உடல்நிலையைப் பற்றி நான் யாரிடமும் எதையும் பேச விரும்பவில்லை. மதனும் தன்னுடைய உடல்நிலையைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரிவிக்க வேண்டாமென என்னிடம் திட்டமாகச் சொல்லிவிட்டதாகச் சொல்லிவிடுகிறேன். கொஞ்ச நாட்கள் ஆனால், இந்த பரபரப்பு கட்டாயம் அடங்கித்தான் போகும். அதனால் நீயும் உன் விருப்பப்படியே எங்காவது ஒரு இடத்திற்கு அமைதியாக இருக்க விரும்பினால், இன்னும் கொஞ்ச நாட்கள் ஆன பின், உன் சிகிச்சை பூர்த்தியானபின், போய்வரலாம்: எனவும் சொல்லிச் சென்று விட்டார்.
நாட்கள் சென்றன. மதன் எதிர்பார்த்தபடியே கொஞ்ச காலங்கள் அவனைப்பற்றி மிகவும் மோசமான விளம்பரங்களும், வதந்திகளும் பரவிக் கொண்டுதான் இருந்தன. மதனிடமிருந்து எதற்கும் எந்தவிதமான மறுப்போ, பதிலோ வெளிவராததால், மக்களின் ஆர்வம் குறைந்து போயிற்று. திரைவானில் மின்னிய ஒரு நட்சத்திரம் இருட்டில் வாழ்ந்தது. மதன் தன் மனதில் தன் அம்மாவின் பரிவும், பாசமும் நிழலாக வந்தது. அவனும் தான் இத்தனை நாட்கள் மன்மதனாக இருந்து அடைந்த சுகம், சௌக்கியம், வாழ்வு எல்லாவற்றையும் போறும் எனத் தீர்மானத்திற்கு வந்தான். அதனால் அவன் தன்னுடைய அந்தரங்க காரியதரிசியை ஒரு நாள் வரச் சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அந்த நல்ல மனிதன் மதனின் திரைஉலக வாழ்வு முடியும் எனத் தெரிந்தவுடனே, மற்றோரு நடிகனின் அந்தரங்க காரியதரிசியாகப் பணியாற்றுகிறார் என்பது.. அது அவனுக்கு ஒரு அதிர்ச்சியையும் கொடுக்க வில்லை. இதுமாதிரி தன் உலகில் நடப்பது சகஜந்தான் எனவும் உணர்ந்தான். தன்னுடைய டிரைவரை அழைத்தான் அவன் உண்மையிலேயே மாதவனிடம் மிகவும் பரிவும் பாசமும் கொண்டவன். அதனால் அவன் அவனைவிட்டு வேறு எங்கும் போகவில்லை. அவனுடன் ஒரு நான் இராஜசேகரனின் அனுமதியுடன், தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றான். அங்கிருந்த அவனுடைய பெற்றோரால் நடத்தப்படும் ஆனாதை இல்லத்திற்குச் சென்றான். அங்கு அவனை அடையாளம் கண்டு கொள்ள ஒருவர்தான் இருந்தார். அதுதான் அவனின் அம்மாவின் வளர்ப்புப் பிள்ளை சிவதாசன். மாதவனைக் கண்டதும் அவனுடைய அதிர்ச்சி அதிகமாகியது. அவனும் மாதவனைப் பற்றிய வதந்திகளைப் படித்திருந்ததால், மாதவனை நேரில் பார்த்தவுடன் சந்தோஷமும், ஆனந்தமும் அடைந்தான். “மாதவா”என் அழைத்துக் கொண்டே வந்தவன், திடீரென்று தன்னை சமாளித்துக் கொண்டு :மன்னித்துவிடுங்கள். எனக்கு உங்களைப் பார்த்தவுடன், அம்மாவின் நினைவும், நாம் சிறு வயதில் விளையாடியவைகளும்தான் நினைவுக்கு வந்தன. அதனால்தான், நான் உங்களின் பெயரைத் தவறாகச் சொல்லிவிட்டேன்” எனவும் சொல்ல, மாதவன் “அவனைக் கட்டிக்கொண்டு, :சிவா, நீ சொன்னது சரிதான். நான் இப்போ மாதவனாகத்தான் வாழவிரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை மன்மதன் காணாமல் போய்விட்டான். உன்னுடைய மாதவந்தான் வந்திருக்கிறேன்: எனச் சொல்லிக் கொண்டே அவனுடைய அனைப்பில் இல்லத்தினுள் சென்றான்.
