ஓரே இனம், ஒரே தேவன்
(ஜெயரமணி)
அன்று பண்ணையாரின் வீட்டில்
எல்லாரும் மிகவும் பரப்பாகத்தான் இருந்தார்கள்.
இருக்காதா? அன்று அவர்களின் வாரிசு
வரும் நேரம் நெருங்கிவிட்டது. பண்ணையாரின் ஒரே பேரனின் மனைவிக்குத்தான்
பிரசவலி கண்டு, அவளை உடனடியாக மருத்துவ மணைக்கு அழைத்துச் செல்ல அணைவரும் தயாராகி
வந்தனர். அன்று அவர்களின் காரை ஓட்டும் வழக்கமான
டிரைவர் இஸ்மாயினுடைய மனைவிக்கும் அதுதான் பேருகாலமாதமாக இருந்தது. எல்லாருக்கும் அவனை எப்படி நாம் மருத்துவ
மணைக்குக் காரை ஓட்டும்படி கேட்கமுடியும் என தவித்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால்,
இஸ்மாயின் அங்கு வந்து, “அம்மா, நான் காரைத் தயார் நிலையில்தான்
வைத்திருக்கிறேன். நீங்கள் தாமதம்
செய்யாமல் உடனடியாகக் கிளம்புங்கள். நான்
காரை மிகவும் நிதானமாகவும், கவனத்துடனும் ஓட்டிக்கொண்டு போகிறேன், வாருங்கள் போகலாம்” எனவும் அழைத்தான். அப்போது பண்ணையாரின் பேரனான கார்த்திகேயன்
அவனிடம்”இஸ்மாயின், நீ இன்று காரை ஓட்டவேண்டாம்,
உன் மனைவிக்கும் இதுதான் பிரசவ காலம்.
உன் மனைவிக்கு உன்னைத் தவிர இங்கு யாரும் துணை இல்லை. நானே மெதுவாக காரை ஓட்டிக்கொண்டு போகிறேன். நீ
இனிமேல் உன் மனைவியை விட்டு எங்கும் போகக்கூடாது.” எனக் கண்டிப்பாகவேச் சொன்னான்.
ஆனால், இஸ்மாயின் அதற்கு உடன்படவில்லை. ஐயா, நான் எங்கே தனியாக இருக்கிறேன்.
எப்பவும் உங்கள் பாட்டியம்மாதான் எங்களுக்குத் துணையாக இருக்கிறார்களே? என் மனைவியை அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப்
பார்த்துக் கொள்வார்கள். மேலும், என் மனைவிக்கு
இன்னும் மூன்று வாரங்களாகும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள்
என்னைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள். நாம் உடனடியாக மருத்துவ மணைக்குச் செல்லலாம்”
எனக் கூறிவிட்டு, காரை எடுத்து வாசலில் தயாராக நிறுத்தினான். இஸ்மாயின் போகும்போது பாட்டியிடம் சென்று,
‘பாட்டி, நான் உங்களை நம்பித்தான் என் மனைவி சலீமாவை விட்டுவிட்டுப்
போகிறேன். நான் வரும்வரை அவளைப்
பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.” பணிவாகச் சொல்லிவிட்டுப்போனான், பாட்டியும்
பதிலுக்கு அவனிடம் ‘இஸ்மாயின், நீ எங்களுக்காகத்தான் உன் மனைவியைத்
தனியாகவிட்டுவிட்டுப் போகிறாய். நான் அவளை
என் உயிர் போல் பார்த்துக் கொள்கிறேன். நீ
தைரியமாகப் போய்வா” என அவனுக்குத் தைரியம்
கொடுத்தாள்.
அவர்களெல்லாம்
மருத்துவமனைக்குப் போன பின் பாட்டியும் தனியாக வீட்டில் இருந்தபடியே பேரனின் மனைவி
சாந்தாவிற்கு நல்ல விதமாகப் பிரசவம் முடிய வேண்டுமென்றும், அவர்கள் திரும்பி
வரும்வரை சலிமாவிற்கும் வலி எதுவும் வரக்கூடாதென்றும் வேண்டிக்கொண்டாள். அவள் மனதுக்குள் “அம்மா, கர்ப்பரட்சாம்பிகே,
இரு குழந்தைகளும், நல்லவிதமாக பிரசவிக்க வேண்டும்” எனவேண்டிக்கொண்டே, அம்மனின்
நாமத்தை ஸ்மரணம் செய்துகொண்டிருந்தாள்.
பாட்டி வீட்டில்
தனியாக இருந்து மனதிற்குள் ஸ்வாமியின் நாமத்தை ஜபம் செய்து கொண்டிருந்த போது,
வீட்டு வாசலில் நிழல் தெரிந்து, வாசலுக்கு வந்தாள். வாசலில், இஸ்மாயின் வீட்டிலிருந்து ஒரு பையன்
வந்து, “பாட்டியம்மா, இஸ்மாயின் மாமா இருக்கிறாரா? அவருடைய மனைவிக்கு திடீரென்று வலி வந்து
துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவரை
உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டுமாம். அதனால் மாமாவைக் கூட்டிக்கொண்டு போக வந்தேன். அவரைக் கூப்பிடுங்கள் பாட்டி” என படபடப்போடு
சொன்னான். பாட்டிற்கு என்ன சொல்வது என்று
புரியவில்லை. ஆனால், இந்த சமயம் நாம் தயங்கி நிற்பது சரியல்ல என புரிந்து கொண்டவள்,
அவனிடம் “உங்க மாமா எங்களின் பேரனின் மனைவிக்கும் பிரசவ வலிகண்டு, அவளை
ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு, காரை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறான். நீ கவலைப் படாதே, நான் உன்னுடன் வந்து,
இஸ்மாயின் மனைவிக்கு வேண்டியதைச் செய்கிறேன்.
வா போகலாம்” என சொல்லி அவனுடன் கிளம்பினாள். போகும்போதே மனதிற்குள் “பகவானே, எங்களுடைய
அவசரத்திற்காக உதவ ஒடோடி வந்தவனின், மனைவிக்கு ஒரு கஷ்டமுமின்றி, நல்லபடியாக
குழந்தை பிறக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்.
அங்கு சென்றபிந்தான்
தெரிந்தது அந்தப் பெண்ணுக்கும் பிரசவ வலிதான் கண்டிருக்கிறதுஎன. பாட்டி தன்னுடைய அனுபவத்தின் காரணமாக, அந்தப்
பெண்ணிற்குத் தேவையான உதவிகளையும், அவளுக்குத் தைரியமும் சொல்லிக்கொண்டே, பக்கத்தில்
இருந்த இரு வயதானவர்களின் உதவியுடன் பிரசவம் பார்க்கத் தயாரானாள். அவளின் வேண்டுதல் பலித்தது. ஓரிருமணிகளின் வலியுடன், சலிமாவுக்கு ஒரு
ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த
நேரத்தையும் சரியாக குறித்துக் கொண்டு, சலிமாவிடம் “சலிமா நீ அதிர்ஷ்டசாலியம்மா. உனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து
இருக்கிறது. சமத்துப்பாப்பா, அவனின்
அப்பாவை எங்களின் அவசரத்திற்காக வெளியில் அனுப்பியபோது உனக்கும் வலி கண்டவுடன்,
எனக்கு மிகவும் சங்கடமாகியது. பகவான்
புண்ணியத்தில், உனக்கு நல்லபடியாக பிரசவம் முடிந்து, அழகான பிள்ளை பிறந்து
விட்டான். என் பக்கம் பகவான் இருந்திருந்து, எங்களை காப்பாற்றிவிட்டார். இனிமேல் உனக்கு ஒரு சிரமமும் இல்லை. சந்தோஷமாயிரு” எனக் கூறிக்கொண்டே, அவளுக்கும்,