சிவதாசன் தன்னுடன் வந்த மாதவனைத் தன்னுடைய வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். அங்கு அவனுடைய மனைவி, குழந்தை காமினியைப் பார்த்து சந்தோஷப்பட்டான். குழந்தைக்கு யார் பெயரை வைத்திருக்கிறாய் எனக் கேட்டவுடன் அவனுடைய மனைவி “நம்ம அம்மாவின் பெயர்தான் வைத்திருக்கிறேம். ஆனால் அவரின் பெயரை சொல்லிக் இந்தக் குழந்தையைக் கூப்பிட்டால் அது அவருக்கு மரியாதைகுறைவாக இருக்குமென்று, இவர்தான் அவளைக் :காமினி” எனக் கூப்பிடச்சொன்னார.. அதற்கு சிவதாசன் :ஆமாம் அம்மாவின்பெயர் சிவகாமினி. அவருடைய பெயர்த்தியின் பெயர் காமினி எனச் சொல்லி பெருமையாகச் சிரித்தான். மாதவனுக்கு அப்போது புரிந்தது. தன்னுடைய அம்மா அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. :மாதவா நீ என் வயிற்றில் பிறந்து என்னிடம் வளர்ந்தவன். சிவதாசன் என் மனதில் பிறந்து, என்னிடம் வளருபவன். இருவரும் எப்போதுமே எனக்கு ஒன்றாகத்தான் இருப்பீர்கள்.: எனச் சொற்கள் அவனின் நினைவில் உலவியது. அம்மா சொன்னது சரிதான். வயிற்றில் பிறந்த நானென் சொந்த ஆசைகளுக்குத்தான் அடிமையானேனே தவிர, என்னை வளர்த்த அம்மாவின் ஆசைகளை நான் மதிக்க வில்லை. ஆனால், மனதில் வளர்ந்த சிவதாசனோ தன்னுடைய அம்மாவின் மனம் நிறையும்படி வாழ்ந்து வருகிறான். எப்படியோ அம்மா ஆசைப்பட்டபடியே அவளும் தன்னுடைய பிள்ளை, குடும்பம், பேயர்த்தி என வாழ்ந்து விட்டுதான் போயிருக்கிற்ள். எனவும் மனதில் திருப்தியடைந்தான். பிறகு எல்லாரும் இரவில் உறங்கச் சென்றுவிட்டார்கள்.
மறுநாள் காலையில் சிவதாசன் மாதவனிடம் :இனிமேல் உன் திட்டம் என்ன. நீ திரும்பவும் படங்களில் நடிக்கப் போகிறாயா அல்லது வேறு ஏதேனும் தொழில் செய்யப் போகிறாயா> எனக் கேட்டான். மாதவன் எனக்கு இனி நடிக்க விருப்பமில்லை. உன்னிடம் சொன்னதுபோல் மன்மதன் இனிமேல் இல்லை. இந்த மாதவந்தான் இருப்பேன். முதலில் நான் என் தாயார், தந்தையாருடைய இந்த ஆனாதை இல்லத்திலிலேயே இருக்க விரும்புகிறேன். நான் இங்கு இருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம். அம்மாவின் விருப்பப்படியே முதலில் இந்த இல்லத்தை வசதியானதாக மாற்றலாம். பிறகு மற்றதைப் பற்றி யோசிக்கலாம் எனவும் சொல்ல, சிவனும் :அப்படியெ செய்யல்லம். வா. நாமிருவரும் இல்லத்தில் உள்ள அலுவலகத்திட்குச் செல்லலாம்: எனச் சொல்லி, இருவரும் செனறார்கள். ஓரிரு நாட்களிலேயே அவர்கள் இருவரும் இல்லத்தின் வளர்ச்சி எப்படியிருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் செய்யவேண்டுமெனவும் முடிவு செய்தார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய, நிதி நிலைமை வசதியாகத்தான் இருந்தது. அம்மாவின் ஆரம்பகால ஆசைப்படியே, தன்னுடைய