குழந்தைக்கும் மேற் கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சைகளை செய்து முடித்தாள். சலிமாவிற்கும், அவளைச் சுற்றியிருந்தவர்களுக்கும்,
ஒரு மேற்குடியில் பிறந்த, ஆசாரநியமங்களை தவறாது கடைபிடிக்கும், வயதான ஒரு பிராமணப்
பெண்மணி, கீழ்க் குடியில் பிறந்த ஒரு
பெண்ணின் பிரசவத்தை கொஞ்சமும் கூசாது பார்த்துச் செய்தபின்னும், அங்கேயே இருந்து,
அங்கிருந்தவர்களுடன் சகஜமாகப் பழகியதையும் பார்த்து, அவர்களின் கண்களைக்கூட
இமைக்காது ஆச்சரியப்பட்டுக் கொண்டு, கண்களில் கண்ணீர் ததும்ப நின்றார்கள். அவர்கள்
தங்கள் கரங்களைக் கூப்பி பாட்டியைப் பார்த்து வணங்கினார்கள். பாட்டி அவர்களைப் பார்த்து, “என்ன இதல்லாம். நானும் உங்களைப் போலவே ஒர் சாதாரண பெண்மணிதான். ஆண்டவன் முன் எல்லாரும் சமம் தான். இஸ்மாயின் எங்களின் குடும்பத்தைச்
சேர்ந்தவந்தான். அவனின் மனைவியும்
எங்களின் மகள்தான். நான் என் தார்மீக
கடமையைத்தான் செய்திருக்கிறேன். எல்லாம்
நல்ல படியாக முடிந்ததிற்காக பகவானுக்குத்தான் வணக்கத்தைச் செலுத்த வேண்டும்”. நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்கு
இருந்துவிட்டுப் போகிறேன்” எனக் கூறிக்கொண்டே அமர்ந்தாள். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவர் அங்கிருந்த
ஒரு பையனிடம் பத்து ரூபாய் கொடுத்து, “அகமத், நீ போய் பாட்டியம்மாவிற்கு நல்லதாக
வாழைபழங்கள் வாங்கிவா. அவர்கள் நம் விட்டில்
சாப்பிடக்கூடாது. நம் வீட்டிற்கு வந்து
சமயத்தில் பெரிய உதவி செய்த்திற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்” என்றும்
சொன்னார். அதைக் கேட்ட பாட்டி,
“எதெற்கப்பா வாழைப்பழம் வாங்க வேண்டும்.
உன் வீட்டில் சர்க்கரை இருக்கிறதல்லவா? அதைக் கொஞ்சம் கொடுப்பா போறும்”
எனக் கூறவும், பெரியவர் “அம்மா, நீங்கள் எங்கள் விட்டிலிருந்து சர்க்கரை
எடுத்துப்பீர்களா? நாங்கள் எல்லாம் கீழ்குடி மக்களல்லவா? அது சரியாகுமா?” எனக்
கேட்டார். அதற்கு பாட்டி, “நீயும்
ஆண்டவனின் படைப்புத்தான், நானும் அவனுடைய படைப்புத்தான். மேலும், நாங்கள் எங்களுக்கு வேண்டிய மளிகைச்
சாமான்களேல்லாம் ஜின்னா கடையிலிருந்துதானே வாங்குவது வழக்கம்தானே. அப்படி
யிருக்கும்போது, உங்கள் வீட்டில் சர்க்கரை சாப்பிட்டால் ஒன்றும் தப்பில்லை. உனக்கு சம்மதமென்றால், நான் சர்க்கரை எடுத்துக்
கொள்வேன்” எனத் தீர்மானமாக கூறிவிட்டு, அங்கிருந்த சர்க்கரை பாட்டிலிருந்து ஒரு
ஸ்பூன் சர்க்கரை எடுத்துக் கொண்டு, தன் வீட்டுக்குச் சந்தோஷமாக வந்தாள்.
பாட்டியின் மனதில் ஒரு நிம்மதியும், சந்தோஷமும்
கூடியது. எதிர்பார்க்காத நேரத்தில் பிரசவ
வலி கண்டு, சலீமாவிற்கு நல்லபடியாகப் பிள்ளைக் குழந்தை பிறந்தது பகவானின் அனுக்கிரஹம்தான். அதேபோல் சாந்தாவிற்கும்
நல்லவிதமாக பிரசவம் முடிய வேண்டும்.
பாவம், தாயில்லாப் பெண், நாந்தான் அவளுக்கு தாயாக இருக்கவேண்டும்” எனப்
பலவிதமாக நினைத்துக்கொண்டே, மருத்துவமனைக்குப் போனவர்கள் வருகிறார்களா எனப்
பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போழுது,
பாட்டியின் பேரன் கார்த்திக்கும், இஸ்மாயினும் வந்தார்கள். இருவர் முகத்திலும் எந்தவிதமான சந்தோஷமும்
இல்லை. மாறாக, இருவரின் முகமும் சோகத்தால்
களையிழந்து இருந்தன. பாட்டி அவர்களைப்
பார்த்து என்ன நடந்த்து எனக் கேட்குமுன்பே, பேரன் “பாட்டி” எனக் கதறிக்கொண்டே,
பாட்டியின் மடியில் விழுந்தான். பேரனின்
கதறலைக் கேட்டவுடன், பாட்டியின் சப்த நாடிகளும் துடித்தன. விபரம் புரியாது, இருவரையும் பார்த்து, “என்ன
நடந்தது, சாந்தாவுக்கு குழந்தை பிறந்து
விட்டதா? அவள் எப்படி யிருக்கிறாள்” எனக்
கேட்டாள். பாட்டியின் கேள்விகளுக்கு பதில்
சொல்லாது, கார்த்திக் அழுது கொண்டே இருந்தான்.
மெதுவாக இஸ்மாயின் பாட்டியைப் பார்த்து, “பாட்டியம்மா, நாம்
எதிர்பார்த்த்துபோல் சாந்தாயம்மாவுக்கு பிரசவம் ஆகவில்லை. குழந்தை வயிற்றிலேயே இறந்துபோய்விட்ட்து. அது மட்டுமல்லாது, சாந்தாம்மாவின்
கர்ப்ப்ப்பையும் மிகவும் பலகீனமாகவும் இனி மேல் ஒரு கருவைத் தாங்கும் சக்தியும்
இழந்து விட்டதாம். அதனால், டாக்டர்களெல்லாம், சாந்தாவின் உயிர் பிழைக்க
வேண்டுமென்றால், உடனடியாக அவர்களின் கர்ப்ப்ப்பையையும் எடுத்துவிட வேண்டும். தவறினால், அவ் அவர்களின் உயிர் தாங்காது”
என்றும் தீர்மானமாக்க் கூறிவிட்டார்கள்.
பாவம் கார்த்திக்சார். யாருடனும்
கலந்து யோசிக்கக்கூட நேரம் இல்லாது, சாந்தாவின் உயிர்தான் முக்கியம் என
முடிவெடுத்து, அவர்களின் கருப்பையைஎடுத்துவிட சம்மதித்து, கை யெழுத்தும்
போட்டுவிட்டார். உடனடியாக ஆபரேஷன் செய்து,
வயிற்றில் இறந்து இருந்த குழந்தையுடன், அவருடைய கருப்பையையும் வெளியே எடுத்து
விட்டார்கள். இனிமேல் சாந்தாவின்
உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால்,
இனிமேல் அவர்களால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது. இதுபோன்ற கொடுமை இனி
யாருக்கும், வரக்கூடாது. நீங்கள் செய்த
பூஜையெல்லாம் எந்த வித பலனையும் கொடுக்கவில்லையே”என துக்கம் தாளாது சொல்லுவிட்டு,
அவனும் வாய்விட்டு அழத்தொடங்கினான்.