வருமானத்திலிருந்து ஒருவொரு முறையும் ஒரு குறிப்ப்பிட்ட சதவீதம் அவனுடைய இல்லத்தின் வளர்ச்சி நிதியாக ஒதுக்கி இருந்தபடியால், அவர்களுக்கு அந்த இல்லத்தை அவர்களின் விருப்பப்படி மாற்றுவதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. மேலும் அந்த இல்லம் மாதவனின் தாயாரின் முழுக் கவனத்தின் கீழும், அவர் காலமான பின் அவரின் வளர்ப்புப் பிள்ளை சிவதாசனின் நேரடி ஆதிக்கத்திலும் இருப்பதால், வேறு யாருடைய ஒப்புதலையும் வாங்கத் தேவையில்லை. மேலும் சிவதாசனும் ஒரு வழக்கறினர்தான்,. அவன் அந்த ஊரிலிருந்துகொண்டே, தன்னுடைய தொழிலையும் பார்த்து வந்தான். மாதவன், தன்னுடைய சென்னையில் உள்ள சொத்துக்களுக்கெல்லாம் சிவதாசனை பாதுகாப்பாளராக்கி, அத்தனையும் விற்றுப் பணமாக்கி, ஆனாதை இல்லத்தின்பேரில் போட ஏற்பாடு செய்தான். தன்னுடைய ஒரே பழைய காரை, தன்னுடைய தாயார் உபயோகித்துவந்ததை மட்டும், தன்னுடைய உபயோகத்திற்காக வைத்துக் கொண்டு, மற்றவைகளையெல்லாம், தன்னிடம் உண்மையாக இருந்த டிரைவருக்கே கொடுத்து விட்டான். டிரைவர் அவனை விட்டுப் போக மறுத்தபோதும், அவனிடம் “உனக்கு ஒரு குடும்பம் ஊரில் இருக்கு.நீ இத்தனை நாட்கள் எனக்காக உழைத்து இருக்கிறாய். இனிமேல் எனக்கு இத்தனை கார்கள் வேண்டாம். உன் விருப்ப்ப்படியே நீ இதையெல்லாம் வைத்துக் கொண்டு ஒரு டிராவல் செர்விஸ் ஆரம்பித்து நல்லபடியாக வாழு. இது என்னுடைய மன;ப்பூர்வமான விருப்பம். உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன். எப்பவாவது சென்னை வந்தால், உன்னுடைய டிராவல் செர்விஸில் தான் பயணம் செய்வேன்: என சந்தோஷமாகச் சொல்லி, தன்னுடைய மற்றகார்களின் ரிஜுஸ்ரேஷன், ஆர். ஸி. புக்ஸ் எல்லாவற்றையும் அவன் பெயருக்கு மாற்ற வேண்டியவைகளையெல்லாம், சிவதாசனைச் செய்யச் சொல்லிவிட்டான்.அவன் சொன்னபடியே, சிவதாசனும் மாதவனின் பெயரில் இருந்த அத்தனை சொத்துக்களுக்கும் பாதுகாப்பாளனாகத் தன்னை போட்டுக் கொண்டு, அந்த சொத்துக்களை ஒவ்வோன்றாக நல்ல விலைக்கு வரும்போதுவிற்றுப் பணத்தை இல்லத்தில் நிதியில் போட்டுவிட்டான்.
மாதவனும் இப்போது மிகவும் மன நிம்மதியுடன், தன் தாயாரின் உழைப்பால் வளர்ந்த ஆனாதை இல்லத்துடன், தன்னுடைய அன்னையின் பெயரில் ஒரு பள்ளியும் ஆரம்பித்தான். அவனுள் ஒருநாள்கூட, மன்மதன் என்ற ஒரு நடிகனின் நினைவுகள் வரவில்லை.
பரப்பான மின்னளடிக்கும் திரைஉலக மன்மதன் மறைந்தான். சிவகாமியின் இலட்சியங்களை நிறைவேற்ற அவளுடைய மகனான மாதவன் வாழ்கிறான் என்றும் அவள் ஆசிகளுடன்.

பரப்பான மின்னளடிக்கும் திரைஉலக மன்மதன் மறைந்தான். சிவகாமியின் இலட்சியங்களை நிறைவேற்ற அவளுடைய மகனான மாதவன் வாழ்கிறான் என்றும் அவள் ஆசிகளுடன்.v
No comments:
Post a Comment