பாட்டியினால் எதையும் தாங்கும் சக்தி இல்லை. ஆனால், குழந்தைபோல் தன் மடியில் அழும் பேரனைப்
பார்த்து, தானும் அழுதால் அவனுக்குச் தைரியம் யார் சொல்வது என நினைத்து,
“கார்த்திக், உன்னை அழக்கூடாதென்று சொல்ல என்னால் முடியவில்லை. ஆனால், ஆண்டவனின் சித்தம் அப்படியிருந்தால்,
நாம் என்ன செய்ய முடியும். ஏதோ,
இந்தமட்டும், நமக்கு சாந்தாவின் உயிர் நிலைத்ததே, அதுவே போறும். நமக்கு குழந்தை வேண்டுமென்றால், ஊரில் எத்தனையோ
குழந்தைகள் இருக்கு. ஒன்றே எடுத்து நாம் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், சாந்தா இல்லையென்றால், இந்த வீட்டின்
சந்தோஷமே போய்விடுமே? குழந்தை இல்லாவிட்டால் என்ன, உன்னால் சந்தாவுடன் சந்தோஷமாக
வாழ முடியாதா. உனக்கு அவள், அவளுக்கு நீ எனக் குழந்தையாக இருங்கள். இனி நீ தான்
அவள் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நீ இப்போதே உன் துக்கம் தீருமட்டும் அழுது
விடு. ஆனால் எக்காரணம் கொண்டும் நீ அவள்
முன் வருத்தத்தைக் காட்டக்கூடாது.
குழந்தையை விட சாந்தாதான் உனக்கு முக்கியம் என அவளுக்குப் புரியும்படி நீ
நடந்து கொள்ள வேண்டும். இனிமேல் அவள்
தேறவேண்டும். அவளின் மனமும், உடலும்
தேறுவது நம் கையில்தான் இருக்கு. நீதான் அவளுக்குத் தைரியம் சொல்ல வேண்டும்” என
மெதுவாக, தன்னுடைய துக்கத்தை அடக்கிக்கொண்டு சொன்னாள். சிறிது நேரம் சென்றபிந்தான், பாட்டிக்கு,
இஸ்மாயினுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லவில்லையே என நினைவுக்கு வந்தது.
பாட்டி, எழுந்து போய், சமையற்கட்டிலிருந்து, சர்க்கரை
சம்படத்தை எடுத்து வந்து, “கார்த்திக், நம்முடைய துக்கத்தில் ஒரு சந்தோஷ
சமாசாரத்தை நான் சொல்ல மறந்து
விட்டேன். இஸ்மாயின், இங்கு
வா, இந்தா நீ என் கையால் சர்க்கரை
வாங்கிக் கொள்”எனக் கூறியதும், இருவரும் ஒன்றும் புரியாது பாட்டியைப் பார்த்து
திகைத்தார்கள். அவர்களின் முகத்தைப்
பார்த்து, “என் பேரனுக்கு குழந்தை இல்லையென்று யார் சொல்ல முடியும். நீயும் என் பேரந்தானே. உன் மனவி சலீமாவிற்கு
இன்று காலையில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து தாயும் பிள்ளையும் நன்றாக
இருக்கிறார்கள். நீ உடனே உன் வீட்டுக்குப்
போய் உன் பிள்ளையையும், மனைவியையும் பார்த்துக் கொள்” எனச் சொல்லி அவனிடம்
சந்தொஷமாக சர்க்கரையை கை நிறைய எடுத்துக் கொடுத்தாள். பாட்டி சொன்னதைக் கேட்டவுடன் ஒரு நிமிஷம்
இஸ்மாயின் எதுவும் பேச முடியாது திகைத்து நின்றான். பிறகு மெதுவாகக் கேட்டான் “பாட்டி, சலீமாவுக்கு
பிரசவம் ஆக இன்னும் இரு வாரங்களுக்கு மேல் ஆகுமென்றுதானே டாக்டர் சொன்னார்”
என்றவனிடம், “இஸ்மாயின், மழையும், பிள்ளைபோறும் நம் கணக்கில் இல்லை. ஆண்டவனின் சித்தம் இன்று சலிமா ஒரு
பிள்ளைக்குத் தாயாக வேண்டுமென்பது.
நீங்கள் போனபின், உன் வீட்டிலிருந்து ஒரு பையன் வந்து, சலீமாவிற்கு பிரசவ
வலி கண்டு அவள் துடிக்கிறாளென்றும், உடனடியாக உன்னை அழைத்துபோக வந்தான். நீ இல்லாத்தால், நானே அவனுடன் போய்
பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது,
அவளால் ஒரு அடிகூட நடக்க முடியாதென்றும், அவளுக்கு பனிக்குடம் உடைந்து, பிரசவ
நேரம் நெருங்கிவிட்டது என்று. அதனால்,
நானே உடனே அங்கிருந்த இரு பெண்மணிகளின் உதவியுடன், அவளுக்குப் பிரசவம்
பார்த்தேன். பகவான் அருளால், கொஞ்ச
நேரத்திலேயே அவளுக்கு நல்லபடியாக பிரசவம் ஆகி, ஒரு அழகான ஆண் குழந்தையும்
பிறந்தது. பிரசவம் முடிந்தபின்,
அவளுக்கும் குழந்தைக்கும் செய்ய வேண்டிய சிகிச்சைகளையும் செய்து முடித்து விட்டு,
நான் சந்தோஷமாக வந்து, குளித்துவிட்டு, நீங்கள் வருவதற்காக காத்துக்
கொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் சந்தோஷம்,
துக்கம் இரண்டையும் நாம் அனுபவிக்க்க வேண்டுமென்பது இன்றைய விதி. புது வரவை நினைத்து, நம்முடைய துக்கத்தை
மறப்பதுதான் புத்திசாலித்தனம். கார்த்தி, நீயும் அவனுடன் போய்
குழந்தையையும்,சலீமாவையும் பார்த்துவிட்டு, அவனுக்குத் தேவையான பணத்தையும்
கொடுத்துவிட்டு வா. இஸ்மாயின் ஒரு வாரம் வீட்டிலேயே இருந்து சலீமாவையும்,
குழந்தையையும் கவனித்துக் கொள்ளட்டும்.” எனச் சொல்லி, இருவரையும் அனுப்பினாள்.
கொஞ்சம் கொஞ்சமாக
சாந்தாவின் உடலும் தேறி, அவளும் விட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவளுடன் பாட்டிக்கு உதவியாக ஒரு மாமியும்
இருந்தார்கள். இருவருமாக சாந்தாவை
நல்லவிதமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
கார்த்திக்கும், பாட்டி சொன்னபடியே, தன்னுடைய துக்கத்தை வெளியில்
காட்டாமல், சாந்தாவின் மனதிற்கு இதமாகவே இருந்தான். இஸ்மாயினும் அவ்வப்போது வந்து பார்த்துக்
கொண்டிருந்தான். சலீமாயும் குழந்தையும்
நன்றாகவே இருந்தார்கள். ஆனால்,
திடீரென்று, ஒரு நாள் சலீமாவிற்கு ஜுரம் கண்டது.
டாக்டரிடம் மருந்து வாங்கிவந்தார்கள்.
டாக்டரும் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டுத்தான் போனார்கள். ஆனால் ஜுரம் மட்டும் குறையவில்லை. அதுவே நிமோனியாவாகி, ஜன்னி கண்டுவிட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம்
பார்த்தும், பலனின்றி, சலீமா குழந்தையையும், இஸ்மாயினையும் தவிக்க விட்டு,
இறைவனிடம் சேர்ந்தாள். பாட்டியம்மாவிற்கு,
தாளாத துக்கம் உண்டானது. யார் யாருக்கு
என்ன ஆறுதல் சொல்வது. எல்லாரும் ஒருவொரு
விதமான இழப்பில் இருந்தார்கள்.
குழந்தைக்கு எந்த இழப்பையும் உணர உணர்வு இல்லை. அதற்கு பசி வந்தபோது, வாய்விடாது அழுது தன்னைச்
சுற்றி இருந்தவர்களையும் அழச்செய்தது.
குழந்தையழும்போது, என்ன செய்வதென்று தெரியாமல், இஸ்மாயின் குழந்தையை
பாட்டியிடம் கொடுத்துவிட்டு, “பாட்டி, நான் இந்தக் குழந்தையை எப்படிக்
காப்பாற்றுவேன், அழும் அவனுக்கு நான் என்ன கொடுக்க முடியும் ஏன் என்னையும் ஆண்டவன் சோதனை செய்கிறார். நான் யாரிடம் போயென்ன கேட்க முடியும்” எனக்
கதறினான். பாட்டி குழந்தையை எடுத்துக்
கொண்டு, உள்ளே போனாள். அங்கு சாந்தா, தன்
மார்பகங்களில் ஏற்பட்ட வலியினால் துடித்துக் கொண்டிருந்தாள். பாட்டி ஒரு கணம் தன் கைகளில் இருந்த சிசுவைப்
பார்த்தாள். அதுவே பசி தாளாமல் அழுது
கொண்டிருந்தது. பேத்தி, சாந்தாவைப்
பார்த்தாள். குழந்தையிழந்த சாந்தாவோ, தன்
மார்புகளில் சுரந்த பாலினால், மார்பு கட்டிக்கொண்டு, வலி தாளாமல் அவளும் கண்ணீர்
விட்டு அழுதாள். இருவரின் அழுகையையும் நிறுத்த ஒரேவழி பாட்டியின் மனதில்
தோன்றியது. உடனே, குழந்தையை சாந்தாவிடம்
கொடுத்து, “சாந்தா, அழும் குழந்தையின் பசியை ஆற்று. உன் வலியும் போகும்,
குழந்தையின் பசியும் தீரும்” எனக் கூறினாள்.
பாட்டியின் முகத்தைப் பார்த்தாள் சாந்தா.
அவளுள் ஒரு உணர்வும் தோன்றியது.
ஒன்றும் சொல்லாது, பாட்டியின் கையிலிருந்த குழந்தையை வாங்கினாள். உடனே
தன்னுடைய படுக்கையினை அடைந்து, குழந்தையை அனைத்துக் கொண்டு, தன்னுடைய மார்பில்
குழந்தையின் வாயை வைத்தாள். குழந்தையின்
அழுகை உடனேயே நின்று விட்டது. அது சாந்தாவின் மார்பில் சுரந்த அமுதத்தை
ஆனந்த்துடன் சுவைத்துக் குடித்தது.
சாந்தாவின் மனமும் உடலும் ஒரே நேரத்தில் சாந்தி அடைந்தது. இருவரின் நிலையைப் பார்த்துப் பாட்டியும்
மன நிறைந்தது. பாட்டியும் முகத்தில்
சாந்தியுடன் வெளியே வந்தாள்.
குழந்தையில்லாது வெளியே வந்த பாட்டியைப் பார்த்து, கார்த்திக்கும்,
இஸ்மாயினும் ஒன்றும் புரியாது திகைத்தனர்.
அவர்களிப் பார்த்த பாட்டி, “குழந்தைக் கண்ணன் தன் தாயார் யசோதையிடம்
சேர்ந்து விட்டான். இதுதான் ஆண்டவனின்
சித்தம் போல் இருக்கிறது. இல்லையென்றால்
ஒரே சமயத்தில், நம் இருவர் வீட்டியும் இப்படிப்பட்ட சம்பங்கள் நடக்குமா? இனிமேல் சலீமாவின் குழந்தைக்கு சாந்தாதான்
தாய்.
பாட்டியம்மா சொன்னதைக் கேட்டவுடன் இஸ்மாயினுக்கு ஒரு நிமிடம்
எதுவும் புரியவில்லை. மெதுவாக பாட்டியிடம்
கேட்டான் :என்ன சொல்கிறீர்கள் பாட்டியம்மா, ஒரு முஸ்லீம் தம்பதிகளுக்குப் பிறந்த
ஒரு குழந்தை எப்படி ஒரு பிராமணக் குடும்பத்திற்கு குழந்தையாக முடியும்” எனத்
தயங்கியபடியே. பாட்டி அவனுக்கு “இஸ்மாயின்,
நீ உன்னை முகமதியன் என்று சொல்கிறாய்.
எப்படி. உன் மூதாதையர்கள் மசூதிக்குச் செல்வதாலும், அவர்கள் உங்களின் மத
நூல் குரானைப் படிப்பதாலுந்தானே. நாங்களும்
எங்களின் மூதாதையர்களின் வழி பற்றி, கோவிலுக்கும், இராமாயணம், பகவத்கீதை
முதலிய மத நூல்களை படித்து வருவதாலும், இருவருக்கும் வேவ்வேறு மதமாக
இருக்கிறேம். மதமென்பது மனிதனால்,
தங்களின் சுகத்திற்காக, வசதிக்காக நாமே ஏற்படுத்திக்கொண்ட பிரிவுகள்தானே தவிர,
எந்த ஒரு இந்து கடவுளோ, உன் மனமான முஸ்லீம் கடவுளோ உண்டாக்கவில்லை. கடவுளுடைய உன்னதமான நோக்கமே மனிதர்கள் மனித
நேயத்துடன், ஒன்றுபட்டு, ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதுதான். உண்மையிலேயே துக்கப்படுபவர்களுக்கு துனையாக
இருந்து, அவர்களின் துக்கத்தில் பங்கு கொண்டு, அவர்களுக்கு நல்ல ஆறுதல்களைச்
சொல்லி, அவர்களை துன்பத்தின் வலையிலிருந்து விடுவிப்பதுதான் மனித நேயத்தில்
கொள்கையாகும். இப்போது, உன் குழந்தைக்குத்
தாயின் அரவணைப்பும், பரிவும் தேவை. சாந்தாவிற்குத் தேவை அவளின் இழப்பிற்கு ஈடாக
ஒரு குழந்தை. அவர்களின் இருவரின்
இழப்பிற்கும், மற்றவரிடம் மருந்து இருக்கிறது.
இப்போது நம் கடமை இருவரின் துன்பமும் தீர்ந்து, இருவரின் வாழ்வும் இன்பமாக
இருக்க வேண்டும். துன்பத்தைக் கொடுத்த
ஆண்டவன், அதற்கான மருந்தையும் நம்மிடமே வைத்திருக்கிறான். ஆண்டவன் நமக்குச் சுட்டிக்காட்டிய கடமையைச்
செய்யவதுதான் நம்முடைய வாழ்வின் வரமாகும்.
மற்றவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள், அவர்களின் கூற்றுக்கெல்லாம் நாம்
பதில் சொல்லிக்கொண்டு நம்முடைய வாழ்வை இருளாகச் செய்ய வேண்டாம். அவர் காட்டிய வழியில் வெளிச்சத்தைக்
காண்போம். வாழ்க்கை வாழ்வதற்காகத்தானே
அன்றி, நமக்கு நாமே துன்பவலையைப் பின்னிக்கொண்டு, நிம்மதியற்று
இருப்பதற்கல்ல. குறிகிய நோக்கில் வாழ
வேண்டாம். நாமெல்லாம் ஒருவரின்
குழந்தைகள்தாம். ஒருவந்தான் தேவன்.
நாமெல்லாம் இந்தியர்கள், ஒரே குலம்தான் என்ற பரந்த நோக்கோடு வாழுவோம். வந்த துக்கங்களை மாற்றி, அதிலேயே இன்பம் கண்டு
வாழுவோம்.” என இஸ்மாயினுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வாழும் வகை என்னவென்று
கூறி, உள்ளேச் சென்று பசிதீர்ந்து, சொப்புவாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கும்
கண்ணணைத் தூக்கிக் கொண்டாள். ஆண்டவனின்
தோட்டத்தில் பூத்திருக்கும் இன்பப் பூக்களைப்பார்த்து நாளும் மகிழுவோம் எனப்
பூரிப்பாகச் சொல்லி சிரித்தாள் பாட்டியம்மா, அவருடைய சந்தோஷம் மற்றவர்களையும்
பற்றிக் கொண்டது.
Test comment.
ReplyDelete